எனக்கு இன்று பொங்கல் பரிசு கிடைத்தது! தமிழ் நூல்கள் படிப்பதிலும், பழந்தமிழ் இலக்கியத்திலும் எனக்கு இருக்கும் ஆர்வத்தைப் பார்த்து, எனது மருமகன் தன் ஊரான பொன்னேரிக்கு அருகில் இருக்கும் பழைய புத்தகக் கடையிலிருந்து பல அரிய நூல்களைக் கொண்டு வந்தான். உ. வே. சாமிநாதையர் அவர்கள் பதிப்பித்த சங்கநூல்கள் முதல் திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்ட செந்தமிழ்ச் செல்வி என்ற திங்களிதழ்களின் தொகுப்பு நூல் வரை ஆறு நூல்கள் கைக்குக் கிட்டின. செந்தமிழ்ச் செல்வியின் பதிப்புகளை வலையில் நான் பார்த்ததில்லை. எனவே பொங்கல் விருந்துக்குப் பின்னர் இந்தப் பழைய நூல்களைப் புரட்டிக் கொண்டிருந்தேன்.
நூல் வெகுவாகச் செல்லரித்துப் போயிருந்தது. சில பக்கங்களில் எண்ணைக் கறை தெரிகிறது. இருந்தாலும், பக்கங்கள் உதிரத் தொடங்கவில்லை. எல்லா நூல்களிலும் ஒரே உரிமையாளரின் பெயர்தான் இருக்கிறது. பெயர் பழைய காலத்துத் தமிழ் எழுத்தில் உள்ளது. “நா. சட்டையப்பன், மதராஸ்” என்று உள்ளது. ‘ர’ என்ற எழுத்து ‘ற’ போலும் உள்ளது. தமிழாசிரியர் ஒருவரின் நூலகத்திலிருந்து பழைய புத்தகக் கடைக்குப் போட்டிருப்பார்கள் போலும். என்னைப் போன்ற புத்தகப் பைத்தியங்களுக்கு இதுதான் வேலை இல்லையா? எங்கே போனாலும் கைக்காசைச் செலவழித்துப் புத்தகங்கள் வாங்குவது. வீடெங்கும் புத்தகங்களை அடுக்கி வைத்திருப்பது. படுக்கை அறையிலும், தரையிலும், கண்ணுக்கெட்டிய இடங்களில் எல்லாம் புத்தகங்கள், புத்தகங்கள், புத்தகங்கள்.
என் அப்பா இறக்கும் வரை அவரது புத்தகங்களைப் படிப்போமே ஒழிய, இரவல் கேட்கும் அளவுக்கு யாருக்கும் துணிச்சல் இல்லை. கடைசி காலத்தில் அவரால் இரண்டாம் மாடியில் இருக்கும் நூலகத்துக்குப் படியேறிச் செல்ல முடியவில்லை. மழைச்சாரலிலும், புழுக்கத்திலும் அவர் அருமை அருமையாகச் சேமித்து வைத்திருந்த பல புத்தகங்கள் நனைந்து, நைந்து செல்லரித்துப் போகத் தொடங்கி இருந்தன. அவரைப் பார்க்க அமெரிக்காவிலிருந்து வந்த எனக்கு அவரது நூலகத்தைப் பார்த்துத் தூக்கி வாரிப் போட்டது. நைந்து போன நூல்களைத் தூக்கிப் போட்டு விடலாமே என்றேன். அதுதான் சொன்னேனே! யாருக்கும் துணிச்சல் இல்லை என்று! திடீரென்று அவர் ஏதாவது புத்தகத்தை எடுத்துக் கொண்டுவா என்றால் என்ன செய்வோம் என்ற பயம்.
கடைசியில், அவர் நகரக் கூட முடியாமல் படுத்த படுக்கையாய் இருக்கும்போது, அவரது படுக்கை அறையிலேயே குப்பையாய்க் கிடந்த பல புத்தகங்களையும், கோப்புகளையும் துப்புரவு செய்யத் துணிந்தேன். நான் என்ன செய்கிறேன் என்பதை ஓரக் கண்ணில் பார்த்தார். சிங்கம் போல அவர் தன் வீட்டைச் சுற்றி வந்து கொண்டிருந்த காலத்தில் அவரது அறைக்குள் நுழையக் கூட எவருக்கும் துணிச்சல் இருந்ததில்லை. ஒரு புத்தகத்தைச் சற்று நகர்த்தி வைத்திருந்தால் கூட அவர் கண்டு பிடித்து விடுவார். உடனே குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் அணி வகுப்பு நடக்கும்.
என்னுடன் பிறந்தவர்களும் நானும், அவர் முன்னால் வரிசையாக நிற்போம். அவர் கையில் குற்றவாளிகளை அடிக்கும் பிரம்பு ஒன்றை எடுத்துக் கொள்வார். சிவப்பு நிறத்தில் உள்ள ஒரு வகையான தோல் அந்தப் பிரம்பைச் சுற்றி இருக்கும். குற்றவாளிகளின் ரத்தத்தால் அந்தப் பிரம்பு சிவப்பானதா, அல்லது அதன் உண்மை நிறமே சிவப்பா என்று தெரியாது. பழைய படங்களில் வரும் காவல்துறை கண்காளிப்பாளர் போல, வலது கையில் பிரம்பைப் பிடித்துக் கொண்டு அவரது இடது கை உள்ளங்கையில் மெல்லத் தட்டிக் கொண்டே “யார்ரா புத்தகத்தைத் தொட்டது” என்று விசாரணையைத் தொடங்குவார்.
தொண்டைக்குழியிலிருந்து வார்த்தை வந்தால்தானே பதில் சொல்ல முடியும்? தேவர்மகன் படத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த பின்னும் தூணுக்குப் பின்னால் நெளிந்து கொண்டு சிவாஜி அப்பாவிடம் அடிக்குரலில் பேசுவாரே கமல் ஹாசன். அது எங்கள் வீட்டுக்கும் அப்படியே பொருந்தும். நான் தான் மூத்தவன். அப்போதும் நான் புத்தகப் பைத்தியம். தம்பி தங்கையர் எல்லோரும் நடுநடுங்கிப் போய் என்னையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். எனக்கு யாரையுமே பார்க்கும் துணிச்சல் இருக்காது. சமையலறையிலிருந்து கையில் கரண்டியோடு என் அம்மா வந்து கூடத்தின் ஒரு மூலையில் கவலையோடு பார்த்துக் கொண்டிருப்பார்கள். புத்தகத்தைத் தொட்டது யாராக இருக்கும் என்று இதற்குள் அப்பாவுக்குத் தெரிந்திருக்கும். இருந்தாலும், குற்றவாளி தன் குற்றத்தை ஒப்புக் கொள்ளும் வரை அவர் சளைக்கப் போவதில்லை.
குற்றவாளிகளைப் பெயர் சொல்லி அழைக்க மாட்டார் அப்பா. எல்லோருக்கும் ஏதாவது ஒரு பட்டப் பெயர் இருக்கும். சில சமயம் என்னைப் போன்ற அதிசயப் பிறவிகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பட்டங்கள் இருக்கும். கல்லூரி செல்லும் வரைக்கும் கூட இந்தப் பட்டப் பெயர்கள்தாம் நிலைத்திருந்தன என்பதை இன்று நினைத்தாலும் வியப்பாகத்தான் இருக்கிறது. அப்பாவை எதிர்த்துப் போர்க்கொடி உயர்த்தக் கடைசி வரைக்கும் துணிச்சல் இல்லாமல் இருந்தாலும், இந்தப் பட்டப் பெயர் ஒழிப்புப் போராட்டத்தைத் தொடக்கி வைத்து அவற்றை வேரோடு அழித்த வீரன் நான் தான்.
இருப்பதிலேயே நடுநடுங்கிக் கொண்டிருப்பது யார் என்று பார்ப்பார் அப்பா. “அம்மா, ஒண்ணுக்கு வருதும்மா” என்று ஒரு கோழை ரீங்காரம் வைக்கும். மடை திறந்த வெள்ளம் போல் அம்மாவின் பாசம் பொங்கி விடும். ”பாவம் குழந்தைங்க. புத்தகம் ஒண்ணும் கிழியல இல்ல? விட்டுடுங்க!” என்று துணிச்சலாக அம்மா சொல்லி விட்டு அப்பாவின் ஆத்திரத்தைக் கிளப்பி விடுவார். அது வரைக்கும், சாம, தான, பேத, தண்ட முறைகளை ஒவ்வொன்றாய்க் கடைப்பிடிக்கலாம் என்று நினைத்திருந்த அப்பா, இந்த தான, பேத முறைகளைக் கை விட்டு விட்டு நேரடியாகத் தண்ட முறைக்குத் தாவி விடுவார்.
எனக்கு அடி விழுவது யாருக்கும் பிடிக்காது. அது ஏன் என்று தெரியாது. வீட்டுக்குத் தலைப்பிள்ளை என்பதால் இருந்த செல்லமோ என்னவோ. என்னைக் காப்பாற்ற வேண்டும், ஆனால் தன்னையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று எல்லோரும் முயல்வார்கள். ஆனால், விசாரணை தொடங்குவதற்கு முன்னரே யார் குற்றவாளி என்று அப்பாதான் தீர்மானித்து விட்டாரே. “ஒண்ணுக்குப் போற நாயி போயிட்டுக் காலைக் கழுவிட்டு உடனே வா! இன்னிக்கு ரெண்டுல ஒண்ணு பாத்துடலாம்,” என்று கர்ஜிப்பார்.
உடனே அணிவகுப்பு கலைய முயற்சிக்கும். “ம்ம்ம்” கர்ஜனை வரும். “ஒரு நாயைத்தான் சொன்னேன். மத்ததுங்க எல்லாம் இங்கேயே நில்லுங்க!” நிற்போம். பாவம் சின்னது, அதற்கு அடக்க முடியாது. ஓடிப் போய் குளியறையில் பதுங்கிக் கொள்ளும். அம்மாவுக்கோ அழுகையும் ஆத்திரமுமாய் இருக்கும். “குரங்குங்க, எத்தனை அடி வாங்கனாலும் புத்தி வராது. அப்பா புத்தகத்தைத் தொடாதீங்கன்னா கேக்காதுங்க.” உண்மைதான். தொடாமல் இருந்தால் இந்தக் குற்றவாளி அணிவகுப்பு தேவையிருந்திருக்காதுதான். ஆனால், நான் தான் தொடவே இல்லையே. சத்தியமாய்! ஆனால், எல்லோரும், அப்பா உட்பட, நான் தான் குற்றவாளி என்று முடிவு கட்டி விட்டார்கள். உண்மையிலேயே யார் புத்தகத்தைத் தொட்டிருப்பார்கள் என்று யோசித்தேன். இவ்வளவு பெரிய புத்தகத்தைப் படிக்கும் அளவுக்கு வேறு யாரும் புத்தகப் பைத்தியம் இல்லை.
ஆனால், புத்தகம் நகர்ந்திருந்தது.
அது எங்கள் எல்லோருக்குமே தெரிந்திருந்தது. ஏனென்றால், அப்பாவின் உடமைகள் எங்கே எப்படி இருக்கும் என்று எங்கள் எல்லோருக்கும் மனப்பாடம். தூக்கத்தில் இருந்து எழுப்பிக் கேட்டால் கூடச் சொல்லுவோம். அம்மா தப்பித்தவறிக் கூட அப்பாவின் புத்தகங்களைத் தொட மாட்டார்கள். சின்னத்தம்பி அப்போதுதான் படிப்பது பாவம் என்ற நம்பிக்கையைச் சற்றுத் தளர்த்தத் தொடங்கி இருந்தான். தங்கைகள் இரண்டும் பாவம். கோலம் போட்டு, வீட்டைப் பெருக்கி, காய்கறி நறுக்கி, வீட்டுப்பாடம் போட்டு, அம்மாவிடம் திட்டு வாங்கி, அவர்கள் உலகத்திலிருந்து மீண்டு வரவே நூற்றாண்டுகள் ஆகுமே அவர்கள் தொட்டிருக்க வாய்ப்பில்லை. குட்டித்தம்பி குளியலறையிலிருந்து இன்னும் வரவில்லை. அவனாய் இருக்குமோ?
விசாரணை தொடரும். எங்களுக்கு ஒரு ஒற்றுமை இருந்தது. காட்டிக் கொடுக்க மாட்டோம். தண்டனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வோமே ஒழிய காட்டிக் கொடுக்க மாட்டோம். அப்பாவின் பிரம்பு எல்லோருடைய பின்னங்காலிலும் விளையாடும். அம்மாவின் உரத்த குரல் எதிர்க்க எதிர்க்க பிரம்பின் வேகம் இன்னும் கூடும். வலியில் துடிதுடித்துப் போய் விடுவார்கள் என் இளையவர்கள். பொதுவாக, அடித்தால் அழுவதில்லை என்று நான் சின்ன வயதில் எப்போதோ ஒரு உறுதி பூண்டிருந்தேன். அதை எந்த அளவு கடைப்பிடித்தேன் என்று மற்றவர்களைக் கேட்டால்தான் தெரியும். ஆனால், எனக்குள்ளே நான் அழுததில்லை, அரற்றியதில்லை என்ற நினைப்பு. அதனால், அடிகள் சற்றுக் கூடுதலாக, வலுவாகக் கிடைக்கும்.
அடிக்கும்போது நகரக் கூடாது. ஓடக் கூடாது. நெளியக் கூடாது. அப்பாவுக்குக் கை வலிக்கக் கூடாது. ஓடினால் அப்பா திட்டுவார். “சனியனே, ஓடாதே, இங்கே கிட்ட வந்து நின்னு அடி வாங்கிக்க.” எங்களுக்கு அழுகை கூடக் கூட அம்மாவின் ஓலமும் கூடி விடும். மருந்தை எடுத்துக் கொண்டு குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள ஓடி வ்ந்து விடுவார்கள். அம்மாவின் மீது தப்பித் தவறி ஏதாவது அடி விழுந்து விடுமோ என்று நாங்கள் அம்மாவுக்கு அரண் வகுப்போம். அலறி அழுதவர்களை முன் கூட்டியே விடுதலை செய்து விடுவார் அப்பா. “ஊரைக் கூட்டுதுங்க, சனியனுங்க. வெச்சத வெச்ச எடத்தில இருக்க வேணா? கொரங்குங்க.” அப்பாவின் கர்ஜனையில் தெருவே அடங்கி விடும். குழந்தைகளுக்குப் பரிந்து பேச வரும் அக்கம்பக்கத்துக் காரர்களையெல்லாம் தனது சுடு சொல்லாலும், எரி பார்வையாலும், அப்பா எப்போதோ விரட்டியாயிற்று. அத்தனையையும் மீறிப் பரிந்து பேச யாருக்குத் துணிச்சல் இருக்கும்?
பாட்டிக்கு.
ஆனால், பாட்டி வருவது எப்போதாவது ஒரு முறைதானே. நான் பாட்டி செல்லம். அப்பாவையே அதட்டி வைத்து என்னைக் காப்பாற்ற முடிந்தது பாட்டியால் மட்டும் தான்.
வெளியே அழுகை இல்லாவிட்டாலும், உள்ளுக்குள் குமுறிக் கொண்டிருப்பேன். இறந்து போன பாட்டியைத் துணைக்கு அழைத்து மனதுக்குள் அப்பாவுக்குப் புத்தி கொடுக்கும்படி வேண்டிக் கொள்வேன். அது என்னவோ தெரியவில்லை, இந்த வேண்டுதல் வேண்டாமையெல்லாம் எனக்கு மட்டும் வேலை செய்ததில்லை. அது கடவுளாகட்டும், பாட்டியாகட்டும். எது கிடைத்ததோ அது கிடைக்கக் கடுமையாக உழைத்ததைத் தவிரத் தப்பித் தவறிக்கூட கடவுளின் அருள் நான் கேட்ட போது கிடைத்ததில்லை.
ஏனைய பாளையக்காரர்களையெல்லாம் அடித்துக் களைத்துப் போய் எரிச்சலின் உச்சத்தில் இருக்கும் அப்பா “ஏண்டா, தடிமாடே, எடுத்தேன்னு சொன்னா கொறஞ்சா போயிடுவே” என்று என்னைப் பார்த்து உறுமுவார். “நான் எடுக்கலயே அப்பா” என்று அடி வயிற்றிலிருந்து சொல்லுவதற்கு ஒலி எழுப்ப முயற்சிப்பேன். எந்தச் சொல்லும் தொண்டைக் குழியைக் கூட எட்டியதாய் நினைவில்லை. என்னைத் தொடர்ந்து அடிப்பதால் தனக்குத்தான் களைப்பு கூடும் என்று தீர்மானித்து எனக்குச் சிறப்புத் தண்டனை தருவார் அப்பா.
சில சமயம் முட்டிக்கால். சில சமயங்களில் ஒற்றைக்கால். பெரும்பாலும் சுவர் நாற்காலி. இந்தச் சுவர் நாற்காலி என்பதை யார் கண்டு பிடித்தார்கள் என்று தெரியவில்லை. நாற்காலியில் உட்காருவது போல சுவற்றில் சாய்ந்து கொண்டு அந்தரத்தில் மிதக்க வேண்டும். முதலில் சுகமாக இருக்கும். அதுதான் அடி நின்று விட்டதே. பின்னங்கால் அடி வாங்கிக் கன்னிப் போய் இருக்கும். அம்மா உதவிப் படைக்குக் குற்றவாளிக்குக் களிம்பு தடவ அனுமதி மறுக்கப் பட்டிருக்கும்.
அப்பாவுக்கும் பசி. எல்லோருக்கும் பசி. ”வளத்து வச்சிருக்கா பாரு” என்று அம்மாவைத் திட்டிக் கொண்டே சாப்பாடு ரெடி பண்ணு என்று கட்டளையிட்டு விட்டுக் கைகால் கழுவப் போய் விடுவார் அப்பா. “எடுத்தேன்னு சொல்லிடுடா கண்ணு” என்று அம்மா மன்றாடுவார். “நான் தொடலையே அம்மா!” இப்போது மட்டும் இந்த ஒலி தொண்டையிலிருந்து எப்படியோ வெளியே வந்திருக்கும்.
அரை மணி நேரம், ஆடாமல் அசையாமல் சுவர் நாற்காலியில் உட்கார்ந்திருப்பேன். உடலில் இருக்கும் ஒவ்வொரு அணுவும் வலி, வலி என்று முனகும். ஆனால், மனது இருக்கிறதே. அது விட்டுக் கொடுக்காது. உண்மையான குற்றவாளிகளைச் சிறையில் அப்பா எப்படி விசாரிப்பார் என்று தெரியாது. துப்பாக்கிகளும் காக்கிச்சட்டைகளும் ஆண்ட அப்பாவின் உலகத்தைப் பற்றி எங்களுக்குத் தெரியாது. அடிக்கடி அவருக்கு ஏதாவது மேலிடத்து விருது வந்து கொண்டிருக்கும். ஏதாவது கடத்தல்காரனை அடக்கிப் பிடித்துச் சிறையில் அடைத்து வைப்பார். அவனும், மேலிடத்துப் புண்ணியத்தில் சிறிது காலம் சிறையில் இருந்து விட்டு வெளியே போவான். கடத்தல்காரர்களின் குழந்தைகள் எல்லோரும் என்னுடன் தான் படித்தார்கள். ஆனால், நாங்கள் யாருமே எங்கள் வீடுகளைப் பற்றிப் பேச மாட்டோம்.
‘இந்த வயசுலே எத்தன அழுத்தம் பாரு? தப்பை ஒத்துக்குதா பாரு!’ என்று திட்டிக் கொண்டே, அம்மாவைப்பார்த்து ‘ஏய், இந்தக் கொரங்குக்கும் சாப்பாடு போட்டுத் தூங்க வை!” என்று அப்பா ஆணையிடுவதோடு அன்றைய தண்டனை முடிவுக்கு வரும்.
பழைய புத்தகங்களைப் புரட்டும்போது பழைய நினைவுகளும் வருவது இயல்புதானே. எப்போதோ வாங்கிய அடி. இப்போதும் வலித்தது. அப்பாவின் பழைய புத்தகங்களைக் கிளறிக் கொண்டிருக்கையில், ஒரு பெரிய அட்டைப் பெட்டி கையில் கிடைத்தது. அதைத் திறந்து பார்த்தேன். அமெரிக்காவிலிருந்து நான் அப்பாவுக்கு அனுப்பிய ஒரு கடிதம் விடாமல் எல்லாவற்றையுமே அழகாக, தேதி வாரியாகப் பிரித்து, பிளாஸ்டிக் உறையில் பாதுகாத்து வைத்திருந்தார். என்னுடைய பழைய கல்லூரி அடையாள அட்டை, நான் எப்போதோ கல்லூரி மலருக்கு எழுதிய கதை, நான் மறந்து போய் விட்டிருந்த எனது கவிதை நோட்டு, எனக்குப் பல்கலைக் கழகத்தில் கிடைத்த தங்கப் பதக்கச் சான்றிதழ், என்று எனது இந்திய வாழ்க்கையின் ஆவணங்கள் அனைத்தையும் பாதுகாத்து வைத்திருந்தார். பழைய புத்தகங்களின் தூசோ என்னவோ கண்கள் கலங்கியிருந்தன.
வேங்கைத் திட்டக் கட்டுரை போட்டியில் வெற்றி.
4 ஆண்டுகள் முன்பு
5 கருத்துகள்:
அப்பா என்று வரும் போது பல தமிழர்களுக்கு, அதுவும் ஆண்களுக்கு நிறைய ஒற்றுமையான நிகழ்வுகள்.
தந்தையை நீங்கள் நினைவு கூர்ந்த விதம் இதமானது.
வாசன்
"....ப ழைய புத்தகங்களின் தூசோ என்னவோ கண்கள் கலங்கியிருந்தன....."
கடைசி பாரா படிக்கும் பொழுது எனக்கும் கண்கள் பனிக்கின்றன.....
மயிலாடுதுறை சிவா...
பட்டப்பெயர்(கள்) என்னன்னு சொல்லாம
தந்திரமா விட்டுட்டீங்களே :-)))
அகப்பாடல்களில் இம்மாதிரியான
உணர்வின் அழுத்தம் தெரியும்.
அன்புடன்
நாக.இளங்கோவன்
நன்றி வாசன், சிவா, இளங்கோ. கண்டிப்பான தந்தை என்பவர் வாசன் சொல்வது போல தமிழர்களுக்கு நன்றாகத் தெரிந்த “பாத்திரம்.” இளங்கோ சொல்வது போல் அகப்பாடல்களின் நுண்ணுணர்வுகள், திணைகளின் ஊடாகச் சொல்லாமல் சொல்லும் செய்திகள் இன்று நமக்கு வியப்பைத் தருவன. கூச்சல் போட்டு ஊரைக்கூட்டிக் கத்தும் உணர்வுகளின் உருவமாகத் தமிழன் ஆனது எப்போது என்று தெரியவில்லை. ஒருவேளை, பேரா. ஹார்ட் சொல்வது போல இந்த இரண்டு விதமான தமிழர்கள் என்றுமே இருந்திருக்கக் கூடும். இராமன் போன்ற அறத்தமிழனும், இராவணன் போன்ற மறத்தமிழனும் நம்மிடையே இன்றும் வாழ்கிறார்கள்.
Great..!
கருத்துரையிடுக