இராமர் பாலம் பற்றிய செய்திகள் சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கும் இவ்வேளையில், 2007 மே மாதத்தில், தமிழ் உலகம் மடலாடற்குழுவில் அமெரிக்காவிலிருந்து நான் பதிவு செய்திருந்த ஒரு கட்டுரையை மீள் பதிவு செய்கிறேன். அந்தக் கட்டுரையை அப்போதே தன் வலைப்பூவில் (http://nayanam.blogspot.com/2007/05/blog-post_30.html) பதிவு செய்திருந்த நண்பர் ‘நயனம்’ இளங்கோவனுக்கு என் நன்றி
இராமர் பாலம்!
===========================================================
ராமர் பாலம், ராமர் சேது என்ற பெயர்கள் இந்திய நாடாளுமன்றத்தையே சூடாக்கிக் கொண்டிருக்கும் நேரம். "ராம ஜன்ம பூமி" என்ற பெயரால் அரசியல் பிழைப்பு நடத்தி ஆட்சிக்கு வந்த அதே கூட்டம் இப்போது "ராம கர்ம பூமி" என்ற பெயரால் மீண்டும் ஆட்சியைக் கைப்பிடிக்க முயற்சி எடுக்கிறது போலும். நாசாவால் விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட படத்திலேயே ராமரின் வானரப் படைகள் ராமேஸ்வரத்திலி ருந்து தலைமன்னாருக்குக் கட்டிய திரேத யுகத்தில் கட்டிய பாலம் தெளிவாகத் தெரிகிறது என்று ஒரு ஐந்தாண்டுகளுக்கு முன்பு பரபரப்பான மின்னஞ்சல்கள் பறந்து கொண்டிருந்தன.
பண்டைய வானரங்கள் இருக்கட்டும், இன்றைய மனிதர்களே, இலங்கையின் மீது படையெடுக்க எண்ணிப் பாலம் கட்ட எண்ணுகிறார்கள் என்றே வைத்துக் கொள்ளுவோம். அதற்கு என்னென்ன செய்ய வேண்டும்? போக்குவரத்துக்குப் பாலம் கட்டும் அமைப்பு வேறு, படையெடுக்கக் கட்டும் பாலத்தின் அமைப்பு வேறு. போக்குவரத்துக்குப் பாலம் கட்டுபவர்கள் எப்போதும் நிலைத்து நிற்கும் எண்ணத்துடன் கட்டுவார்கள். பாலத்தின் அகலம் சற்றுக் கூடுதலாகக் கூட இருக்கலாம். கட்டுமானப் பொருள்கள், செலவு, கட்டுவதற்குத் தேவையான ஆட்கள், கட்டத் தேவையான நேரம், கடல் மீது கட்டுவதால் கடல் அரிப்பைச் சமாளிக்கத் தேவையான நுட்பம், என்று எல்லாவற்றையும் சிந்தித்துத்தான் கட்ட வேண்டியிருக்கும். பொதுவாக மனிதர்கள் கட்டும் பாலம் நேர்க்கோட்டில் அமைந்திருக்கும். செலவு அதனால் மிச்சமாகும். அப்படியே வளைந்து இருந்தாலும், தீவுகளுக்கும், திட்டுகளுக்கும் இடையேயாவது நேர்க்கோட்டில்தான் கட்டுவார்கள்.
விண்வெளியில் இருந்து தெரியும் இந்த "ராமர் பாலம்" நேர்க்கோட்டு அமைப்பில் இருந்திருந்தால் இது கண்டிப்பாக செயற்கையாகக் கட்டப்பட்ட பாலம்தான் என்று உறுதியாக நம்பலாம். இதுவோ, உலகெங்கும் பெருநிலங்களுக்கிடையே இயல்பாகத் தோன்றியிருக்கும் இஸ்த்துமஸ்கள் போல கடலரிப்புகளால் இயல்பாக எழுந்திருக்கக் கூடிய வளைவுடன் தான் காட்சியளிக்கிறது.
அது மட்டுமல்ல. இந்த "ராமர் பாலம்" இருக்கும் அதே ராமேஸ்வரம் தீவுக்கும், இந்தியப் பெருநிலத்துக்கும் இடையே உண்மையிலேயே மனிதர்கள் கட்டிய பாலம் ஒன்று இருக்கிறது. அதன் பெயர் பாம்பன் பாலம். இந்தப் பாலத்தில் இரயில் வண்டியும் போகும், நெடுஞ்சாலைப் போக்குவரத்தும் இருக்கிறது. இது அண்மையில் முதலில் ஆங்கிலேயர்களும், பின்னர் இந்தியர்களும் கட்டிய பாலம். இருபதாம் நூற்றாண்டின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கட்டிய பாலம். பண்டைய வானரங்கள் திரேத யுகத்தில் "கட்டிய" பாலமே விண்வெளியிலிருந்து தெரிகிறது என்றால், அண்மையில் கட்டிய பாலமும் விண்வெளியிலிருந்து நன்றாகத் தெரியவேண்டும் இல்லையா? அதுதான் இல்லை.
நாசாவின் படத்தொகுப்பிலிருந்து பல படங்களைத் துருவித்தேடிப் பார்த்தேன். ஓரிரு படங்களில் பாம்பன் பாலம் என்று பெயர் போட்டிருந்த படங்களைப் பார்த்தேன். நேர்க்கோட்டில், மிக, மிகச் சிறிய அகலத்துடன் பாம்பன் பாலம் படங்கள் இருக்கின்றன. அவற்றோடு ஒப்பிடும்போது திரேத யுக வானரங்களின் தொழில்நுட்பம் மிகவும் சக்தி வாய்ந்ததாய் இருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது! ஏனென்றால், படையெடுப்புக்காக ஒரு யுகத்துக்கு முன்பு கட்டிய பாலம் இன்று மிக அகலமாகத் தோன்றுகிறது. சரி, ஒரு யுகத்துக்கு முன்பு கட்டிய பாலம் இல்லையா, ஒரு யுகமாகச் சேர்ந்திருந்த மண்ணால்தான் அது இன்று அகலமாகத் தோன்றுகிறது என்றும் சிலர் நினைக்கலாம்.
எது எப்படியோ, இது 1,750,000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய பாலமாய் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால், 18,000 ஆண்டுகளுக்கு முன்பு கடந்த உறைபனிக்காலத்தின்போது கடல் மட்டம் இன்று இருப்பதைவிட மிகத் தாழ்ந்து இருந்தது. அப்போது இந்தியாவும், இலங்கையும் ஒன்றாய் இணைந்திருந்தன. அன்றைய உலகம் எப்படி இருந்திருக்கும் என்று அமெரிக்காவின் கடல் ஆராய்ச்சித் துறை ஒரு நல்ல படம் ஒன்றை வரைந்திருக்கி றது. அதை கீழ்க்காணும் சுட்டியில் பார்க்கலாம்:
ftp://ftp.ngdc.noaa.gov/GLOBE_DEM/pictures/GLOBALsealevelsm.jpg
அப்போது இணைந்திருந்த நிலங்கள் கடல் அரிப்பால் பிரிந்து இப்போது தனி நிலங்களாக விளங்குகின்றன. இந்த "ராமர்" பாலம் செயற்கையாகக் கட்டிய பாலமாக இருந்திருக்க முடியாது.
ஆனால், ஐஐடி போன்ற உயர்நுட்பக் கழகங்களில் படித்து, அமெரிக்காவில் முனைவர் பட்டம் பெற்று, பெருநிறுவனங்களில் பணியாற்றும் பல அறிவாளிகள் "ராம கர்ம பூமி" போராட்டத்தில் மும்முரமாக இறங்கி இருக்கிறார்கள்.
இது உண்மையிலேயே ராம கர்ம பூமி இல்லை, ஆனால், தமிழ்நாட்டிலிருந்து யானை, பூனை, எலி, புலி எல்லாம் தமி ழர்களோடு தென்னிலங்கைக்குக் குடி பெயர்ந்த பூமிதான் இது என்று தெரிந்தால் இந்த அறிவாளிகள் என்ன செய்வார்கள் தெரியுமா? :-)
இந்தச் சேது சமுத்திரத் திட்டம் தமிழ்நாட்டுக்கு நல்லதில்லை என்று பல ஆண்டுகளாய் நான் எழுதி வந்திருக்கிறேன். கல்நெய்க் கலங்கள் (crude oil tankers) இந்த மன்னார் வளைகுடாப் பகுதியைக் கடக்கத் தொடங்கினால், கண்டிப்பாக ஒரு நாள் ஏதோ ஒன்று புயலில் மாட்டி முழுகத்தான் போகிறது. அதனால் விளையும் மாசுகள் சுற்றுச் சூழலை நாசப் படுத்தப் போகிறது.
இதை நேர்மையாகச் சொல்லிப் போராடிப் பார்த்தால் ஒன்றும் நடக்கவில்லை. ராம கர்ம பூமிப் போராளிகள் இதைத் தடுக்க முடிந்தால் புண்ணியமாய்ப் போகும்.
சொல்லப் போனால், குமரிக் கண்டப் போராளிகளும், தனித்தமிழ்ப் படைகளும், இது தமிழன் தென்னிலங்கைக்குச் சென்ற பாலத்தின் எச்சங்கள் புதைந்திருக்கும் இடம், அதனால் இது பாதுகாக்கப் பட வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்க வேண்டும்.
அப்படி நெடுமாறனோ யாராவதோ கொடி பிடித்திருந்தால், எல்லோரும் அவர்களை நையாண்டி செய்து கொண்டிருப்பார்கள். ஆனால், ராம கர்ம பூமி என்ற அரசியல் சூழ்ச்சியாளர்களைப் பார்த்து யாரும் அப்படி நையாண்டி செய்வதாகத் தெரியவில்லை.
பைபிளை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் அயோக்கியர்கள் வாழும் பூமியிலிருந்து (USA) எழுதுகிறேன். சமய நூல்களை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் அயோக்கியர்களை நம்பவே நம்பாதீர்கள்.
அன்புடன்,
மணி மு. மணிவண்ணன்
நூவர்க், கலிபோர்னியா
அமெரிக்கா
மே, 2007.
வேங்கைத் திட்டக் கட்டுரை போட்டியில் வெற்றி.
4 ஆண்டுகள் முன்பு
2 கருத்துகள்:
இல்லை ஐயா. நான் ராமநாதபுரம் கடற்கரைப் பகுதியில் பள்ளிப்படிப்பு படித்தவன் என்பதால் பாம்பன் பாலத்தைப் பற்றி நன்றாகவே தெரியும். என்னுடைய கேள்வி, 20ம் நூற்றாண்டு மனிதர்கள் பெரும் வல்லமையுள்ள கருவிகளைக் கொண்டு கட்டிய பாம்பன் பாலமே விண்வெளியில் இருந்து தெரியவில்லை என்றால், 1,750,000 ஆண்டுகளுக்கு முன்பு குரங்குகள் கட்டிய பாலம் மட்டும் எப்படி விண்வெளியில் இருந்து தெரிய முடியும்? அவ்வளவு அகலமுள்ள பாலத்தைக் கட்ட எத்தகைய ஆற்றல் இருந்திருக்க வேண்டும்? இத்தகைய புராணக்கதைகளை நம்பும் அளவுக்கு நாம் இன்னும் குழந்தைகள் அல்ல. இயற்கை நிகழ்வுகளால் நிகழ்ந்தவற்றை ஏற்றுக் கொள்ளும் நேர்மை வேண்டும். செயற்கை பாலங்கள் பெரும்பாலும் நேர்க்கோட்டில் இருப்பவை. இயற்கையால் அமையும் மேடுகள் நேர்க்கோட்டில் அமைவதில்லை. இந்த அடிப்படை வேறுபாட்டைத்தான் சுட்டியிருக்கிறேன்.
கருத்துரையிடுக