ஞாயிறு, அக்டோபர் 23, 2011



முன்னொரு காலத்தில், இமயமலையருகே இதேகாசுரன் என்று ஓர் அசுரன் இருந்தான். அவன் சின்னம் கைச்சின்னம். அவன் இமயமலைக்கும் வடக்கே காக்கஸாசுரன் என்ற ஓர் அசுரனுடன் நட்பு வைத்திருந்தான். சுத்தியும் அரிவாளும் என்ற சின்னத்தை வைத்திருந்த காக்கஸாசுரனுக்குத் தம் மக்களைக் காக்க நிறைய செல்வம் தேவைப் பட்டது. அவன் தன் நாட்டில் நிறைய இடங்களில் அணுவாசுர பூதங்களைக் கட்டிப் போட்டு அவற்றின் சாற்றில் இருந்து சக்தி உருவாக்கித் தன் நாட்டை நடத்திக்கொண்டிருந்தான்.


செர்நோபில் என்ற இடத்தில் இருந்த பூதம் கட்டவிழ்ந்து விடவே அந்த இடத்தில் பெருத்த சேதம் ஏற்படுத்தியது. இதற்குப் பிறகு, காக்கஸாசுரனின் அணுவாசுர பூதங்களைக் கட்டிப் போட முடியும் என்று யாருமே நம்பவிலலை. எனவே காக்கஸாசுரன் இதேகாசுரனோடு ஓர் ஒப்பந்தம் போட்டான். அந்த ஒப்பந்த்தின் படி இதேகாசுரன் இமயவானையும், குமரித்தாயையும் வேண்டி நீங்கள் இருவரும் கூடினால் ஓர் அசுரக் குழந்தையைப் பெற முடியும், அந்தக் குழந்தையின் சக்தியால், நாடே செழிப்புறும், எனவே எனக்கு இந்த வரத்தைத் தரவேண்டும் என்று காக்கஸாசுரன் கொடுத்த அணுவாசுரப் பூதத்தின் இரத்தத்தால் இமயவானை அர்ச்சித்தான்.


இதேகாசுரனின் பக்தியால் மகிழ்ச்சி அடைந்த இமயவான் என்ற தேவர் தலைவர் குமரி என்ற அசுர இளவரசியோடு கூடினார். அவர்கள் கூடிய குளத்தில் ஓர் அணுவாசுரக் குழந்தை பிறந்தது. அது செர்நோபில் பூதத்தின் மறுபிறவியாய் இருந்தது. அதை இதேகாசுரன் கண்ணும் கருத்துமாய் வளர்த்து வந்தான். இதேகாசுரன் தூங்கும்போது அதைப் பாஜகாசுரன் பார்த்துக் கொண்டான். இவர்கள் இருவரும் அதை 23 ஆண்டுகள் வளர்த்து வந்த பின்னால், கூடங்குள அணுவாசுர பூதம் தன் முதல் எரிமூச்சை விடத் தயாராக இருந்தது. அதற்கு முன்னால் இந்தப் பூதத்தைக் கட்டி வைத்துக் காப்பாற்ற வந்த அசுரப் படையினர் இந்தப் பூதத்தோடு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அங்கு வாழ் மக்களுக்குக் கற்பித்தனர். 


அதே நேரத்தில் சூரியன் தோன்றும் கடலுக்கு அருகே, வெகு தொலைவில், நிப்பான் நாட்டில் புக்குசிமா நகரத்தில் கட்டிப் போட்டிருந்த அணுவாசுரனின் தொல்லை பொறுக்காமல் பூமாதேவி அதிர்ந்தாள். அவள் சீற்றத்தால் நடுங்கிய வருணபகவான் பெருங்கடலில் இருந்து அலை அலையாய்க் கிளம்பி புக்குசிமா பூதத்தைத் தாக்கினார். இந்தத் தாக்குதலைத் தாங்க முடியாத புக்குசிமா பூதம் வெடித்துக் கிளம்பியது. தன் ஆலகால விஷத்தைக் காற்றிலும் நில்த்திலும், நீரிலும் நிறைத்தது. அந்த விஷம் தாய்ப்பாலிலும் கலக்க, பச்சிளங்குழந்தைகளும் தாய்ப்பால் குடிக்க முடியாமல் திணறினார்கள். அவர்களின் அழுகை ஏழுகடல், ஏழு மலை, ஏழு நிலம் தாண்டி கூடங்குளத்திலும் எதிரொலித்தது.


கூடங்குளத்து மக்கள் அதிர்ந்து போனார்கள். அணுவாசுரக் குழந்தையால் தம் நாட்டில் பாலும் தேனும் பரவி நாடே செல்வச் செழிப்பாய் இருக்கும் என்று எண்ணி இருந்தவர்களுக்கு அணுவாசுரனின் நச்சுத்தன்மை புரியத் தொடங்கியது. ஊர்மக்கள் எல்லோரும் கூடித் தம்மைக் காப்பாற்ற வேண்டி நோன்பு நோக்கத் தொடங்கினார்கள். லலிதாம்பிகை கண் திறப்பாளா என்று தவம் கிடந்தார்கள். இதேகாசுரனிடமிருந்து விடிவு கிடைக்காது என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும். லலிதாம்பிகை கடைக்கண் காட்டினால் போதும் அணுவாசுரனை அடக்க முடியும் என்றும் அவர்களுக்குத் தெரியும். 


அம்மாவோ இரங்கவில்லை. ஆனால், மக்களின் தீவிரமான விரதம் அம்மாவின் மனத்தைச் சற்று இளக்கியது. அணுவாசுரனை உயிர்ப்பிப்பதற்குத் தடையாக அம்மாவின் கவசம் துணை புரிந்தது. மக்களுக்கு இது மட்டும் போதவில்லை. அணுவாசுரனை முற்றும் வதை செய்ய மாட்டாயா அம்மா என்று மன்றாடினார்கள் மக்கள்.


மக்கள் உறுதியாய் நிற்பதைக் கண்டு இதேகாசுரன் கலங்கினான். அணுவாசுரனை எதிர்ப்பவர்கள் நாட்டின் எதிரிகள் என்று தூற்றத் தொடங்கினான் மோகனசிங்காசுரன். பாஜகாசுரன் உடனே அணுவை எதிர்ப்பவர்கள் காக்கஸாசுரனின் எதிரிகளான குருசுக் குலத்தார் என்று பரப்புரை செய்தான். அம்மாவைப் பார்ப்பன அக்ரஹாரத்துக்கு இழுத்து வந்து கட்டிப் போட்டார்கள். தமக்கு விடிவு காலமே இல்லையோ என்று கூடங்குளத்து மக்கள் அழுதார்கள், அரற்றினார்கள்.


மக்கள் அறியாமை இருளில் ஆழ்ந்திருக்கையில், தமிழன்னை கடைக்கண் திறந்தாள். நாட்டின் செழிப்புக்கு அணுவாசுரனின் சாறு மட்டும்தானே தேவை? அணுவாசுரனின் சாறு அனைத்தையும் திரட்டி ஒரு குப்பிக்குள் அடக்கினாள். தண்குழைத் தொழில்நுட்பத்தில் அணுவாசுரனை அடக்கினாள். உலகில் இருந்த அத்தனை அணுவாசுரர்களுக்கும் தேவையே இல்லாமல் போய்விட்டது. இந்த மாபெரும் வெற்றியை மக்கள் விளக்குகளை ஏற்றிக் கொண்டாடினார்கள். அதுதான் தீபாவளித் திருநாள். அதனால்தான் தி.ஆ. 2042 என்றென்றும் பொன்னாள் என்று போற்றப் படுகிறது. அதன் பின் மக்கள் சீரும் சிறப்புமாய்க் கொண்டாடி வாழ்ந்தார்கள்.


 
அணுவாசுரனை அடக்கியதன் நினைவாகத்தான் மக்கள் தீபாவளி கொண்டாடுகிறார்கள்.  பழைய பூதங்கள் போம் போம் என்று எண்ணை தேய்த்துக் குளித்துப் பழையவற்றைக் கழித்து விடுகிறார்கள். புத்தாடை உடுத்திப் புதிய நற்காலத்தை வரவேற்கிறார்கள்.  தம்மைப் பூதங்களுக்கு அடிமையாக்கி விட அரும்பாடுபட்ட இதேகாசுரனின் கொடுங்கோல் வீழ்ச்சியைக் கொண்டாடுகிறார்கள்.  தண்குழைமைத் தொழில்நுட்பத்தை வாராது வந்த மாமணியைப் போற்றுதும் என்று போற்றுகிறார்கள்.  தாம் கற்றுக் கொண்ட பாடத்தை என்றென்றும் மறவாமல் இருக்க வேண்டும் என்று தீபாவளித் திருநாளைக் கொண்டாடுகிறார்கள்.  நாமும் கொண்டாடுவோம்.

கதையும் முடிந்தது. கத்தரிக்காயும் காய்த்தது. இப்படியாகத்தானே புராணங்கள் உருவாகின்றன.

பார்க்க:


Hello-cheap-energy-hello-brave-new-world
http://www.forbes.com/sites/markgibbs/2011/10/17/hello-cheap-energy-hello-brave-new-world/
Cheap Power: An overnight revolution