வியாழன், ஜனவரி 19, 2012

இந்தியா ஒரு வாழைக் குடியரசா?


"தினமலர் தொடர்ந்து கூடங்குளப் போட்டங்களுக்கு எதிரான நிலையை எடுத்துவருகிறது தெரிந்ததே. (பிற மக்கள் போராட்டங்களையும் அவர்கள் கொச்சைப்படுத்தி சர்ச்சைகளுக்குள்ளாகியுள்ளனர்). எனவே தினமலரில் ‘மட்டும்‘ வரும் இத்தகைய செய்திகளை கவனத்துடன் வாசித்து அவற்றின் வரிகளுக்கிடையேயும் வாசிக்கக் கற்றுக்கொள்ளுவது அவசியம்." என்று எழுதுகிறார் சிறில் அலெக்ஸ்.

அவரது கட்டுரை (http://www.tamilpaper.net/?p=5425  ) சொல்லும் கருத்துகளை நாம் கவனிக்க வேண்டும்.


“மிக இயல்பாகவே இதுபோன்ற நிகழ்வுகளில் நாம் அதிகார பலம் பொருந்திய அரசின் பக்கம் நிற்க தலைப்படுகிறோம். ‘நாமே அரசு‘ என்பததைப் போன்றதொரு எண்ணம் நமக்குள்ளது. அதுவே, நம் அரசு தந்திரமாக வெளியிடும் இத்தகைய செய்திகளை நம்பவும் வைக்கிறது. உண்மையில் நாம் பொதுமக்களின் பக்கம் இருக்கும் நியாயங்களையும் புரிந்துகொள்ள முயலவேண்டும். இத்தகைய செய்திகளைப் பகிர்வதன் மூலம் ஒரு வீணான சந்தேகம் பரவ நாம் வழிவகுக்கிறோம். அதைவிட மேலாக இவற்றை அப்படியே நம்புவதன் மூலம் இதுபோன்ற சூழ்ச்சிகள் நிலைக்கவும், இன்னொரு தருணத்தில் நம்மையே குறிவத்து தாக்கவும் வழிவகுக்கிறோம். பல வேளைகளில் நமக்கு போதுமான தகவல்கள் கிடைப்பதில்லை என்பதும் உண்மையே. அப்படி இருக்குமேயானால் நாம் அமைதி காத்திருப்பதே நன்மை பயக்கும் என்பேன்.” என்று ஆணித்தரமாகத் தம் கட்டுரையை முடிக்கிறார்.

கூடங்குளம் போராட்டம் இந்திய வரலாற்றில், குறிப்பாகத் தமிழக வரலாற்றில் ஒரு புதிய ஏடு.

அணுசக்தி, அணுக்குண்டு, போன்ற செய்திகளில் 1960கள் முதல் இது ஏதோ மகத்தான சாதனை போன்ற ஒரு மலைப்பு மக்களுக்கு இருந்து வந்திருக்கிறது.  இந்திரா காந்தியின் ஆட்சியில் முதன்முதலாக இந்தியா அணுக்குண்டு வெடித்த போது ஏதோ ஒரு பிரம்மாஸ்திரத்தைப் பெற்று விட்டது போன்ற ஒரு பெருமகிழ்ச்சி ஏனைய மக்களைப் போலவே எனக்கும் இருந்தது.  கல்பாக்கம் அணு உலையைக் கட்டிக் கொண்டிருந்த போது, எங்கள் பொறியியல் கல்லூரி மாணவர்களுடன் ஏதோ புனிதத்தலத்துக்குப் போவது போல போய் வந்தேன்.  அவர்கள் அதில் என்னென்ன செய்யப் போகிறார்கள் என்று சொல்லிக் கொண்டிருந்த போது படித்து முடித்தவுடன் இந்தியாவின் அணுசக்திக் குழுமத்தில் சேர்ந்து “தொண்டாற்ற” வேண்டும் என்ற ஆர்வம் வந்தது.  பட்ட மேற்படிப்புக்கு  நான் அமெரிக்கா சென்ற போது என் கல்லூரித் தோழன் பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தில் போய்ச் சேர்ந்தான்.

நான் அமெரிக்கா சென்ற சில மாதங்களில் அணுநிலையத்தில் விபத்து பற்றிய  “சைனா சிண்ட்ரொம்” என்ற திரைப்படம் வந்தது.  அது வந்த இரண்டு வாரங்களுக்குள் அந்தப் படத்தில் காட்டிய படியே உண்மையிலேயே ஒரு அணு உலை விபத்து ஏற்பட்டது.  திரீ மைல் ஐலண்டு என்ற இடத்தில் இருந்த அணு உலை கட்டுக்கடங்காமல் போகும் என்ற பரபரப்பு (http://en.wikipedia.org/wiki/Three_Mile_Island_accident) அப்போது ஏற்பட்டது.  கல்லூரியில் எனது ஆய்வுக்கூடத்துக்குக் கீழே ஒரு ஆய்வு அணு உலையை வைத்திருந்தார்கள்.  அது அப்போது செயலிழந்த நிலையில் இருந்தது.  இருந்தாலும், திரீ மைல் ஐலண்டு வெடித்தால் நாங்கள் தப்பிச் செல்ல எங்கே போக வேண்டும் என்றெல்லாம் தொலைக்காட்சியில் அறிவிப்புகள் வந்த வண்ணம் இருந்ததால், கல்லூரி அணு உலை பற்றியும் உள்ளூர் மக்களுக்கு ஐயம் ஏற்பட்டது.  அந்த உலையால் எந்த ஆபத்தும் இல்லை என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்கள் பேராசிரியர்கள்.  உண்மையில் அணு உலை வெடிப்பு ஏற்பட்டால் அதைக் கட்டுப் படுத்தக் கொடுத்திருந்த அறிவும், பயிற்சியும் போதுமானதல்ல என்பது எனக்குப் பின்னால்தான் உறைத்தது.

தொழிற்சாலைகளில் விபத்துகள் நேரிடுவது பற்றிய அக்கறையும், அவற்றைத் தடுப்பது, அவற்றைக் கட்டுப் படுத்துவது, அவற்றிலிருந்து மீள்வது என்பதெல்லாம், பொறியியல் துறையிலும் ஒரு ஆழ்ந்த தனித்துறை.  விபத்துகள் நேரவே நேராது என்று நெருப்புக்கோழி போல மண்ணில் தலையைப் புதைத்து வைத்துக் கொண்டிருந்தால், ஒரு மண்ணாங்கட்டியும் செய்ய இயலாது.  ஒரு சாதாரண வேதித் தொழிற்சாலை விபத்துகளையே பொறுப்புடன் கட்டுப்படுத்தும் நெறிமுறைகளும், பயிற்சியும், அதற்கேற்ற எச்சரிக்கை மணிகளையும் வைத்துக் கொள்ளக் கவலைப் படாத நாடு இந்தியா.  போபால் தொழிற்சாலையில் விபத்து நேர்ந்த போது அதில் அன்று வேலை செய்து கொண்டிருந்த இளம் பொறியாளர்களில் ஒருவர் எனது வகுப்புத் தோழர்.

கல்லூரிகளில் படித்து, நாம் செய்யும் எதிலும் பிழையே இருக்காது, இருந்தாலும் அவற்றைக் கட்டுப்படுத்தும் வல்லமை நம்மிடம் உண்டு என்ற திமிர்த்தனம் பெரும் பல்கலைகளில் நன்றாகப் படித்த என்னைப் போன்ற மாணவர்களுக்கு உண்டு.  இந்த அசைக்க முடியாத நம்பிக்கையை திரீ மைல் ஐலண்டும் போபாலும் அடியோடு தகர்த்து விட்டன.

மனிதர்கள் கட்டும் எதுவும் பிழையற்றதல்ல.  மனிதர்கள் கடவுளர்களல்லர்.  அவர்களால் எல்லாவற்றையும் எதிர்பார்த்து அதற்கேற்பக் கட்டுப் படுத்த முடியவே முடியாது.  முதலில் இதை ஏற்றுக் கொள்ளும் அடக்கத் தன்மை வேண்டும்.  இந்த அடக்கத்தன்மை இல்லாமல், குறை சொல்பவர்கள் முட்டாள்கள் என்று எங்கெங்கே பொறியாளர்களும், கம்பெனிகளும், அரசுகளும் பறை சாற்றுகின்றனவோ, அங்கெல்லாம் மக்கள் கவலைப் பட வேண்டும்,  நிரம்பக் கவலைப் பட வேண்டும்.

உலைகள் பழுதாகும்.  மனிதர்கள் பிழை செய்வார்கள்.  எதிர்பாராதவை நடக்கும்.  இவற்றைக் கண் குத்திப் பாம்பு போல பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.  ஆலைகளைச் சுற்றி எண்ணற்ற வளையங்களை வைத்திருக்க வேண்டும், ஒவ்வொரு வளையத்திலும் விபத்து நடந்தால் என்ன அடையாளம் வெளியே தெரியும் என்று பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.  அணு ஆலைக்கு அருகே ஊனமுற்ற குழந்தைகள் பிறக்கிறார்கள் என்றால் அது எச்சரிக்கைகளையும் கடந்து ஏதோ நடந்திருக்கிறதா என்று தீவிரமாக ஆராய வேண்டும்.

அணு ஆலைக்கு அருகே உணவுப் பொருள்களைச் சோதித்துக் கொண்டே இருக்க வேண்டும்.  வளையங்களுக்கு  இடையே நுண்ணிய வேறுபாடுகள் ஏதேனும் இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.  மக்களுக்கு புற்று நோய் வருகிறதா, அவர்களுக்கும் ஆலைக்கும் என்ன தொடர்பு என்று பார்க்க வேண்டும்.  இப்படிப்பட்ட ஆராய்ச்சிகளைச் செய்பவர்கள் அணு ஆலைக்குத் தொடர்பு இல்லாதவர்களாக இருக்க வேண்டும்.  ஆலைக்குள் பணியாற்றுபவர்களால் தாங்கள் செய்யும் பிழைகளை ஏற்றுக் கொள்ளவே இயலாது.  இது மனித இயல்பு.  அதிலும் அரசு நடத்தும் ஆலைகளுக்குத் தனிச்சிக்கல் என்னவென்றால் அவர்களால் என்றுமே தாங்கள் நடத்தும் ஆலைகள் நஞ்சைக் கக்குகின்றன என்று ஏற்றுக் கொள்ள முடியாது. இது ஆலை உரிமையாளர்கள் பெரும்பாலோரின் தன்மை.

விமானப் பறப்பின் விபத்துகள் பற்றிக் காரசாரமாக விவாதித்தார்கள் நண்பர்கள்.  அமெரிக்காவில் அரசு விமான நிறுவனங்களை நடத்துவதில்லை.  ஆனால், விமான நிலையங்களையும் விமானங்களையும் கண்காணிக்கும் பொறுப்பு காவல் துறையைப் போல அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது.  இப்படிப் பொறுப்பைப் பிரித்து வைத்து பல்வேறு முறைகளில் கண்காணித்தாலும் விமான விபத்துகள் ஏற்படுகின்றன.  விபத்தின் பின் அதை ஆராய்ந்து பரிந்துரைகளைக் கொடுக்கும் துறை தனித்துறை.  இப்படி அவர்கள் கண்காணித்து வருவதால்தான் விமானப் பறப்பு ஓரளவுக்குப் பாதுகாப்பாய் இருக்கிறது.

ஆனால், அணு ஆலைகளைப் பற்றிய ஆய்வுகள் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வந்து விட்டால், யாராலும் பிழைகளைக் கண்டறிந்தோ, அல்லது களைந்து திருத்தியோ செயல்பட முடியாது.  இது வரை இந்தியா கட்டியிருக்கும் அணு ஆலைகளின் முக்கிய நோக்கம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதல்ல.  அவை, இந்தியா அணுகுண்டு தயாரிக்கத் தேவையான எரிபொருள்களை உற்பத்தி செய்யும் நோக்கில்தான் கட்டப்பட்டன.  அதனால்தான், தேசியப் பாதுகாப்புச் சட்டம் அவற்றைப் பாதுகாக்கிறது.

கூடங்குளம் அப்படிப் பட்ட ஆலை அல்ல.

அதில் இருந்து கழிவுகளைக் கூட இந்தியாவால் கடத்த முடியாது.  கூடங்குளம் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கென்றே உருவாக்கப் பட்ட ஆலை.  அதைத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கொண்டு வருவது அதைக் கட்டியவர்களையும், அதை நடத்துபவர்களையும் பாதுகாக்கும் வெற்றுத்திட்டம்தான்.  இது போன்ற ஆலைகளை அங்கு வாழும் மக்களின் எதிர்ப்புக்கு இடையே கட்டி நடத்துவது என்பது சர்வாதிகார நாடுகளிலும், மக்களைப் பற்றிக் கவலைப் படாத முதலாளித்துவ நாடுகளின் குடியேற்றப் பகுதிகளும் மட்டுமே நடக்கும்.  மக்களாட்சி என்று பறை சாற்றிக் கொண்டே மக்களின் உரிமையை மீறுவது அவர்களது போலி முகத்திரைகளைக் கிழித்து விடும்.

இந்தியா ஆதிக்க நாடுகளுக்கு ஏவல் செய்யும் வாழைக் குடியரசா இல்லை, இந்தியர்கள் நிம்மதியாக வாழும் குடியரசா என்பது கூடங்குளத்தில் அரசுகளின் நடவடிக்கைகளில் இருந்து தெரிந்து விடும்.

2 கருத்துகள்:

தமிழ் சொன்னது…

gud one..

Yazhini சொன்னது…

உலகமெங்கும் அணுசக்தி ஆலைகளை மூடிக் கொண்டிருக்கின்றார்கள். கூடாங்குள மக்களின் விழிப்புணர்வு வியக்க வைக்கிறது. அதே நேரம் அம்மக்களின் எண்ணங்களை துச்சமென மதிக்கும் அரசின் செயல்கள் கண்டிக்கதக்கது.