Friday, November 27, 2009

வீரவணக்கம்

வீரவணக்கம்

எட்டு ஆண்டுகளுக்கு முன், வட கலிஃபோர்னியா தமிழர்கள் சங்கத்தின் அழைப்பின் பேரில், நானும் சில நண்பர்களும் அவர்களது மாவீரர் நாள் விழாவில் கலந்து கொள்ளச் சென்றிருந்தோம். அமெரிக்கத் தமிழர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து, சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி தமிழ்மன்றத்தின் மொழி, இலக்கியம், கலை, பண்பாடு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வைக்க வேண்டும் என்று நான் முயற்சி எடுத்துக் கொண்டிருந்தேன்.

அரசியல், சமயம் என்று பல களங்களில் வேறு பட்டிருந்தாலும், மொழி, பண்பாடு மற்றும் இலக்கியம் அமெரிக்கத் தமிழர்களை ஒன்று கூட வைக்கும் என்று இன்றும் நான் நம்புகிறேன். ஏற்கனவே தமிழ் மன்றம் நடத்திக் கொண்டிருந்த மொழி, இலக்கியம், பண்பாடு தொடர்பான நிகழ்ச்சிகளில் சில ஈழத்தமிழர்கள் கலந்து கொண்டு வந்திருந்தனர். ஆனால், இந்த நிகழ்ச்சிகள் பெரும்பாலும் எல்லாமே இந்தியத் தமிழர்களின் கண்ணோட்டத்தையே எதிரொலித்தன. உலகத் தமிழர்களின், குறிப்பாக ஈழத்தமிழர்களைப் பற்றிய குறிப்புகள் இந்த நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் இல்லை. இந்த நிலையை மாற்ற விரும்பினேன்.

உண்மையிலேயே நீங்கள் ஈழத்தமிழர்களை ஈர்க்க விரும்பினால், அவர்கள் சங்கம் நடத்தும் நிகழ்ச்சிகளில் நீங்கள் கலந்து கொண்டு அவர்கள் கண்ணோட்டத்தைப் பாருங்கள் என்று வலியுறுத்தினார் என் நண்பர் குமார்.

மாவீரர் நாள், ஈழத்தமிழர்களுக்கு, குறிப்பாக புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் வாழ்க்கைக்கு ஆணிவேரான நாள் என்பது எனக்கு அதற்கு முன் தெரிந்திருக்கவில்லை. ஏனைய அமெரிக்கத் தமிழர்களைப் போல, பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு இவற்றைச் சுற்றிச் சுழலும் கலைநிகழ்ச்சிகளில் ஊறிப் போயிருந்த எனக்கு, இந்த மாவீரர் நாள் என்ற கருத்தின் ஆழம் முதலில் புரிபடவில்லை.

பழந்தமிழர்களைப் போலவே, அமெரிக்கர்களில் பலரும் மறத்தன்மையைப் போற்றுபவர்கள். நாட்டுப் பற்று மிக்கவர்கள். தாம் பிறந்த நாட்டுக்கு ஈடான நாடு வேறு ஏதுமில்லை என்று ஆழமாக நம்புபவர்கள். நாட்டுக்காகப் போர்முனையில் உயிர் துறந்தவர்களின் நினைவைப் போற்றும் வகையிலும், போரில் இருந்து திரும்பிய மறவர்களைக் கொண்டாடும் வகையிலும் ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 11 வாக்கில் அமெரிக்கர்கள் மறவர் நாள் கொண்டாடுவது வழக்கம். நாடெங்கிலும், சின்னஞ்சிறு ஊர்களிலும்கூட, ஊர் நடுவில் மறவர் நினைவுச் சின்னத்தில் நாட்டுக் கொடிகளையும், மலர் வளையங்களையும் வைத்து வணங்குவது வழக்கம். அந்த நாளில் ஓய்வு பெற்ற போர் வீரர்கள் தத்தம் படையுடுப்பில் ஊர்வலம் வருவார்கள். அந்தந்த ஊர்களில், அமெரிக்காவின் போர்களில் உயிர் துறந்த மறவர்களின் பெயர்கள் நினைவுச் சின்னத்தில் பொறிக்கப் பட்டிருக்கும். தம் நாட்டினர் உரிமையோடு வாழத் தம் உயிரை விலையாகக் கொடுத்தவர்களை நன்றி கூர்ந்து நினைக்கும் நாள் மறவர் நாள்.

தமிழ்நாட்டில் ஊருக்கு ஊர் போர் நினைவுச்சின்னம் எதையும் நான் பார்த்ததில்லை. சென்னையில் இருக்கும் போர் நினைவுச்சின்னங்களையும், மறவர் இடுகாடுகளையும்கூடப் போர்வீரர்களைத் தவிர வேறு யாரும் சென்று போற்றிப் பார்த்ததில்லை. பொதுவாக, குடியரசு நாளன்றும், விடுதலை நாளன்றும், தொலைக்காட்சியின் முன் கூடி, நடிகைகளின் நேர்காணலையும், இந்தியத் தொலைக்காட்சிகளிலேயே முதன்முறையாக, திரைக்கு வந்து சில நொடிகளே ஆன, புத்தம்புதிய திருட்டு டிவிடி படங்களைப் பார்க்கும் பண்பாடுதான் தற்போது தமிழ்நாட்டில் மேலோங்கி இருக்கிறது.

இத்தகைய இரண்டு பண்பாடுகளில் வாழ்ந்த எனக்கு ஈழத்தமிழர்களின் மாவீரர் நாள் புதுமையாகத் தோன்றியதில் வியப்பேதுமில்லை.

நீத்தார் நினைவு, மறவர் பெருமை, உரிமைப் போர் கொண்டாட்டம் என்ற இவை எல்லாவற்றையும் பிணைத்து, அதே நேரத்தில் அவலச்சுவை சொட்டிக் கண்ணீர் ஆறாகப் பெருகாமல், மாவீரர்களுக்கு உரிய மதிப்பை வழங்கும் நாளாக ஈழத் தமிழர்கள் நடத்தியது, எல்லாவற்றையும் மிகைப்படுத்தும் அண்மைக்காலத்துத் தமிழ்ப் பண்பாட்டிலிருந்து முற்றிலும் விலகியிருந்தது. பர்க்கெலித் தமிழ்ப் பேராசிரியர் ஜோர்ஜ் ஹார்ட் அவர்கள் அடிக்கடி குறிப்பிட்டுப் போற்றும் சங்கத் தமிழர்களின் குறிப்பாலுணர்த்தும் தன்மையை ஈழத்தமிழர்களிடையே இன்னும் நாம் பார்க்கலாம்.

குரலை உயர்த்தி, மிகைப் படுத்தி, ஒன்பான் சுவையும் சொட்டச் சொட்ட, "மேடையேறிப் பேசும்போது ஆறு போலப் பேசி, கீழே இறங்கி வந்த பின்னால் சொன்னதெல்லாம் போச்சு" என்ற தமிழ்நாட்டுத் தமிழர் தலைகளின் பேச்சை ஈழத்தமிழர்கள் நாக்கைக் கடித்துக் கொண்டு சகித்துக் கொள்கிறார்கள் என்றுதான் தோன்றுகிறது.

மேடையில் ஒரு கோவில் போன்ற பந்தலிட்டு, அதில் உரிமைப் போரில் உயிர் கொடுத்த மாவீரர்களின் படங்களையும், தமிழீழத்தின் வரைபடத்தையும், புலிக்கொடியையும் வைத்துப் படையல் கொடுத்து, நயமான முறையில் வணக்கம் தெரிவித்தார்கள் வட கலிஃபோர்னிய ஈழத்தமிழர்கள்.

கொண்டாட்டத்தில் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. சிறு பிள்ளைகள் மரபு முறைப்படி பயிற்சி எடுத்து இயல், இசை, கூத்து நிகழ்ச்சிகளை நடத்தினர். கூட்டாஞ்சோற்றுக்குப் பின்னர் பெரியவர்கள் நடத்திய நிகழ்ச்சிகளில், மாவீரர்களை நினைவு கூர்ந்தார்கள். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் என் நினைவில் தங்கியது இறுதியில் நடந்த குறு நாடகம்.

நாடகத்தில் நடித்தவர்கள் மூன்று அல்லது நான்கு பேர். மேடைக் கலை என்று ஏதும் இல்லை. ஒரு நடுத்தர வீட்டின் முகப்பில், வீட்டின் முதியவர், இல்லத்தரசி, அண்டை வீட்டார், ஒரு நண்பர் - இவ்வளவுதான் பாத்திரங்கள். அன்றாட அலுவல்களுக்கு நடுவே, பள்ளிக்குச் சென்ற சிறுமி இன்னும் வீட்டுக்கு வரவில்லையே என்று கவலை தெரிவிக்கும் இல்லத்தரசி. அதைப் பொருட்படுத்தாமல் பேசிக் கொண்டிருக்கும் பெரியவர்கள். மெல்ல மெல்லக் காட்சி ஒரு மெல்லிய பதற்றத்தை நம்முள் தூண்டுகிறது. "ஆமிக்காரங்க" பள்ளியிலே வந்து பிள்ளைங்கள அள்ளிக் கொண்டு போயிட்டாங்க என்று ஒரு பாத்திரம் தெரிவிக்கும்போது நம் உள்ளம் பதைக்கிறது. இப்படிக் காணாமல் போன குழந்தைகளைப் பற்றிக் கவலைப் படும் எண்ணற்ற குடும்பங்களின் துயரம் நம் உள்ளத்தைத் தொடுகிறது.

சரி, நாடகத்தின் முதல் கட்டம் முடிந்து விட்டது என்று அடுத்த கட்டத்துக்கு ஆயத்தமாகும் நமக்கு, அது தான் நாடகத்தின் முடிவு என்பது அதிர்வைத் தருகிறது. கோவலன் காணோம் என்பதுடன் சிலப்பதிகாரம் நிற்பதுபோன்ற உணர்வு. விருந்தினர்கள்தாம் என்றாலும், ஈழத்தமிழர்கள் படும் துயரை எண்ணிக்கூடப் பார்க்காமல் எட்டி நிற்கும் தமிழ்நாட்டின் மைந்தன் என்றாலும், அந்தக் குறுநாடகம் நம்மைப் பிசைகிறது.

அந்த நாடகத்தின் முடிவில் "இது பொறுக்குதிலை, தம்பீ, எரிதழல் கொண்டு வா" என்ற பாரதியின் வரிகள் நினைவுக்கு வந்தன. பெரும்பாவலன் பாரதி இயற்றிய பாஞ்சாலி சபதம் குறுங்காப்பியத்தில், பாஞ்சாலியைச் சூதில் வைத்து இழந்த தருமனை வீமன் சாடும் வரிகள் அவை. வீடு திரும்பும் வரை மௌனமாகவே வந்தேன். என் உணர்வைப் புரிந்து கொண்ட நண்பர் குமாரும் ஒன்றும் சொல்லவில்லை.

வீட்டுக்கு வந்தவுடன், உடனடியாக பாரதியின் பாஞ்சாலி சபதத்தை எடுத்து முற்றிலும் படித்தேன். அன்றுதான், பாரதியின் காப்பியத்தின் உணர்ச்சிக் கொப்புளங்கள் என்னுள் வெடித்தன. பாரதியின் பாஞ்சாலி, அடிமைச் சங்கிலியில் அல்லாடிக் கொண்டிருக்கும் தமிழன்னையாக அன்று எனக்குத் தோன்றினாள். அவளைக் காக்கக் கடமைப் பட்டிருந்தவர்கள் யாரும் அவள் அல்லல் படும் வேளையில் கை கொடுக்க வரவில்லை.

"பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்" என்று சாடும் பாஞ்சாலிக்கு இன்றும் நாமென்ன சொல்ல முடியும்?

"தருமத்தின் வாழ்வதனை சூது கவ்வும்
தருமம் மறுபடி வெல்லும்..
கட்டுண்டோம் பொறுத்திருப்போம் காலம் மாறும்
தருமத்தை அப்போது வெல்லக் காண்போம்
தனுவுண்டு காண்டீபம் அதன் பெயர்" என்கிறான் பார்த்தன் (அருச்சுனன்).

மாவீரர்கள் தம் தோள்வலிமையால் கொடியவர்களைக் களைவோம் என்று சொல்வதிலும் வியப்பில்லை.

வீமனும், பார்த்தனும், பாஞ்சாலியும் பழிக்குப் பழி வாங்குவோம் என்று சூளுரைக்கிறார்கள். பாரதி மறவர் சீமையில் வாழ்ந்தவன். அவன் பாடலில் தமிழர்களின் மறக்குணம் ஓங்கி நிற்பதில் வியப்பில்லை.

பாஞ்சாலி சபதம் காப்பியத்தின் உச்சக்கட்டத்தில் உணர்ச்சிகள் கொந்தளிக்கும்போது, சட்டென்று,

"ஓம் என்று உரைத்தனர் - ஓம்
ஓமென்று சொல்லி உறுமிற்று வானம்
பூமி அதிர்ச்சி உண்டாச்சு - விண்ணைப்
பூழிப்படுத்தியதாம் சுழற்காற்று
சாமி தருமன் புவிக்கே என்று
சாட்சி உரைத்தன பூதங்கள் ஐந்தும்
நாமும் கதை முடித்தோம் - இந்த
நானிலமுற்றும் நல்லின்பத்தில் வாழ்க!"

என்று பாரதியார் முடிக்கிறார்.

பாரதியார் இதை இயற்றிய காலத்தில் இது விடுதலைப் பாட்டு. பாரத அன்னையின் விடுதலையைப் பற்றிப் பேசுவது தடை செய்யப்பட்ட காலத்தில், பாஞ்சாலி சபதம் அன்னையின் உருவகமாகத் திகழ்ந்தது. போராளிகளைப் புகழ்வது தடை செய்யப் பட்ட நேரத்தில், இங்கே மேடையில் போராளிகள் விடுதலை பெறுவோம் என்று சூளுரைக்கிறார்கள்.

அன்று வரை புரிபடாமலிருந்த பாரதியின் ஒரு காப்பியம் எனக்குப் புரிபட்டது போல் தோன்றியது. பாரதியின் பாஞ்சாலி சபதத்தைக் கவிதை வடிவிலே, அந்தப் பொன்னான வசனங்களிலேயே, அதே உணர்ச்சியுடன் அரங்கேற்ற வேண்டும் என்ற எண்ணம் எனக்கு அப்போதுதான் தோன்றியது.

மாவீரர் நாள் குறுநாடகத்தில் பெண்ணை இழந்து துடிதுடித்த அம்மாவாக நடித்தவர்தான் பாஞ்சாலிக்குப் பொருந்தும் என்றும் அந்தக் குறுநாடகத்தைக் குறிப்பாலுணர்த்தும் நயத்துடன் இயக்கிய இயக்குநர்தாம் என் நாடகத்தையும் இயக்க வேண்டும் என்று விரும்பினேன். அவர்களால்தான் பாரதியின் குறிப்பாலுணர்த்தும் தன்மையை முழுதும் வெளிக்கொணர முடியும் என்று நான் கருதினேன். அதே நேரத்தில் ஈழத்தமிழர்களும், இந்தியத் தமிழர்களும், மொழியால், இலக்கியத்தால், கலையால், உணர்வால் ஒன்றுபட இது ஒரு நல்ல வாய்ப்பு என்று நம்பினேன்.

ஆனால், சில காரணங்களால் நான் நினைத்தபடி ஈழத்தமிழர்களால் பங்கேற்க முடியவில்லை. ஆனாலும், சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ்மன்றத்தின் மேடையில், 2002 பொங்கல் நிகழ்ச்சியில், நான் எண்ணியபடியே, கவிதை நாடகமாகவே பாஞ்சாலி சபதத்தை அரங்கேற்றியது எனக்கு நிறைவளித்தது. அந்த நாடகத்தை மேடையேற்றியதற்குத் தூண்டுகோலாக இருந்த ஈழத்தமிழர்களை இந்த மாவீரர் நாளன்று நினைவு கூர்கின்றேன். அன்றைக்கு இருந்ததை விட இன்றைக்கு மேலும் இறுக்கமான அடிமைத்தளைகளில் வாடும் தமிழன்னையின் நிலை நம் உள்ளத்தைச் சுடுகிறது. "கட்டுண்டோம் பொறுத்திருப்போம் காலம் மாறும்" என்ற நம்பிக்கையில் நாள்கள் நகர்கின்றன.

அதற்கும் மேலாக, இன்று முள்வேலிச் சிறையில் அடைபட்டுப் பரிதவிக்கும் நம் தொப்புள் கொடி உறவுகளையும், தம் தமீழீழக் கனவின் பின்னிறக்கத்தில் தவிக்கும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களையும் இன்று எண்ணிப் பார்க்கிறேன். தம் உரிமைகளுக்காகப் போராடிய மாவீரர்களை நானும் வணங்குகிறேன்.

"தருமத்தின் வாழ்வதனை சூது கவ்வும்
தருமம் மறுபடி வெல்லும்"

என்ற நம்பிக்கையை அந்த மாவீரர்களுக்குக் காணிக்கையாக்குகிறேன்.

4 comments:

Ilakkuvanar maraimalai said...

மாவீரர்நாளுக்கு ஒரு வேறுபட்ட வீரவணக்கம் என்று தங்கள் வலைப்பதிவைக் கருதுகிறேன்.
காரசாரமான வீரவசனத்தைக் காட்டிலும்
உணர்வுகளைப் பரிமாறிக் க்ள்ளும்
இத்தகைய கட்டுரைகள் நிறையத் தேவை.சட்டை கசங்காமல் அரசியல்தலைவர்களை வார்த்தைக்குண்டுகளால் காயப்படுத்தும்
"போலித்தமிழ்மறவர்"களிடமிருந்து
விலகிநின்று என்ன செய்யப் போகிறோம் என்னும் தூண்டுதலை எழுப்பும் இதுபோன்ற பொறுப்புமிக்க
வெளியீடுகளை ஏனைய அன்பர்களிடமிருந்தும் எதிர்பார்க்கிறேன்.

மணி மு. மணிவண்ணன் said...

பேராசிரியர் மறைமலை அவர்களுக்கு,

தங்கள் கருத்துகளுக்கு நன்றி.

ஈழத்தமிழர்கள் தங்கள் உரிமைப்போரில் பெரிதும் பின்னடைவு அடைந்திருக்கும் நேரம் இது. இதற்கு யார் பொறுப்பு என்ற வாதங்கள் எழுவது இயல்பு. அமெரிக்க அதிபர் கென்னடி சொன்னது போல் வெற்றிக்குப் பொறுப்பேற்க ஆயிரம் பேர் ஆனால் தோல்வி ஓர் அனாதை.

இந்த உரிமைப்போரைத் தொடங்கி, முழுமூச்சாய்ப் போராடியவர்கள், எதனால் உந்தப்பட்டார்கள் என்பதைப் புரிந்து கொள்ளவே முயல்கிறேன். களங்களில் எதிர்க்கும் நிலையில் அவர்கள் இல்லை என்பது தெரிகிறது. ஆனால், அவர்கள் போராட்டங்களுக்கான காரணங்கள் முன்னேபோதும் இருந்ததைவிடத் தற்போது கூடுதலாகி இருக்கிறது.

இந்த நேரத்திலும், அவர்கள் உரிமைகளுக்குப் பரிந்துரைத்து அவர்களைக் காப்பாற்ற இயலாத அல்லது காப்பாற்ற விரும்பாத தன்மையில் தமிழகம் இருப்பதும் உண்மைதான்.

அவர்களைத் தமிழர்கள் என்றல்லாமல், மனிதர்கள் என்று பார்த்து அவர்கள் உரிமைகளை வற்புறுத்தி வருபவர்கள் தமிழரல்லாத நாடுகள் என்பதுதான் உண்மை. அதே நேரத்தில் ஈழத்தமிழர்களைச் சிறைப்படுத்தி அவர்கள் உரிமைகளை நசுக்குவதற்குத் துணை போகிறவர்கள் இந்தியாவிலும், தமிழகத்திலும் இருக்கும் ஆட்சியாளர்கள் என்பதும் கசப்பான உண்மை.

முதலில், தமிழகத் தமிழர்கள் நாம் ஈழத்தமிழர்களை மனிதர்களாகவாவது பார்க்கக் கற்றுக் கொள்வோம்.

nayanan said...

//
முதலில், தமிழகத் தமிழர்கள் நாம் ஈழத்தமிழர்களை மனிதர்களாகவாவது பார்க்கக் கற்றுக் கொள்வோம்.
//

இல்லைங்க. இவர்களுக்கு அவர்களைப் பார்த்தால் வயிறெரியுதுங்க. வாயில் மறம் பேசி கை நீட்டிப் பிழைப்பதில் பெருமை காணும் தமிழ்நாட்டு அரசியல் சங்கமறத்தை எப்படிப் பெருமையாகக் கருதும்?

அருமையான கட்டுரை.

கொங்கு தமிழன் said...

ஆறாத வடு. என்று தனியுமிந்த சுதந்திர தாகம்..