Tuesday, December 29, 2009

குளவிக்கூடும் கொட்டும் குளவிகளும்

குளவிக்கூட்டைக் கலைத்திருக்கிறீர்களா?  கலைந்த கூட்டிலிருந்து கொதித்துப் பறந்து வரும் எண்ணற்ற குளவிகள் தங்கள் ஆத்திரம் தீர உங்களைக் கொட்டித் தீர்த்துவிடும்.

தேனீக்கூடுகளைக் கலைப்பவர்கள் பாதுகாப்புக் கவசம் அணிவது மட்டுமல்லாமல், தேனீக்கள் தாங்களே கூட்டிலிருந்து வெளியேறப் பக்குவமாய்ப் புகையூட்டிப் பிறகுதான் கூட்டை அணுகுவார்கள்.

அமெரிக்காவையும், இந்தியாவையும், இஸ்ரேலையும் தொடர்ந்து தாக்கி வரும் தீவிரவாதிகள் எனக்கு இந்தக் குளவிக்கூடுகளைத்தான் நினைவூட்டுகின்றனர்.

இஸ்ரேலும், இந்தியாவும், தீவிரவாதத் தாக்குதல்களைத் தத்தம் முறையில் தாங்கிக் கொள்கின்றன.

இஸ்ரேலிகள் "கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்" என்ற கொள்கை கொண்டவர்கள்.  அவர்கள் எதிரிகளும் அவ்வாறே.  தீவிரவாதத் தாக்குதல் ஒன்றுக்குப் பின் மிகுந்த மனவுரத்துடன் இஸ்ரேலிகள் தங்கள் அன்றாட வாழ்க்கையைத் தொடர முயல்வதுடன் நிற்காமல், தங்களைத் தாக்கியவர்களைப் பழி வாங்க நடவடிக்கை எடுப்பார்கள். தங்களைத் தாக்கியவர்களுக்கும் தாங்கள் பட்ட அடி வலிக்க வேண்டும் என்ற உணர்வோடு, தீவிரவாதிகளின் கூட்டாளிகளையோ, அல்லது ஆதரவாளர்களையோ தாம் வாங்கிய அடியை விட பத்து பங்கு கூடுதலாக மொத்துவார்கள்.  இது இஸ்ரேலிகள் இயல்பு.

இந்தியாவோ புத்தர் தோன்றிய நாடு.  கொல்லாமையை வலியுறுத்தும் சமண மதத்தின் தாய்நாடு.  காந்தி பிறந்த நாடு.  ஆனாலும், பழிவாங்கும் உணர்வும், வெட்டி மடியும் பங்காளிச் சண்டை இயல்பும் யானை போல் மறக்காத நாடு.  தீவிரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னர் இந்தியர்களும் சற்றும் கலங்காமல் அன்றாட வாழ்க்கையைத் தொடர்வது ஒரு விதத்தில் வாழ்க்கையின் தேவையினால் என்றாலும் பாராட்டக் கூடிய பண்புதான்.  ஆனால் குளவிகள் தொடர்ந்து கொட்டிக் கொண்டே இருந்தால் யாருக்குத்தான் எரிச்சல் வராது?

ஒன்று குளவிக்கூட்டைக் கலைப்பதை நிறுத்த வேண்டும்.  அல்லது புகை போட்டுக் குளவிகளை வெளியேற்றியிருக்க வேண்டும்.  குறைந்தது பாதுகாப்புக் கவசமாவது அணிந்திருக்க வேண்டும்.  முடிந்தால் குளவிக் கொடுக்குகளைப் பிடுங்க வேண்டும்.

இவை எதுவுமே இந்தியாவில் நடக்காது.

குளவிகளும் தங்கள் கூட்டைக் கலைப்பவர்களைக் கொட்டுவதில்லை.  குறுக்கே வரும் யாராக இருந்தாலும், அவர்கள் குளவிக்கூட்டைக் கலைத்தவர்கள் என்று கருதிக் கொட்டித் தீர்த்துவிடும்.

"ஆறிலும் சாவு, நூறிலும் சாவு" என்று விதியை நம்பும் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை அஞ்சாமல் தொடருவார்கள்.  மேட்டுக்குடிமக்கள் அமைதியாகத் தங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை வலியுறுத்துவார்கள்.  ஏதாவது மாற்றம் வரலாம்.

அமெரிக்கா அப்படியில்லை.

குளவிக்கூடுகளைக் கவலையில்லாமல் கலைப்பார்கள். ஏனென்றால் கொட்டு வாங்குவது வேறு யாராவதாக இருக்கும். அக்கம் பக்கத்தில் குளவிகள் கூடு கட்டாமல் பார்த்துக் கொள்வார்கள்.

இப்போதெல்லாம் குளவிகளும் உயர்நுட்ப வல்லமை பெற்று விட்டன.

விமானங்களை ஏவுகணையாக்கும் சிந்தனை பெற்று விட்டன.

குளவிக் கொட்டே வாங்கிப் பழக்கப் படாத அமெரிக்கர்களுக்கு தங்கள் நாட்டுக்குள்ளேயே வந்து தங்களைத் தாக்குபவது பெருத்த அதிர்ச்சியளித்திருக்கிறது.

இது "கண்ணுக்குக் கண்" என்ற கொள்கையை உதட்டளவில் நம்பாத நாடுதான் என்றாலும், செயல்முறையில் பழிவாங்கும் நாடுதான்.  "பழிக்குப் பழி" என்ற முறையில் இல்லாவிட்டாலும், அடுத்த தாக்குதலை மட்டுப் படுத்தவும் நிறுத்தவும் பயனுள்ள உத்தியாகவாவது எதிர்த்தாக்குதல் நடத்தும் நாடு இது.  கிறிஸ்துமஸ் அன்று நடந்த தாக்குதல் முயற்சிக்கு "ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டு" என்ற கிறிஸ்துவின் பாடத்தை நினைவில் கொண்டு அன்பினால் எதிரியைத் தன் வசப் படுத்தும் நாடல்ல அமெரிக்கா.

வெறும் வாயை மென்று கொண்டிருக்கும் சி.என்.என். போன்ற 24 மணி நேரச் செய்திமடைகளுக்கு இது மூட்டை மூட்டையாய் அவல் கொடுத்ததுபோல் ஆகிவிட்டது.  இதை எத்தனை கோணத்தில் காட்டிப் பயமுறுத்த முடியுமோ அத்தனையையும் செய்தாயிற்று.

முன்னாள் அதிபர் புஷ்ஷின் அமைச்சரவையிலிருந்து திருவாய் மலர்ந்தருளத் திருக்கூட்டத்தையும் கூட்டி வந்தாயிற்று.  டெட்ராய்ட் நகருக்கு உடனே விரையாமல் ஹாய்யாக ஹவாயில் விடுமுறையிலிருக்கும் அதிபர் ஒபாமாவுக்கும் ஒரு திருச்சாத்து சாத்தியாயிற்று.

தீவிரவாதியை எவன் விமானத்தில் விட்டான் என்பது யாருக்கும் புரியவில்லை.  அமெரிக்காவை நோக்கிப் பறந்து வரும் விமானங்களில் அண்மையில் பயணம் செய்பவர்களுக்கும் இது புதிர்தான்.  ஹாங் காங், சிங்கப்பூர், குவாலா லும்பூர், லண்டன், ஃபிரான்க்ஃபர்ட் என்று எந்த விமான நிலையமாக இருக்கட்டும், அமெரிக்கா நோக்கிச் செல்லும் பயணிகளுக்குத் தரும் சிறப்பு மரியாதையே தனிதான்.  ஒரு ஈ, கொசு கூடத் தப்பித்தவறி ஒரு சொட்டுத் தண்ணீரை விமானத்திற்குள் கொண்டு வர முடியாது.  குழந்தைகள் உணவுக்குப்பிகளைக் கூடப் பரிவில்லாமல் குப்பைக்கூடையில் எறிவார்கள்.  காலணிகளைக் கழற்றி விட வேண்டும்.  மேலே, கீழே, எல்லாம் தட்டிப் பார்த்து எலும்புகள் எத்தனை இருக்கின்றன என்று எண்ணிப் பார்த்துதான் வண்டியேற அனுமதிப்பார்கள்.

இத்தனையையும் மீறி, வெடி மருந்து, குழலூசி எல்லாவற்றையும் உள்ளாடையில் திணித்து எடுத்து வர விட்டிருப்பது வியப்பளிக்கிறது.  ஆனால், என்னென்ன கொண்டு வந்தான், எப்படிக் கொண்டு வந்தான், வெடித்தால் என்னாவாயிருக்கும், ஏன் வெடிப்பு வேலை செய்யவில்லை என்று விவரமாய் அலசி, தீவிரவாதிகளுக்குப் பாடம் கற்பிக்க வேண்டுமா என்ன?

யாரோ பலர் எங்கெங்கேயோ கோட்டை விட்டுவிட்டார்கள் என்று தெரிகிறது.  தந்தையே மகனைக் காட்டிக் கொடுத்த பின்பும், பட்டப் படிப்பளித்த இங்கிலாந்தே நுழைமதியை மறுத்த பின்னரும், அப்படிப்பட்ட ஓர் ஆள் அமெரிக்கா செல்லும் விமானத்தில் ஏற முடிவது யாரோ குறட்டை விட்டுக் கொண்டிருப்பதன் அடையாளம்.

இத்தனை ஆயிரம் பொதுமக்களை இத்தனை நாள் சித்திரவதைப் பரிசோதனை செய்த பின்பும், குழலூசியையும் வெடிமருந்தையும் கண்டுபிடிக்க முடியாமல் போனது இப்படிப்பட்ட சோதனைகளின் குறைகளைக் காட்டுகிறது.  தாக்குபவன் வேலை எளியது.  அவன் ஒரு ஓட்டையைத்தான் கண்டு பிடிக்க வேண்டும்.  தடுப்பவர்கள் வேலை கடினமானது.  எங்கெங்கெல்லாம் ஓட்டை இருக்கிறது என்று பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.

இதற்குத் தீர்வுதான் என்ன?

அமெரிக்கர்கள், மேலும் சித்திரவதைப் படுத்தும் நுட்ப முறைகளைக் கண்டு பிடிப்பார்கள். தீவிரவாதியைத் தூண்டிய யேமன் நாட்டை ஒரு மொத்து மொத்துவார்கள்.  இவற்றால் மட்டும் தாக்குதல்களைத் தவிர்க்க முடியுமா?

தீவிரவாதிகள் குளவிகள் போல.  கொட்டுவதை நிறுத்த மாட்டார்கள்.

குளவிகளைக் கூட்டில் நிம்மதியாக இருக்க விட்டால், அவை ஏன் கொட்டப் போகின்றன?

குளவிக்கூட்டைக் கலைப்பதை நிறுத்த வேண்டும்.  செய்ய முடியுமா?

குளவிகளும், தங்கள் பழைய கூடுகள் மட்டுமல்லாமல், புதிய மரங்களிலும் கூடு கட்ட முயலும்.  அதைத் தடுக்க முடியுமா?

அதெல்லாம் வேண்டாம், குளவிகளைக் கூட்டோடு அழிக்க வேண்டும் என்று ஒரு கும்பல் கிளம்பியிருக்கிறது.

குளவிகள் மட்டுமல்லாமல், கூடவே அப்பாவி மக்களும் அழியலாம் என்பதைப் பற்றி இந்தக் கும்பல் கவலைப்படாது.

"கண்ணுக்குக் கண்" என்ற ப்ழிவாங்கும் உணர்வினால் உலகமே பார்வையற்றுப் போகும் என்ற காந்தியாரின் பொன்மொழி நினைவுக்கு வருகிறது.

5 comments:

Ilakkuvanar maraimalai said...

வழக்கம்போலவே சிந்தனையைத் தூண்டும் வலைப்பதிவு.உலக அமைதியையும் உலகமக்கள் நலனையும் கருத்தில் கொண்டு எழுதுகிறீர்கள்.வள்ளலாரைப் போல் உங்கள் கவலை அருள்மிக்க ஒன்று.ஆனால் நடப்பு அரசியல் என்ற ஒன்று துன்பமிக்கதாக உள்ளது.

Ilakkuvanar maraimalai said...

இந்திராகாந்தியின் படுகொலக்குப் பின்னர் தில்லி கண்டோன்மெந்த் பகுதியில் பழிவாங்கும் வகையில் ஏழாயிரம் சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.ஆனால் அதன்பின் எந்தச் சீக்கியரும் பயங்கரவாடியாக இந்தியாவில் வெறுத்தொதுக்கப்படவில்லை.

Ilakkuvanar maraimalai said...

ஆனால் இராசீவு காந்தி படுகொலைக்குப் பின்னர் நடந்தது என்ன?
படுகொலைகளைத் துப்புத் துலக்கிக் குற்றவாளிக்குத் தண்டனை கொடுப்பது
காவல்துறையின் கடமை.ஆனால் ஓர் இனத்தையே பழிவாங்க நினைக்கலாமா?
இதற்குமேல் என்னால் எழுதமுடியவில்லை.கண்ணீர் தடை செய்கிறது.

மணி மு. மணிவண்ணன் said...

பேரா. மறைமலை அவர்களுக்கு,

தங்கள் பின்னூட்டங்கள் ஊக்கமளிப்பவை. சீக்கியர், தமிழர் போராட்டங்களைப் பற்றிய கருத்துகளைத் தனியே பதிவு செய்ய வேண்டும்.

இன்றைய உலகில், பொதுமக்களைத் தாக்கும் தீவிரவாத இயக்கங்கள் அரசுகளின் கடும் எதிர்ப்பையும், மக்களின் வெறுப்பையும்தான் ஈட்டிக்கொள்கின்றன.

தொழில்நுட்ப முன்னேற்றத்தால் மட்டும் தீவிரவாதிகளைத் தடுக்க முடியாது என்பது பாதுகாப்பு நிபுணர்களின் கருத்து (பார்க்க: http://news.yahoo.com/s/csm/20091229/ts_csm/271253 )

அன்புடன்,

மணி

மணி மு. மணிவண்ணன் said...

விமான நிலையங்களில் பாதுகாப்புச் சோதனைகளைப் பற்றிப் பாதுகாப்பு வல்லுநர்கள் பலர் முன்னரே கருத்து தெரிவித்திருக்கின்றனர். புரூஸ் ஸ்நேயரின் "பாதுகாப்பு நாடகம்" கருத்து முக்கியமானது. (http://www.schneier.com/blog/archives/2009/11/beyond_security.html, http://www.schneier.com/blog/archives/2007/01/in_praise_of_se.html )

அட்லாண்டிக் திங்களிதழும் இது பற்றிச் சென்ற ஆண்டு விவரமாக எழுதியிருந்தது. ( http://www.theatlantic.com/doc/200811/airport-security )

புத்தாண்டு நாளன்று, நியூ யார்க் டைம்ஸ் பத்தியாளர் டேவிட் புரூக்ஸ் அமெரிக்காவில் வானமே இடிந்து விட்டது போலப் பதறுபவர்களைக் கிண்டலடித்திருக்கிறார்:

http://www.nytimes.com/2010/01/01/opinion/01brooks.html?em

இந்தத் தொந்தரவைத் தவிர்ப்பதற்காகவே விமானத்தில் பறப்பதைப் பலர் குறைத்து விடுவார்கள்.

-மணி