சனி, பிப்ரவரி 09, 2013

வலைப்பூவா வலைப்பதிவா - கோப்பைக்குள்ளே குத்துவெட்டு!


தமிழில் கலைச்சொற்கள் எவ்வாறு எழுகின்றன, நிலைக்கின்றன என்பது பற்றி யாரேனும் ஓர் ஆய்வுக்கட்டுரையைப் படைக்கலாம். Weblog என்ற ஆங்கிலச் சொல்லை அமெரிக்கர்கள் அவர்களுக்கே உரிய குறும்புத்தன்மையுடன் குறுக்கி blog என்று மாற்றினார்கள். இப்படிப் பட்டக் குறும்புச் சொல்லை மொழி பெயர்ப்பது என்பது ஒவ்வொரு மொழியின் தன்மையைப் பொறுத்து அமையும். மே 15, 2003ல், எழுத்தாளர் இரா. முருகனின்  ராயர் காப்பி கிளப் குழுவில் எழுத்தாள மாலன் பெயர் சூட்ட வாருங்கள் என்று அழைக்க, நான் “வலைப்பூ” என்ற சொல்லைப் பரிந்துரைத்தேன்.

============

http://groups.yahoo.com/group/RayarKaapiKlub/message/7994

Re: [RKK] Peyar soota vaarungkal
மதிப்பிற்குரிய மாலன் அவர்களுக்கு,
தமிழில் உவெ(ம்)ப் லா(ங்)க் அமைத்ததற்கும், திசைகள் வலையிதழுக்கு வியக்கத்தக்க எண்ணிக்கையில் வாசகர்களை ஈர்த்ததற்கும் உளமார்ந்த பாராட்டுகள், வாழ்த்துகள்.
At 5/14/03 08:56 PM, you wrote:>"Blog என்பதற்கு ஏற்ற தமிழ்ச் சொல் என்ன? Web Log என்ற சொல்லிலிருந்து >தோன்றியது blog. எனவே இணையப்பட்டி, இணைப்பதிவு, இணை-வரிசை >(அலைவரிசை போல) அல்லது அதன் பயன்பாட்டுத் தன்மையைக் கருதி சிற்றிணை, >அல்லது இணைக்குறிப்பு, குறிப்பிணை இப்படி அமையலாமா?"
பொதுவாக இணையம் என்ற சொல்லை இண்டர்நெட்டுக்கும் வலை என்ற சொல்லை உவெப், நெட் என்ற சொற்களுக்கும் புழங்கி வருகிறோம். உவெப் சைட் என்பது வலைத்தளம், இணையத்தளம் இல்லை. உவெப் பேஜ் என்பது வலைப்பக்கம். உவெப்ஸைன் என்பது வலையிதழ், இணைய இதழ் இல்லை.
எனவே உவெப் லாக் என்பதற்கு வலைக் குறிப்பு என்று சொல்லாக்கினால், ப்லாக் என்னும் குறும்(புப்) பெயருக்கு இணையாக வலைப்பு என்று சொல்லலாமா? வலைப்பு என்ற சொல் கொலோன் வலையகராதியில் இல்லை. அதனால் இந்தச் சொல் ஏற்கனவே வேறு பொருளில் தமிழில் இருந்திருக்க வாய்ப்பில்லை.
இல்லையேல் இன்னும் குறும்பாக, வலைப்பூ எனலாம். வலையிதழ் என்பது உவெப்சைன் என்பது போல வலைப்பூ என்பது உவெப்லாக் ஆகலாம். ஆனால், புலவர்கள் பொருட்குற்றம் காண்பார்கள்!
"எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே" என்னும் இலக்கணத்தை மீறி இதற்கு இடுகுறிப்பெயரும் இடலாம். வலைக்குறிப்பு - வலைப்பு, வலைப்பூ, வறிப்பு, வலையரிப்பு(!), லைப்பு, லறிப்பு என்று விளையாடலாம்.
ஆனால், தமிழனுக்கு ஒரு கவிதையுள்ளம் உண்டு. இண்டர்நெட்டுக்குப் பல இதயங்களை இணைக்கும் மையம் என்னும் பொருள் தர இணையம் என்று சொல்லைப் படைத்தவன் தமிழன். பத்திரிக்கைகளுக்கு தினமலர், வார இதழ், ஆண்டு மலர், என்று பெயர் வைப்பவன் தமிழன். எனவே வலைப்பூ என்ற சொல் தமிழ் உள்ளங்களைக் கவரும் என்று எண்ணுகிறேன்.
அன்புடன், மணி மு. மணிவண்ணன்நூவர்க், கலி., அ.கூ.நா.
பி. கு. உவெப் லாக் எப்படி உவெ(ம்)ப் லா(ங்)க் ஆகியது என்று எண்ணும் நண்பர்களுக்கு, ஆங்கிலத்தில் ஓசையற்ற எழுத்துகள் உச்சரிப்பைப் பாதிப்பது போல் தமிழிலும் செய்தால் என்ன என்று சில சமயம் விளையாடிப் பார்த்திருக்கிறேன். வல்லின பகரத்துக்கு முன்னர் மெல்லின மகர மெய்யை இட்டால் வல்லினம் மெலிகிறதல்லவா? அதே போல் ககரத்துக்கு முன்னர் ஙகரம். Web எப்படி உவெப் ஆகிற்று என்பவர்கள் உச்சரிப்பில் Veb க்கும் Webக்கும் உள்ள வேறுபாட்டைக் கவனிக்க வேண்டும். Web எனக்கு உவப்பு தான்!”
======

"வலைப்பூ” என்ற கவித்துவமான சொல்லெல்லாம் கலைச்சொற்களுக்கு உதவாது, வலைப்பதிவுதான் ஏற்ற சொல், அதுதான் நிலைத்தது என்று சொன்னார் போயிங் கணேசன்.

http://nganesan.blogspot.in/2009/07/valaippathivu.html

கலைச்சொல்லில் எது நிலைக்கும் எது நிலைக்காது என்று சொல்லைப் படைக்கும்போதே தீர்மானிப்பது மிகக் கடினம்.  இண்டர்நெட்டுக்கு இணையம் என்ற சொல் இன்று பட்டிதொட்டியெல்லாம் பரவியிருப்பது தமிழ் ஆர்வலர்களின் முயற்சிக்கு வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும்.  ஆங்கிலம் கலந்து பேசும் தமிங்கிலத்தை சன் டிவி பரப்பிக் கொண்டிருந்ததை இயல்புதான் என்று சொல்லிக் கொண்டிருந்த அதே காலக் கட்டத்தில்தான் இணையத்துக்கான கலைச்சொற்களை தமிழ்.நெட்டில் படைத்துக் கொண்டிருந்தோம்.

முதலில் இணையம் என்ற சொல்லை ஏற்கத் தயங்கிய எழுத்தாளர் சுஜாதா அவர்களே பின்னர் இணையம் என்ற சொல்லைப் பரப்புவதில் பெரும்பங்கு ஆற்றினார்.

அதே போல், வலைப்பூ என்ற சொல் இன்று பரவியிருப்பதற்கு எழுத்தாளர் மாலன் அவர்களின் ஆதரவு ஒரு முக்கிய காரணம்.

இப்படி ஆர்வலர்களும், முன்னணி எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் கூடிச் செயல்பட்டால் உயிர்ப்புள்ள தமிழ்ச் சொற்களை தமிழின் வேர்களில் இருந்தே கொண்டு வரலாம்.

கருத்துகள் இல்லை: