செவ்வாய், மே 13, 2014

அறிவியலைப் பற்றி அனைவரும் அறிந்திருக்க வேண்டிய பத்து செய்திகள்

10. இயற்கை நடப்புகளை அறிவியல் பகுத்தறிவு ஆய்வின் மூலமாகவும், ஏரண (தர்க்க/லாஜிக்) அலசல்கள் மூலமாகவும் மட்டுமே வெற்றிகரமாக விளக்குகிறது. மூடநம்பிக்கைகளையோ, மாய மந்திரங்களையோ அது சார்ந்திருக்கவில்லை.

9. அறிவியலில் கருத்து வேறுபாடுகள் எழும்போது, இறுதி முடிவுகள் ஏதாவது ஒரு வல்லுநரின் கருத்தையோ, பொதுவுணர்வையோ பொருத்து அமையாமல், சோதனைகளின் மூலம் வரும் தரவுகள் மற்றும் அறிவியல் கோட்பாடுகளின் அடிப்படையில் மட்டுமே அமையும்.

8. அறிவியல் கோட்பாடுகள் ஊகங்களல்ல. அவை இயற்கையில் நாம் ஏற்கனவே கண்டுபிடித்துள்ள தரவுச்செய்திகளை விளக்க வல்ல கறாரான ஏரண முயற்சிகள் மட்டுமல்லாமல் இனிமேலும் நாம்  கண்டுபிடிக்கப் போகும் தரவுச் செய்திகளையும் தொலைநோக்குடன் முன்னறிவிக்கக்கூடியவை.

7. ஒரு கோட்பாட்டின் முன்னறிவிப்புகள் உறுதியானபின்னால், அது அறிவியலின் இன்றியமையாத கருவியாகி விடுகிறது என்றாலும் நல்ல கோட்பாடுகளும் வருங்காலத்தில் அவற்றை விடப் பரந்துபட்ட, நுணுக்கமான கோட்பாடுகளுக்கு வழி விட வேண்டிவரலாம்.

6. இந்தப் பேரண்டம் பரந்து விரிந்தது; மிகத் தொன்மையானது; நம் சூரியன் நமக்கு அருகிலிருக்கும் (பால்வெளிப்பாதை) நட்சத்திர மண்டலத்திலுள்ள கோடிக்கணக்கான நட்சத்திரங்களில் ஒன்று; இதே போலப் பல கோடி நட்சத்திர மண்டலங்கள் பேரண்ட வெளியின் மூலைமுடுக்கிலெல்லாம் பரவியிருக்கின்றன.

5. உயிரினங்கள் இந்தப் பல கோடி ஆண்டுகளில் மாறிக் கொண்டே வந்திருக்கின்றன. எளிமையான முன்னோடிகளிலிருந்து தொடங்க்ப் படிப்படியாக வளர்ந்து விரிந்திருக்கும் இந்த உயிரினங்களின் ஒரு கிளைதான் மனித உயிர்கள். இவை அனைத்துமே ஒரே மாதிரியான மூலக்கூறு எந்திரங்களின் இயக்கத்தால் வாழும் உயிர்கள்தாம்.

4. ஐன்ஸ்டைன் காட்டியது போல நாம் அன்றாட வாழ்வில் காணும் நேரமும் வெளியும் எல்லா வேகங்களுக்கும் எல்லா வெளிப்புலங்களுக்கும் பொருந்துவதில்லை.

3. அணுவெளியின் குற்றுலகமும், அதையும் விடச் சிறிய புலங்களும், குற்றளவை (குவாண்டம்) விதிகளைப் பின்பற்றி இயங்குபவை; இவை பொதுவுணர்வில் நாம் அறிந்தவைக்கு முரணானவை; செயலும் விளைவுகளும், நடப்பு என்று நாம் அறிவதுவும் அந்த அளவில் தெளிவில்லாமல் இருப்பவை.

2. ஒரு பொருள் இயங்குவது பெரும்பாலும் அது தன்னோடு பிணைந்திருக்கும் ஏனைய பொருள்களின் இணைப்புகள், செயல்பாடுகளைப் பொருத்து அமையும்; மூளையின் உயிரணுப் பிணைப்புகள், உடலின் மற்ற உறுப்புகள் முதல் சூழல் பிணையங்கள், பொருளாதார அமைப்புகள் மற்றும் மனிதர்களின் உறவாடல்கள், சமூக அமைப்புகள் என்று எல்லாவற்றுக்குமே இந்த விதி பொருந்தும்.

1. அறிவியலில் வெகுசிலவே திட்டவட்டமாக உறுதியானவை; ஆனால் பெரும்பாலானவை பெரிதும் நேரிடக் கூடியவை; எது உண்மை என்று அறிய இத்தகைய நேர்ச்சிகளைத் தக்க முறையில் அளவிட வேண்டும்; எடுக்கக்கூடிய முடிவுகளும் நடக்கும் என்று கருதக்கூடிய செயல்களும் இத்தகைய அளவீடுகளைப் பொருத்தே அமையும்.

ஆங்கில மூலம்: