சனி, டிசம்பர் 18, 2021

ஆங்கிலச் சொற்களை அப்படியே எடுத்துக் கொள்வது தமிழுக்கு வளம் தராதா?

தமிழில் கலைச்சொற்கள் படைப்பது பற்றி முகநூலில் சிறு சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. இது ஒன்றும் தமிழுக்குப் புதிதல்ல. உலகத்தின் ஆட்சிமொழியாக விளங்கும் ஆங்கிலம் பிறமொழிகளிலிருந்து சொற்களைக் கடனாகப் பெற்றதால் அது என்ன குறைந்துவிட்டதா என்று கேட்கிறார்கள். ஆங்கிலத்தைப் போல் தமிழும் இரவற்சொற்களை எடுத்தாளுவதால் மொழி மேலும் வளம்பெறுமேயல்லாது தொய்வடையாது என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள். இந்த வாதமும் தமிழுக்குப் புதிதல்ல.

தமிழ் காலந்தோறும் பிறமொழிச் சொற்களை தன் மரபுக்கேற்பவும் மரபை விட்டு விலகியும் இரவலாக எடுத்தாண்டு வந்திருக்கிறது. தமிழில் இருக்கும் எண்ணற்ற பிறமொழிச் சொற்கள் இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. பிராகிருதச் சொற்களை முதலில் இரவல் வாங்கிய தமிழ், காலப்போக்கில் சமக்கிருதம், பாரசீகம், உருது, மட்டுமல்லாமல் ஐரோப்பிய மொழிச் சொற்களையும் இரவலாகப் பெற்றிருக்கிறது. தமிழில் இருக்கும் ஆட்சிமொழிச் சொற்கள் பெரும்பாலும் உருது மொழியிலும், ஆங்கிலத்திலும் இருப்பதற்குக் காரணம் நாம் பிறமொழி பேசியவர்களின் ஆட்சியின் கீழ் இருந்ததால்தான்.

இந்திய விடுதலைப் போராட்டத்தின்போது இப்படி ஆங்கிலச் சொற்களை இரவலாகப் பெறுவதை விலக்கி சமக்கிருதச் சொற்களில் கலைச்சொல்லாக்கம் செய்ய முனைந்தார்கள். 1960கள் வரைக்கும் கூட தமிழ்நாட்டின் பாடநூல்களில் வடமொழிக் கலைச்சொற்கள் ஆளுமை செலுத்தின.

எடுத்துக் காட்டாகப் பின்வரும் சொற்கள் 1944ல் பாடநூல்களில் இருந்திருக்கின்றன, ஆனால் இவை இன்றும் நம்மில் பெரும்பாலோர்க்குப் புரியாதவை:

சோக்‌ஷிகள், க்‌ஷாரம், ஆஹார சமீகரணம், யோகவாஹி, சஞ்சாயகி, வாஹகம், ஹரிதகிகாமலம், அப்ஜ இரத்தகிகாமலம், பாக்கியஜனக அனிஷ்கர்ஷம், சங்கோஜயத்வம், பிரதிலோம, விபாஜியத்துவம், பிரதி மாகேந்திரம், அவினா சத்வம், அவிபேத்யம், சமாந்திர சதுர்புஜம், அதிருசிய ரேகை, நிஷ்காசினி, வித்யுத்லகானிகம், வக்ர பாவித்வம், உஷத்காலம், ஆபாஸபிம்பம், ஜ்யாமிதி, கிருஷித் தொழில்

இதைப் பற்றி விரிவாகவே என்னுடைய புழைக்கடைப்பக்கம் என்ற வலைப்பூவில் https://kural.blogspot.com/2011/01/1944.html எழுதியிருக்கிறேன்.

பெரும்பாவலர் பாரதியாரே மெம்பர் என்ற ஆங்கிலச்சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லைப் படைக்கத் தடுமாறியிருக்கிறார். ஒருவழியாக அங்கத்தினர் என்ற வடசொல்லாட்சி நிலைபெற்றது. தனித்தமிழ் இயக்கம் அதை உறுப்பினர் என்று மாற்றியது. இல்லையேல் இன்றும் நாம் மெம்பர், பிரசிடென்ட், மினிஸ்டர் என்றுதான் சொல்லிக் கொண்டிருப்போம். வேட்பாளர் என்ற அழகான சொல்லால் கேண்டிடேட், அபேக்‌ஷகர் போன்ற பல்லை உடைக்கும் இரவற்சொற்கள் வழக்கொழிந்தன.

இரவற்சொற்களை நாம் அடிபட்டுக் கிடக்கும்போது போட்டுக்கொள்ளும் இடைக்காலக் கட்டு போலப் புழங்குவதில் தவறில்லை. "வயர் ரீவைண்டிங் செய்வது எப்படி" என்ற நூல் பலருக்கு வேலை வாய்ப்பை அளித்தது. அந்த நூலைத் தனித்தமிழில் எழுதியிருந்தால் அந்தக் காலத்தில் அவர்கள் தடுமாறியிருப்பார்கள். ஆனால், என்றென்றும் இரவற்சொற்களையே எடுத்தாளுவது மொழியின் வளத்தைப் பன்மடங்கு சிதைக்கும் என்பது எனக்குத் தெள்ளத்தெளிவாகவே புரிகிறது. இது ஏன் அறிஞர்களுக்கு விளங்கவில்லை என்று எனக்குப் புரியவில்லை.

ஒரு கலைச்சொல்லைத் தமிழில் ஆக்கும்போது அந்தக் கலைச்சொல்லின் பின்னணியில் இருக்கும் அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவையும் தமிழில் விளக்கக்கூடிய அளவுக்கு மொழி வளம் பெறுகிறது. தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் நுட்பமான எண்ணங்களையும் ஆய்வையும் தம் தாய்மொழியிலேயே மேற்கொள்ள இது வழிவகை செய்கிறது. அப்படிச் செய்வதால் மொழி மட்டுமல்ல, மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கும் மக்களும் வளம் பெறுகிறோம்.

ஆங்கிலம் பன்னெடுங்காலம் பின் தங்கிய மொழியாகத் தாழ்ந்திருந்தது. அதனால், முன்னணி அறிவியல், தொழில்நுட்பக் கருத்துகள் மட்டுமல்ல, தத்துவங்களும் கூட கிரேக்க, இலத்தீன மொழிகளிலும் பிரான்சிய மொழியிலும் கற்பிக்கப்பட்டன. ஆங்கிலம் தன் வளர்ச்சிக்கு வேறு வழியில்லாமல் தம் மொழிக்குத் தொடர்பற்ற கிரேக்க, இலத்தீன, பிரான்சியச் சொற்களை எடுத்தாள வேண்டியிருந்தது. ஆங்கிலம் உலகத்தின் ஆட்சிமொழியாக மிளிர்ந்ததற்கு அந்த இரவல் மொழிகள் காரணமல்ல. அது அவர்கள் குடியேற்றப் பேரரசின் வெற்றியின் பக்க விளைவு. இதே போல் ஆங்கிலச் சொற்களை இரவலாக எடுத்துக் கொண்ட பலமொழிகள் கலவை மொழிகளாகச் சிதைந்தன. சொந்தமாக புதிய கருத்துகளை எழுதக்கூடிய உயர்மொழியாக மாறவில்லை. ஆங்கிலமும் கூடத் தற்காலத்தில்தான் புதிய கலைச்சொற்களைத் தன்னிடமிருந்தே படைத்துக் கொள்கிறது.

1980 களில் மிக்கையில் கொர்பச்செவ் சோவியத் ஒன்றியத்தின் தலைவரானபோது அவரது பேச்சுகளிலிருந்து இரண்டு உருசியச் சொற்கள் அமெரிக்க ஆங்கிலத்துக்குப் பரவின.

Perestroika (/ˌpɛrəˈstrɔɪkə/; Russian: перестройка),
glasnost (meaning "openness")

ஓரிரு ஆண்டுகளில் பெருநிறுவனங்களிலும் அரசியல் களங்களிலும் அந்தச் சொற்கள் ஆளுமை செலுத்தின. கொர்பச்செவ்வின் வீழ்ச்சிக்குப் பிறகு அந்தச் சொற்களும் காலவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. புதிய நுட்பங்களை விளக்கும் கருத்துகளை இன்றைய ஆங்கிலம் பிறமொழிச்சொற்களில் நேரடியாக எடுத்துக் கொள்வதைக் கூடிய மட்டிலும் தவிர்த்துவிடுகிறது. அப்படிச் செய்தாலும் அது வெகு விரைவாகவே ஆங்கிலச் சொல்லுக்கு மாறிவிடுகிறது. தோசையையும், கட்டுமரத்தையும் Dosa, Catamaran என்றழைப்பது வேறு. இணையம், கணினி, வலைத்தளம், மின்னஞ்சல், தொலைக்காட்சி, தொலைபேசி, திறன்பேசி போன்ற சொற்களை என்றென்றும் ஆங்கிலத்திலேயே புழங்குவது வேறு. அப்படிச் செய்வது தமிழையும் தமிழர்களையும் என்றென்றும் அடிமைகளாக மாற்றிவிடும். இது பாரதியாருக்குத் தெரிந்திருந்தது. தற்காலத் தமிழறிஞர்களுக்குத் தெரியவில்லை.

தமிழ் இணையத்தின் தொடக்க காலத்தில் இணையம், கணினி, வலைத்தளம், மின்னஞ்சல் போன்ற கலைச்சொற்களை நாங்களே படைத்துப் பரப்பிக் கொண்டிருந்தோம். அப்போது இதெல்லாம் வேண்டாத வேலை என்று எழுத்தாளர் சுஜாதா எங்களைக் கிண்டல் செய்து கொண்டிருந்தார். ஆனால் அவரே பிற்காலத்தில் இந்தக் கலைச்சொற்களைப் பரப்புவதற்கு ஒரு நல்ல வழியைக் கண்டுபிடித்துச் சொன்னார். முதலில் இன்டர்நெட் (இணையம்), கம்ப்யூட்டர் (கணினி), இமெயில் (மின்னஞ்சல்) என்று ஆங்கில இரவற்சொல்லுக்குப் பிறகு தமிழ்ச் சொல்லைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும், பின்னர் இணையம் (இன்டர்நெட்), கணினி (கம்ப்யூட்டர்), மின்னஞ்சல் (இமெயில்) என்று முதலில் தமிழ்ச்சொல்லையும் அடைப்புக்குறிக்குள் ஆங்கிலச் சொல்லையும் போட வேண்டும், கொஞ்ச நாள் கழித்து, அடைப்புக்குறிக்குள் இருக்கும் ஆங்கிலச் சொல்லைக் கழற்றிவிட வேண்டும் என்றார். அப்படித்தான், தமிழ் இணையத்தின் முன்னோடிகளுக்கு மட்டும் தெரிந்திருந்த பல கலைச்சொற்களைக் கோடிக்கணக்கான தமிழர்களுக்குக் கொண்டு சேர்த்தார் அவர்.


இன்று சுஜாதா இல்லை. ஆனால், நல்ல வேளை கவிஞர் மகுடேசுவரன் இருக்கிறார். அவர் நல்ல பல கலைச்சொற்களைப் படைப்பது மட்டுமல்லாமல் அவற்றைத் தம் கோடிக்கணக்கான வாசகர்களுக்குக் கொண்டு சேர்க்கிறார். கலைச்சொல்லாக்கம் எவ்வளவு முதன்மையானதோ அதைக் காட்டிலும் மேலானது அவற்றை மக்கள் புழங்கப் பரப்புவது. அத்தகைய மாபெரும் தொண்டாற்றும் கவிஞர் மகுடேசுவரனைப் பாராட்டச் சொற்களே இல்லை! வாழிய அவர் தொண்டு.


பார்க்க:

கலைச்சொல்லாக்கம் - 1944ல் ஒரு கருத்தாடல்
ஞாயிறு, ஜனவரி 16, 2011
மணி மு. மணிவண்ணன்
புழைக்கடைப் பக்கம்
ஒரு புலம்பெயர்ந்த அமெரிக்கத் தமிழனின் எண்ணங்கள்

https://kural.blogspot.com/2011/01/1944.html