வியாழன், ஏப்ரல் 12, 2012

சித்திரைப் புத்தாண்டும் பை என்ற மாறிலியும்


சித்திரையில் புத்தாண்டா, தையில் புத்தாண்டா என்று வெட்டி மடிபவர்களில் எத்தனை பேர் உண்மையிலேயே இப்படி ஆண்டுகளைக் கணக்கீடு செய்வது பற்றி ஆராய்ந்து பார்த்திருப்பார்கள்?  தமிழ் இலக்கியங்களில் எப்போது தமிழர்கள் புத்தாண்டு கொண்டாடினார்கள் என்று தேடிப்பார்த்தால், தேடுபவர்களைப் பொருத்து தை, சித்திரை, ஆவணி என்று வெவ்வேறு விடை கிடைக்கும்.  தமிழர்கள் ஆண்டுகளையும், மாதங்களையும், கிழமைகளையும், நாள்களையும் எப்படிக் கணக்குப் போட்டார்கள்?  நமக்குத் தெரியாது.

சித்திரைதான் புத்தாண்டு என்று வாதிடுபவர்களுக்க்குச் சித்திரை வேண்டும் என்பதை விட, தை வேண்டாம் என்பதுதான் முக்கியம்.  கருணாநிதி ஆணையிட்டால் அது நடந்து விடக் கூடாது என்பதற்காக மூர்க்கத் தனமாக எதிர்ப்பவர்களைப் பார்க்கிறேன்.  அதே போல், சித்திரை வேண்டாம் என்பவர்களுக்கும் இது சமஸ்கிருத வெறுப்பு, பார்ப்பன வெறுப்பு, ஜெயலலிதா மீது கடுப்பு என்பவைதான் உந்துதல்.

போகட்டும்.  ஆனால், சித்திரைப் புத்தாண்டைத் தாக்குபவர்கள் ஒரு புராணக் கதையை மட்டும் எடுத்து வைத்துக் கொண்டு இது அறிவியலுக்குப் புறம்பானது;  பழங்குப்பை;  ஆங்கில, திருவள்ளுவர் ஆண்டுகளைப் போலத் தொடர்ந்து வராமல், சுழற்சி முறையில் வருவது முட்டாள்தனம்; என்றெல்லாம் வாதிடுகிறார்கள்.

இயற்கையின் நிலை சுழற்சி நிலைதான்.  இதுதான் முற்கால மனிதனின் மிகப் பெரிய கண்டுபிடிப்பு.  பருவங்கள் சுழல்கின்றன.  பருவநிலையை வைத்து, வானிலையை ஓரளவு கணிக்கலாம்.  அதை வைத்துப் பருவத்தே பயிர் செய்யலாம்.  கதிரவன், கோள்கள், விண்மீன்கள், நிலவு என்று விண்ணில் மிதக்கும் உருவங்களைப் பார்த்து வருங்காலத்தை ஓரளவுக்குக் கணிக்கலாம் என்று மனிதன் கண்டு பிடித்தது மிகப்பெரும் சாதனை.

மேலைநாட்டு (ஆங்கில) ஆண்டு முறை அல்லது கிறித்தவ ஆண்டு முறை ஒன்றும் மிகப்பெரிய அறிவியல் சாதனை அல்ல.  அதிலும் எண்ணற்ற பிழைகள் இருந்தன. 1582ம் ஆண்டில் போப் கிரெகொரி ஆட்சியில்தான் பிழைகளைத் திருத்தி இன்றைய நிலையை எட்டி இருக்கிறார்கள். (http://en.wikipedia.org/wiki/Gregorian_calendar)

தமிழ் ஆண்டு முறை நிச்சயமாக வடவர்களிடமிருந்து இரவல் வாங்கியதுதான்.  இதில் ஐயம் இல்லை.  இன்றைக்கு நாம் பெரும்பாலும் கிரெகொரியன் ஆண்டு முறையைத்தானே பின்பற்றுகிறோம்.  அது எப்படி நமக்கு வசதியாக இருக்கிறதோ, அதே போல்தான் பழங்காலத் தமிழர்கள் வடவர்களிடமிருந்து ஆண்டு முறையை வாங்கிக் கொண்டார்கள்.  அநத ஆண்டுப் பெயர்களுக்கு எவரோ புராணக் கதையைக் கற்பித்ததால் மட்டும் அது அறிவியலுக்குப் புறம்பானது ஆகாது.

திருவள்ளுவர் ஆண்டு முறை என்று சொல்லும் முறையும் அறிவியலை அடிப்படையாகக் கொண்டது ஆகாது.  முதலில், திருவள்ளுவர் ஆண்டு முறை என்பதே 20ம் நூற்றாண்டில் படைத்ததுதான்.  இது வடவர்களின் சுழற்சி ஆண்டு முறையை மறுத்து, மேலையர்களின் தொடர்ச்சி ஆண்டு முறையைப் பின்பற்றி, திருவள்ளுவரின் பிறந்த ஆண்டு கிறிஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன்னால் என்று கணித்து, தை முதல் நாளை ஆண்டின் முதல் நாளாய்க் கொண்டு வருவது.  திருவள்ளுவர் எந்த ஆண்டு பிறந்தார் என்பதற்குச் சரியான அறிவியல் சான்றுகள் ஏதும் நம்மிடம் இல்லை.  தமிழறிஞர்களுக்கும் தெரியாது.  தற்காலத் தமிழறிஞர்கள், திருவள்ளுவரின் காலத்தைக் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் இருந்து கி.பி. எட்டாம் நூற்றாண்டு வரை எனக் கணிக்கிறார்கள். இதை அடிப்படையாகக் கொண்டு எப்படி ஒரு ஆண்டு முறையை அறிவியலின் அடிப்படையில் அமைக்க முடியும்?  சரி, திருவள்ளுவருக்கு முன்னர், சங்கத் தமிழர்கள் எந்த ஆண்டு முறையைப் பின்பற்றினார்கள்? இந்தத் தொடராண்டு முறையின் சிக்கலே அதுதான்.  ஏதாவது ஒரு புள்ளியில் இருந்து கணக்கிட வேண்டும்.  அந்தப் புள்ளிக்கு முன்னால் என்ன என்று கேட்டால் திணற வேண்டும்.

சரி அதை விடுங்கள்.  வடவரிடமிருந்து இரவல் பெற்ற இந்து ஆண்டு முறைக்கு வருவோம்.  அது என்ன பெரிய அறிவியல் முறையில் கணித்ததா என்று கேட்டால், ஆமாம், நிச்சயமாக என்று சொல்லலாம். தமிழர்கள் பின்பற்றும் இந்து ஆண்டு முறை, சூரிய சித்தாந்தம் என்ற நூலின் அடிப்படையில் அமைந்தது.  இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு கூகிள் நூல் தொகுப்பில் கிடைக்கிறது. (http://books.google.com/books?id=bPUXKcHQw2EC&pg=PA2&dq=surya+siddhanta&hl=en&sa=X&ei=qUSHT5uwIcfniALh08CyAg&ved=0CFIQ6AEwBw#v=onepage&q=surya%20siddhanta&f=false) ஆர்வமுள்ளவர்கள் தரவிறக்கிப் படியுங்கள்.  ஆண்டு முறை வரிசையைப் பிழையில்லாமல் துல்லியமாகக் கணக்கிடுவது எளிதல்ல.  மேலை நாட்டவர்கள் 1500 ஆண்டுகளாகப் பின்பற்றி வந்த முறையை 1582ல்தான் திருத்தினார்கள்.  இந்து ஆண்டு முறையை வழி வகுக்கும் சூரிய சித்தாந்தம் ஏறத்தாழ கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் படைத்துப் பின்னர் பலர் அதைத் திருத்தி 12ம் நூற்றாண்டுக்குள் முறைப் படுத்தப் பட்டது என்கிறது விக்கிப்பீடியா (http://en.wikipedia.org/wiki/Surya_Siddhanta).

அதில் இருக்கும் குறிப்புகள் அது எழுதப்பட்ட காலத்தில் உலகின் அறிவியல் உச்சத்தைத் தொட்டிருக்க வேண்டும் என்பது தெளிவாகத் தெரிகிறது. காலக்கணக்கை மிகத் துல்லியமாகவே கணக்கிட்டிருக்கிறது.  அந்தக் கணக்குகள் அலுப்புத் தட்டுபவை என்பவர்களுக்கு வேறு ஒரு கொசுறு கொடுக்கலாம்.

உலகம் உருண்டையா தட்டையா என்று மேலைநாடுகள் வெகுகாலம் தடுமாறிக் கொண்டிருந்தன என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்.  எகிப்தியர்களும், கிரேக்கர்களும் உருண்டையான உலகத்தின் சுற்றளவைப் பண்டைக்காலத்திலேயே அளவிடக் கற்றுக் கொண்டிருந்தாலும், இடைக்கால ஐரோப்பியர்களுக்கு அதெல்லாம் மறந்து விட்டிருந்தது.  உலகம் தட்டையானது என்று கிறித்தவப் பாதிரிமார்கள் கற்பித்ததை 16ம் நூற்றாண்டில் கலிலியோ பிறந்துதான் மறுதலிக்க வேண்டியிருந்தது. அப்படிச் சொன்னது தெய்வக் குற்றம் என்று கிறித்தவ மதகுரு அவரைத் தள்ளி வைத்தார்.

ஆனால், சூரிய சித்தாந்தம் கோள்களின் நிலையைப் பற்றிச் சொல்லிக் கொண்டு போகும் போது, போகிற போக்கில் பூமியின் விட்டத்தையும், சுற்றளவையும் கணக்கிடச் சூத்திரம் தருகிறது.  அதாவது பூமி உருண்டையானது என்பதை இயல்பாக எடுத்துக் கொள்கிறது. இது ஒன்றும் தெய்வக் குற்றம் இல்லை.

பூமியின் விட்டம்  = வி =
பூமியின் சுற்றளவு = சு =  வர்க்கமூலம் (_/10 * வி),

அதாவது பை என்ற மாறிலியை பத்தின் வர்க்க மூலம் அல்லது 1.3163 என்று எடை போட்டிருக்கிறார்கள்.  பிறகு, சைன், கோசைன் பட்டியல்களின் மூலம் இதை இன்னும் திருத்தி பை என்ற மாறிலி (10800/3438) அல்லது 3.14136 என்று கணக்கிட்டிருக்கிறார்கள். நீங்கள் கூகிளில் pi என்று தேடினால் 3.14159265 என்ற விடை வரும். பண்டைய இந்தியர்கள் இவ்வளவு துல்லியமாக சைன், கோசைன் பட்டியல் மட்டுமல்லாமல், பை என்ற மாறிலியையும் கணித்ததால்தான், அவர்களால் ஆண்டு முறையில் பிழை அவ்வளவாக இல்லாமல் கணக்கிட முடிந்தது.  இதற்கு அறிவியல் சான்றுகள் இல்லை என்று புறந்தள்ளுவது பொருத்தமற்றது.

சரி, சரி, இதெல்லாம், பாட்டி கதை.  இப்போதுதான் அணுக்கடியாரமே வந்து விட்டதே.  இன்னும் ஏன் இதைக் கட்டிக் கொண்டு அழ வேண்டும் என்று கேட்கலாம்தாம்.  இன்றைய தமிழ் ஆண்டு முறையும் இந்திய அரசின் ஆண்டு முறைக் கணக்கோடு இணங்கி அணுக்கடியாரக் கணக்கை எல்லாம் ஏற்றுக் கொண்டு பஞ்சாங்கம் பார்ப்பதுதான்!  பழைய பஞ்சாங்கத்தை விடுங்காணும்.  இந்தச் சுழற்சி முறையை ஏன் கட்டிக் கொண்டு அழ வேண்டும், அதிலும் ஏன் விக்கிரம, சக ஆண்டு என்றெல்லாம் சொல்ல வேண்டும் என்று கேட்கிறீர்களா?  சரி, வடநாட்டு மன்னர்கள் பெயரில் இருக்கும் ஆண்டு முறை வேண்டாம் என்றால் விட்டு விடுங்கள்.  திருவள்ளுவர் போலச் சரியான காலம் கணக்கிட முடியாத தமிழ்ப் புலவர்களை விட்டு விட்டு, அதியமான், பாரி போன்ற தமிழ்ப் பெருவள்ளல்களின் காலக் கணக்கை வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்களேன்?

அது என்ன 60 ஆண்டு சுழற்சி?  அது வியாழன் என்ற கோள் ஒரு முறை கதிரவனைச் சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம்.  அதை இந்துக்கள் மட்டுமல்ல, சீனர்களும் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாய்ப் பின்பற்றி வந்திருக்கிறார்கள்.  பருவகாலம் போல், இந்தச் சுழற்சி முறையிலும் வானிலைக் குறிப்புகள் பொதிந்திருக்கின்றன.  “தாது வருஷப் பஞ்சம்” என்பது போல ஆண்டின் பெயரை வைத்து ஆண்டுப் பலன்களைச் சொல்பவர்கள், பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாய்த் தொடர்ந்து நடந்து வந்திருப்பவற்றை வைத்துப் பலன் சொல்லுகிறார்களா என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். இந்தச் சுழற்சிகள், இன்னும் எத்தனை எத்தனை வட்டங்களுக்குள்ளோ, வெளியோ விரிந்து போகின்றன என்று பார்க்க வேண்டும். எல் நினோ(El Nino), லா நினா (La Nina) போன்ற பெருநீரோட்டங்கள் உலகளாவிய வானிலையைப் பாதிப்பது போல் இன்னும் என்னென்ன சுழற்சிகள் இருந்திருக்கின்றன என்று ஒப்பு நோக்க வேண்டும்.

தற்காலத்தில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடுபவர்கள் சித்திரைத் திருநாளைக் கொண்டாடிவிட்டு, மேம்போக்காகப் பலன் பார்ப்பதோடு சரி.  சுழற்சி முறை, தொடர்ச்சி முறை, என்பதை எல்லாம் வேறுபடுத்திப் பார்ப்பதெல்லாம் மறந்தாகி விட்டது.  ஆங்கில ஆண்டு முறைதாம் நம் வாழ்க்கை என்றாகி விட்டதே.  நம்மவர்கள் முறைகள் எல்லாம் மூட நம்பிக்கை என்று புறந்தள்ளுகிறோம்.  புராணக் குப்பைகளுக்குள்ளும் வைரங்கள் ஏதாவது புதைந்திருக்கின்றனவா என்று பகுத்து அறிவோமே!

கொண்டாடுபவர்களுக்கு, இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.