சனி, செப்டம்பர் 04, 2010

என் வாக்கைப் பெற விரும்பும் தமிழ் வேட்பாளருக்கான குறைந்த அளவு தகுதிகள்

ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன என்று முகநூலில் நான் ஒரு மறுமொழி அளித்திருந்தேன்.  அதைப் பார்த்த ஒரு நண்பர்
    மிக தவறான போக்கு இது.. எவன் ஆண்டால் என்ன என்று தன் கடமை தெரியாத படிக்காதவர்கள் சொல்லலாம்.. மிக்க படித்த நீங்கள் சொல்வது இந்த நாட்டுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.. எற்படுத்திகொண்டிருக்கிறது... இதுக்கு பேரு நடுநிலைமை இல்லை.
  
    இங்கு அனைவருக்கும் ஒரு அரசியல் அறிவு தேவை.. அரசியல் இல்லாமல் எதுவும் இல்லை இங்கே.. நீங்கள் சாப்பிடும் பருக்கையில் கூட அரசியல் கலந்திருக்கிறது என்று அறிந்துகொள்ளுங்கள்.. அரசியலை விட்டு விலகும் மக்கள் இருக்கும் நாடு உருப்படாது தானே
என்று மிகவும் கடிந்து கொண்டார். அவர் கேட்பதிலும் ஒரு நேர்மை இருக்கத்தான் செய்கிறது.  என்ன செய்வது?

 நான் வாக்களிக்க விரும்பும் வேட்பாளருக்குக் குறைந்தது கீழ்க்கண்ட தகுதிகள் இருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.
  1. கொலை, கொள்ளை செய்திருக்கக் கூடாது.  (கிண்டலுக்காகச் சொல்லவில்லை.  இதுதான் நாட்டு நடப்பு) (என்கவுன்டரில் யாரையாவது ”போட்டுத் தள்ளி” இருந்தாலும், அதுவும் கொலைதான்.)
  2. குண்டர்கள் சட்டத்தின் கீழுள்ள செயல்களைச் செய்திருக்கக் கூடாது
  3. தாதா வேலை செய்திருக்கக் கூடாது.  (இது குண்டர்கள் தலைவர் வேலைதான், இருந்தாலும் சொல்ல வேண்டிய தேவை)
  4. பொதுச் சொத்துகளைச் சேதப் படுத்தியிருக்கக் கூடாது (நல்ல கொள்கைக்காகப் போராடியிருந்தாலும் கூட)
  5. மக்களாட்சி நாட்டில் மன்னராட்சியை நினைவூட்டும் பட்டப் பெயர்களை வைத்திருக்கக் கூடாது (மன்னர், வேந்தர், தானைத்தலைவர், கேப்டன், நாயகன், தளபதி, சக்ரவர்த்தி, போன்றவை
  6. உறவுப் பெயர்களை எதையும் பட்டப் பெயராய் வைத்திருக்கக் கூடாது (ஐயா, தாத்தா, பாட்டி, தந்தை, அப்பா, அம்மா, அண்ணா, அக்கா, தம்பி, தங்கை)
  7. என்னை உறவுப் பெயரால் அழைக்கக் கூடாது (உடன்பிறப்பு, ரத்தத்தின் ரத்தம், போன்ற பசப்புச் சொற்கள் எப்போதோ காலாவதியாகி விட்டன).
  8. வானுயரக் கட் அவுட்களை எந்தக் காலத்திலும் வைத்திருக்கக் கூடாது.  சிலை வைத்திருக்கக் கூடாது.  பால் குடமுழுக்கு (பாலாபிஷேகம்) பண்ணியிருக்கக் கூடாது
  9. திரை, சின்னத்திரை உலகுகளோடு எந்தத் தொடர்பும் இருக்கக் கூடாது.  (மன்னிக்கவும். திரைத்துறையினர் முதலில் ஒழுங்காகத் திரைப்படத்தை எடுக்கக் கற்றுக் கொள்ளட்டும்.  நடிக்கத் தெரியாதவர்கள் எல்லாம், ஏன் நடிக்கத் தெரிந்தவர்களும் கூடத்தான், நான் அடுத்த முதலமைச்சர் ஆகப் போகிறேன் என்று சொல்லும்போது குமட்டிக் கொண்டு வருகிறது.)
  10. பெருஞ்செல்வந்தர்கள், நிலக்கிழார்கள், பெரிய தொழிலதிபர்கள் மற்றும் அவர்கள் அடியாட்கள், “நெருங்கிய” உறவினர்கள் மற்றும் நண்பர்கள் போட்டியிடக் கூடாது
  11. டாக்டர், எஞ்சினியர், லாயர், புரொபசர் என்ற பட்டங்களை எல்லாம் இருந்தாலும் விளம்பரப் படுத்திக் கொள்ளக் கூடாது.  அரசியலில் ஆய்வுப் பட்டம் பெற்றிருந்தாலும் கூட அதை விளம்பரப் படுத்தக் கூடாது
  12. வேட்பாளராகும் முன்னர் இருந்த செல்வத்தை விடப் பன்மடங்கு ( அதாவது ஒரு 25%க்கு மேல் வட்டி கிடைத்தால் கூட )  செல்வம் கூடினால், அவற்றில் 95%ஐ வரியாகக் கட்டி விட வேண்டும்.
  13. குடும்பமே அரசியலில் ஈடுபடக் கூடாது.  நான்கு தலைமுறைக்கு ஒருவர் மட்டும் போதும்.  அதுவும் தலைமுறையில் பதவி வகித்தவர் இன்னும் உயிரோடு இருக்கும் வரை அவரது வாரிசுகள் யாரும் போட்டி போடக் கூடாது. (அதாவது அமைச்சர் தட்சணாமூர்த்தி  உயிரோடு இருக்கும் வரை அவர் மகன் லெனின், அவர் மருமகன் தங்கம், ஒன்று விட்ட பேரன் அருட்செல்வம், பேத்தி மீனாட்சி, கொள்ளுப்பேரன் ராகுல் என்று யாரும் எந்த அரசியல் பதவியும் வகிக்கக் கூடாது.)
  14. ஒருவர் வாழ்க்கையில் இரண்டு முறை மட்டும் ஒரு பதவிக்குப் போட்டி போடலாம்.
  15. எந்த ஜாதிக் கட்சியிலும் எக்காலத்திலும் இருந்திருக்கக் கூடாது, கூட்டணி வைத்திருக்கக் கூடாது.  ஜாதியை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தியிருக்கக் கூடாது.
  16. அறிவியல், தொழில்நுட்பம், அரசாங்கவியல், தமிழ் மொழி, இலக்கியம், வரலாறு பற்றிய நல்ல அறிவும் புலமையும் இருக்க வேண்டும்.
  17. எடுத்தவுடன் வருங்கால முதலமைச்சர் என்று போஸ்டர் போட்டால், என்னுடைய வாக்கு அறவே இல்லை.
  18. வாழ்க்கையில் ஒரு சில ஆண்டுகளாவது யாரிடமாவது ஊதியத்துக்கு வேலை பார்த்திருக்க வேண்டும்
  19. வாழ்க்கையில் ஒரு சில ஆண்டுகளாவது ஏதாவது ஒரு தொழில் தொடங்கி நாலு பேருக்கு வேலை கொடுத்திருக்க வேண்டும்
  20. உள்ளூராட்சி, நகராட்சியில் அடிநிலை மன்ற உறுப்பினர் பதவியில் இருந்து படிப்படியாக அனுபவம் பெற்று மேலுக்கு வந்திருக்க வேண்டும்.
  21. அறிவியல், தொழில்நுட்பம், பொருளாதாரம், வரலாறு, ஆட்சித்துறை இவற்றைப் பற்றி மக்களுக்குத் தமிழில்  எளிமையாக எடுத்துச் சொல்லும் அறிவும் திறமையும் இருக்க வேண்டும்.
  22. இந்திய ஆட்சிப்பணியில் தேறி அரசுப்பணிக்கு வந்திருக்கும் அலுவலர்களை எதிர்கொள்ளும் அளவுக்குப் பட்டறிவும், படிப்பறிவும் இருக்க வேண்டும்.
  23. தப்பித் தவறிக் கூட எதிர்த்து நிற்கும் கட்சிகளையும், வேட்பாளர்களையும் தரக்குறைவான சொற்களால் தாக்கியிருக்கக் கூடாது.
  24. குறைந்தது உயர்நிலைப் பள்ளி வரைக்குமாவது தமிழ் வழிப் பள்ளியில் படித்திருக்க வேண்டும்
  25. தெற்கு மாகடலுக்கு நடுவினிலே, அங்கோர் கண்ணற்ற தீவினிலே, தனிக் காட்டினிற் பெண்கள் புழுங்குகின்றார் எனில் இவர் துடி துடிக்க வேண்டும்; உலகில் எந்த மூலையில் தமிழர்க்கு இன்னல் விளைந்தாலும் அவர்களைக் காப்பாற்றப் பெருமுயற்சி எடுக்க வேண்டும்.
  26. தற்காலத்தின் மிகப் பெரிய சிக்கல்களான புவி வெம்பல், சூழல் மாசு, உலக மயமாக்கலின் பின் விளைவுகள், பெரு நிறுவனங்களின் அத்து மீறல்கள், பெருநாடுகளின் ஆதிக்கப் போக்கு, அண்டை மாநிலங்களோடு ஆற்று நீர்ப் பங்கீட்டுச் சச்சரவுகள், போன்றவற்றைப் பற்றிய ஆழ்ந்த சிந்தனையும் உறுதியான திட்டங்களும், அவற்றைச் செயலாற்றும் திறனும் ஆற்றலும் இருக்க வேண்டும்.
இவைதான் குறைந்த அளவு தகுதிகள்.

என் கண்ணுக்கு இந்தத் தகுதிகள் உள்ளவர்கள் யாரும் தட்டுப் படவில்லை. வருங்காலத் தலைவர்கள் இப்படி இருப்பார்களா என்றும் தெரியவில்லை.  இருக்க வேண்டும்.  அப்படி ஒருவர் தோன்றும் வரை, ஓ போடுவது எவ்வளவோ மேல்.

அப்படியே நான் விட்டு விட்ட தகுதிகளைப் பற்றி நீங்கள் சொல்லலாமே!

15 கருத்துகள்:

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

இதைப் பற்றி, நண்பர் பேரா. செல்வாவுடன் முகநூலில் பேசிக் கொண்டிருந்த போது, தமிழ்நாட்டுக்கு என்று வருங்காலத் தலைவர்களுக்கான பயிற்சிப் பள்ளி என்று ஒன்றைத் தொடங்கி அதில் வளர்ந்து வரும் தலைவர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும் என்று தோன்றியது. ஹார்வர்ட் பல்கலை இது போன்ற பயிற்சிப் பள்ளி ஒன்றை நடத்துகிறது. வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்கள் முயன்றால், ஹார்வர்டு, ஐஐஎம், ஐஐடி, அண்ணா பல்கலை, சென்னைப் பல்கலை, மற்றும் உலகின் தலைசிறந்த பேராசிரியர்களை வைத்து, தமிழ்நாட்டில் இப்படி ஒரு பள்ளியைத் தொடங்கலாம்.

பழமைபேசி சொன்னது…

வணக்கம்; தங்களுக்கு இந்தியாவில் வாக்கு அளிக்கும் வாய்ப்பு என்றுமே அமையாது போலிருக்கே??

Ravichandran Somu சொன்னது…

//பழமைபேசி said...
வணக்கம்; தங்களுக்கு இந்தியாவில் வாக்கு அளிக்கும் வாய்ப்பு என்றுமே அமையாது போலிருக்கே??
//

வழிமொழிகிறேன்:)

யேல் பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியராக பணிபுரியும் என் கல்லூரி வகுப்புத்தோழன் இரண்டு வார பயிற்சிக்கு வரும் இந்திய அரசியல்வாதிகளுக்கு தற்போது வகுப்பு எடுக்கிறான். பயிற்சி பள்ளிக்கு அவனிடமிருந்து நல்ல போசனைகள் கிடைக்கும்.....

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

முதல் உலகத்துக்கு வரத்துடிக்கும் இந்தியா மூன்றாம் உலக மூன்றாம் தர அரசியலை இன்னும் எத்தனை ஆண்டுகள் தாளித்துக் கொண்டிருக்க முடியும்? தகுதியற்றவர்கள் ஆட்சியில் நாடு எப்படி முன்னேற முடியும்? நாம் வாழ்வில் எல்லா சேவைகளிலும் தரத்தை எதிர்பார்க்கும்போது நம்மை ஆள்வோர்க்கு ஆளத் தகுதி இருக்க வேண்டும் என்பதில் என்ன தவறு?

எல்லா அரசியல் இயக்கங்களும் தமிழ்நாட்டில் நீர்த்துப் போனவை. விஜயகாந்த், சீமான் போன்ற திரைத்தாரகைகளிடம் பணமும் கவர்ச்சியும் இருக்கும் வரை அவர்களைச் சுற்றியும் சிலர் கூடலாம். ஆனால் அவர்களும் தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமைக்குக் ஏற்றவர்கள் இல்லை.

ஒரு புது அரசியல் தலைமைக்குத் தமிழகம் காத்து நிற்கிறது. அப்படிப் பட்ட தலைமை தோன்றுவது காலத்தின் கட்டாயம். பேரரசுகள் தோன்றி மடிவது போல, அரசியல் இயக்கங்கள் நீர்த்துப் போவது போல, தமிழகத்திலும் திராவிட அலை ஓய்ந்து கொண்டிருக்கிறது.

இனிமேல் தி.மு.க. பணம் படைத்த ஒரு குடும்பக் கட்சி, அவ்வளவே. அதன் எதிரிக்கட்சிகளும், எதிர்க்கட்சிகளும், அதன் நீர்த்துப் போன படிகள். பணம் சில காலம் வெல்லும். ஆனால், கொள்கைகள் எல்லாவற்றையுமே விற்றுப் பிழைக்கும் எந்த இயக்கமும் தொடர வாய்ப்பே இல்லை.

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

ரவி, உங்கள் யேல் பல்கலை நண்பருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொடுங்கள். இந்தப் பயிற்சிப் பள்ளி பற்றி அவரிடம் பேசிப் பார்க்க வேண்டும். எனக்கென்னவோ, இருப்பதைக் குறை சொல்லிக் கொண்டிருப்பதை விட, அடுத்த தலைமுறைக்கு விதை போட்டால் பயனிருக்கும் என்று தோன்றுகிறது.

பழமைபேசியும், நீங்களும், நகைச்சுவையாகச் சொன்னாலும், நாம் வாழும் உலகில் முதல் உலக நாடுகளின் அரசியல் தலைமையோடு ஒப்பிடும் அளவுக்காவது தமிழ்நாட்டில் அரசியல் இருக்கக் கூடாதா என்ற ஆதங்கம் உங்களுக்குள்ளும் இருக்கும் என நம்புகிறேன். உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி.

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

மின் தமிழ் மடற்குழுவில் தேவ் அவர்களின் கருத்து:
From: Dhivakar
Date: Sep 5, 10:26 am
To: மின்தமிழ்


மணிவண்ணன்,
உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமோ தெரியாதோ, யாம் அறியோம்.
நீங்கள் சொன்ன அத்தனை ‘கண்டிஷன்’களும் சோழ மன்னன் பராந்தகன் (10ஆம்
நுற்றாண்டில்) கல்வெட்டுப்பதிவாக - (அந்தக் காலகட்டத்திற்கேற்றவாறு)
இருந்தன. இன்னும் சில விஷய்ங்களும் கூடவே இருந்தன.

1. வேட்பாளர் ஒருமுறைதான் ஊர்த்தலைவர் பதவிக்குப் போட்டியிடவேண்டும்
2. போட்டியிடும் வேட்பாளரின் உறவினர் முந்தைய ஆண்டுகளில் இந்தப் பதவியில்
இருந்திருக்கக்கூடாது.

சபாஷ் போடத் தோன்றுகிறது இல்லையா..

ஆனால் அது ஒரு கனாக் காலம்..

அன்புடன்
திவாகர்

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

தேவ் அவர்களுக்கு என் மறுமொழி:

அன்புள்ள தேவ்,

ஒவ்வொரு காலக்கட்டத்திலும், மக்கள் நடத்தைக்கேற்ற விதிமுறைகளை
உருவாக்குவது இயல்புதானே.


நீங்கள் புகழ்பெற்ற உத்திரமேரூர் குடவோலைக் கல்வெட்டைப் பற்றிச்
சொல்கிறீர்கள் என நினைக்கிறேன். இரா. நாகசாமி அவர்களின் கட்டுரைத்
தொகுப்பில் இதைப் பற்றி எழுதியிருந்தார்.


http://tamilartsacademy.com/journals/volume1/articles/judges_tenure.html
http://www.hindu.com/fr/2003/10/10/stories/2003101001421200.htm


வரலாறு.காம் தளத்தில் கமலக்கண்ணன், தமிழ்க் கல்வெட்டுச் சொற்றொடர்களை
நேரடியாகவே எடுத்து எழுதியிருந்தார்:


http://www.varalaaru.com/default.asp?articleid=334


1. குறிப்பிட்ட அளவு நிலம் வைத்திருப்பவர்கள்
2. சொந்த வீட்டில் குடியிருப்பவர்கள்
3. முப்பதிலிருந்து அறுபது வயதுக்குட்பட்டவர்கள்
4. வேதங்களையும் சாஸ்திரங்களையும் கற்றவர்கள்
5. உடல்வலிமையும் உள்ளவலிமையும் உள்ளவர்கள்
6. இதுவரை வாரியத்தலைவராக இருந்திராதவர்
7. அவ்வாறு வாரியம் செய்தவர்களுக்கு உறவினராக அல்லாதவர்


நில உடமைச் சமுதாயத்தின் தோற்றம் அது என்பதால், நில உடமையாளர்களுக்கே
வாக்குரிமை அளித்திருந்தது. செல்வச் செழிப்புள்ள மேலை நாடுகளில் கூடத்
தொடக்கத்தில் அப்படிப் பட்ட கருத்தை வலியுறுத்தியிருந்தாலும் (இப்போதும்
பழமைவாதிகள் அவ்வப்போது முணுமுணுத்தாலும்), பொது வாக்குரிமை என்பது
இப்போது ஏற்றுக் கொண்ட கருத்து. வெறும் 5000 ரூபாய் கொடுத்து நில
உடமையாளர்களை வாங்க முடியாது என்பது உண்மைதான் என்றாலும், அப்படிக்
கொடுப்பது குற்றம் வாங்குவது தவறு என்பதை நிலைநாட்ட முடியாத நாட்டில்
இப்படிக் கட்டளைகளை வலியுறுத்த வேண்டியது படித்தவர்கள் கடமையல்லவா?


வேத சாஸ்திரம் படித்தவர்கள் மட்டும்தான் ஆள உரிமையுள்ளவர்கள் என்பதும்
இப்படிப் பட்ட ஆளும் வர்க்கத்தின் கட்டுப்பாடுதான். எழுதப் படிக்கத்
தெரிந்தவர்கள் பெரும்பாலோராக இருக்கும் தற்காலத்தில் ஆள்வோருக்கு நல்ல
கல்வி தேவை என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. அது மதம் தொடர்பாக மட்டும்
இல்லாத வரையில்.


மற்ற குறிப்புகள் அன்றும் இன்று போலவே ஊழல்கள் மலிந்திருக்க வேண்டும்
என்பதை உணர்த்துகிறதாகவே எடுத்துக் கொள்கிறேனே ஒழிய, அதை ஒரு பொற்காலம்
என்று போற்றத் தயங்குகிறேன்.


என்னுடைய “26 கட்டளைகள்” எனது முப்பதாண்டு கால அமெரிக்க வாழ்வின்
அடிப்படையில் தோன்றிய எண்ணங்கள். மூன்றாம் உலகத்திலிருந்து முதல் உலக
வாழ்வுக்கு முன்னேறத் துடிக்கும் இந்தியா, மூன்றாந்தர ஆட்சி முறைகளைக்
குப்பைக் கூடையில் போட்டு விட்டு அடுத்த நிலைக்கு உயர வேண்டும். இன்னும்
தத்தம் குடிகளுக்குள்ளேயே பார்த்துக் கொண்டு என் ஜாதிக்காரன் மட்டுமே
என்னைக் காப்பாற்றுவான் என்று கருதும் பிற்போக்குத் தனத்தை
விட்டொழிக்கும் வரை, இந்த நாடு முன்னேறவே வாய்ப்பில்லை.


“விதியே, விதியே, தமிழச்சாதியை என்செயக் கருதியிருக்கின்றாயடா” என்று
பாரதி போல் புலம்ப வேண்டியிருக்கிறது. ஆனால், இது தமிழ்நாட்டை மட்டும்
பிடித்திருக்கின்ற பீடை இல்லை. தென்னாசியா எங்கும் உள்ள, ஏன் ஆசியா
முற்றும் பரவியுள்ள நோய்.


தாய்லாந்தையும், இந்தோநேசியாவையும், பிலிப்பைன்சையும், வங்கதேசத்தையும்,
நேபாளத்தையும், வடகொரியாவையும், ஏன் ஜப்பானையும், தாய்வானையும்
பார்த்தால் எங்கும் இதே குழப்பத்தைத்தான் பார்க்கிறேன். குளிர்நாடுகளில்
உள்ள நாகரீகத்தை வெப்பநாடுகளில் ஏன் பார்க்க முடிவதில்லை என்று
புரியவில்லை.


உலகின் மூத்த நாகரீக நாடுகளான எகிப்து, இராக், இரான், கிரேக்கம்,
இத்தாலி, சீனா, அகண்ட பாரதம், என்று எவற்றிலுமே அரசியல் நாகரீகத்தைப்
பார்க்க முடியவில்லையே என்று பொருமத்தான் முடிகிறது.


பராந்தகச் சோழனின் பத்தாம் நூற்றாண்டுக் கல்வெட்டு, இந்தப் பழம்பெரும்
பூமி வரலாறு கற்றுத்தந்த பாடங்களை மறந்து விட்டக் கற்றுக் குட்டியாய்
வாழ்க்கையைத் தொடங்கி இருக்கிறது என்பதைக் காட்டும் அடையாளமாகக்
காண்கிறேன்.


இருப்பினும், இந்த மாற்றங்கள் தேவை. இவை காலத்தின் கட்டாயம்.
முன்னேற்றத்துக்குத் தடையாய் நிற்பவை தவிடு பொடியாகும். என்னுடைய கவலை
எல்லாம் இந்தப் பழங்குடிப் பண்ணையார்கள் புதுப்பணக்காரர்கள், பன்னாட்டு
முதலாளிகளோடு கூட்டமைத்து, தென்னமெரிக்காவைப் போல நம்மைப் பதினெட்டாம்
நூற்றாண்டுக்குப் பின் தள்ளி விடுவார்களோ என்பதே.

ஜோதிஜி சொன்னது…

கனாக் காலம்..

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

இதை விடப் பெரிய கனவெல்லாம் நிறைவேறியிருக்கிறதே! ஆங்கிலேயர் ஆட்சி அஸ்தமிக்காது என்றனர். இந்தியா என்றென்றும் ஏழை நாடாகவே இருக்கும் என்றனர்.

இதை நான் கனா என்றே கருதவில்லை. தற்போது நடப்பதுதான் நாடகக் காட்சிகள். அரசியலை திரைப்படங்கள் போல சந்தைப் படுத்தல். அரசியலையும் திரைத்தொழில் போல் ஒளிவு மறைவாக தொழில் போலச் செய்து பொருளீட்டுதல்.

ஆனால், இந்த “தொழில்” எல்லை கடந்து விட்டது. ஒரு முதல்நிலைப் பள்ளி ஆசிரியர் வேலை கிடைப்பதற்கே லஞ்சம் கொடுக்க வேண்டும் என்றால், அந்த ஆசிரியரால் எப்படி நேர்மையாக வாழ முடியும்? பல்கலைத் துணைவேந்தர் பதவிகளைக் கோடிகளுக்கு ஏலம் விட்டால், அந்தப் பல்கலைகள் எப்படி உருப்படும்? வெளிநாட்டுக்காரன் தமிழகப் பல்கலைகளை ஏற்றுக் கொள்ளும்வரைதானே இந்தத் திமிர்? படிக்காமல் பட்டம் பெற்ற டாக்டர் பெருந்தலைகளுக்கு மருத்துவம் பார்ப்பதிலும் நாடகம் நடத்துவதை இவர்கள் புரிந்து கொள்வதில்லையா?

தலைகீழ் மாற்றப் புள்ளியை (tipping point) நெருங்கிக் கொண்டிருக்கிறோம். கண் இருப்பவர் காணக் கடவர்.

Robin சொன்னது…

//டாக்டர், எஞ்சினியர், லாயர், புரொபசர் என்ற பட்டங்களை எல்லாம் இருந்தாலும் விளம்பரப் படுத்திக் கொள்ளக் கூடாது. அரசியலில் ஆய்வுப் பட்டம் பெற்றிருந்தாலும் கூட அதை விளம்பரப் படுத்தக் கூடாது// Why?

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

நான் தந்த தகுதிப்பட்டியலில்

//டாக்டர், எஞ்சினியர், லாயர், புரொபசர் என்ற பட்டங்களை எல்லாம் இருந்தாலும் விளம்பரப் படுத்திக் கொள்ளக் கூடாது. அரசியலில் ஆய்வுப் பட்டம் பெற்றிருந்தாலும் கூட அதை விளம்பரப் படுத்தக் கூடாது// என்ற தகுதி ஏன் தேவை என்று ராபின் கேட்டார்.

ஏனென்றால் அவை வேறு பதவிகளுக்கான தகுதிகள். சட்ட மன்ற உறுப்பினராக மருத்துவராய் இருந்தால் என்ன நுட்பியலாளராக இருந்தால் என்ன? வழக்குரைஞர்களுக்குச் சட்டம் பற்றித் தெரிந்திருக்க வேண்டும் என்றாலும், மக்களுக்காக வாதாடும் வல்லமை இருக்கலாம் என்றாலும், ஏனைய தொழில்களை விட வழக்குரைஞர் தொழில் மக்களின் பிரதிநிதியாக சிறப்புத் தகுதி என்று கூறுவதற்கு வலுவான ஆதாரங்கள் ஏதும் இல்லை.

மக்கள் உரிமைகளுக்காக வழக்கு மன்றத்தில் போராடியவர்கள் அந்தச் செய்ல்களைப் பற்றிச் சொல்ல வேண்டும். வெறும் டாக்டர் கேப்டன் கலைஞர் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் என்று பட்டங்களை அடுக்கிக் கொள்வதால் ஒருவர் நல்ல வேட்பாளராகி விடுகிறார் என்பதற்கு ஒரு ஆதாரமும் இல்லை.

எந்தப் பட்டங்களும் இல்லாமல், தனி மனிதனாக, தன் மனதைத் திறந்து மக்களுக்காக வாதாடும் திறனோடு, தன் கொள்கைகளை விளக்கிச் சொல்லும் வேட்பாளரே என் வாக்கை ஈர்க்கிறார்.

தருமி சொன்னது…

நம்மூரில் அரசியல் ஒரு தொழிலாக ஆகிவிட்டது. அதன் மூலம் அவர்கள் "ஈட்டும்" காசு, ஊழலால் வந்தது என்று தெரிந்தால் அந்த சொத்துகள் அவர்களிடமிருந்து பறிக்கப்பட வேண்டும் - இப்படி ஒரு சட்டம் வந்தால் ஏதாவது பயனிருக்கலாம்.

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

தருமி எழுதினார்:

/* நம்மூரில் அரசியல் ஒரு தொழிலாக ஆகிவிட்டது. அதன் மூலம் அவர்கள் "ஈட்டும்" காசு, ஊழலால் வந்தது என்று தெரிந்தால் அந்த சொத்துகள் அவர்களிடமிருந்து பறிக்கப்பட வேண்டும் - இப்படி ஒரு சட்டம் வந்தால் ஏதாவது பயனிருக்கலாம். */

இப்படி ஏற்கனவே சட்டங்கள் இருக்கின்றன. ஊழல் செய்ததை நீதி மன்றத்தில் உறுதி செய்ய முடியும் என்றால் சிறைக்குச் செல்வதோடு, சொத்துக்களும் பறிமுதலாகலாம். ஆனால், ஊழல் செய்தார் என்று உறுதி செய்வது மிகக் கடினம். அதனால்தான், ஒருவரது சொத்து 25%க்கு மேல் கூடினால், அதற்கு 95% வீதம் வரி என்ற விதியைக் கூட்டினேன்.

அமெரிக்காவில், குடியரசுத் தலைவர் மற்றும் உயர் அதிகாரிகளின் சொத்துக்களை, பதவி ஏற்பதற்கு முன்னால் “கண் மறைவுக் கட்டளை” (blind trust)யிடம் ஒப்படைத்து விடுவார்கள். பதவியில் இருந்து இறங்கும் வரை, அவர்கள் சொத்துக்களை மேற்பார்வையிடுவது அந்தக் கட்டளைகளே.

அதிலும் சிலர் ஊழல் செய்து மாட்டிக் கொள்வதும் உண்டு. ( பார்க்க: http://www.legalaffairs.org/issues/January-February-2006/toa_costa_janfeb06.msp ). எத்தனை வேலிகள் போட்டாலும் அவற்றை மீறி ஆதாயம் தேடுவது மனித இயல்பு. எனவே கூடுமானவரை, தேன் பிழிபவன் புறங்கையை நக்குவதைக் கட்டுப் படுத்தாலாம், தேனையே திருடுவதை மன்னிக்கக் கூடாது.

Yazhini சொன்னது…

வேட்பாளருக்கான தகுதியை ஆயும் அதே நேரத்தில் - வாக்கைச் செலுத்தும் குடிகளுக்கான கடமைகளையும் பட்டியலிட வேண்டுகிறேன். உதாரணங்கள் :
(1) வரியை ஒழுங்காக செலுத்துகிறோமா ? இல்லையா ?
(2) வாக்கிற்காக பரிசுகளை பெறுகிறோமா, இல்லையா ?
(3) சாதி, மத சார்புடன் வேட்பாளரை தேர்வு செய்கிறோமா, இல்லையா ?

அரசியல் தலைவர்களும் பிரதிநிதிகளும் குடிமக்களின் பிம்பமே !

செல்வமுரளி சொன்னது…

சிறப்பான கருத்துரைகள்..... இதெல்லாம் எப்போது நடைபெறும் என அறிய ஆவல் :)