அண்மையில் மேலை நாட்டு நிறுவனங்களின் சின்னங்களையும் பெயர்களையும் தனித்தமிழில் எழுதி அழகு பார்க்கும் தன்மையைப் பார்க்கிறோம். இதைத் தம் தமிழ்த்தொண்டாய்க் கருதுபவர்கள் ஒரு புறம். இவர்களுக்கு யூனிகோடு, யூ-டுயூபு, பே-பேல், ஃபயர்ஃபாக்ஸ், ஃபேஸ்புக் என்ற பெயர்களைத் தமிழ்ப்படுத்தியே ஆக வேண்டும் என்ற கரைபுரண்டோடும் மொழிப்பற்று. இந்தப் பற்றாளர்கள் சீர்மைக்குறி, தந்திறந்திரை, அளி-நட்பே, நெருப்புநரி, முகநூல் என்ற பெயர்களை இட்டுக் கட்டி ஆளுகிறார்கள்.
இந்தத் தமிழ்ப்படுத்தல் படுத்துகிறது என்று ரவுண்டு கட்டி அடிக்கும் தமிழ்மரபு அணியினர் சிலர் மறுபுறம்.
இப்படி வணிக நிறுவனங்களின் பதிவு பெற்ற பெயர்களையும், சின்னங்களையும் மொழிபெயர்க்கலாமா? இதைப் பற்றிச் சீனாவில் வணிகம் செய்யும் மேலை நாட்டு நிறுவனங்களும், சீனர்களும் ஏற்கனவே நன்கு சிந்தித்துப் பார்த்திருக்கிறார்கள்.
உத்தமம் அமைப்பின் கலைச்சொல்லாக்கப் பணிக்குழுவின் முதல் தலைவர் என்ற பொறுப்பில் இருந்து கலைச்சொல் வல்லுநர்களோடு இணைந்து செயலாற்றியதால் சொல்கிறேன். பொதுவாக ஒரு தனியார் நிறுவனத்தின் விளம்பரப் பெயர்களையும் சின்னங்களையும் (brand) மொழி பெயர்ப்பது (translate) இல்லை. ஒலி பெயர்ப்பது (transcribe) உண்டு, சில நேரங்களில் குறிபெயர்ப்பது (transliterate) உண்டு.
தமிழ் மொழியின் இலக்கணவிதிக்கு உட்பட்டு அந்தப் பெயர்களைத் தமிழில் எழுதலாமே ஒழிய அவற்றை மொழிபெயர்க்கும் உரிமை அந்த நிறுவனங்களுக்கு மட்டுமே உண்டு. மைக்குரோசாப்டு, மைக்ரோசாப்ட், மைக்ரோசாஃப்ட் என்று எழுதினால் நாம் எந்த விளம்பரப் பெயரைக் குறிப்பிடுகிறோம் என்று மற்றவர்களுக்கும் விளங்கும். மைக்ரோசாப்டு என்ற பெயரை “நுணுக்கு மென்மை” என்று இலங்கை சர்வேஸ்வரன் கிண்டலுக்காக மொழிபெயர்த்தது போன்ற பெயர்ப்புகள் நிறுவனங்கள் பல்லாயிரம் கோடிப் பணம் செலவழித்து, அரும்பாடு பட்டு உருவாக்கும் விளம்பரச் சின்னங்களாக முடியாது. ஃசெராக்ஸ் (ஜெராக்ஸ், செராக்சு), கூகிள் (கூகுள், கூகுல், கூகில், கூக்’ல்) போன்ற பொருளற்ற விளம்பரப் பெயர்களை மொழி பெயர்க்கவே முடியாது. அதனால் சில விளம்பரப் பெயர்களை மட்டும் மொழி பெயர்த்து விட்டு மற்றவற்றை ஒலிபெயர்ப்பது என்பது முறையாகாது.
டுவிட்டர் நிறுவனம் தனது டுவீட்டுகளைத் தானே “கீச்சு” என்று தனது தமிழ் மொழி அறிவிப்புகளில் குறிப்பிட்டு வருகிறது. அதனால், டுவீட்டு என்பதற்குப் பகராக ‘கீச்சு’ என்ற சொல்லைத் தமிழில் ஆள்வது பொருத்தம். ஆனால், டுவிட்டர் தமது பெயரைத் தாமே மாற்றிக் கொள்ளாதவரையில் நாம் அதற்கு என்ன தமிழ்ப் பெயர் இட்டாலும், அது அந்த நிறுவனத்தையோ, அதன் விளம்பரப் பெயரையோ குறிப்பிடாது.
அதே போல், முகநூல், முகச்சுவடி, முகப்புத்தகம், மூஞ்சிபுக்கு, என்ற பெயர்கள் எவையுமே ஃபேஸ்புக் நிறுவனத்தைக் குறிப்பிடாது. ஆனால், பேஸ்புக், பேச்புக், பேச்’புக், பேசுபுக்கு, ஃபேசுபுக்கு, என்ற எல்லா ஒலிபெயர்ப்புகளுமே அந்த நிறுவனத்தைக் குறிப்பிடுவதுதான். முகநூல்.வணி (or mukanool.com or muganool.com ) என்ற பெயரை இன்று யாராவது பதிந்து கொண்டால், அதை எதிர்த்து ஃபேஸ்புக் நிறுவனம் உடனடியாக வழக்குப் போட்டாலும், செல்லுமா என்று சொல்ல முடியாது. ஆனால், பேச்சுபுக்கு என்ற பெயரை மற்றவர்கள் பதிவு செய்யக் கூடாது என்று சொன்னால் நீதிமன்றங்களால் அதை மறுப்பது கடினம்.
பே-பேல் சேவையின் பெயரை மொழிபெயர்க்கும் உரிமையும் அந்த நிறுவனத்துக்கு மட்டுமே உண்டு. (It is not பே-பால் pay paul though it is more popular in Tamil. That name would remind one of the phrase "to rob Peter to pay Paul."). அதைச் சிலர் அளிநட்பே என்று பெயரிட்டு அழைக்கலாம். ஆனால், அப்படிப் பட்ட பெயரைத் தொழில்நுட்ப மன்றங்களும் அமைப்புகளும் அறிக்கைகளில் சேர்ப்பதற்கு முன்பு அது குறைந்தது பரவலாகப் புழக்கத்திற்கு வந்திருக்க வேண்டும்.
ஒரு விளம்பரப் பெயரை மொழிபெயர்க்கலாமா, குறி பெயர்க்கலாமா, ஒலி பெயர்க்கலாமா என்ற தெரிவுகள் அந்த நிறுவனத்திற்கு மட்டுமே உரியவை. சில மொழிகளில் மொழி பெயர்ப்பு தேவை. சீனாவில் மொழி பெயர்த்தால் ஒழிய மக்கள் ஒரு விளம்பரப் பெயரை ஏற்க மறுக்கலாம். ஆங்கிலம் தெரிந்த வேறு சில நாடுகளில் ஆங்கிலப் பெயர்களுக்கு இருக்கும் மவுசு தமிழில் மொழி பெயர்த்தால் இல்லாமல் போகலாம். “எடுத்துக்கோ ராசா” என்று சொல்லும் இடியாப்பக் கடைக் கிழவியே “டேக் இட் ராசா” என்று பேசும் விளம்பரம் வெற்றி பெறும்போது தமிழில் மொழி பெயர்ப்பதால் மூல நிறுவனத்தின் பிராண்டுக்கு இருக்கும் புகழையும் அடையாளைத்தையும் வைத்து விற்கும் வாய்ப்பை இழந்து மேலும் செலவு செய்து புதிய அடையாளத்தைப் பரப்பத் தேவைப் படலாம். எந்த வணிக நிறுவனமும் இப்படி அசட்டுத்தனமாகச் செலவு செய்து ஏற்கனவே இருக்கும் பெயரை விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.
சீன மொழியில் கோகோ கோலா என்ற வணிகப் பெயரைச் சீன எழுத்துகளில் எழுதத் திணறிய நிறுவனத்தின் சிக்கல்கள் பற்றிய சுவையான செய்திகளை “Branding in China: Global Product Strategy Alternatives" என்ற கட்டுரையில் காணலாம்.
இங்கே சீனர்கள், அரபு மக்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லியாக வேண்டும்.
சீன நாட்டு மக்கள் தம் தொன்மையான மொழி, பண்பாடு பற்றிப் பீடும் பெருமையும் கொண்டவர்கள். அமெரிக்க, ஆங்கிலேயப் “பன்னாட்டுப் பண்பாட்டு”ச் சூழலை ஏற்று அடி பணியாமல், தம் மொழியையும், பண்பாட்டையும், பெருமையையும் உயர்த்திப் பிடிப்பவர்கள். இது தென்கிழக்காசியாவில் பிற இன, மொழி, பண்பாடுகளோடு, ஆங்கில/அமெரிக்க ஆளுமைக்கு அடிபணிந்து வாழும் நாடுகளில் உள்ள சீன மக்களுக்கும் பொருந்துமா எனத் தெரியவில்லை.
சீனர்களைப் போலவே தம் மொழி, பண்பாடு, சமயம், இனம் பற்றிப் பீடும் பெருமையும் கொண்ட இன்னொரு குடியினர் அரபு மக்கள். ஆங்கில, அமெரிக்க ஆளுமைக்கு உட்பட்டு வாழ்ந்தாலும், தம் மொழி, பண்பாட்டையும் விட்டுக் கொடுக்காத மரபினர். இதனாலோ என்னவோ, வேற்றுமொழி விளம்பரங்களை அரபு மொழிக்குப் பெயர்ப்பதில் மொழி, பண்பாடு, சமய மரபுகளோடு உடன்படாமல் செய்வதால் விளம்பரங்கள் விளங்காமல் குழப்பத்தை விளைவிக்கின்றன என்று 97% அரபு மக்கள் கருதுவதாக ஒரு தரவு தெரிவிக்கிறது.
தமிழர்களில் பலருக்குத் தம் மொழி, பண்பாடு, தொன்மை பற்றிய பெருமை இருப்பினும், ஒரு சில அண்மைக்காலத் தன்னந்தனித் தமிழர்களின் கேலிக்கூத்தான நடவடிக்கைகளாலும், அமெரிக்க, ஆங்கில, இந்தியப் பண்பாட்டுக் கலவையின் அழுத்தமான ஆளுமையாலும், பிறமொழி, பிற பண்பாடுகளுக்கு அடி பணிந்து கிடந்த வரலாற்றாலும், தனித்தமிழ்ப் பெயர்கள் பீடு தரும் பெயர்கள் என்ற கம்பன் கால நிலை சரிந்து நெடுங்காலமாகிவிட்டது.
தனித்தமிழ் என்பது மொழியல்ல. அது இன்றைய தமிழ்மொழியின் ஒரு நடை. அது சிறப்பு நடை, மிடுக்கு நடை, ஆனால் அது மட்டுமே தமிழ் என்ற நிலை இலக்கியத் தமிழிலிருந்தே விலகிப் பல நூற்றாண்டுகளாகின்றன. கல்வெட்டுகளின் தொடக்கத்திலிருந்தே, உரைநடைத் தமிழ் கலப்படத் தமிழாகவே இருந்திருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது. இவற்றை எல்லாம் புறக்கணிப்பது என்பது தமிழ் மொழி, பண்பாடு இவற்றின் வரலாற்றில் ஒரு கூறைப் புறக்கணிப்பதற்கு இணையானது.
தமிழில் ஆங்கிலம் மற்றும் பிறமொழிப் பெயர்களும் சொற்களும் கலக்கத் தொடங்கிப் பல நூற்றாண்டுகளாகி விட்டன. பிறமொழி ஒலிப்புகளும் எழுத்துத் தமிழிலும், பேச்சுத்தமிழிலும் கலந்து விட்டிருக்கின்றன. தமிழ்நாட்டின் ஆளும் மேல்தட்டுக் குடும்பங்கள் ஆங்கில வழிப் பள்ளிகளில் படித்து, ஆங்கிலோ-தமிழில் பேசி, ஆங்கிலோ தமிழ்ப் பெயர்களைத் தம் நிறுவனங்களுக்குச் சூட்டி மகிழ்வதை தொலைக்காட்சி நிறுவனங்கள் நமக்கு அன்றாடம் நினைவூட்டிக் கொண்டிருக்கின்றன. இவர்கள் தனித்தமிழ் அரசியல் பின்னணியில் ஆட்சிக் கட்டில் ஏறிய குடும்பங்களின் வழித்தோன்றல்கள் என்றாலும், தனித்தமிழைப் புறக்கணித்து, ஒரு புதிய மணிக்கோரல் (தமிழும் இங்க்லிஷும் கலந்த மணிcoral) நடையைப் போற்றி வளர்ப்பவர்கள்.
மேலை நாட்டு ஆங்கில விளம்பரப் பெயர்களை அவற்றின் உரிமையாளர்கள் அனுமதியில்லாமல் தமிழில் பெயர்ப்பதற்கு முற்படுவதற்கு முன்பு, தமிழகத்தில், தனித்தமிழ் இயக்கத்தின் வழித்தோன்றல்கள் தோற்றுவித்த நிறுவனங்களின் விளம்பரப் பெயர்களை அவர்களே தமிழில் மொழி பெயர்த்து அல்லது தனித்தமிழ்ப் பெயர் சூட்டி அழைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அப்படிச் செய்யாமல் ஒரு சில மேலைநாட்டுப் பெயர்களை மட்டும் மொழி பெயர்த்து எழுதுவது என்பது தனித்தமிழ் இயக்கம் என்பது போலித்தனமான அரசியல் கூத்து, வேறு ஏதும் கையில் கிடைக்கவில்லை என்றால் தமிழர்களின் பார்வையைத் திருப்புவதற்கான ஒரு மேஜிக் டிரிக், மந்திர தந்திரம், மாயாஜாலம், செப்பிடு வித்தை என்ற குற்றச்சாட்டைத் தவிர்க்க முடியாது.
> மொழி ஆளுமை / மொழிப் பற்று / இனப் பற்று என்பது அவரவர் தனிக்கருத்து.
>
> அன்பர்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதனாலேயே
> அடைப்புக்குறிக்குள் அளிநட்பே(paypal) என்று எழுதுகிறோம்.
>
> மொழி உணர்வைப் போற்ற வேண்டும் என்று கூறவில்லை. தூற்றாமலாமாவது இருக்கலாமே :(
வேங்கைத் திட்டக் கட்டுரை போட்டியில் வெற்றி.
4 ஆண்டுகள் முன்பு
13 கருத்துகள்:
மணி,
செம்மையான பதிவு.
நிற்க
/டுவிட்டர் நிறுவனம் தனது டுவீட்டுகளைத் தானே “கீச்சு” என்று தனது தமிழ் மொழி அறிவிப்புகளில் குறிப்பிட்டு வருகிறது. அதனால், டுவீட்டு என்பதற்குப் பகராக ‘கீச்சு’ என்ற சொல்லைத் தமிழில் ஆள்வது பொருத்தம். ஆனால், டுவிட்டர் தமது பெயரைத் தாமே மாற்றிக் கொள்ளாதவரையில் நாம் அதற்கு என்ன தமிழ்ப் பெயர் இட்டாலும், அது அந்த நிறுவனத்தையோ, அதன் விளம்பரப் பெயரையோ குறிப்பிடாது./
கீச்சு என்று தமிழிலே நானே முதலிலே புழங்கினேனென்று எண்ணிக்கொண்டிருந்தேன். உடுவிற்றரின் குருவிச்சின்னத்தை வைத்துக் கீச்சிடுதல் என்று மொழிந்தேன். ஆனால், கீச்சிடுதல் என்பதை உருவிற்றரிலே எழுதுதல் என்பதற்குப் பயன்படுத்தலாம். உருவிற்றர் போன்ற தொழில்நுட்பத்தை இன்னொரு தொழில்நுட்பவர்த்தகவமைப்பு உருவாக்கி குவாக்கர் என்ற பெயரிலே இட்டாலும், அங்கே எழுதுவதைக் கீச்சிடுதல் எனலாம்; ஆயினும், உருவிற்றர் என்ற வர்த்தகப்பெயருக்கு ஈடாக, கீச்சு என்று மொழியலாகாது என்பதே -நீங்கள் சுட்டிக்காட்டியதுபோல- மிகச்சரி.
உருவிற்றரும் கீச்சு என்றே பயன்படுத்துகின்றது என்பது எனக்குச் செய்தி. ஓரிணைப்பினைத் தருவீர்களா?
மணி, நல்ல கருத்துக்கள். முன்பொரு முறை யூனிக்கோடு என்பதை ஒருங்குறி என்று பெயர்த்தல் அவசியமற்றது என்று நானும் பதிவிட்டேன். எனினும், காலப்போக்கில் நிலைத்து விட்ட ஒருங்குறியை நானும் ஏற்றுக் கொண்டேன். வலியது நிலைக்கும் என்ற நிலைப்பாட்டில்.
கீச்சு என்று டுவிட்டர்-காரர்கள் பயன்படுத்தவும் யாராவது ஒரு தமிழர் (ரமணியோ? :-) ) முதன்முதலில் அப்படிப் பயன்படுத்தியிருக்க வேண்டுமே. அதனால் சிலவற்றை ஏற்கவும் பிறவற்றை விலக்கவும் வேண்டியிருக்கிறது. இருப்பினும், அளிநட்பே, தந்திறனொளி, போன்றவை அவசியமில்லை (வேண்டவே வேண்டாம்) என்றே தோன்றுகிறது. (முகநூல் என்பது நிலைத்து விடுமோ - 'கீச்சிலே' நீங்களே கூட எழுதியிருக்கிறீர்கள் என நினைக்கிறேன்).
பகிர்வுக்கு நன்றி!
***“எடுத்துக்கோ ராசா” என்று சொல்லும் இடியாப்பக் கடைக் கிழவியே “டேக் இட் ராசா” என்று பேசும் விளம்பரம் வெற்றி பெறும்போது***
வெற்றி பெறுவதாக சொல்வது சரியன்று. பல காரணங்கள் உள்ளன.
மொழித்தூய்மை பேணல் இன்றியமையாத தேவையே! “கடிசொல் இல்லை காலத்துப் படினே” – என்று தொல்காப்பியம் கூறும்.
***முன்பொரு முறை யூனிக்கோடு என்பதை ஒருங்குறி என்று பெயர்த்தல் அவசியமற்றது என்று நானும் பதிவிட்டேன். எனினும், காலப்போக்கில் நிலைத்து விட்ட ஒருங்குறியை நானும் ஏற்றுக் கொண்டேன். வலியது நிலைக்கும் என்ற நிலைப்பாட்டில்.***
தமிழ்ப்பெயர் தேவையற்றது என்று ஒதுக்கிவிட்டால், பின் தமிழில் பெயர் நிலைப்பதெவ்வாறு? வலியதாவதுதான் எப்படி?
குறைகூறல், குற்றச்சாட்டு, எள்ளல்களையெல்லாம் ஏற்று, அவற்றையும் மீறி தனித்தமிழாளர் தமிழ்ப்பெயர்களை நிலைக்கச் செய்தபின்தாம் நாங்கள் ஏற்போம் என்ற கருத்து எந்த அளவிற்குச்சரியானது என்று எண்ணிப்பார்க்க வேண்டும்.
தமிழநம்பி,
உங்கள் கருத்துக்கு நன்றி. மொழித்தூய்மை என்று ஆச்சாரம் பேசிப் பிறமொழிச் சொற்களை ஒதுக்குவது பிறமொழிகள் ஆதிக்கம் செலுத்தும்போது எடுபடும் என்று தோன்றவில்லை. நம் தாய்மொழிச் சொல்லின் வேர்களில் இருந்து படைக்கும் கலைச்சொற்கள், நமது அறிவியல், நுட்பச் சிந்தனைகளை வளர்க்க வழிவகுக்கும் என்று செய்து காட்டினால் அதற்கு வரவேற்பு இருக்கும்.
பிற நாட்டினரின் வணிகப் பெயர்களை அவர்கள் அனுமதியின்றி மொழி பெயர்த்தல் சட்டப்படி செல்லாது என்றே கருதுகிறேன். பிற நாட்டினரின் பெயர்களை மொழி பெயர்க்க முயல்வதும் பொருந்தாத செயல். அதிலும், தமிழ் நாட்டினரே, தனித்தமிழ் இயக்கத்தின் வேர்களில் இருந்து எழுந்து ஆட்சியைக் கைப்பற்றியவர்களே ஸன் டிவி, ரெட் ஜயண்ட் மூவீஸ் என்று ஆங்கிலப் பெயர்களை வைத்துக் கொண்டிருக்கும்போது டுவிட்டரையும், பே-பேலையும் மொழி பெயர்க்க முனைவது வெறும் பித்தலாட்டம் என்று சொல்வதில் தவறில்லை.
தமிழ்ப்பெயர் தேவை என்போர் முதலில் தாங்கள் தனித்தமிழ்ப் பெயர்களைச் சூட்டட்டும். பின்னர் வெளிநாட்டினரது பெயர்களை மாற்றுமாறு வேண்டட்டும். செய்வார்களா?
நல்லா சொன்னீங்க சார். சமீப காலமாக பதிவுகளில் இந்த தமிழ் "படுத்துதல்" கொடுமை அதிகமாக இருக்கிறது. கம்ப்யூட்டர் தமிழில் தமிழனால் கண்டு பிடிக்கப்படவில்லை. அதனால் கண்டு பிடித்தவன் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொண்டாக வேண்டும். ஒரு உதாரணத்திற்கு இந்த மொழி பெயர்த்த வார்த்தைகளை பயன் படுத்தி கற்றவன் ஆங்கிலத்தில் மற்றவருடன் உரையாடும் போது எப்படி நோக்கப் படுவான் என்று எண்ணிப் பார்த்தால் போதும். இதே மாதிரி அயல் நாட்டு நகரங்களின் பெயரைகளையும் தமிழ் "படுத்துதல்" தவறே.
பெயர்ச் சொற்களை தமிழ் படுத்தியதால்தான் தாமஸ் தோமையராக ஆனார். ஆங்கிலம் மட்டுமே தெரிந்த தாமஸிடம் அவரை தோமையர் என்று சொன்னால் என்ன ஆகும்?
இன்னுமொரு கொடுமையை சென்னை விமான நிலையத்தில் கண்டேன். "Physically challenged" என்பதற்கு மெய்ப் புலம் அறை கூவலர் என்று மொழி பேத்து இருந்தார்கள். "Physically" என்பதற்கு மெய்ப் புலம் எனவும் "Challenged" என்பதற்கு அறை கூவுதல் என்றும் கொடுமை செய்திருந்தார்கள்.
அமரபாரதி,
கருத்துக்கு நன்றி. கலைச்சொற்களைத் தமிழாக்கம் செய்வதை நான் எதிர்க்கவில்லை. கம்ப்யூட்டரைக் கணினி என்றுதான் தமிழ் இணையத்தின் தொடக்க காலத்திலிருந்தே அழைத்தோம். இண்டர்நெட் என்ற சொல்லுக்கு இணையாக இணையம் என்ற சொல்லை நயனம் என்ற மலேசிய இதழாசிரியர் இராஜகுமாரன் படைத்தது எங்கள் கண் முன்னே தான். எழுத்தாளர் சுஜாதா ஏன் இந்தப் படுத்தல் என்று கடிந்து கொண்டாலும், இறுதியில் அவரே கணினியையும் இணையத்தையும் ஏற்றுக் கொண்டார்.
மற்றவர் கண்டுபிடித்த பெயர்களை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ஏதும் விதியில்லை.
அதே போல், ஜீஸஸ், பீட்டர், தாமஸ் என்று ஆங்கிலேயர்கள் வழங்கும் பெயர்கள் தவறானவை. எபிரேய மொழியில் அவை ஏசு, பேதுரு, தோமையாருக்கு (ஏஷு, பெத்ரோ, தோமா) மிக நெருங்கியவை. தோமாவிடம் தாமஸ் என்பதைவிட தோமையார் என்றால் நன்றாகவே புரிந்து கொள்வார்.
நாம் ஆங்கிலத்தில் பார்க்கும் சொற்களை வைத்துக் கொண்டு அவைதான் மூலப் பெயர்கள் என்று நினைப்பதும் பிழையானது. பீகிங், டுட்டிகொரின், டிரிப்லிகேன் என்று ஆங்கிலேயர்கள் கொலை செய்த பெயர்கள் எண்ணற்றவை.
”Physically challenged" என்பதற்குச் சென்னை விமானநிலையத்தில் மட்டுமல்ல, அண்ணா நூற்றாண்டு நூலகத்திலும் மெய்ப்புல அறைகூவலர் என்று பிழையாக பெயர்த்திருப்பதைக் கண்டு துணுக்கிட்டேன். இது மொழி தெரியாமல் அகராதியை வைத்து யாரோ செய்த பிழை. மாற்றுத் திறனாளிகள் (alternatively enabled) என்ற அழகான பெயர்ப்புகள் இருக்கும்போது, இந்தப் பிழையான பெயர்ப்புகள் தேவையில்லைதான்.
ஐயா,
‘ஆச்சாரம்’ என்னும் இச்சொல்லை இக்காலத்தில் இங்கு ஒரு சிறுபான்மைப் பிரிவைச் சேர்ந்த சிலரைத்தவிர வேறுயாரும் பயன்படுத்துவதில்லை (புறநடைகள் தவிர) என்பதை அமெரிக்கத் தமிழரான உங்கள் கவனத்திற்குத் தெரிவிக்க விரும்புகிறேன். நீங்கள் எந்த வகை ஆய்வும் செய்து இதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
*** மொழித்தூய்மை என்று ஆச்சாரம் பேசிப் பிறமொழிச் சொற்களை ஒதுக்குவது பிறமொழிகள் ஆதிக்கம் செலுத்தும்போது எடுபடும் என்று தோன்றவில்லை. ***
மொழிக்காப்பு நிலையில் மேற்கொள்ளும் முயற்சி எடுபடுமா எடுபடாதா என்று எண்ணிச் செய்வதில்லை என்பதைப் பணிவுடன் கூற விரும்புகின்றேன்.
*** தாய்மொழிச் சொல்லின் வேர்களில் இருந்து படைக்கும் கலைச்சொற்கள், நமது அறிவியல், நுட்பச் சிந்தனைகளை வளர்க்க வழிவகுக்கும் என்று செய்து காட்டினால் அதற்கு வரவேற்பு இருக்கும்.***
தாய்மொழிவழிக் கல்வியும் சிந்தனைகளும் அறிவியல், நுட்பச் சிந்தனைகளை வளர்க்காது என்று நிறுவிக்காட்டியுள்ளவர் யார்?
மாறாக, தாய்மொழிவழிக் கல்வியும் சிந்தனைகளுமே உண்மையான அறிவு நுட்ப வளர்ச்சிக்குத் துணைசெய்யும் என்று காந்தி, பாரதி உள்ளிட்ட இந்நாட்டவர் பலரும் அயலக அறிஞர் பலரும் தம் நுண்மாண் நுழைபுலத்தால் அறிந்து கூறியுள்ளதை எப்படிப் புறந்தள்ளுகிறீர்கள்!
***பிற நாட்டினரின் வணிகப் பெயர்களை அவர்கள் அனுமதியின்றி மொழி பெயர்த்தல் சட்டப்படி செல்லாது என்றே கருதுகிறேன்.***
சரி, இப்படிப்பட்ட நிலைகளில் என்ன செய்யவேண்டுமென தொல்காப்பியரும் பவணந்தியாரும் கூறியுள்ளனரே!
“வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே” என்று தொல்காப்பிய நூற்பாவும், நன்னூலின் தற்சமம், தற்பவம் வரையறையும் வழிகாட்டுகின்றனவே!
*** தனித்தமிழ் இயக்கத்தின் வேர்களில் இருந்து எழுந்து ஆட்சியைக் கைப்பற்றியவர்களே ஸன் டிவி, ரெட் ஜயண்ட் மூவீஸ் என்று ஆங்கிலப் பெயர்களை வைத்துக் கொண்டிருக்கும்போது டுவிட்டரையும், பே-பேலையும் மொழி பெயர்க்க முனைவது வெறும் பித்தலாட்டம் என்று சொல்வதில் தவறில்லை.***
தன்னலத்திற்காகச் சொந்த இனத்தையே கொன்றழிக்கத் துணைபோனவர்கள், தனித்தமிழ் இயக்கத்தின் வேர்களில் இருந்து வந்தவர்களே இல்லை! அவர்கள் சுரண்டவும் கொள்ளையிடவும் மொழியழிப்பில் முன்நிற்பது வியப்பளிக்கக்கூடியதா என்ன?. இரண்டகர்களை முன்னிறுத்தி, அவர்களை வைத்து மொழிநலன் பற்றிச் சிந்திப்பது சரியா?
அன்புகூர்ந்து, ஓரிரு மணித்துளிகள் செலவிட்டு, இதை
http://thamizhanambi.blogspot.com/2008/01/blog-post_29.html ப் படிக்கும்படிப் பணிவன்போடு கேட்டுக்கொள்கின்றேன்.
அன்புள்ள தமிழநம்பி,
”ஆச்சாரம் பேசுவது” என்ற பொருளுக்கு இணையான, உட்பொருள் பொதிந்த, வேறு தனித்தமிழ்ச் சொல்லைத் தாருங்களேன்! உடல்தூய்மை, துணித்தூய்மை, உணவுத்தூய்மை பாராட்டுவது போல மொழித்தூய்மை பாராட்டுவதும், இது சேர்க்கக் கூடியது, சேர்க்கக் கூடாதது என்று பார்க்கும் பிரிவை வேறு எப்படிச் சொல்ல முடியும்?
மொழிக்காப்பு இயக்கங்களின் எழுத்துகள் பொதுவாக, பொதுவுடமைப் புரட்சிவாதிகளின் வரட்டுத்தனமான, முரட்டுத்தனமான எழுத்துகளாய் இருப்பதை நான் பார்க்கிறேன். எரிந்த கட்சி, எரியாத கட்சி விளையாட்டு விளையாடுவதில் இவர்கள் மன்னர்கள்.
மொழியைப் பாதுகாக்க அரண் அமைத்து, அரணுக்குள் இருந்து உலகத்துக்கு அஞ்சி அதை வெளியே நிறுத்தும் செயல்களை விடத் தன்னம்பிக்கையுடன் உலகை எதிர்கொள்ளும் தன்மையையே நான் ஆதரிக்கிறேன். பிறமொழிச் சொற்களைக் கலக்காமல் பேச முனைவது என்பது சிந்தனை நீரோட்டத்துக்கு அணை போடுவது போல். இதனால்தான், அமெரிக்க மேடைகளில் தமிழில் பேசப் பலர் தயங்குகிறார்கள்.
நல்ல தமிழ்ச்சொற்களைப் பரப்புவோம். மொழி வளத்தைக் கூட்டுவோம். தனித்தமிழ்ச் சொற்கள் ஆழமான பொருள் தருபவை, அவற்றின் பொருளைப் புரிந்து கொண்டால் பல்வேறு கிளைச்சொற்களைப் படைக்கலாம் என்று காட்டுவதையே நான் விரும்புகிறேன்.
நான் தாய்மொழிக் கல்வியை எதிர்க்கிறேன் என்றோ, தனித்தமிழ்ச் சொற்களை மறுக்கிறேன் என்றோ நீங்கள் கற்பனை செய்வது தவறு. நான் தனித்தமிழ்ப் பூசாரியாக இருந்து ஆச்சாரம் பார்த்து இதைத் தீண்டலாம், இது தீண்டத்தகாதது என்று விலக்குவதை விட, இந்த மலர் நறுமணமுடையது, இதில் மாலை தொடுத்துச் சூடிக் கொள்ளுங்களேன் என்று சொல்வதையே விரும்புகிறேன்.
தமிழ்ப் பயிற்சியே மிகவும் குறைந்திருக்கும் இக்காலத்தில், தமிழைப் பேசுபவர்கள், எழுதுபவர்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தித் தூக்கிலிட முனைவதுதான் மொழி வளர்ச்சிக்கு வழி வகுக்கும் என்ற கொள்கையைப் பார்த்து நகைக்கத்தான் தோன்றுகிறது.
சில மொழிகள் தேவமொழிகள், சில மொழிகள் மனித மொழிகள் என்ற பாகுபாடு சமயங்களைப் பரப்பிய கணக்கர்களுக்குத் தேவையாக இருந்திருக்கலாம். அதனால், சில மனித மொழிகள் நேரடியாக தேவலோகத்திலிருந்து குதித்தன, இறைவனுக்கு இதுதான் புரியும் என்பது போன்ற பிதற்றல்கள் இருந்திருக்கின்றன.
தமிழ் தேவ மொழியல்ல. ஞாலத்தின் முதன் மொழியல்ல. அதனால் என்ன? தமிழின் ஒப்பற்ற படைப்புகள் சங்கத்தமிழோடு நின்று போய்விடக் கூடாது என்றால் நாம் ஏன் சங்கத்தமிழ் ஒப்பற்ற படைப்பு என்பதைப் புரிந்து கொள்ள முயலவேண்டும்.
அதை விட்டுவிட்டு, தேவமொழிக் கூட்டங்களோடு போட்டி போட்டுக் கொண்டு, மொழித்தூய்மை பேணுவது வீண் செயல் என்பது என் தாழ்மையான கருத்து.
ஆச்சாரம் என்பது நல்ல தமிழ்ச்சொல் தான். அது ஆசானில் இருந்து உருவானது.
ஐ என்னும் வேர் சிறப்பை, உயர்ந்த தன்மையைக் குறிக்கும். ஐ-யில் இருந்து ஆயனும் ஆசானும், இன்னும் பல்வேறு சொற்களும் பிறந்தன. (இங்கு நான் சொல் வளர்ச்சியைக் காட்டவில்லை. அதைச் சொன்னால் நீளும்.) ஆசானில் இருந்து தான் ஆசார்யன் என்ற வடசொல்லும் பிறந்தது. குமரி மாவட்டத்தில் கலை, கல்வி சொல்லிக் கொடுக்கும் எல்லோருமே ஆசான்கள் தாம். [வர்மம், களரி சொல்லிக் கொடுப்பவரும் ஆசான் தான்.]
ஆசான் என்ற சொல் ஒரு சிலர் பேச்சுவழக்கில் ஆச்சான் என்றும் ஆகும். அந்தச் சொல்லும் அகரமுதலிகளிற் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆச்சான் வீட்டுப் பழக்கமாய் ஆச்சாரம் என்ற சொல் அமையும். இது அவர்கள் காட்டும் ஒழுங்கு, தூய்மை போன்றவற்றைக் குறித்தது.
பெருங்காலமாய் நாட்டுப்புறங்களில் பெருமானரே (ப்ராமணர்) கல்வியில் ஆசானாய் இருந்தனர். [அதே பொழுது பெருமானர் மட்டுமில்லை. அவர் மிகுதி. அவ்வளவுதான்.] ஆசான் தான் அந்தக் காலத்துத் திண்ணைப் பள்ளிக் கூடத்தில் மாணவர்க்கு நல்லது, கெட்டது, ஒழுங்கு, நன்னெறி ஆகியவற்றைச் சொல்லிக் கொடுத்தார். [நன்னெறி என்பதுங் கூட ஆச்சாரத்திற்கு மாற்றுச் சொல் தான்.] அப்படி வந்த சொல் தான் ஆச்சாரம். பார்ப்பனரின் பின்புலம் அதற்கு உண்டு என்றாலும், சொல்லையே தமிழில்லை என்பது சரியில்லை.
பல சொற்களைப் பார்ப்பனரோடு தொடர்புறுத்தி ”தமிழல்ல” என்று ஒரு சிலர் ஒதுக்கிவிடுகிறோம். அது சரியல்ல. அவரிடமும் நல்ல பல தமிழ்ச்சொற்கள் இருக்கின்றன.
எதையும் சற்று ஆழ ஆய்ந்து பார்த்தால் நல்லது.
அன்புடன்,
இராம.கி.
இராம கி அவர்களுக்கு,
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி. நீங்கள் சொல்வது போல் சொற்களை இன்னாரோடு தொடர்பு படுத்தி விலக்குவது ஏற்புடையதல்ல. நல்ல பல பழந்தமிழ்ச் சொற்கள் இன்று நடைமுறைத் தமிழில் வழக்கொழிந்து போயிருந்தாலும், நாட்டுப்புறங்களிலும், ஏன் மலையாளத்திலும் அவை வாழ்ந்து கொண்டு இருக்கின்றன. சட்டுவம், அங்கணம் என்று இரண்டு சொற்களைக் குமரி மாவட்ட வழக்கிலிருந்து அறிந்து கொண்டேன். அண்டுதல், அண்டை அயலார், என்பவை எழுத்துத் தமிழாக இருந்தாலும், சென்னைத் தமிழில் “ஊட்டாண்டை” என்ற சொல்லில் வாழ்ந்து கொண்டு இருக்கிறதல்லவா!
கருத்துரையிடுக