ஞாயிறு, ஜனவரி 16, 2011

கலைச்சொல்லாக்கம் - 1944ல் ஒரு கருத்தாடல்

தமிழில் கலைச்சொற்கள் படைப்பது பற்றிய காரசாரமான கருத்து வேற்றுமைகளைக் கடந்த பல ஆண்டுகளாகப் பார்த்து வந்திருக்கிறேன்.  கலைச்சொற்களைப் படைக்கும்போது தனித்தமிழ்ச் சொற்களைப் படைக்கலாமா கூடாதா என்பதில் உரத்த கருத்தாடல்கள் இன்னும் தொடர்கின்றன.  விஞ்ஞானம் என்றுதான் எழுத வேண்டுமா அல்லது அறிவியல் என்று எழுதலாமா என்று கனடாவின் ஜெயபாரதன் அவர்களும் பேரா. செல்வகுமார் அவர்களும் அடிக்கடி தமிழ்மன்றம் மடலாடற்குழுவில் மோதிக் கொள்வார்கள்.

தனித்தமிழில் எழுத வேண்டும் என்போர் தாலிபான்கள் என்றே குற்றம் சாட்டுவார் வன்பாக்கம் விஜயராகவன்.  அதை இப்போது ஜெயபாரதன் அவர்களும் வழிமொழிகிறார்.

தனித்தமிழில் கலைச்சொல் படைப்பது பற்றி(ப்) பாரதியாரும் எழுதியிருக்கிறார். மெம்பர் என்ற சொல்லுக்கு இணையான தனித்தமிழ்ச் சொல்லைப் படைக்கச் சற்றுத் தடுமாறியும் இருக்கிறார் பாரதி.  இன்று நாம் உறுப்பினர் என்று வெகு இயல்பாகச் சொல்லும் ஒரு சொல் பாரதியையே ஒருகாலத்தில் தடுமாற வைத்திருப்பது கலைச்சொல்லாக்கத்தைப் பற்றி நமக்கு ஒரு பாடமாக அமைகிறது.

ஆங்கிலத்தில் இருந்து கலைச்சொற்களைத் தமிழில் மொழி பெயர்க்க வந்த அறிஞர்கள் பெரும்பாலும் வடமொழிப் புலமையுள்ளவர்களாக இருந்திருக்கிறார்கள்.  அவர்களுக்கு வெகு இயல்பான மொழிபெயர்ப்பாக இருந்த சொற்கள் இப்போது நமக்குப் புரியாத சொற்களாக இருக்கின்றன.

எடுத்துக் காட்டாகப் பின்வரும் சொற்கள் 1944ல் பாடநூல்களில் இருந்திருக்கின்றன, ஆனால் இவை இன்றும் நம்மில் பெரும்பாலோர்க்குப் புரியாதவை:
சோக்‌ஷிகள், க்‌ஷாரம், ஆஹார சமீகரணம், யோகவாஹி, சஞ்சாயகி, வாஹகம், ஹரிதகிகாமலம்,  அப்ஜ இரத்தகிகாமலம், பாக்கியஜனக அனிஷ்கர்ஷம், சங்கோஜயத்வம், பிரதிலோம, விபாஜியத்துவம், பிரதி மாகேந்திரம், அவினா சத்வம், அவிபேத்யம், சமாந்திர சதுர்புஜம், அதிருசிய ரேகை, நிஷ்காசினி, வித்யுத்லகானிகம், வக்ர பாவித்வம், உஷத்காலம், ஆபாஸபிம்பம், ஜ்யாமிதி, கிருஷித் தொழில்
தனித்தமிழ்க் கலைச்சொல்லாக்கம் செய்ய வேண்டும் என்று தமிழார்வலர்கள் பெருமுயற்சி செய்திருந்தாலும், கலைச்சொல்லாக்கக் குழுவினர் வடமொழிச் சொற்களையோ அல்லது ஆங்கிலச் சொல்லையோ அப்படியே கையாள்வதையே 1940களில் முறையாக் கொண்டிருக்கிறார்கள்.

தனித்தமிழ்க் கலைச்சொல்லாக்கத்தைக் கடுமையாக எதிர்த்தவர்களில் ஒருவர், சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதியின் தலைமை ஆசிரியராகவும் சென்னைப்பல்கலையின் தமிழ் ஆராய்ச்சித் துறைத் தலைவராகவும்  விளங்கிய இராவ்சாகிப் எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்கள்.

”கலைச்சொல்லாக்கம் என்ற தொடர் இப்பொழுது எங்கும் முழங்குகிறது.  மாநாடுகள் கூட்டப் படுகின்றன. சாதிச் சச்சரவுகளை விளைத்துத் தம் ஆத்திரங்களைத் தீர்த்துக் கொள்ள இதுவே தக்க நேரம் என்று பலரும் இதில் சேர்ந்துள்ளார்கள்.  பலவகை முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன,” என்று சாடியிருக்கிறார் பேரா. வையாபுரிப் பிள்ளை.

இந்தக் கண்ணோட்டம் மிக முக்கியமானது.  தனித்தமிழ் இயக்கம் என்பது சாதிச் சச்சரவாளர்களின் ஆயுதமாகக் கருதப்படும் வரையில், அது முழுவெற்றி பெறுவது கடினம்.  மேலே குறிப்பிட்ட, மக்களுக்குச் சற்றும் விளங்காத, பிறமொழிச் சொற்களைத் திணிப்பதை விடத் தாய்மொழியில் கலைச்சொற்களைப் படைத்து அவற்றைப் பரப்புவதுதான் உயர்ந்த செயல்.  ஆங்கிலம் வெகுவாகப் பரவியிருக்கும் இக்காலத்தில் ஏன் ஆங்கிலச் சொற்களையே எடுத்தாளக் கூடாது என்பதற்கு, மேற்கண்ட எடுத்துக்காட்டு ஒரு நல்ல பாடம்.  1941ல் கற்றவர்களுக்கு, வடமொழிச் சொற்களே வெகுவாகப் பரவியிருப்பது போலத் தோன்றியிருக்கிறது.  அது அவர்கள் சுற்றத்தில் உண்மையாகவே இருந்திருக்கலாம்.  ஆனால்,  ஒரு காலத்தில் ஐரோப்பாவின் செவ்வியல் மொழிகளான லத்தீன, கிரேக்க மொழிகளின் வேர்ச்சொற்களைக் கொண்டு ஆங்கிலத்தில் கலைச்சொற்களைப் படைத்தது போலவே, இந்தியாவின் செவ்வியல் மொழியான சமஸ்கிருத வேர்ச்சொற்களைக் கொண்டு இந்திய மொழிகள் அனைத்துக்குமே கலைச்சொற்களைப் படைக்க முயன்றனர்.  இது சமஸ்கிருதம் பெரிதும் கலந்திருந்த ஏனைய இந்திய மொழிகளுக்கு வெகுவாகப் பொருந்தியிருந்தாலும், தனித்தியங்கும் தன்மை உள்ள இந்தியாவின் இன்னொரு செவ்வியல் மொழியான தமிழுக்குப் பொருந்தாது, தேவையற்றது.

வையாபுரிப் பிள்ளையின் இந்தக் கண்ணோட்டத்தைக் கடுமையாக எதிர்த்திருக்கிறார் சேலம் கல்லூரியின் தலைவர் அ. இராமசாமி கவுண்டர்.  இவர்கள் இருவரும் 1941ல் அமைக்கப் பட்ட, ஆங்கிலப் பேராசிரியர் சுவாமிநாத அய்யர் தலைமையில் அமைந்த, தமிழ்க் கலைச்சொல்லாக்கக் குழுவில் நேருக்கு நேர் மோதியிருக்கிறார்கள். அதைப் பற்றி  இராமசாமிக் கவுண்டர் “குடியரசு” இதழில் டிசம்பர் 4, 1943ல் எழுதியிருக்கிறார்.  அதைச் “செந்தமிழ்ச் செல்வி” என்ற தனித்தமிழ்த் திங்களிதழ் 1944 தைத் திங்கள் வெளியீட்டில் எடுத்து எழுதியிருக்கிறது

அவர்கள் உரையாடல் மிகச் சுவையாக இருந்திருக்கிறது.  நினைவிருக்கட்டும், இது இராமசாமிக் கவுண்டர் கண்ணோட்டம்.

இரா:  சாஸ்திரம் என்ற சொல்லைக் காட்டிலும் நூல் என்ற சொல்லே மிகப் பொருத்தமாக உள்ளது.  ஆதலால் நூல் என்ற சொல்லையே ஏற்றுக் கொள்ள உம்மை வேண்டுகிறேன்.

வை: அரிய விஞ்ஞான கருத்துக்களைத் தொகுத்தும், விரித்தும், ஒழுங்குபடுத்திச் சிறந்த வகையில் கூறுவது சாஸ்திரம் எனப்படும். ஆனால் நூல் என்பது ஏதேனும் ஒன்றைப் பற்றி எழுதப்பட்ட ஒரு புத்தக வடிவத்தைக் குறிப்பதாகும். ஆதலால் கணித நூல் என்பதைக் காட்டிலும் கணித சாஸ்திரம் என்பதே அதிகப் பொருத்தமுடையது.

இரா: தாங்கள் கூறிய இவ்விலக்கணத்திற்கு ஆதாரம் உளதோ?

வை: ஆதாரம் ஒன்றும் இல்லை.  யாமே இவ்வாறு வகுத்துக் கொண்டு அதன்படியே பிறவிடங்களிலும் கையாண்டு வருகின்றோம்.

இரா: இது உமது சொந்தக் கற்பனையெனின், சாஸ்திரத்தின் இலக்கணத்தை நூலுக்கும் நூலின் இலக்கணத்தைச் சாஸ்திரத்துக்குமாக மாற்றி அமைத்துக் கொள்ளலாமே?  நூல் என்ற சொல்லுக்குத் தாழ்ந்த பொருளும் சாஸ்திரம் என்ற சொற்கு உயர்ந்த பொருளும் கற்பிக்கப் படுவதன் நோக்கம் யாது?

வை: அது உலக வழக்கு.

இரா: நூல் என்பதும் சாஸ்திரம் என்பதும் ஒரு பொருள் குறிக்கும் இரு சொற்களாகவே உலகில் வழங்குகின்றன. வியாகரண சாஸ்திரம் என்பதும் இலக்கண நூல் என்பதும் ஒரு பொருளையே குறிக்கின்றன. மேலும், சென்னைப் பல்கலைக் கழகத்தாரால் பதிப்பிக்கப் பட்ட (Tamil Lexicon) தமிழ் அகராதியில் நூல் என்ற சொல்லு க்கு,   "Systematic treatise, science சாஸ்திரம்” என்ற பொருள் குறிக்கப் பட்டுள்ளது. இதை ஏற்றுக் கொள்ளுவதா அல்லது தங்கள் புதிய பொருளைக் கொள்வதா?

வை: பல்கலைக் கழக அகராதியிலுள்ள பொருள் சரியன்று. அது அவசரத்தால் நேர்ந்த பிழையாகும்.


இரா: தொல்காப்பியத்தில் நூலுக்கு இலக்கணம் வகுக்கப் பட்டுள்ளது.

“ஒத்த சூத்திரம் உரைப்பிற் காண்டிகை, மெய்ப்படக் கிளந்த வகையதாகி யீரைங்குற்றமும் இன்றி நேரிதின் முப்பத்திருவகை யுத்தியொடு புணரின் நூலென மொழிப நுணங்கு மொழிப் புலவர்”

என்பது நூலின் இலக்கணமாயிருக்க உங்கள் விருப்பப்படியெல்லாம் தமிழர் மரபுக்கு முரண்படப் பொருள் கொள்ளுதல் முறையல்லவே?

வை: நூலும் சாஸ்திரமும் ஒரு பொருள் குறிப்பனவாயின் சாஸ்திரம் என்ற சொல்லை நீங்கள் ஏன் ஆட்சேபிக்கின்றீர்கள்?

இரா: சாஸ்திரம் என்பது வடசொல்.  நூல் என்ற தூய தமிழ்ச் சொல்லிருக்க அதே பொருளுடைய பிற சொல்லைப் புகுத்துதல் நீதியன்று.  மேலும், இது தமிழ்ச் சொல்லாக்கக் கமிட்டியேயன்றி வடசொல்லாக்கக் கமிட்டியல்ல என்பதைப் பணிவுடன் நினைப்பூட்டுகிறேன்.

வை: சாஸ்திரம் என்பதும் தமிழ்ச் சொல்லேயாகும். அது தேவாரம், திருவாசகம் முதலிய சமய நூல்களில் ஆளப்பட்டுள்ளது. தமிழில் இரண்டறக் கலந்த சொல்லெல்லாம் தமிழ்ச் சொல் என்பதே எமது துணிபு.

இரா: உங்கள் கொள்கை எனக்கு வியப்பைத் தருகிறது.  சாஸ்திரம் என்ற சொல் சமய நூல்களில் காணப் படலாம். ஆனால் அதனாலேயே அது தமிழ்ச் சொல்லாகாது. ஒரு சொல் தமிழ்ச் சொல்லா ஆரியச் சொல்லா என அறிவதற்குப் பல முறைகளுண்டு.  அவற்றுள் ஒன்றினாலாவது உங்களது கொள்கையை நிலைநாட்ட முடியாது.

வை: அடிப்படையான கொள்கையிலேயே உமக்கும் எமக்கும் கருத்து வேற்றுமையுண்டு.  ஆதலால் விவாதத்தை நிறுத்திக் கொள்வோம்.  கமிட்டித்தலைவர் திரு. கே. சாமிநாதன் தமது விருப்பப்படியே தீர்ப்புச் செய்துகொள்ளட்டும்.

இரா: அப்படியே ஆகட்டும்.  சாஸ்திரம் என்ற சொல்லே இக்கமிட்டியால் ஒப்புக்கொள்ளப்படும் என்பதை நான் அறிவேன். ஆனால், தமிழருக்கும் தமிழ்நாட்டுக்கும் நீங்கள் பெரும் தீங்கு விளைவிக்கிறீர்கள் என்பதையும் பிற்காலத்தில் தமிழர்கள் வீறிட்டெழுந்து சீறுவாராயின் அவர்களுக்குச் சமாதானம் கூறும் பொறுப்பு உங்களுடையதாகும் என்பதையும் உங்கட்கு அறிவிக்கின்றேன்.”
[ மணி:  பேரா. வையாபுரிப்பிள்ளை பல்கலைக் கழக அகராதிக்குழுவின் தலைவர்.  அவர் நூலையே அவருக்கு எதிராகச் சான்றுக்கு அழைத்திருக்கிறார் இராமசாமிக் கவுண்டர்! ]
இந்த உரையாடலைப் பற்றிக் குடியரசு ஏட்டில் எழுதிய இராமசாமிக் கவுண்டர் வையாபுரிப் பிள்ளையின் கொள்கையைப் பொதுமன்றங்களிலும் எதிர்த்து விளம்பரப் படுத்தாதனால் அவரால் பெரும் தீங்கு விளைவிக்க முடிந்ததே என்று வேதனைப் பட்டு “உட்பகையை” வெல்ல வேண்டியதன் கட்டாயம் பற்றி எழுதித் தன் கட்டுரையை நிறைவு செய்திருக்கிறார்.
“வடமொழியினின்றும் தமிழைக் காக்குமுன் உட்பகையுடைய தமிழரினின்றும் அதைக் காக்கக் கடமைப்பட்டுள்ளோம் என்பதைத் தமிழ் மக்களுக்குப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.”
இதை 2011லிருந்து பார்க்கும் நமக்கு மலைப்பு மேலிடுகிறது.  அன்று வையாபுரிப் பிள்ளையின் கொள்கை வென்றிருந்தாலும், இன்று சாஸ்திரம் என்ற சொல் தமிழ் கலைச்சொற்களில் வெறும் அடிக்குறிப்பு மட்டுமே.  இயல், நூல் என்ற தனித்தமிழ்ச் சொற்கள் காலத்தால் நிலைத்து விட்டன.  விஞ்ஞானம் என்ற சொல் 1960களோடு உறைந்து விட்ட சொல்.  விஞ்ஞானி என்ற சொல் மட்டும் வழக்கில் இருக்கிறது. இன்று அறிவியல் என்ற சொல்லே பெரிதும் வழங்கும் சொல்.

ஆயிரம் குறைகள் இருந்தாலும், தனித்தமிழ் இயக்கம் தமிழ்நாட்டில் ஓரளவுக்காவது முந்தைய வடமொழி ஆதிக்கத்தைத் தணித்து இன்று ஆங்கிலத்தின் ஆதிக்கத்தையும் எதிர்கொள்ள முடிகிறது என்றால், 1967ல் நடந்த அரசியல் மாற்றங்களும் இதற்கு அடிப்படையாகக் கொள்ள வேண்டியிருக்கிறது.

வையாபுரிப்பிள்ளை மட்டுமே அறிவியல் முறைப்படி நடந்தவர் என்றும் அவரை எதிர்த்த தனித்தமிழ் இயக்கத்தினர் சாதி, இனக்காழ்ப்புணர்ச்சி மேலிட்ட சிறுமதியினர் என்றும் ஒரு தோற்றத்தை அண்மைக் காலத்தில் ஒரு சாரார் ஏற்படுத்தி வருகின்றனர்.

ஆனால், இந்த உரையாடலைப் படிக்கும்போது திரு வையாபுரிப் பிள்ளை ஒரு சட்டாம்பிள்ளை போன்று பேசியிருக்கிறாரே ஒழிய அறிவியல் சார்பான கொள்கைகள் எதையும் அவர் முன் வைத்ததாகத் தெரியவில்லை.  அதற்கு அவர் எழுதிய நூல்களைப் படித்தால்தான் விளக்கம் காணலாம்.

எது எப்படியோ, தனித்தமிழில் கலைச்சொற்கள் ஆக்கிவந்திருக்கும் அறிஞர்கள்  எத்தகைய கடும் எதிர்ப்புகளை எல்லாம் எதிர்கொண்டு வென்றிருக்கிறார்கள் என்பது மலைப்பு தருகிறது.

இது போன்ற எதிர்ப்புகள் எவையும் இல்லாமலேயே இணையம், கணினி போன்ற தனித்தமிழ்ச் சொற்களைப் பட்டிதொட்டி எல்லாம் பரப்ப முடிவதற்கு அந்த முன்னோடிகளுக்கே நன்றி சொல்ல வேண்டும்.

19 கருத்துகள்:

Jayabarathan சொன்னது…

நண்பர் மணிவண்ணன்,


தமிழில் புதிய கலைச் சொற்கள் படைப்பதை யாரும் தடுக்க வில்லை.

இந்தியாவில் ஆங்கிலமும், வட மொழியும் உள்ள வரை தமிழில் அச்சொற்கள் புகுவதை, புகுந்ததை முழுவதும் நாம் தவிர்க்க முடியாது.

ஓரளவுதான் தமிழ் வல்லுநரால் அவற்றை நீக்க முடியும்.

பத்து பில்லியன் தமிழர் பல்லாண்டுகள் எழுதிப் பழகிப் பேசும் கலப்புத் தமிழைச் சுத்தப் படுத்தப் போவது வெட்டி வேலை.

அந்த பொன்னான நேரத்தை புதிய இலக்கியம், மொழிபெயர்ப்பு, விஞ்ஞானப் படைப்புகள் ஆக்கப் பயன்படுத்தலாம்.


ஜெயபாரதன்.

Sundar சொன்னது…

அருமையான பதிவு, மணி. தமிழில் கலைச்சொற்களை ஆக்குவது எவ்வளவு பயன் தரும் என்பதையும், அத்தகைய சொற்கள் முதலில் மாறுபட்டு நிற்பதுபோலத் தோன்றும் சில இடங்களிலும் கூட அவை நிலைபெற்றபின்னர் எவ்வளவு அழகாகப் பொருந்தி நிற்கின்றன என்பதை அழகாகக் காட்டியுள்ளீர்கள். அத்தகைய சொற்கள் தாம் நிலைபெற்றதோடு கிளைத்துப் பெருகியுள்ளதையும் காணலாம். சாதி நோக்கில் அல்லாமல் நல்ல தமிழ்ப்பயன்பாடு என்ற அடிப்படையில் அனுகவேண்டியதன் தேவையும் புலனாகிறது.

ஒரு சிறு தட்டுப்பிழை உள்ளது. நீங்கள் என்பதற்கு மாற்றாக நீங்கல் எனத் தட்டி விட்டீர்கள்.

இரா. செல்வராசு (R.Selvaraj) சொன்னது…

பல அரிய முன்னறியாத தகவல்களைப் பதிவு செய்திருக்கிறீர்கள். நன்றி. கலைச்சொல்லாக்கம், தனித்தமிழ் குறித்த விவாதங்கள் அன்றும் இப்படி இருந்திருக்கிறது; இன்னும் இப்படி இருக்கிறது என்பது வியப்பாகத் தான் இருக்கிறது. ஆனால், எதிர்காலத்துக்கு ஒரு நம்பிக்கையும் ஏற்படுகிறது.
தமிழ்மணத் தாரகையாக இவ்வாரம் நீங்கள் அமைந்ததற்கு நல்ல பலன்.

philipae25 சொன்னது…

திரு மணிவண்ணன்,
ஒரு அரியச் செய்தியை தந்திருக்கிறிகள்..
தமிழுக்குப் பெரும் பகை உட்பகையே. அது அக்காலம் தொட்டே தொடர்கிறது.என்பதுதான் பெரு துயரம்(.
செய்வனத் திருந்த செய் என்பது பெரியோர் வாக்கு. கறைபடிந்த தமிழில் படைப்புகளைச் செய்வது காலத்தை வீணாக்குதல் மட்டுமல்ல அது தமிழுக்கு செய்யும் துரோகம்.. தங்களால் முடியவில்லை யென்பதால் மற்றவர்களாலும் அது இயலாதென்பதும், அவ்வாறு( தனிதமிழில்) செய்பவர்களைப் பழிப்பதும் சரிதானா?.
வையாபுரியார் தமிழுக்கு நல்ல பல சேவைகளைச் செய்திருக்கிறார். இன்றைய தமிழ் ஆய்வு நூட்களுக்கு அவர் முன்னோடியாகவும் இருந்திருக்கிறார். இருப்பினும் அவருக்குத் தாழ்வு மனப் பான்மை உண்டென்றும். அவரின் ‘மேலாளர்களால்’ தாம் மதிக்கப் படவேண்டுமென்ற ஆவல் அவருக்கு எப்பொழுதும் உண்டென்று செவியுற்றிருக்கிறேன்.. அவர் கால தமிழறிஞர்கள் பலருடன் கருத்துவேற்றுமையுடைவர்.. இன்றும் தமிழ் வேற்றுமைகாரகளுக்கு அவருடைய கருதுகளும் நூல்களும் ஊன்று கோலாக இருகின்றன.
பிலிப்

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

நண்பர் ஜெயபாரதன்,

உங்கள் கருத்துகளுக்கு நன்றி. இந்தப் பதிவு தெரிவிக்கும் செய்தி என்னவென்றால் இந்தக் கருத்தாடல்கள் தமிழுக்குப் புதியவை அல்ல. இந்தக் கருத்தாடல்கள் இருப்பதால்தான் நாம் முன்னேறி இருக்கிறோம். உங்கள் தொண்டைத் தொடருங்கள். எது நிற்கிறது என்பதை வருங்காலம் தீர்மானிக்கட்டும்.

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

நண்பர் சுந்தர்,

ஆம், அது எனது தட்டுப்பிழைதான். இராமசாமி கவுண்டர் “நீங்கள்” என்றுதான் எழுதியுள்ளார். அந்த மாபெரும் புலவர் எழுத்தைப் பெயர்க்கும்போது விழுந்த தவறுக்கு வருந்துகிறேன்.

உங்கள் ஏனைய கருத்துகள் எனக்கு ஏற்புடையவையே!

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

நண்பர் பிலிப்,

நான் இந்த “உட்பகை” கருத்துகளில் இராமசாமி கவுண்டர் அவர்களோடும் உங்களோடும் வேறுபடுகிறேன். எப்படி நோக்கினாலும், வையாபுரியார் அவர்களை “உட்பகை” என்று குற்றம் சாட்ட முடியாது. அவர் கருத்துகளை முறையாக அறிவியல் தளத்தில் முறியடித்திருக்க அப்போது தனித்தமிழ் இயக்கங்களுக்கு வலிவில்லை. இன்னும்கூடத் தனித்தமிழ் இயக்கங்களில் அறிவாற்றல் கொண்டு இயங்குபவர்களைக் காட்டிலும், உணர்வு மேலிடக் கூக்குரல் போடும் இயங்குபவர்களையே காண்கிறேன்.

வையாபுரியார் அவர் காலத்தில் உலகெங்கும் வழங்கிய கோட்பாடுகளைக் கைக்கொண்டு எல்லா இந்திய மொழிகளும் சமஸ்கிருதத்தின் வேர்ச்சொற்களைக் கொண்டு மலர்ந்தவை என்று நம்பியிருக்கிறார். அந்தக் கருத்தையும் மீறித் தனித்தமிழ் இயக்கங்கள் செயலாற்றி ஓரளவுக்கு வெற்றி கண்டிருக்கின்றன என்பதை நாம் காண்கிறோம். இராமசாமிக் கவுண்டர் அவரது கட்டுரையில் தாம் தோற்றதாகக் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், உண்மையில் அவர் தோற்கவில்லை.

நாம் இத்தனை தடைகளையும் மீறித் தனித் தமிழ் இயக்கம் செழித்ததற்கான அடிப்படைகளைப் பற்றித் தெரிந்து கொள்வோம். உட்பகை என்ற குற்றச்சாட்டு வையாபுரியாரை மேலும் தனித்தமிழை விட்டு விலக வைத்திருக்கும். வையாபுரியாரையே தனித்தமிழ் இயக்கத்தின் பால் ஈர்க்க முயன்றிருக்க வேண்டும். அதுதான் காலத்தின் தேவையும் கூட.

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

நண்பர் செல்வராசு,

உங்கள் பின்னூட்டுக்கு நன்றி. தமிழ்க் கலைச்சொற்கள் ஓரளவுக்கு வேரூன்றுவதற்கு ஒரு காரணம், புதிய தொழில்நுட்பங்களைத் தமிழுக்குள் எடுத்து வருபவர்களும், பரப்புபவர்களும் தனித்தமிழ் இயக்கதின் கோட்பாடுகளின் படி எழுந்த நூல்களைப் படித்து வளர்ந்தவர்கள். பெரும்பாலும் தமிழ்வழிப் பள்ளிகளில் படித்தவர்கள். எங்களுக்குக் கலைச்சொற்களைப் படைக்க இன்னொரு மொழியில் வேர்களைத் தேட வேண்டும் என்ற எண்ணமே தோன்றுவதில்லை.

ஆனால், ஆங்கில வழிப் பள்ளிகளில் படித்தவர்களுக்கு சன் டிவி, ரெட் ஜயண்ட் மூவீஸ் என்று பெயர் சூட்டுவதுதான் இயல்பாக இருக்கிறது. இருந்தாலும்கூட அண்மைக் காலத்தில் சன் டிவி செய்திகளில் கலப்புத் தமிழ் நெடி குறைந்திருப்பதையும் பாராட்ட வேண்டும். தனித்தமிழில் தொலைக்காட்சி நடத்த முடியும் என்பதை மக்கள் தொ.கா. காட்டுகிறதே!

philipae25 சொன்னது…

என் எழுத்தில் தெளிவில்லையென்று நினக்கின்றேன். வையாபுரியாரை நான் உட்பகை என்று கூற முயலவில்லை.அது என் கருத்துமன்று
அவரின் கருத்தும், கோட்பாடும் தமிழின் உட்பகைவருக்கு உறுதுணையாக இருந்தது, இருக்கிறது, இருக்கும்,
இதுதான் நான் கூறவந்தது. குழப்பத்திற்கு மன்னிக்கவும்
அன்புடன்,
பிலிப்.

Bala சொன்னது…

>>
வையாபுரியார் அவர் காலத்தில் உலகெங்கும் வழங்கிய கோட்பாடுகளைக் கைக்கொண்டு எல்லா இந்திய மொழிகளும் சமஸ்கிருதத்தின் வேர்ச்சொற்களைக் கொண்டு மலர்ந்தவை என்று நம்பியிருக்கிறார்.

இந்த விவாதம் நடந்தது 1940களில், கால்டுவெல்லின் திராவிட மொழிக் குடும்பக் கோட்பாடு வெளியாகி கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் ஆகிவிட்டனவே. பின்னும் பிள்ளை சமஸ்கிரத்திலிருந்து அனைத்து இந்திய மொழிகளும் வந்தன என்று நம்பிக்கொண்டிருந்தாரா?

Sundar சொன்னது…

சிறு பிழையை உடன் திருத்தியமைக்கு நன்றி, மணி.

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

நண்பர் பிலிப்,

வையாபுரியாரைப் பற்றிய உங்கள் விளக்கத்துக்கு நன்றி. இராமசாமிக் கவுண்டர் முதல் இன்றைய தனித்தமிழ்ப் புலவர்கள் வரை, வையாபுரியாரை உட்பகைக்கு இலக்கணமானவர் என்று திட்டுவது தொடர்கிறது. எனக்கு இந்த “உட்பகை” என்ற கருத்தே முற்றுகையில் தவிக்கும் குமுகாயத்தின் கேடயமாகத் தோன்றுகிறது. இன்று தமிழ்க் குமுகாயம் வளர்ந்து விட்டது. பல்வேறு பட்ட மாற்றுக் கருத்துகளை நாம் வரவேற்க வேண்டும். நல்ல கருத்துகளை நாம் ஏரணத்தோடு முன் வைத்து நம்மோடு வேறுபடுபவர்களையும் அணைத்துச் செல்ல முற்பட வேண்டும். அவர்கள் வந்தால் நல்லது. வராவிட்டால், அவர்கள் புதிய தடம் போடட்டும். தமிழின் வெற்றி நம் புதிய கருத்துகளைப் புடம் போட்டுப் பார்த்தலில் இருக்கிறது. எல்லோரும் நமக்கு ஒத்தூதினால் நமது கருத்துகள் நோஞ்சானாக இருக்கும். பிறரைக் கவராத கருத்துகளால் எப்படி வெல்ல முடியும்?

வையாபுரியார் தம் கருத்தை மாற்றாமல் இருந்ததால்தான் தனித்தமிழ் இயக்கம் தான் வெற்றி பெற வேறு வழிகள் எவற்றைக் கையாளலாம் என்று சிந்திக்க வைத்தது. ஆனால், தனித்தமிழ் இயக்கம், தமது ஆதரவாளர்கள் ஆட்சியைக் கைப்பிடித்ததும், இந்த முயற்சிகளைக் கை விட்டு விட்டு ஆட்சியாளர்களை நம்பிக் கோட்டை விட்டு விட்டது. கருத்துகள் செம்மைப் பட மாற்றுக் கருத்துகளும், முரணாளிகளும் தேவை.

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

நண்பர் பாலா,

நான் தெளிவாகச் சொல்லவில்லை என்று நினைக்கிறேன். வையாபுரியார் இந்தியாவின் எல்லா மொழிகளும் சமஸ்கிருதத்திலிருந்து கிளைத்தவை என்று நம்பினார் என்று சொல்லவில்லை. ஆனால், செம்மையடையாமல் காட்டு மொழிகளாய் இருந்தவை, சமஸ்கிருதம் தந்த வேர்ச்சொற்களின் அடிப்படையில் புதுச்சொற்களைப் படைத்து மொட்டு வெடித்துப் பூவாய் “மலர்ந்தவை” என்று கருதினார் என்று சொல்ல வந்தேன்.

செந்தி சொன்னது…

அருமையான கட்டுரை. மிகவும் அறியவேண்டியது. மிக்க நன்றி!
//ஆங்கிலத்தில் இருந்து கலைச்சொற்களைத் தமிழில் மொழி பெயர்க்க வந்த அறிஞர்கள் பெரும்பாலும் வடமொழிப் புலமையுள்ளவர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கு வெகு இயல்பான மொழிபெயர்ப்பாக இருந்த சொற்கள் இப்போது நமக்குப் புரியாத சொற்களாக இருக்கின்றன.
//
உண்மை!! இதற்கு இன்னமும் ஓர் எடுத்துக்காட்டாக, சாமுவேல் ஃபிசுக் கிறீன் (https://ta.wikipedia.org/s/lwd) அவர்கள் தமிழில் வெளியிட்ட நூல்களில் உள்ள கலைச்சொல்லாக்கத்தைக் கூறலாம்.
(கெமிஸ்தம் (Chemistry),அங்காதிபாதம், மனுஜ சுகரணம்....)

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

மிக்க நன்றி செந்தி. இப்படிப் பட்ட பழைய வடமொழிச் சொற்களையும் நாம் தொகுத்துக் காட்ட வேண்டும். கெமிஸ்தம் என்பது சம்ஸ்கிலிஷ் போலிருக்கிறது! இன்றும்கூட ஆங்கிலத்தில் புலமையுள்ள தமிழர்கள் நேரடியாக ஆங்கிலச் சொற்களையே புழங்குவதையும், ஆங்கில ஒலியொப்புமையைத் தழுவிச் சொற்களைப் படைப்பதையும் பார்க்கிறோம். தன்மை, முன்னிலை, படர்க்கை என்ற சொற்கள் வழக்கில் இல்லையென்றால் அவை முதலாள், இரண்டாம் ஆள், மூன்றாம் ஆள் என்று வழக்கில் வந்திருக்கும். :-)

தாமரைக்கோ சொன்னது…

தமிழின் ஆழத்தையும், அகலத்தையும் நன்றாக புரிந்துகொண்டவர்கள் மட்டுமே, எந்த துறைச் சொற்களையும் தமிழில், அதுவும் தூய தமிழில் கொண்டுவரமுடியும் என்பதை உணர்வார்கள், தெளிந்து கொள்வார்கள். இல்லையெனில் வரட்டுப் பிடியாக தூய தமிழில் முழுதுமாக எதையும் செய்ய இயலாது எனக் கூறிக் கொண்டேதான் இருப்பார்கள். அப்படிக் கூறிக் கொள்பவர்களுக்கு முத்தான ஒரு முழுவினையை எடுத்துக்காட்டாகக் கூறுகின்றேன். 2002 மே மாதத்தில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தால் வெளியிடப்பட்ட அருங்கலைச் சொல் அகரமுதலியைப் பாருங்கள். 135 துறைகளுக்கான ஏறக்குறைய ஒரு இலக்கத்து நாற்பதாயிரம் கலைச் சொற்களை (ஆங்கிலம் - தமிழ்) தொகுத்து, உருவாக்கி வெளியிட்டுள்ளது. தொகுப்பாசிரியர் மொழியியல் அறிஞர் ப. அருளி அவர்கள். அவ்வகரமுதலியைப் முதல் பார்வையிடுங்கள். பிறகு தருக்கம் செய்யலாம் - தாமரைக்கோ

VarahaMihira Gopu சொன்னது…

கலைச்சொற்களை உருவாக்க தமிழறிவும் சொல்வளமும் அக்கலையில்

ஆர்வமும் ஆழமும் வேண்டும். அச்சொற்கள் புழக்கத்துக்கு வர துறை

இலக்கியமும் வளரவேண்டும் - சொல்லாடலும் பெருகவேண்டும்.

அறிவியல் துறைகளில் தமிழர்களுக்கு - பொதுவாக இந்தியர்களுக்கும் உள்ள

ஆர்வம் குறைவே. அதில் ஆர்வம் காட்டுபவர்கள் ஆங்கில மொழியில்

நடக்கும் அறிவியலைதான் பெரும்பாலும் விரும்புகின்றனர். தமிழிலொ மற்ற

பாரத மொழிகளிலோ அறிவியல் ஆராய்ச்சிகளோ புதுமைகளோ ஏதும்

இல்லை. கணிதம், கணிதவியல், பொருளாதரம் போன்ற துறைகளுக்கும் இது

பொருந்தும்.

ஆங்கிலத்தை பொருத்தவரை பல்லாயிரம் சொற்களை லத்தீன
கிரேக்க மொழிகளிலிருந்து ”தனி-ஆங்கில” கவலையின்றி இணைத்துகொள்வதே
மரபு.

கணிததின் பிறிவுகளாகிய துறைகளை எடுத்துக்கொள்வோம் - ஜியாமெட்ரி,

ட்ரிகனாமெட்ரி இரண்டும் கிரேக்க சொற்கள், கிரேக்க காலத்திலிருந்தவை;

கால்குலஸ் லத்தீன சொல்; லெப்நிட்ஸால் ஜெர்மனிய மொழியின்றி

லத்தீனமொழியிலேயே அறிமுகப்படுத்தப்பட்ட சொல்; அல்ஜீப்ரா ஒன்பதாம்

நூற்றாண்டு அரபு மொழிச்சொல், அல் குவாரிஸ்மியின் நூலிலிருந்து.

தமிழிலும் பூகோளம், சதுரங்கம், வர்கம், வர்கமூலம் என்று தமிழைபோல்

ஒலிக்கும் மிளிரும் சம்ஸ்கிருத கலைச்சொற்கள் உள்ளன.

தனிமப்பட்டியலை ஆய்ந்தால் முன்காலத்துப்பெயர்களை தவிர பலவும் லத்தீன

பெயர்கொண்டவை. பொடாசியம் விதிவிலக்கு அரபு சொல் அல்கலி என்பது

லத்தீனத்தில் கலீயம் என்று தாவியது. பாட் ஆஷ் (பானை சாம்பல்) என்ற

ஆங்கிலவேறும், அரபு வழி லத்தீன் உருவும் உண்டு பொடாசியத்திற்கு!!

Selin George சொன்னது…

அருமையான பதிவு. தன்னை தற்காக்கும் தமிழ். 1940 களின் வெற்றி 2015 களில் தமிழின் முன்னே வீழ்ச்சி என்பதே இதற்கு சான்று.

Ratnavel Sothivel சொன்னது…

கடந்த எழுபத்தி ஐந்து வருடங்களுக்கு முந்திய ஒரு செய்தியை சுவைபட எடுத்து தந்தமைக்கு நன்றி.

பேராசிரியர் வையாபுரி அவர்களையோ அந்த சமூகத்தை சேர்ந்தோரையோ குறை கூறுவதில் பலனில்லை. அக்காலத்தில் அவர்களை போன்றோரே பெரும் கல்வியாளர்ர்களாக இருந்தனர். மற்றய சமூகங்களிலிருந்து வந்த கல்வியாளர்கள் சமஸ்கிரத கலப்பற்ற தமிழை கையாண்டு வந்தமையினால் அவர்களைவிட இவர்களுக்கு இயல்பாகவே தனித் தமிழ் கைவந்தது. காலப்போக்கில் எல்லா சமூகத்தாரும் கல்வியாளர்களாக முன்னேற இயல்பாக தனித்தமிழ் முன்னேற்றம் கண்டது. ஏனெனில் புதியவர்களுக்கு சமஸ்கிரதம் எப்பொழுதும் பிறமொழி சொல்லாகவே இருந்துவந்தது. பெரும்பாலானோருக்கு சமஸ்கிரதம் தெரியவே தெரியாது. எங்களுடைய மூதாதையர்கள் பலர் சமஸ்கிரதம் கலந்த சொற்களை இயல்பாகவே வாய்க்குள் நுழையாது என்று சொல்வார்கள்.

தனித்தமிழ் மிகவும் முன்னேற்றம் கண்டிருக்கும் தமிழ் நாட்டில் தாய் மொழி கல்வி உயர் படிப்பு வரை இருந்திருப்பின். அதற்கு தனித் தமிழ் ஆர்வலர்கள் அரசியல் செய்யவேண்டியதாக இருக்கிறது. இன்றய திராவிட அரசுகள் தமிழ் என்று ஆட்சிக்கு வந்தபின் பழையபடி வையாபுரிப்பிள்ளை அவர்களது சமூகத் தொண்டர்களாக மாறி கல்வியை வியாபாரமாக்க பழையபடி வேதாளம் முருங்கை மரம் ஏறிவிட்டது. அவர்கள் இப்போது சமஸ்கிரதம் வேண்டாமா தமிழும் வேண்டாம் ஆங்கிலம் படி என்று நிற்கிறார்கள். இப்பொழுது மணிப்பிரவாளம் போய் ஆங்கிலப்பிரவாளமாய் ஆகிவிட்டது. தொலை காட்சி பார்த்து இப்பொழுது கிராமத்து கிழவிகளே அதை பேசக்கூடியதாக ஆக்கியிருக்கிறார்கள.

அனால் இன்னும் படிப்பறிவில்லாத பாமரர்கள் இருக்கிறார்கள் இங்கள் தமிழை பிற்காலத்தில் காப்பாற்ற . கவலைப்படவேண்டாம். அவர்கள்தான் பெரும்பான்மையானவர்கள்