செவ்வாய், டிசம்பர் 14, 2010

கல்வெட்டுகள் நம்மை ஏமாற்றுகின்றனவா?

தமிழ் உலகம் மடற்குழுவில் நண்பர் திரு நக்கினம் சிவம் “கல்வெட்டுகளைக் கண்டு ஏமாறாதீர்கள்” என்ற தலைப்பில் (http://groups.google.com/group/tamil_ulagam/browse_thread/thread/4deeb86b729a307b#)  ஒரு வாதத்தை முன் வைக்கிறார்.  கல்வெட்டுகளை மட்டும் வைத்துக் கொண்டு கிரந்தம் தமிழகத்தை ஆண்டதாக “அறிவு சீவிகள்” சொல்வதாக எடுத்துக் கொண்டு ஒரு சோளக் கொல்லைப் பொம்மையை வெட்டிச் சாய்ப்பது போல இல்லாத ஒரு வாதத்துக்கு மறுப்பு வைக்கிறார்.

உண்மையில் கிரந்த எழுத்துகள் தமிழை ஆண்டிருந்தால்,  தமிழ் எழுத்துகள் முற்றிலும் மறைந்து போயிருக்கும்.  தெலுங்கு, கன்னட மொழிகளுக்குத் தனி எழுத்துகள் தோன்றுவதற்கு முன்னரே தமிழுக்கு எழுத்து வடிவம் இருந்ததற்குக் காரணமே தமிழ் மன்னர்களின் தனி ஆட்சிதான் என்பார் கல்வெட்டு ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் அவர்கள்.

ஆனால், தமிழகத்தில் கிரந்தமும் இருந்தது.  அது அரசர்களின் கல்வெட்டுகளிலும் இருந்தது.  அது மட்டுமல்லாமல், கிரந்த எழுத்துகள் தென்னகத்தின் பல மொழிகளுக்கும், தென்கிழக்கு ஆசியாவின் எண்ணற்ற பல மொழிகளுக்கும் எழுந்த எழுத்துகளுக்குத் தாய் வடிவமாகவும் இருந்தது என்பதுதான் வரலாற்று ஆய்வாளர் கருத்து.


கல்வெட்டு ஆராய்ச்சி என்பது தமிழ்நாட்டு வரலாற்றைப் பற்றி அறிந்து கொள்ள மிக இன்றியமையாத ஒரு தரவு.  கிரந்த எழுத்துகள் பல்லவர் வருகைக்குப் பின்னரே தலைதூக்குகின்றன.  அதற்கு முன்னர் இருந்த கல்வெட்டுகளால் தமிழ் வரலாற்று நிகழ்வுகள் பல உறுதியாகின்றன.  அவை எவையும் கிரந்தத்தில் இல்லை.  கல்வெட்டுகள் மட்டுமல்லாமல் செப்பேடுகளும் தமிழக வரலாற்று நிகழ்வுகளை அறிய இன்றியமையாதவை.

பல்லவப் பேரரசர்கள், சோழப் பெருவேந்தர்கள், பாண்டிய மன்னர்கள் ஆட்சிக் குறிப்புகள் பலவற்றைப் பற்றி அறியக் கல்வெட்டுகள் உறுதியாகத் தேவை.  கல்வெட்டுகளைச் செதுக்கிய குடியினர் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிராத குடிகளாக இருந்திருக்கக் கூடும்.  கல்வெட்டுகளில் தமிழ் எழுத்துகளில் இருக்கும் பிழைகள், எழுத்துகளைக் கலந்திருக்கும் முறை, வரிவடிவங்களின் அழகியல் தன்மை, என்று பல கோணங்களில் இவற்றைப் பார்க்கும் போது கல்வெட்டுகளைச் செதுக்கியவர்களுக்குத் தாம் செதுக்கிய மொழி புரிந்திருக்கிறதா என்று சில நேரங்களில் ஐயப் பட வேண்டியிருக்கும்.  ஆனால், எண்ணற்ற பல கல்வெட்டுகளில் பிழைகள் குறைவு.  செதுக்கியதைத் திருத்த முடியாத நிலையில், சிற்பியைக் குறை சொல்ல முடியுமா எனத் தெரியவில்லை.

கல்வெட்டுகள் பலவற்றில் கிரந்தம் மட்டுமல்ல, தமிழ் வட்டெழுத்தும், பிற்காலத் தமிழ் வரிவடிவமும் உள்ளன.  கல்வெட்டுகளைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புபவர்கள் ஒரு சில கல்வெட்டுகளையாவது நேரில் சென்று பார்க்க வேண்டும்.  மசிப்படிகள், மற்றும் எழுத்து வடிவங்களில் வந்துள்ள நூல்களைப் படிக்க வேண்டும்.

சோழர்களுக்குக் கீழ் இருந்த தெலுங்கு, கன்னட நாடுகளில் கல்வெட்டுகள் கிரந்தத்தில் மட்டுமல்ல, தமிழிலும், ஏன் கிரந்த எழுத்துகளில் தெலுங்கு, கன்னட மொழிகளிலும் உள்ளன.  கிரந்த எழுத்துகளில் எழுதப் பட்டிருக்கும் தெலுங்கு, கன்னட மொழியில் இருக்கும் கல்வெட்டுகளில் கணேசன் சொல்வது போல “திராவிட எழுத்துகள்” இல்லை.  தெலுங்கு, கன்னட மொழிகளில் எகரம், ஒகரம் இருப்பினும், அந்த எழுத்துகள் கொண்ட பெயர்கள் இக்கல்வெட்டுகளில் இருப்பினும், கிரந்த எழுத்து முறையை மாற்றிக் கொள்ளாமல், அவர்கள் வழக்கப்படி ஏகார ஓகார எழுத்துகளில் தான் தெலுங்கு/கன்னட எகர, ஒகரத்தைக் குறித்திருக்கிறார்கள்.  இது குறிப்பிடத் தக்க தரவு.  இதைச் சான்றாகக் கொண்டே கணேசனின் கூற்றை மறுக்க இயலும்.

அரசர்களின் ஆணைப்படி எழுதிய கல்வெட்டுகள், செப்பேடுகள் இவற்றை எவ்வாறு சமைப்பது என்பதற்கு ஒரு முறைமை இருந்திருக்கிறது.  இந்த முறைமையைப் பற்றி வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.  கல்வெட்டுகள், செப்பேடுகளின் மசிப்படிகள் 1908 வரை திரட்டியவை மட்டுமே நூறாயிரத்தையும் கடந்திருக்கிறது.  இந்தியாவிலேயே எண்ணிக்கையில் கூடுதலான கல்வெட்டுகள், மற்றும் செப்பேடுகள் தென்னகத்தில், குறிப்பாகத் தமிழகத்தில் இருந்திருக்கின்றன.  இவற்றில் பெரும்பான்மையானவை தமிழ் எழுத்துகளிலும், வட்டெழுத்துகளிலும் இருக்கின்றன.  ஆயினும் மெய்க்கீர்த்தி என்ற அரசப் பெருமைகளைப் பறைசாற்றும் செய்திகளைக் கிரந்த எழுத்துகளில், வடமொழியில் எழுதியிருக்கிறார்கள்.  இது, இன்றைக்கு நடக்கும் திறப்பு விழாக்களில் ஆங்கிலத்தில் கல்வெட்டுகளைப் பொறிப்பது போன்றது.  தம் அரசர் பெருமையை தமிழரல்லாதவர்களுக்கும் தெரிவிக்க கிரந்த எழுத்துகளில் வடமொழியில் எழுதியிருக்கும் வாய்ப்பு இருக்கிறது.  ஆனால், கல்வெட்டுகளின் முக்கிய நோக்கங்களை, அதாவது யார் எதற்கு என்ன கொடை வழங்குகிறார்கள் போன்ற உள்ளூர்ச் செய்திகளைப் பெரும்பாலும் தமிழில், தமிழ் எழுத்துகளில் பொறித்திருக்கிறார்கள்.

நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல, உண்மை சுட்டாலும், (தமிழகத்தில் உள்ள கல்வெட்டுப் பகுதிகள் தமிழில் இல்லாமல் இருப்பது சுடுகிறது என்றாலும்), உண்மை உண்மைதான்.

அது இல்லை என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதில் பொருள் இல்லை.

தமிழ்ப் பெருவேந்தர்கள் கடல் கடந்தும் படை எடுத்துச் சென்று பல்வேறு நாடுகளை வென்றார்கள்.  இமயத்தில் சேரன் வில்லைப் பொறித்திருக்கலாம். ஆனால், கடாரத்திலும், சாவகத்திலும், சோழன் தமிழைப் பொறிக்கவில்லை.  வடமொழியைத்தான் பொறித்திருக்கிறான்.

இன்றைய நிலையிலும், பல அரசாணைகள், நீதி மன்றத் தீர்ப்புகள், அரசுக் கல்வெட்டுகள் ஆங்கிலத்தில்தான் இருக்கின்றன.  தமிழகத்தின் தலைநகரத்தில், கடைகள், பொது நிறுவனங்களின் பெயர்களைத் தமிழிலும் (நோக்குக, தமிழில் மட்டுமல்ல, தமிழிலும்) எழுதுவதற்கு அரசு ஆணை பிறப்பிக்கவே 2010 வரை காத்திருக்க வேண்டியிருந்திருக்கிறது.  அப்படியும், முற்றிலும் எல்லோரும் மாறவில்லை.  பெங்களூரில் தெருப்பெயர்கள், பேருந்துகள், கடைப் பெயர்கள் எல்லாமே கன்னடத்தில் மட்டுமே இருக்கிறது.  அங்கே முணுமுணுக்காமல் சட்டத்தின் கீழ்ப்படிந்த அதே வணிகர்கள், தமிழகத்தில் போர்க்கொடி உயர்த்துகின்றனர்.

தமிழ்நாட்டில் தமிழையும் ஒரு பாடமாகப் படிக்கச் சொல்வதற்கே நீதிமன்றம் வரை எதிர்க்கப் போகிறார்கள்.  இங்கிருக்கும் சிறுபான்மையர் உரிமைகளைப் பறிப்பது போல் இல்லையா என்ற கூக்குரல் கேட்கிறது.  தனிமனித உரிமைகளைப் பறிப்பது போன்றது இத்தகைய ஆணை என்று நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்குகின்றன.  ஆனால், கருநாடகத்தில் கன்னடம் படிக்க வேண்டும் என்பதை முணுமுணுக்காமல் ஏற்றுக் கொள்கிறார்கள்.

ஆனால், தமிழர்களுக்கு மட்டுமே தமிழ் வெறியர்கள் என்ற பழிச்சொல்.

இன்னும் மொழி ஆளுமை பற்றிய செயல்களில் தமிழ்நாட்டில் தமிழர்களுக்குள்ளேயே ஒரு சரியான புரிதல் இல்லை.  வடமொழி வெறுப்பும், ஆங்கிலத்தின் மீது ஈர்ப்பும், தமிழ்ப் புறக்கணிப்புமே திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தலையெடுத்திருக்கின்றன.

நம் வரலாறு பற்றியும் உண்மையை அறிந்து கொள்ளும் அடிப்படையில் இல்லாமல், தொன்மங்களின் அடிப்படையில் நாம் விரும்பும் செய்திகளை வரலாற்றின் மீது மேற்பூச்சு பூசிக் கற்பனை செய்வதில் நமக்கு ஏதோ ஒரு மகிழ்ச்சி வருகிறது.  இந்தத் தாழ்வு உளப்பாங்கு தேவையற்றது. 

களப்பிரர்களும், பல்லவர்களும் வந்தேறிகள்தாம்.  அவர்கள் தம்முடன் தம் சமயங்களையும், தம் மொழிகளையும், கொண்டு வந்தனர்.  தமிழ் அரசர்களை முறியடித்து வேற்று அரசுகளை நிறுவினர்.  இது வரலாறு.  ஆனாலும், களப்பிரர்களும், பல்லவர்களும், நம்முள் கலந்து விட்டார்கள்.  தமிழர்களாகி விட்டார்கள்.  காலப்போக்கில் தமிழ் மீண்டும் தலை எடுத்தது. பின்னர், மீண்டும் தமிழ் மன்னர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் பிறமொழிகளும், பிறர் ஆட்சிகளும் தலையெடுத்திருந்தாலும், தமிழர்களின் விடாமுயற்சியால் தமிழ் இம்மண்ணில் வேரூன்றியிருக்கிறது.  ஆங்கிலத்தின் மாபெரும் தாக்கத்தின் கீழும், அரசு ஆதரவு கொண்டு இந்தியின் ஆட்சியின் கீழும், தமிழ் தளரவில்லை. 

இணையம் என்ற ஒரு களம் உருவானவுடனேயே, எந்த அரசின் ஆதரவும் இல்லாமல், தமிழர்கள் தாமே உருவாக்கிய குறியீட்டு முறையில் தமிழை வலையேற்றி உலகெங்கும் பரப்பினார்கள்.  இந்தத் தனித்தன்மை இருக்கும் மட்டும், தமிழ் என்றும் வாழும்.  அதற்காகத் தமிழகத்தில் வேற்று மன்னர்கள், வேற்றுக் குடிகள், வேற்று மொழிகள், மேலோங்கவே இல்லை என்று சொல்லிக் கொள்வது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதற்கு ஒப்பாகும்.

ஏனைய நாடுகளைப் போலவே, தமிழ் மண்ணிலும், பல பண்பாடுகள், மொழிகள், கருத்துகள், கலந்து ஊடாடின.  எண்ணற்ற பல குடிகள் இங்கு வந்து சேர்ந்தார்கள்.  அவர்கள் இன்று தம்மைத் தமிழராகத்தான் அடையாளம் காணுகின்றனர். இங்கு வந்து சேர்ந்த குடிகள் கொண்டுவந்த கலைச்செல்வங்கள் யாவும் தமிழுக்கு உரம் சேர்த்திருக்கின்றன.  தமிழன்னை தனக்கே உரிய வகையில் இவற்றை எடுத்துக் கொண்டு இன்றும் நம் உள்ளங்களை ஆளுகின்றாள்.

நாம் இந்த உண்மையைக் கொண்டாடலாமே!

அன்புடன்,

மணி மு. மணிவண்ணன்
சென்னை, தமிழ்நாடு




2010/12/14 Nakinam sivam

கல்வெட்டுகளைக் கண்டு ஏமாறாதீர்கள்


பல்லவர்கள் காலத்தில் சமசுகிருதமே மேலோங்கி இருந்தது மற்றும் பல தமிழ் மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் தமிழ் மொழி நடைமுறையிலேயே இல்லை என்று கோயில்களில் காணப்படும் கல்வெட்டுகளில் உள்ள சமசுகிருத கிரந்த எழுத்துக்களை வைத்து ஒரு சில அறிவு சீவிகள் கிரந்த எழுத்துக்கள் ஒரு காலத்தில் தமிழகத்தை ஆண்டது போல தங்களது கற்பனைக்கு உயிரோட்டம் அளிக்க முயல்கின்றார்கள்.


இந்த விதமான அறிவு சீவிகள் கல்வெட்டுகளில் உள்ள கிரந்த எழுத்துக்களை வைத்து மட்டும் அம்மொழியே தமிழகத்தை ஒரு காலத்தில் ஆண்டது என்ற ஒரு கருத்தை முன் வைக்கின்றார்கள்.


அவர்கள் பழங்காலத்தில் இருந்து இன்று வரை ஆலயங்கள் யாருடைய கைப்பாவையாக இருந்து வருகின்றன என்பதை கருத்தில் கொள்ளாமல் கல்வெட்டுகளில் காணப்படும் கிரந்தத்தை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு கிரந்தமே தமிழகத்தை ஆண்டது என்று ஒரு குறுக்கு சால் ஓட்டுகின்றார்கள்.


ஒரு உண்மை ஒரு சிலரை சுட்டாலும் அதுதான் உண்மை


அந்த உண்மை


இந்த இருபத்து ஒன்றாம் நுாற்றாண்டிலும் நமது தமிழக ஆலயங்களில் தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும் என்ற பலகைகள் தொங்கிக்கொண்டிருக்கின்றன என்றால் பல நுாறு, அயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எப்பழ தமிழ் மொழியை ஆலயத்தினுள் உள்ள கல்வெட்டுகளில் எழுத விட்டிருப்பார்கள். ஆகம விதி என்ற ஒரு புரட்டை வைத்துக்கொண்டு அதனை சாக்காக வைத்துக்கொண்டு தமிழ் பொன்ற நீச மொழி ஆலயத்தில் எழுதப்பட்டால் ஆலயத்தில் இறைவன் குடி கொள்ள மாட்டார் என்று ஏன் கூறி இருக்க மாட்டார்கள்.


மேலும் கல்வெட்டுகளை பொறிப்பவர்கள் யார் என்று பார்த்தால்
அவர்கள் ஆலயங்களை உருவாக்கும் கல்தச்சர்கள் எனப்படும் சிற்பிகளாகும்.


சிற்பிகள் ஆலயத்தை நிர்மானிக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு ஆகம விதிகள் தெரிந்து இருக்க வேண்டியது அவசியம்.


ஆகம விதிகள் அனைத்துமே சமசுகிருதத்தில் ஒருசிலர் மட்டுமே தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்டது.
இருப்பினும்
ஆலயத்தை ஆகமப்படி நிர்மாணிக்க வேண்டுமே என்பதற்காக அந்நாளையிலிருந்தே சிற்பிகளுக்கு கிரந்தம் கற்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு வந்துள்ளது.


அப்படி
தெரிந்த கொண்ட மொழி - மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியாத ஒரு மொழி தனக்கு தெரிந்துள்ளது என்பதனால் - அதன் மூலம் வேதத்தின் பொருளையும் பரிந்து கொள்ள முடிந்ததனால் அவர்கள் தங்களை ஆச்சாரியர்கள் என்றும் பிற்காலத்தில் ஆசாரிகள் என்றும் மறுவி அழைத்துக்கொண்டனர்.


இன்றைக்கும் ஆசாரிகள் என்று அழைக்கப்படும் ஒரு பிரிவினர்
வேதத்தின் உட்பொருளான பிரம்மமே தெய்வம் என்னும் பொருளில்
விராட்விஸ்வ பிரம்மனே நம
என்று எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்பு கூறுவதை காணலாம்.


தமிழ் நீச மொழி என்று ஆலயத்தில் நுழையக்கூடாது என்று இன்றைய நாளிலேயே சமசுகிருதத்திற்கு வக்காலத்து வாங்கும் மனிதர்கள் இருக்கும் போது அன்றைய காலக்கட்டத்தில் எப்படி தமிழை ஆலய கல்வெட்டுகளில் பொறிக்க ஒப்புக்கொண்டு இருப்பார்கள் என்று சிந்திக்க வேண்டும்.


ஆகவே கல்வெட்டுகளில் கிரந்த எழுத்துக்கள் இருக்கின்ற என்பதற்காக கிரந்தம் ஒரு காலத்தில் ஆட்சி செய்தது என்று வாதிடுவது குறுக்கு சால் ஓட்டும் அறிவு சீவிகளுக்கு வேண்டுமானால் பயன்படலாம்.


பயணம் தொடரும்


சிவம்

2 கருத்துகள்:

rajasundararajan சொன்னது…

அய்யா,

வரிவடிவம் இல்லாமல் இருந்த வடமொழிக்கு தமிழ் வரிவடிவத்தில் இருந்து உருவாக்கி எடுத்ததுதானே 'கிரந்தம்'? அது அப்படி உருவாக்கப்பட்டது என்பதால் வெட்கப்பட்டுத்தானே பிறகு 'தேவநாகரி' உருவாக்கப்பட்டது, இல்லையா?

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

தேவநாகரி எழுத்துமுறை 8ம் நூற்றாண்டில் எழுந்த நாகரி எழுத்துமுறையிலிருந்து பிறந்தது. ஆனால், நாகரி 4ம் நூற்றாண்டுக்கு முன்னதான குப்த எழுத்துமுறையிலிருந்து பிறந்தது. குப்த எழுத்து முறை அசோக பிராமி எழுத்து முறையிலிருந்து கிளைத்தது. அசோக பிராமி எழுத்துகள் பிராகிருத மொழிக்கு உருவானவை என்றாலும், குப்த எழுத்துமுறை சமஸ்கிருதத்தை எழுதுவதற்கு என்று படைக்கப் பட்டது. தமிழில் வடமொழி என்று சொல்லுவது பொதுவாக சமஸ்கிருதத்தைப் பற்றி என்றாலும், பிராகிருதமும் தமிழுக்கு வடமொழிதான். தமிழுக்குள் வந்த வடமொழிச் சொற்கள் பெரும்பாலானவை பௌத்த, சமண தாக்கத்தால் பிராகிருதத்திலிருந்து வந்தவை. பல்லவர்களுக்குக் குப்த, நாகரி முறைகள் தெரிந்திருந்தாலும், அவர்கள் கிரந்த எழுத்துமுறையைத்தான் வடமொழியை எழுத உருவாக்கினார்கள். கிரந்தமும் தென்னிந்திய பிராமி முறையிலிருந்து தோன்றியது என்றே ஆய்வாளர் கருதுகிறார்கள்.