செவ்வாய், பிப்ரவரி 11, 2020

ஏன் அயர்லாந்து மக்கள் அவர்கள் தாய்மொழியான எய்ரவைப் பேசுவதில்லை?

ஏன் அயர்லாந்து மக்கள் அவர்கள் தாய்மொழியான எய்ரவைப் பேசுவதில்லை?

உலகின் பெரும்பாலான நாடுகளில் மக்கள் அவரவர் தாய்மொழியைப் பேசுகிறார்கள். ஆனால், அயர்லாந்து மக்கள் அவர்கள் தாய்மொழியான ஏய்ரவைப் பேசுவதில்லை. அவர்கள் பேசும் மொழி ஆங்கிலம். அவர்களுடைய தாய்மொழியான ஏய்ரவைப் பேசுபவர்கள் அங்கு வெகு சிலரே. அவர்கள் நாளேடுகளில் கடைசிப் பக்கம் மட்டும் ஏய்ர மொழியில் அச்சிடப்பட்டிருக்கும். தெருப்பெயர்கள் ஆங்கிலத்திலும் ஏய்ரவிலும் இருக்கும். ஆனால் ஏய்ரவில் இருப்பதைப் படிக்கக்கூடியவர்கள் வெகு சிலர். ஏன் அப்படி?
அயர்லாந்து மக்கள், அவர்கள் அண்டை நாடான இங்கிலாந்திடம் தோற்று, தங்கள் உரிமைகளை இழந்து, அடிமைப் பட்டு, சிறுமைப்பட்டு சில நூற்றாண்டுகள் வாழ்ந்த போது தங்கள் தாய்மொழியை இழந்து விட்டார்கள். இப்போது அரும்பாடுபட்டுத் தங்கள் தாய்மொழியை மீட்டெடுக்க முனைகிறார்கள்.

இழந்ததை மீட்பது கடினம். தமிழர்கள் தமிழைப் போல் தொன்மையும், தொடர்ச்சியும், மாட்சியும் உள்ள தாய்மொழியைக் கொண்டவர்கள். தமிழர்கள் தன்னாட்சி இருந்தவரைக்கும் தமிழ் தம்மிடத்தைத் தக்க வைத்துக் கொண்டது. தன்னாட்சியை இழந்து சிறுகச்சிறுகப் பிறமொழிகளின் ஆட்சியின் கீழ் வந்த போதும் தமிழ்ப் புலவர்களும் தமிழ் மக்களும் அரசுகளின் ஆதரவில்லாமலேயே தமிழைத் தக்க வைத்துக் கொண்டனர்.

பிறமொழிக் கலப்பை மட்டுப்படுத்தித் தமிழ் கலங்கிப் போய் மங்கிடாமல் காப்பாற்றியது தனித்தமிழ் இயக்கம். ஆனால், தற்காலத்தில் ஆங்கிலத்தின் ஆதிக்கத்தின் கீழ் உலகமயமாக்கலின் வணிகத்தில் திளைத்திருக்கும் தமிழர்களுக்கு ஆங்கிலக் கலப்பு உவப்பாக இருக்கிறது. ஆங்கிலக் கண்ணாடி வழியாக உலகைப் பார்க்கும் தமிழர்களுக்கு அயல்மொழிகளின் சொற்களும் ஓசைகளும் அப்படியே தமிழிலும் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.

அப்படிப் பட்ட கலப்பு தமிழைப் பிரித்து இன்னொரு கலவை மொழிக்கு இட்டுச் செல்லும். கலவை மொழிகளில் அறிவியல் எண்ணங்களைத் துல்லியமாக எழுதும் தன்மையும் குறைவு. உயர்தனிச் செம்மொழிகளைப் போல் சான்றோர் இலக்கியம் படைக்கும் ஆற்றலும் இருக்காது.
தமிழ் எழுத்துகளை வைத்துக் கொண்டு சமக்கிருதம் எழுதுபவர்கள் இருக்கிறார்கள். (சுலோகப் பாடல்களைத் தமிழில் எழுதிப் பாடுபவர்கள் முதற்கொண்டு வேதங்களையும் தமிழில் எழுதி மனப்பாடம் செய்பவர்கள் வரை).

தமிழ் எழுத்துகளை வைத்துக் கொண்டு கணிக்காரம், படகர், இருளர், பணியர், சௌராட்டிரம் மொழிகளையும் எழுதுபவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்காக வர்க்க எழுத்துகளையும், கூட்டெழுத்துகளையும், கிரந்த எழுத்துகளையும் தமிழ் யூனிக்கோடு பட்டியலில் சேர்க்கப் பலர் முனைகிறார்கள், தாய்லாந்தில் "தாய்" மொழியில் தமிழோடு வடமொழியையும் கலந்து எழுதுவதால் முழுக் கிரந்த எழுத்துகளையும் கூட்டெழுத்துகளையும் தமிழில் சேர்க்க வேண்டும் என்று முழுமூச்சாய் முனைபவர்களும் அமெரிக்காவில் இருக்கிறார்கள்.

இதையெல்லாம் அணை போட்டுக் கொண்டிருக்க முடியாது. அப்படிச் செய்பவர்கள் எல்லாம் தமிழிலிருந்து பிரிந்து வெவ்வேறு மொழிகளாகக் கிளைத்துக் கொண்டே போவார்கள்.

தொன்மைத் தமிழ் தொடர்ந்து கொண்டே இருக்கும். அதில் கலப்படம் செய்தாலும், கலவை மொழி தனியே கிளைத்துப் பிரிந்து விடும். தனித்தமிழ் என்றும் அழியப் போவதில்லை. அதைப் பேசுபவர்களின் எண்ணிக்கை குறையலாம் ஆனால் அழியாது.

கிளையாளம் வேண்டுபவர்கள், தமிங்கிலம் வேண்டுபவர்கள், தமிண்டரின் வேண்டுபவர்கள், தமிக்கிருதம் வேண்டுபவர்கள், என்று யார் வேண்டுமானாலும் தனித்தனி மொழிகளைப் பிரித்துக் கொண்டு செல்லட்டும். ஆனால், தனித்தமிழ் மட்டுமே தொல்காப்பியத்துக்கும் சங்கத்தமிழுக்கும், கம்பனுக்கும் வள்ளுவனுக்கும் இளங்கோவுக்கும் உரிமை கொண்டாட முடியும்.

Why Don’t The Irish Speak Irish?

The Danes have Danish, the French speak French, the Slovakians talk in Slovak yet the Irish don’t speak Irish, but rather English. Almost all nations and people have their own language yet the Irish are one of the few nations who have a language that very few of its people can speak. Ireland is one of the only countries in Europe whose primary language is that of a foreign country.

https://whistlinginthewind.org/2015/08/20/why-dont-the-irish-speak-irish/

திங்கள், பிப்ரவரி 10, 2020

மொழிமரபு - பிறமொழிப் பெயர்கள்

மொழிமரபு - பிறமொழிப் பெயர்கள்
தமிழ்நாட்டின் ஊர்ப்பெயர்களை ஆங்கிலேயர் ஆங்கிலத்தில் (Triplicane, Tuticorin, Sadras, Trichy என்பது போல்) குதறியிருந்ததைப் பார்க்கும்போது எரிச்சலாக இருக்கும். அமெரிக்காவில், ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்களோடு பல பத்தாண்டுகள் வாழ்ந்த பிறகுதான் அவர்கள் பிறமொழிப் பெயர்களை ஆங்கிலத்தின் தன்மைக்கு ஏற்ப, தமக்கு இயல்பாக வரும் ஒலிப்பில் பலுக்குகிறார்கள் என்பது புலப்பட்டது. Triplicane, Tuticorin, Sadras, Trichy போன்ற பெயர்கள் ஆங்கிலேயர் பிற ஆங்கிலேயர்களுக்குப் புரியும் வகையில் எழுதிய ஆங்கிலப் பெயர்கள். ஆம், அவை தமிழ்நாட்டு ஊர்ப்பெயர்கள்தாம். ஆனால், அந்தப் பெயர்கள் ஆங்கிலத்தின் ஒலிப்பியலைப் பின்பற்றி, அவர்கள் நெடுங்கணக்கில் எழுதப்பட்டவை.

ஆனால், ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்ற பிறகும் ஆங்கிலத்தை ஆட்சிமொழியாகக் கொண்டு ஆட்சி நடத்தும் இந்தியர்களுக்கு, தமிழர்களுக்கு, இந்த ஆங்கிலப் பெயர்கள் உறுத்துகின்றன. இவற்றைத் தத்தம் மொழிக்கு நெருக்கமாக மாற்ற முயல்கிறோம். Thiruvallikeni, Thoothukkudi, Cathurangappattinam, Thiruchirappalli என்ற பெயர்கள் தமிழர்கள் தமக்கும் பிற இந்தியர்களுக்கும் தமிழை ஆங்கில எழுத்துகளில் தமிழுக்கு நெருக்கமான முறையில் எழுத முயன்றதன் விளைவு. இந்தப் பெயர்களை ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்களால் இயல்பாகப் பலுக்கவும் முடியாது, பலுக்கினாலும் ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்ட பிறராலும் புரிந்து கொண்டு எழுத முடியாது. இது மொழி மரபு புரிந்தவர்களுக்குத் தெரிந்ததுதான்.


பெயர்ச்சொற்களை, அதுவும் தனியாள் பெயர்கள், ஊர்ப்பெயர்கள், நாட்டுப் பெயர்களை மூல மொழியைப் போலவே எழுத வேண்டும், பேச வேண்டும் என்று சில தமிழர்கள் கருதுகிறார்கள். ஆனால், அவர்கள் உண்மையில் மூலமொழிகளைப் பற்றி அக்கறையற்றவர்கள். உலகில் உள்ள பிறமொழிப் பெயர்களை ஆங்கிலக் கண்ணாடி வழியாகத்தான் பார்த்துப் பழகியவர்கள். அவர்களுக்கு எந்த நாட்டின் பெயராக இருந்தாலும், எந்த மொழியில் உள்ள பெயராக இருந்தாலும், ஆங்கில எழுத்துகளில் தமிழைப் போல் படித்துத் தமிழில் எழுத முயல்பவர்கள். உண்மையில் இவர்களுக்குத் தாய்மொழியிலும் புலமை இருக்காது. ஆங்கிலத்தையும் தாய்மொழியைப் போல் அறிந்தவர்களல்லர். ஆனால் 'நான் பிறந்திருக்க வேண்டியது இங்லேண்ட்' என்று பாடிக் கொண்டு தம்மை ஆங்கிலேயராய், அமெரிக்கராய், ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டவராய்க் கருதித் தமிழையும் தமிங்கிலமாக்கத் துடிப்பவர்கள்.


சிரியா நாட்டின் தலைநகரின் பெயரைத் தமிழில் எப்படி எழுதுவது என்று ஒரு பஞ்சாயத்து போய்க்கொண்டிருக்கிறது! அந்த நகரம் 3500 ஆண்டுகள் பழமையானது. அதன் பெயர் அக்கேடியன் மொழியில் 𒀲𒋙 Imerišú இமெரிசு, எகிப்திய மொழியில் 𓍘𓄠𓈎𓅱 T-m-ś-q த-ம-ச-க், பண்டைய அரமேய மொழியில் Dammaśq (דמשק) தம்மாசக், விவிலிய காலத்துப் பண்டைய எபிரேய மொழியில் Dammeśeq (דמשק) தம்மெசெக் என்று போகும். இதைப் பண்டைய கிரேக்கர்கள் Δαμασκός என்றெழுத அவர்களிடமிருந்து ரோமாபுரத்தார் Damascus என்று தம் இலத்தீன் எழுத்துகளில் எழுதியதை ஆங்கிலேயரும், அமெரிக்கர்களும் அதே எழுத்துகளில் தம் மொழியில், ஆங்கிலத்தில் வழங்குகிறார்கள்.


இந்த Damascus அங்கே வாழும் மக்கள் தம் நகருக்கு இட்ட பெயரல்ல. அது புறப்பெயர். ஆங்கிலம் பேசுபவர்கள் இலத்தீனிலிருந்து, கிரேக்கத்திலிருந்து எடுத்துக் கொண்ட பெயர். உண்மையில் மூலமொழிப் பெயருக்கு நெருக்கமாக இருக்க வேண்டும் என்றால் அதில் கிரேக்க/இலத்தீன் தன்மையுடன் -us என்ற ஈற்று இருக்கக்கூடாது. ஆனால், அது கிரேக்க, இலத்தீன், ஆங்கில மொழிமரபுகளுடன் பின்னிப் பிணைந்தது. அதை அவற்றைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் இயல்பாக எடுத்துக் கொள்கிறார்கள்.


விவிலியத்தைத் தமிழில் மொழிபெயர்த்த பாதிரிகள் எபிரேயம் அறிந்தவர்கள். அவர்களுடைய மொழிபெயர்ப்புகளில் விவிலியப் பெயர்கள் எபிரேயத்துக்கும் பண்டைய கிரேக்கம்/இலத்தீனுக்கும் நெருக்கமாக இருக்கும்.

யோவான் (John), பேதுரு (Peter), தாவீது (David), மரியாள் (Mary), மத்தேயு (Mathew), ஆதாம் (Adam), ஏவாள் (Eve), ஏசு (Jesus) போன்ற பெயர்கள் ஆங்கிலப் பெயர்களிலிருந்து பெரிதும் வேறுபட்டிருக்கின்றன. பிற ஐரோப்பிய மொழிகளிலும், உலக மொழிகளிலும் இந்த வேறுபாடுகள் உள்ளன. ஆங்கிலத்தில் உள்ள பெயர்கள் மூலப்பெயர்களிலிருந்து விலகியவை. அவை ஆங்கில மரபுக்கேற்று வழங்கும் பெயர்கள்.
ஏசு என்ற பெயர் எப்படியெல்லாம் எபிரேய மொழியிலிருந்து பிறமொழிகளில் திரிந்தது என்று பார்க்கலாம்:
எபிரேயம்: Yeshua (ישוע)
கிரேக்கம்: Yeshu (Ἰησοῦς) (drop the final "a")
இலத்தீன்: Iesus (Iēsous) (sh → s, Y → I, add final s)
கால மாற்றத்தில் J என்ற எழுத்து இலத்தீனில் பரவலான பிறகு
இலத்தீன்: Jesus (pronounced yay-soos)
ஆங்கிலம்: Jesus (pronounced jee-ses)
இதே போல் Yochanan என்ற எபிரேயப் பெயர் மாறியது.
Yochanan → Yohana → Iohannes →
Jean (பிரெஞ்சு)/ John (ஆங்கிலம்)/ Sean (ஐரிசு)/ Ian (இசுக்காட்டிய கேயலிக்கு) / Juan (இசுப்பானியம்)/ யோவான் (தமிழ்) / யோகண்ணன் (மலையாளம்??)
இவற்றில் எது மூல ஒலிப்புக்கு நெருங்கியது? John என்ற ஆங்கிலப் பெயரா?
மத்தேயு என்ற பெயரை எடுத்துக் கொள்ளுங்கள்.
அது கிரேக்கத்தில் ματθαιος /Mat-thaios/.
ஆனால் உருசியனில் த-கர ஒலி இல்லை. என்ன செய்தார்கள்?
த-கர ஒலியை ஃப-கரமாக மாற்றினார்கள்!
Матфей Matfay.
விவிலியம் போன்ற ஒரு மத நூலைத் தம் மொழிக்குக் கொண்டுவருவதற்குக்கூட யாரும் தம் மொழியில் புது எழுத்துகளைச் சேர்க்கவில்லை. புதிய ஒலிப்புகளைக் கூட்டவில்லை.
தமிழிலும் அப்படித்தான். கம்பராமாயணத்தில் வடமொழிப் பெயர்களை எழுதுவதற்காகக் கிரந்த எழுத்துகளைக் கம்பன் சேர்க்கவில்லை. பெரிய புராணத்தில் சேக்கிழார் வடமொழிப் பெயர்களுக்காகக் கிரந்த எழுத்துகளைக் கூட்டவில்லை.

தமிழில் பிறமொழி ஒலிப்புகளைக் கூட்ட வேண்டும் என்று அடம் பிடிப்பவர்கள் மூல மொழிகளில் ஒலிப்புகளுக்கு நெருங்கிய ஒலிகளுக்காகக் கூட்ட வரவில்லை. அதைப் பற்றி அவர்களுக்கு அக்கறையில்லை. அவர்கள் அக்கறைப்படுவதெல்லாம், ஆங்கிலத்தில் உள்ள ஒலிகளைத் தமிழில் கொண்டு வரவேண்டும் என்பதுதான். ஆனால் ஆங்கிலத்தில் உள்ள f, q, z, என்ற ஒலிகளுக்கு இணையான கிரந்த எழுத்துகள் இல்லை. எனவே தற்போது இருக்கும் கிரந்த எழுத்துகள் அவர்களுக்குப் போதாது.

என்ன செய்வார்கள்? ஒரு முறை துக்ளக் சோ f என்ற எழுத்தையே ஒரு மெய்யெழுத்தாகக் கூட்டிக் கொண்டு அதற்கு நெடுங்கணக்கு வரிசை ஒன்றை அச்சிட்டுக் காட்டினார். அதாவது:
f, fா, fி, fீ, fு, fூ , ெf, ேf, ைf .... என்று போகும்.

இப்படி நேரடியாகவே ஆங்கில எழுத்துகளைத் தமிழ் உயிர்மெய்யாக்கும் கருத்தைக் கொண்டுவந்தார். எடுபடவில்லை.

இப்படிக் கருப்பு நிறமுள்ள, கருங்கூந்தலுள்ள தமிழன்னையை வெறுத்து, வெள்ளை நிறமுள்ள மஞ்சள் கூந்தல் கொண்ட பெண்ணாகத் தமிழை மாற்றத் துடிக்கும் சிறுபிள்ளைகளைக் கொல்லைக்குக் கூட்டிச் சென்று குளிப்பாட்டிக் கூட்டி வர முயலலாம். ஆனால் பிடிவாதம் பிடித்த சிறு பிள்ளைகள் அடம் பிடித்தால் போகிற போக்கில் போவென்று கொல்லையிலேயே விட்டு விட வேண்டியதுதான்.

செந்தமிழ் வழக்கும் கலவைக் கொச்சை வழக்கும்

செந்தமிழ் வழக்கும் கலவைக் கொச்சை வழக்கும்
தமிழை எழுதும்போது பிறமொழிச் சொற்களை பிறமொழி ஒலிப்புடனே எழுதுவதுதான் வளர்ச்சி என்று கொடி பிடிக்கும் குழுக்கள் இன்று நேற்றல்ல, கல்லெழுத்துகளில் பொறிக்கும்போதிருந்தே இருந்திருக்கின்றன.

டுமீல் டுமீல் என்று ரிஷி சுட்டான்
டிஸ்யூம் டிஸ்யூம் என்று ஜார்ஜ் குத்தினான்
ஹா ஹா ஹா என்று எம்ஜிஆர் சிரித்தார்
ஹாஜி என்பவர் ஹஜ்ஜுக்குச் சென்று வந்தவர்
டமாஸ்கஸ் ஸ்விஸ்ஸின் தலைநகர் அல்ல

என்றெழுதுவதுதான் தமிழ். கிரந்த எழுத்துகள் இல்லாவிட்டால் இவற்றை எழுதுவது நகைச்சுவையாகிவிடும் என்கிறார்கள்.

அரபி நூல்களில் அரபி எழுத்துகளை உயிரெழுத்துகளைக் குறிக்காமலேயே மெய்யெழுத்துகளில் மட்டுமே எழுதுவது மரபு. மொழி தெரிந்தவர்கள் எங்கே என்ன எழுத்தை எப்படிப் படிப்பது என்று புரிந்து கொண்டு படித்து விடுவார்கள். புதிதாகக் கற்பவர்கள் உயிரெழுத்துகளுக்கான குறியீடுகளை இட்டுப் படித்தாலும் நாளடைவில் அவையில்லாமெலேயே படிக்கத் தொடங்கி விடுவார்கள். இதை மாற்ற வேண்டும், எல்லோரும் எப்போதுமே உயிரெழுத்துக் குறிகளை இடவேண்டும் என்று யார் கொடி பிடித்தாலும் அது நடக்குமா என்று தெரியாது! மொழிமரபின் தாக்கம் அப்படி.

அதே போல், தமிழில் இருக்கும் ஒலிகளுக்கான குறிகளைத் தேவநாகரி நெடுங்கணக்கில் சேர்த்தாலும் சமக்கிருதத்தில் எழுதும்போது அவற்றைச் சேர்த்தெழுதும் மரபு வேரூன்றுமா? வாய்ப்பில்லை. அரபி, சமக்கிருதம் போன்ற செம்மொழிகளில் அவ்வளவு எளிதாகப் பிறமொழி எழுத்துகளைச் சேர்க்க மாட்டார்கள்.

வாழும் மொழிகளில் பிறமொழிக் கலப்பு நிகழ்வது வெகு இயல்பானது. அதிலும் தமிழைப் போன்ற நெடிய மரபைக் கொண்ட மொழிகளில் இத்தகைய கலப்பை அதன் செம்மொழி வழக்கு காலப்போக்கில் உண்டு செரித்துத் தன்வயமாக்கிக் கொண்டு வந்திருப்பதை நாம் வரலாற்றில் பார்க்கிறோம். பிறமொழிப் பெயர்களைத் தமிழில் எப்படி எழுதுவது என்பதில் நாம் கல்லில் பொறிக்கத் தொடங்கிய காலத்திலிருந்தே இருவேறு தன்மைகளைப் பார்க்கிறோம். தமிழை எழுத தமிழ் நெடுங்கணக்கில் உள்ள எழுத்துகள் மட்டுமே போதும் என்று புலவர்கள் விதித்ததைத் தொல்காப்பியம் பதிவு செய்திருக்கிறது. குறிப்பாக, தொல்காப்பிய காலத்தில் புலவர்கள் அறிந்திருந்த வடமொழியான பாகதப் (Prakrit) பெயர்களையும் சொற்களையும் தமிழில் இரவல் வாங்கும்போது வடமொழி எழுத்துகளை நீக்கி எழுதுங்கள் என்றே தொல்காப்பியர் அறிவுறுத்தியிருந்தார். ஆனால், கல்வெட்டுகளில் பொறித்தவர்களுக்குத் தொல்காப்பிய மரபு தெரியாமல் இருந்திருக்கலாம். அல்லது அவர்கள் இன்றைக்கும் சிலர் கம்பு சுற்றுவது போல் பிறமொழிப் பெயர்களை அவர்கள் பலுக்குவது (உச்சரிப்பது) போல் ஒலிக்க வேண்டுமென்றால் அவர்களுடைய எழுத்துகளைச் சேர்க்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் பொறித்திருக்கலாம்.

[தமிழுக்குப் புதிய எழுத்துகள் தேவையா - ஓர் அலசல்]

ஒலிப்புள்ள ஒலிகளுக்கும் (G, J, D, B etc.), காற்றொலிகளுக்கும் (KHA, GHA, CHA, JHA, DHA, PHA, BHA etc.) தமிழில் எழுத்துகள் இல்லை. ஒலிப்புள்ள ஒலிகள் இயல்பாகத் தமிழில் வரும்போது அவற்றை ஒலிப்பிலா ஒலிகளுக்குள்ள வல்லெழுத்துகளால் எழுதினாலும், அவற்றுக்கு முன் உள்ள எழுத்துகள் அந்த ஒலிப்பிலா வல்லொலிகளை மென்மையாக்கி விடுகின்றன. அதனால்தான் காகம், தங்கம், முருகன், பஞ்சு, மஞ்சள், படம், வண்டு, பதம், பந்து, கொம்பு போன்ற சொற்களில் சொல்லிடை வரும் வல்லின எழுத்துகளை நாம் ஒலிப்பிலா எழுத்துகளாக (K, C, T, P - க,ச,ட,த,ப என்று) எழுதினாலும் ஒலிப்புடன் (G, J, D, B என்று) சொல்கிறோம். அவற்றுக்கென்று தனியாக எழுத்துகளைத் தமிழ் நெடுங்கணக்கில் சேர்க்கவில்லை. தமிழில் ஒலிப்புள்ள ஒலிகள் சொல்முதல் வாரா. காற்றொலிகள் தமிழில் இல்லை. எனவே அவற்றுக்கான எழுத்துகளும் இல்லை.

பிறமொழிப் பெயர்களில் இவை வரும்போது அவற்றைக் கல்லில் பொறித்த சிலர் சில இடங்களில் தமிழில் இல்லாத எழுத்துகளுக்குப் பகராகப் பாகதப் பிராமி எழுத்துகளில் பொறித்திருக்கிறார்கள். அதே போல், பின்னாளில் கல்வெட்டுகளில் தமிழ்ப் பெயர்களைச் சங்கத (Sanskrit) மொழியில் பொறித்தவர்கள் சங்கதத்தில் இல்லாத தமிழெழுத்துகளைத் தமிழிலேயே பொறித்திருக்கிறார்கள். ஆனால், சங்கதத்திலோ, பாகதத்திலோ, பாகத மொழிகளிலிருந்து கிளைத்த இன்றைய வடவிந்திய மொழிகளிலோ, தமிழெழுத்துகள் வேரூன்றவில்லை. தமிழிலும் இலக்கிய வழக்கில் பாகதப் பிராமி/சங்கதக் கிரந்த எழுத்துகளைத் தமிழ் மன்னர்கள் தமிழகத்தை ஆளும் வரைக்கும் சேர்க்கவில்லை. தொல்காப்பியரும் சங்கப்புலவர்களும், வள்ளுவரும் இளங்கோவும், ஆழ்வார்களும் நாயன்மாரும், கம்பரும் சேக்கிழாரும், வடமொழிச் சொற்களை வடவர் எழுத்துகளை நீக்கியே எழுதினார்கள்.

தமிழில் வடமொழிச் சொற்களை எழுதும்போது கிரந்த எழுத்துகளைக் கலந்து எழுதும் பழக்கத்தை மணிப்பிரவாள நடை என்றார்கள். அதாவது வடமொழி எழுத்துகளையும் தமிழெழுத்துகளையும் கலந்து எழுதுவதை மணியையும் பவழத்தையும் கலந்து வழங்குவது போல என்று நோக்கினார்கள். இதைத் தொடங்கியவர்கள் பௌத்த, சமணக் கோட்பாடுகளைத் தமிழில் எழுத முனைந்த முனிவர்கள்தாம். பிற்காலத்தில் அதே போல் சைவ, வைணவ ஆசிரியர்களும் இப்படித் தம் சமய நூல்களுக்கான விளக்கவுரைகளை மணிப்பிரவாள நடையில் எழுதினார்கள்.

இப்படிப்பட்ட கலவை நடையால் சேரநாட்டுத் தமிழ் தன் இயல்புத்தன்மையை இழந்து தன் மரபை மறந்து மாற்றார் மொழியாய், மலையாளமாய், பிரிந்து விட்டது. வடமொழிக்கான கிரந்த எழுத்துகளோடு தமிழுக்கான வட்டெழுத்துகளையும் சேர்த்து மலையாள நெடுங்கணக்கு உருவானது. மலையாளத்தில் வடமொழிச் சொற்களை அதே உச்சரிப்புடன் எழுத முடியும். தமிழெழுத்துகளையும் அவற்றின் ஒலிப்பு மாறாமல் எழுத முடியும். சங்க இலக்கியத்திலிருந்து கம்பன் வரைக்கும் உள்ள தமிழ் இலக்கியங்களை மலையாளத்தில் எழுத முடியும், படிக்க முடியும், புரிந்து கொள்ள முடியும். ஆனால், தம் மொழியைக் கலவை மொழியாக்கிய பிறகு சேரநாட்டுத் தமிழர்கள் மலையாளிகளாகத் தமிழுக்கு மாற்றார்களாக விலகிப் போனார்கள்.

தமிழ் மன்னர் ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பின்னர், பிறமொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட அரசர்களின் ஆட்சியின்போது தமிழிலக்கியத்திலும் அப்படிப்பட்ட, தொல்காப்பிய விதியை மீறிய, மணிப்பிரவாளநடை வேரூன்றத் தொடங்கியது. தொல்காப்பியர் முதல், கம்பரும் சேக்கிழாரும் வரை தொடர்ந்த இந்த மரபு அருணகிரிநாதர் காலத்தில் அறுந்தது. ஆனாலும் மலையாளத்தைப் போல் எழுத்தும் மொழியும் முழுக்க முழுக்க மாறவில்லை. காற்றொலிகளைத் தமிழில் சேர்க்கவில்லை. ஸ, ஷ, ஜ, ஹ போன்ற ஒரு சிலக் கிரந்த எழுத்துகளை மட்டும் சேர்த்துக் கொண்டார்கள். இதன் விளைவு தமிழிலக்கியத்தில் மட்டுமல்லாமல் தமிழ் உரைநடையிலும் வடசொற்கள் வெகுவாகக் கலந்து தமிழ் உரைநடையைத் தமிழர்களே புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு மொழியைச் சிதைத்தன.

தமிழிலக்கியத்தில் எளிமையையும் செந்தமிழ்த் தன்மையையும் மீட்டெடுத்துத் தற்கால இலக்கியத்துக்குக்கான வழியை அமைத்துக் கொடுத்த வள்ளலார் பெருமானே அவரது உரைநடையில் கிரந்த எழுத்துகள் கலந்த வடமொழிச் சொற்களை அள்ளித் தெளித்து எழுதியிருந்தார். அவற்றை இன்று படிக்கும்போது இதையெல்லாம் மக்கள் எப்படிப் படித்துப் புரிந்து கொண்டார்களோ என்று வியப்பு மேலிடுகிறது.

வள்ளலார் அருளிய உபதேசக் குறிப்புகளிலிருந்து:

“பூர்வத்தில் விந்துவும், உத்தரத்தில் நாதமும் இருக்கின்றன. விந்து ஆன்மா, நாதம் பரமான்மா. நாதத்தோடு விந்து சேர்தலால், விந்து சத்தியும், நாதம் சிவமும் ஆகின்றன. விந்துவுக்சூ உத்தர நியாயம் பூர்வ நியாயமாவது எல்லாத் தத்துவங்களுக்கும் புறத்தும் அகத்தும் மற்றும் விளங்கி, தத்துவங்களைத் தன்வசப்படுத்தியும் தொழில்களைச் செய்வித்தும் தனித்து நின்றும் தன்னோடு தத்துவங்களைச் சேர்க்கின்ற படியால், விந்து சத்தனாயும் தத்துவங்கள் சத்தியாயும் இருக்கும். மேலும் ஆன்மாவுக்குச் சகல விளக்கமாகிய சாக்கிர ஸ்தானம் லலாடம், ஆதலால், விசேடம் சிறந்தது லலாடத்தில் மூக்குநுனியாகிய புருவமத்தி. இதற்கு அனுபவ சித்திகள் திரயோதசாந்தம் வரையிலு முண்டு.

திரயோதசாந்தமாவது யாதெனில்: ஜீவசாக்கிரம், மேற்படி சொப்பனம், மேற்படி சுழுத்தி ஆக 3. நிர்மலசாக்கிரம், மேற்படி சொப்பனம், மேற்படி சுழுத்தி ஆக 3. பரசாக்கிரம், மேற்படி சொப்பனம் மேற்படி சுழுத்தி ஆக 3. குருசாக்கிரம், குருசொப்பனம், குருசுழுத்தி, குருதுரியம், குருதுரியாதீதம் ஆக 5, ஆக மொத்தம் 14. இதற்கு மேலுமுள சுத்தசிவசாக்கிரம், மேற்படி சொப்பனம், மேற்படி, சுழுத்தி, மேற்படி துரியம், துரியாதீதம் – இவை சேருங்கால் ஜீவ சாக்கிராதி நீக்கப்படும். இவ்வள வனுபவமும் பூர்வத்திலுள்ள அனுபவிகளால் குறிக்கப்பட்ட நிலைகளில் இல்லை. ஒருவாறு குருதுரிய பரியந்தம் வேதாகமங்களாலும் தத்துவராயர் முதலிய மகான்களனுபவத்தாலும் குறிக்கப்படும். அதற்கு மேற்பட்ட அனுபவம் சுத்த சன்மார்க்க சாத்தியம்.”[பார்க்க:]

கீழே உள்ளது 1814 இல் சித்தூர் மாவட்டத்தில் மக்கள் கூடிப் பேச்சுவார்த்தை நடத்தி குறை நீக்கி ஒப்பந்தம் செய்து கொள்ளும் மக்கள் அறமன்றம் அல்லது அதாலத்துக் கோர்ட்டு என்ற ஓர் அமைப்பில் நடந்த வழக்கில் வந்த ஒரு மறுமொழியின் பகுதியைக் கீழே தருகிறேன். அன்றைக்குத் தமிழில் வடமொழிச் சொற்கள் எந்த அளவு கலந்திருக்கின்றன என்பது நமக்கு வியப்பை அளிக்கலாம்:

வாதிகள் கொடுத்த ரிப்ளை
ஸாநகரிஷி, மனுப்பிரம்மரூபமும், ஸநாதனரிஷி மயப்பிரம்மரூபமும், பிரத்னஸரிஷி சில்பிப் பிரம்மரூபமும், சுபர்னஸரிஷி விஸ்வக்ஞப் பிரம்மரூபமும் இந்தப் பிரம்மரிஷிகளில் வகுத்துக் கொண்டவர்களின் வம்மிசத்தார்களாகிய தங்களுக்கு வேதோக்தமாய் மேற்கண்ட ரிஷிகளின் கோத்திரசாகை பிற வகைகளும் உண்டாயிருப்பதாகவும்,
வேதபிராமணப் பூர்வீகமாய் மனுப்பிரம்மாவிற்கு இரும்பு வேலையும் ரிக்வேத பாராயணமும் துவஷ்டப் பிரம்மாவுக்கு தாமிர வேலையும் சாமவேத பாராயணமும் விஸ்வக்ஞப் பிரம்மாவுக்கு சுவர்ண வேலையும் பிரணவவேத பாராயணமும் ஆகிய இந்தப் பஞ்சவித கன்மங்களை அனஷ்டித்து விதிப்படி வருகிறதினாலே உலக சம்ரக்ஷ்ணையாகி வருகிறதாகவும்,
தங்களுடைய அவுபாஸன ஓமகுண்டலத்திற்கு தங்கம், வெள்ளி, தாமிரம், இரும்பு முதலான பஞ்சலோகங்களையும் ரத்தினம் முதலான நவமணிகளையும் ஆகுதி கொடுத்து அதினாலே சிருஷ்டிதிதி, சம்ஹாரம், திரோபாவம், அநுக்கிரக முதலானதற்கும் அஸ்திர ஆயுதங்களை உண்டாக்கவும் சென, ஆசன, அத்தி என அத்தியர் பதானதான பிரிதீ சஷ்டி கர்மமும் சர்வதாபிமானமும் அரசுநிலை ஆக்கினாச்சுரமும் இஷ்டகாம் யார்த்தமும் ஜனன மரணநரக கதியும் ஆதாரமாயிருப்பதுமன்றி சர்வாதார கடவுளாக்கினைக்குச் சம ஆதாரமாயிருக்கின்றது மன்றியில்....” [பார்க்க]

இது போன்று தமிழைக் கலவை மொழியாக்கிய மணிப்பிரவாள நடை பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து வந்தது. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தனித்தமிழ் இயக்கம் தோன்றிச் செந்தமிழ் நடையை மீட்டெடுக்கத் தொடங்கிய பின்பும் இது தொடர்ந்தது. எடுத்துக் காட்டாகப் பின்வரும் சொற்கள் 1944ல் தமிழ்நாட்டுப் பாடநூல்களில் இருந்திருக்கின்றன,

ஆனால் இவை இன்றும் நம்மில் பெரும்பாலோர்க்குப் புரியாதவை:
சோக்‌ஷிகள், க்‌ஷாரம், ஆஹார சமீகரணம், யோகவாஹி, சஞ்சாயகி, வாஹகம், ஹரிதகிகாமலம், அப்ஜ இரத்தகிகாமலம், பாக்கியஜனக அனிஷ்கர்ஷம், சங்கோஜயத்வம், பிரதிலோம, விபாஜியத்துவம், பிரதி மாகேந்திரம், அவினா சத்வம், அவிபேத்யம், சமாந்திர சதுர்புஜம், அதிருசிய ரேகை, நிஷ்காசினி, வித்யுத்லகானிகம், வக்ர பாவித்வம், உஷத்காலம், ஆபாஸபிம்பம், ஜ்யாமிதி, கிருஷித் தொழில்.

அந்தக் காலத்திய தினமணி, ஆனந்த விகடன், சுதேசமித்திரன் போன்ற இதழ்களைப் படித்தால் இத்தகைய மணிப்பிரவாள நடையே இயல்பாக வந்திருக்கும். இது போன்ற மணிப்பிரவாள நடை சமக்கிருதத்தைக் கற்றவர்களுக்கு மட்டுமே இயல்பாக வந்தது. தமிழ் மட்டும் தெரிந்தவர்களுக்கு இவை கல்வியை எட்டாக்கனியாக்கின. அதனால்தான் 1967 தேர்தலில் திமுக வெற்றி பெற்ற பின்னர், இந்த நடையை நீக்கித் தனித்தமிழ் நடையில் பாடநூல்களை எழுதத் தொடங்கினார்கள். திரைப்படங்களிலும் இந்த மணிப்பிரவாள நடை நீங்கி தனித்தமிழ் பீடுநடை போடத் தொடங்கியதைப் பராசக்தி போன்ற படங்களிலிருந்து பார்க்கலாம்.

ஆனால், மணிப்பிரவாள நடை முற்றிலும் ஒழியவில்லை. கற்றவர்கள் தாம் மற்றவர்களைக் காட்டிலும் மேலானவர்கள் என்று காட்டிக் கொள்ள இன்னொரு மொழியைக் கைக்கொண்டார்கள். சமக்கிருதத்தை விட்டுவிட்டு ஆங்கிலத்தைக் கலந்து பேசத் தொடங்கினார்கள். எழுதத் தொடங்கினார்கள். 1970களில் பாலச்சந்தர் படங்களில் கற்ற மேட்டுக்குடித் தலைமாந்தர்கள் முழுக்க முழுக்க (இந்திய) ஆங்கிலத்தில் பேசிவிட்டு உடனடியாக அதைத் தமிழிலும் மொழிபெயர்த்துச் சொல்வார்கள். ஆங்கிலம் அறவே தெரியாத தமிழ் மக்கள் பலருக்கும் தமிழ்ப்படம் புரியவேண்டுமல்லவா, அதனால்தான். அதே நேரத்தில், படித்தவர்கள், பணக்காரர்கள், பெரிய இடம் என்று காட்ட வேண்டுமென்றால் ஆங்கிலம் கலந்து பேச வேண்டும் என்ற கருத்தையும் விதைத்தார்கள்.

இந்தச் சமயத்தில்தான் குமுதமும் விகடனும் தினமணியும் தினமலரும் தமிழில் ஆங்கிலம் கலந்த மணிப்பிரவாள நடையைப் பரவலாக்கின. நுனிநாக்கு ஆங்கில உச்சரிப்பில் ஆங்கிலம் கலந்த தமிங்கிலத்தைப் பேசுவது நளினம் என்று சன் தொலைக்காட்சி போன்ற நிறுவனங்கள் கொண்டாடத் தொடங்கின. அந்த சமயத்தில்தான் இணையத்தில் தமிழ் நுழையத்தொடங்கியது. இணையத்திலும் கணினியிலும் தமிழ் வேரூன்றத் தொடங்கியபோது, கலைச்சொற்களைப் படைக்கத் தொடங்கியவர்களில் தமிழின் நெடிய மரபை அறிந்தவர்களில் சிலரும் இருந்தோம். அதனால்தான் கம்ப்யூட்டர், இன்டர்நெட், வெப் பேஜ் என்று கணியையும் இணையத்தையும் எழுத்தாளர் சுஜாதா அறிமுகப் படுத்திக் கொண்டிருந்த நேரத்தில் கணினி, இணையம், வலைப்பக்கம் என்ற கலைச்சொற்களைப் படித்து வெகு இயல்பாக உலவ விட்டுக் கொண்டிருந்தோம். புதிய மணிப்பிரவாளம் வேரூன்றுவதற்கு முன்பு நாங்கள் செய்த தற்காப்புப்பணி இது. முதலில் இத்தகைய மொழிபெயர்ப்புகள் தேவையா, எடுபடுமா என்று ஐயத்தோடு பார்த்த எழுத்தாளர் சுஜாதா, மனம் மாறி, அவரே இந்தத் தனித்தமிழ்க் கலைச்சொற்களை பரப்பவும் செய்தார்.

எனவே கலவைத்தமிழும் மணிப்பிரவாள நடையும் தமிழுக்குப் புதிதல்ல. ஆனால் அவற்றை என்றென்றும் ஆளுமை செய்ய விட்டுத் தமிழை இழக்க விடாமல் காக்க, ஒவ்வொரு தலைமுறையிலும் புதிது புதிதாகச் செயல்வீரர்கள் வந்த வண்ணம் இருந்திருக்கிறார்கள். கலந்து எழுதுவதுதான் முன்னேற்றம், கலவையை மறுப்பது தூய்மைவாதம் என்று சொல்பவர்கள் சமக்கிருதத்தையும், அரபியையும், ஆங்கிலத்தையும் கலந்து எழுத மாட்டார்கள். அப்படி எழுதினாலும் அது வேரூன்றாது என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

தமிழைத் தமிழாக எழுதப் புதிய எழுத்துகள் தேவையில்லை. அதே போல் தமிழில் ஸ, ஷ, ஹ, ஜ, போன்ற எழுத்துகளைக் கலந்துதான் எழுத வேண்டும் என்ற தேவையும் இல்லை. அருணகிரியின் திருப்புகழையும், வள்ளலாரின் உரைநடையையும் கற்றுக் கொள்ள முனைபவர்களுக்கும், கலவைத் தமிழ்நடையான மணிப்பிரவாள நடையையும் பிறமொழித் தாக்கத்தின் அடையாளமாகக் கற்றுக் கொள்ள வேண்டுபவர்களுக்கும் அவை தேவைப்படலாம். மற்றபடி தமிழைத் தமிழாக எழுதத் தமிழ் எழுத்துகள் மட்டுமே போதுமானவை. அப்படி எழுதுவதைப் பகடி செய்பவர்களுக்குத் தமிழின் மொழிமரபு பற்றித் தெரியாது என்று கடந்து விடலாம்.

வாழும் மொழிகளின் வருங்காலத்தைக் கணிப்பது கடினம். மொழி வளர்ச்சிக்காகத் தம் மொழிமரபை விட்டுக் கொடுத்துக் கலவை மொழியாகித்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை. அப்படிப் பட்ட கலவை மொழிகள் தம் தொன்மையையும் தொடர்ச்சியையும் விட்டுக் கொடுப்பது மட்டுமல்லாமல் ஒரு கட்டத்தில் இப்படிப் பிறமொழி கலந்து பேசி அதிலும் புலமையில்லாமல், தாய்மொழியிலும் கொச்சையாகப் பேசுவதை விட்டுவிட்டுப் பிறமொழியிலேயே பேசிவிடலாமே என்ற எண்ணம் வேரூன்றும்போது இருந்த சுவடே இல்லாமல் மறைந்தொழிந்து போயிவிடும். என்றுமுள்ள தென் தமிழ் நிலைத்து நிற்கும்.