Saturday, December 11, 2010

பாரதியின் வாக்கு - தமிழன்னை புகழ் ஏறி என்றும் புவிமிசை இருப்பாள்

 இன்று, டிசம்பர் 11.  தமிழன்னையின் தவப்புதல்வன் சுப்பிரமணிய பாரதியின் பிறந்த நாள்.
 
இந்தியாவுக்கு விடுதலை என்பதே முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப் படுவது போல், கானல் நீராய், பொய்யாய் வெறுங்கனவாய் இருந்த கொடுமையான காலத்திலேயே
 
“ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே,
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்”
 
என்று கொண்டாடிய தன்னம்பிக்கைக் கவிஞன் பாரதி.
 
அடிமைச் சங்கிலிகளால் பிணிக்கப் பட்டு கட்டுண்ட காலத்திலேயே
 
 ”வெள்ளிப் பனிமலை மீதுலவுவோம் அடி
  மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்”
 
என்று ஒளிமயமான எதிர்காலத்தைப் பற்றிக் கனாக் கண்டவன் பாரதி.
 
ஆனால், அப்படிப் பட்ட மாபெரும் கவிஞனின் எண்ணற்ற தன்னம்பிக்கைப் பாடல்கள் ஒரு புறம் இருக்க,  தமிழில் ஒன்றும் இல்லை, மேலை நாட்டு மொழிகளே ஓங்கி வளரும், ஆனால் “மெல்லத் தமிழினிச் சாகும்” என்று அறியாப் பேதை ஒருவன் கூறத்தகாத சொல்லைக் கூறினானே என்று தமிழன்னை துடித்துப் போவதாக எழுதிய பாடலில் வரும் கூறத்தகாத கூற்றையே பலர் பிடித்துக் கொண்டு உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.
 
 பாரதியின் பிறந்த நாள் அன்று ”தமிழ் இனி மெல்லச் சாகும் விழித்திடு தமிழா” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வந்துள்ளது.  அதைக் கீழ்க்காணும் சுட்டியில் காணலாம்: 

http://groups.google.com/group/tamilmanram/browse_thread/thread/c8e8ecdc154abe71#

ஆட்சி மொழியாக இல்லாத மொழிகள், அடுக்களை மொழிகள் மெல்ல மெல்ல அழிந்து மறைந்திடும் என்பது உண்மைதான் என்றாலும், இது போன்ற மிரட்டல் கட்டுரை அப்படிப் பட்ட அழிவுக்கு வித்திடுமே ஒழிய வாழ்வுக்கு வழி வகுக்காது என்பதுதான் வருந்தத்தக்க உண்மை.
 
ஒரு மொழி அழிந்து கொண்டு இருக்கிறது என்றால் அதைக் கற்பவர்கள் எண்ணிக்கை குறையுமே ஒழியக் கூடாது. 
 
முன்னெப்போதையும் விட இப்போது தமிழ் பல்லாயிரக் கணக்கானவர்களுக்குச் சோறு போட்டுக் கொண்டிருக்கிறது.  முன்னெப்போதையும் விட பல்லாயிரக் கணக்கணவர்கள் தமிழில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.  தமிழில் இல்லாத தலைப்புகளே இல்லை என்னும் அளவுக்கு மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் உட்பட, உலகில் வெளிவந்துள்ள எந்த நூலாக இருந்தாலும் அதைப் படித்துக் கருத்துரைக்கும் தமிழ்ப் பதிவர்கள் இருக்கிறார்கள்.  உலகத் திரைப்படங்களை அலசும் பதிவுகள் ஆயிரக் கணக்கானவை.  அரசியல் தமிழனுக்கு மூச்சு போல.
 
தமிழ்நாட்டில் வாழ்பவர்கள் தமிழ்ச் சூழலில் வாழ்கிறார்கள்.  இங்கே செந்தமிழ் நடையில் அரசு அறிவிப்புப் பலகைகள் உள்ளன.  செந்தமிழ் நடையில் எண்ணற்ற நூல்கள், தாளிகைகள் வெளிவருகின்றன.
 
ஆட்சி மொழியிலும், சட்ட மன்ற மொழியிலும், அரசு அலுவலகங்களிலு, நீதி மன்றங்களிலும் தமிழ் இன்னும் மேம்படலாம், மேம்பட வேண்டும்.
 
வெல்லத் தமிழ் இனி வெல்லும் என்று பறை சாற்றுவார் சிங்கைத் தமிழர் மா. கோ.  தமிழின் பெருமை அதன் தொன்மையில் மட்டுமல்ல, அதன் தொடர்ச்சியிலும் இருக்கிறது என்று முழங்கினார் மலேசியத் தமிழர் முத்து நெடுமாறன்.  தமிழால் வாழ்வோர் எண்ணிக்கை கூடிக்கொண்டு வரும் காலத்தில் தன்னம்பிக்கை மிக்க வருங்காலத்தை வரவேற்போம்.
 
தமிழை மேம்படுத்துவது நம் பொறுப்பு. அதைச் செவ்வனே செய்வோம்.  மற்றவர்களுக்கும் தமிழ் மீது நம்பிக்கை வரவழைப்போம்.  இது அழிந்து கொண்டு இருக்கும் மொழி என்ற நம்பிக்கையற்ற பேச்சு நம்மைத் தளரச் செய்வது.
 
பாரதியின் பாடலிலிருந்து ஒரு பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு நம்பிக்கையிழந்து திரிய வேண்டாம்.
 
அவ்வாறு தமிழைத் தூற்றுபவன் ஒரு பேதை என்றே கடிந்தார் பாரதி.
 
”கொன்றிடும்போல் ஒரு வார்த்தை” என்று இந்தக் கூற்றைச் சாடுகிறார்.  “கூறத்தகாதவன் கூறினன் கண்டீர்” என்று சொன்னவனைக் கடிகிறார் பாரதி.
 
இந்த வசை எனக்கெய்திடலாமோ? என்று தமிழன்னை தமிழர்களிடம் கேட்பதாகச் சொல்கிறார்.
 
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
 செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்
 
என்று தமிழன்னை தன் செல்வங்களுக்குக் கட்டளை இடுகிறாள்.
 
தந்தை அருள்வலியாலும் - இன்று
 சார்ந்த புலவர் தவ வலியாலும்
இந்தப் பெரும்பழி தீரும் புகழ்
  ஏறிப் புவிமிசை என்றுமிருப்பேன்
 
என்று தன்னம்பிக்கையோடு நிறைவு பெரும் பாரதியாரின் பாடலில் வரும் பேதையின் கூற்றையே நம் பிடித்துக் கொண்டிருப்பது பாரதியை நாம் புரிந்து கொள்ளவில்லை என்பதற்கே அடையாளம்.  இந்தியாவுக்கு விடுதலை என்பதே பொய்யாய் வெறுங்கனவாய் இருந்த கொடுமையான காலத்திலேயே
 
“ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்”
 
என்று கொண்டாடிய தன்னம்பிக்கைக் கவிஞன் பாரதி.
 
அடிமைச் சங்கிலிகளால் பிணிக்கப் பட்டு கட்டுண்ட காலத்திலேயே
 
 ”வெள்ளிப் பனிமலை மீதுலவுவோம் அடி மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்”
 
என்று ஒளிமயமான எதிர்காலத்தைப் பற்றிக் கனாக் கண்டவன் பாரதி.
 
தமிழன்னை புகழ் ஏறி என்றும் புவிமிசை இருப்பாள் என்பதே கவிஞனின் வாக்கு.  அந்த வாக்கு நனவாக வேண்டுமென்றால் தமிழன்னையின் மக்கள் எல்லோரும் ஒருமித்து உழைக்க வேண்டும் என்பதே அவன் கட்டளை.
 
செய்வோம்.
 
என்றுமுள்ள தென் தமிழ் என்று கம்பன் கொண்டாடிய தமிழை, என்றும் புவிமிசை இருப்பாள் என்று பாரதி கொண்டாடிய தமிழன்னையைப் போற்றுபவர்கள், வாரத்துக்கு ஒரு புதுக் கட்டுரை, தமிழில் இல்லாத ஒரு கருத்தை, கலைச் செல்வத்தை, தமிழில் மொழி பெயர்த்துக் கொடுப்போம்.
 
வாருங்கள், ஊர் கூடித் தேர் இழுக்கலாம்.  விக்கிப்பீடியா காத்திருக்கிறது.

15 comments:

மணி மு. மணிவண்ணன் said...

---------- Forwarded message
From: C.R. Selvakumar
Date: 2010/12/11
To: tamilmanram@googlegroups.com


மிக நன்றாகச் சொன்னீர்கள் மணி!! ஒவ்வொரு சொல்லும்
நம்பிக்கைதரும் ஊக்க மொழிகள்.

//.. வாருங்கள், ஊர் கூடித் தேர் இழுக்கலாம். விக்கிப்பீடியா காத்திருக்கிறது.//

நீங்கள் சுட்டியவாறு
விக்கிப்பீடியா ஒரு நல்ல எடுத்துக்காட்டு. எப்படி கூட்டுழைப்பால்
பயனுடைய ஒரு கோடி சொற்கள் கொண்ட கருவூலம் உருவாகியது
எனக் காணலாம்.. தேனியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர்
விக்கிப்பீடியாவைப்பற்றி தமிழில் ஒரு நூலே எழுதியுள்ளார். பாருங்கள்.
இடப்புறம் உள்ளவர் தமிழ் விக்கிப்பீடியாவின் முன்னோடி திரு மயூரநாதன்.
நமக்கு வேண்டிய அத்தனையையும் தமிழில் படைக்கலாம். ஆயிரம் பேர்
கூடி உழைத்தால் மிக வியப்புறும் அறிவுக்கருவூலம் கிட்டும்.

தமிழ் விக்சனரி என்னும் அகரமுதலி உலக மொழிகளிள் வரிசையில்
10 ஆவதாக உள்ளது. (தமிழ் விக்சனரியின் புள்ளிக்குறிப்புகளைக் காண:
http://meta.wikimedia.org/wiki/Wiktionary#Statistics). இடாய்ச்சு (செருமன் மொழி) 18 ஆவது, நிப்பானியம் (சப்பானியம்) 27 ஆவது, உலகில் ஏறத்தாழ 500 மில்லியன் மக்கள் பேசும் எசுப்பானியம் (español) 28ஆவது. அரபி 31 ஆவது இடத்தில், இந்தியோ 77-ஆவது. ஆனால் இன்னும் தமிழர்கள் ஆக்கவழிகளில் உழைக்க முன் வந்தால்
நாம் உலகில் முதல் 5-10 மொழிகளில் ஒன்றாக உயர்ந்து நிற்போம்.

தமிழ் ஓங்கி நிற்க நாம் எல்லோரும் சேர்ந்து ஆக்கவழிகளில்
உழைக்க வேண்டும் அல்லவா?

அன்புடன்
செல்வா

மணி மு. மணிவண்ணன் said...

---------- Forwarded message ----------
From: rajam
Date: 2010/12/11
To: tamilmanram@googlegroups.com


"தமிழ் இனி மெல்ல-ச் சாகும்" என்று சொன்னவன் ஒரு "பேதை"தானே, இல்லையா? !
தமிழ் மெல்லச் செத்து விட்டதென்றால் ... ... ... இங்கே நாம் எந்த மொழியில் நம் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறோம்?
திரு மணிவண்ணன் குறித்துக் காட்டியது போல் ... ஊர் கூடித் தேர் இழுக்கலாமே!

மணி மு. மணிவண்ணன் said...

---------- Forwarded message
From: சி. ஜெயபாரதன்
Date: 2010/12/11
To: tamilmanram@googlegroups.com, anbudan@googlegroups.com


தமிழ் மொழி 3000 ஆண்டுகளாக முச்சங்கம் வைத்து வளர்த்து தமிழகத்தை ஆண்டு வருகிறது. தமிழர் வட அமெரிக்கா (கனடா உள்பட), இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, நார்வே, ஸ்வீடன், அரேபிய நாடுகள், ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா போன்று பல்வேறு உலக நாடுகளில் வேரூன்றிக் கிளைகள், விழுதுகள் விட்டிருக்கிறார்.

தமிழ் ஓர் இமய மலை. அதில் சிறிது சரிவுகள் ஏற்பட்டாலும், மலையை யாரும் அழிக்க முடியாது.

ஜெயபாரதன்.

வையகத் தமிழ் வாழ்த்து
சி. ஜெயபாரதன், கனடா

பாரத கண்டச் சீரிளம் தமிழே !
ஓரினம் நாமெலாம் ! ஒருதாய் மக்கள் !
வாழ்த்துவம் உனையே ! வணங்குவம் உனையே !
தாரணி மீதில்உன் வேர்களை விதைத்தாய் !
வேர்கள் தழைத்து விழுதுகள் பெருகின !
ஈழத் தீவில் இணைமொழி நீயே !
சிங்கப் பூரினில் துணைமொழி நீயே !
மலேசிய நாட்டில் தனிமொழி யானாய் !
காசினி மீதில் மேவிய தமிழே !
வாழ்த்துவம் உனையே ! வணங்குவம் உனையே !

ஆத்திச் சூடி ஓளவை, ஆண்டாள்,
வையகப் புலவர் வள்ளுவர், இளங்கோ,
பாரதி, கம்பர், பாரதி தாசன்,
யாவரும் உனது மாதவப் புதல்வர் !
மலைகடல் தாண்டி அலைகளைப் போல
ஆசியா, அரேபியா, ஆஃப்ரிக்கா, ஈரோப்,
வடஅமெ ரிக்கா, கனடா புகுந்து
சொந்த மாக்கினர், செந்தமிழ் மாந்தர் !
யாதும் நாடே ! யாவரும் கேளிர் !
பாதுகாத் துன்னைப் பரப்புதல் எம்பணி !
காசினி மீதில் நேசமாய் நிலவும்
மாசிலாத் தமிழே ! வாழ்த்துவம் உனையே !
வையகத் தமிழே ! வணங்குவம் உனையே !

++++++++++
jayabarat@[April 7, 2008]

மணி மு. மணிவண்ணன் said...

---------- Forwarded message
From: Mohanarangan V Srirangam
Date: 2010/12/11
To: tamilmanram@googlegroups.com
Cc: anbudan@googlegroups.com


ஐயா! தமிழ் ஒரு காலத்தில் மறைந்துவிட்டதென்று ஓரரசன் 12 வருட வற்கடத்தின் பின் புலவர்களை அழைப்பித்துக் கேட்டானாம் ‘தமிழ் அறிந்தார் யாருமுண்டோ?’ என்று. அற்றைய ‘தமிழ்’ என்பதற்கு அகப்பொருள் என்று பொருள் கொள்க.


ஆழ்வார்களும், ஆசாரியர்களும் தோன்றி அருந்தமிழை திருவரங்கப் பெருமானின் அரசாங்க மொழியாக ஆக்கிவைத்து விட்டனர். தமிழ் பின் சென்ற பெருமாளும், திருமொழித் திருவாய்மொழித் திருநாள் என்ற தமிழ்த் திருநாளுமாக அன்றிலிருந்து இன்றுவரை, பாலேய் தமிழர் இசைக்காரர் பத்தர் பரவும் பைந்தமிழாய் ஸர்வ கோலாஹலத்துடனும், செழிப்புடனும் தமிழும், தமிழுக்கே தனிச்சிறப்பான அகப்பொருளின் நுணுக்கங்களும் நாளுக்கு நாள் வளர்முகத்தில் செம்மாந்து சிறக்கின்றன. மொத்த வடமொழி நூற்கடலையும் தமிழ் மொழியின் வேதத்திற்குச் சேவகம் செய்ய வைத்த, ஆழ்வாரின் திருவடிகளே சரணமெனக் கொண்ட ஆசாரியர்களும், நற்கலை பயிலும் திருமாலவன் அடியார்களும், திருவரங்கத் திருப்பதியும் இவ்வுல்கில் நிலவும் வரை தமிழ் வளர்ந்துகொண்டே இருக்குமே அன்றி ஒரு நாளும் மறையாது.


அனைத்து மக்களும் தமிழை விட்டாலும் தமிழையும், அதன் சிறப்பையும் கோயில் கட்டி வணங்கும் ஸ்ரீவைஷ்ணவர்கள் தம் அருந்தனமாக அதைக் காப்பாற்றி வருவர் என்பது வரலாறு கண்ட உண்மை, அதற்காக நாடு கடத்தப் பட்டாலும் சரி, அல்லது என்ன துன்பங்களை எதிர்கொள்ள நேர்ந்தாலும் சரி.


எனவே மெல்லத் தமிழ் இனி சாகும் என்பது பொருத்தமற்ற சொல்லாடலாம் என்க.


ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

மணி மு. மணிவண்ணன் said...

---------- Forwarded message ----------
From: rajam
Date: 2010/12/11
To: tamilmanram@googlegroups.com

"இடைப்பிறவரல்" ஆக நுழைகிறேன். பொறுத்தருளவும்.


"பொருள் இலக்கணம்" மறைந்துவிட்டது என்று பாண்டிய மன்னன் வருந்தினான் என்றுதான் படித்திருக்கிறேன்.
"தமிழ்" மறைந்துவிட்டதாக இல்லை. அப்படித் "தமிழ்" மறைந்திருந்தால் எந்த மொழியில் அவன் வருந்தினானோ?

தமிழைப் பொருத்தவரை ... "பேச்சு மொழியும்" "எழுத்து மொழியும்" இரண்டு பெரிய பகுப்புக்குள் அடங்கும். ஒவ்வொரு பகுப்பின் உள்ளேயும் இது பல பல வடிவம் பெறும். இதுவே தமிழின் சிறப்பு; இதுவே தமிழை இன்றுவரை வாழவைத்திருக்கிறது.

ஒரு கிழவி இறப்பதால் ஒரு மொழி அழிந்துவிட்டது என்பதெல்லாம் ... வம்புப் பேச்சு.

பேச்சை விடுத்துச் செய்யக் கூடியது என்ன என்று பார்க்கலாம்.

தமிழில் பல வகை உண்டு என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும்.

அந்த வகைகளுள் எது அவரவர்க்கு இயல்பாய் வருகிறதோ, பிறருடன் கருத்துப் பகிர்வுக்குப் பயன்படுகிறதோ அந்த வகையைப் பயன்படுத்துவதில் தவறு இல்லை என்பதை உணரவேண்டும்.


இதுவே என்னால் என் தமிழுக்குச் செய்யக்கூடியது.
மற்றவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரிந்துகொள்ள ஆவல்.


அன்புடன்,
ராஜம்

மணி மு. மணிவண்ணன் said...

---------- Forwarded message ----------
From: Mohanarangan V Srirangam
Date: 2010/12/11
To: tamilmanram@googlegroups.com


உங்களோடு எந்த விதத்திலும் வாதம் வளர்க்காமல் இருப்பதில் ஜாக்கிரதையாக இருக்கிறேன்.


எனினும் குறிப்பிட்டுச் சொன்னதால் பதில் சொல்கிற அவ்வளவே.


அரசன் பொருளதிகாரம் வேண்டும் என்றான் என்பதுவே சரி. தமிழ் என்பது மொழியைக் குறித்ததாயினும், அதன் சிறப்பாகக் கருதப்பட்ட பொருளதிகாரம், அதிலும் அகத்திணை இலக்கணம் என்பதைச் சிறப்புப் பெயராகக் குறித்தது இறையனார் களவியல் காலத்தில் என்று படித்த ஞாபகம். தவறு எனில் சுட்டிக் காட்டவும்.


இப்பொழுது நீங்கள் பேச்சு மொழி, எழுத்து மொழி என்பனவற்றைச் சிறப்பு அம்சம் என்று கருதினாலும், தமிழ் மரபில் பொருளிலக்கணத்தையே தமிழின் சிறப்பு அம்சம் எனக் கொண்டார்கள் என்பதையே பண்டைய நூல்கள் சுட்டுகின்றன. அவ்வழியே எனது adapted narration ம் அமைந்தது.


உங்களைப் போன்ற தற்கால ஆராச்சியாளர்க்கு இது முனிவை ஏற்படுத்துமேல் மன்னிக்கவும்.

மணி மு. மணிவண்ணன் said...

---------- Forwarded message ----------
From: rajam
Date: 2010/12/11
To: tamilmanram@googlegroups.com


இறையனார் களவியலில் நாம் படித்து அறிவது:


"அக்காலத்துப் பாண்டியனாடு பன்னீரியாண்டு வற்கடஞ் சென்றது. செல்லவே, பசி கடுகுதலும், அரசன் சிட்டரையெல்லாங் கூவி, வம்மின், யான் உங்களைப் புரந்தரகில்லேன்; என் தேயம் பெரிதும் வருந்துகின்றது; நீயிர் நுமக்கு அறிந்தவாறு புக்கு, நாடு நாடாயின ஞான்று என்னையுள்ளி வம்மின் என்றான். என, அரசனை விடுத்து எல்லாரும் போயின பின்றைக் கணக்கின்றிப் பன்னீரியாண்டு கழிந்தது. கழிந்த பின்னர் நாடு மலிய மழை பெய்தது. பெய்த பின்னர், அரசர், 'இனி நாடு நாடாயிற்றாகலின், நூல்வல்லாரைக் கொணர்க' என்று எல்லாப் பக்கமும் ஆட்போக்க, எழுத்ததிகாரமும் சொல்லதிகாரமும் யாப்பதிகாரமும் வல்லாரைத் தலைப்பட்டுக் கொணர்ந்து 'பொருளதிகாரம் வல்லாரை எங்குந் தலைப்பட்டிலேம்' என்று வந்தார். வர, அரசனும் புடைபடக் கவன்று, 'என்னை, எழுத்தும் சொல்லும் யாப்பும் ஆராய்வது பொருளதிகாரத்தின் பொருட்டன்றே. பொருளதிகாரம் பெறேமெனின் இவை பெற்றும் பெற்றிலேம்" எனச் சொல்லாநிற்ப மதுரை ஆலவாயில் அழல் நிறக் கடவுள் சிந்திப்பான்; 'என்னை பாவம்! அரசர்க்குக் கவற்சி பெரிதாயிற்று; அதுதானும் ஞானத்ததிடையதாகலான், யாம் அதனைத் தீர்க்கற்பாலம்' என்று இவ்வறுபது சூத்திரத்தையுஞ் செய்து மூன்று செப்பிதழகத்து எழுதிப் பீடத்தின் கீழிட்டான்."

மணி மு. மணிவண்ணன் said...

---------- Forwarded message ----------
From: சி. ஜெயபாரதன்
Date: Sat, Dec 11, 2010 at 8:27 PM
To: tamilmanram@googlegroups.com, tamizhamutham@googlegroups.com, anbudan@googlegroups.com


தமிழ் நாட்டில் சட்டப்படி தாய்மொழி தமிழ் படிக்க வேண்டும் என்று கட்டாயம் கிடையாது! வெளி நாடுகளில் வாழும் தமிழர்க்குத் தமிழை முறையாகக் கற்க அதிக வசதி இல்லை. “எங்க பெண்ணுக்குத் தமிழ் புரியும். ஆனால் எழுதப் படிக்க பேசச் சரியாகத் தெரியாது!” என்று தமிழ்த்தாய் ஒருத்தி சொன்னதாக, கனடா விலிருந்து சென்ற வருடம் சென்னையில் தன் மகனுக்குப் பெண் பார்க்கப் போன என் நண்பர் (ஐயங்கார்) ஒருவர் கூறினார். வீட்டில் தமிழை நன்கு கற்ற கனடா மாப்பிள்ளை தமிழில் உரையாடிக் கேள்வி கேட்கும் போது, சென்னையில் பிறந்து வளர்ந்த தமிழ்ப் பெண் ஆங்கிலத்திலே பதில் கூறி இருக்கிறாள். இது வெட்கப் பட வேண்டிய கூத்து! இப்படி ஆங்கிலத் தோல் போர்த்திய, போலித் தமிழர்கள் பலர் தமிழ் நாட்டில் இன்று இருக்கிறார்கள் !


இரவீந்திரநாத் தாகூர் ஒரு சமயம் சென்னைக்கு வருகை தந்த போது தமிழர் ஒருவர் அவரை வரவேற்றுக் கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். ஆங்கிலத்தில் ஆரம்பித்ததும், தாகூர் அவரைத் தடுத்து, “தயவு செய்து ஆங்கிலத்தில் வேண்டாம்; உங்கள் தாய்மொழியில் பேசுங்கள்; எனக்காகப் பேசாமல், அதோ ஆங்கு அமர்ந்து கேட்கும் பொது மக்களுக்குப் புரியும்படியாகப் பேசுங்கள்” என்றாராம்.

மணி மு. மணிவண்ணன் said...

---------- Forwarded message ----------
From: Banukumar Rajendran
Date: Sat, Dec 11, 2010 at 8:36 PM
To: tamilmanram@googlegroups.com


(யாரையும் குறித்து இது எழுதப்படவில்லை)


பொருள் இலக்கணம் கிடைக்காமல் போனதால் ஆலவாய் இறையனார், இறையனார்

அகப்பொருள் என்ற அகப்பொருள் நூலை எழுதினார் என்று இறையனார் உரையாசிரியர்

கூறுகிறார். அவரே கீழ்க் கண்டவாறு எழுதுகிறார்.“இனி இடைச்சங்கமிருந்தார் அகத்தியனாரும் தொல்காப்பியனாரும் இருந்தையூர்க்

கருங்கோழியும் மோசியும் வெள்ளூர்க் காப்பியனும் சிறு பாண்டரங்கனும் திரையன்

மாறனும் துவரைக் கோமானும் கீரந்தையுமென இத் தொடக்கத்தார்

ஐம்பத்தொன்பதின்மர் எனப…… அவர்க்கு நூல் அகத்தியமும் தொல்காப்பியமும்

என இவை என்ப.இனி கடைச் சங்கமிருந்து, தமிழாராய்ந்தார் சிறு மேதாவியரும் சேந்தம்

பூதனாரும் அறிவுடையரனாரும் பெருங்குன்றூர் கிழாரும் இளந்திரு

மாறனும் மதுரையாசிரியர் நல்லந்துவனாரும் மருதனிள நாகனாரும்

கணக்காயர் மகனார் நக்கீரனாரும் என இத் தொடக்கத்தார் நாற்பத்தொன்பதின்மர்

என்ப…. அவர்க்கு நூல் அகத்தியமும் தொல்காப்பியமும் என்ப.காரணம் என்பது அக்காகத்துப் பாண்டியனாருஞ் சங்கத்தாரும்

பொருளிலக்கணம் பெறாது இடர்ப்படுவாரைக் கண்டு ஆலவாயிற்

பெருமானடிகளால் வெளிப்படுத்தப்பட்டது.’’இவை சற்றும் பொருந்தவில்லை. அவரே இடை, கடைச் சங்க காலத்துக்கு

அகத்தியமும், தொல்காப்பியமும் வழக்காற்றில் இருந்தது என்று உரைத்த

ஆசிரியர் தொல்காப்பியத்தில் பொருளதிகாரம் இருந்தது அறியாமல் இருந்தது

ஏனோ?ஒருவேளை அகத்தியத்திற்கும், தொல்காப்பியத்திற்கும் பொருள் உரைப்போர்

இல்லாமையால் இறையனாரை அழைத்தார்களோ! என்று சமாதானம்

கூறினாலும், இறையனார் அவற்றுக்கு (அகத்தியம், தொல்காப்பியம்)

உரை செய்திருக்கலாமே? என்ற கேள்வி எழுகிறது?ஒருவேளை அது புறச் சமயத்தார் செய்தது என்று கருதினாரோ?;-)வற்கடம் பற்றியக் கதை நம்பமுடியாதது. அதற்கு ஆதாரம் கிடையாது.

அப்படி தேடினாலும் சமணத்தில் மட்டுமே கிடைக்கும். ;-)


இரா.பா,

சென்னை

மணி மு. மணிவண்ணன் said...

---------- Forwarded message ----------
From: rajam
Date: Sat, Dec 11, 2010 at 9:00 PM
To: tamilmanram@googlegroups.com"வற்கடம்" பற்றி மணிமேகலையில் பார்க்கிறோம்.
மற்றது...

எனக்குத் தெளிவில்லாதது! :-)

அன்புடன்,
ராஜம்

மணி மு. மணிவண்ணன் said...

---------- Forwarded message
From: C.R. Selvakumar
Date: Sat, Dec 11, 2010 at 9:13 PM

உலகம் முழுவதும் தமிழர்கள்
பரவி இருந்தாலும், அடுத 2-3 தலைமுறைகளில் அவை
அங்கெல்லாம் மறைந்துவிடும். தமிழின் தாய்மண்ணாகிய
தமிழ்நாடு இலங்கையில் செவ்வனே வாழ்ந்தால்தான்,
மலேசியா சிங்கப்பூரிலும் கூட வாழ முடியும், பிறகு ஓரளவுக்கேனும்
உலகநாடுகளில் வாழ முடியும்.

தமிழின் எதிர்காலம் உங்களில் பலர் எண்ணுவது போல
அத்தனை உறுதியானது இல்லை, ஆனால் வழிவழியாய்
மொழியைக் காக்க எழுந்த நல்லோர்கள்
வாழையடி வாழையாக வருவர் என்றே
நானும் நினைக்கின்றேன். இன்று தமிழர்களில் 1/3 பகுதி
மலையாளிகளாகிவிட்டனர். இதனை ஆழ எண்ணிப்பாருங்கள்!
மீண்டும் கூறுகின்றேன் ஆழ எண்ணிப்பாருங்கள்!
மறவாதீர்! 35 மில்லியன் பேர்
தமிழர்களாக இருந்திருக்கக்கூடியவர்கள்
இன்று மலையாளிகள் என்பது வேடிக்கை அல்ல. வழிவழியாய்
வந்த இலங்கை+யாழ்ப்பாணப் பண்பாடு இன்று எந்த
நிலையில் உள்ளது என்று பாருங்கள். கற்றவர்களில்,
செல்வாக்கு மிக்கவர்களில் (இவர்கள் 5-10% ஆக இருக்கலாம்),
எத்தனை விழுக்காட்டினர் தமிழ் பயிலுகின்றனர்.
(சுவரொட்டி படிக்கும் தமிழறிவையும், சமையற்கட்டு-
வரவேற்பறைத் தமிழையும் சொல்லவில்லை) - ஒரு
10-ஆவது 12-ஆவது வரை நன்றாகத் தமிழ் பயின்று
வருவோர் எத்தனை விழுக்காட்டினர்?

அறிவியலிலே கடுகடிப்பெயர்வு நிகழ்வு "critical phenomenon"
என்பர் (கடுக = விரைவாக),
அப்படித் "திடீரரென்று" திரியும் வாய்ப்புகள் உண்டு.
(சில நகர்வுகளுக்குப் பிறகு இது திடீரென நிகழ்வது)

வெறும் எண்ணிக்கையை வைத்துக்கொண்டு அழியாது,
நிலைத்திருக்கும் என்று நினைப்பது அறிவுடைமை
ஆகாது
உலக நாடுகள் அவை (ஐ.நா) 2003 இல் ஓர் அறிக்கை
வெளியிட்டது, அது மொழிகளின் வளர்ச்சி-தேய்வு பற்றி
அறிஞர்கள் கூடிக் கலந்து ஆய்வு செய்து வெளியிட்டது.
(பார்க்கவும்:
UNESCO, Language Vitality and Endangerment, International Expert Meeting on UNESCO Programme Safeguarding of Endangered Languages , Paris, 10–12 March 2003
http://portal.unesco.org/culture/en/files/35646/12007687933Language_Vitality_and_Endangerment.pdf/Language%2BVitality%2Band%2BEndangerment.pdf )

அதில் கூறப்பட்டுள்ள ஒரு செய்தி
"About 97 per cent of the world’s population speak about 4 per cent of the world’s languages; and conversely, about 96 per cent of the world’s languages are spoken by about 3 per cent of the world’s people (Bernard, 1996, p. 142). "

தமிழானது உலகில் ஏறத்தாழ 1% மக்களே பேசும் மொழி.

மேற்கண்ட ஆவணத்தில் அழிதருவாயில் உள்ள மொழிகளின் கூறுகளில்
பலவற்றைத் தமிழ் பெற்றுள்ளது (எண்ணிக்கை ஒன்றைத் தவிர).
"unsafe" அல்லது "definitely endangered" என்னும் வகையில் தமிழ் அடங்கும்
(பக்கம் 9 ஐப்பார்க்கவும்).

தமிழ்நாட்டில் அரசும் கோயில்களும், அறமன்றங்களும், கல்விக்கூடங்களும்,
இசைநிகழ்வுகளும், மிகமிகப் பெரும்பாலும் தமிழில் இல்லை எனில்,
தமிழ் அடுத்த 2-3 தலைமுறைக்குப் பிறகு செப்பமாக
வாழ்வது உறுதியில்லை.

கிரியோல் (creole) போலவோ, கல்லாதவர் பேச்சு மொழிபோலவோ வாழும்
என்பதை மறுக்கவில்லை. பல்கலைக்கழகக் கல்வியும் இன்னும் பல களங்களிலும், நிலைகளிலும் தமிழ் ஆழ வேர்கொண்டால்தான் தமிழ்
செப்பமுற வாழும்.

முதலில் இந்த ஊடகத் தமிழ்க்கொலையை நிறுத்த
அரசும் மக்களும் ஆவன செய்தல் வேண்டும். கோயில்களில் ஒப்பரிய
தமிழ்ப்பாடல்களைப் பாடிப் போற்ற வேண்டும். சமசுக்கிருதம் வேண்டாம்
எனச் சொல்லவில்லை. தமிழுக்கு முதன்மை தர வேண்டும்.
இது எத்தனை முகனையானது என்பதைப் பலரும் அறிவதில்லை.
(முகனை = முதன்மை, தலைமை, இன்றியமையாமை)

அரசில் ஆட்சி மொழி தமிழாக இருக்கவேண்டும்
இது இன்னும் இல்லை என்பது ஆட்சியாளர்களுக்கும்
தமிழ் மக்களுக்கும் மாபெரும் இழுக்கு. உண்மையை நேர்பட
எதிர்கொள்ள வேண்டும்.

அண்மையில் 40,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டது
மாபெரும் கொடுமை. இதனைப் பற்றிப்
பேசக்கூட உரிமை இல்லை. அதாவது தமிழ் மக்கள் தங்கள் மொழி
வாழ்முறை/பண்பாடு பற்றி நிலைநிறுத்திக்கொள்வதில்
மாபெரும் இடர்கள் உள்ளன.

கடந்த காலத்தில் தமிழின், தமிழ்க்கலைகளின் வளர்ச்சி
(ஏறத்தாழ) யாவும் தமிழ் ஆட்சிமொழியாகவும் செல்வாக்கு பெற்ற
மொழியாகவும் இருந்தகாலத்தில்தான்.

டே'விட்' கிறிசிட்டல் அவர்களின் மொழி அழிவு/,மறைவு (Language Death),பற்றிய புத்தகம் (Crystal, David (2000) Language Death. Cambridge, UK) படித்துப்பார்க்க வேண்டியது.

மணி மு. மணிவண்ணன் said...

(தொடர்ச்சி)

---------- Forwarded message
From: C.R. Selvakumar
Date: Sat, Dec 11, 2010 at 9:13 PM


தமிழ் செப்பமுற வாழ்வது தமிழர்களின் கையில்தான் உள்ளது.
உலகமயமாக்கல் முதல் இந்திய நடவண் அரசு, தமிழ் ஊடகக்கேடர்களின்
போக்கு வரை யாவற்றையும் ஈடுகட்டுவது தமிழர்களின் கையில்தான்.
70-80 மில்லியன் மக்களாக்கும் நாங்கள் என்று இறுமாந்து மார்தட்டிக்
கொண்டிருந்தால்,
அது நம் மாபெரும் அறியாமையாகவே இருக்கும். ஆக்கப்பணிகள்,
ஒவ்வொரு கட்டத்திலும் உரிமை நிலைநாட்டல் என்பனவற்றில் இன்னும்
பன்னூறாயிரம் மடங்கு அக்கறையுடன் இயங்க வேண்டும்.

நம்மால் முடியும் :)

மணி மு. மணிவண்ணன் said...

---------- Forwarded message ----------
From: Mohanarangan V Srirangam
Date: Sat, Dec 11, 2010 at 9:24 PM

தமிழின் பொருளதிகாரம், அதிலும் சிறப்பாக அகத்திணை இலக்கணம் ‘தமிழ்’ என்ற பெயராலே குறிக்கப்பட்டமைக்கும், தமிழின் சிறப்பாக அகத்திணை இலக்கணம் கருதப்பட்டமைக்கும் குறிப்புதவிகள் காண,

இவண் ....>>>


http://www.tamilvu.org/courses/diploma/d021/d0211/html/d0211102.htm


பயன்கொள விழைவோர் பயன்கொள்க.

மணி மு. மணிவண்ணன் said...

---------- Forwarded message ----------
From: C.R. Selvakumar
Date: 2010/12/11


நல்ல தொடுப்பு அரங்கனாரே!

குறிப்பாக:

இறையனார் அகப்பொருள்


இறையனார் அகப்பொருள் உரையில் வரும், ‘இந்நூல் என் நுதலிற்றோ எனின், தமிழ் நுதலிற்று’ (இந்த நூல் என்ன சொல்லுகிறது என்றால் தமிழ் சொல்கிறது.) என்ற பகுதி அகமே தமிழ் என்பதைச் சுட்டி நிற்கிறது.


தமிழ்நெறி விளக்கம்அகப்பொருள் இலக்கணத்தைப் பற்றிக் கூறும்
பழந்தமிழ் இலக்கண நூல் ஒன்றுக்குத் ‘தமிழ்நெறி விளக்கம்’ என்றே பெயர் அமைந்திருப்பதும் இங்கு எண்ணத் தக்கது.


அன்புடன்
செல்வா

மணி மு. மணிவண்ணன் said...

---------- Forwarded message ----------
From: சி. ஜெயபாரதன்
Date: 2010/12/11

நண்பர் செல்வா,

பாராட்டுக்கு நன்றி.


உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்.

கனடாவில் வாழும் ஈழத் தமிழர் வீட்டில் பிறந்த பிள்ளைகள் தமிழை முறையாகக் கற்றுத் தமிழில் அழகாகப் பேசுகின்றன.

புலம்பெயர்ந்துள்ள ஈழத் தமிழர் இல்லங்களில் தமிழ்மணம் கமழ்கின்றது.


ஜெயபாரதன்.