Sunday, January 02, 2011

தஞ்சை ஒருங்குறி மாநாடு - சனவரி 9, 2011

நண்பர் கோ. திருநாவுக்கரசு அரிதிலும் அரிதான மனிதர்.  இயற்கை வேளாண்மையையும், உழவர் உரிமைகளையும் வலியுறுத்திப் போராடும் தாளாண்மை உழவர் இயக்கத்தின் தலைவர்களில் ஒருவர்.  தமிழ் மொழி, பண்பாடு, தமிழர் வருங்காலம் பற்றிய ஆழ்ந்த அக்கறை மிக்கவர்.  ஈழத்தமிழர் உரிமைகளுக்கு உரத்த குரல் கொடுத்து வந்திருப்பவர்.    உலகமயமாக்கலின் கேடுகளைப் பற்றிப் பல ஆண்டுகளாகச் சொல்லிக் கொண்டிருப்பவர்.  பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் குடியேறிக் கொண்டிருப்பதைக் கவலையோடு பார்த்து வருபவர்.  முதலாளித்துவத்தின் அத்து மீறல்களை வெளிச்சம் போட்டுக் காட்டுபவர். அமெரிக்காவின் ஆதிக்கக் கொள்கைகளையும் செயல்களையும் கண்டித்து வருபவர்.

பல கொள்கைகளில் நான் அவரோடு இணங்கியிருந்தாலும், வேறு பல கொள்கைகளில் அவரோடு மாறு பட்டு வாதித்து வந்திருக்கிறேன்.  கருத்து வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் முதிர்ச்சியான கருத்துகளைப் பாராட்டுபவர் அரசு.

தஞ்சையில் சனவரி 9 அன்று நடக்கவிருக்கும் ஒருங்குறி மாநாட்டை அன்பர் அரசு அவர்கள் முன்னின்று நடத்தப் போவதாக அறிந்து மிக மகிழ்ந்தேன்.  மாற்றுக் கருத்துகளை முன்னிறுத்தும் அவர் நடத்தும் மாநாட்டில் கலந்து கொண்டு தொழில்நுட்பம், கணினி, யூனிக்கோடு, குறியீடுகள், கிரந்தம், தமிழ்க் கல்வெட்டுகள், போன்ற எண்ணற்ற தலைப்புகளைப் பற்றி ஒரு புதிய தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற அவர் வேண்டுகோள் என்னைத் திணறடித்துக் கொண்டிருக்கிறது.  வேலைப் பளு, கிரந்தம் தொடர்பான தொழில்நுட்ப அறிக்கை தயாரிப்பு, என்று பல அழுத்தங்களுக்கு இடையே வெளியூர் சென்று மாநாட்டில் கலந்து கொள்ள இயலுமா எனத் தெரியவில்லை.  மாநாட்டுக்கு ஏற்ற கட்டுரை படைக்கவும் நேரம் இல்லாத நிலையில் என்னுடைய வலைப்பதிவுகளில் ”தொன்மைத் தமிழின் தொடர்ச்சி” என்ற கட்டுரையை மாநாட்டு மலரில் வெளியிட அனுமதி கோரியுள்ளார்.

மாநாட்டுக்குக் கட்டுரை படைக்க நேரமில்லையே தவிர, மாநாட்டுக் கட்டுரைக்கான குறிப்புகளைத் தயாரித்து வைத்திருந்தேன்.  அதை அவருடன் பகிர்ந்து கொண்டேன்.  மலருக்கு ஏற்ற வடிவத்தில் இல்லாமல் இருப்பதால் அதை அவரால் பதிப்பிக்க இயலுமா எனத் தெரியவில்லை.  வலைப்பூக்களின் வசதியே முதிராத எண்ணங்களையும் பதிவு செய்ய முடிவதுதான் என்பதால், அக்குறிப்புகளை இங்கே வெளியிடுகிறேன். 

கட்டுரைக்காக நான் எண்ணியிருந்த கருத்துகள் பின் வருமாறு:

1. யூனிக்கோடு குறியீட்டுக் கட்டங்களுக்குள் இடம் பெற்றிருப்பவை வெறும் எண்கள் மட்டுமே.  எதை, யார், எப்போது, எப்படிப் புழங்குகிறார்கள் என்பதைப் பொருத்தே ஒரு மொழியின் பயன்பாடும், அடையாளமும் அமையும்.  யூனிக்கோட்டுக் கட்டங்களில் உள்ள எண்கள் அல்ல.

2. தற்போது தமிழ்க் கட்டத்தில் இருப்பது போல கிரந்த எழுத்துகளைத் தமிழ் முறைப்படி புள்ளி வைத்து வரிசையாக எழுதும் முறை வேறு, வடமொழி முறைப்படிப் புள்ளி இல்லாமல் ஒன்றின் மேல் ஒன்றாக கிரந்த எழுத்துக்களை அடுக்கி எழுதுவது வேறு.  தற்போது இந்திய அரசு யூனிக்கோடு நுட்பக் குழுவுக்கு முன்மொழிந்திருப்பது அடுக்கு முறை கிரந்தக் குறியீட்டைத்தான்.

3. தமிழ் எழுத்து முறையின் எளிமையும், நளினமும், நுட்பமும் புள்ளி வைத்து
வரிசையாக எழுதும் முறையில் அடங்கி இருக்கிறது.  இந்த முறையால்தான்
தமிழுக்குள் நுழைந்த ஐந்து கிரந்த எழுத்துகள் தமிழுக்குள் நிலை பெற்றன.  இது வரை தமிழில் இல்லாத வேறு கிரந்த எழுத்துகளைத் தமிழ் முறைப்படி எழுத யாரும் முன் வராதவரை, மேற்கொண்டு தமிழ் நெடுங்கணக்குக்குள் கிரந்த எழுத்துகள் நுழைவதற்கு வாய்ப்பில்லை.

4. தமிழ் இலக்கண முறைப்படி பிறமொழிச் சொற்களும், பிறமொழி ஒலிகளும் தமிழுக்கு ஏற்ற வடிவங்களையும் ஒலியையும் பெற்றே வழங்குகின்றன.  தமிழ் வழிப்பள்ளிகளில் படித்த தமிழ் மட்டும் தெரிந்த பல தமிழர்களின் வழக்கமும் தமிழ் இலக்கண முறைப் படியே இருக்கிறது.  காட்டாக, தமிழ்ச் சொற்கள் மெய்யெழுத்தில் தொடங்கா. க்ரியா, ஷ்ரேயா, ஷ்வேதா, ஸ்கூல், ஸ்லேப் போன்ற பிறமொழிச் சொற்களைத் தமிழர்கள் பேசும்போது முறையே கிரியா, சிரேயா, சுவேதா, இசுக்கூல், சிலேப்பு என்பது போல் வழங்குகிறார்கள்.  இப்படிப் பேசுவதும் எழுதுவதும், படிநிலைச் சமுதாயத்தில் ஆங்கிலமும் பிறமொழிகளும் தெரிந்த மேட்டுக்குடிகளுக்கும், அவர்களோடு  தம்மை இணைத்துக் கொள்ளத் துடிக்கும் நடுத்தரக் குடிகளுக்கும் ஒப்புவதில்லை.  அவர்கள் இப்படிப் பேசுவதை எள்ளுகிறார்கள்.  இவர்களில் சிலருக்குப் பிறர் தம்மையும் தமிழ் மட்டுமே தெரிந்த “தற்குறிகள்” எனக் கருதி விடுவார்களோ என்ற அச்சம் உண்டு.  இவர்கள்தாம் பிறமொழி ஒலிப்புகளைத் தமிழில் அப்படியே கொண்டு வர வேண்டும் என்று தமிழில் இல்லாத ஒலிப்புகளுக்குப் புதிய குறியீடுகளைக் கொண்டு வர முயல்கிறார்கள்.

இது தொடர்பாக, யூனிக்கோடு நுட்பக் குழுவுக்குக் கிரந்தம் தொடர்பான கருத்து
வழங்கும் மனு ஒன்றில் காஞ்சியைச் சேர்ந்த சமஸ்கிருத விற்பன்னர்கள் சிலர்
தமிழில் குறிப்பிட்டிருக்கும் பகுதியை மேற்கோள் காட்ட விரும்புகிறேன்:

"எந்த லிபியும் தனது இயற்கையான மொழியல்லாத மற்ற மொழிகளைக் குறிப்பதில் அந்தந்த மொழிகளின் இயற்கையான லிபிகளுக்கு ஸமமான ஸாமர்த்யம் பெற்றிருக்கவியலாது. எடுத்துக் காட்டாக read red எனப்படும் வெவ்வேறு ஆங்கிலச் சொற்கள் பாரதீய லிபிகளில் रेड् ரெட் என்பது போல ஒரே முறையில்தான் எழுதப்பட வேண்டியிருக்கின்றன.  ஆக இந்த சொற்களை பாரதீய லிபிகளில் எழுதினால் எழுத்திலிருந்து பொருள் வேற்றுமை விளங்காது.  இது யூனிகோட் அதிகாரிகளுக்குத் தெரிந்தே இருக்கும்.  ஆக க்ரந்த லிபியானது தனது இயற்கை மொழியான ஸம்ஸ்க்ருதத்தைத் தவிர்த்த மற்ற மொழிகளைக் குறிப்பதில் மலையாள லிபியையோ அல்லது வேறு எந்த லிபியையோ ஒத்த ஸாமர்த்யத்தைப் பெற்றிருக்கும்படி க்ரந்தத்தில் எழுத்துக்களைச் சேர்த்துக்கொண்டே போவதில் பொருளில்லை.”

- தமிழ்நாட்டு க்ரந்த பயனீட்டாளர்கள் சார்பில் வித்வான்கள், 2010-06-20

யூனிகோடு அதிகாரிகளுக்கு ”க்ரந்த லிபி பயன்படுத்தும் வித்வான்களின்
வேண்டுகோள்”  Unicode document L2/10-233

சமஸ்கிருத வித்துவான்கள் கிரந்த எழுத்துமுறைக்குச் சொல்வது தமிழ் எழுத்து
முறைக்கும் முற்றிலும் பொருந்தும் என்பது எனது தாழ்மையான கருத்து.

5. தமிழில் கூடுதலான ஒலிகளைக் குறிக்க மீக்குறிகளைப் (diacritics) புழங்கினாலும் சரி, புதிய எழுத்துகளைப் படைத்தாலும் சரி, கிரந்த எழுத்துகளைப் புழங்கினாலும் சரி, தமிழின் இலக்கணவிதிகளை மாற்ற வேண்டி வரும்; மொழியின் தன்மையும் மாறி விடும்.  இது எழுத்துச் சீர்திருத்தத்தினால் வரும் மாற்றங்களை விட மிகப் பெரியது.  இத்தகைய மாற்றம் வேண்டுமா, வேண்டாமா, அதனால் வரும் மாற்றங்களால் தமிழ் மொழியின் தொடர்ச்சிக்கு என்ன இடையூறு வரும், இத்தகைய மாற்றங்களால் வருங்காலத் தமிழர்களின் வாழ்வுக்கு ஏதும் முன்னேற்றம் வருமா போன்ற கேள்விகளைத் தமிழர்கள் - உணர்ச்சி வயப்படாமல் - கலந்து பேசித் தீர்மானிக்க வேண்டும்.  எங்களில் சிலர் இத்தகைய மாற்றம் தேவையில்லை, இதனால் இடையூறு வரும் என்று கருதுகிறோம்.  ஆனால், இதற்கு மாற்றுக் கருத்து உள்ளவர்கள் தக்க ஏரணங்களைக் காட்டினால் அவற்றை ஏற்றுக் கொள்ளவும் அணியமாய் இருக்கிறேன்.

6. யூனிக்கோடு குறியீட்டில் வரும் மாற்றங்களை நிறுத்துவது என்பது இன்று தமிழர்கள் கையில் இல்லை என்பதுதான் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய செய்தி. தமிழுக்கு உரிய தரப்பாடுகளை உருவாக்கும் உரிமை இன்று தமிழர்களிடம் இல்லை என்பதே கசப்பான உண்மை.  ஆனாலும், நமது கருத்துகளை உரிய இடங்களில் வைத்து நம் உரிமைக்காக வாதாடும் உரிமையை நாமே விட்டுக் கொடுத்தாலன்றி அது நம்மிடம்தான் இருக்கிறது.  இத்தகைய அரங்குகளில் தொழில்நுட்ப அறிவும், மொழியறிவும், வரலாற்று ஆவணங்கள் பற்றிய அறிவும்தான் நாம் செய்ய வேண்டியவற்றிற்குத் தேவையானவை.   மேடைப் பேச்சுகளும், முழக்கங்களும் நமக்குள்ளே உணர்வுகளைத் தூண்டி விடுவதை விட்டுவிட்டு நமக்குத் தேவையான செய்திகளை விளக்கி, வருங்காலத்தைப் பற்றிய முன்னெச்சரிக்கை அளித்து  நமக்கு வழிகாட்ட வேண்டும்.

7. கிரந்த எழுத்துகளின் ஊடுருவலைத் தடுக்கும் தளம் தொழில்நுட்பத் தளம்
அல்ல.  அது பண்பாட்டுத்தளம்.  ஊடகங்களிலும், வலைத்தளங்களிலும்,
மேடைகளிலும், தனித்தமிழை ஊட்டி வளர்ப்பதில் நமது வெற்றியைப் பொருத்து மட்டுமே இந்த ஊடுருவலைத் தடுக்க இயலும்.  ஆனால், தனித்தமிழ் என்பது ஓர் அருவருப்பான, பிற்போக்குத்தனமான, இனவெறிக் கும்பல்களின் ஈட்டியாகக் கருதும் நிலை இருக்கும் வரை தனித்தமிழ் பரவுவது கடினம்.  ஒரு சிறுபான்மை மக்கள், தங்களின் மொழி, பண்பாடு, தனித்தன்மை இவற்றைக் கட்டிக் காக்கும் கேடயம் தனித்தமிழ் என்பதை உணர்ந்தால் மட்டுமே தனித்தமிழ் நமக்கு அரண் சேர்க்கும்.

8. சிறுபான்மைக் குடிகளின் தனித்தன்மை இன்று உலகமயமாக்கலில் அடிபட்டுப் போய்க்கொண்டிருப்பது அந்த இனங்களுக்கு மட்டுமல்ல உலகுக்கே பெரும் இழப்பு.  வெவ்வேறு சிந்தனைகள், வெவ்வேறு கோணங்கள், வெவ்வேறு பண்பாட்டு முறைகள் எல்லாம் உலகின் வருங்கால வளர்ச்சிக்கும் வளத்துக்கும் தேவையான விதைகள். எப்படி உயிர்களின் தொடர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் வேறுபாடுகள் தேவையோ அதே போல்தான் மக்களின் அறிவு வளர்ச்சிக்கும் தொடர்ச்சிக்கும் மொழிகளின் தனித்தன்மையும் தேவை.  (Diversity of linguistic expression may be as important for human knowledge as biological diversity is for promoting maximum health in an ecosystem.)  அந்தத் தனித்தன்மையை இழக்கும் மக்கள் வேற்று மொழிகளில் புலமை பெற்று மீண்டும் வளருவதற்குப் பல நூற்றாண்டுகள் கூட ஆகலாம். அல்லது அவர்கள் தங்கள் இடத்தை இழந்து என்றென்றும் தாழ்ந்தும் போகலாம்.

9. ஆதிக்க மொழிகளில் புலமை பெற்றவர்களுக்கு அவற்றின் ஆதிக்கத்தை வலியுறுத்துவதில் தன்னலம் இல்லாமலில்லை.  ஆனாலும், கலிஃபோர்னியா
பர்க்கெலிப் பல்கலையின் தமிழ் இருக்கைத் தலைவர் பேரா. ஜோர்ஜ் ஹார்ட்
அவர்கள் குறிப்பிடுவது போல, தாய்மொழியில் பயிலாமல் ஆங்கில
வழிப்பள்ளிகளில் படிக்கும் தற்காலத் தமிழர்கள் பலர் ஆங்கிலத்திலும் சரி,
தமிழிலும் சரி, வேறு எந்த மொழியிலும் சரி, நுட்பமான கருத்துகளைத் தெளிவாக எடுத்துச் சொல்லும் திறமையை இழந்து வருகிறார்கள். இந்த இழப்பைத் தடுக்கத் தமிழ்வழிக் கல்வி தேவை. அது மட்டுமல்ல தனித்தமிழிலும் நுட்பமான செய்திகளை எடுத்துச் சொல்லும் திறமையையும் வளர்க்க வேண்டும்.

10. தனித்தமிழ்க் கலைச்சொல்லாக்கம் என்பது புலவர்களின் விளையாட்டுக்
களமாக இருக்கக் கூடாது.  புலவர்கள் வானத்தை வில்லாய் வளைத்துக் கயிறு
திரிக்கக் கூடிய திறம் பெற்றவர்கள்.  ஆங்கில மொழிச் சொற்களும்
தமிழிலிருந்து கிளைத்தவை (”ஞாலத்தின் முதல் மொழி தமிழ் மொழி”) என்பதை நிறுவதற்காக ஆங்கில மொழியின் ஒலியொப்புமை பெற்ற தமிழ்க் கலைச்சொற்களை அவர்கள் படைப்பது நம்மில் பலரையும் ஈர்க்கலாம்.  ஆனால், தமிழில் கலைச்சொற்களைப் படைப்பதின் அடிப்படை நோக்கம், தமிழ் மட்டுமே தெரிந்த தமிழர்களுக்கும் அவர்களுக்குப் பழக்கமான மொழியின் வேர்ச்சொல்லிலிருந்து படைக்கும் கலைச்சொற்கள் புரிய வேண்டும் என்பதே.  அதைப் பொதுவாகத் தமிழ் மட்டும் தெரிந்த தமிழர்களிடமிருந்து கற்றுக் கொள்வதே நல்லது.  நல்ல கலைச்சொற்களைப் பரப்புவது நம் கடமை.

கிரந்த எழுத்துத் திணிப்பு பற்றிய பார்வை, தமிழர்களுக்குத் தம் மொழி,
பண்பாடு, அடையாளம் பற்றிய புத்துணர்வையும், புதுக் கருத்துகளையும்,
தன்னம்பிக்கையையும் கொடுப்பது நல்லது.  தமிழர்கள் எதைக் கண்டும் அஞ்ச
வேண்டியதில்லை.  நம் மொழியின் ஆளுமை நம்மிடம் இருக்கும்வரை பிற மொழி, பிற ஒலிகள், பிற எழுத்துகளின் ஊடுருவலைத் தடுக்க நாம் தொழில்நுட்பங்களைக் கேடயமாகப் பயன்படுத்தத் தேவையில்லை.  அது வெறும் இடைக்காலத் தடை மட்டுமே. யூனிக்கோடு நுட்பக் குழுவின் முடிவுகள் எதுவாக இருப்பினும், அதனால் மட்டும் தமிழின் வளர்ச்சியோ தளர்ச்சியோ தீர்மானிக்கப் படப் போவதில்லை.  தமிழின்
தொடர்ச்சியும், வளர்ச்சியும், தமிழில் புலமை பெற்ற தமிழர்கள் கையில்
மட்டுமே.  தமிழைப் பற்றிப் பெருமைப் பட வைக்கும் படைப்புகளால் மட்டுமே.

இந்த நம்பிக்கை இருக்கும் வரை,

சென்றிடுவீர் எட்டுத் திக்கும்
கலைச்செல்வங்கள் யாவும் கொண்டிங்கு சேர்ப்பீர்

என்ற பாரதி கண்ட தமிழ்த்தாயின் கட்டளையை நாம் பாங்காக நிறைவேற்றித் தமிழன்னையை

“புகழ் ஏறிப் புவிமிசை என்றுமிருப்பேன்”

என்று பெருமைப் படச் செய்வோம்.

13 comments:

முனைவர் மு.இளங்கோவன் said...

மணி ஐயா,
பதிவுக்கு நன்றி
தாங்கள் மாநாட்டில் கலந்துகொண்டு காட்சி வழி வகுப்பெடுக்க வேண்டும் என்பது என் விருப்பம்.

இன்னும் அடிப்படைப் புரிதல்கள் பல எளியேன் உள்ளிட்ட அனைவருக்கும் தேவையாக உள்ளது.

கற்றுக்கொள்ள ஆர்வமாக உள்ளோம்.
நுட்பம் தெரிந்தவர்கள் விளக்க வேண்டும்.

மு.இளங்கோவன்
புதுச்சேரி

வே. இளஞ்செழியன் said...

வணக்கம்.

டென்மார்க் தமிழகத்தைவிட ஏறத்தாழ ஆறு மடங்கு சிறியது. மக்கட் தொகையோ 55 இலட்சம்தான். இருப்பினும், அவர்களால் அவர்களின் தாய்மொழியான டேனிஷைத் தக்க வைத்துக் கொள்ள முடிகின்றது. டென்மார்க்கைப் பொறுத்தவரை எங்கும் எதிலும் டேனிஷ்தான்! அனைவருமே ஆங்கிலம் பயில்கின்றனர்; ஆனால் யாரும் அம்மொழியில் அவர்களுக்கிடையில் உரையாடுவதில்லை. எழுதுவதில்லை.

நீங்கள் நாமொரு சிறுபான்மை இனம் என்று கூறியதால் இவ்வாறு எழுதுகிறேன். நாம் சிறுபான்மை இனம் அல்ல. அவ்வாறு குறைத்து மதிப்பிட்டுக் கொள்கிறோம். தமிழ் மட்டுமே கற்றால் எதிர்காலம் இல்லை என்கிறோம். ஆங்கிலம் தேவை என்கிறோம். உங்கள் நாட்டில் இந்தியும் எங்கள் நாட்டில் மலாயும் தேவை என்கிறோம். ஆனால் உலகெங்கிலும் வாழும் மக்களில் எத்தனை விழுக்காட்டினர் பன்மொழி புலமை பெற்றிருக்கின்றனர்? தவிர்த்து, அத்தகைய புலமை இருந்துவிட்டால்மட்டும் மேம்பாடு வாய்த்து விடுமா என்ன?

உங்களது ஏனைய கருத்துகளை ஏற்கிறேன்.

மணி மு. மணிவண்ணன் said...

நண்பர் இளஞ்செழியன்,

நான் தமிழர்கள் சிறுபான்மையினர் என்று சொன்னது எண்ணிக்கையில் அல்ல. பேரா. குழந்தைசாமி அவர்கள் அடிக்கடி சொல்வது போல “தமிழர்கள் ஒரு மொழியினர், பல நாட்டினர், ஆனால் எல்லா நாடுகளிலும் சிறுபான்மையினர்.” டென்மார்க் சிறிய நாடாக இருப்பினும் டேனிஷ் மொழிக் குடியினர் தம்மையே ஆளும் உரிமை பெற்ற தனிநாட்டினர். தமிழர்களுக்கு என்று ஒரு நாடு இல்லை.

கல்வெட்டு ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் குறிப்பிடுவது போல, பண்டைத் தமிழர்கள் தனியுரிமை பெற்றிருந்ததனால்தான் அவர்களால் தம் மொழிக்கென ஒரு எழுத்துமுறையை உருவாக்க முடிந்தது. கன்னடமும், தெலுங்கும் அப்போதே இருந்த போதிலும் அவற்றிற்கு என்று எழுத்துகள் நெடுங்காலத்துக்கு உருவாகாமல் இருந்ததற்குக் காரணம் அவர்கள் தனியுரிமை பெறாமல் ஏனைய மொழி பேசுவுவோருக்குக் கீழ் வாழ்ந்ததே.

தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு உரிமை இருப்பினும் நீதிமன்றங்களில் தமிழ் இல்லை. தமிழ் மட்டும் தெரிந்த தமிழனால் இன்று தமிழ்நாட்டிலே கூட தனித்து வாழ முடியாது. தமிழ்நாட்டிலே தமிழ் படிக்காமலேயே பட்டப்படிப்பு வரை படிக்கலாம். இங்கே பொதுமக்களோடு ஊடாடும் துறையில் இருக்கும் அரசு அதிகாரிகளுக்குக் கூடத் தமிழ் படித்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இதற்குக் காரணம் இந்திய அரசு மட்டுமல்ல. தமிழ்நாட்டை ஆண்ட, ஆளும் தமிழக அரசுகளும்தான். அதனால்தான் தமிழர்கள் இங்கும் சிறுபான்மையினர் என்கிறேன்.

மணி மு. மணிவண்ணன் said...

நண்பர் இளஞ்செழியன்,

எனது ஏனைய கருத்துகளை ஏற்பதற்கு மிக்க நன்றி.

R. said...

அன்பான மணிவண்ணன்,

சிறப்பான, தேவையான, நாமெல்லாம் உறுதியாக எண்ணி செயலாற்றவேண்டிய வரிகள் கட்டுரையில் உள்ளன.
எண் 6, 7, 8 என்ற பத்திகளில் தெரிவித்தவற்றை மேலும் விரித்தும் விளக்கியும் பலரும் பயன்பெறும் வகை செய்வோம்.

நல்வாழ்த்து.
நன்றி
அன்புடன்
ராதாகிருஷ்ணன்
ஹூசுட்டன்
ஜனவரி 10, 2011

மணி மு. மணிவண்ணன் said...

அன்புள்ள பேரா. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு,

உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி. ஆவன செய்வோம்.

அன்புடன்,

மணி

வே. இளஞ்செழியன் said...

மணிவண்ணன் ஐயா, வணக்கம்.

தமிழர்க்கென்று நாடொன்று இல்லை என்ற கூற்றில் எனக்கு உடன்பாடில்லை. தமிழகத்திற்கு அரசாண்மை இல்லாதிருப்பினும், ஏனைய பல விதங்களில் -- குறிப்பாக மொழி சார்ந்த விடயங்களில் -- அதனால் ஒரு நாடு போல இயங்குவதற்கான அனைத்து வசதிகளும் உள்ளன. பின்னர் ஏன் அவ்வாறு இயங்கவில்லை, அல்லது தயங்கித் தயங்கியே இயங்குகின்றது?

தமிழகத்தைத் தொலைவிலிருந்தும், வெளியிலிருந்தும் நோக்கும் என்னை விட அங்கு வசிக்கும் உங்களுக்கு இக்கேள்விக்கான பதில் மிகத் தெளிவாகத் தெரிந்திருக்கக் கூடும். நாம் சிறுபான்மையினர்; நமது எதிர்காலத்தை முடிவு செய்யும் ஆற்றலை மற்றவர்கள் கொண்டிருக்கின்றனர்; மக்களிடையே அறிவு முதிர்ச்சியில்லை; சிந்தனைத் திறனில்லை; நமக்கிடையே உள்ள பிரிவினை; ஒத்துழைப்பின்மை. இதுபோன்ற காரணங்களைச் வெவ்வேறு சுழல்களில் யார் யாரோ கூற நான் கேட்டிருக்கிறேன். அவற்றில் உண்மையிருக்கலாம். அனால், அவற்றைப் பற்றி அதிக கவலை கொள்வதாலோ அவற்றிற்குப் பூதாகர உரு தருவதாலோ நமக்கு எவ்விதப் பலனுமில்லை என்பதே என் கருத்து. (இத்தளத்தில் நீங்கள் வடித்துள்ள கட்டுரைகளைப் பார்க்குங்கால், நீங்களும் இக்கருத்திற்கு ஒத்த கருத்துடையவர் என்றே நம்புகின்றேன்.)

எனது நாடான மலேசியாவை எடுத்துக் கொள்வோம். இங்கு என் மூதாதயர்கள் குடியேறி 100 ஆண்டுகளுக்கு மேலாகிறது. (யாரும் குறிப்பு வைத்துக் கொள்ளாததாலும் ஜப்பானியர் காலத்தில் பலர் இறந்து விட்டதாலும் யார் எப்போது எங்கிருந்து இங்கு குடியேறினர் என்று சரியாகச் சொல்ல முடியவில்லை.) இருப்பினும் எனது தொடக்கக் கல்வியைத் தமிழில்தான் கற்றேன். எனது மகனும் தமிழில்தான் கற்பான். ஏனென்றால் அதற்கான வசதிகள் இங்கு உள்ளன.

மலேசிய மக்கட் தொகையில் 7.4% (அதாவது 20 இலட்சத்திற்கும் குறைவான) மக்களே இந்திய வழிந்தோன்றல்களாக இருப்பினும், இங்கு 523 தமிழ்ப்பள்ளிகள் இருக்கின்றன. ஆண்டொன்றுக்கு இப்பள்ளிகளுக்காக, இப்பள்ளிகளில் பயிலும் ஒரு இலட்சம் இந்தியக் குழந்தைகளுக்காக, அரசாங்கம் ரிம. 425 மில்லியனை (எறத்தாழ ரூ 6,150 கோடி) செலவிடுகின்றது. இத்தனைக்கும் கடந்த ஐம்பத்து மூன்று ஆண்டுகளாக நாட்டை ஆளும் அரசியல் கட்சியான அம்னோ ஒரு இனவாதக் கட்சி; இங்கு வாழும் இந்தியர்களையும் சீனர்களையும் ஒடுக்கிவைத்து ஆளும் கட்சி. இங்கும் சாக்கடை அரசியல் இருக்கிறது; அதற்கேற்ற அரசியல்வாதிகளும் உளர். தமிழால் என்ன பயன்; தமிழ் சோறு போடுமா; நாடு கடந்து வந்தபின் பழசெல்லாம் எதற்கு என்று கேள்விக் கணைகள் தொடுப்போரும் உளர். இலட்சக் கணக்கில். தமிழை மருந்துக்கும் அறியாத, தங்களை தமிழரென்றே அடையாளப் படுத்திக்கொள்ளாத நம்மினத்தவர்களும் அதிகம்.

இருந்தும் தமிழ் இன்றுவரை இங்கு நிலைத்திருக்கின்றது.

ஆற்றாமையைப் பற்றிக் கவலை கொள்வதைச் சற்றே குறைத்து, நடக்க வேண்டிய காரியங்களில் நாம், சமூகத் தலைவர்கள், தங்கள் எண்ணங்களைச் செலுத்தினரென்றால் நிறைய சாதிக்கலாம். அயல் நாட்டு தமிழர்களாகிய நாங்களும் பயன் பெறுவோம்.

எதிர்ப்பார்த்ததைவிட அதிகம் எழுதி விட்டேன். மன்னிக்க வேண்டுகிறேன். நிறுத்திக் கொள்கிறேன்.

அன்புடன், - இ.

மணி மு. மணிவண்ணன் said...

நண்பர் இளஞ்செழியன்,

நல்ல கருத்துகளை முன் வைத்துள்ளீர்கள். வரவேற்கிறேன்.

வன்பாக்கம் விஜயராகவன் said...

"
தமிழில் கூடுதலான ஒலிகளைக் குறிக்க மீக்குறிகளைப் (diacritics) புழங்கினாலும் சரி, புதிய எழுத்துகளைப் படைத்தாலும் சரி, கிரந்த எழுத்துகளைப் புழங்கினாலும் சரி, தமிழின் இலக்கணவிதிகளை மாற்ற வேண்டி வரும்; மொழியின் தன்மையும் மாறி விடும்"

மணிவண்ணன்

தமிழின் இலக்கணவிதிகள் எப்பவோ மாறிவிட்டன. தொல்காப்பியம்/ நன்னூல் பூஜையினால் நாம் தமிழின் இலக்கணங்களை புரிந்து கொள்ளவில்லை, அதற்கு ப்ரயத்னமும் படவில்லை.

ஒரு வேளை பகுத்தறிவு பரவி, மொழி நாம் பேசும், கருத்து பறிமாறும் ஆயுதம்தான் , நாம் எப்படி மற்றவர்களை (தமிழ்) பேசும் போது புரிந்து கொள்ள முடியுது என்ற ஊக்கத்தில் இருந்து இலக்கணத்தை பரிசீலித்தால், அது பெரிய `மாற்றம்` ஆக இருக்கும். இந்த மாற்றம் இலக்கண மாற்றத்தால் வருவது அல்ல, எப்பவோ காலாவதி ஆகிப்போன இலக்கணங்களை, இலக்கண புத்தகங்களை உபயோகமற்றது என தூக்கி எறிவதால். அதில் அதிக கிரந்த எழுத்துகள் ஒரு சிறிய பங்குதான் இருக்கும்.

தமிழுக்கு தேவையானது இன்னும் கிரந்த எழுத்துகளை சேர்த்து நவீனதமிழ் ஆக்குவது. அது எப்படி இருக்கும் என தெரியணுமானால் , இங்கே பார்க்கலாம்
http://www.virtualvinodh.com/tamil-grantha

100 வருடங்களுக்கு முன்பேயே ஒருவர், அப்படி இலக்கியத்தையே படைத்தார். இந்த புத்தகத்தை, நன்றாக படித்து,கிரகித்து லாபம் பெருக.

http://www.archive.org/stream/bhojacharitrama00sastgoog#page/n4/mode/2up

தனித்தமிழ் புல்லுருவி வாழ்க்கைதான் நடத்த முடியும், அதாவது ஒரு மக்களுக்கு புரியுமான, உபயோகமான புத்தகங்களை எழுதமுடியாது, மக்களிடம் புழங்கும் தமிழை வசைவு செய்துதான், தன் இருத்தலை ஜஸ்டிஃபை செய்யும். மற்றவர்கள் எழுதும் தமிழை `தனிதமிழாக` எழுதிதான் பிழைக்க முடியும்.

அப்படி தனித்தமிழை வால் பிடித்ததனால்தான் (அதில் நீங்களும் சேர்த்தி) இன்று கல்லூரிகளிலும், சமுதாயத்திலும் தமிழின் புழக்கம் குறைந்து விட்டது.


விஜயராகவன்

மணி மு. மணிவண்ணன் said...

அன்புள்ள வன்பாக்கம் விஜயராகவன் அவர்களுக்கு,

தங்கள் கருத்துகளுக்கு நன்றி. கல்லூரிகளிலும் சமுதாயத்திலும் தமிழின் புழக்கம் குறைந்து விட்டது என்று எப்படிக் கூறுகிறீர்கள்? தமிழ்நாட்டில் வாழும் எனக்கு அப்படித் தெரியவில்லை.

தனித்தமிழைப் பற்றிய உங்கள் பன்னெடுங்காலக் கருத்து எனக்கு நன்றாகத் தெரிந்ததுதான். இருபதாண்டுகளாக வேறுபட்டிருக்கும் நாம் இருவரும் நம் கருத்துகளை மாற்றிக் கொள்ளப் போவதில்லை!

கொச்சை வழக்கு, உயர்நடை வழக்கு என்பது தமிழுக்கு மட்டும் உரியதல்ல. நீங்கள் கொச்சைப் பேச்சையே தற்காலத் தமிழ்மொழியென ஏற்றுக் கொண்டு எழுதச் சொல்பவர். இருப்பினும் பாரதியின் உரைநடைத் தமிழைவிட உங்கள் தமிழ்நடை மேலும் தனித்தமிழ் நடையாக இருக்கிறது என்பதற்குக் காரணமே தனித்தமிழ் இயக்கம்தான்.

ஜெர்மன் மொழி கலந்த யிட்டிஷ் மொழியைப் பேசி வந்த யூதர்கள் இன்று இஸ்ரேலில் அவர்கள் பழைய எபிரேய மொழியை மீட்டெடுத்து விட்டார்கள்.

அரபு மொழியிலும் செம்மொழி, கொடுமொழி வேறுபாடு உண்டு. பல்வேறு அரபு நாடுகளில் பேசும் அரபு மொழிகளுக்கும் இவர்கள் எல்லோருமே கற்கும் செம்மொழி அரபிக்கும் வேறுபாடுகள் உண்டு. ( http://en.wikipedia.org/wiki/Arabic_language ). அரபு மொழியில் (எபிரேய மொழியிலும்) உயிரெழுத்துகளைக் குறிப்பது இல்லை. அதற்கு என்று மீக்குறிகளை உருவாக்கி இருந்தாலும், அவற்றை மக்கள் புழங்குவது இல்லை.

அரபு, பாரசீக மொழிகளோடு கலந்த “பஜார்” மொழியாக இருந்த இந்துஸ்தானியை இன்று பிறமொழிச் சொற்களை நீக்கி, சமஸ்கிருத வேர்ச்சொற்களைக் கூட்டி இந்திய அரசின் அதிகார மொழியான இந்தி என்று மிடுக்கு மொழியாக ஆக்கியிருக்கிறார்கள். இது தேவையா இல்லையா, வெல்லுமா வெல்லாதா என்பது வேறு.

ஆனால், தனித்தமிழ் என்பது இங்கே மட்டும் பூத்ததல்ல. தனி இந்திக்கு இந்திய அரசு அளிக்கும் ஆதரவைத் தனித்தமிழுக்குத் தமிழக அரசு அளிக்கவில்லை எனலாம்.

ஹிந்துஸ்தானிக்கும் உருதுக்கும் எழுத்து மட்டும்தான் வேறு. முன்னது தேவநாகரி, பின்னது அரபி. விந்தை என்னவென்றால், சமஸ்கிருதம மயமாக்கப் பட்ட இந்தி மொழியின் ஆதரவாளர்கள் பலர் தனித்தமிழின் எதிராளிகள்!

வன்பாக்கம் விஜயராகவன் said...

அன்புள்ள மணிவண்ணன்

நீங்கள் ஒரு பொய்யான கொச்சை <> உயர்நடை என்ற இருமத்தை வைத்து, வாதம் செய்கின்றீர்கள். கொச்சை என்றால் க்ரியாவின் அகராதி தரும் அர்த்தம்:

கொச்சை பெ. (-ஆக, -ஆன) 1: (எழுத்தில் அல்லது பண்பட்டவர்களின்) நடைமுறையில் ஏற்றுக்கொள்ளப்படாத மொழி; slang. கொச்சையாகப் பேசுகிறார்./ கொச்சை நடையில் எழுதுகிறார். 2: ஆபாசம்; obscenity; vulgarity. அரைகுறை ஆடைகளுடன் கொச்சையான நடனக் காட்சிகள் திரைப்படங்களில் இடம்பெறுகின்றன.

இப்படி நீங்கள் பேசர மொழியை ப்ரெஜுடிசாகா, தாழ்வாக பார்க்கின்றீர்கள்,நீங்ளோ, நானோ, மத்தவங்களோ வழக்கமா பேசர்து ஸ்லாங்க் இல்ல. இப்டிதான் எல்லாரும் பேசரொம், அதனால அது கொச்சையாய்டாது.

தமிழ் பழக்கம் குறையாகாத்தனாலையா எல்லோரும் ஆங்கில பள்ளி, தமிங்கிலம், என மாரடைத்துக் கொள்ராங்க !

புது ஹீப்ரூவின் கதை வேர. யூதர்கள் யூத அடிப்படையில் ஒரு நாடுனா, ஒரு மொழி என்பது உடனே வந்துடுத்து. இஸ்ரேல் போன யூதர்கள் 20-30 மொழிகளை தாய்மொழியா கொண்டவஙக, மேலும் பெர்சிக்யூஷன் நால, இஸ்ரேல் குடியேரினாங்க, ஒரே மொழி - புது ஹீப்ரூ, ஒரு தேசத்தை பந்துவாக்கியது, அதே சமயம் பழைய தேச ஐடெண்டிகளையும், துக்க சரித்திரத்தையும் குப்பையில் போட்டது. புது ஹீப்ரூ ஐரோப்பிய, அரேபிய மொழியிலிருந்து நிறைய கடன்வாங்கிற்கு, அங்கு தனி ஹீப்ரூ இயக்கம் ஒண்ணும் இல்லை.

தமிழையும் ஹீப்ரூவையும் கம்பேர் பண்ணாதீர்கள். இதன் சரித்திர பின்புலங்கள் வேற வேர, யூதர்கள் டயஸ்போராவாக - பரதேசிகளாக - இருந்தனர். தமிழர்கள் எதிர் நேர்.


தமிழயும், அரேபிக்கையும் கம்பேர் செய்யலாம். இரண்டிலேயும் பயங்கரமான டிக்ளோசியா. அரேபிய டிக்ளோசியானாலத்தான் அரபு தேசங்கள் தலிபான், அல்கைதா, பயங்கரவாதிகள், முல்லாக்கள், ஷேக்குகள், சர்வாதிகாரிகள் , போலீஸ் அரசாங்கள், ராணுவ அதிகாரங்கள் கையில் சிக்கி ஜனநாயகம், பகுத்தறிவு , விஞ்ஞானம் முதயவத்திக்கு எதிராக இருக்கு. எண்ணை ஏற்றுமதி இருக்கவே ஒரளவு பிழைத்தார்கள். அப்படி இருந்தும் 40 அரபு நாடுகள் சேர்ந்தும் டென்மார்க் அளவு கூட தொழில் உற்பத்தி இல்ல, எல்லா அரபு நாடுகலையும் சேத்து, பொடி நாடு இஸ்ரேல் சுண்டு விரலில் இழுத்து விட்டது.

தமிழர்களுக்கு அரேபிக் நெகடிவ் மாடல் , அதாவது என்ன செய்யக்கூடாது, எப்டி இருக்கக்கூடாது என.

தனித்தமிழால் ஊக்குவிக்கப்பட்ட டிக்ளோசியா, ஓரளவு தமிழர்களின் சமீபகால அரசியல் இம்போடன்சுக்கு காரணம்.


பிற பின், என்னோட அண்னன் இன்னிக்கு மெட்ராசில் மரணம் அடைந்தார், உடனே மெட்ராசுக்கு கிளம்பிண்டு இருக்கேன். அதனால் சில காலத்துக்கு ரொம்ப எழுத மாட்டேன்


விஜயராகவன்

மணி மு. மணிவண்ணன் said...

விஜயராகவன்,

உங்கள் அண்ணன் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்.

இந்த விவாதத்தை வேறொரு நாள் தொடருவோம்.

வன்பாக்கம் விஜயராகவன் said...

thanks for the condolenses.

I think I have sent the same msg more than once since it looked like it never went. Any further simlar looking post from me , you can delete

Vij