Monday, January 10, 2011

தமிழ்மணம் திரட்டியின் வாசகர்களே வருக!

அன்பார்ந்த தமிழ்மணம் வாசகர்களே!

தமிழ்மணம் திரட்டி என்னைப் பொங்கல் வார நட்சத்திரமாக, தமிழ்மணத் தாரகையாகத் தேர்ந்தெடுத்திருப்பதை அவர்கள் எனக்கு அளித்திருக்கும் மிகப் பெரிய பாராட்டாகக் கருதுகிறேன்.

நான் அமெரிக்கத் தமிழன் என்பதால், பொதுவாக எனது அமெரிக்கத் தமிழ் நண்பர்களும், தென்றலில் என்னுடைய “புழைக்கடைப் பக்கம்” தொடரின் வாசகர்களும், என்னை ஓரளவுக்குத் தெரிந்த தமிழக வாசகர்களும் மட்டுமே படித்துக் கொண்டிருக்கும் எனது வலைப்பூவை, என்னை இது வரை அறிந்திராத தமிழ்மணம் வாசகர்களுக்கு அறிமுகப் படுத்த வாய்ப்பளித்திருக்கும் தமிழ்மணம் குழுவுக்கு எனது நன்றி.

இந்தப் பொங்கல் வாரத்தில் உங்களோடு கலந்துரையாடுவதற்கு முன்னால், நான் இது வரை எழுதியிருக்கும் பதிவுகள் சிலவற்றை உங்கள் முன் வைக்கிறேன்.  ஒரு வாரத்தில் நான் எழுதுவதை வைத்து எனது கருத்துகளையும், என்னையும் பற்றிப் புரிந்து கொள்வதை விட, நான் இது வரை எழுதியிருக்கும்  பதிவுகளையும் சற்றுப் படித்தால் எனது பின்புலம், நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது தெளிவாகலாம்.

இணையத்தின் தொடக்க நாட்களில் தமிழ் பண்பாட்டுக் குழுமம் (soc.culture.tamil) என்ற முதல் இணையக் குழு (usenet)வில் ஆங்கிலத்தில் தமிழைப் பற்றிப் படிப்பதற்காக இணையத்தோடு தொடங்கிய பற்று, பின்னர் தமிழ்.நெட் வழியாகத் தமிழில் எழுதப் படிக்க முடிவது தொடங்கி, எண்ணற்ற பல கிளையாறுகளில் கலந்து இன்று தமிழ்மணம், ஃபேஸ்புக், டுவிட்டர், கூகில் குழுமங்கள் தமிழ்மன்றம், மின் தமிழ் என்று இணையப் பெருங்கடலில் ஒரு துளியாகி வந்து நிற்கிறது.  என்னோடு அன்று உறவாடிய பல முன்னோடிகள் இன்றும் தமிழில் தொடர்ந்து பணியாற்றுவது மகிழ்ச்சியளிக்கிறது.

அன்று தமிழில் எழுதுவது என்பது ஒரு வற்றாத தாகம்.  தமிழ்.நெட் எங்களுக்குக் கிடைத்த ஒரு தென்னந்தோப்பு.  இன்று தொழில்நுட்பங்கள் பெரும்பாலும் யாருக்கும் தடையல்ல. உலகின் எந்தமூலையில் தோன்றிய எந்தக் கருத்தாய் இருந்தாலும் சரி, யாராவது ஒரு தமிழர் அதைப் பற்றித் தன் வலைப்பூவிலோ அல்லது மடற்குழுவிலோ எழுதுகிறார் என்பதில் ஐயம் இல்லை.  இப்படித்தான் நடக்க வேண்டும் என்று நாங்கள் 90’களில் கனவு கண்டோம்.  அது பெரும்பாலும் அப்படியே நடப்பதில் ஒரு மகிழ்ச்சி.

இருப்பினும், தொடக்க நாட்களில் ஒரு சிறு குழுவினரோடு நாங்கள் பகிர்ந்து கொண்ட அளவுக்குக் கருத்து அடர்த்தி இல்லாமல் சற்று நீர்த்துப் போய் இருப்பதில் ஓரளவுக்கு ஏமாற்றம்.  அதே போல், தொடக்க நாட்களைப் போலவே இன்றும் கருத்து மோதல்கள், ஏறத்தாழ அதே தலைப்புகளில் நடப்பதிலும், ஏமாற்றமே.

பழம்பெரும் பண்பாட்டின் வழித்தோன்றல்கள் நாம்.  பல எண்ணற்ற அறிவாளிகளின் அறிவுக் கருவூலங்கள் நம் உடமை.  புதிய நாடுகள் நமது அறிவையும், பழம்பெரும் பண்பாட்டையும் பெரிதும் பாராட்டுபவை.  அந்த பெரும் மரபுக்கு ஏற்றவாறு நம்மால் சிக்கல்களைக் கலந்து பேசித் தீர்த்துக் கொள்ள முடியாமல் போவது, இந்தியாவின் போக்குவரத்தைப் போல என்னைத் திகைக்கவைக்கிறது.  இந்த வாரம் என்னோடு கலந்து பேச வரும் தமிழ்மணம் வாசகர்களிடமிருந்து தமிழர்களின் தனிப்பண்பாடு பற்றியும், இணையத்தில் கலந்துரையாடும் நேர்த்தி பற்றியும் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்.

எனது கருத்துகள் தவறானவை, முற்றிலும் பிழையானவை என்று கருதுபவர்கள் கூட, என்னுடைய நண்பர்களாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.  தமிழ்க்கடலில் நீந்தித் திளைத்து நம்மோடு தமிழ் பகிர்ந்து கொள்ளும் எழுத்தாளர்களையும், அரசியல், திரைப்படம், இலக்கியம், துணுக்குகள், சமூகம் என்று எண்ணற்ற தலைப்புகளில் தம் எண்ணங்களைப் பதிவு செய்யும் தமிழ்ப் பதிவுலகத் தாரகைகளை நமக்கு அறிமுகப் படுத்தும் தமிழ்மணம் திரட்டிக்கு மீண்டும் எனது நன்றி.

இந்த வலைப்பூவுக்கு வந்திருக்கும் தமிழ்மணம் திரட்டியின் வாசகர்களை வரவேற்பதில் மீண்டும் மகிழ்கிறேன்.

எனது பதிவுகளில் விரும்பிப் படிக்கப் பட்டவை:

04-Jul-2010, 1 comment


05-Nov-2010, 9 comments


05-Sep-2010, 14 comment
s

28-Nov-2010, 14 comments


29-Oct-2010, 4 comment
s

07-Nov-2010
 

27-Nov-2010, 9 comment
s

23-Nov-2010, 7 comments


02-Jan-2011, 1 comment


31-Dec-2010, 9 comment
s9 comments:

பழமைபேசி said...

வாழ்த்துகள்; வரவேற்கிறோம்! படைப்புகளை வாசிக்கக் காத்திருக்கிறோம்!!

முச்சந்தி said...

வாழ்த்துகள்

குறும்பன் said...

தமிழ்மண நட்சத்திரத்துக்கு வாழ்த்துகள். பல சுவையான படைப்புகளை படிக்க காத்திருக்கிறோம்.

தமிழ் சசி / Tamil SASI said...

நட்சத்திர வாழ்த்துக்கள். உங்களுடைய தமிழ் இணையம் குறித்த கட்டுரைகளை வாசிக்க ஆவலுடன் இருக்கிறேன்.

நன்றி...

மணி மு. மணிவண்ணன் said...

வாழ்த்துகளுக்கு நன்றி நண்பர்களே! தமிழ் இணையம் குறித்தும் கலந்து பேசுவோம்.

ரவிச்சந்திரன் said...

தமிழ்மண நட்சத்திர வாழ்த்துகள். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வாரத்தில் தாங்கள் தமிழ்மணம் நட்சத்திரமாக மின்னுவதில் மிக்க மகிழ்ச்சி. தங்கள் க்ட்டுரைகளை படிக்க ஆவலாக காத்திருக்கிறேன்.

அன்புடன்,
-ரவிச்சந்திரன்

அரசூரான் said...

தமிழ்மண நட்சத்திர மற்றும் பொங்கல் தின நல்வாழ்த்துகள்.

manjoorraja said...

பொங்கல் தமிழ்மண தாரகைக்கு வாழ்த்துகள்.

manjoorraja said...

தொடர்ந்து தமிழ் வளர நீங்கள் ஆற்றும் பணிக்கு பாராட்டுகள்