அறிவியல் தமிழில் எண்ணற்ற கட்டுரைகள் படைத்து வருபவர் கனடாவில் தற்போது வாழும் ஓய்வு பெற்ற அணுமின் பொறியாளர் ஜெயபாரதன் அவர்கள். அவரது அறிவியற் கட்டுரைகளை http://jayabarathan.wordpress.com என்ற சுட்டியில் காணலாம்.
அறிவியல் தமிழில் விக்கிப்பீடியாவில் எண்ணற்ற கட்டுரைகளைக் கூடுமானவரைத் தனித்தமிழிலேயே படைக்கும் குழுவிற்கு உரம் சேர்த்துத் தலைமை தாங்குபவர் கனடாவில் வாட்டர்லூ பல்கலையில் மின்னணுவியல் பேராசிரியர் செல்வகுமார்.
ஜெயபாரதன் 1960களில் இருந்தே தமிழில் அறிவியல் கட்டுரைகளையும் பரிசு பெற்ற நூல்களையும் எழுதி வருபவர். அவரது கட்டுரைகளில் 1960களின் தொடக்கத்தில் இருந்த கலைச்சொற்கள் விரவியிருக்கும்.
பேரா. செல்வகுமார் 1960களின் தனித்தமிழ் அறிவியல் கொள்கைகளின் தாக்கத்தினால், கலைச்சொற்கள் யாவும் இயன்றவரை தமிழின் வேர்ச்சொற்களில் இருந்தே, தமிழ் ஒலிப்புடன், தமிழ் எழுத்துகளில் எழுத வேண்டும் என்று வலியுறுத்தி வருபவர். இணையத்தமிழின் தொடக்க நாள்களில் இருந்தே தமிழில் எண்ணற்ற கட்டுரைகளை எழுதி வருபவர். நல்ல நண்பர்.
இவ்விருவருமே தமிழில் அறிவியற் கலைச்சொற்கள் என்ற தலைப்பில் தமிழ் மன்றம் மடற்குழுவில் கருத்துக்கலப்பு செய்வது வழக்கம். தனித்தமிழில் எழுதுவதை வலியுறுத்துவதும், கிரந்தம் தவிர்த்து எழுதுவதை வலியுறுத்துவதும் “தமிழ்த் தாலிபானிசம்” என்று குற்றம் சாட்டுகிறார் ஜெயபாரதன். (பார்க்க: http://groups.google.com/group/tamilmanram/browse_thread/thread/19c9c6dc26a116d1/01110d8635e8df36?lnk=raot#01110d8635e8df36 )
தாலிபானிசம் என்ற சொல் தேவையில்லாமல் புண்படுத்தும் சொல்.
தனித்தமிழ் நடை என்பது ஒரு சிறப்பு நடை. இதன் தாக்கம் அளவிட முடியாதது. கம்ப்யூட்டர், இண்டர்நெட் என்று எழுதினால்தான் விளங்கும் என்று சொல்லிக் கொண்டிருந்த சுஜாதா போன்ற எழுத்தாளர்களையே கணினி, இணையம் என்று மாற்றி எழுத வைத்தது. இன்று பட்டி தொட்டி எல்லாம் கணினி, இணையம் என்ற சொற்கள் பரவியிருப்பதைப் பார்க்கும்போது இந்தச் சொற்கள் படைக்கப் பட்ட காலத்தில் அல்லது எடுத்தாளப் பட்ட காலத்தில் தமிழ்.நெட் குழுமத்தில் இருந்ததை எண்ணி மகிழ்கிறேன்.
தமிழ் இணையத்தின் தொடக்க காலப் பயனாளர்களின் தனித்தமிழ் ஆர்வத்தால்தான் நல்ல பல தமிழ்க் கலைச்சொற்கள் வேரூன்றின என்பதில் ஐயமே இல்லை.
சன் டிவியின் தொடக்க கால இயக்குநர்களின் கருத்தினால்தான் தமிங்கிலம் ஒரு திராவிடக் கட்சியின் ஊடகத்தின் மூலம் பல்கிப் பெருகிப் பரவியது என்பதிலும் ஐயமே இல்லை.
என்னுடைய இளம் பருவத்தில் இயக்குநர் பாலச்சந்தர் படங்களில் மேஜர் சுந்தரராஜன் பாத்திரம் ஆங்கிலத்தில் ஒரு வசனத்தைப் பேசி உடனேயே அதை அவரே தமிழில் மொழி பெயர்த்துச் சொல்லுவார். அதாவது உயர்-நடுத்தரக் குடும்பங்களில் ஆங்கிலத்தின் தாக்கம் இருந்ததால் அவர்கள் பேச்சுமொழியில் ஆங்கிலம் வெகுவாகக் கலந்திருந்ததைச் சுட்டிக் காட்டும் அதே நேரத்தில் நாட்டுப்புற மக்களுக்கும் கதை புரிவதற்காகத் தமிழில் மொழி பெயர்க்க வேண்டியிருந்தது.
அம்மாவை ‘மம்மி’ என்றும், அப்பாவை ‘டாடி’ என்றும் சொல்வது உயர்குலச் செல்வந்தர் குடும்பங்களின் அடையாளங்களாய் உருவெடுத்தன. இன்று அப்படிப் பேசுவதுதான் நாகரீகம் என்பதும், அப்படிப் பேசாதவர்கள் பட்டிக்காடுகளென்றும் அடையாளங்களாகி விட்டன. இதை வளர்த்தவர்கள் குமுதம், விகடன் போன்றோர் மட்டுமல்ல, அங்கிருந்து சன் டிவிக்குச் சென்று அதே நாகரீகத்தை உருவாக்கிய தமிங்கிலத் தாலிபான்களும்தான். ;-)
ஆனாலும், இவர்களையும் மீறித் தனித்தமிழ் இன்றும் தழைத்துக் கொண்டுதான் இருக்கிறது. சிக்கல் அதுவல்ல.
கலைச்சொற்களை உருவாக்கும் களம் வேறு, அறிவியற் கட்டுரைகளை உருவாக்கும் களம் வேறு. கலைச்சொற்களைப் பரப்பும் களம் வேறு. சில சொற்களை சுஜாதா போன்றவர்களே பரப்பினார்கள். முதலில் கம்ப்யூட்டர், இண்டர்நெட் என்று எழுதிய அதே சுஜாதா, கணினி, இணையம் என்ற சொற்கள் தமிழ் இணையத்தின் முதற்பயனாளர்களிடம் இயல்பாகப் புழங்குவதைக் கண்டு அவரே தனது கடைசிப் பக்கக் கட்டுரைகளில் இதை எழுதிப் பரப்பினார். தான் முன்னர் எழுதியது தவறு என்று சொல்லித் தன்னைத் தானே திருத்தி எழுதிய அவரைப் போன்ற பெருந்தன்மையுள்ள அறிவியல் கட்டுரையாளர்களைக் காண்பது அரிது. மிக அரிது. சுஜாதா செய்தார் என்பதற்காக எல்லோரிடமும் அதே பெருந்தன்மையை நாம் எதிர்பார்த்தால் ஏமாறுவோம்.
ஜெயபாரதன் கட்டுரையிலும் நல்ல பல தமிழ்ச் சொற்கள் உள்ளன. அவருக்குப் பழக்கப் பட்ட பழைய கலைச்சொற்களைக் கொண்டு எழுதுவதால் அவரால் விரைவாகப் பல நெடுங்கட்டுரைகளை எழுத முடிவதால், அவரிடம் கலைச்சொற்களை மாற்றச் சொல்லத் தயங்குகிறேன். புதிய கலைச்சொற்களை அவரே படைக்கும் முன்னர் ஏற்கனவே தமிழ்ப் பள்ளி நூல்களிலும், கலைச்சொல் அகராதிகளிலும் இருக்கும் கலைச்சொற்களை அவரே பார்த்து எடுத்துக் கொண்டால் படிப்பவர்களுக்குக் குழம்பாது.
கலைச்சொற்களை ஆளுக்கு ஆள் மாற்றிக் கொண்டே இருந்தால் அறிவியல் கட்டுரை படிப்பவர்களுக்குப் பொறுமை இழந்து போய் விடும். அடிப்படைக் கலைச்சொற்களில் தரமான ஒரு கோட்பாடு கொண்டு படைப்பவர்கள் ஒரு புறம் இருக்க வேண்டும். அப்படிப் படைக்கப் பட்ட கலைச்சொற்களைத் தம் கட்டுரைகளில் எடுத்தாளும் நண்பர்களும் வேண்டும். அப்படிக் கலைச்சொற்கள் பரவிய பின்னர்தான் பொதுமக்களுக்கு எழுதும் ஜெயபாரதன் போன்றோர் அப்படிப் பட்ட கலைச்சொற்களை எடுத்தாளக் கூடும்.
விஞ்ஞானம் என்ற சொல் வழக்கிலிருந்து அருகி (591,000 Google results ) அறிவியல் என்ற சொல் பரவி (1,870,000 Google results ) 40 ஆண்டுகளுக்கு மேலாகிறது. ஆனாலும், அது வழக்கொழிந்து போகவில்லை. அறிவியல் என்று எழுதினால் மேலும் பலருக்குப் புரியும் என்பதை உணர்ந்தால் ஜெயபாரதன் அறிவியல் என்ற சொல்லை எடுத்தாளக் கூடும். அப்படி எழுதுவதால் அவருக்குச் சிந்தனைத் தடையோட்டம் ஏற்பட்டு அவரால் எழுத முடியவில்லை என்றால் அவர் விஞ்ஞானம் என்றே எழுதிக் கொள்ளட்டுமே. அது அவரது வயதைக் காட்டும் அறிகுறி மட்டும்தான். அவரே சயன்ஸ் என்று எழுதினால் (4,450 Google results ) தமிங்கிலத்தைக் குறைக்கச் சொல்லிக் கேட்கலாம். மாட்டேன் என்று சன் டிவி போல் அடம் பிடித்தார் என்றால்?
மற்றவர்களும் ஜெயா டிவி, விஜய் டிவி, மெகா டிவி, கேப்டன் டிவி, என்று ஈயடிச்சான் காப்பி(!) அடித்தால் சேன்னலை (73 results ) மாற்றக் கூட வாய்ப்பில்லாமல் போய் விடுமே!
எனவே எழுத்துகளையும் எழுத்தாளர்களையும் ஊக்குவிப்போம். நல்ல தமிழில், நடைமுறைத் தமிழில், தனித்தமிழில் எழுதுபவர்களுக்குப் பரிசு வழங்கிப் பாராட்டி ஊக்குவிப்போம். குறை சொல்வதால் யாரும் மாறப் போவது இல்லை. பாராட்டினால் மகிழ்வார்கள்.
பாராட்டுவோம்.
தாலிபான் போன்ற சொற்கள் தேவையில்லை.
ஜெயபாரதன் அவருக்குக் கை வந்த நடையிலேயே எழுதட்டும். மற்றவர்கள் அவரைக் கூர்ந்து கவனித்தால், அவரும் நல்ல பல தனித்தமிழ்ச் சொற்களில் எழுதுகிறார் என்று புலப்படும். அதைப் பாராட்டுவோம்.
அவரையும் ஐதரசன், ஈலியம் என்று எழுத வைக்க வேண்டும் என்றால் அவர் கலந்து கொள்ளும் குழுமங்களில் பலரும் ஐதரசன், ஈலியம் என்று எழுத வேண்டும்.
இல்லையேல், அவர் தாம் எழுதுவது தமது வாசகர்களைச் சென்றடைகிறதா என்று கவலை கொள்ள நேரிடும்.
பேரா. செல்வகுமார், பிறமொழி ஒலிப்புகளைத் தமிழில் துல்லியமாகக் கொண்டுவரத் தேவையில்லை என்பதை வலியுறுத்தி எவ்வாறு நாம் அன்றாடம் வழங்கும் ஆங்கிலச் சொற்களுக்கு மேலை நாட்டு மொழிகளிலிலும் வேற்று ஒலிகள் வழங்குகின்றன என்று குறிப்பிடுகிறார்.
இது தொடர்பாக, யூனிகோடு நுட்பக் குழுவுக்கு கிரந்தம் தொடர்பான கருத்து வழங்கும் மனு ஒன்றில் காஞ்சியைச் சேர்ந்த சமஸ்கிருத விற்பன்னர்கள் சிலர் தமிழில் குறிப்பிட்டிருக்கும் பகுதியை மேற்கோள் காட்ட விரும்புகிறேன்:
"எந்த லிபியும் தனது இயற்கையான மொழியல்லாத மற்ற மொழிகளைக் குறிப்பதில் அந்தந்த மொழிகளின் இயற்கையான லிபிகளுக்கு ஸமமான ஸாமர்த்யம் பெற்றிருக்கவியலாது. எடுத்துக் காட்டாக read red எனப்படும் வெவ்வேறு ஆங்கிலச் சொற்கள் பாரதீய லிபிகளில் रेड् ரெட் என்பது போல ஒரே முறையில்தான் எழுதப்பட வேண்டியிருக்கின்றன. ஆக இந்த சொற்களை பாரதீய லிபிகளில் எழுதினால் எழுத்திலிருந்து பொருள் வேற்றுமை விளங்காது. இது யூனிகோட் அதிகாரிகளுக்குத் தெரிந்தே இருக்கும். ஆக க்ரந்த லிபியானது தனது இயற்கை மொழியான ஸம்ஸ்க்ருதத்தைத் தவிர்த்த மற்ற மொழிகளைக் குறிப்பதில் மலையாள லிபியையோ அல்லது வேறு எந்த லிபியையோ ஒத்த ஸாமர்த்யத்தைப் பெற்றிருக்கும்படி க்ரந்தத்தில் எழுத்துக்களைச் சேர்த்துக்கொண்டே போவதில் பொருளில்லை.”
- தமிழ்நாட்டு க்ரந்த பயனீட்டாளர்கள் சார்பில் வித்வான்கள், 2010-06-20
யூனிகோடு அதிகாரிகளுக்கு ”க்ரந்த லிபி பயன்படுத்தும் வித்வான்களின் வேண்டுகோள்” Unicode document L2/10-233
இதுதான் யூனிகோடு நுட்பக் குழுவுக்கு அனுப்பப் பட்ட கட்டுரைகளில் தமிழில் உள்ள முதல் கட்டுரை என்பது குறிப்பிடத் தக்கது. அதே கருத்தை ஆங்கிலத்திலும் பின் வருமாறு மொழி பெயர்த்திருந்தனர்:
"It is not possible for every script to be equally capable – in representing any language other than its native language – as the native script of that language. For
example, the English words “read” (past tense) and “red” (colour) will both be written in Indian scripts only as रेड् ரெட் etc and it is not possible to get the difference in meaning via Indian scripts. The Unicode officials will certainly know this. Therefore there is no meaning in adding newer and newer characters to make Grantha (or any other script) equally as capable as other scripts, whether Malayalam or otherwise, in representing other languages, i.e. languages which the script was not originally evolved for, which in the present case all languages other than Sanskrit."
சமஸ்கிருத வித்துவான்கள் கிரந்த எழுத்துமுறைக்குச் சொல்வது தமிழ் எழுத்து முறைக்கும் முற்றிலும் பொருந்தும் என்பது எனது தாழ்மையான கருத்து.
நண்பர் செல்வாவின் கூற்றுகளில் அடிப்படை ஏரணம் உள்ளது. முன்பு சமஸ்கிருதம், இப்போது ஆங்கிலம், நாளை சீனம் என்று ஆதிக்கம் செலுத்தும் மொழிகளுக்காகத் தமிழில் எழுத்துகளைக் கூட்டிக் கொண்டே போவது என்பது அரசனை நம்பிப் புருசனை விட்ட கதை போலத்தான்.
கணினியா கம்ப்யூட்டரா, இணையமா இண்டர்நெட்டா போன்ற வாதங்களுக்கு மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களே தனித்தமிழ்க் கலைச்சொற்களை ஏற்று ஒரு முற்றுப்புள்ளி வைத்து விட்டார். பேச்சுத்தமிழில் எது வந்தாலும், எழுத்துத்தமிழில் கணினியும் இணையமும் ஒரு தனியிடம் பெற்றுவிட்டன.
எந்த ஒரு தொழில்நுட்பத்தையும் தமக்கு உள் வாங்கித் தாம் பெயரிட்டு அழைக்கும் வரை அது அந்நியமாகத்தான் தோன்றும். பிலாக், பிளாக், ப்லாகர் என்றெல்லாம் அந்நியமாயிருக்கும் நுட்பம் வலைப்பூக்கள், வலைப்பதிவர்கள் என்று நமக்கு நெருங்கும்போது இது ஆங்கிலத்தில் புலமை கொண்ட மேல்தட்டு மக்களுக்கு மட்டுமல்ல, தமிழில் எழுதத் தெரிந்த அனைவருக்கும் என்ற உரிமையை எடுத்துக் கொள்ள முடிகிறது.
அதற்காகக் கலைச்சொற்கள் தனித்தமிழில் வரும் வரை காத்திருங்கள் என்று சொல்லப் போவதில்லை. ”வயர் ரீவைண்டிங் செய்வது எப்படி” என்பது போன்ற நூல்களைப் படித்து எண்ணற்ற குட்டித் தொழிற்பட்டறைகளை உருவாக்கி முன்னேறியவர்கள் பலர். அவர்களுக்குத் தொழில்நுட்பம் உடனடித்தேவை. ஆனால், தொழிற்பட்டறை உழைப்பாளியாய் மட்டுமில்லாமல் சிந்தித்துப் புதிய தொழில்நுட்பம் உருவாக்க வல்லமை பெற்ற அறிவியலாளராய், நுட்பவியல் வல்லுநராய் ஆவதற்குத் தாய்மொழியில் கலைச்சொற்கள் தேவை. ஆங்கிலத்தின் மூலம் பிறநாட்டு நல்லறிஞர் சொல்வது என்ன என்பதைத் தெரிந்து கொள்ளவும் வேண்டும். பாரதி சொல்வது போல கலைசெல்வங்கள் யாவையும் தமிழில் கொண்டு வந்து சேர்க்க வேண்டும். அப்படிச் சேர்த்தால்தான், தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட எண்ணற்ற தமிழர்கள் புதுப்புது நுட்பங்களைக் கண்டறிய முடியும். இல்லையேல் தற்போது இருப்பது போல, எந்த மொழியிலும் நுட்பமான கருத்தைத் தெளிவாகச் சொல்லும் திறமை இல்லாத தமிழர்கள் எண்ணிக்கைதான் கூடும்.
கலைச்சொல்லாக்கக் கோட்பாடுகள் குறித்து ஜெயபாரதன் - செல்வா பட்டி மன்றங்கள் எண்ணற்ற பல ஏற்கனவே அரங்கேறியுள்ளன. இருவரிடமும் நல்ல பல கருத்துகள் இருப்பினும், இருவருமே தம் கொள்கைகளை மாற்றிக் கொள்ளப் போவது இல்லை. எனவே இது குறித்த விடாக்கண்டன் - கொடாக்கண்டன் பட்டிமன்ற விவாதங்கள் அலுப்புத்தட்டத் தொடங்கி விடுகின்றன. எனவே ஒவ்வொருவருமே என் வழி, தனீஇ வழி என்று பாட்டை போட்டு நடப்பதே நலம்.
ஆனாலும், பட்டிமன்றங்கள் தொடரத்தான் போகின்றன. நாமும் ”கற்பினில் சிறந்தவள் கண்ணகியா மாதவியா” என்ற பொங்கல் பட்டி மன்றங்களை அவற்றின் சொற்சுவைக்காக மட்டும் கேட்பதுபோல் கால் மேல் கால் போட்டுக் கொண்டு சுவைத்து மகிழ்வோம்.
வேங்கைத் திட்டக் கட்டுரை போட்டியில் வெற்றி.
4 ஆண்டுகள் முன்பு
1 கருத்து:
நன்று. தனித்தமிழ் என ஒன்று இல்லை. நாம் தனிப்பால் எனச் சொலவது இல்லை. தமிழ் என்றாலே கலப்பற்ற தமிழ்தான். தாய்மீது அன்பு காட்டுவதை யாரும் முனைப்புவாதமாகவோ வன்முறை வாதமாகவோ குறிப்பதில்லை. தமிழ்த்தாய்மீது அன்பு காட்டினால் மட்டும் அவ்வாறு கூறுவோர் தங்களை எல்லாம்அறிந்த அறிவாளிகளாக எண்ணி அவ்வாறு இடக்காகக் கூறுகின்றனர்.இக்கட்டுரையைப்படித்த பின்பாவது அயற்சொற்களைக் கலப்பவர்கள் திருந்த வேண்டும். கலப்பற்ற உணவுபோல் கலப்பற்ற மொழி வேண்டும் என உணர வேண்டும்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/
கருத்துரையிடுக