ஏன் அயர்லாந்து மக்கள் அவர்கள் தாய்மொழியான எய்ரவைப் பேசுவதில்லை?
உலகின் பெரும்பாலான நாடுகளில் மக்கள் அவரவர் தாய்மொழியைப்
பேசுகிறார்கள். ஆனால், அயர்லாந்து மக்கள் அவர்கள் தாய்மொழியான ஏய்ரவைப்
பேசுவதில்லை. அவர்கள் பேசும் மொழி ஆங்கிலம். அவர்களுடைய தாய்மொழியான
ஏய்ரவைப் பேசுபவர்கள் அங்கு வெகு சிலரே. அவர்கள் நாளேடுகளில் கடைசிப்
பக்கம் மட்டும் ஏய்ர மொழியில் அச்சிடப்பட்டிருக்கும். தெருப்பெயர்கள்
ஆங்கிலத்திலும் ஏய்ரவிலும் இருக்கும். ஆனால் ஏய்ரவில் இருப்பதைப்
படிக்கக்கூடியவர்கள் வெகு சிலர். ஏன் அப்படி?
அயர்லாந்து மக்கள்,
அவர்கள் அண்டை நாடான இங்கிலாந்திடம் தோற்று, தங்கள் உரிமைகளை இழந்து,
அடிமைப் பட்டு, சிறுமைப்பட்டு சில நூற்றாண்டுகள் வாழ்ந்த போது தங்கள்
தாய்மொழியை இழந்து விட்டார்கள். இப்போது அரும்பாடுபட்டுத் தங்கள்
தாய்மொழியை மீட்டெடுக்க முனைகிறார்கள்.
இழந்ததை மீட்பது கடினம்.
தமிழர்கள் தமிழைப் போல் தொன்மையும், தொடர்ச்சியும், மாட்சியும் உள்ள
தாய்மொழியைக் கொண்டவர்கள். தமிழர்கள் தன்னாட்சி இருந்தவரைக்கும் தமிழ்
தம்மிடத்தைத் தக்க வைத்துக் கொண்டது. தன்னாட்சியை இழந்து சிறுகச்சிறுகப்
பிறமொழிகளின் ஆட்சியின் கீழ் வந்த போதும் தமிழ்ப் புலவர்களும் தமிழ்
மக்களும் அரசுகளின் ஆதரவில்லாமலேயே தமிழைத் தக்க வைத்துக் கொண்டனர்.
பிறமொழிக் கலப்பை மட்டுப்படுத்தித் தமிழ் கலங்கிப் போய் மங்கிடாமல்
காப்பாற்றியது தனித்தமிழ் இயக்கம். ஆனால், தற்காலத்தில் ஆங்கிலத்தின்
ஆதிக்கத்தின் கீழ் உலகமயமாக்கலின் வணிகத்தில் திளைத்திருக்கும்
தமிழர்களுக்கு ஆங்கிலக் கலப்பு உவப்பாக இருக்கிறது. ஆங்கிலக் கண்ணாடி
வழியாக உலகைப் பார்க்கும் தமிழர்களுக்கு அயல்மொழிகளின் சொற்களும் ஓசைகளும்
அப்படியே தமிழிலும் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.
அப்படிப் பட்ட கலப்பு தமிழைப் பிரித்து இன்னொரு கலவை மொழிக்கு இட்டுச்
செல்லும். கலவை மொழிகளில் அறிவியல் எண்ணங்களைத் துல்லியமாக எழுதும்
தன்மையும் குறைவு. உயர்தனிச் செம்மொழிகளைப் போல் சான்றோர் இலக்கியம்
படைக்கும் ஆற்றலும் இருக்காது.
தமிழ் எழுத்துகளை வைத்துக் கொண்டு
சமக்கிருதம் எழுதுபவர்கள் இருக்கிறார்கள். (சுலோகப் பாடல்களைத் தமிழில்
எழுதிப் பாடுபவர்கள் முதற்கொண்டு வேதங்களையும் தமிழில் எழுதி மனப்பாடம்
செய்பவர்கள் வரை).
தமிழ் எழுத்துகளை வைத்துக் கொண்டு கணிக்காரம், படகர்,
இருளர், பணியர், சௌராட்டிரம் மொழிகளையும் எழுதுபவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்காக வர்க்க எழுத்துகளையும், கூட்டெழுத்துகளையும், கிரந்த
எழுத்துகளையும் தமிழ் யூனிக்கோடு பட்டியலில் சேர்க்கப் பலர் முனைகிறார்கள், தாய்லாந்தில் "தாய்" மொழியில் தமிழோடு வடமொழியையும் கலந்து
எழுதுவதால் முழுக் கிரந்த எழுத்துகளையும் கூட்டெழுத்துகளையும் தமிழில்
சேர்க்க வேண்டும் என்று முழுமூச்சாய் முனைபவர்களும் அமெரிக்காவில்
இருக்கிறார்கள்.
இதையெல்லாம் அணை போட்டுக் கொண்டிருக்க முடியாது.
அப்படிச் செய்பவர்கள் எல்லாம் தமிழிலிருந்து பிரிந்து வெவ்வேறு மொழிகளாகக்
கிளைத்துக் கொண்டே போவார்கள்.
தொன்மைத் தமிழ் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
அதில் கலப்படம் செய்தாலும், கலவை மொழி தனியே கிளைத்துப் பிரிந்து விடும்.
தனித்தமிழ் என்றும் அழியப் போவதில்லை. அதைப் பேசுபவர்களின் எண்ணிக்கை
குறையலாம் ஆனால் அழியாது.
கிளையாளம் வேண்டுபவர்கள், தமிங்கிலம்
வேண்டுபவர்கள், தமிண்டரின் வேண்டுபவர்கள், தமிக்கிருதம் வேண்டுபவர்கள்,
என்று யார் வேண்டுமானாலும் தனித்தனி மொழிகளைப் பிரித்துக் கொண்டு
செல்லட்டும். ஆனால், தனித்தமிழ் மட்டுமே தொல்காப்பியத்துக்கும்
சங்கத்தமிழுக்கும், கம்பனுக்கும் வள்ளுவனுக்கும் இளங்கோவுக்கும் உரிமை
கொண்டாட முடியும்.
Why Don’t The Irish Speak Irish?
The
Danes have Danish, the French speak French, the Slovakians talk in
Slovak yet the Irish don’t speak Irish, but rather English. Almost all
nations and people have their own language yet the Irish are one of the
few nations who have a language that very few of its people can speak.
Ireland is one of the only countries in Europe whose primary language is
that of a foreign country.
https://whistlinginthewind.org/2015/08/20/why-dont-the-irish-speak-irish/
வேங்கைத் திட்டக் கட்டுரை போட்டியில் வெற்றி.
4 ஆண்டுகள் முன்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக