வியாழன், ஜனவரி 19, 2012

இந்தியா ஒரு வாழைக் குடியரசா?


"தினமலர் தொடர்ந்து கூடங்குளப் போட்டங்களுக்கு எதிரான நிலையை எடுத்துவருகிறது தெரிந்ததே. (பிற மக்கள் போராட்டங்களையும் அவர்கள் கொச்சைப்படுத்தி சர்ச்சைகளுக்குள்ளாகியுள்ளனர்). எனவே தினமலரில் ‘மட்டும்‘ வரும் இத்தகைய செய்திகளை கவனத்துடன் வாசித்து அவற்றின் வரிகளுக்கிடையேயும் வாசிக்கக் கற்றுக்கொள்ளுவது அவசியம்." என்று எழுதுகிறார் சிறில் அலெக்ஸ்.

அவரது கட்டுரை (http://www.tamilpaper.net/?p=5425  ) சொல்லும் கருத்துகளை நாம் கவனிக்க வேண்டும்.


“மிக இயல்பாகவே இதுபோன்ற நிகழ்வுகளில் நாம் அதிகார பலம் பொருந்திய அரசின் பக்கம் நிற்க தலைப்படுகிறோம். ‘நாமே அரசு‘ என்பததைப் போன்றதொரு எண்ணம் நமக்குள்ளது. அதுவே, நம் அரசு தந்திரமாக வெளியிடும் இத்தகைய செய்திகளை நம்பவும் வைக்கிறது. உண்மையில் நாம் பொதுமக்களின் பக்கம் இருக்கும் நியாயங்களையும் புரிந்துகொள்ள முயலவேண்டும். இத்தகைய செய்திகளைப் பகிர்வதன் மூலம் ஒரு வீணான சந்தேகம் பரவ நாம் வழிவகுக்கிறோம். அதைவிட மேலாக இவற்றை அப்படியே நம்புவதன் மூலம் இதுபோன்ற சூழ்ச்சிகள் நிலைக்கவும், இன்னொரு தருணத்தில் நம்மையே குறிவத்து தாக்கவும் வழிவகுக்கிறோம். பல வேளைகளில் நமக்கு போதுமான தகவல்கள் கிடைப்பதில்லை என்பதும் உண்மையே. அப்படி இருக்குமேயானால் நாம் அமைதி காத்திருப்பதே நன்மை பயக்கும் என்பேன்.” என்று ஆணித்தரமாகத் தம் கட்டுரையை முடிக்கிறார்.

கூடங்குளம் போராட்டம் இந்திய வரலாற்றில், குறிப்பாகத் தமிழக வரலாற்றில் ஒரு புதிய ஏடு.

அணுசக்தி, அணுக்குண்டு, போன்ற செய்திகளில் 1960கள் முதல் இது ஏதோ மகத்தான சாதனை போன்ற ஒரு மலைப்பு மக்களுக்கு இருந்து வந்திருக்கிறது.  இந்திரா காந்தியின் ஆட்சியில் முதன்முதலாக இந்தியா அணுக்குண்டு வெடித்த போது ஏதோ ஒரு பிரம்மாஸ்திரத்தைப் பெற்று விட்டது போன்ற ஒரு பெருமகிழ்ச்சி ஏனைய மக்களைப் போலவே எனக்கும் இருந்தது.  கல்பாக்கம் அணு உலையைக் கட்டிக் கொண்டிருந்த போது, எங்கள் பொறியியல் கல்லூரி மாணவர்களுடன் ஏதோ புனிதத்தலத்துக்குப் போவது போல போய் வந்தேன்.  அவர்கள் அதில் என்னென்ன செய்யப் போகிறார்கள் என்று சொல்லிக் கொண்டிருந்த போது படித்து முடித்தவுடன் இந்தியாவின் அணுசக்திக் குழுமத்தில் சேர்ந்து “தொண்டாற்ற” வேண்டும் என்ற ஆர்வம் வந்தது.  பட்ட மேற்படிப்புக்கு  நான் அமெரிக்கா சென்ற போது என் கல்லூரித் தோழன் பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தில் போய்ச் சேர்ந்தான்.

நான் அமெரிக்கா சென்ற சில மாதங்களில் அணுநிலையத்தில் விபத்து பற்றிய  “சைனா சிண்ட்ரொம்” என்ற திரைப்படம் வந்தது.  அது வந்த இரண்டு வாரங்களுக்குள் அந்தப் படத்தில் காட்டிய படியே உண்மையிலேயே ஒரு அணு உலை விபத்து ஏற்பட்டது.  திரீ மைல் ஐலண்டு என்ற இடத்தில் இருந்த அணு உலை கட்டுக்கடங்காமல் போகும் என்ற பரபரப்பு (http://en.wikipedia.org/wiki/Three_Mile_Island_accident) அப்போது ஏற்பட்டது.  கல்லூரியில் எனது ஆய்வுக்கூடத்துக்குக் கீழே ஒரு ஆய்வு அணு உலையை வைத்திருந்தார்கள்.  அது அப்போது செயலிழந்த நிலையில் இருந்தது.  இருந்தாலும், திரீ மைல் ஐலண்டு வெடித்தால் நாங்கள் தப்பிச் செல்ல எங்கே போக வேண்டும் என்றெல்லாம் தொலைக்காட்சியில் அறிவிப்புகள் வந்த வண்ணம் இருந்ததால், கல்லூரி அணு உலை பற்றியும் உள்ளூர் மக்களுக்கு ஐயம் ஏற்பட்டது.  அந்த உலையால் எந்த ஆபத்தும் இல்லை என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்கள் பேராசிரியர்கள்.  உண்மையில் அணு உலை வெடிப்பு ஏற்பட்டால் அதைக் கட்டுப் படுத்தக் கொடுத்திருந்த அறிவும், பயிற்சியும் போதுமானதல்ல என்பது எனக்குப் பின்னால்தான் உறைத்தது.

தொழிற்சாலைகளில் விபத்துகள் நேரிடுவது பற்றிய அக்கறையும், அவற்றைத் தடுப்பது, அவற்றைக் கட்டுப் படுத்துவது, அவற்றிலிருந்து மீள்வது என்பதெல்லாம், பொறியியல் துறையிலும் ஒரு ஆழ்ந்த தனித்துறை.  விபத்துகள் நேரவே நேராது என்று நெருப்புக்கோழி போல மண்ணில் தலையைப் புதைத்து வைத்துக் கொண்டிருந்தால், ஒரு மண்ணாங்கட்டியும் செய்ய இயலாது.  ஒரு சாதாரண வேதித் தொழிற்சாலை விபத்துகளையே பொறுப்புடன் கட்டுப்படுத்தும் நெறிமுறைகளும், பயிற்சியும், அதற்கேற்ற எச்சரிக்கை மணிகளையும் வைத்துக் கொள்ளக் கவலைப் படாத நாடு இந்தியா.  போபால் தொழிற்சாலையில் விபத்து நேர்ந்த போது அதில் அன்று வேலை செய்து கொண்டிருந்த இளம் பொறியாளர்களில் ஒருவர் எனது வகுப்புத் தோழர்.

கல்லூரிகளில் படித்து, நாம் செய்யும் எதிலும் பிழையே இருக்காது, இருந்தாலும் அவற்றைக் கட்டுப்படுத்தும் வல்லமை நம்மிடம் உண்டு என்ற திமிர்த்தனம் பெரும் பல்கலைகளில் நன்றாகப் படித்த என்னைப் போன்ற மாணவர்களுக்கு உண்டு.  இந்த அசைக்க முடியாத நம்பிக்கையை திரீ மைல் ஐலண்டும் போபாலும் அடியோடு தகர்த்து விட்டன.

மனிதர்கள் கட்டும் எதுவும் பிழையற்றதல்ல.  மனிதர்கள் கடவுளர்களல்லர்.  அவர்களால் எல்லாவற்றையும் எதிர்பார்த்து அதற்கேற்பக் கட்டுப் படுத்த முடியவே முடியாது.  முதலில் இதை ஏற்றுக் கொள்ளும் அடக்கத் தன்மை வேண்டும்.  இந்த அடக்கத்தன்மை இல்லாமல், குறை சொல்பவர்கள் முட்டாள்கள் என்று எங்கெங்கே பொறியாளர்களும், கம்பெனிகளும், அரசுகளும் பறை சாற்றுகின்றனவோ, அங்கெல்லாம் மக்கள் கவலைப் பட வேண்டும்,  நிரம்பக் கவலைப் பட வேண்டும்.

உலைகள் பழுதாகும்.  மனிதர்கள் பிழை செய்வார்கள்.  எதிர்பாராதவை நடக்கும்.  இவற்றைக் கண் குத்திப் பாம்பு போல பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.  ஆலைகளைச் சுற்றி எண்ணற்ற வளையங்களை வைத்திருக்க வேண்டும், ஒவ்வொரு வளையத்திலும் விபத்து நடந்தால் என்ன அடையாளம் வெளியே தெரியும் என்று பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.  அணு ஆலைக்கு அருகே ஊனமுற்ற குழந்தைகள் பிறக்கிறார்கள் என்றால் அது எச்சரிக்கைகளையும் கடந்து ஏதோ நடந்திருக்கிறதா என்று தீவிரமாக ஆராய வேண்டும்.

அணு ஆலைக்கு அருகே உணவுப் பொருள்களைச் சோதித்துக் கொண்டே இருக்க வேண்டும்.  வளையங்களுக்கு  இடையே நுண்ணிய வேறுபாடுகள் ஏதேனும் இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.  மக்களுக்கு புற்று நோய் வருகிறதா, அவர்களுக்கும் ஆலைக்கும் என்ன தொடர்பு என்று பார்க்க வேண்டும்.  இப்படிப்பட்ட ஆராய்ச்சிகளைச் செய்பவர்கள் அணு ஆலைக்குத் தொடர்பு இல்லாதவர்களாக இருக்க வேண்டும்.  ஆலைக்குள் பணியாற்றுபவர்களால் தாங்கள் செய்யும் பிழைகளை ஏற்றுக் கொள்ளவே இயலாது.  இது மனித இயல்பு.  அதிலும் அரசு நடத்தும் ஆலைகளுக்குத் தனிச்சிக்கல் என்னவென்றால் அவர்களால் என்றுமே தாங்கள் நடத்தும் ஆலைகள் நஞ்சைக் கக்குகின்றன என்று ஏற்றுக் கொள்ள முடியாது. இது ஆலை உரிமையாளர்கள் பெரும்பாலோரின் தன்மை.

விமானப் பறப்பின் விபத்துகள் பற்றிக் காரசாரமாக விவாதித்தார்கள் நண்பர்கள்.  அமெரிக்காவில் அரசு விமான நிறுவனங்களை நடத்துவதில்லை.  ஆனால், விமான நிலையங்களையும் விமானங்களையும் கண்காணிக்கும் பொறுப்பு காவல் துறையைப் போல அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது.  இப்படிப் பொறுப்பைப் பிரித்து வைத்து பல்வேறு முறைகளில் கண்காணித்தாலும் விமான விபத்துகள் ஏற்படுகின்றன.  விபத்தின் பின் அதை ஆராய்ந்து பரிந்துரைகளைக் கொடுக்கும் துறை தனித்துறை.  இப்படி அவர்கள் கண்காணித்து வருவதால்தான் விமானப் பறப்பு ஓரளவுக்குப் பாதுகாப்பாய் இருக்கிறது.

ஆனால், அணு ஆலைகளைப் பற்றிய ஆய்வுகள் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வந்து விட்டால், யாராலும் பிழைகளைக் கண்டறிந்தோ, அல்லது களைந்து திருத்தியோ செயல்பட முடியாது.  இது வரை இந்தியா கட்டியிருக்கும் அணு ஆலைகளின் முக்கிய நோக்கம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதல்ல.  அவை, இந்தியா அணுகுண்டு தயாரிக்கத் தேவையான எரிபொருள்களை உற்பத்தி செய்யும் நோக்கில்தான் கட்டப்பட்டன.  அதனால்தான், தேசியப் பாதுகாப்புச் சட்டம் அவற்றைப் பாதுகாக்கிறது.

கூடங்குளம் அப்படிப் பட்ட ஆலை அல்ல.

அதில் இருந்து கழிவுகளைக் கூட இந்தியாவால் கடத்த முடியாது.  கூடங்குளம் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கென்றே உருவாக்கப் பட்ட ஆலை.  அதைத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கொண்டு வருவது அதைக் கட்டியவர்களையும், அதை நடத்துபவர்களையும் பாதுகாக்கும் வெற்றுத்திட்டம்தான்.  இது போன்ற ஆலைகளை அங்கு வாழும் மக்களின் எதிர்ப்புக்கு இடையே கட்டி நடத்துவது என்பது சர்வாதிகார நாடுகளிலும், மக்களைப் பற்றிக் கவலைப் படாத முதலாளித்துவ நாடுகளின் குடியேற்றப் பகுதிகளும் மட்டுமே நடக்கும்.  மக்களாட்சி என்று பறை சாற்றிக் கொண்டே மக்களின் உரிமையை மீறுவது அவர்களது போலி முகத்திரைகளைக் கிழித்து விடும்.

இந்தியா ஆதிக்க நாடுகளுக்கு ஏவல் செய்யும் வாழைக் குடியரசா இல்லை, இந்தியர்கள் நிம்மதியாக வாழும் குடியரசா என்பது கூடங்குளத்தில் அரசுகளின் நடவடிக்கைகளில் இருந்து தெரிந்து விடும்.

ஞாயிறு, ஜனவரி 15, 2012

சென்னைப் புத்தகக் காட்சி 2012ல் இதுவரை நான் வாங்கிய நூல்கள்:

சென்னை புத்தகக் காட்சி 2012க்கு நான் இதுவரை இருமுறை சென்றாயிற்று.

முதல்முறை கையில் தூக்கி வர முடிந்தவரையில் வாங்கினேன்.  இரண்டு மணி நேர நடையில் பாதிக் காட்சி கூடப் பார்க்க முடியவில்லை.  ஆங்கிலப் பதிப்பகங்களை முழுக்க முழுக்க ஒதுக்கி விட்டேன்.  பெருவணிகப் பதிப்பகங்களில் நெரிசல் கூடுதலாக இருந்ததால் எட்டிப் பார்த்து விட்டு ஒதுங்கி விட்டேன்.  அதிலும் நான் வாங்கக் கூடிய புத்தகங்களைப் பெருநிறுவனங்கள் வெளியிடத் தயங்கலாம்.  ஆக்ஸ்ஃபோர்டு, கேம்பிரிட்ஜ் பல்கலைப் பதிப்பகங்களையும் எட்டிப் பார்த்தேன்.  அவற்றோடு ஒப்பிடும்போது சென்னை, மதுரை, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகப் பதிப்பகங்கள் எவ்வளவு பின் தங்கியிருக்கின்றன என்பதற்கு ஒரு அளவுகோல் வேண்டாமா?  அதுதான்.  நாம் பல நூற்றாண்டுகள் பின் தங்கியிருக்கிறோம் போலிருக்கிறது.

நல்ல ஆராய்ச்சி நூல்களைத் தக்க முறையில் பிழையில்லாமல் வெளியிட வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களால்தான் முடிகிறது.  இந்திய அரசின் வெளியீடுகள் நல்ல தரத்தில் இருந்தாலும், பத்து இருபது ஆண்டுகளுக்குள் அவை நிலை குலைந்து போய் விடுகின்றன.  நான் அவர்களிடமிருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அச்சடித்த, 30-50 ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட நூல்களைத்தான் வாங்க நேரிட்டது. இந்த நூல்களையும் வெளிநாட்டுப் பதிப்பகங்கள் போல் நல்ல தரமான பதிப்பில் வெளியிடும் நாள் வராதா என்று காத்திருக்க வேண்டியிருக்கிறது.

முன்னெப்போதையும் விட இப்போது படிப்பவர்களும், நூல்களைச் சொந்தமாக விலை கொடுத்து வாங்குபவர்களும் கூடியிருக்கிறார்கள்.  தமிழிலேயே உயர்ந்த விலையில் தரமான தாளில் அச்சிட்டு வெளியிடும் பதிப்பகங்கள் வந்துள்ளன.  அதனால், என் ஆசை நிறைவேறும் நாள் வெகு தொலைவில் இல்லை.

இது வரை 50 நூல்களை வாங்கியுள்ளதாகப் பட்டியல் போட்டுள்ளேன்.  வீடு நிறையப் புத்தகங்களைக் குவித்து வைத்திருப்பதால், மேலும் புத்தகங்களை வாங்கிக் குவிக்கும்போது ஆராய்ச்சி மணி அடிப்பது கேட்கிறது. 

”சரி, சரி, வாங்கன புத்தகத்துல எத்தனை புத்தகத்தைப் படிச்சு முடிச்சிட்டீங்க? என்ன கேள்வி கேக்கலாமா? தேர்வுக்குத் தயாரா? எல்லோரும் அறிஞர், பொறிஞர்னு சொல்றாங்களாமே? எங்க என் டெஸ்ட்லே பாஸ் பண்ணுங்க பாப்போம்?”  என் வாழ்க்கைத்துணை நலம் அன்புடன் கேட்கிறார். :-)

”சரி, சரி, நீ இது வரை வாங்கிய துணியை எல்லாம் உடுத்துவதற்குள் நான் வாங்கிய புத்தகங்களைப் படித்து விடுவேன்!” என்று “நகைச்சுவை” ததும்ப புத்திசாலித்தனமாய்ப் பதில் சொன்னேன்.

“யோவ், இது உனக்கே ரொம்ப ஓவராய்த் தெரிய்ல?” என்று முறைத்து விட்டுக் கிளம்பினார் இல்லத்தரசியார்.

சூடு கொஞ்சம் கூடுதலாய் இருந்ததால், காப்பி போடக் கேட்கும் சமயம் இதுவல்ல என்று என் மரமண்டைக்கும் உறைத்து. :-)

சரி, சரி, உங்கள் வீட்டுச் சண்டை புராணம் அப்புறம் வைத்துக் கொள்ளலாம், என்ன புத்தகங்கள் வாங்கினீர்கள் என்று நீங்கள் கேட்பதும் காதில் விழுகிறது.

இதோ அந்தப் பட்டியல்.

சென்னைப் புத்தகக் காட்சி 2012ல் இதுவரை நான் வாங்கிய நூல்கள்:



1. காவல் கோட்டம், சு. வெங்கடேசன், தமிழினி பதிப்பகம்
2. அ. முத்துலிங்கம் கதைகள், அ. முத்துலிங்கம், தமிழினி பதிப்பகம்
3. சிலம்பின் காலம், இராம கி., தமிழினி பதிப்பகம்
4. பண்டைத் தமிழ் எழுத்துக்கள், தி. நா. சுப்பிரமணியன், உலகத் தமிழாராய்ச்சி நிலையம்
5. தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும், புலவர் கோவேந்தன், வேமன் பதிப்பகம்
6. தமிழ் எழுத்தின் வரிவடிவம், சி கோவிந்தராசனார், உலகத் தமிழாராய்ச்சி நிலையம்
7. இராசேந்திரசோழன் வெளியிட்ட எசாலம் செப்பேடுகள், ச கிருஷ்ணமூர்த்தி, உலகத்தமிழாராய்ச்சி நிலையம்
8. சோழர் காலச் செப்பேடுகள், மு. ராஜேந்திரன், அகநி வெளியீடு
9. தமிழ்நாட்டுச் செப்பேடுகள், தொகுதிகள் 1, 2, ச கிருஷ்ணமூர்த்தி, மெய்யப்பன் தமிழாய்வகம்
10. கல்வெட்டுகள் கூறும் உண்மைகள், தி வை சதாசிவ பண்டாரத்தார், மணிவாசகர் பதிப்பகம்
11. கல்வெட்டுகளில் கன்னித்தமிழ், கவிக்கோ ஞானச்செல்வன், தென்றல் நிலையம்
12. கல்லெழுத்துக்கலை, நடன காசிநாதன், மணிவாசகர் பதிப்பகம்
13. கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி, சி கோவிந்தராசன், மதுரை காமராசர் பல்கலை
14. எழுத்தியல், சூ இன்னாசி, பாரி புத்தகப் பண்ணை
15. நன்னூல் மூலமும் கூழங்கைத் தம்பிரான் உரையும், அ தாமோதரன், (இ)க்ரியா
16. கணக்கதிகாரம், Institute of Asian Studies
17. Build your Web Home, Nayyar and Sharma, NISCOM, Govt. of India
18. உங்கள் வெப் ஹோம் உண்டாக்குங்கள், ஷர்மாவும் நைய்யரும், இந்திய அரசு
19. தமிழக வரலாறு மக்களும் பண்பாடும், கே கே பிள்ளை, உலகத் தமிழாராய்ச்சி நிலையம்
20. தமிழ்நாட்டு வரலாறு பாண்டியப் பெருவேந்தர் காலம், தமிழ் வளர்ச்சித்துறை
21. அரங்கேற்றுகாதை ஆராய்ச்சி, வெ மு ஷாஜகான் கனி, உலகத் தமிழாராய்ச்சி நிலையம்
22. தொல்லியல் நோக்கில் காஞ்சிபுர மாவட்டம், ச கிருஷ்ணமூர்த்தி, மெய்யப்பன் பதிப்பகம்
23. சிலப்பதிகார மூலமும் அடியார்க்கு நல்லாருரையும், உ.வே.சா. நூல்நிலையம்
24. பதிற்றுப்பத்து மூலமும் பழைய உரையும், உ.வே.சா. நூல்நிலையம்
25. குறுந்தொகை மூலமும் உரையும், உ.வே.சா. நூல்நிலையம்
26. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி, மெய்யப்பன் பதிப்பகம்
27. தமிழக நாட்டுப்புறக் கட்டடக்கலை மரபு, இராசு பவுன் துரை, மெய்யப்பன் பதிப்பகம்
28. தஞ்சை இராஜராஜீஸ்வரம் விமானத் திருக்கற்றளி கட்டடக்கலை மரபு, இராசு பவுன் துரை, மெய்யப்பன் பதிப்பகம்
29. தமிழகம் அரப்பன் நாகரிகத் தாயகம், நடன காசிநாதன், மெய்யப்பன் பதிப்பகம்
30. சமணத்தடயம் (தொகுப்பு), பதிப்பாசிரியர்கள் நடன காசிநாதன், மா சந்திரமூர்த்தி, மணிவாசகர் பதிப்பகம்
31. நடுநாட்டுச் சமணக்கோயில்கள், த ரமேஷ், மெய்யப்பன் பதிப்பகம்
32. தமிழில் சொல்லாக்கம், ச இராசேந்திரன், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சை
33. சங்கு, ந அதியமான், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சை
34. நிகமம், அதியமான், துளசேந்திரன், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சை
35. A Glossary of Standardized Technical Terms in Linguistics English-Tamil, Rangan & Chandrasekaran, Tamil University, Thanjavur
36. Tamil Cultural Connections across the world, V Selvakumar, Tamil University, Thanjavur
37. ஊழிக்கூத்து, வெளி ரங்கராஜன், ஆழி பதிப்பகம்
38. காண முடியாக் கனவு, ரவிக்குமார், ஆழி பதிப்பகம்
39. எனது ஊர் நூல்வரிசை - வேலூர், மா குணசேகரன், ஆழி பதிப்பகம்
40. ஆங்கிலம் - தமிழ் சொற்களஞ்சியம், சிதம்பரநாதன் செட்டியார், சென்னைப் பல்கலைக்கழகம்
41. Devadasi System in Medieval Tamil Nadu, K Sadasivan, அகநி வெளியீடு
42. Foreign Notices of South India, K A Nilakanta Sastri, University of  Madras
43. சி என் அண்ணாதுரை - நவபாரதச் சிற்பிகள் தொடர், பி. சி. கணேசன், பப்ளிகேஷன்ஸ் டிவிஷன்,  இந்திய அரசு
44. Ajanta Murals, Ed. Ghosh, Ph. Tiwari, Arch. Survey of India, 1996
45. South Indian Paintings, C Sivaramamurti, Publications Division,  Government of India, 1994
46. Some Aspects of Indian Culture, C Sivaramamurti, Publications Division,  GoI, 1994
47. Vijayanara Paintings, C Sivaramamurti, Publications Division, GoI, 1985
48. Guler Painting, Randhawa and Randhawa, Publications Division, GoI, 1982
49. Kangra Paintings on Love, Randhawa, Publications Division, GoI, 1994
50. பாலாவின் அரசியல் கருத்துப்படங்கள், கார்ட்டூனிஸ்ட் பாலா, குமுதம் பதிப்பகம்