ஞாயிறு, நவம்பர் 10, 2013

தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் - ஒரு கோணல் பார்வை - பகுதி 2


தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் செய்வது கிட்டத்தட்ட ஒரு குடிசைத் தொழிலாகி விட்டது. இதை நையாண்டி செய்து நான்  மார்ச் 2, 2010ல் ஒரு வலைப்பூவைப் பதிந்தேன். அப்போது எழுத்தாளர் பேரா. இந்திரா பார்த்தசாரதி நகைச்சுவையுடன் ”விளையாட்டுக்குக்கூட இப்படிச் செய்யாதீர்கள். செம்மொழி மாநாட்டில் தீர்மானம் போட்டு ஏற்றுக் கொண்டு விடப் போகிறார்கள்” என்று எச்சரித்தார்! அண்மையில் நான் கிண்டல் செய்ததைப் போலவே ஒரு எழுத்துச் சீர்திருத்த முன்மொழிவு கண்ணில் பட்டது. முதலில் எனது கோணல் பார்வை உங்கள் கண்ணுக்கு:

http://kural.blogspot.com/2010/03/blog-post.html


எழுத்துச் சீர்திருத்தம் என்ற பெயரில் மக்கள் எப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள்! எழுத்துகள் இன்றைய நிலையை அடைய எத்தனை நூற்றாண்டுகள் ஆகின, என்னென்ன பிழைகளைக் கடந்து படிப்படியாக இந்த நிலையை அடைந்தன என்பதைப் பற்றி இவர்கள் எண்ணுவதே இல்லை. யூனிகோடு குறியீட்டுமுறை வந்து இன்னும் 25 ஆண்டுகள் கூட ஆகவில்லை. ஆனால், தொடக்கத்தில் இருந்தே அவர்கள் நிலை பிறழாமையை (stability principle) ஒரு குறிக்கோளாகக் கொண்டிருக்கிறார்கள். ஒரு கணினிக் குறியீட்டுக்கே இது தேவை என்றால் மனிதர் மொழிக்கு எவ்வளவு தேவை?

இதோ நான் கிண்டல் அடித்தது போன்ற புதிய பரிந்துரைகள் (அவை எனதல்ல!)


இதோ மேற்கண்ட குறியீட்டில் உள்ள ஓர் ஆவணம்:

திங்கள், ஜூலை 29, 2013

சொற்கள், வெறும் சொற்கள், இவைக்கு இத்தனை வலிமையா!


தமிழ் இணையத்தின் தொடக்க நாட்களில், தமிழ்.நெட் மடலாடற்குழுவில் காரசாரமான விவாதங்கள் நடக்கும். தாய்த்தமிழகத்திலும்,  தமிழ் ஈழத்திலும் இணையம் அவ்வளவாகப் பரவாத காலம் அது.  உலகெங்கும் பரந்து விரிந்திருந்த புலம்பெயர்ந்த தமிழர்கள்தாம் பெரும்பாலும் இணையத்தில் தமிழில் எழுதிக் கொண்டிருந்த நாட்கள். ளும், மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் விழுதுகள் பதித்திருந்த தமிழர்களோடு, புதிதாகக் கனடா, அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியாவில் குடிபுகுந்திருந்த தமிழர்களும் தாய்த்தமிழகம், தமிழ் ஈழச் சூழல்களைப் பற்றியும், புலம்பெயர்ந்த நாடுகளில் தமக்கிருந்த சிக்கல்களைப் பற்றியும் எழுதத் தொடங்கியிருந்த நேரம்.

நம்மில் பெரும்பாலோர் முகம் தெரியாத மனிதர்களோடு, பண்பாட்டுடன் அளவளாவதில் தொடங்குகிறோம்.  தமிழ் இணையத்தின் அன்றைய பரப்பு மிகவும் சிறியது என்பதால் முகம் தெரியாதவர்களும் அந்நியர்களாகத் தோன்றாமல், இணையத்தில் பக்கத்து வீட்டார் போலத்தான் இருந்தார்கள்.  இருப்பினும், மென்மையாகத் தொடங்கும் வாதங்கள், இணையத்தின் முகமூடித் தன்மையினால், இறுகத் தொடங்கி வன்மையாக மாறத் தொடங்கின.  இன்று முகநூலில் பரந்து காணப்படும் வசைச்சொற்களும், தனிமனிதத் தாக்குதலும், எட்டிப் பார்க்கத் தொடங்கின.  தமிழ்.நெட்டின் நிறுவனர் பாலா பிள்ளையைப் பொருத்தவரையில் கருத்துச் சுதந்திரத்துக்கு வேலிகளே இல்லை.  இணையத்தில் எதை வேண்டுமானாலும் எழுத முடிய வேண்டும் என்று உறுதியாக நம்பினார்.  அந்த ஊக்கத்தால், வாக்குவாதங்களில் புண்படுத்தும் சொற்கள் வந்து விழத் தொடங்கின.

ஒரு முறை அப்படிச் சொற்கள் கரைபுரண்டு காட்டாற்று வெள்ளமாக ஓடத் தொடங்கிய போது மலைத்துப் போய் பின் வரும் “கவிதை” ஒன்றை எழுதினேன்.  அது தமிழ் இணையத் தளங்களின் முன்னோடியாக விளங்கிய தமிழ்நேஷன்.ஆர்க் தளத்தின் நிறுவனரான நடேசன் சத்தியேந்திராவை மிகவும் ஈர்த்தது.  அப்போது அவர் தம் தளத்தில் முகப்பில் எதிரொளிகள் (Reflections) என்ற தலைப்பில் இணையத்தில் தம்மைக் கவர்ந்த கருத்துகளைப் பதிவு செய்வார்.  இந்தக் கவிதையையும் அவர் ஆகஸ்டு 1, 1998ல் தம் முகப்பில் பதிவு செய்திருந்தார். இந்தத் தளம் ஏதோ காரணங்களால் சில முறை முடங்கியிருந்து இப்போது முற்றிலும் நின்று விட்டது.  ஆனால், அதன் பதிப்புகளை எப்படியோ மீட்டெடுத்து இன்றும் அவற்றைப் பார்வையிடும் வகையில் tamilnation.co என்ற தளத்தில் ஓர் அருங்காட்சியகத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அதில், இந்தக் கவிதையை இன்றும் பார்க்கலாம்.

சொற்கள் - 1 ஆகஸ்டு 1998

சொற்கள்,
வெறும் சொற்கள்,
இவைக்கு இத்தனை வலிமையா?

கொந்தளிக்கும் உணர்ச்சிகள்
கொதிக்கின்ற குருதி!

சொற்கள்,
வெறும் சொற்கள்,
இவைக்கு இத்தனை வலிமையா?

பத்திரிக்கை விற்க வேண்டும்,
(மக்கள்) பரபரப்பாய்ப் படிக்க வேண்டும்,
பொறுமை இழக்க வேண்டும்,
பொங்கி எழ வேண்டும்,
போர்க்கோலம் பூள வேண்டும்.

கடுஞ்சொல் வீச வேண்டும்!
கல்லை எறிய வேண்டும்!
கொடிதான் பிடிக்க வேண்டும்!
கொந்தளித்து எழ வேண்டும்!

சொற்கள்,
வெறும் சொற்கள்,
இவைக்கு இத்தனை வலிமையா?

கருத்துச் சந்தையிலே
கற்பை விற்பவர்கள்
கொள்கைக் குழப்பத்திலே
கொள்ளிமீன் பிடிப்பார்கள்

கருத்தை வடிகட்டு;.
கசட்டைத் தூற எறி.
கண்ணியம் இழக்காதே,
கயவனாய் மாறாதே.
சொற்கள்,
வெறும் சொற்கள்,
இவைக்கு இத்தனை வலிமையா?

- மணி மு. மணிவண்ணன்
·பிரிமான்ட், கலி·போர்னியா, அ.கூ.நா.
Mani M. Manivannan- California, USA

ஞாயிறு, ஜூலை 28, 2013

”அபுனைவு” என்பது புனைவுக்கு எதிர்மறைச் சொல்லா?

அண்மையில் "non-fiction" என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையாகத் தமிழில் ”அபுனைவு” என்று எழுதுவதைப் பார்க்கிறேன்.  கவிஞர் ஹரிகிருஷ்ணன் இது அவருக்குத் தெரிந்து சுமார் இருபதாண்டுகளாகச் சிறு பத்திரிகைகளில் வெளிவந்து, ‘இலக்கியவாதிகள்’ மத்தியில் பரவலாகவும் புழங்குகிறது என்கிறார். 

Fiction என்ற ஆங்கிலச் சொல்லுக்குப் புனைவு என்ற சொல்லைப் புழங்கி வருகிறார்கள் எனத் தெரியும்.  ஆனால், புனைவுக்கு எதிர்மறைச் சொல்லாக, அதன் முன் அகர முன்னொட்டு இட்டு ‘அபுனைவு’ என்று சொல்லுவது தமிழின் மரபு இல்லை.  இப்படி அகர முன்னொட்டு இட்டு எதிர்மறையாக்குவது சமஸ்கிருதத்தின் மரபு.  

bhayaabhaya
pūrvaapūrva
maṅgalaamaṅgala
mārgaamārga

அமரர் என்ற சொல்லும் இப்படித்தான் மரணமற்றவர்கள் என்ற பொருள்தரும் வடசொல் வேரிலிருந்து வந்தது.

ஆங்கிலத்திலும் இதே போன்ற மரபு உண்டு.
chromaticachromatic
morphousamorphous
symmetricasymmetric
typicalatypical

இவை பெரும்பாலும் கிரேக்க வேர்ச்சொற்களில் இருந்து வந்தவை.  ஆனால், சென்னைப் பேரகரமுதலியில் தேடிப்பார்த்தால், இந்த அகர எதிர்மறை முன்னொட்டு எந்தத் தமிழ் வேர்ச்சொல்லின் முன்னும் இல்லை. ‘அபு’ என்று தொடங்கும் சொற்கள் மூன்று மட்டுமே. (
http://dsalsrv02.uchicago.edu/cgi-bin/philologic/contextualize.pl?p.0.tamillex.950993.951293). அவை
:

*அபுத்திபூருவம் aputti-pūruvam, n. < a- buddhi-pūrva. That which is unintentional; அறியாமல் நிகழ்ந்தது

*அபுத்திரகன் a-puttirakaṉ, n. < a-put- raka. One without male issue; புத்திரனைப் பெறாதவன்.

*அபுதன் aputaṉ, n. < a-budha. Fool, dolt: மூடன்.

இந்த மூன்றும் வடசொற்கள்.

அபுனைவு என்ற சொல்லை எப்படி உச்சரிக்கிறார்கள் எனத் தெரியவில்லை. புனைவு என்பதில் பகரம் வல்லொலி.  அபுனைவு என்பது தமிழாகவே தெரியவில்லை.  இருப்பினும் அதைப் படிக்கும்போது  abunaivu என்று மெலிந்து ஒலிக்கத்தான் தோன்றுகிறது.  அதை அ-புனைவு என்று இடைவெளி விட்டுப் படிப்பதும் மரபல்ல.

தமிழில் எதிர்மறைகள் பின்னொட்டு வழியாகத்தான் வருபவை.  சென்னைப் பல்கலைப் பேரகராதியில் “அபு” என்று தொடங்கும் சொற்கள் எவையும் இல்லை என்பதே இதன் தொன்மையான மரபைக் காட்டுகிறது.

பிராமணர் அல்லாதவர் என்பதைக் குறிப்பிட “அபிராமணர்” என்றா சொல்லுவீர்கள் என்று ஒரு எழுத்தாள நண்பரிடம் கேட்டபோது அவர்கள் வீட்டில் அப்படித்தான் சொல்வார்கள் என்று சொன்னார். அதை அபிராமணர் என்று உச்சரிக்காமல் ‘அப்ராமணர்’ என்று உச்சரிக்க வேண்டும் என்று விளக்கினார் ஹரி.  அதாவது

bhrāmanabhrāman

தமிழில் அபிராமணர் என்று சொல்ல முடியாது.  அப்பிராமணர் என்றால் அது அந்தப் பிராமணர் என்றுதான் பொருள்தரும். இது நிச்சயம் தமிழல்ல

பிராணிக்கு எதிர்மறை அபிராணியா?  அதை அப்பிராணி என்றா சொல்வார்கள்? அப்படிச் சொன்னால், அதை அந்தப் பிராணி என்றல்லவா புரிந்து கொள்ள நேரிடும்?

Non-Congress, non-Communist என்பவற்றை அகாங்கிரஸ் கட்சி, அகம்யூனிஸ்ட் என்று சொன்னால் தலை சுற்றவில்லையா? Non-payment க்கு அகட்டணம் என்று சொல்லிப்பாருங்கள்!

புனைவு என்ற சொல்லுக்கு அபுனைவு என்று எதிர்மறைச்சொல் படைத்தவர்களுக்குத் தமிழும் தெரியவில்லை, வடமொழியும் தெரியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.  இப்படி ஒரு மொழியின் அடிப்படை இலக்கணமே தெரியாமல் சொற்களைப் புனைபவர்களும், அதை எடுத்து ஆள்பவர்களூம்தான் இன்று இலக்கியவாதிகள். காப்பியைக் குளம்பி என்று தமிழ்ப்புலவர்கள் அழைத்தால் நக்கலடிக்கும் அதே இலக்கியவாதிகள் இப்படித் தமிழும் தெரியாமல் வடமொழியும் தெரியாமல் அபுனைவு என்று படைப்பதைப் பார்த்தால், மாமியார் உடைத்த ‘மண்குடம்’ என்பதுதான் நினைவுக்கு வருகிறது.
 

பெயர்ச்சொல்லுக்கு முன் அ- முன்னொட்டை இட்டு அதை எதிர்மறையாக மாற்றுவது ஆங்கிலத்துக்கும் வடமொழிக்கும் இலக்கண முறையாக இருக்கலாம்.  இரவற்சொற்களில் கூட இவை எடுத்தாளப் படலாம்.  ஆனால் தமிழ்ச்சொல்லுக்கு இவை பொருந்துமா?

இலக்கணம் மாறுகிறதே!
புனைவுக்கு எதிர்ச்சொல்லாக புனைவிலி என்று ஒரு ஆட்சியைப் பார்த்தேன். தாழ்வில்லை. இது பற்றிப் பேரா. செல்வகுமாரின் தமிழ்மன்றம் மடலாடற்குழுவில் உரையாடினோம். (காண்க: 
https://groups.google.com/forum/#!topic/tamilmanram/XMnHR-o4bWk )

புனைவறு’ என்று எழுதுவேன் என்று நாக. இளங்கோவன் சொல்கிறார். ‘அல்’ என்ற முன்னொட்டை இட்டு அல்புனைவு என்றும் சொல்லலாமே என்கிறார்.  பேரா. செல்வகுமார் அல்புனை என்ற சொல்லைப் பரிந்துரைக்கிறார்.  அல் முன்னொட்டுப் பல தமிழ்ச்சொற்களில் பயின்று வருகிறது என்று சுட்டுகிறார்.
தமிழில் இப்படி அபுனைவு என்பது கசப்பாகவே உள்ளது.
ஆனால் தமிழில் 
அல்வழி (வேற்றுமையல்லாத வழி, தகாத வழி)
அல்வழக்கு,
அல்லியன் (குழுவைப் பிரிந்த யானை),
அல்லிப்பிஞ்சு (பூவிழாத பிஞ்சு )
அல்லும்பகலும் என்னும் சொல்லாட்சியில் அல் என்பது இரவு (கதிரவனின் பகல் வெளிச்சம் இல்லாதது).
இனும் பல சொற்கள் உள்ளன. ஆகவே அல் என்னும் முன்னொட்டுடன் வரும் தமிழில். 

அல்லங்காடி என்ற சொல் மாலையில் கூடும் சந்தையைச் சுட்டுகிறது என்பது நினைவுக்கு வருகிறது.  ஆனால், அங்கே அல் என்பது இருளையும், இரவையும் சுட்டுகிறது.  அங்காடி அல்லாதது என்று சொல்லவில்லை.  எனவே அல் என்ற முன்னொட்டு எல்லா இடங்களிலும் பொருந்தாது என்றும் புரிகிறது.

இராமகி சொல்கிறார்:
அல்புனைவு என்று சொல்லலாம்; குழப்பம் வராது. தமிழிற் பெரும்பாலும் பின்னொட்டுக்களே பயிலும். அரிதாகவே முன்னொட்டுக்கள் பயின்று பார்த்திருக்கிறேன். அல் என்பது அப்படி ஓர் முன்னொட்டாகும். முதலிற் சொல்லும்போது முன்னொட்டாய் வைத்து இப்படிச் சொல்லத் தயங்கினேன். பின்னால் கொஞ்சங் கொஞ்சமாய் நான் ஏற்றுக் கொண்டுவிட்டேன். ஏனென்றால் 
”அல்வழி யெல்லாம் உறழென மொழிப” - தொல்.எழுத்து.புள்ளி 73;“அறனை நினைப்பானை யல்பொருள் அஞ்சும்” - திரிகடுகம் 72.“அல்வழக்கு ஒன்றுமில்லா அணிகோட்டியர்கோன் - திவ். திருப்பல்.11. ”அல்லறஞ் செய்வோர் அருநரகு அடைதலும்” - மணிமே. 16:89”அழுக்காற்றின் அல்லவை செய்யார்” - குறள் 164“அல்லுழியெல்லாம் பரந்துபட்டு வரவும் பெறும்” - தொல்.பொருள்.செய்.183. பேரா.உரை   என்ற முன்னோர் காட்டுக்கள் இருக்கின்றன. இந்தச் சிந்தனையிற் தோய்ந்தே ”அத்வைதம்” என்பதற்கு ”அல்லிருமை” என்ற இணைச்சொல்லை நான் ஏற்கனவே பரிந்துரைத்தேன்.
புனைவிலி என்பது புனைவே இல்லாதது (no imagination) என்றாகும்; அதனால் “முற்றிலும் உள்ளமை (totally real) என்ற பொருட்பாடு வந்துவிடும். Non-fiction என்பது இதுவல்ல. அது கதையல்லாதது; எனவே வேறொரு வகையைக் குறிக்கும்.
இல்ல, அல்ல என்ற இருவகைக் கருத்துக்களுக்கும் உள்ள பொருள் வேறுபாட்டை இங்கு நுண்ணி எண்ணிப் பார்க்கவேண்டும். இல்லுதலும், அல்லுதலும் வேறு வேறானவை.
அல்புனைவோ அல்லது அல்புனையோ இவ்விரண்டுமே அபுனைவை விட மேலானவை. கொட்டைவடிநீர், குளம்பி, மூத்த குரங்கு தமிழ்க்குரங்கு என்றெல்லாம் தமிழ்ப்புலவர்களை நக்கலடிக்கும் ‘இலக்கியவாதிகள்’ அபுனைவு என்று தாம் படைத்தது தவறு என்று ஏற்றுக் கொண்டு அல்புனைவு சரி என்று ஏற்றுக்கொண்டு தாம் அறிவு நேர்மை உடையவர்கள் என்று உறுதி செய்ய இது ஒரு நல்ல வாய்ப்பு. 

செய்வார்களா? “இலக்கியவாதிகள்” செய்யாவிட்டாலும் தாழ்வில்லை.  தமிழைப் பற்றி அக்கறையுள்ளவர்களாவது செய்யலாமே?

சனி, ஜூலை 27, 2013

கலைச்சொற்களும் கொலைச்சொற்களும்

தமிழகத் தொலைக்காட்சிகளைப் பார்க்கும்போதும், வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்கும்போதும் அன்றாடத் தமிழ்ப் பேச்சில் ஆங்கிலம் எவ்வளவு கலந்திருக்கிறது என்பதை உணரலாம்.  1970கள் வரைக்கூட இந்த நிலை இல்லை.  அப்போதைய கே. பாலச்சந்தர் படங்களில் மேட்டுக்குடிப் பாத்திரங்கள் மட்டுமே ஆங்கிலம் கலந்து பேசுவார்கள்.  ஆனாலும் மேஜர் சுந்தரராஜன் நடித்த பாத்திரங்களில் அவர் ஆங்கிலத்தில் பேசியதை உடனேயே தமிழில் மொழி பெயர்த்து விடுவார்.  இல்லையென்றால் படம் பார்ப்பவர்களில் பெரும்பாலோருக்குக் கதை புரியாமல் போய் விடும்.

ஆனால், இன்றைய நிலையில், தொலைக்காட்சிச் செய்திகளில் கூட, தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் சிற்றூர்களில் உள்ள மூதாட்டிகள் கூடத் தமக்கும் ஆங்கிலம் தெரியும் என்று காட்டிக் கொள்ள எதையாவது கலந்து பேசுகிறார்கள். வடநாட்டிலிருந்து இறக்குமதி ஆகியிருக்கும் நடிகைகளுக்காவது உண்மையிலேயே தமிழ் தெரியாது.  எனவே அவர்கள் ஆங்கிலம் கலந்து பேசுவதைப் பொறுத்துக் கொள்ளலாம்.  ஆனால், தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த அறிவிப்பாளர்களுக்கும் கூட “நான் பிறந்திருக்க வேண்டியது இங்க்லேண்ட்” என்ற உணர்வு போலும்.

மிகப் பெரும்பாலான அறிவிப்பாளர்களுக்கு ஆங்கிலம் தெரியாது.  அது அவர்கள் பிழையல்ல.  ஆங்கிலம் நம் தாய்மொழி இல்லையே?  அதை இரண்டாவது மொழியாகத்தான் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.  ஆனால் தாய்மொழியையும் கற்றுக் கொள்ளாவிட்டால், நமக்கு எந்த மொழியுமே முதல்மொழியாக இல்லாமல் போய்விடும்.  இதனால்தான், எந்தத் தொழில்நுட்பம் வந்தாலும், அது வரும்போதே அது குறிப்பிடும் கலைச்சொற்களைப் புரிந்து கொண்டு, நம்முடையதாக்கி, நம் மொழியில் பெயரிட வேண்டும்.  அதன் ஆளுமையே தனிதான்.  இன்று பட்டி தொட்டி எல்லாமே “இணையம்” என்ற சொல் பரவி இருப்பதே இத்தகைய ஆளுமைக்கு எடுத்துக்காட்டு.

தமிழ் இணையத்தின் தொடக்க காலத்தில், தமிழ்.நெட் (tamil@tamil.net) என்ற மடலாடற்குழுவில்தான் இணையத்தில் தமிழைப் புழங்கிய அத்தனை பேரும் இருந்தோம்.  அங்கேதான் “இணையம்” என்ற சொல்லும் படைக்கப் பட்டது.  அதன் பின்னர் தமிழ்.நெட்டில் இருந்து கிளைத்த சில குழுக்களில் சிறப்பான கலந்துரையாடல்கள் நடந்து வருகின்றன.  அவற்றில் அகத்தியர் குழுமம் தலையாயது.

ஒருமுறை, செப்டம்பர் 1999ல், செல்ஃபோன், பேஜர் என்ற ஆங்கிலச்சொற்களுக்கு இணையான தமிழ்க் கலைச்சொல் ஒன்று பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம்.  1989ல், சிங்கப்பூர் முஸ்தஃபா கடையில், அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த தமிழ் முஸ்லிம்களிடம் இருந்துதான் அகவி என்றால் பேஜர் என்றும், கைப்பேசி என்றால் கார்ட்லெஸ் ஃபோன் என்றும் தெரிந்து கொண்டேன்.  அவர்கள் யாரும் தமிழ்ப் புலவர்களல்லர்.  ஆனால், இந்த அந்நியப் பொருள்களை அவர்கள் தமிழில் பெயர்சூட்டி அழைக்கத் தயங்கவில்லை.  ஆங்கில மோகம் சிங்கப்பூரை அப்போது எட்டவில்லை போலும்.

ஆனால், அகவி, கைப்பேசி, செல்பேசி (மொபைல் ஃபோன்), செல்லிடைபேசி போன்ற பெயர்களைத் தமிழகத் தமிழர்கள் ஏற்றுக் கொள்ளத் தயங்கினார்கள்.  அந்த உரையாடலில் இந்தப் பெயர்களை ஏற்றுக் கொள்ளும் குழப்பம் பற்றி “செந்தில் - கவுண்டமணி” நகைச்சுவை உரையாடல் போல எழுதியிருந்தேன்.

http://www.treasurehouseofagathiyar.net/02300/2333.htm ) அகத்தியரில் அவ்வப்போது இப்படி கலாய்க்கலாம். அறிஞர் ஜெயபாரதி நல்ல நகைச்சுவை உணர்வாளர்.  இத்தனை ஆண்டுகள் கழித்து அதை மீண்டும் வெளியிடுகிறேன்.  இன்றைய வலையுலகம் இதைப் பொருத்தருளட்டும். . :-)

============

X-Mailing-List: agathiyar@egroups.com
From: "Mani M. Manivannan"
Date: Wed, 29 Sep 1999 20:11:22 -0700
Subject: [agathiyar] Re: Fw: [tamil] New word for cell phone?


>>Plug க்கு அடைப்பான் எனும்போது pager க்கு விளிப்பான் என ஏன் 
>>சொல்லக் கூடாது. அல்லது கூவி எனலாமே 
>What about 'அழைப்பான்'? 

க: டேய் செந்தில், டேஏய் செந்தில்! 

செ: என்னாண்ணேய்? விளிச்சீங்களா? 

க: அந்த விளிப்பானை எடுத்து ஒங்கண்ணியை விளி. 

செ: (கண்ணை அகல விரித்துக் கொண்டு) எந்தப் பானை அண்ணே? 

க: டேய்! ஒன் கண்ணை விழிக்கச் சொல்லலேடா, உங்க அண்ணிய விளிக்கச் சொன்னேன். 

செ: அட! அப்படிச் சொல்லுங்கண்ணே! ஆமா, எந்தப் பானைய வைச்சி அண்ணிய விளிக்கச் சொன்னீங்க? 

க: ஏ, புண்ணாக்கு! பானையை இல்லடா முண்டம்! இந்த விளிப்பான் இருக்குதுல்ல? புரியலயா? 

செ: :-( 

க: சரி அழைப்பான்னா என்னான்னு தெரியுமா? 

செ: :-@ 

க: மக்குப்புண்ணாக்கு! தகவல் ஒலி ஒளி அலைப்பானைப் பத்தியாவாது கேள்விப் பட்டிருக்கியா? 

செ: அண்ணே! திட்டுனா புரியற மாதிரி திட்டுங்கண்ணே! 

க: சரி, கரையானையாவது தெரியுமா? சரி விடு, செல்லரிக்கிற பூச்சியைக் கொண்டாந்தாலும் கொண்டு வருவே! 

செ: அட நீங்க ஒண்ணு, வீடு பூரா கரையானும் பூரானுமாத்தானே இருக்கு! 

க: ஆங்! ஒன்னைமாதிரி கரப்பானைக் கொண்டு வந்து ஊட்டுல வச்சா ஏண்டா கரையானும் பூரானும் வராது? 

செ: அண்ணே, அண்ணியை விளிக்கணுமுன்னீங்களே? 

க: டேய் முண்டம், சரி கூவி, தகவல் தாங்கி, கரைவி, அகவி எதைப்பத்தியாவது கேள்விப் பட்டிருக்கியா? 

செ: இல்லங்கண்ணே! 

க: டேய்! ஒங்கோட பேசறதுக்குப் பதிலா,

"இம்பர்வான் எல்லை இராமனையே பாடி 
எண்கொணர்ந்தாய் பாணாநீ என்றாள் பாணி"ன்னு 

பாடுனாரே அந்தப் பாணரோட பொண்டாட்டி பாணிக்கிட்டேயே சொல்லி வெளங்க வைக்கலாம்! 

செ: என்னாங்கண்ணே! (தலையைச் சொறிகிறார்) 

க: டேய் தமிழா! போய் அந்த பீப்பர், பேஜர், எடுத்துட்டு வாடா. 

செ: அட என்னாங்கண்ணேய்! ஒரே பேஜாராப் போச்சு. பேஜர்ன்னு தமில்லே சொல்லிருந்தீங்கன்னா, ஒடனே கொண்ணாந்திருப்பேன்! 

க: (அடிக்க வருகிறார்). 

எடுப்பான் கொடுப்பான் 
விளிப்பான் அழைப்பான் 
இளிப்பான் யார் யாரோ! 
அடைப்பான் யார் யாரோஓ! (என்று புலம்பிக் கொண்டே செல்கிறார்). 

மணி மு. மணிவண்ணன் 
நூவர்க், கலி., அமெரிக்கக் கூட்டு நாடுகள் 

சனி, மார்ச் 09, 2013

இராமர் பாலம்!

இராமர் பாலம் பற்றிய செய்திகள் சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கும் இவ்வேளையில், 2007 மே மாதத்தில், தமிழ் உலகம் மடலாடற்குழுவில் அமெரிக்காவிலிருந்து நான் பதிவு செய்திருந்த ஒரு கட்டுரையை மீள் பதிவு செய்கிறேன்.  அந்தக் கட்டுரையை அப்போதே தன் வலைப்பூவில் (http://nayanam.blogspot.com/2007/05/blog-post_30.html) பதிவு செய்திருந்த நண்பர் ‘நயனம்’ இளங்கோவனுக்கு என் நன்றிஇராமர் பாலம்!

===========================================================

ராமர் பாலம், ராமர் சேது என்ற பெயர்கள் இந்திய நாடாளுமன்றத்தையே சூடாக்கிக் கொண்டிருக்கும் நேரம். "ராம ஜன்ம பூமி" என்ற பெயரால் அரசியல் பிழைப்பு நடத்தி ஆட்சிக்கு வந்த அதே கூட்டம் இப்போது "ராம கர்ம பூமி" என்ற பெயரால் மீண்டும் ஆட்சியைக் கைப்பிடிக்க முயற்சி எடுக்கிறது போலும். நாசாவால் விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட படத்திலேயே ராமரின் வானரப் படைகள் ராமேஸ்வரத்திலி ருந்து தலைமன்னாருக்குக் கட்டிய திரேத யுகத்தில் கட்டிய பாலம் தெளிவாகத் தெரிகிறது என்று ஒரு ஐந்தாண்டுகளுக்கு முன்பு பரபரப்பான மின்னஞ்சல்கள் பறந்து கொண்டிருந்தன.

பண்டைய வானரங்கள் இருக்கட்டும், இன்றைய மனிதர்களே, இலங்கையின் மீது படையெடுக்க எண்ணிப் பாலம் கட்ட எண்ணுகிறார்கள் என்றே வைத்துக் கொள்ளுவோம். அதற்கு என்னென்ன செய்ய வேண்டும்? போக்குவரத்துக்குப் பாலம் கட்டும் அமைப்பு வேறு, படையெடுக்கக் கட்டும் பாலத்தின் அமைப்பு வேறு. போக்குவரத்துக்குப் பாலம் கட்டுபவர்கள் எப்போதும் நிலைத்து நிற்கும் எண்ணத்துடன் கட்டுவார்கள். பாலத்தின் அகலம் சற்றுக் கூடுதலாகக் கூட இருக்கலாம். கட்டுமானப் பொருள்கள், செலவு, கட்டுவதற்குத் தேவையான ஆட்கள், கட்டத் தேவையான நேரம், கடல் மீது கட்டுவதால் கடல் அரிப்பைச் சமாளிக்கத் தேவையான நுட்பம், என்று எல்லாவற்றையும் சிந்தித்துத்தான் கட்ட வேண்டியிருக்கும். பொதுவாக மனிதர்கள் கட்டும் பாலம் நேர்க்கோட்டில் அமைந்திருக்கும். செலவு அதனால் மிச்சமாகும். அப்படியே வளைந்து இருந்தாலும், தீவுகளுக்கும், திட்டுகளுக்கும் இடையேயாவது நேர்க்கோட்டில்தான் கட்டுவார்கள்.

விண்வெளியில் இருந்து தெரியும் இந்த "ராமர் பாலம்" நேர்க்கோட்டு அமைப்பில் இருந்திருந்தால் இது கண்டிப்பாக செயற்கையாகக் கட்டப்பட்ட பாலம்தான் என்று உறுதியாக நம்பலாம். இதுவோ, உலகெங்கும் பெருநிலங்களுக்கிடையே இயல்பாகத் தோன்றியிருக்கும் இஸ்த்துமஸ்கள் போல கடலரிப்புகளால் இயல்பாக எழுந்திருக்கக் கூடிய வளைவுடன் தான் காட்சியளிக்கிறது.

அது மட்டுமல்ல. இந்த "ராமர் பாலம்" இருக்கும் அதே ராமேஸ்வரம் தீவுக்கும், இந்தியப் பெருநிலத்துக்கும் இடையே உண்மையிலேயே மனிதர்கள் கட்டிய பாலம் ஒன்று இருக்கிறது. அதன் பெயர் பாம்பன் பாலம். இந்தப் பாலத்தில் இரயில் வண்டியும் போகும், நெடுஞ்சாலைப் போக்குவரத்தும் இருக்கிறது. இது அண்மையில் முதலில் ஆங்கிலேயர்களும், பின்னர் இந்தியர்களும் கட்டிய பாலம். இருபதாம் நூற்றாண்டின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கட்டிய பாலம். பண்டைய வானரங்கள் திரேத யுகத்தில் "கட்டிய" பாலமே விண்வெளியிலிருந்து தெரிகிறது என்றால், அண்மையில் கட்டிய பாலமும் விண்வெளியிலிருந்து நன்றாகத் தெரியவேண்டும் இல்லையா? அதுதான் இல்லை.

நாசாவின் படத்தொகுப்பிலிருந்து பல படங்களைத் துருவித்தேடிப் பார்த்தேன். ஓரிரு படங்களில் பாம்பன் பாலம் என்று பெயர் போட்டிருந்த படங்களைப் பார்த்தேன். நேர்க்கோட்டில், மிக, மிகச் சிறிய அகலத்துடன் பாம்பன் பாலம் படங்கள் இருக்கின்றன. அவற்றோடு ஒப்பிடும்போது திரேத யுக வானரங்களின் தொழில்நுட்பம் மிகவும் சக்தி வாய்ந்ததாய் இருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது! ஏனென்றால், படையெடுப்புக்காக ஒரு யுகத்துக்கு முன்பு கட்டிய பாலம் இன்று மிக அகலமாகத் தோன்றுகிறது. சரி, ஒரு யுகத்துக்கு முன்பு கட்டிய பாலம் இல்லையா, ஒரு யுகமாகச் சேர்ந்திருந்த மண்ணால்தான் அது இன்று அகலமாகத் தோன்றுகிறது என்றும் சிலர் நினைக்கலாம்.

எது எப்படியோ, இது 1,750,000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய பாலமாய் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால், 18,000 ஆண்டுகளுக்கு முன்பு கடந்த உறைபனிக்காலத்தின்போது கடல் மட்டம் இன்று இருப்பதைவிட மிகத் தாழ்ந்து இருந்தது. அப்போது இந்தியாவும், இலங்கையும் ஒன்றாய் இணைந்திருந்தன. அன்றைய உலகம் எப்படி இருந்திருக்கும் என்று அமெரிக்காவின் கடல் ஆராய்ச்சித் துறை ஒரு நல்ல படம் ஒன்றை வரைந்திருக்கி றது. அதை கீழ்க்காணும் சுட்டியில் பார்க்கலாம்:
ftp://ftp.ngdc.noaa.gov/GLOBE_DEM/pictures/GLOBALsealevelsm.jpg

அப்போது இணைந்திருந்த நிலங்கள் கடல் அரிப்பால் பிரிந்து இப்போது தனி நிலங்களாக விளங்குகின்றன. இந்த "ராமர்" பாலம் செயற்கையாகக் கட்டிய பாலமாக இருந்திருக்க முடியாது.

ஆனால், ஐஐடி போன்ற உயர்நுட்பக் கழகங்களில் படித்து, அமெரிக்காவில் முனைவர் பட்டம் பெற்று, பெருநிறுவனங்களில் பணியாற்றும் பல அறிவாளிகள் "ராம கர்ம பூமி" போராட்டத்தில் மும்முரமாக இறங்கி இருக்கிறார்கள்.

இது உண்மையிலேயே ராம கர்ம பூமி இல்லை, ஆனால், தமிழ்நாட்டிலிருந்து யானை, பூனை, எலி, புலி எல்லாம் தமி ழர்களோடு தென்னிலங்கைக்குக் குடி பெயர்ந்த பூமிதான் இது என்று தெரிந்தால் இந்த அறிவாளிகள் என்ன செய்வார்கள் தெரியுமா? :-)

இந்தச் சேது சமுத்திரத் திட்டம் தமிழ்நாட்டுக்கு நல்லதில்லை என்று பல ஆண்டுகளாய் நான் எழுதி வந்திருக்கிறேன். கல்நெய்க் கலங்கள் (crude oil tankers) இந்த மன்னார் வளைகுடாப் பகுதியைக் கடக்கத் தொடங்கினால், கண்டிப்பாக ஒரு நாள் ஏதோ ஒன்று புயலில் மாட்டி முழுகத்தான் போகிறது. அதனால் விளையும் மாசுகள் சுற்றுச் சூழலை நாசப் படுத்தப் போகிறது.

இதை நேர்மையாகச் சொல்லிப் போராடிப் பார்த்தால் ஒன்றும் நடக்கவில்லை. ராம கர்ம பூமிப் போராளிகள் இதைத் தடுக்க முடிந்தால் புண்ணியமாய்ப் போகும்.

சொல்லப் போனால், குமரிக் கண்டப் போராளிகளும், தனித்தமிழ்ப் படைகளும், இது தமிழன் தென்னிலங்கைக்குச் சென்ற பாலத்தின் எச்சங்கள் புதைந்திருக்கும் இடம், அதனால் இது பாதுகாக்கப் பட வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்க வேண்டும்.

அப்படி நெடுமாறனோ யாராவதோ கொடி பிடித்திருந்தால், எல்லோரும் அவர்களை நையாண்டி செய்து கொண்டிருப்பார்கள். ஆனால், ராம கர்ம பூமி என்ற அரசியல் சூழ்ச்சியாளர்களைப் பார்த்து யாரும் அப்படி நையாண்டி செய்வதாகத் தெரியவில்லை.

பைபிளை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் அயோக்கியர்கள் வாழும் பூமியிலிருந்து (USA) எழுதுகிறேன். சமய நூல்களை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் அயோக்கியர்களை நம்பவே நம்பாதீர்கள்.

அன்புடன்,

மணி மு. மணிவண்ணன்
நூவர்க், கலிபோர்னியா
அமெரிக்கா
மே, 2007.

சனி, பிப்ரவரி 09, 2013

வலைப்பூவா வலைப்பதிவா - கோப்பைக்குள்ளே குத்துவெட்டு!


தமிழில் கலைச்சொற்கள் எவ்வாறு எழுகின்றன, நிலைக்கின்றன என்பது பற்றி யாரேனும் ஓர் ஆய்வுக்கட்டுரையைப் படைக்கலாம். Weblog என்ற ஆங்கிலச் சொல்லை அமெரிக்கர்கள் அவர்களுக்கே உரிய குறும்புத்தன்மையுடன் குறுக்கி blog என்று மாற்றினார்கள். இப்படிப் பட்டக் குறும்புச் சொல்லை மொழி பெயர்ப்பது என்பது ஒவ்வொரு மொழியின் தன்மையைப் பொறுத்து அமையும். மே 15, 2003ல், எழுத்தாளர் இரா. முருகனின்  ராயர் காப்பி கிளப் குழுவில் எழுத்தாள மாலன் பெயர் சூட்ட வாருங்கள் என்று அழைக்க, நான் “வலைப்பூ” என்ற சொல்லைப் பரிந்துரைத்தேன்.

============

http://groups.yahoo.com/group/RayarKaapiKlub/message/7994

Re: [RKK] Peyar soota vaarungkal
மதிப்பிற்குரிய மாலன் அவர்களுக்கு,
தமிழில் உவெ(ம்)ப் லா(ங்)க் அமைத்ததற்கும், திசைகள் வலையிதழுக்கு வியக்கத்தக்க எண்ணிக்கையில் வாசகர்களை ஈர்த்ததற்கும் உளமார்ந்த பாராட்டுகள், வாழ்த்துகள்.
At 5/14/03 08:56 PM, you wrote:>"Blog என்பதற்கு ஏற்ற தமிழ்ச் சொல் என்ன? Web Log என்ற சொல்லிலிருந்து >தோன்றியது blog. எனவே இணையப்பட்டி, இணைப்பதிவு, இணை-வரிசை >(அலைவரிசை போல) அல்லது அதன் பயன்பாட்டுத் தன்மையைக் கருதி சிற்றிணை, >அல்லது இணைக்குறிப்பு, குறிப்பிணை இப்படி அமையலாமா?"
பொதுவாக இணையம் என்ற சொல்லை இண்டர்நெட்டுக்கும் வலை என்ற சொல்லை உவெப், நெட் என்ற சொற்களுக்கும் புழங்கி வருகிறோம். உவெப் சைட் என்பது வலைத்தளம், இணையத்தளம் இல்லை. உவெப் பேஜ் என்பது வலைப்பக்கம். உவெப்ஸைன் என்பது வலையிதழ், இணைய இதழ் இல்லை.
எனவே உவெப் லாக் என்பதற்கு வலைக் குறிப்பு என்று சொல்லாக்கினால், ப்லாக் என்னும் குறும்(புப்) பெயருக்கு இணையாக வலைப்பு என்று சொல்லலாமா? வலைப்பு என்ற சொல் கொலோன் வலையகராதியில் இல்லை. அதனால் இந்தச் சொல் ஏற்கனவே வேறு பொருளில் தமிழில் இருந்திருக்க வாய்ப்பில்லை.
இல்லையேல் இன்னும் குறும்பாக, வலைப்பூ எனலாம். வலையிதழ் என்பது உவெப்சைன் என்பது போல வலைப்பூ என்பது உவெப்லாக் ஆகலாம். ஆனால், புலவர்கள் பொருட்குற்றம் காண்பார்கள்!
"எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே" என்னும் இலக்கணத்தை மீறி இதற்கு இடுகுறிப்பெயரும் இடலாம். வலைக்குறிப்பு - வலைப்பு, வலைப்பூ, வறிப்பு, வலையரிப்பு(!), லைப்பு, லறிப்பு என்று விளையாடலாம்.
ஆனால், தமிழனுக்கு ஒரு கவிதையுள்ளம் உண்டு. இண்டர்நெட்டுக்குப் பல இதயங்களை இணைக்கும் மையம் என்னும் பொருள் தர இணையம் என்று சொல்லைப் படைத்தவன் தமிழன். பத்திரிக்கைகளுக்கு தினமலர், வார இதழ், ஆண்டு மலர், என்று பெயர் வைப்பவன் தமிழன். எனவே வலைப்பூ என்ற சொல் தமிழ் உள்ளங்களைக் கவரும் என்று எண்ணுகிறேன்.
அன்புடன், மணி மு. மணிவண்ணன்நூவர்க், கலி., அ.கூ.நா.
பி. கு. உவெப் லாக் எப்படி உவெ(ம்)ப் லா(ங்)க் ஆகியது என்று எண்ணும் நண்பர்களுக்கு, ஆங்கிலத்தில் ஓசையற்ற எழுத்துகள் உச்சரிப்பைப் பாதிப்பது போல் தமிழிலும் செய்தால் என்ன என்று சில சமயம் விளையாடிப் பார்த்திருக்கிறேன். வல்லின பகரத்துக்கு முன்னர் மெல்லின மகர மெய்யை இட்டால் வல்லினம் மெலிகிறதல்லவா? அதே போல் ககரத்துக்கு முன்னர் ஙகரம். Web எப்படி உவெப் ஆகிற்று என்பவர்கள் உச்சரிப்பில் Veb க்கும் Webக்கும் உள்ள வேறுபாட்டைக் கவனிக்க வேண்டும். Web எனக்கு உவப்பு தான்!”
======

"வலைப்பூ” என்ற கவித்துவமான சொல்லெல்லாம் கலைச்சொற்களுக்கு உதவாது, வலைப்பதிவுதான் ஏற்ற சொல், அதுதான் நிலைத்தது என்று சொன்னார் போயிங் கணேசன்.

http://nganesan.blogspot.in/2009/07/valaippathivu.html

கலைச்சொல்லில் எது நிலைக்கும் எது நிலைக்காது என்று சொல்லைப் படைக்கும்போதே தீர்மானிப்பது மிகக் கடினம்.  இண்டர்நெட்டுக்கு இணையம் என்ற சொல் இன்று பட்டிதொட்டியெல்லாம் பரவியிருப்பது தமிழ் ஆர்வலர்களின் முயற்சிக்கு வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும்.  ஆங்கிலம் கலந்து பேசும் தமிங்கிலத்தை சன் டிவி பரப்பிக் கொண்டிருந்ததை இயல்புதான் என்று சொல்லிக் கொண்டிருந்த அதே காலக் கட்டத்தில்தான் இணையத்துக்கான கலைச்சொற்களை தமிழ்.நெட்டில் படைத்துக் கொண்டிருந்தோம்.

முதலில் இணையம் என்ற சொல்லை ஏற்கத் தயங்கிய எழுத்தாளர் சுஜாதா அவர்களே பின்னர் இணையம் என்ற சொல்லைப் பரப்புவதில் பெரும்பங்கு ஆற்றினார்.

அதே போல், வலைப்பூ என்ற சொல் இன்று பரவியிருப்பதற்கு எழுத்தாளர் மாலன் அவர்களின் ஆதரவு ஒரு முக்கிய காரணம்.

இப்படி ஆர்வலர்களும், முன்னணி எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் கூடிச் செயல்பட்டால் உயிர்ப்புள்ள தமிழ்ச் சொற்களை தமிழின் வேர்களில் இருந்தே கொண்டு வரலாம்.

வெள்ளி, பிப்ரவரி 08, 2013

கடவுளும் கேட்டசாமியும்

கடவுளும் கேட்டசாமியும்

முகநூலில் என் இளைய நண்பர் கொற்றவன், சித்தார்த்த கௌதமனைப்போல் ஒரு தேடலைத் தொடங்கியிருக்கிறார். இந்தச் சிறிய வயதில் அவருக்குத் திடீரென்று இறப்பைப் பற்றிய எண்ணம் வந்து அச்சுறுத்துகிறது.  பிறந்தவர்கள் எல்லோரும் இறந்து விடுகிறார்களே, அப்படியானால் நாமும், நம் உற்றார் உறவினரும் நண்பர்களும் எப்போது வேண்டுமானால் இறந்து போகலாமே என்ற அச்சத்தில் இறப்பைப் பற்றிப் புரிந்து கொள்ள அவர் தேடத் தொடங்கியிருக்கிறார்.

அவ்வப்போது இந்தத் தேடலின் தொடர்பாக அவர் தனி மடலிலும் முகநூல் நிலைச்செய்திகளிலும் வினாக்களை எழுப்புவார்.  அவரது தேடல் சித்தார்த்த கௌதமனைப் போல அவரைப் போதிமரத்தின் நிழலுக்கு அழைத்துச் செல்லப் போகிறதா என்று நான் அறியேன்.  திடீரென்று ஒரு நாள், ராமகிருஷ்ணரை நரேந்திரரைக் கேட்டது போல் என்னிடம் நீங்கள் கடவுளை உணர்ந்ததுண்டா எனக் கேட்டு விட்டார்.  நான் என்ன பரமஹம்சரா என்ன இதற்கு விடையளிக்க? திருதிருவென்று விழித்தேன்.  அவரும் விடாக்கண்டர்.  நீர் கோவிலுக்குச் சென்று வழிபடுபவராயிற்றே, கடவுளை நம்புபவர்தாமே?  நீங்கள் கடவுளை உணர்ந்ததுண்டா என்றார்?

இது சிக்கலான கேள்வி.

நான் உணர்ந்ததுதான் கடவுள் என்று என்னால் எப்படிச் சொல்ல முடியும்?

பகுத்தறிவோடு என்னால் விளக்கமுடியாதவற்றை நான் உணர்ந்திருக்கிறேன் என்பது உண்மைதான்.  ஆனால், அதுதான் கடவுளா என்று எனக்கு உண்மையிலேயே தெரியாது.  ஆனால், அந்த நேரத்தில் நான் கடவுளை உணர்ந்ததாகத்தான் நம்பினேன் என்பது என்னவோ உண்மைதான்.

இன்று திடீரென்று இறப்பைப் பற்றியும் கடவுளைப் பற்றியும் கேள்விக்கணைகளாய்த் தொடுத்துவிட்டார்.  எனக்குத் தோன்றிய விடைகளைப் பதிவு செய்து பகிர்ந்து கொள்ளத் தோன்றியது.  இதோ அவரது கேள்விகளுக்கு என் விடைகள்.

கே: நாம் ஏன் பிறந்தோம்?
வி: நாம் எல்லா உயிரினங்களையும் போலவே இனப்பெருக்கத்துக்காகப் பிறந்தோம்.

கே: நாம் ஏன் இறக்க வேண்டும்?
வி: வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதிப்படி, நம்முடைய உடலில் உள்ள அணுக்கள் சிதையத் தொடங்குகின்றன. ஒரு குறிப்பிட வரம்பை மீறிய பின்னால் இந்த உடலால் பயனொன்றும் இல்லை.  பழங்காலத்தில் அது ஒரிரு குழந்தைகளைப் பெற்று அவற்றை ஆளாக்கி விட்டபின் போதுமாக இருந்தது.  நமக்கு 30 வயதில் அடுத்த தலைமுறை இனப்பெருக்கத்துக்கு ஆயத்தமாகிவிடும். 45 வயதில், இரண்டு தலைமுறைகள் ஆயத்தமாகியிருக்கும்.  அதற்குப் பின் இயற்கையைப் பொருத்தவரையில் நம்மால் பயனில்லை. எல்லா நோய்களும் 45 வயதுக்கு அப்புறம் கடுமையாகத் தாக்குகின்றன.

கே: நாம் ஏன் இறக்க அஞ்சுகிறோம்?
வி: எல்லா உயிரினங்களும் தம்மைக் காத்துக் கொள்ளவே விரும்புகின்றன.  இந்த அடிப்படை தெரியாத உயிர்கள், டார்வினின் கோட்பாட்டின்படி, அழிந்து விடுகின்றன. அச்சம் நம்மைக் காப்பாற்றிக் கொள்ள உதவுகிறது.

கே: இறப்பு எப்படி இருக்கும்?
வி: இதற்கு வள்ளுவர் விடையளித்திருக்கிறார்.  இறப்பு தூங்குவது போல் இருக்கும்.

உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு. (குறள் 339).


கே: இறந்த பின் எப்படி இருக்கும்? 
வி: ஒன்றும் இருக்காது.

கே: இறந்தபின் நாம் என்ன ஆவோம்?
வி: ஆவதற்கு ஒன்றும் இல்லை.  உறக்கத்துக்குப் பின் விழிப்பது நாம் இல்லை.  இந்தப் பிறப்பின் கதை முடிந்து விட்டது.  நம் உடலில் இருக்கும் பல்லாயிரம் கோடி உயிர்கள் வேறு எங்கோ போயிருக்கும்.  இந்த உடலின் அணுக்கள் சிதைந்திருக்கும். இந்த முகிழ்ப்பு நிறைவேறிவிட்டது.  முந்தைய முகிழ்ப்பு வேறு யாரோ.  வரும் முகிழ்ப்பும் வேறு யாரோ. அவை நம்முடன் தொடர்பில்லாதவை.

கே: கடவுள் என்று ஒன்று உண்டா?
வி: இந்தப் பேரண்டம்தான் கடவுள்.

கே: அப்படியானால் ஏன் அந்தக்கடவுள் நம்மை படைத்து அழிக்கவேண்டும்?
வி: கம்பராமாயணம் பாயிரம் இதற்கு விடையளிக்கிறது.

உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட்டு உடையான் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே 

           
அலகிலா விளையாட்டு.  அவ்வளவே.  தில்லைக் கூத்தர் ஏன் ஆடுகிறார்?  இந்த அண்டங்களும், அணுக்குள் இருக்கும் துகள்களும் ஏன் ஆடிக் கொண்டிருக்கின்றன.  அலகிலா விளையாட்டு.  ஆக்கலும் அழித்தலும் இந்த விளையாட்டில் ஒரு பங்கு.  அவ்வளவே.

கே: கடவுள் எப்படி உருவானார்?
வி: அவர் உருவாகவில்லை.  என்றும் இருப்பவர்.

கே: ஒரு வேளை கடவுள் இல்லை என்றால் அறிவியலில் கூறப்படும் பெருவெடிப்பிற்கு [Big bang] முன் என்ன இருந்தது!!
வி: அதுதான் கடவுள்.

உடனே என் “அக்கினிக்குஞ்சு” நாடகத்தில் பாரதியின் புதுமைப்பெண் பாத்திரத்தில் நடித்த கௌரி ஒரு பிடி பிடித்தார்.

”அப்படியானால் கடவுள் இருக்கிறார் என்று ஏற்றுக் கொள்கிறீர்கள்தானே!  நல்லது” என்றார் அவர்.

இதற்கு என்ன விடை?

Well, in each and every human body, there are billions of life forms (mostly bacteria) that are almost certainly not aware of their host. It doesn't matter whether they "believe" in us or whether we respond to their "prayers." It is in our interest to keep our body healthy and that is sufficient to meet the needs of these parasitical life forms. All parts of the universe, including us, are like that. The universe may not "know" or "care" that we exist and we can never fully comprehend the universe.

Is the universe sentient?
I think that Vishwaroopam is unknowable and incomprehensible.
I think that universe(s) are eternal. And that is my definition of God.

Do prayers work?
It is too random to draw a definite conclusion, but perhaps not.

Does meditation work?
Probably.

Does it "prove" that God exists?
No. But I don't think that a personal God, vengeful of those that deny him, an account keeper who punishes the evil and rewards the good, exists. To imagine a God with human frailties, with anger and love, vengefulness and compassion, is comforting but very anthropomorphic.  The universe seems to be indifferent to us. Why would it care to "judge" us or "punish" us or "reward" us?  But our actions, mostly, have consequences.

தீதும் நன்றும் பிறர்தர வாரா!

What does that make me? Theist or Agnost or an Atheist? :-)

வெள்ளி, பிப்ரவரி 01, 2013

பாட்டியின் வீட்டுப் பழம்பானையடா...

பள்ளிக்கூடத்தில் எத்தனையோ பாடல்களை மனப்பாடம் செய்கிறோம்.  அதை எதற்கு மனப்பாடம் செய்யச் சொல்கிறார்களோ என்று வருந்திக் கொண்டே கூடச் செய்கிறோம்.  முந்தைய தலைமுறையில் தமிழாசிரியர்கள் பல்லாயிரக் கணக்கான பாடல்களை மனதில் வைத்திருப்பார்கள். கம்பராமாயணத்தில் எங்கிருந்து கேட்டாலும் மழை போல் பொழிவார்கள்.  வெகு சில ஆங்கில ஆசிரியர்களுக்கு சேக்‌ஷ்பியரில் அப்படிப் பயிற்சி இருந்தது.

இலக்கணப் படி அமைந்திருந்த பாடல்களை நாம் பல ஆண்டுகளாக நினைவில் வைத்திருக்க முடிகிறது.  “புதுக்கவிதைகள்” ஏனோ எனக்கு அப்படி நினைவில் இருப்பதில்லை. மற்றவர்களுக்கு இருக்குமோ என்னவோ.

முகநூலில் எதையோ பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது திடீரென்று “பாட்டியின் வீட்டுப் பழம்பானையடா” பாட்டு நினைவுக்கு வந்தது.  முழுப் பாட்டும் உடனே நினைவில் இல்லாவிட்டாலும் முக்கால்வாசி நினைவுக்கு வந்தது.  வேயுறு தோளிபங்கன் என்ற முகநூல் நண்பர் எஞ்சிய வரிகளை நினைவில் இருந்து எடுத்துத் தந்தார்.  இந்தப் பாடலை கூகிளில் தேடினால் கிடைக்கவில்லை என்ற காரணத்துக்காகவே இதை பதிவு செய்கிறேன்.  பின்னால் மேலும் விவரங்கள் கிடைத்த பின்னால் நிறைவு செய்வோம்.

இது ஒரு குழந்தைப் பாட்டு.  குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்கள் இயற்றியது என நினைவு.  இதோ பாட்டு:

பாட்டியின் வீட்டுப் பழம்பானையடா
அந்தப் பானை ஒரு புறம் ஓட்டையடா
ஓட்டைவழி ஒரு சுண்டெலியும் அதன்
உள்ளே புகுந்து நெல் தின்றதடா
உள்ளே புகுந்து நெல் தின்று தின்று
வயிறு ஊதிப் புடைத்துப் பருத்தடா
மெள்ள வெளியில் வருவதற்கும்
ஓட்டை மெத்தச் சிறிதாக்கிப் போச்சுதடா
பானையைக் காலை திறந்தவுடன்
அந்தப் பாட்டியின் பக்கமாய் வந்த ஒரு
பூனை எலியினைக் கண்டதடா
அதை அப்படியே கௌவிச் சென்றதடா
கள்ள வழியில் செல்பவரை எமன்
காலடி பற்றித் தொடர்வானடா!
நல்ல வழியில் செல்பவர்க்கு தெய்வம்
நாளும் துணையாக நிற்குமடா!

இதைப் பற்றி மேலும் விவரங்கள் நினைவுக்கு வந்தால் கருத்துகள், பின்னூட்டங்களில் எழுதுங்கள். நன்றி

பி.கு. (பிப்ரவரி 1, 2020) இந்தப் பாடலின் சரியான வரிகளைப் பேரா. ராஜேஸ்வரி Raji அவர்கள் 7 ஆண்டுகளுக்கு முன்பு இதன் முகநூல் இழையில் பகிர்ந்திருந்தார்கள். அந்த வரிகள் பின்வருமாறு:

பாட்டியின் வீட்டுப் பழம்பானை-அந்தப்
பானை ஒருபுறம் ஓட்டையடா!
ஓட்டை வழியொரு சுண்டெலியும்-அதன்
உள்ளே புகுந்துநெல் தின்றதடா!

உள்ளே புகுந்துநெல் தின்றுதின்று-வயிறு
ஊதிப் புடைத்துப் பருத்ததடா!
மெள்ள வெளியில் செல்வதற்கு-ஓட்டை
மெத்த சிறிதாகிப்போச்சுதடா!

பானையைக் காலை திறந்தவுடன்-அந்தப்
பாட்டியின் பக்கமாய் வந்தஒரு
பூனை எலியினைக் கண்டதடா!
உடனே கவ்விச் சென்றதடா!

கள்ள வழியினில் செல்பவரை-எமன்
காலடி பற்றித்தொடர்வானடா!
நல்ல வழியினில் செல்பவர்க்கு-தெய்வம்
நாளும் துணையாய் நிற்குமடா!!!

இந்தப் பாடலை இனிமேல் கூகிளில் தேடினால் இந்த வடிவம் கிடைக்கட்டும்.