ஞாயிறு, ஜூன் 06, 2010

எழுத்துச் சீரழிப்பு பற்றிய சிந்தனைகள் - 2

எழுத்துச் சீர்திருத்தம் தேவை என்று வலியுறுத்துவோர் கூறும் காரணங்கள் என்ன?
  • இகர, ஈகார, உகர ஊகார வரிசைகள் ஒழுங்கில்லை
  • வரி வடிவ மாற்றங்கள் தமிழுக்குப் புதிதல்ல
  • பெரியார் சொன்னார், பெரியார் செய்தார்
  • எம்.ஜி.ஆர். சீர்திருத்தம் பாதிக்கிணறுதான் தாண்டியது,
  • தமிழறிஞர்கள் பரிந்துரைக்கிறார்கள்
    • தெ.பொ.மீ., மு.வ.,கி.வா.ஜ., வ.சு.ப., ம.பொ.சி., சஞ்சீவி, 
  • கற்பதை எளிதாக்க உதவும்
  • புலம்பெயர்ந்த தமிழ்க் குழந்தைகளுக்கு உதவும்
  • கருவிகளுக்காக மாற்ற வேண்டு
  • எழுத்துக்கள் எண்ணிக்கையைக் குறைக்கலாம்
  • பிறமொழியினர் சீர் திருத்தத்தில் வெற்றி
    • மலையாளம், சீனம், துருக்கி, மலாய், ஜெர்மன், ருசியன்...
 இவ்வளவுதான்.

தமிழ் உயிர்மெய்யெழுத்துகள் வரிசையில் இகர, ஈகார, உகர, ஊகார வரிசைகளில் மட்டும், உயிர்ககுறிகள் அகரமேறிய உயிர்மெய்க்குறியோடு கூடி, ஒரே கூட்டுக்குறியாக அமைகின்றன.  இதில் உகர, ஊகாரக் கூட்டுக்குறிகள் ஒன்றோடு ஒன்று தொடர்பு இல்லாதது போல் தோன்றுவதால், இவற்றைக் கற்பவர்கள் தனித்தனியே மனப்பாடம் செய்ய வேண்டியிருக்கும்.என்பது ஒரு வாதம்.  மேலும், இந்தத் தன்மையால் அச்சு செய்யும்போது இந்த உயிர்மெய்களுக்கு மட்டும் தனித்தனி அச்சுகள் செய்ய வேண்டியிருக்கும்.  இவற்றின் எண்ணிக்கை கூடுதல் என்பதால் இவை அடிக்கடி தேய்ந்து போகவும் வாய்ப்புண்டு.  எனவே, இந்தச் சிக்கல்களைத் தீர்க்க இந்தக் கூட்டுக் குறிகளை உடைத்து எழுதினால் என்ன என்பது பெரியாரின் கேள்வி.


இந்திய எழுத்துகளிலேயே தமிழுக்கு உள்ள சிறப்பே அதுதான்.  தமிழ் அசையெழுத்துகளைக் (orthographic syllables) கூட்டுக்குறியில் (conjunct consonant) எழுதுவதில்லை.  கிட்டத்தட்ட அகரவரிசை (alphabet) எழுத்துகள் போல் உயிர்மெய்யையும், உயிர்க்குறியீட்டையும் தனித்தனியே எழுதுகிறோம்.  இகர, ஈகார, உகர, ஊகார வரிசையின் விதி விலக்கை உடைத்து விட்டால், எல்லாத்தமிழ் எழுத்துகளும் அகர-அசையெழுத்து முறையிலிருந்து அகரவரிசை எழுத்து முறைக்கு மாறிவிடும்.  இது ஆங்கிலம் போல் மிகக்குறைவான குறியீடுகளில் ஒலிகளைக் குறிப்பிட உதவும் என்பது கூடுதல் வாதம்.

கடந்த ஈராயிரம் ஆண்டுகளில் தமிழ் எழுத்துகளின் வரிவடிவம் மெல்ல மெல்ல மாறிக் கொண்டு வந்திருப்பதைச் சுட்டிக் காட்டும் சீர்திருத்த வாதிகள், மாற்றங்கள் தமிழுக்குப் புதிதல்ல என்று வாதாடுகிறார்கள்.  எம்.ஜி.ஆர். 1978ல் கொண்டு வந்த சீர்திருத்தங்கள் பாதிக்கிணறு தாண்டியது போலத்தான் எனும் இவர்கள், எம்.ஜி.ஆர். தொடங்கி வைத்ததைக் கலைஞர் முடித்து வைக்கக் கோருகிறார்கள்.

இந்த மாற்றங்களால், அசையெழுத்துகளின் வரிசைகள் ஓரளவுக்குச் சீராகும்.  இதற்கு மேலும் சீர்மை செய்ய முடிந்தாலும், அத்தகைய சீர்மை தமிழ் எழுத்து வரிசைகள் அனைத்தையுமே மாற்றி, தற்போதைய தலைமுறையையே எழுத்தறிவில்லாத தற்குறிகளாக மாற்றிவிடும் என்பதால், அவற்றைத் தற்போதைய சீர்திருத்த முயற்சிகள் வலியுறுத்துவதில்லை.  இத்தகைய முயற்சிகளால் வரும் நெடுங்கணக்குப் பட்டியலின் ஒரு வடிவத்தைத் திரு. நாக கணேசன் அவரது வலைப்பூவில் காட்டுகிறார்;

எழுத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம் என்று இவர்கள் கூறுவது தமிழ் நெடுங்கணக்கின் 247 எழுத்துகளைக் குறைப்பதல்ல.  அசையெழுத்துகளின் வரி வடிவங்களை மாற்றுவதால், கற்றுக் கொள்ள வேண்டிய குறியீடுகளின் எண்ணிக்கை குறையும் என்பது வாதம்.  அதாவது. இகர, ஈகார, உகர, ஊகார எழுத்துகளைத் தனித்தனி எழுத்துகளாகக் கணக்கிட்டால்  72 ( 4 x 18) ) ஆகும்.  அவற்றைத் தனிக் குறிகளாக உடைத்தால்,  22 ( 4  + 18)  குறியீடுகள் ஆகின்றன.  எனவே 50 குறியீடுகளை மனனம் செய்யத் தேவையில்லை என்பது வாதம். இதனால் கற்பது எளிதாகும் என்பது நம்பிக்கை.  இதைச் சோதித்துப் பார்க்கத் தேவையில்லாத மிக எளிய செயல் என்று இவர்கள் கருதுகிறார்கள்.

உலக மொழிகளில் எழுத்துச் சீர்திருத்தம் என்பது புதியதல்ல. மலையாளம், சீனம், துருக்கி, மலாய், ஜெர்மன், ருசியன், வியட்நமீஸ், டாகலாக், கொரியன், என்று பல மொழிகளில் ஏற்கனவே செய்ததுதான்,

இந்தச் சீர்திருத்தத்தைச் செய்யாவிட்டால், புலம் பெயர்ந்த தமிழ்க் குழந்தைகள் தமிழைக் கற்பது மிகக் கடினம் என்று கல்லாமல் இருந்திடலாம் என்று இவர்கள் நம்புகிறார்கள்.  இது தமிழை என்றென்றும் வாழ வைக்கச் செய்ய வேண்டிய மிகச் சிறிய மாற்றம்.  இந்தச் சீர்திருத்தத்தை அறிவித்து ஒரு பத்து அல்லது இருபது ஏன் முப்பது ஆண்டுகளுக்குள் புது வரிவடிவத்துக்கு மாறி விட்டால், ஒரு புதிய தலைமுறைக்குப் புதிய எழுத்துகள் மட்டுமே தெரியும். பழைய தலைமுறை மறைய மறைய புதிய எழுத்துகள் வேரூன்றும் என்பது இவர்கள் வாதம்.

அச்சிலிருக்கும் நூல்களைத் தேர்ந்தெடுத்து நல்ல நூல்களை மட்டும் புதிய எழுத்துகளில் வலையில் மறுபதிப்புச் செய்வதால், நல்ல நூல்களைத் தக்க வைத்துக் கொள்ள முடியும்.  இதனால் தமிழுக்குத் தேவையற்ற தீய நூல்களை எளிதில் களைய முடியும் என்கிறார் சீர்திருத்தவாதி வீரா. இராசகோபாலன்.

இவர்கள் ஆதரவாளர்களாகப் பட்டியலிடும் தமிழறிஞர்களில் ம.பொ.சி., வ.சு.ப. மாணிக்கனார் சீர்திருத்தத்தைக் கடுமையாக எதிர்த்தவர்கள்.  அவர்களே இந்தச் சிறு சீர்திருத்தத்தை இறுதியில் ஆதரித்தார்கள் என்கிறார்கள் இவர்கள். இவர்கள் சொல்லும் அறிஞர் பட்டியலில் இடம் பெற்றவர்கள் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், மு, வரதராசனார், கி.வா.ஜகந்நாதன்,  ந. சஞ்சீவி, ஐராவதம் மகாதேவன், வா. செ. குழந்தைசாமி, தினமலர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பெரும் தமிழறிஞர்கள், பற்றாளர்கள், ஆய்வாளர்கள் அடங்குவர்.  இவர்கள் அரசுக்கு மிக நெருக்கமானவர்கள்.  இவர்கள் தமிழின் எதிரிகள் அல்லர், நெடுங்காலம் தமிழுக்குத் தொண்டு செய்து வந்திருப்போர்.  எனவே இவர்கள் கொள்கைகளைச் சிறுமைப் படுத்துவதோ, அல்லது தமிழுக்குத் தீங்கு செய்வோர் என்று சொல்வதோ பொருந்தாது என்பது சீர்திருத்தவாதிகளின் கருத்து.

திரு. ஐராவதம் மகாதேவன் தினமணியில் ஆசிரியராக இருந்த போது, இந்தக் கருத்துகளை வெளியிட்டு  படிப்போர் கருத்துக்கணக்கு பார்த்தார்கள்.  அவர்கள் கணக்கில் சீர்திருத்தத்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது என்று செய்தி வெளியிட்டார்கள்.  இதைத்தவிர வேறு எந்த அறிவியல் முறைச் சோதனையோ, கணக்குகளோ சீர்திருத்தவாதிகள் செய்ததாகத் தெரியவில்லை.  குறிப்பாக, குழந்தைக்கல்விச் சோதனை செய்து உண்மையிலேயே சீர்திருத்தம் கற்பதை எளிதாக்குகிறதா, எப்படிப் பட்ட வரிவடிவம் அதற்குப் பொருத்தம் என்று யாரும் ஆய்ந்ததாகத் தெரியவில்லை.


இவர்களுக்கு மிகுந்த பக்க பலமாக இருப்பது திராவிடர் கழகம்.  அது தன் விடுதலை நாளேட்டில் சில பகுதிகளைத் தொடர்ந்து திருந்திய எழுத்துகளில் பதிப்பித்து வந்துள்ளது மட்டுமல்லாமல், அதை அரசாணை மூலம் செந்தரக் குறியீட்டாக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சொல்லப் போனால், இந்தச் சீர்திருத்த முயற்சிக்குப் பெரியார் பெயர் மட்டும் இல்லையென்றால் யாரும் இதைக் கண்டு கொண்டிருந்திருக்க மாட்டார்கள்.

இவைதான் சீர்திருத்த ஆதரவாளர்களின் வாதம்.

அடுத்த பகுதிகளில், எப்போது சீர்திருத்தம் தேவை, எப்படிப் பட்ட சீர்திருத்தங்கள் பலனளிகின்றன, என்றும், இந்தப் பகுதியில் சீர்திருத்த வாதிகள் கொண்ட கருதுகோள்களுக்கு எத்தகைய ஆதரவு இருக்கிறது என்றும் பார்ப்போம்.

(தொடரும்).

2 கருத்துகள்:

nayanan சொன்னது…

வ.சுப.மாணிக்கனார் இதனை உறுதியாக மறுத்தார். நீங்கள் எழுதியிருப்பது முற்றிலும் உண்மை. வ.சுப.மாணிக்கனாரின் மகனார் தொல்காப்பியரிடம் அண்மையில் உரையாடியபோது அவரிடம், "ஐயா இந்தச் சீரழிப்பை ஆதரித்தார் என்று கூறுகிறார்களே" என்று வினவினேன்.
அவருக்கு வந்த சினத்திற்கு அளவேயில்லை. உறுதியாக மறுத்துவிட்டார்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

வன்பாக்கம் விஜயராகவன் சொன்னது…

திரு மணிவண்ணன்

“பெரியார்” துதி பாடிக்கொண்டே தமிழ் எழுத்துகளை தன் போக்குக்கு “சீர்மை” செய்யும் முயற்சிகளை முறியடிப்பதற்க்கு என் மனமார்ந்த சப்போர்ட்.

சீர்திருத்தவாதிகள் தமிழறிஞர்கள்
தெ.பொ.மீ., மு.வ.,கி.வா.ஜ., வ.சு.ப., ம.பொ.சி., சஞ்சீவி, பரிந்துரைக்கிறார்கள் என்கின்றனர் ? அதற்கு எதாவது ஆதாரம் உண்டா? மேலும் பலர் சீர்திருத்தம் தேவை என்ற பொதுவான தொனியில் எழுதியிருக்கலாம், ஆனால் மேல் சொன்ன வாசேுகு/திக `சீர்திருத்தத்தை` ஆதரித்து எழுதுயுள்ளனரா?

லிபியை பற்றி ஆராய்சி செய்தவர்கள் ஒரு லிபியின் “எளிமை”க்கும், அதைக் கற்று பயன்படுத்தும் வேகத்திற்க்கும் ஒரு சம்பந்தமில்லை என சொல்லி விட்டனர். ஒருவர், அண்ணாமலை ; பார்க்க
http://www.vallamai.com/?p=4

மற்றொருவர் ரிசார்ட் சாலமன்.

எழுத்து சீர்திருத்தங்களை விட, எப்படி எழுத்துகளை மொழியின் வளர்ச்சிக்கு ஒத்தார்ப்போல் மாற்றலாம் என்பது ஆக்கபூர்வமான முயற்சி

விஜயராகவன்