வியாழன், டிசம்பர் 30, 2010

நுணுக்குமென்மையும் அளிநட்பேயும்: நிறுவனப் பெயர்களை தனித்தமிழில் மொழிபெயர்த்தல் சரியா?

அண்மையில் மேலை நாட்டு நிறுவனங்களின் சின்னங்களையும் பெயர்களையும் தனித்தமிழில் எழுதி அழகு பார்க்கும் தன்மையைப் பார்க்கிறோம்.  இதைத் தம் தமிழ்த்தொண்டாய்க் கருதுபவர்கள் ஒரு புறம்.  இவர்களுக்கு யூனிகோடு, யூ-டுயூபு, பே-பேல், ஃபயர்ஃபாக்ஸ், ஃபேஸ்புக் என்ற பெயர்களைத் தமிழ்ப்படுத்தியே ஆக வேண்டும் என்ற கரைபுரண்டோடும் மொழிப்பற்று.  இந்தப் பற்றாளர்கள் சீர்மைக்குறி,  தந்திறந்திரை,  அளி-நட்பே, நெருப்புநரி, முகநூல் என்ற பெயர்களை இட்டுக் கட்டி ஆளுகிறார்கள்.

இந்தத் தமிழ்ப்படுத்தல் படுத்துகிறது என்று ரவுண்டு கட்டி அடிக்கும் தமிழ்மரபு  அணியினர் சிலர் மறுபுறம்.

இப்படி வணிக நிறுவனங்களின் பதிவு பெற்ற பெயர்களையும், சின்னங்களையும் மொழிபெயர்க்கலாமா? இதைப் பற்றிச் சீனாவில் வணிகம் செய்யும் மேலை நாட்டு நிறுவனங்களும், சீனர்களும் ஏற்கனவே நன்கு சிந்தித்துப் பார்த்திருக்கிறார்கள்.


உத்தமம் அமைப்பின் கலைச்சொல்லாக்கப் பணிக்குழுவின் முதல் தலைவர் என்ற பொறுப்பில் இருந்து கலைச்சொல் வல்லுநர்களோடு  இணைந்து செயலாற்றியதால் சொல்கிறேன்.  பொதுவாக ஒரு தனியார் நிறுவனத்தின் விளம்பரப் பெயர்களையும் சின்னங்களையும் (brand) மொழி பெயர்ப்பது (translate) இல்லை. ஒலி பெயர்ப்பது (transcribe) உண்டு, சில நேரங்களில் குறிபெயர்ப்பது (transliterate) உண்டு.

தமிழ் மொழியின் இலக்கணவிதிக்கு உட்பட்டு அந்தப் பெயர்களைத் தமிழில் எழுதலாமே ஒழிய அவற்றை மொழிபெயர்க்கும் உரிமை அந்த நிறுவனங்களுக்கு மட்டுமே உண்டு.  மைக்குரோசாப்டு, மைக்ரோசாப்ட், மைக்ரோசாஃப்ட் என்று எழுதினால் நாம் எந்த விளம்பரப் பெயரைக் குறிப்பிடுகிறோம் என்று மற்றவர்களுக்கும் விளங்கும். மைக்ரோசாப்டு என்ற பெயரை “நுணுக்கு மென்மை” என்று இலங்கை சர்வேஸ்வரன் கிண்டலுக்காக மொழிபெயர்த்தது போன்ற பெயர்ப்புகள் நிறுவனங்கள் பல்லாயிரம் கோடிப் பணம் செலவழித்து, அரும்பாடு பட்டு உருவாக்கும் விளம்பரச் சின்னங்களாக முடியாது.  ஃசெராக்ஸ் (ஜெராக்ஸ், செராக்சு), கூகிள் (கூகுள், கூகுல், கூகில், கூக்’ல்) போன்ற பொருளற்ற விளம்பரப் பெயர்களை மொழி பெயர்க்கவே முடியாது.  அதனால் சில விளம்பரப் பெயர்களை மட்டும் மொழி பெயர்த்து விட்டு மற்றவற்றை ஒலிபெயர்ப்பது என்பது முறையாகாது.

டுவிட்டர் நிறுவனம் தனது டுவீட்டுகளைத் தானே “கீச்சு” என்று தனது தமிழ் மொழி அறிவிப்புகளில் குறிப்பிட்டு வருகிறது.  அதனால், டுவீட்டு என்பதற்குப் பகராக ‘கீச்சு’ என்ற சொல்லைத் தமிழில் ஆள்வது பொருத்தம்.  ஆனால், டுவிட்டர் தமது பெயரைத் தாமே மாற்றிக் கொள்ளாதவரையில் நாம் அதற்கு என்ன தமிழ்ப் பெயர் இட்டாலும், அது அந்த நிறுவனத்தையோ, அதன் விளம்பரப் பெயரையோ குறிப்பிடாது.

அதே போல், முகநூல், முகச்சுவடி, முகப்புத்தகம், மூஞ்சிபுக்கு, என்ற பெயர்கள் எவையுமே ஃபேஸ்புக் நிறுவனத்தைக் குறிப்பிடாது.  ஆனால், பேஸ்புக், பேச்புக், பேச்’புக், பேசுபுக்கு, ஃபேசுபுக்கு, என்ற எல்லா ஒலிபெயர்ப்புகளுமே அந்த நிறுவனத்தைக் குறிப்பிடுவதுதான்.  முகநூல்.வணி (or mukanool.com or muganool.com ) என்ற பெயரை இன்று யாராவது பதிந்து கொண்டால், அதை எதிர்த்து ஃபேஸ்புக் நிறுவனம் உடனடியாக வழக்குப் போட்டாலும், செல்லுமா என்று சொல்ல முடியாது.  ஆனால், பேச்சுபுக்கு என்ற பெயரை மற்றவர்கள் பதிவு செய்யக் கூடாது என்று சொன்னால் நீதிமன்றங்களால் அதை மறுப்பது கடினம்.

பே-பேல் சேவையின் பெயரை மொழிபெயர்க்கும் உரிமையும் அந்த நிறுவனத்துக்கு மட்டுமே உண்டு. (It is not பே-பால் pay paul though it is more popular in Tamil. That name would remind one of the phrase "to rob Peter to pay Paul."). அதைச் சிலர்  அளிநட்பே என்று பெயரிட்டு அழைக்கலாம்.  ஆனால், அப்படிப் பட்ட பெயரைத் தொழில்நுட்ப மன்றங்களும் அமைப்புகளும் அறிக்கைகளில் சேர்ப்பதற்கு முன்பு அது குறைந்தது பரவலாகப் புழக்கத்திற்கு வந்திருக்க வேண்டும்.

ஒரு விளம்பரப் பெயரை மொழிபெயர்க்கலாமா, குறி பெயர்க்கலாமா, ஒலி பெயர்க்கலாமா என்ற தெரிவுகள் அந்த நிறுவனத்திற்கு மட்டுமே உரியவை.  சில மொழிகளில் மொழி பெயர்ப்பு தேவை.  சீனாவில் மொழி பெயர்த்தால் ஒழிய மக்கள் ஒரு விளம்பரப் பெயரை ஏற்க மறுக்கலாம்.   ஆங்கிலம் தெரிந்த வேறு சில நாடுகளில் ஆங்கிலப் பெயர்களுக்கு இருக்கும் மவுசு தமிழில் மொழி பெயர்த்தால் இல்லாமல் போகலாம்.  “எடுத்துக்கோ ராசா” என்று சொல்லும் இடியாப்பக் கடைக் கிழவியே “டேக் இட் ராசா” என்று பேசும் விளம்பரம் வெற்றி பெறும்போது தமிழில் மொழி பெயர்ப்பதால் மூல நிறுவனத்தின் பிராண்டுக்கு இருக்கும் புகழையும் அடையாளைத்தையும் வைத்து விற்கும் வாய்ப்பை இழந்து மேலும் செலவு செய்து புதிய அடையாளத்தைப் பரப்பத் தேவைப் படலாம்.  எந்த வணிக நிறுவனமும் இப்படி அசட்டுத்தனமாகச் செலவு செய்து ஏற்கனவே இருக்கும் பெயரை விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.

சீன மொழியில் கோகோ கோலா என்ற வணிகப் பெயரைச் சீன எழுத்துகளில்  எழுதத் திணறிய நிறுவனத்தின் சிக்கல்கள் பற்றிய சுவையான செய்திகளை “Branding in China: Global Product Strategy Alternatives" என்ற கட்டுரையில் காணலாம்.


இங்கே சீனர்கள், அரபு மக்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லியாக வேண்டும்.
சீன நாட்டு மக்கள் தம் தொன்மையான மொழி, பண்பாடு பற்றிப் பீடும் பெருமையும் கொண்டவர்கள்.  அமெரிக்க, ஆங்கிலேயப் “பன்னாட்டுப் பண்பாட்டு”ச் சூழலை ஏற்று அடி பணியாமல், தம் மொழியையும், பண்பாட்டையும், பெருமையையும் உயர்த்திப் பிடிப்பவர்கள்.  இது தென்கிழக்காசியாவில் பிற இன, மொழி, பண்பாடுகளோடு, ஆங்கில/அமெரிக்க ஆளுமைக்கு அடிபணிந்து வாழும் நாடுகளில் உள்ள சீன மக்களுக்கும் பொருந்துமா எனத் தெரியவில்லை.

சீனர்களைப் போலவே தம் மொழி, பண்பாடு, சமயம், இனம் பற்றிப் பீடும் பெருமையும் கொண்ட இன்னொரு குடியினர் அரபு மக்கள். ஆங்கில, அமெரிக்க ஆளுமைக்கு உட்பட்டு வாழ்ந்தாலும், தம் மொழி, பண்பாட்டையும் விட்டுக் கொடுக்காத மரபினர். இதனாலோ என்னவோ, வேற்றுமொழி விளம்பரங்களை அரபு மொழிக்குப் பெயர்ப்பதில் மொழி, பண்பாடு, சமய மரபுகளோடு உடன்படாமல் செய்வதால் விளம்பரங்கள் விளங்காமல் குழப்பத்தை விளைவிக்கின்றன என்று 97% அரபு மக்கள் கருதுவதாக ஒரு தரவு தெரிவிக்கிறது.

தமிழர்களில் பலருக்குத் தம் மொழி, பண்பாடு, தொன்மை பற்றிய பெருமை இருப்பினும், ஒரு சில அண்மைக்காலத் தன்னந்தனித் தமிழர்களின் கேலிக்கூத்தான நடவடிக்கைகளாலும், அமெரிக்க, ஆங்கில, இந்தியப் பண்பாட்டுக் கலவையின் அழுத்தமான ஆளுமையாலும், பிறமொழி, பிற பண்பாடுகளுக்கு அடி பணிந்து கிடந்த வரலாற்றாலும், தனித்தமிழ்ப் பெயர்கள் பீடு தரும் பெயர்கள் என்ற கம்பன் கால நிலை சரிந்து நெடுங்காலமாகிவிட்டது. 

தனித்தமிழ் என்பது மொழியல்ல.  அது இன்றைய தமிழ்மொழியின் ஒரு நடை.  அது சிறப்பு நடை, மிடுக்கு நடை, ஆனால் அது மட்டுமே தமிழ் என்ற நிலை இலக்கியத் தமிழிலிருந்தே விலகிப் பல நூற்றாண்டுகளாகின்றன.  கல்வெட்டுகளின் தொடக்கத்திலிருந்தே, உரைநடைத் தமிழ் கலப்படத் தமிழாகவே இருந்திருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது.  இவற்றை எல்லாம் புறக்கணிப்பது என்பது தமிழ் மொழி, பண்பாடு இவற்றின் வரலாற்றில் ஒரு கூறைப் புறக்கணிப்பதற்கு இணையானது.

தமிழில் ஆங்கிலம் மற்றும் பிறமொழிப் பெயர்களும் சொற்களும் கலக்கத் தொடங்கிப் பல நூற்றாண்டுகளாகி விட்டன.  பிறமொழி ஒலிப்புகளும் எழுத்துத் தமிழிலும், பேச்சுத்தமிழிலும் கலந்து விட்டிருக்கின்றன.  தமிழ்நாட்டின் ஆளும் மேல்தட்டுக் குடும்பங்கள் ஆங்கில வழிப் பள்ளிகளில் படித்து, ஆங்கிலோ-தமிழில் பேசி, ஆங்கிலோ தமிழ்ப் பெயர்களைத் தம் நிறுவனங்களுக்குச் சூட்டி மகிழ்வதை தொலைக்காட்சி நிறுவனங்கள் நமக்கு அன்றாடம் நினைவூட்டிக் கொண்டிருக்கின்றன.  இவர்கள் தனித்தமிழ் அரசியல் பின்னணியில் ஆட்சிக் கட்டில் ஏறிய குடும்பங்களின் வழித்தோன்றல்கள் என்றாலும், தனித்தமிழைப் புறக்கணித்து, ஒரு புதிய மணிக்கோரல் (தமிழும் இங்க்லிஷும் கலந்த மணிcoral) நடையைப் போற்றி வளர்ப்பவர்கள்.

மேலை நாட்டு ஆங்கில விளம்பரப் பெயர்களை அவற்றின் உரிமையாளர்கள் அனுமதியில்லாமல் தமிழில் பெயர்ப்பதற்கு முற்படுவதற்கு முன்பு, தமிழகத்தில், தனித்தமிழ் இயக்கத்தின் வழித்தோன்றல்கள் தோற்றுவித்த நிறுவனங்களின் விளம்பரப் பெயர்களை அவர்களே தமிழில் மொழி பெயர்த்து அல்லது தனித்தமிழ்ப் பெயர் சூட்டி அழைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.  அப்படிச் செய்யாமல் ஒரு சில மேலைநாட்டுப் பெயர்களை மட்டும் மொழி பெயர்த்து எழுதுவது என்பது தனித்தமிழ் இயக்கம் என்பது போலித்தனமான அரசியல் கூத்து, வேறு ஏதும் கையில் கிடைக்கவில்லை என்றால் தமிழர்களின் பார்வையைத் திருப்புவதற்கான ஒரு மேஜிக் டிரிக், மந்திர தந்திரம், மாயாஜாலம், செப்பிடு வித்தை என்ற குற்றச்சாட்டைத் தவிர்க்க முடியாது.

> மொழி ஆளுமை / மொழிப் பற்று / இனப் பற்று என்பது அவரவர் தனிக்கருத்து.

> அன்பர்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதனாலேயே
> அடைப்புக்குறிக்குள் அளிநட்பே(paypal)   என்று எழுதுகிறோம்.

> மொழி உணர்வைப் போற்ற வேண்டும் என்று கூறவில்லை. தூற்றாமலாமாவது இருக்கலாமே :(

திங்கள், டிசம்பர் 20, 2010

அறிவியலில் தனித்தமிழ் தாலிபானிசமா?

அறிவியல் தமிழில் எண்ணற்ற கட்டுரைகள் படைத்து வருபவர் கனடாவில் தற்போது வாழும் ஓய்வு பெற்ற அணுமின் பொறியாளர் ஜெயபாரதன் அவர்கள். அவரது அறிவியற் கட்டுரைகளை http://jayabarathan.wordpress.com என்ற சுட்டியில் காணலாம்.

அறிவியல் தமிழில் விக்கிப்பீடியாவில் எண்ணற்ற கட்டுரைகளைக் கூடுமானவரைத் தனித்தமிழிலேயே படைக்கும் குழுவிற்கு உரம் சேர்த்துத் தலைமை தாங்குபவர் கனடாவில் வாட்டர்லூ பல்கலையில் மின்னணுவியல் பேராசிரியர் செல்வகுமார்.

ஜெயபாரதன் 1960களில் இருந்தே தமிழில் அறிவியல் கட்டுரைகளையும் பரிசு பெற்ற நூல்களையும் எழுதி வருபவர்.  அவரது கட்டுரைகளில் 1960களின் தொடக்கத்தில் இருந்த கலைச்சொற்கள் விரவியிருக்கும்.

பேரா. செல்வகுமார் 1960களின் தனித்தமிழ் அறிவியல் கொள்கைகளின் தாக்கத்தினால், கலைச்சொற்கள் யாவும் இயன்றவரை தமிழின் வேர்ச்சொற்களில் இருந்தே, தமிழ் ஒலிப்புடன், தமிழ் எழுத்துகளில் எழுத  வேண்டும் என்று வலியுறுத்தி வருபவர்.  இணையத்தமிழின் தொடக்க நாள்களில் இருந்தே தமிழில் எண்ணற்ற கட்டுரைகளை எழுதி வருபவர். நல்ல நண்பர்.

இவ்விருவருமே தமிழில் அறிவியற் கலைச்சொற்கள் என்ற தலைப்பில் தமிழ் மன்றம் மடற்குழுவில் கருத்துக்கலப்பு செய்வது வழக்கம்.  தனித்தமிழில் எழுதுவதை வலியுறுத்துவதும், கிரந்தம் தவிர்த்து எழுதுவதை வலியுறுத்துவதும் “தமிழ்த் தாலிபானிசம்” என்று குற்றம் சாட்டுகிறார் ஜெயபாரதன். (பார்க்க: http://groups.google.com/group/tamilmanram/browse_thread/thread/19c9c6dc26a116d1/01110d8635e8df36?lnk=raot#01110d8635e8df36 )

தாலிபானிசம் என்ற சொல் தேவையில்லாமல் புண்படுத்தும் சொல்.

தனித்தமிழ் நடை என்பது ஒரு சிறப்பு நடை.  இதன் தாக்கம் அளவிட முடியாதது.  கம்ப்யூட்டர், இண்டர்நெட் என்று எழுதினால்தான் விளங்கும் என்று சொல்லிக் கொண்டிருந்த சுஜாதா போன்ற எழுத்தாளர்களையே கணினி, இணையம் என்று மாற்றி எழுத வைத்தது.  இன்று பட்டி தொட்டி எல்லாம் கணினி, இணையம் என்ற சொற்கள் பரவியிருப்பதைப் பார்க்கும்போது இந்தச் சொற்கள் படைக்கப் பட்ட காலத்தில் அல்லது எடுத்தாளப் பட்ட காலத்தில் தமிழ்.நெட் குழுமத்தில் இருந்ததை எண்ணி மகிழ்கிறேன்.

தமிழ் இணையத்தின் தொடக்க காலப் பயனாளர்களின் தனித்தமிழ் ஆர்வத்தால்தான் நல்ல பல தமிழ்க் கலைச்சொற்கள் வேரூன்றின என்பதில் ஐயமே இல்லை.

சன் டிவியின் தொடக்க கால இயக்குநர்களின் கருத்தினால்தான் தமிங்கிலம் ஒரு திராவிடக் கட்சியின் ஊடகத்தின் மூலம் பல்கிப் பெருகிப் பரவியது என்பதிலும் ஐயமே இல்லை.

என்னுடைய இளம் பருவத்தில் இயக்குநர் பாலச்சந்தர் படங்களில் மேஜர் சுந்தரராஜன் பாத்திரம் ஆங்கிலத்தில் ஒரு வசனத்தைப் பேசி உடனேயே அதை அவரே தமிழில் மொழி பெயர்த்துச் சொல்லுவார்.  அதாவது உயர்-நடுத்தரக் குடும்பங்களில் ஆங்கிலத்தின் தாக்கம் இருந்ததால் அவர்கள் பேச்சுமொழியில் ஆங்கிலம் வெகுவாகக் கலந்திருந்ததைச் சுட்டிக் காட்டும் அதே நேரத்தில் நாட்டுப்புற மக்களுக்கும் கதை புரிவதற்காகத் தமிழில் மொழி பெயர்க்க வேண்டியிருந்தது.

அம்மாவை ‘மம்மி’ என்றும், அப்பாவை ‘டாடி’ என்றும் சொல்வது உயர்குலச் செல்வந்தர் குடும்பங்களின் அடையாளங்களாய் உருவெடுத்தன.  இன்று அப்படிப் பேசுவதுதான் நாகரீகம் என்பதும், அப்படிப் பேசாதவர்கள் பட்டிக்காடுகளென்றும் அடையாளங்களாகி விட்டன.  இதை வளர்த்தவர்கள் குமுதம், விகடன் போன்றோர் மட்டுமல்ல, அங்கிருந்து சன் டிவிக்குச் சென்று அதே நாகரீகத்தை உருவாக்கிய தமிங்கிலத் தாலிபான்களும்தான். ;-)

ஆனாலும், இவர்களையும் மீறித் தனித்தமிழ் இன்றும் தழைத்துக் கொண்டுதான் இருக்கிறது.  சிக்கல் அதுவல்ல.

கலைச்சொற்களை உருவாக்கும் களம் வேறு, அறிவியற் கட்டுரைகளை உருவாக்கும் களம் வேறு.  கலைச்சொற்களைப் பரப்பும் களம் வேறு.  சில சொற்களை சுஜாதா போன்றவர்களே பரப்பினார்கள். முதலில் கம்ப்யூட்டர், இண்டர்நெட் என்று எழுதிய அதே சுஜாதா, கணினி, இணையம் என்ற சொற்கள் தமிழ் இணையத்தின் முதற்பயனாளர்களிடம் இயல்பாகப் புழங்குவதைக் கண்டு அவரே தனது கடைசிப் பக்கக் கட்டுரைகளில் இதை எழுதிப் பரப்பினார்.  தான் முன்னர் எழுதியது தவறு என்று சொல்லித் தன்னைத் தானே திருத்தி எழுதிய அவரைப் போன்ற பெருந்தன்மையுள்ள அறிவியல் கட்டுரையாளர்களைக் காண்பது அரிது.  மிக அரிது.  சுஜாதா செய்தார் என்பதற்காக எல்லோரிடமும் அதே பெருந்தன்மையை நாம் எதிர்பார்த்தால் ஏமாறுவோம்.

ஜெயபாரதன் கட்டுரையிலும் நல்ல பல தமிழ்ச் சொற்கள் உள்ளன.  அவருக்குப் பழக்கப் பட்ட பழைய கலைச்சொற்களைக் கொண்டு எழுதுவதால் அவரால் விரைவாகப் பல நெடுங்கட்டுரைகளை எழுத முடிவதால், அவரிடம் கலைச்சொற்களை மாற்றச் சொல்லத் தயங்குகிறேன்.  புதிய கலைச்சொற்களை அவரே படைக்கும் முன்னர் ஏற்கனவே தமிழ்ப் பள்ளி நூல்களிலும், கலைச்சொல் அகராதிகளிலும் இருக்கும் கலைச்சொற்களை அவரே பார்த்து எடுத்துக் கொண்டால் படிப்பவர்களுக்குக் குழம்பாது.

கலைச்சொற்களை ஆளுக்கு ஆள் மாற்றிக் கொண்டே இருந்தால் அறிவியல் கட்டுரை படிப்பவர்களுக்குப் பொறுமை இழந்து போய் விடும்.  அடிப்படைக் கலைச்சொற்களில் தரமான ஒரு கோட்பாடு கொண்டு படைப்பவர்கள் ஒரு புறம் இருக்க வேண்டும்.  அப்படிப் படைக்கப் பட்ட கலைச்சொற்களைத் தம் கட்டுரைகளில் எடுத்தாளும் நண்பர்களும் வேண்டும். அப்படிக் கலைச்சொற்கள் பரவிய பின்னர்தான் பொதுமக்களுக்கு எழுதும் ஜெயபாரதன் போன்றோர் அப்படிப் பட்ட கலைச்சொற்களை எடுத்தாளக் கூடும்.

விஞ்ஞானம் என்ற சொல் வழக்கிலிருந்து அருகி (591,000 Google results ) அறிவியல் என்ற சொல் பரவி (1,870,000 Google results ) 40 ஆண்டுகளுக்கு மேலாகிறது. ஆனாலும், அது வழக்கொழிந்து போகவில்லை.  அறிவியல் என்று எழுதினால் மேலும் பலருக்குப் புரியும் என்பதை உணர்ந்தால் ஜெயபாரதன் அறிவியல் என்ற சொல்லை எடுத்தாளக் கூடும்.  அப்படி எழுதுவதால் அவருக்குச் சிந்தனைத் தடையோட்டம் ஏற்பட்டு அவரால் எழுத முடியவில்லை என்றால் அவர் விஞ்ஞானம் என்றே எழுதிக் கொள்ளட்டுமே.  அது அவரது வயதைக் காட்டும் அறிகுறி மட்டும்தான்.  அவரே சயன்ஸ் என்று எழுதினால் (4,450 Google results ) தமிங்கிலத்தைக் குறைக்கச் சொல்லிக் கேட்கலாம்.  மாட்டேன் என்று சன் டிவி போல் அடம் பிடித்தார் என்றால்?

மற்றவர்களும் ஜெயா டிவி, விஜய் டிவி, மெகா டிவி, கேப்டன் டிவி, என்று ஈயடிச்சான் காப்பி(!) அடித்தால் சேன்னலை (73 results ) மாற்றக் கூட வாய்ப்பில்லாமல் போய் விடுமே!

எனவே எழுத்துகளையும் எழுத்தாளர்களையும் ஊக்குவிப்போம்.  நல்ல தமிழில், நடைமுறைத் தமிழில், தனித்தமிழில் எழுதுபவர்களுக்குப் பரிசு வழங்கிப் பாராட்டி ஊக்குவிப்போம்.  குறை சொல்வதால் யாரும் மாறப் போவது இல்லை.  பாராட்டினால் மகிழ்வார்கள்.

பாராட்டுவோம்.

தாலிபான் போன்ற சொற்கள்  தேவையில்லை.

ஜெயபாரதன் அவருக்குக் கை வந்த நடையிலேயே எழுதட்டும். மற்றவர்கள் அவரைக் கூர்ந்து கவனித்தால், அவரும் நல்ல பல தனித்தமிழ்ச் சொற்களில் எழுதுகிறார் என்று புலப்படும். அதைப் பாராட்டுவோம்.

அவரையும் ஐதரசன், ஈலியம் என்று எழுத வைக்க வேண்டும் என்றால் அவர் கலந்து கொள்ளும் குழுமங்களில் பலரும் ஐதரசன், ஈலியம் என்று எழுத வேண்டும்.

இல்லையேல், அவர் தாம் எழுதுவது தமது வாசகர்களைச் சென்றடைகிறதா என்று கவலை கொள்ள நேரிடும்.

பேரா. செல்வகுமார், பிறமொழி ஒலிப்புகளைத் தமிழில் துல்லியமாகக் கொண்டுவரத் தேவையில்லை என்பதை வலியுறுத்தி எவ்வாறு நாம் அன்றாடம் வழங்கும் ஆங்கிலச் சொற்களுக்கு மேலை நாட்டு மொழிகளிலிலும் வேற்று ஒலிகள் வழங்குகின்றன என்று குறிப்பிடுகிறார்.

இது தொடர்பாக, யூனிகோடு நுட்பக் குழுவுக்கு கிரந்தம் தொடர்பான கருத்து வழங்கும் மனு ஒன்றில் காஞ்சியைச் சேர்ந்த சமஸ்கிருத விற்பன்னர்கள் சிலர் தமிழில் குறிப்பிட்டிருக்கும் பகுதியை மேற்கோள் காட்ட விரும்புகிறேன்:

"எந்த லிபியும் தனது இயற்கையான மொழியல்லாத மற்ற மொழிகளைக் குறிப்பதில் அந்தந்த மொழிகளின் இயற்கையான லிபிகளுக்கு ஸமமான ஸாமர்த்யம் பெற்றிருக்கவியலாது. எடுத்துக் காட்டாக read red எனப்படும் வெவ்வேறு ஆங்கிலச் சொற்கள் பாரதீய லிபிகளில் रेड् ரெட் என்பது போல ஒரே முறையில்தான் எழுதப்பட வேண்டியிருக்கின்றன.  ஆக இந்த சொற்களை பாரதீய லிபிகளில் எழுதினால் எழுத்திலிருந்து பொருள் வேற்றுமை விளங்காது.  இது யூனிகோட் அதிகாரிகளுக்குத் தெரிந்தே இருக்கும்.  ஆக க்ரந்த லிபியானது தனது இயற்கை மொழியான ஸம்ஸ்க்ருதத்தைத் தவிர்த்த மற்ற மொழிகளைக் குறிப்பதில் மலையாள லிபியையோ அல்லது வேறு எந்த லிபியையோ ஒத்த ஸாமர்த்யத்தைப் பெற்றிருக்கும்படி க்ரந்தத்தில் எழுத்துக்களைச் சேர்த்துக்கொண்டே போவதில் பொருளில்லை.”

- தமிழ்நாட்டு க்ரந்த பயனீட்டாளர்கள் சார்பில் வித்வான்கள், 2010-06-20

யூனிகோடு அதிகாரிகளுக்கு ”க்ரந்த லிபி பயன்படுத்தும் வித்வான்களின் வேண்டுகோள்”  Unicode document L2/10-233

இதுதான் யூனிகோடு நுட்பக் குழுவுக்கு அனுப்பப் பட்ட கட்டுரைகளில் தமிழில் உள்ள முதல் கட்டுரை என்பது குறிப்பிடத் தக்கது.   அதே கருத்தை ஆங்கிலத்திலும் பின் வருமாறு மொழி பெயர்த்திருந்தனர்:

"It is not possible for every script to be equally capable – in representing any language other than its native language – as the native script of that language. For
example, the English words “read” (past tense) and “red” (colour) will both be written in Indian scripts only as  रेड् ரெட்  etc and it is not possible to get the difference in meaning via Indian scripts. The Unicode officials will certainly know this. Therefore there is no meaning in adding newer and newer characters to make Grantha (or any other script) equally as capable as other scripts, whether Malayalam or otherwise, in representing other languages, i.e. languages which the script was not originally evolved for, which in the present case all languages other than Sanskrit."

சமஸ்கிருத வித்துவான்கள் கிரந்த எழுத்துமுறைக்குச் சொல்வது தமிழ் எழுத்து முறைக்கும் முற்றிலும் பொருந்தும் என்பது எனது தாழ்மையான கருத்து.

 நண்பர் செல்வாவின் கூற்றுகளில் அடிப்படை ஏரணம் உள்ளது.  முன்பு சமஸ்கிருதம்,  இப்போது ஆங்கிலம்,  நாளை சீனம் என்று ஆதிக்கம் செலுத்தும் மொழிகளுக்காகத் தமிழில் எழுத்துகளைக் கூட்டிக் கொண்டே போவது என்பது அரசனை நம்பிப் புருசனை விட்ட கதை போலத்தான். 

கணினியா கம்ப்யூட்டரா, இணையமா இண்டர்நெட்டா போன்ற வாதங்களுக்கு மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களே தனித்தமிழ்க் கலைச்சொற்களை ஏற்று ஒரு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.  பேச்சுத்தமிழில் எது வந்தாலும், எழுத்துத்தமிழில் கணினியும் இணையமும் ஒரு தனியிடம் பெற்றுவிட்டன.


எந்த ஒரு தொழில்நுட்பத்தையும் தமக்கு உள் வாங்கித் தாம் பெயரிட்டு அழைக்கும் வரை அது அந்நியமாகத்தான் தோன்றும். பிலாக், பிளாக், ப்லாகர் என்றெல்லாம் அந்நியமாயிருக்கும் நுட்பம் வலைப்பூக்கள், வலைப்பதிவர்கள் என்று நமக்கு நெருங்கும்போது இது ஆங்கிலத்தில் புலமை கொண்ட மேல்தட்டு மக்களுக்கு மட்டுமல்ல, தமிழில் எழுதத் தெரிந்த அனைவருக்கும் என்ற உரிமையை எடுத்துக் கொள்ள முடிகிறது.

அதற்காகக் கலைச்சொற்கள் தனித்தமிழில் வரும் வரை காத்திருங்கள் என்று சொல்லப் போவதில்லை.  ”வயர் ரீவைண்டிங் செய்வது எப்படி” என்பது போன்ற நூல்களைப் படித்து எண்ணற்ற குட்டித் தொழிற்பட்டறைகளை உருவாக்கி முன்னேறியவர்கள் பலர்.  அவர்களுக்குத் தொழில்நுட்பம் உடனடித்தேவை.  ஆனால், தொழிற்பட்டறை உழைப்பாளியாய் மட்டுமில்லாமல் சிந்தித்துப் புதிய தொழில்நுட்பம் உருவாக்க வல்லமை பெற்ற அறிவியலாளராய், நுட்பவியல் வல்லுநராய் ஆவதற்குத் தாய்மொழியில் கலைச்சொற்கள் தேவை.  ஆங்கிலத்தின் மூலம் பிறநாட்டு நல்லறிஞர் சொல்வது என்ன என்பதைத் தெரிந்து கொள்ளவும் வேண்டும்.  பாரதி சொல்வது போல கலைசெல்வங்கள் யாவையும் தமிழில் கொண்டு வந்து சேர்க்க வேண்டும்.  அப்படிச் சேர்த்தால்தான், தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட எண்ணற்ற தமிழர்கள் புதுப்புது நுட்பங்களைக் கண்டறிய முடியும்.  இல்லையேல் தற்போது இருப்பது போல, எந்த மொழியிலும் நுட்பமான கருத்தைத் தெளிவாகச் சொல்லும் திறமை இல்லாத தமிழர்கள் எண்ணிக்கைதான் கூடும்.

கலைச்சொல்லாக்கக் கோட்பாடுகள் குறித்து ஜெயபாரதன் - செல்வா பட்டி மன்றங்கள் எண்ணற்ற பல ஏற்கனவே அரங்கேறியுள்ளன.  இருவரிடமும் நல்ல பல கருத்துகள் இருப்பினும்,  இருவருமே தம் கொள்கைகளை மாற்றிக் கொள்ளப் போவது இல்லை. எனவே இது குறித்த விடாக்கண்டன் - கொடாக்கண்டன் பட்டிமன்ற விவாதங்கள் அலுப்புத்தட்டத் தொடங்கி விடுகின்றன.  எனவே ஒவ்வொருவருமே என் வழி, தனீஇ வழி என்று பாட்டை போட்டு நடப்பதே நலம்.

ஆனாலும், பட்டிமன்றங்கள் தொடரத்தான் போகின்றன.  நாமும்  ”கற்பினில் சிறந்தவள் கண்ணகியா மாதவியா” என்ற பொங்கல் பட்டி மன்றங்களை அவற்றின் சொற்சுவைக்காக மட்டும் கேட்பதுபோல் கால் மேல் கால் போட்டுக் கொண்டு சுவைத்து மகிழ்வோம்.

செவ்வாய், டிசம்பர் 14, 2010

கல்வெட்டுகள் நம்மை ஏமாற்றுகின்றனவா?

தமிழ் உலகம் மடற்குழுவில் நண்பர் திரு நக்கினம் சிவம் “கல்வெட்டுகளைக் கண்டு ஏமாறாதீர்கள்” என்ற தலைப்பில் (http://groups.google.com/group/tamil_ulagam/browse_thread/thread/4deeb86b729a307b#)  ஒரு வாதத்தை முன் வைக்கிறார்.  கல்வெட்டுகளை மட்டும் வைத்துக் கொண்டு கிரந்தம் தமிழகத்தை ஆண்டதாக “அறிவு சீவிகள்” சொல்வதாக எடுத்துக் கொண்டு ஒரு சோளக் கொல்லைப் பொம்மையை வெட்டிச் சாய்ப்பது போல இல்லாத ஒரு வாதத்துக்கு மறுப்பு வைக்கிறார்.

உண்மையில் கிரந்த எழுத்துகள் தமிழை ஆண்டிருந்தால்,  தமிழ் எழுத்துகள் முற்றிலும் மறைந்து போயிருக்கும்.  தெலுங்கு, கன்னட மொழிகளுக்குத் தனி எழுத்துகள் தோன்றுவதற்கு முன்னரே தமிழுக்கு எழுத்து வடிவம் இருந்ததற்குக் காரணமே தமிழ் மன்னர்களின் தனி ஆட்சிதான் என்பார் கல்வெட்டு ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் அவர்கள்.

ஆனால், தமிழகத்தில் கிரந்தமும் இருந்தது.  அது அரசர்களின் கல்வெட்டுகளிலும் இருந்தது.  அது மட்டுமல்லாமல், கிரந்த எழுத்துகள் தென்னகத்தின் பல மொழிகளுக்கும், தென்கிழக்கு ஆசியாவின் எண்ணற்ற பல மொழிகளுக்கும் எழுந்த எழுத்துகளுக்குத் தாய் வடிவமாகவும் இருந்தது என்பதுதான் வரலாற்று ஆய்வாளர் கருத்து.


கல்வெட்டு ஆராய்ச்சி என்பது தமிழ்நாட்டு வரலாற்றைப் பற்றி அறிந்து கொள்ள மிக இன்றியமையாத ஒரு தரவு.  கிரந்த எழுத்துகள் பல்லவர் வருகைக்குப் பின்னரே தலைதூக்குகின்றன.  அதற்கு முன்னர் இருந்த கல்வெட்டுகளால் தமிழ் வரலாற்று நிகழ்வுகள் பல உறுதியாகின்றன.  அவை எவையும் கிரந்தத்தில் இல்லை.  கல்வெட்டுகள் மட்டுமல்லாமல் செப்பேடுகளும் தமிழக வரலாற்று நிகழ்வுகளை அறிய இன்றியமையாதவை.

பல்லவப் பேரரசர்கள், சோழப் பெருவேந்தர்கள், பாண்டிய மன்னர்கள் ஆட்சிக் குறிப்புகள் பலவற்றைப் பற்றி அறியக் கல்வெட்டுகள் உறுதியாகத் தேவை.  கல்வெட்டுகளைச் செதுக்கிய குடியினர் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிராத குடிகளாக இருந்திருக்கக் கூடும்.  கல்வெட்டுகளில் தமிழ் எழுத்துகளில் இருக்கும் பிழைகள், எழுத்துகளைக் கலந்திருக்கும் முறை, வரிவடிவங்களின் அழகியல் தன்மை, என்று பல கோணங்களில் இவற்றைப் பார்க்கும் போது கல்வெட்டுகளைச் செதுக்கியவர்களுக்குத் தாம் செதுக்கிய மொழி புரிந்திருக்கிறதா என்று சில நேரங்களில் ஐயப் பட வேண்டியிருக்கும்.  ஆனால், எண்ணற்ற பல கல்வெட்டுகளில் பிழைகள் குறைவு.  செதுக்கியதைத் திருத்த முடியாத நிலையில், சிற்பியைக் குறை சொல்ல முடியுமா எனத் தெரியவில்லை.

கல்வெட்டுகள் பலவற்றில் கிரந்தம் மட்டுமல்ல, தமிழ் வட்டெழுத்தும், பிற்காலத் தமிழ் வரிவடிவமும் உள்ளன.  கல்வெட்டுகளைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புபவர்கள் ஒரு சில கல்வெட்டுகளையாவது நேரில் சென்று பார்க்க வேண்டும்.  மசிப்படிகள், மற்றும் எழுத்து வடிவங்களில் வந்துள்ள நூல்களைப் படிக்க வேண்டும்.

சோழர்களுக்குக் கீழ் இருந்த தெலுங்கு, கன்னட நாடுகளில் கல்வெட்டுகள் கிரந்தத்தில் மட்டுமல்ல, தமிழிலும், ஏன் கிரந்த எழுத்துகளில் தெலுங்கு, கன்னட மொழிகளிலும் உள்ளன.  கிரந்த எழுத்துகளில் எழுதப் பட்டிருக்கும் தெலுங்கு, கன்னட மொழியில் இருக்கும் கல்வெட்டுகளில் கணேசன் சொல்வது போல “திராவிட எழுத்துகள்” இல்லை.  தெலுங்கு, கன்னட மொழிகளில் எகரம், ஒகரம் இருப்பினும், அந்த எழுத்துகள் கொண்ட பெயர்கள் இக்கல்வெட்டுகளில் இருப்பினும், கிரந்த எழுத்து முறையை மாற்றிக் கொள்ளாமல், அவர்கள் வழக்கப்படி ஏகார ஓகார எழுத்துகளில் தான் தெலுங்கு/கன்னட எகர, ஒகரத்தைக் குறித்திருக்கிறார்கள்.  இது குறிப்பிடத் தக்க தரவு.  இதைச் சான்றாகக் கொண்டே கணேசனின் கூற்றை மறுக்க இயலும்.

அரசர்களின் ஆணைப்படி எழுதிய கல்வெட்டுகள், செப்பேடுகள் இவற்றை எவ்வாறு சமைப்பது என்பதற்கு ஒரு முறைமை இருந்திருக்கிறது.  இந்த முறைமையைப் பற்றி வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.  கல்வெட்டுகள், செப்பேடுகளின் மசிப்படிகள் 1908 வரை திரட்டியவை மட்டுமே நூறாயிரத்தையும் கடந்திருக்கிறது.  இந்தியாவிலேயே எண்ணிக்கையில் கூடுதலான கல்வெட்டுகள், மற்றும் செப்பேடுகள் தென்னகத்தில், குறிப்பாகத் தமிழகத்தில் இருந்திருக்கின்றன.  இவற்றில் பெரும்பான்மையானவை தமிழ் எழுத்துகளிலும், வட்டெழுத்துகளிலும் இருக்கின்றன.  ஆயினும் மெய்க்கீர்த்தி என்ற அரசப் பெருமைகளைப் பறைசாற்றும் செய்திகளைக் கிரந்த எழுத்துகளில், வடமொழியில் எழுதியிருக்கிறார்கள்.  இது, இன்றைக்கு நடக்கும் திறப்பு விழாக்களில் ஆங்கிலத்தில் கல்வெட்டுகளைப் பொறிப்பது போன்றது.  தம் அரசர் பெருமையை தமிழரல்லாதவர்களுக்கும் தெரிவிக்க கிரந்த எழுத்துகளில் வடமொழியில் எழுதியிருக்கும் வாய்ப்பு இருக்கிறது.  ஆனால், கல்வெட்டுகளின் முக்கிய நோக்கங்களை, அதாவது யார் எதற்கு என்ன கொடை வழங்குகிறார்கள் போன்ற உள்ளூர்ச் செய்திகளைப் பெரும்பாலும் தமிழில், தமிழ் எழுத்துகளில் பொறித்திருக்கிறார்கள்.

நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல, உண்மை சுட்டாலும், (தமிழகத்தில் உள்ள கல்வெட்டுப் பகுதிகள் தமிழில் இல்லாமல் இருப்பது சுடுகிறது என்றாலும்), உண்மை உண்மைதான்.

அது இல்லை என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதில் பொருள் இல்லை.

தமிழ்ப் பெருவேந்தர்கள் கடல் கடந்தும் படை எடுத்துச் சென்று பல்வேறு நாடுகளை வென்றார்கள்.  இமயத்தில் சேரன் வில்லைப் பொறித்திருக்கலாம். ஆனால், கடாரத்திலும், சாவகத்திலும், சோழன் தமிழைப் பொறிக்கவில்லை.  வடமொழியைத்தான் பொறித்திருக்கிறான்.

இன்றைய நிலையிலும், பல அரசாணைகள், நீதி மன்றத் தீர்ப்புகள், அரசுக் கல்வெட்டுகள் ஆங்கிலத்தில்தான் இருக்கின்றன.  தமிழகத்தின் தலைநகரத்தில், கடைகள், பொது நிறுவனங்களின் பெயர்களைத் தமிழிலும் (நோக்குக, தமிழில் மட்டுமல்ல, தமிழிலும்) எழுதுவதற்கு அரசு ஆணை பிறப்பிக்கவே 2010 வரை காத்திருக்க வேண்டியிருந்திருக்கிறது.  அப்படியும், முற்றிலும் எல்லோரும் மாறவில்லை.  பெங்களூரில் தெருப்பெயர்கள், பேருந்துகள், கடைப் பெயர்கள் எல்லாமே கன்னடத்தில் மட்டுமே இருக்கிறது.  அங்கே முணுமுணுக்காமல் சட்டத்தின் கீழ்ப்படிந்த அதே வணிகர்கள், தமிழகத்தில் போர்க்கொடி உயர்த்துகின்றனர்.

தமிழ்நாட்டில் தமிழையும் ஒரு பாடமாகப் படிக்கச் சொல்வதற்கே நீதிமன்றம் வரை எதிர்க்கப் போகிறார்கள்.  இங்கிருக்கும் சிறுபான்மையர் உரிமைகளைப் பறிப்பது போல் இல்லையா என்ற கூக்குரல் கேட்கிறது.  தனிமனித உரிமைகளைப் பறிப்பது போன்றது இத்தகைய ஆணை என்று நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்குகின்றன.  ஆனால், கருநாடகத்தில் கன்னடம் படிக்க வேண்டும் என்பதை முணுமுணுக்காமல் ஏற்றுக் கொள்கிறார்கள்.

ஆனால், தமிழர்களுக்கு மட்டுமே தமிழ் வெறியர்கள் என்ற பழிச்சொல்.

இன்னும் மொழி ஆளுமை பற்றிய செயல்களில் தமிழ்நாட்டில் தமிழர்களுக்குள்ளேயே ஒரு சரியான புரிதல் இல்லை.  வடமொழி வெறுப்பும், ஆங்கிலத்தின் மீது ஈர்ப்பும், தமிழ்ப் புறக்கணிப்புமே திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தலையெடுத்திருக்கின்றன.

நம் வரலாறு பற்றியும் உண்மையை அறிந்து கொள்ளும் அடிப்படையில் இல்லாமல், தொன்மங்களின் அடிப்படையில் நாம் விரும்பும் செய்திகளை வரலாற்றின் மீது மேற்பூச்சு பூசிக் கற்பனை செய்வதில் நமக்கு ஏதோ ஒரு மகிழ்ச்சி வருகிறது.  இந்தத் தாழ்வு உளப்பாங்கு தேவையற்றது. 

களப்பிரர்களும், பல்லவர்களும் வந்தேறிகள்தாம்.  அவர்கள் தம்முடன் தம் சமயங்களையும், தம் மொழிகளையும், கொண்டு வந்தனர்.  தமிழ் அரசர்களை முறியடித்து வேற்று அரசுகளை நிறுவினர்.  இது வரலாறு.  ஆனாலும், களப்பிரர்களும், பல்லவர்களும், நம்முள் கலந்து விட்டார்கள்.  தமிழர்களாகி விட்டார்கள்.  காலப்போக்கில் தமிழ் மீண்டும் தலை எடுத்தது. பின்னர், மீண்டும் தமிழ் மன்னர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் பிறமொழிகளும், பிறர் ஆட்சிகளும் தலையெடுத்திருந்தாலும், தமிழர்களின் விடாமுயற்சியால் தமிழ் இம்மண்ணில் வேரூன்றியிருக்கிறது.  ஆங்கிலத்தின் மாபெரும் தாக்கத்தின் கீழும், அரசு ஆதரவு கொண்டு இந்தியின் ஆட்சியின் கீழும், தமிழ் தளரவில்லை. 

இணையம் என்ற ஒரு களம் உருவானவுடனேயே, எந்த அரசின் ஆதரவும் இல்லாமல், தமிழர்கள் தாமே உருவாக்கிய குறியீட்டு முறையில் தமிழை வலையேற்றி உலகெங்கும் பரப்பினார்கள்.  இந்தத் தனித்தன்மை இருக்கும் மட்டும், தமிழ் என்றும் வாழும்.  அதற்காகத் தமிழகத்தில் வேற்று மன்னர்கள், வேற்றுக் குடிகள், வேற்று மொழிகள், மேலோங்கவே இல்லை என்று சொல்லிக் கொள்வது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதற்கு ஒப்பாகும்.

ஏனைய நாடுகளைப் போலவே, தமிழ் மண்ணிலும், பல பண்பாடுகள், மொழிகள், கருத்துகள், கலந்து ஊடாடின.  எண்ணற்ற பல குடிகள் இங்கு வந்து சேர்ந்தார்கள்.  அவர்கள் இன்று தம்மைத் தமிழராகத்தான் அடையாளம் காணுகின்றனர். இங்கு வந்து சேர்ந்த குடிகள் கொண்டுவந்த கலைச்செல்வங்கள் யாவும் தமிழுக்கு உரம் சேர்த்திருக்கின்றன.  தமிழன்னை தனக்கே உரிய வகையில் இவற்றை எடுத்துக் கொண்டு இன்றும் நம் உள்ளங்களை ஆளுகின்றாள்.

நாம் இந்த உண்மையைக் கொண்டாடலாமே!

அன்புடன்,

மணி மு. மணிவண்ணன்
சென்னை, தமிழ்நாடு
2010/12/14 Nakinam sivam

கல்வெட்டுகளைக் கண்டு ஏமாறாதீர்கள்


பல்லவர்கள் காலத்தில் சமசுகிருதமே மேலோங்கி இருந்தது மற்றும் பல தமிழ் மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் தமிழ் மொழி நடைமுறையிலேயே இல்லை என்று கோயில்களில் காணப்படும் கல்வெட்டுகளில் உள்ள சமசுகிருத கிரந்த எழுத்துக்களை வைத்து ஒரு சில அறிவு சீவிகள் கிரந்த எழுத்துக்கள் ஒரு காலத்தில் தமிழகத்தை ஆண்டது போல தங்களது கற்பனைக்கு உயிரோட்டம் அளிக்க முயல்கின்றார்கள்.


இந்த விதமான அறிவு சீவிகள் கல்வெட்டுகளில் உள்ள கிரந்த எழுத்துக்களை வைத்து மட்டும் அம்மொழியே தமிழகத்தை ஒரு காலத்தில் ஆண்டது என்ற ஒரு கருத்தை முன் வைக்கின்றார்கள்.


அவர்கள் பழங்காலத்தில் இருந்து இன்று வரை ஆலயங்கள் யாருடைய கைப்பாவையாக இருந்து வருகின்றன என்பதை கருத்தில் கொள்ளாமல் கல்வெட்டுகளில் காணப்படும் கிரந்தத்தை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு கிரந்தமே தமிழகத்தை ஆண்டது என்று ஒரு குறுக்கு சால் ஓட்டுகின்றார்கள்.


ஒரு உண்மை ஒரு சிலரை சுட்டாலும் அதுதான் உண்மை


அந்த உண்மை


இந்த இருபத்து ஒன்றாம் நுாற்றாண்டிலும் நமது தமிழக ஆலயங்களில் தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும் என்ற பலகைகள் தொங்கிக்கொண்டிருக்கின்றன என்றால் பல நுாறு, அயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எப்பழ தமிழ் மொழியை ஆலயத்தினுள் உள்ள கல்வெட்டுகளில் எழுத விட்டிருப்பார்கள். ஆகம விதி என்ற ஒரு புரட்டை வைத்துக்கொண்டு அதனை சாக்காக வைத்துக்கொண்டு தமிழ் பொன்ற நீச மொழி ஆலயத்தில் எழுதப்பட்டால் ஆலயத்தில் இறைவன் குடி கொள்ள மாட்டார் என்று ஏன் கூறி இருக்க மாட்டார்கள்.


மேலும் கல்வெட்டுகளை பொறிப்பவர்கள் யார் என்று பார்த்தால்
அவர்கள் ஆலயங்களை உருவாக்கும் கல்தச்சர்கள் எனப்படும் சிற்பிகளாகும்.


சிற்பிகள் ஆலயத்தை நிர்மானிக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு ஆகம விதிகள் தெரிந்து இருக்க வேண்டியது அவசியம்.


ஆகம விதிகள் அனைத்துமே சமசுகிருதத்தில் ஒருசிலர் மட்டுமே தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்டது.
இருப்பினும்
ஆலயத்தை ஆகமப்படி நிர்மாணிக்க வேண்டுமே என்பதற்காக அந்நாளையிலிருந்தே சிற்பிகளுக்கு கிரந்தம் கற்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு வந்துள்ளது.


அப்படி
தெரிந்த கொண்ட மொழி - மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியாத ஒரு மொழி தனக்கு தெரிந்துள்ளது என்பதனால் - அதன் மூலம் வேதத்தின் பொருளையும் பரிந்து கொள்ள முடிந்ததனால் அவர்கள் தங்களை ஆச்சாரியர்கள் என்றும் பிற்காலத்தில் ஆசாரிகள் என்றும் மறுவி அழைத்துக்கொண்டனர்.


இன்றைக்கும் ஆசாரிகள் என்று அழைக்கப்படும் ஒரு பிரிவினர்
வேதத்தின் உட்பொருளான பிரம்மமே தெய்வம் என்னும் பொருளில்
விராட்விஸ்வ பிரம்மனே நம
என்று எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்பு கூறுவதை காணலாம்.


தமிழ் நீச மொழி என்று ஆலயத்தில் நுழையக்கூடாது என்று இன்றைய நாளிலேயே சமசுகிருதத்திற்கு வக்காலத்து வாங்கும் மனிதர்கள் இருக்கும் போது அன்றைய காலக்கட்டத்தில் எப்படி தமிழை ஆலய கல்வெட்டுகளில் பொறிக்க ஒப்புக்கொண்டு இருப்பார்கள் என்று சிந்திக்க வேண்டும்.


ஆகவே கல்வெட்டுகளில் கிரந்த எழுத்துக்கள் இருக்கின்ற என்பதற்காக கிரந்தம் ஒரு காலத்தில் ஆட்சி செய்தது என்று வாதிடுவது குறுக்கு சால் ஓட்டும் அறிவு சீவிகளுக்கு வேண்டுமானால் பயன்படலாம்.


பயணம் தொடரும்


சிவம்

ஞாயிறு, டிசம்பர் 12, 2010

கிரந்தப் பூச்சாண்டி

தமிழெழுத்தும் கிரந்தமும் குறியேற்ற ஊடாடல்களும் என்ற தலைப்பில் தமிழ் மன்றம் மடற்குழுவில் இராமகி ஐயா தொடங்கி வைத்த இழையில் நான் எழுதிய ஒரு கடிதத்தின் திருத்திய வடிவத்தை இங்கே தருகிறேன்.  [மூலத்தை http://groups.google.com/group/tamilmanram/browse_thread/thread/484fd5956593823c என்ற சுட்டியில் பார்க்கலாம்.]

கிரந்தப் பூச்சாண்டி

கல்வெட்டுகளும், செப்பேடுகளும் மட்டுமே நமது வரலாற்றுத் தடயங்கள்.  அவை இல்லா விட்டால், நாம் “மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்” பேசும் மாக்கள் மட்டுமே.  கல்வெட்டுகள் இல்லையேல் வரலாற்றாய்வாளர்களால் மாமன்னன் அசோகன் என்று ஒருவன் இருந்தான் என்பதையே கண்டு பிடித்திருக்க முடியாது.  கல்வெட்டுகள் இல்லையேல் அதியமான் நெடுமானஞ்சி ஔவைப் பாட்டிக் கதையில் வரும் ஒரு கற்பனைப் பாத்திரமாக மட்டுமே இருந்திருப்பான்.  கல்வெட்டுகள் இல்லையேல் “பொன்னியின் செல்வன்” கதை எழுதுவதற்கு கல்கிக்கு ஒரு செய்தியும் கிடைத்திருக்காது.  கல்வெட்டுகள் இல்லையேல் தமிழர்கள் வாழ்வில் சமணம் எத்தகைய தாக்கம் செலுத்தியிருந்திருக்கிறது என்பதை நாம் அறிந்திருக்க மாட்டோம். கல்வெட்டுகள் இல்லையேல் மாமல்லை நமக்கு இன்றும் புரியாத ஒரு விந்தை உலகமாகத்தான் தெரிந்திருக்கும்.

இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகள் கழித்துத் தமிழ்நாட்டில் வாழும் தமிழ் மக்கள் இன்றைய ஆவணங்களை ஆய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்களால் இன்றைய ஆங்கில ஆவணங்களை அப்படியே பதியாமல் நம் வரலாற்றை முற்றாகப் புரிந்து கொள்ள இயலும் என்றா நினைக்கிறீர்கள்?  ஆயிரம் ஆண்டுக்கு முற்பட்ட ஆங்கிலத்தோடு இன்றைய ஆங்கிலத்தை ஒப்பிட்டுப் பாருங்கள்.  அந்த மொழியின் வளர்சிதை மாற்றத்தால் பிற்கால ஆங்கிலத்தை வைத்துக் கொண்டு இன்றைய ஆங்கிலத்தைப் பிற்காலத் தமிழில் மொழிபெயர்த்து எழுதுவது வரலாற்றைப் பிழையின்றிப் பதிவு செய்ய வழிகோலும் என்றா சொல்ல முடியும்?  கிரந்தக் கல்வெட்டு மொழியை அப்படியே பதித்து விட்டுப் பிற்கால அறிஞர்கள் ஒவ்வொருவருக்கும் மூலத்தைப் புரிந்து கொள்ள வாய்ப்பளிக்க வேண்டியதுதானே அறிவியல்முறைக்குப் பொருத்தமானது?

கிரந்த எழுத்துகளில் இருக்கும் கல்வெட்டுகளை, செப்பேடுகளை, ஓலைச்சுவடிகளை அண்மைக் காலத்தில் தேவநாகரி வரிவடிவத்தில் அச்சிட்டு வருகிறார்கள்.  தமிழ் எழுத்துகளோடு தேவநாகரி எழுத்தும் கலந்து வந்திருக்கும் அவற்றைப் பார்க்கும்போது, கிரந்தத்தின் மீதுள்ள வெறுப்பால் தென்னகத்தில் வரலாற்றில் வேரூன்றாத நாகரி எழுத்துக்கு மேலிடம் கொடுப்பது விந்தையாகத் தெரிகிறது.  சொல்லப் போனால், நாகரி எழுத்தில் இருப்பதால் மேலும் பலரும் கல்வெட்டுப் படிகளைப் படிக்க முடிகிறது என்பது வேறு திறக்கு.  ஆனால், வரலாற்றை நாம் வரலாறாகப் பார்ப்பதில் என்ன தயக்கம் என்று எனக்குப் புரியவில்லை.

இல்லாத கட்டுக்கதைகளை நம்புபவர்களுக்கு உண்மையை அறியத் தயக்கம் ஏனோ?

தமிழர்கள் சிலருக்குக் கிரந்தம் பூச்சாண்டியாகத் தோன்றுவதால் கிரந்த எழுத்துகளை யூனிக்கோடு குறியீட்டில் ஏற்றக் கூடாது என்பது பூனை கண்ணை மூடிக்கொண்டால் புவி இருண்டு போகும் என்பதற்கு ஒப்பானது.

தென்னகத்தில் 1908 வரை எடுத்த கல்வெட்டு, செப்பேட்டுகளின் மசிப் படிகள் மட்டுமே நூறாயிரத்தைத் தாண்டும். அவை மட்டுமே பதிப்பாயுள்ளன. அதற்குப் பின் எடுத்தவற்றின் மசிப்படிகள் இன்னும் எத்தனை காலம் அழியாமல் இருக்குமோ தெரியாது.  1908க்குப் பின் கல்சுரங்கக் குத்தகைதாரர்களும், கல்வெட்டுகளின் பெருமை அறியாத எண்ணற்ற பலரும் பல கல்வெட்டுகளை அழித்து விட்டார்கள்.  நம்முடைய பழைய நாணயங்கள், ஓலைச்சுவடிகள் போன்ற பல செல்வங்களை அறியாமையால் நாம் அழித்தது போல நாம் கல்வெட்டுகளையும் விரைவாக அழித்துக் கொண்டிருக்கிறோம்.

பழைய ஓலைச்சுவடிகள் இருந்தென்ன பயன்? ஐம்பெருங்காப்பியங்கள் எல்லாமே குப்பைதானே!  சங்கப் பாடல்களை எல்லாம் ஏன் படிக்க வேண்டும்?  புதியது என்னவென்று தெரிந்து கொள்வது போதாதா என்ற குரல்களும் அவ்வப்போது ஒலிக்கத்தான் செய்கின்றன.  சாதி ஒழிப்பு போன்ற பல முற்போக்குக் கொள்கைகளுக்காகப் போராடிய திராவிட இயக்கம் அறிவுசார் கருத்துகளை மறுக்கும் தன்மையையும் வளர்த்து விட்டிருக்கிறது என்று குறைப்பட்டிருக்கிறார் தமிழ் அறிஞர் பேரா. நொபோரு கராஷிமா (http://www.thehindu.com/opinion/interview/article925942.ece).

பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஓலைச்சுவடிகளைப் போகி கொளுத்தினோம்.  இருபதாம் நூற்றாண்டில் கல்வெட்டுகளைக் கிரேனைட் ஆக்கினோம். இருபத்தோராம் நூற்றாண்டில் கல்வெட்டு எழுத்துகளைக் கூடப் பதிக்கக் கூடாது என்று கூட்டம் போடுகிறோம்.  முன்னாள் துணைவேந்தர் ஒருவரே ஆர்ப்பரிக்கும் கூட்டத்தின் கை தட்டலுக்காக "மீண்டும் கிரந்த எழுத்துகளுக்கு  இடம் தரக்கூடாது  வரலாற்று ஆவணங்களை தமிழிலே கொண்டுவர முடியும். முடியாது என்றால் அவற்றைத் தூக்கி எறியுங்கள்” என்று சொல்லியிருப்பது ஏமாற்றத்தைத் தருகிறது.  சங்கத்தமிழை ஆய்ந்த புகழ் பெற்ற  பெரும்புலவர்களின் நூல்கள் பல கல்வெட்டுச் சான்றுகளைக் கொண்டு தமிழ் கற்பித்திருக்கின்றன என்பதை நாம் மறந்து விடுகிறோம்.

தமிழ் மட்டுமல்ல, உலகின் பல மொழிகளும் இன்று ஆங்கிலத்தின் ஆதிக்கத்தில் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. பெருவழக்கொழிந்து போய், வெகு சிலருக்கு மட்டுமே தெரிந்த ஓர் எழுத்து முறை கோடிக்கணக்கான தமிழர்கள் அன்றாடம் புழங்கும் எழுத்து முறையை அழித்து விடும் என்று பூச்சாண்டி காட்டுவது விந்தையாக இருக்கிறது.

தமிழ் வீடு ஆங்கிலத்தீயால் பற்றி எரிந்து கொண்டிருக்கும்போது தோட்டத்தின் ஒரு மூலையில் வாடிக் கிடக்கும் கிரந்தச் செடியில் ஒரே ஒரு இலை தளிர் விட்டிருப்பதைப் பார்த்துக் குய்யோ முறையோ என்று கூக்குரலிடுவது பொருளற்றது.

கிபி ஆறாம் நூற்றாண்டில் தோன்றி,  அரசுக் கல்வெட்டு உரைநடையில் தமிழோடு கிரந்த எழுத்துகள் கலந்திருந்தாலும் கூட கிபி பதினான்காம் நூற்றாண்டு வரை தமிழ் இலக்கியத்தில் கலக்காத கிரந்த எழுத்துகள் எப்போது தமிழ் இலக்கியத்தில் நுழைந்தன?

மஹேந்திரவர்ம பல்லவன், ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன், என்று அரசர்களின் பெயர்களில் எல்லாம் கூடக் கிரந்தம் கோலோச்சியிருந்தும் தமிழ்ப் புலவர்கள் நாவில் ஏன் கிரந்தம் நடமாடவில்லை?  பின்னர் எப்படி வழக்கில் வந்தது?  ராஜராஜன் என்ற பட்டப் பெயரால் அழைக்கப் படும் அருண்மொழிவர்மன் தன்னால் கட்டப் பட்ட மாபெரும் தஞ்சைக் கோவிலுக்குப் “பெருவுடையார் கோவில்” என்றே பெயர் வைத்தான், அதைப் பொறித்தும் வைத்தான்.  அது பின்னாளிலும், இந்நாளிலும் மட்டுமே பிருகதீஸ்வரர் கோவில் என்றாயிற்று.  கம்பனின் இராமகாதையில் இல்லாத கிரந்தம், பின்னாளில் அருணகிரிநாதரின் திருப்புகழில் மணிப்பவழமாகப் புழங்குவதற்கு என்ன காரணம்?  தமிழ் மன்னர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் எழுந்த பண்பாட்டு மாற்றங்களை விட, கிரந்தம் என்ற எழுத்துமுறைதான் இதற்குக் காரணம் என்று சொல்வது ஏற்புடையதாகுமா?
மலையாளம் தமிழிலிருந்து பிரிந்ததற்கும், சேரநாட்டின்  தமிழர்கள் இன்று வேற்று ஆட்களாக, மலையாளிகளாகப் பிரிந்து போய் தமிழருடன் முரண்படுவதற்கும் கிரந்த எழுத்துமுறையைக் காரணம் காட்டுகிறார்கள்.  சோழப் பெருவேந்தர்களின் நூறாண்டுப் போர்கள், அடக்குமுறை, பிற சமயங்களின் தாக்கம், வந்தேறிகளின் பண்பாட்டுக் கலப்பு, கடலோடி வணிகம், சேர மன்னர்களின் வீழ்ச்சி இன்ன பிறவற்றால் நேரிட்டவற்றை விட கிரந்தக் குறியீட்டால் மட்டும் சேரத் தமிழர்கள் மலையாளிகளாய்ப் பிரிந்தார்கள் என்று சொல்லுவது ஏற்புடையதல்ல.

கிரந்தக் குறியீடுகள் தமிழர்கள் மொழியில் எழுத்தில் ஊடுருவ முடியும் என்றால், அது பண்பாட்டு மாற்றங்கள் இல்லாமல் முடியாது.  அத்தகைய பண்பாட்டுப் போர்களை, அந்தப் புலனத்தில்தான் எதிர்கொள்ள வேண்டும். பண்பாட்டுப் போர்களில் தொழில்நுட்பங்களைக் கேடயமாகவோ, வாளாகவோ புழங்குவதால் ஏதும் பொருளில்லை. 

இதனால், யூனிகோடு கிரந்த முன்மொழிவுகளில் பிழைகள் இல்லை என்று பொருளல்ல.  பொய்யான வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையில் தமிழ் எழுத்துக் குறியீடுகள் ஏழை கிரந்த முன்மொழிவில் இணைத்திருக்கும் செயலை அறிவுசார் புலனத்தில் சரியான வரலாற்றுச் சான்றுகளைக் கொண்டு எதிர்கொள்ள வேண்டும். 

எந்த எழுத்துமுறையும், தனது இயல்பான மொழியல்லாத வேற்றுமொழிகளைக் குறிப்பதில் அந்தந்த மொழிகளின் இயல்பான எழுத்துமுறைக்கு இணையான ஆற்றல் பெற்றிருக்கவியலாது. கிரந்த எழுத்துமுறை தனது இயல்பான மொழியான சமஸ்கிருதத்தைத் தவிர்த்த மற்ற மொழிகளைக் குறிப்பிடுவதில் மலையாளம், தமிழ் போன்ற தென்னிந்திய மொழிகளிலிருந்து எழுத்துகளைக் கூட்டிக் கொண்டே போவதில் பொருளில்லை. இந்தக் கருத்தைக் கிரந்தத்தில் பிறமொழி எழுத்துகளைச் சேர்ப்பதை எதிர்த்து வடமொழி வல்லுநர்களே யூனிகோடு நுட்பக் குழுவிடம் தெரிவித்துள்ளனர்.  அவர்கள் சொல்லும் அதே கருத்து தமிழ் மொழியை எழுதுவதற்காக உள்ள தமிழ் எழுத்து முறைக்கும் பொருந்தும்.

தமிழ் எழுத்துகளுக்குள் புதிய வேற்றுமொழி எழுத்துகளும் வர வேண்டியதில்லை.  கிரந்த எழுத்துகளுக்குள் புதிதாகத் தமிழ்/மலையாள எழுத்துகளையும் சேர்க்க வேண்டியதில்லை.  இதைத் தெளிவாக யூனிகோடு குழுவுக்குச் சொல்வதற்குத் தக்க அறிவுசார் கருத்துகளைத் தெரிவிப்பதுதான் தமிழுக்கும், தமிழர்களின் பண்பாட்டுக்கும் பொருந்தும்.  அதை விடுத்துவிட்டு, எதற்கெடுத்தாலும், தமிழ் அழிப்பு என்று உணர்ச்சிவயப் பட்டு பூச்சாண்டி காட்டுவது, அறிவுசார் புலனத்துக்கு ஏற்றதல்ல.  அத்தகைய செயல்களால் தமிழ் தொடர்பான கருத்துப் பரிமாற்றங்களை வெற்றுக் கூக்குரல்கள் என்று அறிவுசார் அமைப்புகள் ஒதுக்குவதற்கு வழிவகுக்கும்.  அது தேவையும் இல்லை.

நம் தாய்மொழி தமிழை நோஞ்சான் என்று கருதும் தன்னம்பிக்கை அற்ற அஞ்சுநெஞ்சர்களைப் பார்த்துப் பரிவு கொள்ளத்தான் தோன்றுகிறது.

“சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா” பாடல் நினைவுக்கு வருகிறது. 

.....  வார்த்தைகளை
வேடிக்கைக்காகக் கூட நம்பி விடாதே
வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து
வெம்பி விடாதே நீ வெம்பி விடாதே!

என்ன தன்னம்பிக்கையுள்ள பாடல்!  எங்கே போயிற்று அந்த வீரம்?

வெள்ளி, டிசம்பர் 10, 2010

பாரதியின் வாக்கு - தமிழன்னை புகழ் ஏறி என்றும் புவிமிசை இருப்பாள்

 இன்று, டிசம்பர் 11.  தமிழன்னையின் தவப்புதல்வன் சுப்பிரமணிய பாரதியின் பிறந்த நாள்.
 
இந்தியாவுக்கு விடுதலை என்பதே முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப் படுவது போல், கானல் நீராய், பொய்யாய் வெறுங்கனவாய் இருந்த கொடுமையான காலத்திலேயே
 
“ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே,
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்”
 
என்று கொண்டாடிய தன்னம்பிக்கைக் கவிஞன் பாரதி.
 
அடிமைச் சங்கிலிகளால் பிணிக்கப் பட்டு கட்டுண்ட காலத்திலேயே
 
 ”வெள்ளிப் பனிமலை மீதுலவுவோம் அடி
  மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்”
 
என்று ஒளிமயமான எதிர்காலத்தைப் பற்றிக் கனாக் கண்டவன் பாரதி.
 
ஆனால், அப்படிப் பட்ட மாபெரும் கவிஞனின் எண்ணற்ற தன்னம்பிக்கைப் பாடல்கள் ஒரு புறம் இருக்க,  தமிழில் ஒன்றும் இல்லை, மேலை நாட்டு மொழிகளே ஓங்கி வளரும், ஆனால் “மெல்லத் தமிழினிச் சாகும்” என்று அறியாப் பேதை ஒருவன் கூறத்தகாத சொல்லைக் கூறினானே என்று தமிழன்னை துடித்துப் போவதாக எழுதிய பாடலில் வரும் கூறத்தகாத கூற்றையே பலர் பிடித்துக் கொண்டு உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.
 
 பாரதியின் பிறந்த நாள் அன்று ”தமிழ் இனி மெல்லச் சாகும் விழித்திடு தமிழா” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வந்துள்ளது.  அதைக் கீழ்க்காணும் சுட்டியில் காணலாம்: 

http://groups.google.com/group/tamilmanram/browse_thread/thread/c8e8ecdc154abe71#

ஆட்சி மொழியாக இல்லாத மொழிகள், அடுக்களை மொழிகள் மெல்ல மெல்ல அழிந்து மறைந்திடும் என்பது உண்மைதான் என்றாலும், இது போன்ற மிரட்டல் கட்டுரை அப்படிப் பட்ட அழிவுக்கு வித்திடுமே ஒழிய வாழ்வுக்கு வழி வகுக்காது என்பதுதான் வருந்தத்தக்க உண்மை.
 
ஒரு மொழி அழிந்து கொண்டு இருக்கிறது என்றால் அதைக் கற்பவர்கள் எண்ணிக்கை குறையுமே ஒழியக் கூடாது. 
 
முன்னெப்போதையும் விட இப்போது தமிழ் பல்லாயிரக் கணக்கானவர்களுக்குச் சோறு போட்டுக் கொண்டிருக்கிறது.  முன்னெப்போதையும் விட பல்லாயிரக் கணக்கணவர்கள் தமிழில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.  தமிழில் இல்லாத தலைப்புகளே இல்லை என்னும் அளவுக்கு மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் உட்பட, உலகில் வெளிவந்துள்ள எந்த நூலாக இருந்தாலும் அதைப் படித்துக் கருத்துரைக்கும் தமிழ்ப் பதிவர்கள் இருக்கிறார்கள்.  உலகத் திரைப்படங்களை அலசும் பதிவுகள் ஆயிரக் கணக்கானவை.  அரசியல் தமிழனுக்கு மூச்சு போல.
 
தமிழ்நாட்டில் வாழ்பவர்கள் தமிழ்ச் சூழலில் வாழ்கிறார்கள்.  இங்கே செந்தமிழ் நடையில் அரசு அறிவிப்புப் பலகைகள் உள்ளன.  செந்தமிழ் நடையில் எண்ணற்ற நூல்கள், தாளிகைகள் வெளிவருகின்றன.
 
ஆட்சி மொழியிலும், சட்ட மன்ற மொழியிலும், அரசு அலுவலகங்களிலு, நீதி மன்றங்களிலும் தமிழ் இன்னும் மேம்படலாம், மேம்பட வேண்டும்.
 
வெல்லத் தமிழ் இனி வெல்லும் என்று பறை சாற்றுவார் சிங்கைத் தமிழர் மா. கோ.  தமிழின் பெருமை அதன் தொன்மையில் மட்டுமல்ல, அதன் தொடர்ச்சியிலும் இருக்கிறது என்று முழங்கினார் மலேசியத் தமிழர் முத்து நெடுமாறன்.  தமிழால் வாழ்வோர் எண்ணிக்கை கூடிக்கொண்டு வரும் காலத்தில் தன்னம்பிக்கை மிக்க வருங்காலத்தை வரவேற்போம்.
 
தமிழை மேம்படுத்துவது நம் பொறுப்பு. அதைச் செவ்வனே செய்வோம்.  மற்றவர்களுக்கும் தமிழ் மீது நம்பிக்கை வரவழைப்போம்.  இது அழிந்து கொண்டு இருக்கும் மொழி என்ற நம்பிக்கையற்ற பேச்சு நம்மைத் தளரச் செய்வது.
 
பாரதியின் பாடலிலிருந்து ஒரு பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு நம்பிக்கையிழந்து திரிய வேண்டாம்.
 
அவ்வாறு தமிழைத் தூற்றுபவன் ஒரு பேதை என்றே கடிந்தார் பாரதி.
 
”கொன்றிடும்போல் ஒரு வார்த்தை” என்று இந்தக் கூற்றைச் சாடுகிறார்.  “கூறத்தகாதவன் கூறினன் கண்டீர்” என்று சொன்னவனைக் கடிகிறார் பாரதி.
 
இந்த வசை எனக்கெய்திடலாமோ? என்று தமிழன்னை தமிழர்களிடம் கேட்பதாகச் சொல்கிறார்.
 
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
 செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்
 
என்று தமிழன்னை தன் செல்வங்களுக்குக் கட்டளை இடுகிறாள்.
 
தந்தை அருள்வலியாலும் - இன்று
 சார்ந்த புலவர் தவ வலியாலும்
இந்தப் பெரும்பழி தீரும் புகழ்
  ஏறிப் புவிமிசை என்றுமிருப்பேன்
 
என்று தன்னம்பிக்கையோடு நிறைவு பெரும் பாரதியாரின் பாடலில் வரும் பேதையின் கூற்றையே நம் பிடித்துக் கொண்டிருப்பது பாரதியை நாம் புரிந்து கொள்ளவில்லை என்பதற்கே அடையாளம்.  இந்தியாவுக்கு விடுதலை என்பதே பொய்யாய் வெறுங்கனவாய் இருந்த கொடுமையான காலத்திலேயே
 
“ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்”
 
என்று கொண்டாடிய தன்னம்பிக்கைக் கவிஞன் பாரதி.
 
அடிமைச் சங்கிலிகளால் பிணிக்கப் பட்டு கட்டுண்ட காலத்திலேயே
 
 ”வெள்ளிப் பனிமலை மீதுலவுவோம் அடி மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்”
 
என்று ஒளிமயமான எதிர்காலத்தைப் பற்றிக் கனாக் கண்டவன் பாரதி.
 
தமிழன்னை புகழ் ஏறி என்றும் புவிமிசை இருப்பாள் என்பதே கவிஞனின் வாக்கு.  அந்த வாக்கு நனவாக வேண்டுமென்றால் தமிழன்னையின் மக்கள் எல்லோரும் ஒருமித்து உழைக்க வேண்டும் என்பதே அவன் கட்டளை.
 
செய்வோம்.
 
என்றுமுள்ள தென் தமிழ் என்று கம்பன் கொண்டாடிய தமிழை, என்றும் புவிமிசை இருப்பாள் என்று பாரதி கொண்டாடிய தமிழன்னையைப் போற்றுபவர்கள், வாரத்துக்கு ஒரு புதுக் கட்டுரை, தமிழில் இல்லாத ஒரு கருத்தை, கலைச் செல்வத்தை, தமிழில் மொழி பெயர்த்துக் கொடுப்போம்.
 
வாருங்கள், ஊர் கூடித் தேர் இழுக்கலாம்.  விக்கிப்பீடியா காத்திருக்கிறது.