Monday, November 11, 2013

தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் - ஒரு கோணல் பார்வை - பகுதி 2


தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் செய்வது கிட்டத்தட்ட ஒரு குடிசைத் தொழிலாகி விட்டது. இதை நையாண்டி செய்து நான்  மார்ச் 2, 2010ல் ஒரு வலைப்பூவைப் பதிந்தேன். அப்போது எழுத்தாளர் பேரா. இந்திரா பார்த்தசாரதி நகைச்சுவையுடன் ”விளையாட்டுக்குக்கூட இப்படிச் செய்யாதீர்கள். செம்மொழி மாநாட்டில் தீர்மானம் போட்டு ஏற்றுக் கொண்டு விடப் போகிறார்கள்” என்று எச்சரித்தார்! அண்மையில் நான் கிண்டல் செய்ததைப் போலவே ஒரு எழுத்துச் சீர்திருத்த முன்மொழிவு கண்ணில் பட்டது. முதலில் எனது கோணல் பார்வை உங்கள் கண்ணுக்கு:

http://kural.blogspot.com/2010/03/blog-post.html


எழுத்துச் சீர்திருத்தம் என்ற பெயரில் மக்கள் எப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள்! எழுத்துகள் இன்றைய நிலையை அடைய எத்தனை நூற்றாண்டுகள் ஆகின, என்னென்ன பிழைகளைக் கடந்து படிப்படியாக இந்த நிலையை அடைந்தன என்பதைப் பற்றி இவர்கள் எண்ணுவதே இல்லை. யூனிகோடு குறியீட்டுமுறை வந்து இன்னும் 25 ஆண்டுகள் கூட ஆகவில்லை. ஆனால், தொடக்கத்தில் இருந்தே அவர்கள் நிலை பிறழாமையை (stability principle) ஒரு குறிக்கோளாகக் கொண்டிருக்கிறார்கள். ஒரு கணினிக் குறியீட்டுக்கே இது தேவை என்றால் மனிதர் மொழிக்கு எவ்வளவு தேவை?

இதோ நான் கிண்டல் அடித்தது போன்ற புதிய பரிந்துரைகள் (அவை எனதல்ல!)


இதோ மேற்கண்ட குறியீட்டில் உள்ள ஓர் ஆவணம்:

3 comments:

மணி மு. மணிவண்ணன் said...

இந்திய மொழிகளிலிலேயே தமிழுக்கு எழுத்துகளின் எண்ணிக்கை குறைவு. கூட்டெழுத்துக்களும் இல்லை. இருப்பதிலேயே மிகவும் எளிமையான, தெளிவான எழுத்துமுறை தமிழுக்கு. இதை எழுதுபவர்களுக்கும், படிப்பவர்களுக்கும் எந்த விதத் தொல்லையும் இருந்ததாகத் தெரியவில்லை. அச்சு எந்திரத்திலும் இது நன்றாகவே வேலை செய்தது. அச்சு எழுத்துகளின் எண்ணிக்கையைக் குறைப்பது என்பது செருப்புக்காகக் காலை வெட்டிக் கொள்வது போலாகும். இதே போல்தான். டாட் மேட்ரிக்ஸ் அச்சு எந்திரத்தில் தமிழ் எழுத்துகளைச் சீராக அச்சிடுவதில் சிக்கல் வந்த போது கொடுமுடி சண்முகம் எழுத்துச் சீர்திருத்தங்களைப் பரிந்துரைத்தார்.

ஜப்பானியர்களும், கொரியர்களும், சீனர்களும் தம் பல்லாயிரக்கணக்கான பட எழுத்துகளைத் திரையில் காட்டுவதற்கும், அச்சிடுவதற்கும் ஏற்ற வகையில் புதிய கருவிகளைக் கண்டு பிடிப்பதில் ஈடுபட்ட தன்னம்பிக்கை உள்ளவர்கள். ஆனால் தமிழுக்குக் கிடைத்த தலைவர்கள் நம்மையும் நம் மொழியையும் குறை சொல்லி நீ ஏன் ஆங்கிலத்தை ஏற்றுக் கொள்ளக் கூடாது, ஆங்கில எழுத்தை ஏற்றுக் கொள்ளக் கூடாது, ஏன் ஆங்கிலத்தைப் போல 26 எழுத்துகளாகக் குறைத்துக் கொள்ளக் கூடாது என்று கூறுபவர்கள். நம் அன்னையை இன்னொருத்தியோடு ஒப்பிட்டு ஏன் அவள் மற்றவளைப் போல் இருக்கக் கூடாது என்பது அடிமைத்தனமான எண்ணம். ஏன் உன் அன்னையைப் போற்றிப் பாராட்டக் கூடாது என்று கேட்பது தன்னம்பிக்கை தரும் எண்ணம். பெரியாரின் எழுத்துச் சீரழிப்பு நம்மைக் குறை சொல்லும் அடிமைத் தனமான எண்ணம். அதை முற்போக்கு என்பதும், நம் எழுத்தைப் போற்றிப் பாராட்டி அதற்கு ஏற்ற கருவிகளை அமைக்க முயல்வதைப் பழமை வாதிகளின் புனித நோக்கு என்பதும் இவர்களது தாழ்வு மனப்பான்மைக்குத்தான் அடையாளம்.

குறும்பன் said...

நான் சிறுவனாக இருக்கும் போது பெரியார் எழுத்துச்சீர்திருத்தம் வரவில்லை, அப்படி எழுதி பழகினதும் வந்துவிட்டது, அப்போ எனக்கு எது சரி எது தவறு என்றே தெரியாமல் குழம்பிவிட்டேன்.

பெரியார் தொண்டர் மு. க இன்னும் பழைய முறையில் தான் எழுதுகிறார். திக தலைவர் எப்படி எழுதுகிறார் என்று தெரியவில்லை.

Bagawanjee KA said...

தமிழ் எழுத்துக்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டுமென்ற நோக்கில் அவர் சிந்தித்து இருப்பது வரவேற்கப் பட வேண்டியதே !