வியாழன், ஜனவரி 13, 2011

தமிழுக்குப் புதிய எழுத்துகள் தேவையா?

தமிழில்  புதிய கிரந்த எழுத்துகள் திணிப்பா, இல்லை, கிரந்தத்தில் தமிழ் எழுத்துக்களை நுழைத்து தமிழை விழுங்கப் பார்க்கிறார்களா என்ற பரபரப்பான கருத்தாடல்களைத் தொடர்ந்து, தமிழில் இல்லாத பிறமொழி ஒலிகளை, குறிப்பாக ஆங்கில ஒலிகளைக் குறிக்கப் புதிய எழுத்துகளை உருவாக்க வேண்டுமா கூடாதா என்ற சூடான பட்டிமன்றம் தமிழ் மன்றம் மடலாடற்குழுவில் பொங்கலுக்குச் சற்று முன்னரே அரங்கேறியிருக்கிறது.  (பார்க்க:
http://groups.google.com/group/tamilmanram/browse_thread/thread/fa20de4c8556d9e0/8f69b475037d85f0)

இந்த முன்மொழி x மறுமொழி கலந்துரையாடலில்  தமிழ் மன்றம் குழுவில் இருக்கும் தமிழ்ப் பேராசிரியர்களும், மொழியியல் ஆய்வாளர்களும் கலந்து கொள்ளவில்லை என்பதைக் காண்கிறேன்.
 
மொழி வளர்ச்சி என்பது ஒரு தனித்துறை.  மொழிக்குத் தேவையானவற்றைப் பற்றி ஆற அமரச் சிந்தித்துப் பரிந்துரைகள் செய்யக் கூடிய அறிஞர்கள் பலர் கூடிப் பேச வேண்டும்.  ஆனால், இது கொச்சையாகச் சொல்வது போல “ரூம் போட்டு யோசிப்பாங்களோ” போன்றதும் அல்ல. ஏனைய பல குமுகாயவியல்கள் போல மொழி வளர்ச்சியும் ஓர் ஆராய்ச்சித் துறை.
 
இதில் வாதிடுவோர்கள் பெரும்பாலும் பொறியாளர்கள்.
 
பொறியாளர்களுக்கு என்று ஒரு தனிப் பண்பு உண்டு.
 
இருக்கும் எதையும் சும்மா விட்டு வைக்க மாட்டோம்.  நோண்டிக் கொண்டே இருப்போம்.  திருத்திக் கொண்டே இருப்போம்.  முழுமையாக எதையாவது படைத்து விட்டால் எங்களுக்குத் தலையே வெடித்து விடும்!  :-). அதுதான் எங்கள் துறையின் பண்பு.  இதில் மென்கலன் துறை என்றால் இப்படிப் பட்ட நோண்டல்களை மிகவும் எளிதாகச் செய்ய முடியும்.  யூனிக்கோடு குறியீடு மென்கலன் தொடர்புள்ளது அல்லவா!  நன்றாக நோண்டலாம். ;-)
 
ஒரு மொழி இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வரையறை இடுவது ஒரு முறை (prescriptive).  இப்படித்தான் இருக்கிறது என்று விளக்கம் தருவது இன்னொரு முறை (descriptive). 
 
வாதத்துக்குத் தக்கவாறு நம்மில் பலர் இந்த இரண்டு அணிகளில் மாறி மாறிச் சேர்ந்து கொண்டு வாதிடுவோம்!
 
அதென்ன, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய தொல்காப்பியமும், நன்னூலும் 21ம் நூற்றாண்டுத் தமிழுக்குக் கால் கட்டிப் போடுவது என்று கொதித்தெழுபவர்கள் ஒரு சாரார்.
 
அடடா!  அந்தப் பாணினி இருக்கிறாரே, எப்படியெல்லாம் சிந்தித்து இந்த மொழியைக் கட்டிக் காக்க வழிவகை செய்திருக்கிறார் என்று பாராட்டுபவர்கள் மற்றொரு சாரார்.
 
பாணினியைப் பாராட்டுபவர்கள் சிலருக்குத் தொல்காப்பியமும், நன்னூலும் பிடிப்பதில்லை.  அதே போல் தொல்காப்பியத்தைக் கொண்டாடும் சிலருக்கோ பாணினி என்றால் எட்டிக்காய்.  செத்த மொழி, செத்த மொழி என்று திட்டிக் கொண்டே இருப்பார்கள்.
 
ஓர் இலக்கண நூல் மொழியின் இயல்பான வளர்ச்சியைக் கட்டிப் போட முடியுமா என்ற வாதங்கள் தொடர்கின்றன.  பாணினியின் உயர்வான இலக்கணத்திற்குப் பல நூற்றாண்டுகள் கழித்துதான் சமஸ்கிருதத்தின் செவ்வியல் காலமே தொடங்குகிறது.  காளிதாசனின் ஒப்பற்ற காவியங்கள் பாணினிக்குப் பின்னர் ஏழெட்டு நூற்றாண்டுகள் கழித்தே எழுந்தன.
 
சங்கப் பாடல்கள் தொல்காப்பியத்துக்குப் புறம்பானவையா இல்லையே, புறம்பானவை என்றால் தொல்காப்பியத்துக்கு முந்தியவையா இல்லையா, என்ற சுவையான ஆராய்ச்சிகளும் தொடர்கின்றன.
 
தமிழ் இலக்கியப் பரப்பிலேயே மிக உயர்வாகத் தமிழாசிரியர்கள் கருதுபவை சங்க இலக்கியங்கள்தாம்.  அவை தொட்ட உச்சியைப் பின் வந்த எவையுமே, கம்ப ராமாயணம் உட்படத் தொடவில்லை என்று கருத்தைப் பலரும் ஏற்றுக் கொள்கிறார்கள்.
 
அதனால் மொழி உறைந்து போய் விடுமா என்ன?
 
சமஸ்கிருதம் உறைந்து போய் விடவில்லையா எனக் கேட்கிறீர்களா?
 
ஆமாம், சமஸ்கிருதம் உறைந்துதான் போய் விட்டது.
 
சமண, பௌத்த சமயங்களின் மேலெழுச்சி சமஸ்கிருதத்தின் ஆதிக்கத்தைத் தகர்த்து பிராகிருத, மக்கள் மொழிகளை உயர்த்திப் பிடிக்கத் தொடங்கியதில் இருந்தே மக்கள் மொழிக்கும் அறிஞர் மொழிக்கும் இடைவெளி தோன்றத் தொடங்கியது.  இருப்பினும் காளிதாசனின் காவிய காலத்தில் செவ்வியல் சமஸ்கிருதம் மீண்டும் மேலெழுந்து நின்றதே?  பின் ஏன் உறைந்து போனது?
 
இது வரலாற்று, மொழியியல் வல்லுநர்களுக்கு உரித்த கேள்வி.
 
சமஸ்கிருதம் என்றுமே பேச்சு மொழியாக இருந்திருக்க முடியாது என்ற எண்ணமும் உண்டு. இருப்பினும், வெகு அண்மைக்காலம் வரை, ஆங்கிலத்தின் ஆதிக்கம் எழும் வரை, சமஸ்கிருதமே இந்தியத் துணைக்கண்டத்தின் அறிஞர் மொழியாக, இணைப்பு மொழியாகச் செயல் பட்டு வந்திருக்கிறது.
 
தமிழின் தன்மை தனி.
 
தமிழில் செம்மொழி வழக்கும் கொச்சை மொழி வழக்கும் நெடுங்காலமாகத் தொடர்ந்து வந்துள்ளன. பாவிலக்கியத்தில் செம்மொழியும், உரைநடையில் இளகிய தன்மையும் வழங்கி வந்திருக்கிறது.  இந்த நிலை மாறத் தொடங்கியது தமிழ் மன்னர்களின் ஆட்சி வீழ்ந்த பின்னரே.  கடைசிப் பாண்டியன் ஆளும் வரை இலக்கிய நடையில் வடமொழி எழுத்துகளைப் பொதுவாக விலக்கியே எழுதி வந்திருக்கின்றனர்.  கிரந்த எழுத்துகளைச் சேர்த்து எழுதுவதும், பிறமொழிச் சொற்களைத் தமிழில் எழுதத் தொல்காப்பிய விதிகளை மீறி எழுதுவதும் மூவேந்தர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர், தமிழரல்லாதவர் புரவலர்கள்  ஆகிய பின்னரே எனத் தெரிகிறது.
 
மிகப் பழைய கல்வெட்டுகளில் கொச்சை மொழியும், கலப்பு மொழியும் தெரிகின்றன. ஆனால், பழந்தமிழ் இலக்கியங்களுக்கு ஆயிரம் ஆண்டு கழித்து உரைய் எழுதிய உரைகாரர்களும் கூடச் செம்மொழி நடையிலேயே எழுதி வந்திருக்கின்றனர்.  தமிழின் பெருமையை வடமொழி வாணர்களுக்கு உரத்துச் சொல்ல வந்த வைணவ உரைகாரர்கள் தம் உரைகளில் தமிழும் வடமொழியும் கலந்து எழுதியிருந்தாலும், அந்த மணிப்பிரவாள நடையை அவர்கள் தோற்றுவிக்கவில்லை.  அது சமணர்களின் ”கொடை” என்றே அறிஞர்கள் கருதுகின்றனர்.
 
பாவிலக்கியம் மெலிந்து உரைநடை இலக்கியம் மேலெழத் தொடங்கிய 19ம் நூற்றாண்டில், முதலில் வடமொழிச் சொற்களும், கிரந்த எழுத்துகளும் வெகுவாகக் கலந்தே எழுதியிருக்கிறார்கள்.  “பிரதாப முதலியார் சரித்திரம்” என்ற புதினத்தை வைத்துக் கொண்டு பள்ளியில் தடுமாறியது நினைவிருக்கிறது.  பாரதியாரின் கட்டுரைகளில் இயல்பாக வரும் பல வடமொழிச் சொற்களை என்னால் புரிந்து கொள்ள முடியாமல் போயிருக்கிறது.  இதற்குக் காரணம், இது போன்ற பிறமொழிச் சொற்கள் தனித்தமிழ் இயக்கத்தின் தாக்கத்தினாலும்,  வடமொழியின் தொடர்பு இல்லாத குடிகளின் ஏற்றத்தினாலும், தமிழ் எழுத்துத் துறையில் ஏற்பட்ட மாற்றங்கள்தாம். 

அதே நேரத்தில் வடமொழிச் சொற்கள் இருந்த இடத்தை இன்று ஆங்கிலம் பிடித்துக் கொண்டு விட்டது. ஆள்வோர்களின் மொழி என்ற மதிப்பு வடமொழியிலிருந்து ஆங்கிலத்துக்குப் பெயர்ந்து விட்டது.  ‘60களிலும், ‘70களிலும், பெரும்பான்மைத் தமிழர்களுக்குப் புரியாத டாடி, மம்மி தமிழை இன்று சன் டிவி போன்ற ஊடகங்களின் கான்வென்ட் கன்னிகள் பட்டி தொட்டியெல்லாம் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.  

இதைத் தொடர்ந்துதான், இந்தக் கான்வென்ட் கன்னிகளின் நுனிநாக்குத் தமிழை எழுத முடியாதது சிலருக்குக் குறைபாடாகத் தெரிகிறது.

ஆங்கிலேயப் பேரரசு உலகை ஆண்டு கொண்டிருந்த போது கூடத் திருவல்லிக்கேணி, தூத்துக்குடி, திருவனந்தபுரம், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், என்ற பெயர்களைச் சரியாக எழுதுவதற்காக அவர்கள் தம் மொழியின் எழுத்துகளை மாற்றிக் கொள்ளவில்லை.  ட்ரிப்லிகேன், டுடிகொரின், ட்ரவேன்ட்ரம்,  ட்ரிச்சினாபொலி, டேஞ்சோர் (Triplicane, Tuticorin, Trivandram, Trichinopoly, Tanjore) என்றுதான் எழுதினார்கள்.

தன்னம்பிக்கை மிக்க பழந்தமிழர்கள் இது போன்ற எண்ணற்ற சொற்களைத் தமிழில் தமிழ் முறைப்படிதான் எழுதினார்கள்.

ஸ்ரமண என்ற சொல்லை, சமண என்றும் அமணர் என்றும்தான் வழங்கினார்கள்.  இன்றும் தமிழ்ச் சமணர்கள் தங்களைச் சமணர்கள் என்றுதான் அறிவிக்கிறார்கள்.

அதே போல் சமணர்கள் அருகக் கடவுள் என்று பன்னெடுங்காலமாக அழைத்து வந்திருக்கும் கடவுளின் பெயர் பாகத மொழியில் அரிஹந்த், சங்கத மொழியில் அர்ஹத்.  தமிழில் அருகன்.  இலக்கியத்திலும் அருகன்.

Arihant (Jain Prakrit: अरिहन्त arihant, Sanskrit: अर्हत arhat).

மனதில் உறுதி வேண்டும்.

அரபு மக்களுக்கும் பேச்சுமொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடைவெளி இருக்கிறது.  அரபுநாடுகளில் வழங்கும் உள்ளூர்க் கொச்சை மொழியை ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வதில் தடுமாற்றம் இருந்தாலும், அவர்கள் எழுத்து மொழியையும், பள்ளியில் பயிலும் செம்மொழியையும் புரிந்து கொள்வதில் எந்த விதத் தடுமாற்றமும் இல்லை.

அவர்கள் எழுத்துகளில் உயிரெழுத்துகள் இல்லை.  உயிரெழுத்துகளைக் குறிக்க மீக்குறிகள் இருந்தாலும் அவற்றை அரபியும் எபிரேயமும் (Hebrew) புழங்குவது இல்லை.



நிப்பானியர் பிறமொழிச் சொற்களைக் குறிப்பதற்காகத் தனி எழுத்துகளை உருவாக்கியது போல் தமிழும் செய்ய வேண்டுமா?

ஐரோப்பியர் இந்திய மொழிகளில் ஒலிகளைத் துல்லியமாக ஆய்வாளர்களுக்குக் குறிப்பிடுவதற்காக உருவாக்கியது போல மீக்குறிகளை உருவாக்க வேண்டுமா?

தமிழில் இல்லாத ஒலிகளைக் குறிப்பிடுவதற்காக கிரந்தத்திலிருந்து மேலும் பல குறியீடுகளை மலையாளம் போல இரவல் வாங்க வேண்டுமா?

இது போன்ற கருத்தாடல்களில் மொழி வளர்ச்சித் துறையில் பயிற்சியில்லாத பொறியாளர்கள் காரசாரமாக மோதிக் கொண்டிருப்பதைத் துறை வல்லுநர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்!  ஆனால், இத்தகைய கருத்தாடல்கள் தமிழுக்குத் தேவைதான்.  நம் மொழியின் இயல்பு, வளர்ச்சி பற்றி நாம் ஆழமாகப் புரிந்து கொள்ள இவை வகை செய்கின்றன.


அரபியரும், எபிரேயரும் தம் மொழியைப் போற்றும் தன்னம்பிக்கையுள்ள பழம்பெரும் பண்பாடுகளின் வழித்தோன்றல்கள்.

தமிழர்களுக்குத் தம் மொழி பற்றிய பெருமையும், இதில் இப்படித்தான் எழுதுவோம் என்ற தன்னம்பிக்கையும் இருக்கிறதா என்பது கேள்வி

7 கருத்துகள்:

அரசூரான் சொன்னது…

இது ஒரு ஆராய்ச்சி பதிவு, நிறைய தகவல்கள், இறுதியில் பதிலை எதிர்பார்த்தேன், அங்கும் கேள்வியுடன் முடித்து விட்டீர்கள்.

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

அரசூரான், மிக்க நன்றி. இது தமிழ் மன்றத்தில் அடிக்கடி நடக்கும் கருத்துப் போர். முன்னர் ஒருமுறை இன்னொரு தொடரில் நான் எழுதியிருந்ததைக் கீழ்க் காணும் சுட்டியில் படிக்கலாம்!

http://groups.google.com/group/tamilmanram/browse_thread/thread/98d56a6a3f2a41b0/5cfb9ab1cb707d7b

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

இது தொடர்பாக இராமகி அவர்கள் தம் வளவு பதிவில் ஒரு முறை எழுதியிருந்ததையும் படிக்கலாம்.

http://valavu.blogspot.com/2007/04/blog-post_18.html

ம.தி.சுதா சொன்னது…

நல்ல பகிர்வு மிக்க நன்றிகள்..

இனிய தமிழ் பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்.

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
நான் ஏன் பதிவெழுத வந்தேன் (தொடர் பதிவு)..

மயிலாடுதுறை சிவா சொன்னது…

நல்ல அருமையான பதிவு.

நானும் ஏதோ தீர்வு சொல்ல போகிறீர்கள் என்ற படபடப்போடு படித்தேன்...

மயிலாடுதுறை சிவா...

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

சுதா, மிக்க நன்றி.

சிவா, கேள்வியே இப்பொதுதான் எழுந்திருக்கிறது! அதற்குள் நேரடியாக இறைவனுடன் பேசிப் பத்துக் கட்டளைகளுடன் மலையிறங்கித் தீர்வு தரக்கூடிய மோசே என்று என்னை நானே நினைத்துக் கொள்வேனா என்ன! இதில் பலரையும் போல எனக்கும் தனிக்கருத்துகள் உள்ளன. ஆனால், அவைதான் தீர்வு என்று நானே நினைக்க மாட்டேன்.

மொழியின் தன்மையை மாற்றாமல் புதிய எழுத்துகளைச் சேர்க்க முடியுமா, அது தமிழின், தமிழர்களின் இயல்பா என்று மொழி வல்லுநர்கள்தாம் சொல்லலாம். 19ம் நூற்றாண்டின் தமிழோடு ஒப்பிடும்போது, 20ம் நூற்றாண்டில் தனித்தமிழ் பெரிதும் வெற்றி கண்டது என்றே சொல்லுவேன். 21ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தனித்தமிழ் தடுமாறிக் கொண்டிருப்பதனால்தான் இது போன்ற கோரிக்கைகள் எழுகின்றன. தனித்தமிழ் என்பது இன வெறியர்களின் அடையாளமாகக் காணப் பட்டால் அது தொடர்வது கடினம். தனித்தமிழ் என்பது சிறுபான்மைத் தமிழர்கள் தம் மொழி, பண்பாடு இவற்றை உலக மயமாக்கலிலிருந்து காத்துக் கொள்ளத் துணை புரியும் கேடயம் என்றால் அது வெல்லும். இன வெறியர்களிடமிருந்தும், சாதிக் காழ்ப்புணர்விலிருந்தும் தனித்தமிழை மீட்க வேண்டும். உலக மயமாக்கலின் கேடுகளிலிருந்து தம்மைக் காத்துக் கொள்ள இந்தச் சிறுபான்மையினருக்குத் தனித்தமிழ் என்ற அரண் தேவை.

தாசெ சொன்னது…

அன்புடையீர்!,
இணையத்தில் எங்கும், *தமிழ் எழுத்துக்களில் மட்டுமே எழுதுங்கள்* . பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை கண்டுபிடித்துப் பயன்படுத்துங்கள்
#தமிங்கிலம்தவிர்
#தமிழெழுதிநிமிர்
#வாழ்க #தமிழ்
இதுபற்றியான விரிவான தகவல்களுக்கு => https://thaache.blogspot.com/2020/09/blog-post.html
÷÷