Thursday, January 20, 2011

யூனிகோட்டில் கிரந்தம் சேர்ப்பது பற்றிய தமிழக அரசின் உயர்மட்டக் குழு அறிவிப்பு

யூனிகோட்டில் கிரந்தம் சேர்ப்பது பற்றிய தமிழக அரசின் உயர்மட்டக் குழுவைத் தமிழக அரசு அறிவித்துள்ளது.  அரசின் அறிவிப்பைக் கீழ்க்காணும் சுட்டியில் காணலாம்: http://www.tn.gov.in/seithi_veliyeedu/pressreleases.php


அரசின் அறிவிப்பு தமிழ் யூனிக்கோடு குறியீட்டு வடிவத்தில் கீழே:

செய்தி வெளியீடு எண்: 56                                                                         நாள் : 18.01.2011


தமிழ் மொழி மற்றும் கிரந்த எழுத்துக்களை
கணினி வழிப் பயன்பாட்டிற்காக ஒருங்குறி அட்டவணையில்
அமைப்பது குறித்து அனைத்துக் கருத்துகளையும் ஆய்வு செய்திட


ஓய்வு பெற்ற நீதியரசர் திரு. மோகன் அவர்கள் தலைமையில்
உயர்மட்டக் குழு அமைத்து
முதலமைச்சர் கலைஞர் ஆணை!

மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் தலைமையில் 4-11-2010 அன்று நடைபெற்ற அமைச்சர் பெருமக்கள் மற்றும் தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் -

தமிழ் மொழி எழுத்துக்கள், கிரந்த எழுத்துக்கள் ஆகியவற்றைக் கணினி வழிப் பயன்பாட்டிற்காக, யூனிகோட் சேர்த்தியம் (Unicode consortium) என்னும் நிறுவனம் ஒருங்குறி அட்டவணையில் அமைப்பது குறித்து விரிவான விவாதம் தேவை எனவும், அதனை விரிவாக விவாதித்து அரசுக்குப் பரிந்துரை செய்யும் பொருட்டு உயர் மட்டக் குழு அமைக்கலாம் எனவும் முடிவெடுக்கப்பட்டது.

அதனடிப்படையில், அனைத்துக் கருத்துக்களையும் ஆய்வு செய்திட, ஓய்வு பெற்ற நீதியரசர் திரு. ச. மோகன் அவர்கள் தலைமையில் பின்வரும் உறுப்பினர்களைக் கொண்ட உயர் மட்டக் குழு ஒன்றினை அமைத்து, மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் இன்று (18-1-2011) ஆணையிட்டுள்ளார்கள்:-

1. பேராசிரியர் ம. ராஜேந்திரன், துணை வேந்தர்,
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

2. முனைவர் வா.செ. குழந்தைசாமி, முன்னாள் துணை வேந்தர், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தலைவர், தமிழ் இணையக் கல்விக் கழகம்.

3. பேராசிரியர் மு. ஆனந்தகிருஷ்ணன், தலைவர், ஐ.ஐ.டி., கான்பூர் (அறிவியல் நகரம், சென்னை)

4. பேராசிரியர் பொன். கோதண்டராமன் (பொற்கோ)

5. முனைவர் ஐராவதம் மகாதேவன், இ.ஆ.ப., (ஓய்வு)

6. பேராசிரியர் சோ.ந. கந்தசாமி, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்

7. பேராசிரியர் கே. நாச்சிமுத்து, உலகத் தமிழ்ச் செம்மொழி தொல்காப்பியர் பேரவை

8. பேராசிரியர் அ.அ. மணவாளன், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்

9. முனைவர் ப.அர. நக்கீரன், இயக்குநர், தமிழ் இணையக் கல்விக் கழகம், சென்னை

10. முனைவர் மு. பொன்னவைக்கோ, முதன்மைக் கல்வி அதிகாரி, எஸ்.ஆர்.எம். நிகர்நிலைப் பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர்.

11. திரு. வைரமுத்து, தமிழ் அறிஞர் மற்றும் கவிஞர்

12. திரு. அரவிந்தன், தகவல் தொழில்நுட்ப வல்லுநர், சிங்கப்பூர்

13. திரு. மணி மணிவண்ணன், முதுநிலை இயக்குநர் (கணினி), சீமேன்டெக் கார்ப்பரேஷன், சென்னை.

14. முனைவர் என். தெய்வசுந்தரம், சென்னை.
மேற்காணும் பொருள் தொடர்பாக ஆய்வு செய்து, தமிழக அரசின் நிலையை மத்திய அரசுக்குத் தெரிவிப்பதற்கு ஏதுவாக, இக்குழு தனது அறிக்கையை விரைவில் வழங்கும்.


* * * *
வெளியீடு: - இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, தலைமைச் செயலகம், செ-9.

============================================================

அரசு அறிக்கையில் என் பெயரைக் குறிப்பிட்டு நான் வேலை செய்யும் நிறுவனத்தையும் பட்டியலிட்டிருந்தாலும், இக்குழுவில் பணியாற்ற என்னைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் என் வேலையோ அல்லது நிறுவனமோ அல்ல.  உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றம் என்ற பன்னாட்டு அமைப்பின் தமிழ் யூனிகோடு பணிக்குழுவின் தலைவர் என்ற பொறுப்பில் ஏற்கனவே கிரந்தம், யூனிக்கோடு குறியீடு பற்றிய ஆராய்ச்சி, அலசல்கள் ஆகியவற்றில் தொடர்பு இருப்பதாலும், தமிழக அரசின் தமிழ் யூனிக்கோடு குறியீட்டுக் குழுக்களில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து பங்கேற்று வந்திருப்பதாலும், இது தொடர்பான தொழில்நுட்பக் கருத்துகளை நேரடியாகக் குழு உறுப்பினர் வாயிலாக அவ்வப்போது அறிந்து கொண்டால் குழு மேம்படச் செயல்பட வாய்ப்பு உள்ளது என்பதால் அரசின் குழுவுக்கு என் பெயரைப் பரிந்துரைத்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். அதைத் தமிழக முதல்வரும் ஏற்று என் பெயரை அறிவித்திருப்பது வருங்காலத்தில் தமிழ் வளர்ச்சியில் தொழில்நுட்ப வல்லுநர்களின் பங்கு கூட வேண்டும் என்ற பொறுப்புணர்வோடு இந்தக் கடமையைச் செயலாற்ற அளித்த நல் வாய்ப்பாகக் கருதுகிறேன்.

6 comments:

அப்பாதுரை said...

நல்ல வாய்ப்பு. வாழ்த்துக்கள்.

அப்பாதுரை said...

அமெரிக்கத் தமிழனா, தமிழ் அமெரிக்கனா?

மணி மு. மணிவண்ணன் said...

தமிழில் எழுதும்போது ஈழத்தமிழன், சிங்கப்பூர்த்தமிழன், மலேசியத் தமிழன், தென்னாப்பிரிக்கத் தமிழன், அமெரிக்கத் தமிழன், கனேடியத் தமிழன் என்றுதான் எழுதுகிறார்கள். ஆங்கிலத்தில் அமெரிக்கன் என்று முடிவது போல, தமிழகத்தில் தமிழன் என்று தான் அழைக்கிறார்கள். அதுதான் இலக்கண மரபும் கூட. ”தமிழ் அமெரிக்கன்” என்று எழுதினால் குழப்பம் வரும். அது ஆங்கில இலக்கண விதி.

அப்பாதுரை said...

விளக்கத்துக்கு நன்றி. ஆங்கிலத்தில் அமெரிகன் என்று முடிவதன் இலக்கணம் தமிழில் சேரவில்லை என்று தோன்றுகிறது. 'புலம்பெயர்ந்து அமெரிக்கக் குடிமகனான' என்ற பொருளில் வரும் இலக்கணம், தமிழன் என்று முடியும் பொழுது பொருந்தவில்லையே?

மொழியை அடிப்படையாக வைத்து இன்னாரை அடையாளம் காண்பதோ தன்னை அடையாளம் சொல்வதோ குழப்பமே என்று நினைக்கிறேன்.

ஒருவேளை அமெரிகாவிலிருந்து புலம்பெயர்ந்து தமிழ்நாட்டுக்கு வந்ததால் இப்படியா? ஒருவேளை அமெரிகாவிலிருந்து புலம்பெயர்ந்த தமிழன் நாக்பூரிலோ கல்கத்தாவிலோ வாழ்ந்தால்? (கைவசம் எத்தனை நேரம் இருக்கிறது என்பதை இந்தக் கேள்வி காட்டுகிறது :)

மணி மு. மணிவண்ணன் said...

நீங்கள் மொழியின் இயல்பைப் பார்க்கத் தவறி விட்டீர்களோ எனத் தோன்றுகிறது. தமிழ் இந்தியர்கள், வங்காளி இந்தியர்கள், சிந்தி இந்தியர்கள், போன்ற சொல் வழக்கைப் பார்த்ததில்லை. மலேசியத் தமிழர்கள், மலேசிய இந்தியர்கள் போன்ற சொற்களில் குடியுரிமை முதலில் வரும். இது மொழியின் இயல்பு. ஆங்கிலத்தின் இயல்பைத் தமிழில் காண முயல்வது குழப்பத்தை விளைவிக்கும். மலேசியத் தமிழர்கள் அந்நாட்டிலேயே பிறந்து வளர்ந்தவர்கள். மலேசியக் குடியுரிமை கொண்டவர்கள். அதே போல்தான் நான் குறிப்பிட்ட ஏனையோரும்.

அமெரிக்க யூதர்கள் (American Jews) என்ற சொல்வழக்கை நீங்கள் அறிந்திருக்கலாம். யூத அமெரிக்கர்கள் (Jewish Americans)என்பதையும் பார்த்திருக்கலாம். எது சரி?

அப்பாதுரை said...

good point.