வியாழன், ஆகஸ்ட் 02, 2018

இறைவன் இருக்கின்றானா? மனிதன் கேட்கிறான்!

நண்பர் முனைவர் நாராயணன் கண்ணன் (Narayanan Kannan) சுவிட்சர்லாந்தில் வாழும் அவருடைய ஈழத்தமிழ் நண்பர் சதீசுடன் சுவிஸ் மலை வெளியில் சுற்றிய போது அலசிய இரண்டு கேள்விகளைப் பற்றி  முகநூலில்  பதிவிட்டிருந்தார். அந்தக் கேள்விகள்:
  1. கடவுள் உண்டா? இல்லையா?
  2. ஆன்மா உண்டா? இல்லையா?
அவரது நண்பர் ஆழச் சிந்தித்து இரண்டிற்கும் இல்லை என்ற முடிவிற்கு வந்திருக்கிறார். அறிவியல் பேராசிரியரான கண்ணன் ஏன் இதில் அவரோடு முரண்படுகிறார் என்பதைப் பற்றிய அலசல் அது.

முனைவர் கண்ணன் நம்மாழ்வார் பாசுரமொன்றை மேற்கோள் காட்டினார்:
உளனெனி லுளனவ னுருவமிவ் வுருவுகள்
உளனல னெனிலவன் அருவமிவ் வருவுகள்
உளனென விலனென விவைகுண முடைமையில்
உளனிரு தகைமையொ டொழிவிலன் பரந்தே.
"அவன் உளன் எனில் காட்சிப்படுத்தக்கூடிய வடிவில் ஸ்தூலமான பிரபஞ்சமாகக் காட்சியளிக்கிறான். அவன் இலன் என்று சொன்னால் அதுவும் சரியே. ஏனெனில் இந்த ஸ்தூலப் பிரபஞ்சத்தின் பின்புலமான உருவற்ற தளமாக அவனே இருக்கிறான். எனவே அவன் உளன்! அவன் இலன் எனும் இரண்டு தன்மைகளையும் கொண்டுள்ளவனாக இருக்கிறான்" என்று பொருள் கொள்கிறார் கண்ணன்.

கிட்டத்தட்ட இதே பொருளில் கம்பனும் யுத்தகாண்டத்தில் இறைவாழ்த்தாகப் பாடியிருப்பார்.
ஒன்றே யென்னின் ஒன்றேயாம்
.... பலவென் றுரைக்கிற் பலவேயாம்
அன்றே யென்னின் அன்றேயாம்
.... ஆமே யென்னின் ஆமேயாம்
இன்றே யென்னின் இன்றேயாம்
.... உளதென் றுரைக்கின் உளதேயாம்
நன்றே நம்பி குடிவாழ்க்கை
.... நமக்கிங் கென்னோ பிழைப்பம்மா!
அதையொட்டிக் கண்ணதாசன் ஒரு திரைப்படப் பாடலில் நம் காலத்துக்கேற்ற இன்னும் எளிய தமிழில் இப்படி வடித்திருந்தார்:
தெய்வம் என்றால் அது தெய்வம் - வெறும்
சிலையென்றால் அது சிலைதான்
உண்டென்றால் அது உண்டு
இல்லையென்றால் அது இல்லை
இல்லையென்றால் அது இல்லை
அவ்வளவுதான்.

இந்த இருத்தலியலை இன்னும் சிறப்பாக இன்னொரு திரைப்படப் பாடலில் செதுக்கியிருப்பார் கண்ணதாசன்.

கடவுளின் இருப்பைக் கேள்வி கேட்கும் ஆணின் குரலில்
இறைவன் இருக்கின்றானா?
இறைவன் இருக்கின்றானா? மனிதன் கேட்கிறான் - அவன்
இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான்? எங்கே வாழ்கிறான்?
நான் ஆத்திகனானேன் அவன் அகப்படவில்லை
நான் நாத்திகனானேன் அவன் பயப்படவில்லை
என்றிருப்பார். அதற்குப் பெண்குரலில்
மனிதன் இருக்கின்றானா?
மனிதன் இருக்கின்றானா? இறைவன் கேட்கிறான் - அவன்
இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான்? எங்கே வாழ்கிறான்?
நான் அன்பு காட்டினேன் அவன் ஆட்கொள்ளவில்லை
இந்தத் துன்பம் தீர்க்கவும் அவன் துணை வரவில்லை
என்று மறுமொழி வரும்.

ஆணின் குரலில் தொடர்ந்து வாழ்க்கையின் முரண்களையும் அபத்தங்களையும் பட்டியலிடுவார்:
பார்ப்பவன் குருடனடி படிப்பவன் மூடனடி
உள்ளதை சொல்பவனே உலகத்தில் பித்தனடி
நீரோ கொதிக்குதடி நெருப்போ குளிருதடி
வெண்மையைக் கருமை என்று கண்ணாடி காட்டுதடி
பெண்ணோ, மனிதனான ஆணின் முரண்பாடுகளைப் பட்டியலிடுவார்:
ஒன்றையே நினைத்திருந்தும் ஒன்றாக வாழ்ந்திருந்தும்
பெண்ணாகப் பிறந்தவரை கண்ணாக யார் நினைத்தார்?
இருந்தால் இருந்த இடம் இல்லையேல் மறந்து விடும்
இவர்தான் மனிதர் என்றால் இயற்கையும் நின்றுவிடும்
முடிவாக ஆணின் குரலில் "கடவுளை மற, மனிதனை நினை" என்ற பெரியாரின் முழக்கத்தை எதிரொலிப்பார்.
சந்தேகம் பிறந்து விட்டால் சத்தியமும் பலிப்பதில்லை
சத்தியத்தைக் காப்பவனும் சாட்சி சொல்ல வருவதில்லை
வழக்கும் முடியவில்லை மனிதரின் தீர்ப்பும் இல்லை
மனிதனை மறந்து விட்டு வாழ்பவன் இறைவன் இல்லை
உலகின் மிகப்பெரும் அறிஞர்கள், தத்துவ ஞானிகள், அறிவியலார் இந்தக் கேள்விகளை அலசி ஆராய்ந்திருக்கிறார்கள். ஆனால் கவிஞர்கள் அந்தத் தத்துவங்களைப் பிழிந்தெடுத்து அவற்றின் சாரத்தை நமக்கு ஊட்டி விடுகிறார்கள்.

கடவுளை நம் தாய் தந்தையர் போல் நினைத்து விட்டால் அணுக முடியும். ஆனால், இந்த உலகைவிட, சூரியனை விட, இந்தப் பேரண்டத்தை விடப் பெரிய, அவற்றைப் படைக்கும் ஆற்றல் கொண்ட ஒன்றை நம்மால் கற்பனையிலும் எட்ட முடியாது. நமக்குள்ளே வாழும் கண்ணுக்குத் தெரியாத உயிரினங்களை இப்போதுதான் பார்க்கும் வல்லமையை நாம் இப்போதுதான் எட்டியிருக்கிறோம். அவற்றுக்கு நாம் இருப்பது தெரியுமா? அவை நம்மை வணங்குகின்றனவா? அப்படி வணங்கினால் நமக்குத் தெரியுமா?

இந்தப் பேரண்டத்தைப் பொறுத்த மட்டில் நம் சூரியக்குடும்பமே ஓர் அற்பமான துகள். அதில் நம் உலகமும் நாமும் அற்பத்திலும் அற்பமானவை. பேரண்டத்தையே படைக்கும் வல்லமை பெற்ற ஒரு பேராற்றலுக்கு நம்மைப் பற்றி அக்கறை இருக்கும் என்று நாம் எண்ணுவதே பேராசை. அந்தப் பேராற்றல் நம்மைத் தாய்ப்பூனை போல் அள்ளிக் கொண்டு போகும் என்று நினைப்பது கடவுளைத் தாய் போல் கருதும் ஒரு நல்ல கனவு. அதே நேரத்தில் அந்தக் கடவுளைக் குரங்குக் குட்டி போல் நாம் பற்றிக் கொண்டால் நம் தந்தை போல் அது நம்மைக் காப்பாற்றி விடும் என்பதும் இன்னொரு நல்ல கனவு. உண்மையில் அந்தப் பேராற்றலுக்கு, கடவுளுக்கு நம்மைப் பற்றி எந்த அக்கறை இருந்தாலும் அதுவே பெருங்கருணைதான்.

உண்மையில் அப்படிப்பட்ட பேராற்றலிடம் நாம் என்னதான் வேண்ட முடியும்? அப்படிப்பட்ட வேண்டுதல்களுக்குப் பயனிருந்தாலும் இல்லாவிட்டாலும் கடலினும், மலையினும், ஞாலத்தினும் மாணப் பெரிய பேராற்றலிடம் என்ன பேரம் பேச முடியும்? நம் தேங்காய்க்கும் வாழைப்பழத்துக்குமா அந்தப் பேராற்றல் காத்துக் கொண்டிருக்கும்?
கடவுள் பற்றிச் சில ஆண்டுகளுக்கு முன்பு நான் புழைக்கடைப் பக்கத்தில் கிறுக்கியது நினைவுக்கு வருகிறது. ( https://kural.blogspot.com/2013/02/blog-post_9.html ) இந்தப் பேரண்டத்தின் அலகிலா விளையாட்டில் நாமும் ஒரு சிறு துகள். கம்பனின் சொல்லில்:
"உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட்டு உடையான் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே "
அலகிலா விளையாட்டு. அவ்வளவே. தில்லைக் கூத்தர் ஏன் ஆடுகிறார்? இந்த அண்டங்களும், அணுக்குள் இருக்கும் துகள்களும் ஏன் ஆடிக் கொண்டிருக்கின்றன. அலகிலா விளையாட்டு. ஆக்கலும் அழித்தலும் இந்த விளையாட்டில் ஒரு பங்கு. அவ்வளவே.

இந்தப் பேரண்டமும், அதற்கும் வெளியில் இருக்கும் பற்பலப் பேரண்டங்களும் நம் கற்பனைக்கும் எட்டாத பெருவெளிகள்.

அதைக் கடவுள் என்று சொல்லலாமா?

ஏன் சொல்லக்கூடாது?

ஆனால் அந்தக் கடவுள் உண்டி குலுக்காது. ஊர்வலம் வராது. தேங்காய், பழத்தை எதிர்பார்க்காது. நம் வேண்டுதல்களைக் கேட்கும் என்றும் எதிர்பார்க்கக்கூடாது.  சாமியார்கள், பூசாரிகள், முல்லாக்கள், பாதிரிகள் எல்லோரும் அவரவர் பார்வையில் ஏதோ செய்கிறதைப் பற்றி அதற்குக் கவலையிருக்காது. நமது அணுக்குண்டுகள் குழந்தைகளைக் கொல்வதும் அதற்கு அலகிலா விளையாட்டுதான். நிலை பெறுத்தலும் நீக்கலும் அதன் தன்மைக்குள் அடங்கி விடும். இதனோடு என்ன பேரம் பேச முடியும்?

கடவுள் இருந்தாலும் இல்லையென்றாலும் அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்ற புத்தரின் கொள்கை நினைவுக்கு வருகிறது. வலியோர் எளியோரை வதை செய்து உண்ணும் உலகில் மனிதர்கள் மட்டும் ஓரளவுக்கு ஒரு மாற்றை உருவாக்க முயன்று அதில் வெற்றியும் கண்டிருக்கிறோம். அந்த வெற்றிக்குக் கடவுள் என்ற கற்பனை உதவியிருக்கிறது என்றும் சொல்லலாம்.

ஆன்மா என்ற கற்பனை கடவுள் என்ற கற்பனைக்கும் மேலாக மனிதனைப் பண்படுத்தியிருக்கிறது என்று நினைக்கிறேன். அடுத்த பிறவியில் உனக்கு வாழைத்தோப்பையே தருகிறேன் என்றால் எந்தக் குரங்கும் ஏற்றுக் கொள்ளாது.  ஆனால் மனிதர்களில் பலர் மறுபிறவியில் ஊழ்வினை வந்து துன்புறுத்தக்கூடாது என்று பேரம் பேசுகிறார்கள். ஆன்மா என்ற கற்பிதம் அதற்கு உதவியிருக்கிறது.
 
கடவுள் இல்லை, ஆன்மா இல்லை என்றெண்ணிப் பிறருக்கு எப்போதும் நன்மை செய்வோம். கடவுள் இருக்கிறார், ஆன்மா இருக்கிறது என்றெண்ணிப் பிறருக்குத் தீங்கிழைக்காமல் இருப்போம்.

இன்றே யென்னின் இன்றேயாம்
.... உளதென் றுரைக்கின் உளதேயாம்
நன்றே நம்பி குடிவாழ்க்கை
.... நமக்கிங் கென்னோ பிழைப்பம்மா!

https://www.youtube.com/watch?v=Qsf4NJ5JNH4