திங்கள், ஜூலை 29, 2013

சொற்கள், வெறும் சொற்கள், இவைக்கு இத்தனை வலிமையா!


தமிழ் இணையத்தின் தொடக்க நாட்களில், தமிழ்.நெட் மடலாடற்குழுவில் காரசாரமான விவாதங்கள் நடக்கும். தாய்த்தமிழகத்திலும்,  தமிழ் ஈழத்திலும் இணையம் அவ்வளவாகப் பரவாத காலம் அது.  உலகெங்கும் பரந்து விரிந்திருந்த புலம்பெயர்ந்த தமிழர்கள்தாம் பெரும்பாலும் இணையத்தில் தமிழில் எழுதிக் கொண்டிருந்த நாட்கள். ளும், மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் விழுதுகள் பதித்திருந்த தமிழர்களோடு, புதிதாகக் கனடா, அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியாவில் குடிபுகுந்திருந்த தமிழர்களும் தாய்த்தமிழகம், தமிழ் ஈழச் சூழல்களைப் பற்றியும், புலம்பெயர்ந்த நாடுகளில் தமக்கிருந்த சிக்கல்களைப் பற்றியும் எழுதத் தொடங்கியிருந்த நேரம்.

நம்மில் பெரும்பாலோர் முகம் தெரியாத மனிதர்களோடு, பண்பாட்டுடன் அளவளாவதில் தொடங்குகிறோம்.  தமிழ் இணையத்தின் அன்றைய பரப்பு மிகவும் சிறியது என்பதால் முகம் தெரியாதவர்களும் அந்நியர்களாகத் தோன்றாமல், இணையத்தில் பக்கத்து வீட்டார் போலத்தான் இருந்தார்கள்.  இருப்பினும், மென்மையாகத் தொடங்கும் வாதங்கள், இணையத்தின் முகமூடித் தன்மையினால், இறுகத் தொடங்கி வன்மையாக மாறத் தொடங்கின.  இன்று முகநூலில் பரந்து காணப்படும் வசைச்சொற்களும், தனிமனிதத் தாக்குதலும், எட்டிப் பார்க்கத் தொடங்கின.  தமிழ்.நெட்டின் நிறுவனர் பாலா பிள்ளையைப் பொருத்தவரையில் கருத்துச் சுதந்திரத்துக்கு வேலிகளே இல்லை.  இணையத்தில் எதை வேண்டுமானாலும் எழுத முடிய வேண்டும் என்று உறுதியாக நம்பினார்.  அந்த ஊக்கத்தால், வாக்குவாதங்களில் புண்படுத்தும் சொற்கள் வந்து விழத் தொடங்கின.

ஒரு முறை அப்படிச் சொற்கள் கரைபுரண்டு காட்டாற்று வெள்ளமாக ஓடத் தொடங்கிய போது மலைத்துப் போய் பின் வரும் “கவிதை” ஒன்றை எழுதினேன்.  அது தமிழ் இணையத் தளங்களின் முன்னோடியாக விளங்கிய தமிழ்நேஷன்.ஆர்க் தளத்தின் நிறுவனரான நடேசன் சத்தியேந்திராவை மிகவும் ஈர்த்தது.  அப்போது அவர் தம் தளத்தில் முகப்பில் எதிரொளிகள் (Reflections) என்ற தலைப்பில் இணையத்தில் தம்மைக் கவர்ந்த கருத்துகளைப் பதிவு செய்வார்.  இந்தக் கவிதையையும் அவர் ஆகஸ்டு 1, 1998ல் தம் முகப்பில் பதிவு செய்திருந்தார். இந்தத் தளம் ஏதோ காரணங்களால் சில முறை முடங்கியிருந்து இப்போது முற்றிலும் நின்று விட்டது.  ஆனால், அதன் பதிப்புகளை எப்படியோ மீட்டெடுத்து இன்றும் அவற்றைப் பார்வையிடும் வகையில் tamilnation.co என்ற தளத்தில் ஓர் அருங்காட்சியகத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அதில், இந்தக் கவிதையை இன்றும் பார்க்கலாம்.

சொற்கள் - 1 ஆகஸ்டு 1998

சொற்கள்,
வெறும் சொற்கள்,
இவைக்கு இத்தனை வலிமையா?

கொந்தளிக்கும் உணர்ச்சிகள்
கொதிக்கின்ற குருதி!

சொற்கள்,
வெறும் சொற்கள்,
இவைக்கு இத்தனை வலிமையா?

பத்திரிக்கை விற்க வேண்டும்,
(மக்கள்) பரபரப்பாய்ப் படிக்க வேண்டும்,
பொறுமை இழக்க வேண்டும்,
பொங்கி எழ வேண்டும்,
போர்க்கோலம் பூள வேண்டும்.

கடுஞ்சொல் வீச வேண்டும்!
கல்லை எறிய வேண்டும்!
கொடிதான் பிடிக்க வேண்டும்!
கொந்தளித்து எழ வேண்டும்!

சொற்கள்,
வெறும் சொற்கள்,
இவைக்கு இத்தனை வலிமையா?

கருத்துச் சந்தையிலே
கற்பை விற்பவர்கள்
கொள்கைக் குழப்பத்திலே
கொள்ளிமீன் பிடிப்பார்கள்

கருத்தை வடிகட்டு;.
கசட்டைத் தூற எறி.
கண்ணியம் இழக்காதே,
கயவனாய் மாறாதே.
சொற்கள்,
வெறும் சொற்கள்,
இவைக்கு இத்தனை வலிமையா?

- மணி மு. மணிவண்ணன்
·பிரிமான்ட், கலி·போர்னியா, அ.கூ.நா.
Mani M. Manivannan- California, USA

கருத்துகள் இல்லை: