திங்கள், ஜூலை 29, 2013

சொற்கள், வெறும் சொற்கள், இவைக்கு இத்தனை வலிமையா!


தமிழ் இணையத்தின் தொடக்க நாட்களில், தமிழ்.நெட் மடலாடற்குழுவில் காரசாரமான விவாதங்கள் நடக்கும். தாய்த்தமிழகத்திலும்,  தமிழ் ஈழத்திலும் இணையம் அவ்வளவாகப் பரவாத காலம் அது.  உலகெங்கும் பரந்து விரிந்திருந்த புலம்பெயர்ந்த தமிழர்கள்தாம் பெரும்பாலும் இணையத்தில் தமிழில் எழுதிக் கொண்டிருந்த நாட்கள். ளும், மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் விழுதுகள் பதித்திருந்த தமிழர்களோடு, புதிதாகக் கனடா, அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியாவில் குடிபுகுந்திருந்த தமிழர்களும் தாய்த்தமிழகம், தமிழ் ஈழச் சூழல்களைப் பற்றியும், புலம்பெயர்ந்த நாடுகளில் தமக்கிருந்த சிக்கல்களைப் பற்றியும் எழுதத் தொடங்கியிருந்த நேரம்.

நம்மில் பெரும்பாலோர் முகம் தெரியாத மனிதர்களோடு, பண்பாட்டுடன் அளவளாவதில் தொடங்குகிறோம்.  தமிழ் இணையத்தின் அன்றைய பரப்பு மிகவும் சிறியது என்பதால் முகம் தெரியாதவர்களும் அந்நியர்களாகத் தோன்றாமல், இணையத்தில் பக்கத்து வீட்டார் போலத்தான் இருந்தார்கள்.  இருப்பினும், மென்மையாகத் தொடங்கும் வாதங்கள், இணையத்தின் முகமூடித் தன்மையினால், இறுகத் தொடங்கி வன்மையாக மாறத் தொடங்கின.  இன்று முகநூலில் பரந்து காணப்படும் வசைச்சொற்களும், தனிமனிதத் தாக்குதலும், எட்டிப் பார்க்கத் தொடங்கின.  தமிழ்.நெட்டின் நிறுவனர் பாலா பிள்ளையைப் பொருத்தவரையில் கருத்துச் சுதந்திரத்துக்கு வேலிகளே இல்லை.  இணையத்தில் எதை வேண்டுமானாலும் எழுத முடிய வேண்டும் என்று உறுதியாக நம்பினார்.  அந்த ஊக்கத்தால், வாக்குவாதங்களில் புண்படுத்தும் சொற்கள் வந்து விழத் தொடங்கின.

ஒரு முறை அப்படிச் சொற்கள் கரைபுரண்டு காட்டாற்று வெள்ளமாக ஓடத் தொடங்கிய போது மலைத்துப் போய் பின் வரும் “கவிதை” ஒன்றை எழுதினேன்.  அது தமிழ் இணையத் தளங்களின் முன்னோடியாக விளங்கிய தமிழ்நேஷன்.ஆர்க் தளத்தின் நிறுவனரான நடேசன் சத்தியேந்திராவை மிகவும் ஈர்த்தது.  அப்போது அவர் தம் தளத்தில் முகப்பில் எதிரொளிகள் (Reflections) என்ற தலைப்பில் இணையத்தில் தம்மைக் கவர்ந்த கருத்துகளைப் பதிவு செய்வார்.  இந்தக் கவிதையையும் அவர் ஆகஸ்டு 1, 1998ல் தம் முகப்பில் பதிவு செய்திருந்தார். இந்தத் தளம் ஏதோ காரணங்களால் சில முறை முடங்கியிருந்து இப்போது முற்றிலும் நின்று விட்டது.  ஆனால், அதன் பதிப்புகளை எப்படியோ மீட்டெடுத்து இன்றும் அவற்றைப் பார்வையிடும் வகையில் tamilnation.co என்ற தளத்தில் ஓர் அருங்காட்சியகத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அதில், இந்தக் கவிதையை இன்றும் பார்க்கலாம்.

சொற்கள் - 1 ஆகஸ்டு 1998

சொற்கள்,
வெறும் சொற்கள்,
இவைக்கு இத்தனை வலிமையா?

கொந்தளிக்கும் உணர்ச்சிகள்
கொதிக்கின்ற குருதி!

சொற்கள்,
வெறும் சொற்கள்,
இவைக்கு இத்தனை வலிமையா?

பத்திரிக்கை விற்க வேண்டும்,
(மக்கள்) பரபரப்பாய்ப் படிக்க வேண்டும்,
பொறுமை இழக்க வேண்டும்,
பொங்கி எழ வேண்டும்,
போர்க்கோலம் பூள வேண்டும்.

கடுஞ்சொல் வீச வேண்டும்!
கல்லை எறிய வேண்டும்!
கொடிதான் பிடிக்க வேண்டும்!
கொந்தளித்து எழ வேண்டும்!

சொற்கள்,
வெறும் சொற்கள்,
இவைக்கு இத்தனை வலிமையா?

கருத்துச் சந்தையிலே
கற்பை விற்பவர்கள்
கொள்கைக் குழப்பத்திலே
கொள்ளிமீன் பிடிப்பார்கள்

கருத்தை வடிகட்டு;.
கசட்டைத் தூற எறி.
கண்ணியம் இழக்காதே,
கயவனாய் மாறாதே.
சொற்கள்,
வெறும் சொற்கள்,
இவைக்கு இத்தனை வலிமையா?

- மணி மு. மணிவண்ணன்
·பிரிமான்ட், கலி·போர்னியா, அ.கூ.நா.
Mani M. Manivannan- California, USA

ஞாயிறு, ஜூலை 28, 2013

”அபுனைவு” என்பது புனைவுக்கு எதிர்மறைச் சொல்லா?

அண்மையில் "non-fiction" என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையாகத் தமிழில் ”அபுனைவு” என்று எழுதுவதைப் பார்க்கிறேன்.  கவிஞர் ஹரிகிருஷ்ணன் இது அவருக்குத் தெரிந்து சுமார் இருபதாண்டுகளாகச் சிறு பத்திரிகைகளில் வெளிவந்து, ‘இலக்கியவாதிகள்’ மத்தியில் பரவலாகவும் புழங்குகிறது என்கிறார். 

Fiction என்ற ஆங்கிலச் சொல்லுக்குப் புனைவு என்ற சொல்லைப் புழங்கி வருகிறார்கள் எனத் தெரியும்.  ஆனால், புனைவுக்கு எதிர்மறைச் சொல்லாக, அதன் முன் அகர முன்னொட்டு இட்டு ‘அபுனைவு’ என்று சொல்லுவது தமிழின் மரபு இல்லை.  இப்படி அகர முன்னொட்டு இட்டு எதிர்மறையாக்குவது சமஸ்கிருதத்தின் மரபு.  

bhayaabhaya
pūrvaapūrva
maṅgalaamaṅgala
mārgaamārga

அமரர் என்ற சொல்லும் இப்படித்தான் மரணமற்றவர்கள் என்ற பொருள்தரும் வடசொல் வேரிலிருந்து வந்தது.

ஆங்கிலத்திலும் இதே போன்ற மரபு உண்டு.
chromaticachromatic
morphousamorphous
symmetricasymmetric
typicalatypical

இவை பெரும்பாலும் கிரேக்க வேர்ச்சொற்களில் இருந்து வந்தவை.  ஆனால், சென்னைப் பேரகரமுதலியில் தேடிப்பார்த்தால், இந்த அகர எதிர்மறை முன்னொட்டு எந்தத் தமிழ் வேர்ச்சொல்லின் முன்னும் இல்லை. ‘அபு’ என்று தொடங்கும் சொற்கள் மூன்று மட்டுமே. (
http://dsalsrv02.uchicago.edu/cgi-bin/philologic/contextualize.pl?p.0.tamillex.950993.951293). அவை
:

*அபுத்திபூருவம் aputti-pūruvam, n. < a- buddhi-pūrva. That which is unintentional; அறியாமல் நிகழ்ந்தது

*அபுத்திரகன் a-puttirakaṉ, n. < a-put- raka. One without male issue; புத்திரனைப் பெறாதவன்.

*அபுதன் aputaṉ, n. < a-budha. Fool, dolt: மூடன்.

இந்த மூன்றும் வடசொற்கள்.

அபுனைவு என்ற சொல்லை எப்படி உச்சரிக்கிறார்கள் எனத் தெரியவில்லை. புனைவு என்பதில் பகரம் வல்லொலி.  அபுனைவு என்பது தமிழாகவே தெரியவில்லை.  இருப்பினும் அதைப் படிக்கும்போது  abunaivu என்று மெலிந்து ஒலிக்கத்தான் தோன்றுகிறது.  அதை அ-புனைவு என்று இடைவெளி விட்டுப் படிப்பதும் மரபல்ல.

தமிழில் எதிர்மறைகள் பின்னொட்டு வழியாகத்தான் வருபவை.  சென்னைப் பல்கலைப் பேரகராதியில் “அபு” என்று தொடங்கும் சொற்கள் எவையும் இல்லை என்பதே இதன் தொன்மையான மரபைக் காட்டுகிறது.

பிராமணர் அல்லாதவர் என்பதைக் குறிப்பிட “அபிராமணர்” என்றா சொல்லுவீர்கள் என்று ஒரு எழுத்தாள நண்பரிடம் கேட்டபோது அவர்கள் வீட்டில் அப்படித்தான் சொல்வார்கள் என்று சொன்னார். அதை அபிராமணர் என்று உச்சரிக்காமல் ‘அப்ராமணர்’ என்று உச்சரிக்க வேண்டும் என்று விளக்கினார் ஹரி.  அதாவது

bhrāmanabhrāman

தமிழில் அபிராமணர் என்று சொல்ல முடியாது.  அப்பிராமணர் என்றால் அது அந்தப் பிராமணர் என்றுதான் பொருள்தரும். இது நிச்சயம் தமிழல்ல

பிராணிக்கு எதிர்மறை அபிராணியா?  அதை அப்பிராணி என்றா சொல்வார்கள்? அப்படிச் சொன்னால், அதை அந்தப் பிராணி என்றல்லவா புரிந்து கொள்ள நேரிடும்?

Non-Congress, non-Communist என்பவற்றை அகாங்கிரஸ் கட்சி, அகம்யூனிஸ்ட் என்று சொன்னால் தலை சுற்றவில்லையா? Non-payment க்கு அகட்டணம் என்று சொல்லிப்பாருங்கள்!

புனைவு என்ற சொல்லுக்கு அபுனைவு என்று எதிர்மறைச்சொல் படைத்தவர்களுக்குத் தமிழும் தெரியவில்லை, வடமொழியும் தெரியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.  இப்படி ஒரு மொழியின் அடிப்படை இலக்கணமே தெரியாமல் சொற்களைப் புனைபவர்களும், அதை எடுத்து ஆள்பவர்களூம்தான் இன்று இலக்கியவாதிகள். காப்பியைக் குளம்பி என்று தமிழ்ப்புலவர்கள் அழைத்தால் நக்கலடிக்கும் அதே இலக்கியவாதிகள் இப்படித் தமிழும் தெரியாமல் வடமொழியும் தெரியாமல் அபுனைவு என்று படைப்பதைப் பார்த்தால், மாமியார் உடைத்த ‘மண்குடம்’ என்பதுதான் நினைவுக்கு வருகிறது.
 

பெயர்ச்சொல்லுக்கு முன் அ- முன்னொட்டை இட்டு அதை எதிர்மறையாக மாற்றுவது ஆங்கிலத்துக்கும் வடமொழிக்கும் இலக்கண முறையாக இருக்கலாம்.  இரவற்சொற்களில் கூட இவை எடுத்தாளப் படலாம்.  ஆனால் தமிழ்ச்சொல்லுக்கு இவை பொருந்துமா?

இலக்கணம் மாறுகிறதே!
புனைவுக்கு எதிர்ச்சொல்லாக புனைவிலி என்று ஒரு ஆட்சியைப் பார்த்தேன். தாழ்வில்லை. இது பற்றிப் பேரா. செல்வகுமாரின் தமிழ்மன்றம் மடலாடற்குழுவில் உரையாடினோம். (காண்க: 
https://groups.google.com/forum/#!topic/tamilmanram/XMnHR-o4bWk )

புனைவறு’ என்று எழுதுவேன் என்று நாக. இளங்கோவன் சொல்கிறார். ‘அல்’ என்ற முன்னொட்டை இட்டு அல்புனைவு என்றும் சொல்லலாமே என்கிறார்.  பேரா. செல்வகுமார் அல்புனை என்ற சொல்லைப் பரிந்துரைக்கிறார்.  அல் முன்னொட்டுப் பல தமிழ்ச்சொற்களில் பயின்று வருகிறது என்று சுட்டுகிறார்.
தமிழில் இப்படி அபுனைவு என்பது கசப்பாகவே உள்ளது.
ஆனால் தமிழில் 
அல்வழி (வேற்றுமையல்லாத வழி, தகாத வழி)
அல்வழக்கு,
அல்லியன் (குழுவைப் பிரிந்த யானை),
அல்லிப்பிஞ்சு (பூவிழாத பிஞ்சு )
அல்லும்பகலும் என்னும் சொல்லாட்சியில் அல் என்பது இரவு (கதிரவனின் பகல் வெளிச்சம் இல்லாதது).
இனும் பல சொற்கள் உள்ளன. ஆகவே அல் என்னும் முன்னொட்டுடன் வரும் தமிழில். 

அல்லங்காடி என்ற சொல் மாலையில் கூடும் சந்தையைச் சுட்டுகிறது என்பது நினைவுக்கு வருகிறது.  ஆனால், அங்கே அல் என்பது இருளையும், இரவையும் சுட்டுகிறது.  அங்காடி அல்லாதது என்று சொல்லவில்லை.  எனவே அல் என்ற முன்னொட்டு எல்லா இடங்களிலும் பொருந்தாது என்றும் புரிகிறது.

இராமகி சொல்கிறார்:
அல்புனைவு என்று சொல்லலாம்; குழப்பம் வராது. தமிழிற் பெரும்பாலும் பின்னொட்டுக்களே பயிலும். அரிதாகவே முன்னொட்டுக்கள் பயின்று பார்த்திருக்கிறேன். அல் என்பது அப்படி ஓர் முன்னொட்டாகும். முதலிற் சொல்லும்போது முன்னொட்டாய் வைத்து இப்படிச் சொல்லத் தயங்கினேன். பின்னால் கொஞ்சங் கொஞ்சமாய் நான் ஏற்றுக் கொண்டுவிட்டேன். ஏனென்றால் 
”அல்வழி யெல்லாம் உறழென மொழிப” - தொல்.எழுத்து.புள்ளி 73;“அறனை நினைப்பானை யல்பொருள் அஞ்சும்” - திரிகடுகம் 72.“அல்வழக்கு ஒன்றுமில்லா அணிகோட்டியர்கோன் - திவ். திருப்பல்.11. ”அல்லறஞ் செய்வோர் அருநரகு அடைதலும்” - மணிமே. 16:89”அழுக்காற்றின் அல்லவை செய்யார்” - குறள் 164“அல்லுழியெல்லாம் பரந்துபட்டு வரவும் பெறும்” - தொல்.பொருள்.செய்.183. பேரா.உரை   என்ற முன்னோர் காட்டுக்கள் இருக்கின்றன. இந்தச் சிந்தனையிற் தோய்ந்தே ”அத்வைதம்” என்பதற்கு ”அல்லிருமை” என்ற இணைச்சொல்லை நான் ஏற்கனவே பரிந்துரைத்தேன்.
புனைவிலி என்பது புனைவே இல்லாதது (no imagination) என்றாகும்; அதனால் “முற்றிலும் உள்ளமை (totally real) என்ற பொருட்பாடு வந்துவிடும். Non-fiction என்பது இதுவல்ல. அது கதையல்லாதது; எனவே வேறொரு வகையைக் குறிக்கும்.
இல்ல, அல்ல என்ற இருவகைக் கருத்துக்களுக்கும் உள்ள பொருள் வேறுபாட்டை இங்கு நுண்ணி எண்ணிப் பார்க்கவேண்டும். இல்லுதலும், அல்லுதலும் வேறு வேறானவை.
அல்புனைவோ அல்லது அல்புனையோ இவ்விரண்டுமே அபுனைவை விட மேலானவை. கொட்டைவடிநீர், குளம்பி, மூத்த குரங்கு தமிழ்க்குரங்கு என்றெல்லாம் தமிழ்ப்புலவர்களை நக்கலடிக்கும் ‘இலக்கியவாதிகள்’ அபுனைவு என்று தாம் படைத்தது தவறு என்று ஏற்றுக் கொண்டு அல்புனைவு சரி என்று ஏற்றுக்கொண்டு தாம் அறிவு நேர்மை உடையவர்கள் என்று உறுதி செய்ய இது ஒரு நல்ல வாய்ப்பு. 

செய்வார்களா? “இலக்கியவாதிகள்” செய்யாவிட்டாலும் தாழ்வில்லை.  தமிழைப் பற்றி அக்கறையுள்ளவர்களாவது செய்யலாமே?

சனி, ஜூலை 27, 2013

கலைச்சொற்களும் கொலைச்சொற்களும்

தமிழகத் தொலைக்காட்சிகளைப் பார்க்கும்போதும், வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்கும்போதும் அன்றாடத் தமிழ்ப் பேச்சில் ஆங்கிலம் எவ்வளவு கலந்திருக்கிறது என்பதை உணரலாம்.  1970கள் வரைக்கூட இந்த நிலை இல்லை.  அப்போதைய கே. பாலச்சந்தர் படங்களில் மேட்டுக்குடிப் பாத்திரங்கள் மட்டுமே ஆங்கிலம் கலந்து பேசுவார்கள்.  ஆனாலும் மேஜர் சுந்தரராஜன் நடித்த பாத்திரங்களில் அவர் ஆங்கிலத்தில் பேசியதை உடனேயே தமிழில் மொழி பெயர்த்து விடுவார்.  இல்லையென்றால் படம் பார்ப்பவர்களில் பெரும்பாலோருக்குக் கதை புரியாமல் போய் விடும்.

ஆனால், இன்றைய நிலையில், தொலைக்காட்சிச் செய்திகளில் கூட, தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் சிற்றூர்களில் உள்ள மூதாட்டிகள் கூடத் தமக்கும் ஆங்கிலம் தெரியும் என்று காட்டிக் கொள்ள எதையாவது கலந்து பேசுகிறார்கள். வடநாட்டிலிருந்து இறக்குமதி ஆகியிருக்கும் நடிகைகளுக்காவது உண்மையிலேயே தமிழ் தெரியாது.  எனவே அவர்கள் ஆங்கிலம் கலந்து பேசுவதைப் பொறுத்துக் கொள்ளலாம்.  ஆனால், தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த அறிவிப்பாளர்களுக்கும் கூட “நான் பிறந்திருக்க வேண்டியது இங்க்லேண்ட்” என்ற உணர்வு போலும்.

மிகப் பெரும்பாலான அறிவிப்பாளர்களுக்கு ஆங்கிலம் தெரியாது.  அது அவர்கள் பிழையல்ல.  ஆங்கிலம் நம் தாய்மொழி இல்லையே?  அதை இரண்டாவது மொழியாகத்தான் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.  ஆனால் தாய்மொழியையும் கற்றுக் கொள்ளாவிட்டால், நமக்கு எந்த மொழியுமே முதல்மொழியாக இல்லாமல் போய்விடும்.  இதனால்தான், எந்தத் தொழில்நுட்பம் வந்தாலும், அது வரும்போதே அது குறிப்பிடும் கலைச்சொற்களைப் புரிந்து கொண்டு, நம்முடையதாக்கி, நம் மொழியில் பெயரிட வேண்டும்.  அதன் ஆளுமையே தனிதான்.  இன்று பட்டி தொட்டி எல்லாமே “இணையம்” என்ற சொல் பரவி இருப்பதே இத்தகைய ஆளுமைக்கு எடுத்துக்காட்டு.

தமிழ் இணையத்தின் தொடக்க காலத்தில், தமிழ்.நெட் (tamil@tamil.net) என்ற மடலாடற்குழுவில்தான் இணையத்தில் தமிழைப் புழங்கிய அத்தனை பேரும் இருந்தோம்.  அங்கேதான் “இணையம்” என்ற சொல்லும் படைக்கப் பட்டது.  அதன் பின்னர் தமிழ்.நெட்டில் இருந்து கிளைத்த சில குழுக்களில் சிறப்பான கலந்துரையாடல்கள் நடந்து வருகின்றன.  அவற்றில் அகத்தியர் குழுமம் தலையாயது.

ஒருமுறை, செப்டம்பர் 1999ல், செல்ஃபோன், பேஜர் என்ற ஆங்கிலச்சொற்களுக்கு இணையான தமிழ்க் கலைச்சொல் ஒன்று பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம்.  1989ல், சிங்கப்பூர் முஸ்தஃபா கடையில், அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த தமிழ் முஸ்லிம்களிடம் இருந்துதான் அகவி என்றால் பேஜர் என்றும், கைப்பேசி என்றால் கார்ட்லெஸ் ஃபோன் என்றும் தெரிந்து கொண்டேன்.  அவர்கள் யாரும் தமிழ்ப் புலவர்களல்லர்.  ஆனால், இந்த அந்நியப் பொருள்களை அவர்கள் தமிழில் பெயர்சூட்டி அழைக்கத் தயங்கவில்லை.  ஆங்கில மோகம் சிங்கப்பூரை அப்போது எட்டவில்லை போலும்.

ஆனால், அகவி, கைப்பேசி, செல்பேசி (மொபைல் ஃபோன்), செல்லிடைபேசி போன்ற பெயர்களைத் தமிழகத் தமிழர்கள் ஏற்றுக் கொள்ளத் தயங்கினார்கள்.  அந்த உரையாடலில் இந்தப் பெயர்களை ஏற்றுக் கொள்ளும் குழப்பம் பற்றி “செந்தில் - கவுண்டமணி” நகைச்சுவை உரையாடல் போல எழுதியிருந்தேன்.

http://www.treasurehouseofagathiyar.net/02300/2333.htm ) அகத்தியரில் அவ்வப்போது இப்படி கலாய்க்கலாம். அறிஞர் ஜெயபாரதி நல்ல நகைச்சுவை உணர்வாளர்.  இத்தனை ஆண்டுகள் கழித்து அதை மீண்டும் வெளியிடுகிறேன்.  இன்றைய வலையுலகம் இதைப் பொருத்தருளட்டும். . :-)

============

X-Mailing-List: agathiyar@egroups.com
From: "Mani M. Manivannan"
Date: Wed, 29 Sep 1999 20:11:22 -0700
Subject: [agathiyar] Re: Fw: [tamil] New word for cell phone?


>>Plug க்கு அடைப்பான் எனும்போது pager க்கு விளிப்பான் என ஏன் 
>>சொல்லக் கூடாது. அல்லது கூவி எனலாமே 
>What about 'அழைப்பான்'? 

க: டேய் செந்தில், டேஏய் செந்தில்! 

செ: என்னாண்ணேய்? விளிச்சீங்களா? 

க: அந்த விளிப்பானை எடுத்து ஒங்கண்ணியை விளி. 

செ: (கண்ணை அகல விரித்துக் கொண்டு) எந்தப் பானை அண்ணே? 

க: டேய்! ஒன் கண்ணை விழிக்கச் சொல்லலேடா, உங்க அண்ணிய விளிக்கச் சொன்னேன். 

செ: அட! அப்படிச் சொல்லுங்கண்ணே! ஆமா, எந்தப் பானைய வைச்சி அண்ணிய விளிக்கச் சொன்னீங்க? 

க: ஏ, புண்ணாக்கு! பானையை இல்லடா முண்டம்! இந்த விளிப்பான் இருக்குதுல்ல? புரியலயா? 

செ: :-( 

க: சரி அழைப்பான்னா என்னான்னு தெரியுமா? 

செ: :-@ 

க: மக்குப்புண்ணாக்கு! தகவல் ஒலி ஒளி அலைப்பானைப் பத்தியாவாது கேள்விப் பட்டிருக்கியா? 

செ: அண்ணே! திட்டுனா புரியற மாதிரி திட்டுங்கண்ணே! 

க: சரி, கரையானையாவது தெரியுமா? சரி விடு, செல்லரிக்கிற பூச்சியைக் கொண்டாந்தாலும் கொண்டு வருவே! 

செ: அட நீங்க ஒண்ணு, வீடு பூரா கரையானும் பூரானுமாத்தானே இருக்கு! 

க: ஆங்! ஒன்னைமாதிரி கரப்பானைக் கொண்டு வந்து ஊட்டுல வச்சா ஏண்டா கரையானும் பூரானும் வராது? 

செ: அண்ணே, அண்ணியை விளிக்கணுமுன்னீங்களே? 

க: டேய் முண்டம், சரி கூவி, தகவல் தாங்கி, கரைவி, அகவி எதைப்பத்தியாவது கேள்விப் பட்டிருக்கியா? 

செ: இல்லங்கண்ணே! 

க: டேய்! ஒங்கோட பேசறதுக்குப் பதிலா,

"இம்பர்வான் எல்லை இராமனையே பாடி 
எண்கொணர்ந்தாய் பாணாநீ என்றாள் பாணி"ன்னு 

பாடுனாரே அந்தப் பாணரோட பொண்டாட்டி பாணிக்கிட்டேயே சொல்லி வெளங்க வைக்கலாம்! 

செ: என்னாங்கண்ணே! (தலையைச் சொறிகிறார்) 

க: டேய் தமிழா! போய் அந்த பீப்பர், பேஜர், எடுத்துட்டு வாடா. 

செ: அட என்னாங்கண்ணேய்! ஒரே பேஜாராப் போச்சு. பேஜர்ன்னு தமில்லே சொல்லிருந்தீங்கன்னா, ஒடனே கொண்ணாந்திருப்பேன்! 

க: (அடிக்க வருகிறார்). 

எடுப்பான் கொடுப்பான் 
விளிப்பான் அழைப்பான் 
இளிப்பான் யார் யாரோ! 
அடைப்பான் யார் யாரோஓ! (என்று புலம்பிக் கொண்டே செல்கிறார்). 

மணி மு. மணிவண்ணன் 
நூவர்க், கலி., அமெரிக்கக் கூட்டு நாடுகள்