Wednesday, January 12, 2011

"ஏனோ என்னை எழுப்ப லானாய்மட மானே” - தெருக்கூத்தும் சங்கரதாஸ் சுவாமிகளும்

நவராத்திரி என்று ஒரு பழைய திரைப்படம்.

சிவாஜிகணேசன் நவரசங்களைப் பிழிந்து காட்ட ஒன்பது வெவ்வேறு வேடங்களில் நடிப்பார்.  அத்தனை சிவாஜிக்கும் ஈடாக நிற்பார் சாவித்திரி.  அந்தப் படத்தில் எனக்கு இன்றும் நினைவில் நிற்கும் காட்சி “சத்தியவான் - சாவித்திரி தெருக்கூத்து” தான்.  என்னைப் போன்ற பலர் நேரிலே தெருக்கூத்து ஒன்றைப் பார்த்திருக்க மாட்டார்கள்.  எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் போன்றோர்கள் தெருக்கூத்து மரபில் இருந்து திரைக்கு வந்தவர்கள் என்று படித்திருந்தாலும், நவராத்திரி படம் வந்த போதெல்லாம் தெருக்கூத்து கிட்டத்தட்ட மறைந்தே போய் விட்டிருந்தது.

நீங்கள் அந்தக் காட்சியைப் பார்த்திராவிட்டால், இதோ ஒரு யூ-டுயூபு சுட்டியைக் கீழே தருகிறேன்.  ஒரு எட்டு எட்டிப் பார்த்து விட்டு வாருங்கள்.
உண்மையிலேயே தெருக்கூத்து இப்படித்தான் நடந்ததா என்று தெரியாது.  ஆனால், தெருக்கூத்து பற்றி நன்றாகத் தெரிந்த பலர் அதன் படைப்பில் ஈடுபட்டிருந்தார்கள்.  அதனால், தமிழ்த்திரையுலகின் இலக்கணத்துக்கு உட்பட்டு அதிலும் ஓரளவுக்கு உண்மையிருக்கும் என்று நம்பலாம்.

சின்னத்திரையின் நெடுந்தொடர்களும், பெரிய திரையின் மைக்கேல் ஜாக்சன் கொடையில் பிறந்த குரூப் - டான்ஸ்களும் தமிழ் உள்ளங்களைக் கொள்ளை கொள்ளுவதற்கு முன்னர், தமிழகத்தில் கொடி கட்டிப் பறந்தவை இவை போன்ற இசை நாடகங்களே.  மேலை நாட்டு மரபில் ஆபரக்கள் இன்றும் செவ்வியல் மரபைச் சேர்ந்தவையாகக் கருதிப் போற்றப் படுகின்றன.  ஆனால், தொன்று தொட்டு தமிழ் மண்ணில் வந்திருக்கும் நாடகத் தமிழ் மரபில் கிளைத்த தெருக்கூத்தும், இசைநாடகங்களும் இன்று ஏறத்தாழ மறைந்தே போய் விட்டன.  இந்த இசைநாடகங்களை அமெரிக்க மேடைகளில் நடத்தினால் அதன் தாக்கமே தனி என்பதை வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை நியூ ஜெர்சியில் மேடையேற்றிய இந்திரா பார்த்தசாரதியின் “நந்தன் கதை” இசைநாடகத்தைப் பார்க்கும்போதுதான் புரிந்து கொண்டேன்.

தமிழகத்தின் நாட்டுப்புற இசைக்கலைஞர்களின் பறை முழக்கம் அந்த நியூ ஜெர்சியின் அரங்கத்தை அதிரச் செய்த போது, ஆப்பிரிக்க முரசுகளின் அதிர்வுக்கு இணையானவை, துடிப்பானவை நம் நாட்டுப் புறப் பறைகள் என்பது தெரிந்தது.  அந்த நாடகம் மேடையேறிய போது நடிகை “சின்னப்பொண்ணு” கோடம்பாக்கத்தில் பேரும் புகழும் பெறவில்லை.  ஒலிவாங்கி இல்லாமலேயே தன் சொந்தக் குரலில் அந்த அரங்கம் முழுவதும் கேட்குமாறு மிக அழகாகப் பாடி நடித்தார் சின்னப்பொண்ணு.  நான் நேரில் பார்த்த நாடகங்கள் அனைத்திலும் என்னைக் கவரந்தது “நந்தன் கதை” நாடகம் தான்.  மேடை நாடக வித்தைகள் ஏதும் இல்லாமல் இசை, கதை, பாடல், நாட்டியம் என்று இவற்றால் எங்களைக் கட்டிப் போட்டிருந்தனர் நாடகக் கலைஞர்கள்.


பம்மல் சம்பந்த முதலியார், சங்கரதாஸ் சுவாமிகள் நாடகங்களை யாரும் திரைச்சுருளில் பதிவு செய்தார்களா என்று தெரியவில்லை.  ஆனால், நவராத்திரி தெருக்கூத்து சங்கரதாஸ் சுவாமிகளுக்கு கலைஞர்கள் செய்த மரியாதை என்று பிற்காலத்தில்தான் தெரிய வந்தது.  இந்தக் கூத்தில் வரும் பல பாடல்கள் சங்கரதாஸ் சுவாமிகள் நாடகங்களில் இருந்து எடுத்தவை. சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகங்களின் பிரதிகளை அந்தக் காலத்தில் அச்சிட்டு விற்றிருக்கிறார்கள்.  அது மட்டுமல்லாமல் அவற்றை அண்மையில் முனைவர் அரிமளம் சு. பத்மநாபன் தொகுத்து காவ்யா பதிப்பாக வெளியிட்டிருக்கிறார்.

நாடகத்தின் கதை வசனம், பாடல்கள், இவற்றைப் படிக்கும் போது இவை எப்படி மேடையேறியிருக்கும் என்று நமக்குப் புரியாது.  நவராத்திரி தெருக்கூத்துக் காட்சியைப் பார்க்கும்போது ஓரளவுக்குப் புரிபடுகிறது.

இந்தக் காட்சியில் வரும் பாடல்களை யாரும் எடுத்துப் போட்டிருக்கிறார்களா என்று தெரியவில்லை.  ஆனால், இதில் வரும் சில பாடல்கள் அப்படியே சங்கரதாஸ் சுவாமிகளின் பாடல்கள்தாம்.  அவர் செவ்வியல் மரபிசை மட்டுமல்லாமல இங்கிலீஷ் நோட்டு இசையையும் எடுத்தாண்டாராம்.  சாவித்திரி சத்தியவானைப் பார்த்துப் பாடும் பாடலின் சில வரிகள் இதோ:

இராகம்: ஆனந்த பைரவி

அண்டர் தொழு மாரனோ தண்டுளப வண்ணலோ
  அன்புரதி என்று மகி ழின்பதமதனோ
கண்டுபணி வார்வினை துண்டுபட மோதிய
கந்தனெனு மெங்களுமை தந்த சுகனோ!

பின்னர் சத்தியவான் தன்னை எழுப்பிய சாவித்திரியைப் பார்த்துப் பாடுகிறான்:

இராகம்: இந்தோளம் (மால்கோஸ்), தாளம்: ஏகம்

சத்:       ஏனோ என்னை எழுப்ப லானாய்மட மானே
              எனக்கதனை யுரைக்கவேணும் இசைந்து கேட்பே னானே

சாவி:  சிங்கத்தால் நானடைந்த துன்பந்தீர்த்த தாலே
              செய்தநன்றி எண்ணிவந்தேன் தேர்ந்த அன்பி னாலே

சத்:       எந்தவூ ரோஇருப்ப தேதுபேர்யார் தந்தை
              இன்றெனக்கு நீ யுரைத்தால் இன்பங்க்கொள்ளுஞ் சிந்தை

சாவி:   அழகிய மத்ராபுரி அஸ்வபதி புத்ரி
               அக்கம்பக்கத் தோர்களென்னை அழைக்கும்பேர்சா வித்ரி

சத்:        இன்னுமண மானதோ இல்லையோநீ ஓது
               இச்சைகொண்டேன் கேட்பதற்கு லஜ்ஜையுமா காது

சாவி:    சொல்ல வெட்க மிஞ்சுதே இன்னுமண மில்லை
                சொந்தமான தந்தை தாயார் எண்ணிடவு மில்லை


பின்னர் சத்தியவான் பிரியும் தருணத்தில் அவர்கள் பாடும் பாடலும் சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகத்திலிருந்து எடுத்தாண்டவையே!

இராகம்: இந்துஸ்தான் - தோடி, தாளம் - ஆதி

சாவி:    மன்னாஎன் னாசைம றந்திடாதீர் - எண்ணம்
                மாறிநீ ரங்கேஇ ருந்திடாதீர்

சத்:    உன்னாசை நானோம றப்பதில்லை
           உண்மையாய் நம்பென் உறுதிச் சொல்லை

            ரூபசித்திர மாமரக்குயி லேஉனக்கொரு வாசகத்தினை
             நானுரைத்திட நாடிநிற்கிறதால்
                    அன்பினால்
                     இன்பமாய்
                     இங்குவா


சாவி:  அப்படியே இதோ கிட்டவா றேன்

சத்:  சித்தமானேன்சமீ பத்தில் நீவா

இப்படியாகத்தான் பாடல்கள் போகின்றன.  நவராத்திரி தெருக்கூத்துக் காட்சியில் பாடல்களை உடைத்து உடைத்துச் சீர் பிரித்த இடங்களில் இடைவெளி விட்டுத்தான் பாடி இருக்கிறார்கள்.  அதுதான் மரபா என்று தெரியவில்லை.

தெருக்கூத்துகளில் நடித்துப் பழக்கப் பட்ட சிவாஜி சத்தியவான் வேடத்தை அதற்கே உரிய மிகை நடிப்புடனும், ஸ்திரீ பார்ட் ஏந்தி நடிக்கும் ஆணுடன் இல்லாமல்  உண்மையிலேயே ஒரு பெண்ணுடன் நடிப்பதனால் ஜொள்ளு விடும் ராஜபார்ட் நடிகனாகக் கலக்கி இருப்பார்.

இந்தத் தெருக்கூத்துக் கூட்டத்திடம் மாட்டிக்கொண்ட பெரிய இடத்து நாகரீக நங்கையாக நடிக்கும் நடிகை சாவித்திரி வெகு இயல்பாக அந்த வேடத்தில் நடித்திருப்பார்.  உண்மையான ஸ்திரீ பார்ட்டு நடிகர்கள் சற்று மிகையாகத்தான் நடித்திருப்பார்கள்.  இது போன்ற தெருக்கூத்துகள் பின்னிரவு நேரத்திலும், விடிய விடியவும் நடந்திருப்பதாக வரலாறு கூறுவதால், இவற்றில் இன்றும் கொட்டகை அரங்குகளில் நடக்கும் xxx கொச்சைப் பேச்சுகள் நடந்திருக்குமோ என்றும் தோன்றுகிறது!

ஜட்ஜ் பம்மல் சம்பந்த முதலியார் நாடகங்களில் முதன்முறையாக நடுத்தரக் குடும்பத்தினர் நடித்தார்கள் என்று சொல்லுவார்கள்.  சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகங்கள் பாமரர்களுக்காகப் போடப் பட்ட ஆனால் முறைப்படுத்திய புராணத் தெருக்கூத்துகள் போல் தோன்றுகின்றன.

இத்தகைய தெருக்கூத்துகளின் பின்னணியில்தான் நாம் அந்தக் காலத்து தியாகராஜ பாகவதர், எம் எஸ் சுப்புலட்சுமி, என் எஸ் கிருஷ்ணன், டி ஏ மதுரம் திரைப்படங்களைப் பார்க்க வேண்டும்.  இவற்றின் தாக்கத்தை உணர்ந்து அதே நேரத்தில் மேலை நாட்டு திரை/மேடைக்கலை, பிரச்சார நாடகங்களின் வலிமை இவற்றைக் கொண்டு தம் இயக்கக் கருத்துகளைப் பரப்பும் எண்ணம் அறிஞர் அண்ணாவுக்குத் தோன்றியிருக்க வேண்டும்.  ஆனால், இந்தப் பிரச்சாரக் கலையை அதன் உச்சத்துக்கே கொண்டு சென்றவர் கலைஞர் கருணாநிதிதான் எனலாம்.

மனோகரா என்ற தெரு நாடகத்தைச் சமூகப் பிரச்சாரப் படமாக, அடுக்குமொழி அழகு தமிழ் நடையில் மாற்றி வெற்றி கண்டவர் கலைஞர்.  அவரது பராசக்தி திரைப்படத்தை இன்று பார்த்தாலும் ஒரு செவ்வியல் படத்தைப் பார்க்கும் நிறைவு இருக்கிறது.   எந்த நீதிமன்றத்தில் இப்படை இரைச்சல் போடுவார்கள் என்று அறிஞர்கள் கேட்பது உண்மைதான் என்றாலும், சேக்‌ஷ்பியரின் ஜூலியஸ் சீசர் நாடகத்தில் சீசரின் இறுதிச் சடங்கில் வந்து பேருரை ஆற்றும் மார்க் ஆண்டனியின் வசனத்தை ஏற்கும்போது பராசக்தியையும், மனோகராவையும் ஏன் அந்தக் கோணத்தில் பார்க்கக் கூடாது எனத் தோன்றுகிறது.

கலைஞர், நடிகர் திலகம் ஆகியோர் இணைந்து படைத்த அந்தக் காலத்துப் படங்களைக் காலப்பெட்டகங்களில் பேணிப் பாதுகாக்க வேண்டும்.  அவை தாம் காலக்குறிகள்!

7 comments:

சகாதேவன் said...

//மகி ழின்பதமதனோ// //தந்த சுகனோ!//
தெருக்கூத்து காட்சியில், இந்த வரிகள் வரும்போது பின்பாட்டு பாடுபவர் இல்லை என்பது போல் நோ என்பார். நல்ல நகைச்சுவை.

சகாதேவன்

துளசி கோபால் said...

நட்சத்திர வாழ்த்து(க்)கள்.

சுந்தரவடிவேல் said...

கடந்த 2010 பேரவை விழாவிலும் ஒரு தெருக்கூத்து நடந்தது. அது "மதுரை வீரன்". அனைவரது கருத்தையும் ஈர்த்தது அது. புதுச்சேரி முனைவர் ஆறுமுகம் குழுவினர் நிகழ்த்தியது. காணொளியை www.fetna.org இல் காணலாம். நன்றி!

மணி மு. மணிவண்ணன் said...

சுந்தரவடிவேல்,

தகவலுக்கு மிக்க நன்றி. பேரவையின் இது போன்ற தொண்டுகள் மிகவும் பாராட்டுக்கு உரியவை. சென்னை சங்கமம் விழா சர்ச்சைக்கு உள்ளாக்கப் பட்டாலும், இது போன்ற நாட்டுப்புறக் கலைகளையும் கலைஞர்களையும் நகர வாழ் மக்களுக்கு அறிமுகப் படுத்திப் பெருமைப் படுத்தும் பெருந்தொண்டைச் செய்து வருகிறது. இல்லையேல் இது போன்ற நாட்டுப்புறக் கலைகள் கவனிப்பாரற்று மறைந்தே போய்விடும்.

அப்பாதுரை said...

பம்மல் பெயர் வெளியே வந்தால் கொஞ்சம் கிறுகிறு என்கிற்து. சமூக விழிப்புணர்ச்சிச் செய்திகளுடன் கூடிய தெருக்கூத்து உலகக் கலாசாரமும் கூட.

அப்பாதுரை said...

'ஞானப் பழத்தை பிழிந்து' - இன்னொரு சங்கரதாஸ் சுவாமிகள் பாடல்.

VarahaMihira Gopu said...

தமிழ் நாடக இசை பாடல்களை வருடா வருடம் ஔவை சண்முகத்து மகன் திரு. TKS கலைவாணன் மார்கழி இசை விழாவில் Indian Fine Arts Society அரங்கில் நடத்தி வருகிறார். இதை வர்ணிக்கும் என் வலைப்பூ

http://varahamihiragopu.blogspot.com/2015/12/blog-post_27.html