சனி, டிசம்பர் 05, 2009

கூவம் மணக்குமா?

கூவம் மணக்குமா?

"கூவம் மணக்கும்" என்ற வாக்குறுதியை 1967 தேர்தலுக்கு முன்னே தி.மு.க. கூட்டணி மக்கள் முன்னிடை வைத்தது. முதன்முறையாக ஆட்சிக் கட்டிலில் ஏறிய தி.மு.க. சென்னையில் செய்த பெருமுயற்சிகளில் கூவத்தைத் தூய்மைப் படுத்துவதும் ஒன்று.

விந்தை என்னவென்றால், ஒரு காலத்தில் கூவமும், அடையாறும் சென்னைக்குக் குடிநீர் தந்த ஆறுகள். பக்கிங்காம் கால்வாய் சரக்குப் போக்குவரத்துக்கு முக்கியமான ஒரு நீர்வழி. பக்கிங்காம் கால்வாயின் மயிலாப்பூர்ப் பகுதியிலிருந்து அடையாற்றைக் கடந்து கஸ்தூர்பா நகர்பக்கத்தின் பகுதிக்குச் செல்வதற்காக வைத்திருந்த அடைப்புக் கதவுகளின் பெயரால்தான் அடையார் கேட் ஓட்டலுக்கு அந்தப் பெயர் வந்தது.

சென்னை முன்னொருகாலத்தில் ஆறுகளும், ஏரிகளும், குளங்களும், எண்ணற்ற நீர்நிலைகளையும் கொண்டு இயற்கை வளம் செழித்திருந்த பகுதியாக இருந்திருக்கிறது. இந்த நகரமயமாக்கல் சென்னையின் இயற்கை வளத்தை அழித்தது மட்டுமல்ல. மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் வெகுவாகக் குறைத்திருக்கிறது.

இப்போதெல்லாம், சென்னையில் ஓடும் இரண்டாவது ஆற்றுக்கும் கூவம் என்றுதான் பெயர். அடையாறு என்பது ஆற்றின் பெயர் என்பதே பலருக்குத் தெரியவில்லை. கூவம், பக்கிங்காம் கால்வாய், அடையாறு எல்லாமே சாக்கடைகளாகி விட்டன. கூவம் என்றாலே சாக்கடை என்ற பொருள் வந்து விட்டது.

அண்மையில் சென்னையின் பணக்காரப் பகுதிகளில் ஒன்றாகக் கருதப் படும் சென்னைப் படகுக் குழாம் (Chennai Boat Club) பகுதியில் இருக்கும் அண்ணா பல்கலைக் குழாமிலிருந்து அடையாற்றங்கரையைப் படம் எடுத்தேன். இங்கே நிலம் ஒரு கிரவுண்டுக்கு நாலு கோடியிலிருந்து பத்து கோடி வரை விலை பேசுகிறார்கள். அப்படிப் பட்ட இடத்தில் அடையாற்றின் கரை எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

இதோ பாருங்கள்:




மீண்டும் ஒரு முறை கூவத்தைத் தூய்மைப்படுத்துகிறோம் என்று வாக்குறுதி அளித்துள்ளார் துணை முதல்வர் ஸ்டாலின். சிங்கப்பூர் தன் மாசுபடிந்த ஆற்றைத் தூய்மைப்படுத்திய வெற்றியைப் பற்றி அறிந்து கொள்ள சிங்கப்பூர் சென்றிருந்த துணை முதல்வர், கூவத்தைத் தூய்மைப்படுத்திச் சுற்றுலா இடமாக மாற்றுவோம் என்று வாக்களித்திருக்கிறார். சென்னை முழுவதும் மேம்பாலம் கட்டிய இவர் இதை மட்டும் செய்தால், மாபெரும் சாதனையாளர் என்று சென்னை வரலாற்றில் இடம் பெறுவார்.

கூவத்தை மட்டுமல்ல, அடையாற்றையும், ஏன் பக்கிங்காம் கால்வாயையும் தூய்மைப் படுத்த வேண்டும்.  சென்னை போன்ற பெருநகருக்கு, குப்பையையும், கழிவுகளையும், சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் அகற்றத் தெரியவேண்டும்.   நினைத்தால் வழியுண்டு.

செய்ய வேண்டும்.  செய்யட்டும்.  அவர் முயற்சிக்கு நம் வாழ்த்துகள்.

3 கருத்துகள்:

மறைமலை இலக்குவனார் சொன்னது…

அன்புமிக்க மணிவண்ணன்,
வள்ளல் பச்சையப்பமுதலியார் அந்தக் காலத்தில் நாள்தோறும் கூவம் ஆற்றில்(இப்போது செண்டிரல் தொடர்வண்டி நிலையம் இருக்கும் இடத்தில் குளித்துவிட்டுக் கந்தகோட்டம் சென்று முருகப்பெருமானை வழிபட்டுவிட்டுத் தன் அன்றாட அலுவல்களைத் தொடங்குவார்.இது வரலாற்றுச் செய்தி.

அரவிந்தன் சொன்னது…

ஒரு காலத்தில் சென்னை நகரமும் வெனிஸ் நகரம் போல இருந்திருக்கிறது..

சென்னை பேசின் பாலம் அருகிலிருந்து கூவம் நதியின் வழியே ஆந்திராவுக்கு சரக்கு போக்குவரத்து நடந்ததாக சொல்வார்கள்.

அரசு மட்டுமல்ல பொது மக்களும் இன்றைய சீரழிவிற்க்கு ஒரு வகையில் காரணம்.

ஆற்றின் கரையை ஆக்கிரமிப்பு செய்து அகலத்தை குறைத்துவிட்டார்கள்


அன்புடன்
அரவிந்தன்
பெங்களூர்

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

அரவிந்தன்,

வெனிஸ் நகரம் போல் இருந்திருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால், மின்னசோடா மாநிலத்தைப் போல் எண்ணற்ற ஏரிகள், குளங்கள் இருந்திருக்கின்றன. சென்னை நகருக்குள்ளேயே இருந்த ஏரிகளை, ஆங்கிலேயர்களே மண் கொட்டி நிரப்பியிருக்கிறார்கள். இன்றைய மாம்பலம் பகுதி ஒரு ஏரியின் படுகைமேல் கட்டியதுதான். இன்றும் லேக் வியூ சாலை என்று ஒரு சாலை வட்டமாகச் செல்லும், ஆனால் வட்டத்துக்குள் எந்த ஏரியும் இருக்காது - மழைக்காலத்தைத் தவிர!

பக்கிங்காம் கால்வாய் விஜயவாடாவிலிருந்து மரக்காணம் வரை சரக்குப் போக்குவரத்துக்கு வழி வகுத்திருக்கிறது. பார்க்க: (http://en.wikipedia.org/wiki/Buckingham_Canal )

என் முன்னோர்கள் இந்தக் கால்வாயில் படகு விடக் குத்தகை எடுத்துப் பெரும்பொருள் திரட்டியிருந்திருக்கிறார்கள். சதுரங்கப் பட்டினத்தில் (சதராஸ்) இருந்து ஆந்திரக் கரை வரை சரக்குப் போக்குவரத்து நடந்திருக்கிறது.

இந்திய விடுதலைக்குப் பின்னர் சென்னை நகரம், மாநகரமாகிப் பின் பெருநகராகும் நேரத்தில் தக்க பாதாளச் சாக்கடைகளை உருவாக்காமால், ஆறுகளையே சாக்கடையாக்கியதன் விளைவு இது.

கடந்த முப்பதாண்டுகளில் நடந்திருக்கும் சீரழிவையே என்னால் நம்ப முடியவில்லை.