பல கொள்கைகளில் நான் அவரோடு இணங்கியிருந்தாலும், வேறு பல கொள்கைகளில் அவரோடு மாறு பட்டு வாதித்து வந்திருக்கிறேன். கருத்து வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் முதிர்ச்சியான கருத்துகளைப் பாராட்டுபவர் அரசு.
தஞ்சையில் சனவரி 9 அன்று நடக்கவிருக்கும் ஒருங்குறி மாநாட்டை அன்பர் அரசு அவர்கள் முன்னின்று நடத்தப் போவதாக அறிந்து மிக மகிழ்ந்தேன். மாற்றுக் கருத்துகளை முன்னிறுத்தும் அவர் நடத்தும் மாநாட்டில் கலந்து கொண்டு தொழில்நுட்பம், கணினி, யூனிக்கோடு, குறியீடுகள், கிரந்தம், தமிழ்க் கல்வெட்டுகள், போன்ற எண்ணற்ற தலைப்புகளைப் பற்றி ஒரு புதிய தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற அவர் வேண்டுகோள் என்னைத் திணறடித்துக் கொண்டிருக்கிறது. வேலைப் பளு, கிரந்தம் தொடர்பான தொழில்நுட்ப அறிக்கை தயாரிப்பு, என்று பல அழுத்தங்களுக்கு இடையே வெளியூர் சென்று மாநாட்டில் கலந்து கொள்ள இயலுமா எனத் தெரியவில்லை. மாநாட்டுக்கு ஏற்ற கட்டுரை படைக்கவும் நேரம் இல்லாத நிலையில் என்னுடைய வலைப்பதிவுகளில் ”தொன்மைத் தமிழின் தொடர்ச்சி” என்ற கட்டுரையை மாநாட்டு மலரில் வெளியிட அனுமதி கோரியுள்ளார்.
மாநாட்டுக்குக் கட்டுரை படைக்க நேரமில்லையே தவிர, மாநாட்டுக் கட்டுரைக்கான குறிப்புகளைத் தயாரித்து வைத்திருந்தேன். அதை அவருடன் பகிர்ந்து கொண்டேன். மலருக்கு ஏற்ற வடிவத்தில் இல்லாமல் இருப்பதால் அதை அவரால் பதிப்பிக்க இயலுமா எனத் தெரியவில்லை. வலைப்பூக்களின் வசதியே முதிராத எண்ணங்களையும் பதிவு செய்ய முடிவதுதான் என்பதால், அக்குறிப்புகளை இங்கே வெளியிடுகிறேன்.
கட்டுரைக்காக நான் எண்ணியிருந்த கருத்துகள் பின் வருமாறு:
1. யூனிக்கோடு குறியீட்டுக் கட்டங்களுக்குள் இடம் பெற்றிருப்பவை வெறும் எண்கள் மட்டுமே. எதை, யார், எப்போது, எப்படிப் புழங்குகிறார்கள் என்பதைப் பொருத்தே ஒரு மொழியின் பயன்பாடும், அடையாளமும் அமையும். யூனிக்கோட்டுக் கட்டங்களில் உள்ள எண்கள் அல்ல.
2. தற்போது தமிழ்க் கட்டத்தில் இருப்பது போல கிரந்த எழுத்துகளைத் தமிழ் முறைப்படி புள்ளி வைத்து வரிசையாக எழுதும் முறை வேறு, வடமொழி முறைப்படிப் புள்ளி இல்லாமல் ஒன்றின் மேல் ஒன்றாக கிரந்த எழுத்துக்களை அடுக்கி எழுதுவது வேறு. தற்போது இந்திய அரசு யூனிக்கோடு நுட்பக் குழுவுக்கு முன்மொழிந்திருப்பது அடுக்கு முறை கிரந்தக் குறியீட்டைத்தான்.
3. தமிழ் எழுத்து முறையின் எளிமையும், நளினமும், நுட்பமும் புள்ளி வைத்து
வரிசையாக எழுதும் முறையில் அடங்கி இருக்கிறது. இந்த முறையால்தான்
தமிழுக்குள் நுழைந்த ஐந்து கிரந்த எழுத்துகள் தமிழுக்குள் நிலை பெற்றன. இது வரை தமிழில் இல்லாத வேறு கிரந்த எழுத்துகளைத் தமிழ் முறைப்படி எழுத யாரும் முன் வராதவரை, மேற்கொண்டு தமிழ் நெடுங்கணக்குக்குள் கிரந்த எழுத்துகள் நுழைவதற்கு வாய்ப்பில்லை.
4. தமிழ் இலக்கண முறைப்படி பிறமொழிச் சொற்களும், பிறமொழி ஒலிகளும் தமிழுக்கு ஏற்ற வடிவங்களையும் ஒலியையும் பெற்றே வழங்குகின்றன. தமிழ் வழிப்பள்ளிகளில் படித்த தமிழ் மட்டும் தெரிந்த பல தமிழர்களின் வழக்கமும் தமிழ் இலக்கண முறைப் படியே இருக்கிறது. காட்டாக, தமிழ்ச் சொற்கள் மெய்யெழுத்தில் தொடங்கா. க்ரியா, ஷ்ரேயா, ஷ்வேதா, ஸ்கூல், ஸ்லேப் போன்ற பிறமொழிச் சொற்களைத் தமிழர்கள் பேசும்போது முறையே கிரியா, சிரேயா, சுவேதா, இசுக்கூல், சிலேப்பு என்பது போல் வழங்குகிறார்கள். இப்படிப் பேசுவதும் எழுதுவதும், படிநிலைச் சமுதாயத்தில் ஆங்கிலமும் பிறமொழிகளும் தெரிந்த மேட்டுக்குடிகளுக்கும், அவர்களோடு தம்மை இணைத்துக் கொள்ளத் துடிக்கும் நடுத்தரக் குடிகளுக்கும் ஒப்புவதில்லை. அவர்கள் இப்படிப் பேசுவதை எள்ளுகிறார்கள். இவர்களில் சிலருக்குப் பிறர் தம்மையும் தமிழ் மட்டுமே தெரிந்த “தற்குறிகள்” எனக் கருதி விடுவார்களோ என்ற அச்சம் உண்டு. இவர்கள்தாம் பிறமொழி ஒலிப்புகளைத் தமிழில் அப்படியே கொண்டு வர வேண்டும் என்று தமிழில் இல்லாத ஒலிப்புகளுக்குப் புதிய குறியீடுகளைக் கொண்டு வர முயல்கிறார்கள்.
இது தொடர்பாக, யூனிக்கோடு நுட்பக் குழுவுக்குக் கிரந்தம் தொடர்பான கருத்து
வழங்கும் மனு ஒன்றில் காஞ்சியைச் சேர்ந்த சமஸ்கிருத விற்பன்னர்கள் சிலர்
தமிழில் குறிப்பிட்டிருக்கும் பகுதியை மேற்கோள் காட்ட விரும்புகிறேன்:
"எந்த லிபியும் தனது இயற்கையான மொழியல்லாத மற்ற மொழிகளைக் குறிப்பதில் அந்தந்த மொழிகளின் இயற்கையான லிபிகளுக்கு ஸமமான ஸாமர்த்யம் பெற்றிருக்கவியலாது. எடுத்துக் காட்டாக read red எனப்படும் வெவ்வேறு ஆங்கிலச் சொற்கள் பாரதீய லிபிகளில் रेड् ரெட் என்பது போல ஒரே முறையில்தான் எழுதப்பட வேண்டியிருக்கின்றன. ஆக இந்த சொற்களை பாரதீய லிபிகளில் எழுதினால் எழுத்திலிருந்து பொருள் வேற்றுமை விளங்காது. இது யூனிகோட் அதிகாரிகளுக்குத் தெரிந்தே இருக்கும். ஆக க்ரந்த லிபியானது தனது இயற்கை மொழியான ஸம்ஸ்க்ருதத்தைத் தவிர்த்த மற்ற மொழிகளைக் குறிப்பதில் மலையாள லிபியையோ அல்லது வேறு எந்த லிபியையோ ஒத்த ஸாமர்த்யத்தைப் பெற்றிருக்கும்படி க்ரந்தத்தில் எழுத்துக்களைச் சேர்த்துக்கொண்டே போவதில் பொருளில்லை.”
- தமிழ்நாட்டு க்ரந்த பயனீட்டாளர்கள் சார்பில் வித்வான்கள், 2010-06-20
யூனிகோடு அதிகாரிகளுக்கு ”க்ரந்த லிபி பயன்படுத்தும் வித்வான்களின்
வேண்டுகோள்” Unicode document L2/10-233
சமஸ்கிருத வித்துவான்கள் கிரந்த எழுத்துமுறைக்குச் சொல்வது தமிழ் எழுத்து
முறைக்கும் முற்றிலும் பொருந்தும் என்பது எனது தாழ்மையான கருத்து.
5. தமிழில் கூடுதலான ஒலிகளைக் குறிக்க மீக்குறிகளைப் (diacritics) புழங்கினாலும் சரி, புதிய எழுத்துகளைப் படைத்தாலும் சரி, கிரந்த எழுத்துகளைப் புழங்கினாலும் சரி, தமிழின் இலக்கணவிதிகளை மாற்ற வேண்டி வரும்; மொழியின் தன்மையும் மாறி விடும். இது எழுத்துச் சீர்திருத்தத்தினால் வரும் மாற்றங்களை விட மிகப் பெரியது. இத்தகைய மாற்றம் வேண்டுமா, வேண்டாமா, அதனால் வரும் மாற்றங்களால் தமிழ் மொழியின் தொடர்ச்சிக்கு என்ன இடையூறு வரும், இத்தகைய மாற்றங்களால் வருங்காலத் தமிழர்களின் வாழ்வுக்கு ஏதும் முன்னேற்றம் வருமா போன்ற கேள்விகளைத் தமிழர்கள் - உணர்ச்சி வயப்படாமல் - கலந்து பேசித் தீர்மானிக்க வேண்டும். எங்களில் சிலர் இத்தகைய மாற்றம் தேவையில்லை, இதனால் இடையூறு வரும் என்று கருதுகிறோம். ஆனால், இதற்கு மாற்றுக் கருத்து உள்ளவர்கள் தக்க ஏரணங்களைக் காட்டினால் அவற்றை ஏற்றுக் கொள்ளவும் அணியமாய் இருக்கிறேன்.
6. யூனிக்கோடு குறியீட்டில் வரும் மாற்றங்களை நிறுத்துவது என்பது இன்று தமிழர்கள் கையில் இல்லை என்பதுதான் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய செய்தி. தமிழுக்கு உரிய தரப்பாடுகளை உருவாக்கும் உரிமை இன்று தமிழர்களிடம் இல்லை என்பதே கசப்பான உண்மை. ஆனாலும், நமது கருத்துகளை உரிய இடங்களில் வைத்து நம் உரிமைக்காக வாதாடும் உரிமையை நாமே விட்டுக் கொடுத்தாலன்றி அது நம்மிடம்தான் இருக்கிறது. இத்தகைய அரங்குகளில் தொழில்நுட்ப அறிவும், மொழியறிவும், வரலாற்று ஆவணங்கள் பற்றிய அறிவும்தான் நாம் செய்ய வேண்டியவற்றிற்குத் தேவையானவை. மேடைப் பேச்சுகளும், முழக்கங்களும் நமக்குள்ளே உணர்வுகளைத் தூண்டி விடுவதை விட்டுவிட்டு நமக்குத் தேவையான செய்திகளை விளக்கி, வருங்காலத்தைப் பற்றிய முன்னெச்சரிக்கை அளித்து நமக்கு வழிகாட்ட வேண்டும்.
7. கிரந்த எழுத்துகளின் ஊடுருவலைத் தடுக்கும் தளம் தொழில்நுட்பத் தளம்
அல்ல. அது பண்பாட்டுத்தளம். ஊடகங்களிலும், வலைத்தளங்களிலும்,
மேடைகளிலும், தனித்தமிழை ஊட்டி வளர்ப்பதில் நமது வெற்றியைப் பொருத்து மட்டுமே இந்த ஊடுருவலைத் தடுக்க இயலும். ஆனால், தனித்தமிழ் என்பது ஓர் அருவருப்பான, பிற்போக்குத்தனமான, இனவெறிக் கும்பல்களின் ஈட்டியாகக் கருதும் நிலை இருக்கும் வரை தனித்தமிழ் பரவுவது கடினம். ஒரு சிறுபான்மை மக்கள், தங்களின் மொழி, பண்பாடு, தனித்தன்மை இவற்றைக் கட்டிக் காக்கும் கேடயம் தனித்தமிழ் என்பதை உணர்ந்தால் மட்டுமே தனித்தமிழ் நமக்கு அரண் சேர்க்கும்.
8. சிறுபான்மைக் குடிகளின் தனித்தன்மை இன்று உலகமயமாக்கலில் அடிபட்டுப் போய்க்கொண்டிருப்பது அந்த இனங்களுக்கு மட்டுமல்ல உலகுக்கே பெரும் இழப்பு. வெவ்வேறு சிந்தனைகள், வெவ்வேறு கோணங்கள், வெவ்வேறு பண்பாட்டு முறைகள் எல்லாம் உலகின் வருங்கால வளர்ச்சிக்கும் வளத்துக்கும் தேவையான விதைகள். எப்படி உயிர்களின் தொடர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் வேறுபாடுகள் தேவையோ அதே போல்தான் மக்களின் அறிவு வளர்ச்சிக்கும் தொடர்ச்சிக்கும் மொழிகளின் தனித்தன்மையும் தேவை. (Diversity of linguistic expression may be as important for human knowledge as biological diversity is for promoting maximum health in an ecosystem.) அந்தத் தனித்தன்மையை இழக்கும் மக்கள் வேற்று மொழிகளில் புலமை பெற்று மீண்டும் வளருவதற்குப் பல நூற்றாண்டுகள் கூட ஆகலாம். அல்லது அவர்கள் தங்கள் இடத்தை இழந்து என்றென்றும் தாழ்ந்தும் போகலாம்.
9. ஆதிக்க மொழிகளில் புலமை பெற்றவர்களுக்கு அவற்றின் ஆதிக்கத்தை வலியுறுத்துவதில் தன்னலம் இல்லாமலில்லை. ஆனாலும், கலிஃபோர்னியா
பர்க்கெலிப் பல்கலையின் தமிழ் இருக்கைத் தலைவர் பேரா. ஜோர்ஜ் ஹார்ட்
அவர்கள் குறிப்பிடுவது போல, தாய்மொழியில் பயிலாமல் ஆங்கில
வழிப்பள்ளிகளில் படிக்கும் தற்காலத் தமிழர்கள் பலர் ஆங்கிலத்திலும் சரி,
தமிழிலும் சரி, வேறு எந்த மொழியிலும் சரி, நுட்பமான கருத்துகளைத் தெளிவாக எடுத்துச் சொல்லும் திறமையை இழந்து வருகிறார்கள். இந்த இழப்பைத் தடுக்கத் தமிழ்வழிக் கல்வி தேவை. அது மட்டுமல்ல தனித்தமிழிலும் நுட்பமான செய்திகளை எடுத்துச் சொல்லும் திறமையையும் வளர்க்க வேண்டும்.
10. தனித்தமிழ்க் கலைச்சொல்லாக்கம் என்பது புலவர்களின் விளையாட்டுக்
களமாக இருக்கக் கூடாது. புலவர்கள் வானத்தை வில்லாய் வளைத்துக் கயிறு
திரிக்கக் கூடிய திறம் பெற்றவர்கள். ஆங்கில மொழிச் சொற்களும்
தமிழிலிருந்து கிளைத்தவை (”ஞாலத்தின் முதல் மொழி தமிழ் மொழி”) என்பதை நிறுவதற்காக ஆங்கில மொழியின் ஒலியொப்புமை பெற்ற தமிழ்க் கலைச்சொற்களை அவர்கள் படைப்பது நம்மில் பலரையும் ஈர்க்கலாம். ஆனால், தமிழில் கலைச்சொற்களைப் படைப்பதின் அடிப்படை நோக்கம், தமிழ் மட்டுமே தெரிந்த தமிழர்களுக்கும் அவர்களுக்குப் பழக்கமான மொழியின் வேர்ச்சொல்லிலிருந்து படைக்கும் கலைச்சொற்கள் புரிய வேண்டும் என்பதே. அதைப் பொதுவாகத் தமிழ் மட்டும் தெரிந்த தமிழர்களிடமிருந்து கற்றுக் கொள்வதே நல்லது. நல்ல கலைச்சொற்களைப் பரப்புவது நம் கடமை.
கிரந்த எழுத்துத் திணிப்பு பற்றிய பார்வை, தமிழர்களுக்குத் தம் மொழி,
பண்பாடு, அடையாளம் பற்றிய புத்துணர்வையும், புதுக் கருத்துகளையும்,
தன்னம்பிக்கையையும் கொடுப்பது நல்லது. தமிழர்கள் எதைக் கண்டும் அஞ்ச
வேண்டியதில்லை. நம் மொழியின் ஆளுமை நம்மிடம் இருக்கும்வரை பிற மொழி, பிற ஒலிகள், பிற எழுத்துகளின் ஊடுருவலைத் தடுக்க நாம் தொழில்நுட்பங்களைக் கேடயமாகப் பயன்படுத்தத் தேவையில்லை. அது வெறும் இடைக்காலத் தடை மட்டுமே. யூனிக்கோடு நுட்பக் குழுவின் முடிவுகள் எதுவாக இருப்பினும், அதனால் மட்டும் தமிழின் வளர்ச்சியோ தளர்ச்சியோ தீர்மானிக்கப் படப் போவதில்லை. தமிழின்
தொடர்ச்சியும், வளர்ச்சியும், தமிழில் புலமை பெற்ற தமிழர்கள் கையில்
மட்டுமே. தமிழைப் பற்றிப் பெருமைப் பட வைக்கும் படைப்புகளால் மட்டுமே.
இந்த நம்பிக்கை இருக்கும் வரை,
சென்றிடுவீர் எட்டுத் திக்கும்
கலைச்செல்வங்கள் யாவும் கொண்டிங்கு சேர்ப்பீர்
என்ற பாரதி கண்ட தமிழ்த்தாயின் கட்டளையை நாம் பாங்காக நிறைவேற்றித் தமிழன்னையை
“புகழ் ஏறிப் புவிமிசை என்றுமிருப்பேன்”
என்று பெருமைப் படச் செய்வோம்.