அன்பார்ந்த தமிழ்மணம் வாசகர்களே!
தமிழ்மணம் திரட்டி என்னைப் பொங்கல் வார நட்சத்திரமாக, தமிழ்மணத் தாரகையாகத் அறிவித்து நான் எழுதத் தொடங்கி அதற்குள் ஒரு வாரம் பறந்து விட்டது!
பொதுவாக மடலாடற்குழுக்களில் எழுதுவதைப் பழக்கமாகக் கொண்டிருக்கும் எனக்கு, வலைப்பதிவர்களின் நெருக்கமான உலகமும், அவற்றின் ஊடாடலும், கிட்டத்தட்ட வேறு உலகமாகவே தோன்றிற்று. பொதுவாகப் பதிவர்கள் மடலாடற்குழுக்களில் எழுதுவதில்லை. அப்படி எழுதினாலும், தங்கள் பதிவுகளைப் பற்றி மட்டும் எழுதுவார்கள். மற்ற கருத்தாடல்களில் கலந்து கொள்வதில்லை. பதிவர்களின் கருத்தாடல்கள் வலைப்பூ உலகுக்குள் மட்டுமே பெரும்பாலும் இருக்கிறது. மடலாடற்குழுக்கள் நாடக மேடை என்றால், பதிவர் உலகம் சின்னத் திரை போன்றது எனலாமா? அப்போது பெரிய திரை என்ன என்று கேட்காதீர்கள்! ஃபேஸ்புக்கோ, டுவிட்டரோ இன்னும் அந்த அளவை எட்டவில்லை. பெரிய திரை இன்னும் வலையிதழ்கள் என்றே சொல்லலாம்.
சோசியல் நெட்வொர்க் என்பதற்குத் தமிழ்ப் பெயர் சூட்டி விட்டாயிற்றா என்று தெரியவில்லை. சோசியலைஸ் என்பதை உறவாடுதல் என்று கொண்டு பெயர் வைக்க வேண்டும். ஆனால், அது உறவாடு, கருவாடு என்று எங்கேயாவது கொண்டு போகும்! தற்போதைக்குச் சமூகவலை என்று வைத்துக் கொள்வோம்.
சமூகவலைத் தொழில்நுட்பத் தாக்கங்களால் இணையத்துக்கு உள்ளேயே இதற்குள்ளே பல பிரிவுகள் தோன்றத் தொடங்கி விட்டன. திறந்த பரப்பாக, எல்லோரையும் இணைக்கும் மையமாக இருந்த இணையம் இன்று தனித்தனிக் குழுக்களாகப் பிரியத் தொடங்கி உள்ளது. மனித சமூகங்கள் சிற்றூரிலும், பெருநகரிலும் வாழ்வது போல இந்தச் சமூகவலைகளும் ஃபேஸ்புக் போன்ற பெருநகரமும் ஏனைய சிற்றூர் குழுமங்களாகவும் சிதறத் தொடங்கி விட்டன. மடலாடற்குழுமங்களும் அப்படித்தான் சிதறின. தொடக்க நாட்களில் தமிழ்.நெட் தான் இணையம். இப்போது ஃபேஸ்புக்கில் இருந்தாலும், அதன் பண்பாடே தனி. டுவிட்டரில் இருப்பவர்கள் ஃபேஸ்புக்கில் ஒட்டியும் ஒட்டாமலும் இருப்பதையும், ஃபேஸ்புக்கில் இருப்பவர்கள் டுவிட்டரைப் பொருட்படுத்தாமல் இருப்பதையும் பார்க்க முடிகிறது.
ஆனால், எல்லாவற்றிலும் தமிழில் உறவாட முடிகிறது. பிலாக்கரில் கூடத் தமிழ் இடைமுகம் வந்தாயிற்று. இந்த வளர்ச்சி மகிழ்ச்சி தரக்கூடியது. தமிழ்மணம் திரட்டி 9000 வலைப்பூக்களைத் திரட்டுகிறது என்று அறிந்து மலைத்துப் போனேன். ஒரு சிலர் மட்டுமே எழுத, மற்றவர்கள் அதைப் படித்துக் கருத்து சொல்வது மட்டுமே இருந்த பதிப்புலகம் மாறி இன்று தம் கருத்துகளைப் பதிவு செய்யப் பல்லாயிரக் கணக்கான எழுத்தாளர்களால் முடிகிறது. ஒரு சில நிறுவனங்களின் கையில் இருந்த கருத்துலகத்தை உடைத்து இன்று சிறுபான்மையினரும் தங்கள் கருத்துகளை உலகுக்குப் பரப்ப இணையம் வழி காட்டியிருக்கிறது. இது பெரிதும் வரவேற்கத் தக்க வளர்ச்சி. ஆயினும், அரசுகள் இவற்றைக் கட்டுப் படுத்தாமல் இருப்பதில்லை.
விக்கிலீக்ஸ் நமக்குக் காட்டியது என்னவென்றால், கருத்துச் சுதந்திரம் பேசும் நாடுகள் கூடத் தம் நாட்டின் பாதுகாப்புக்காக கருத்துகளுக்கு அணை கட்டத் தயங்குவதில்லை என்பதே. இருந்தாலும், இணையம் என்பது ஒரு மாகடல். இதற்கு அணை போடுவது என்பது எளிதல்ல. இதன் அடிப்படை அடவே (டிசைன்) என்ன தடை இருந்தாலும் அவற்றை மீறித் தகவல்களைக் கொண்டு சேர்ப்பதுதானே!
நிற்க.
கடந்த ஒரு வாரத்தில் தமிழ்மணம் திரட்டி எண்ணற்ற புது வாசகர்களுக்கு என் வலைப்பூவை அறிமுகப் படுத்தி இருக்கிறது. மாத மும்மாரி பொழிவது போல் எப்போதாவது பதிந்து கொண்டிருந்த என்னை நாளுக்கொரு பதிவாவது செய்ய வைத்தது இந்த நட்சத்திரப் பதவி! நான் எழுதும் தலைப்புகள் தமிழ் தகவல் தொழில்நுட்பம், கலைச்சொல்லாக்கம், தமிழ் மொழி வரலாறு என்று ஒரு சிலருக்கு மட்டுமே சுவையாக இருக்கக் கூடிய தலைப்புகள். இவற்றை தமிழ்மணம் திரட்டி அனுப்பும் வாசகர்களுக்குச் சுவையாக எழுதிக் கருத்துப் பரிமாறிக் கொள்ள முடியுமா என்ற ஐயம் எனக்கு இருந்தது. இது தவிர பொங்கல் வாரத்தில் மக்கள் பண்டிகை கொண்டாடுவார்களா இல்லை வலையில் மேய்வார்களா என்றும் ஒரு ஐயம். ஆனால், பல வாசகர்கள் வந்திருக்கிறீர்கள். பலர் கருத்துரைத்திருக்கிறீர்கள். வாசகர் எண்ணிக்கையும் கூடிக் கொண்டே வந்திருக்கிறது. மிக்க நன்றி.
பொங்கல் நாளன்று நான் எழுதிய பதிவை வெகு சிலரே படித்திருக்கிறார்கள். அதில் தமிழ் யூனிக்கோடு முயற்சிகளின் வெற்றி பற்றி எழுதியிருந்தேன். அதைப் படிக்காதிருந்தால் சற்று எட்டிப் பாருங்கள். (http://kural.blogspot.com/2011/01/blog-post_15.html )
இந்த வாரம் என்னோடு கருத்தாடல் செய்த வாசகர்களிடமிருந்து நான் பல கற்றுக் கொண்டேன். பழம்பெரும் பண்பாட்டின் வழித்தோன்றல்கள் எப்படி நாகரீகமாகத் தம் கருத்து வேற்றுமைகளைப் பற்றி எழுதலாம் என்பதற்குத் தமிழ்மணம் திரட்டி வந்த வாசகர்களே அடையாளம். என்னுடைய பதிவுகளில் நீங்கள் விரும்பிப் படித்தவற்றைக் கீழே வரிசைப்படி பட்டியலிடுகிறேன்:
குழந்தைகளை வேட்டையாடும் காமவெறியாளர்கள்
தமிழுக்குப் புதிய எழுத்துகள் தேவையா?
தமிழ் இணையம் - கனவும் நனவும்
"ஏனோ என்னை எழுப்ப லானாய்மட மானே” - தெருக்கூத்தும் ...
பழைய புத்தகக் கடையில் கிடைத்த பொங்கல் பரிசு
கலைச்சொல்லாக்கம் - 1944ல் ஒரு கருத்தாடல்
ஔவைப் பாட்டிக்கு மினி-ஸ்கர்ட்?
தமிழ்மணம் திரட்டியின் வாசகர்களே வருக!
தஞ்சை ஒருங்குறி மாநாடு - சனவரி 9, 2011
சொல்வளம் - உங்களுக்குத் தமிழ் தெரியுமா?” வலைப்பூ இன்று தொடங்குகிறது...
இந்தப் பதிவுகளால் உங்களுக்குத் தெரியாத தகவல்களை அறிமுகப் படுத்தியிருந்தால் இந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டதாகக் கொள்கிறேன்.
வாரமொரு தமிழ்ப் பதிவுலகத் தாரகையை நமக்கு அறிமுகப் படுத்தும் தமிழ்மணம் திரட்டிக்கு மீண்டும் எனது நன்றி. புழைக்கடைப் பக்கம் வலைப்பூவுக்குப் புதிதாக வந்து படித்திருக்கும் தமிழ்மணம் திரட்டியின் வாசகர்களின் வருகைக்கு நன்றி. மீண்டும் வருக!
இவண்,
மணி மு. மணிவண்ணன்
வேங்கைத் திட்டக் கட்டுரை போட்டியில் வெற்றி.
4 ஆண்டுகள் முன்பு
3 கருத்துகள்:
ஐயா அவர்களுக்கு இளங்கோவன் வணக்கமுடன் எழுதும் வரிகள்.. இன்று எனக்கு வந்த பதிவில் உங்களைப் பற்றிய தகவல் கிடைத்தது.. உங்களின் பதிவுகளைப் படித்து வியந்தேன்... வாழ்த்துக்கள்..வரும் நாட்களில் பகிர்வோம் நம் எண்ணங்களை..
நட்புடன் இளங்கோவன், சென்னை
அண்ணே, நல்ல விசயங்கள் ! சத்தமில்லாமல் படித்து முடித்துவிட்டேன்! நேரம் வரும்பொழுது ஒரு நாடோடியாக உங்கள் எழுத்துக்களையும் பற்றி எழுத இருக்கிறேன், பேச இருக்கிறேன்... அப்படியே கொஞ்சம் கலாய்க்கவும் செய்வேன் !
அன்புடன்
ஓசை செல்லா
@இளங்கோவன் அவர்களுக்கு,
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. கட்டாயம் வரும் நாட்களில் நம் எண்ணங்களைப் பகிர்வோம்.
@ஓசை,
வாருங்கள். எழுதுங்கள். கலாயுங்கள்! ஓசையிடமிருந்து எதிர்பார்ப்பதே இந்தக் கலகலப்பு தானே! பெயரில் மட்டும் ஓசை இருந்தால் போதுமா? :-)
கருத்துரையிடுக