ஞாயிறு, ஜூலை 04, 2010

தமிழ் இணைய மாநாட்டில் நான் தலைமை தாங்கிய அமர்வு

அண்மையில் கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டின் கூடவே, தமிழ் இணைய மாநாடு 2010ம் கூடியது.  இணைய மாநாட்டுக்கு முரசொலி மாறன் அரங்கில் ஒரு பொது நிகழ்வும்,  எழுத்தாளர் சுஜாதா அரங்கு, துபாய் உமர்தம்பி அரங்கு, சிங்கப்பூர் நா. கோவிந்தசாமி அரங்கு, யாழன் சண்முகலிங்கம் அரங்கு என்ற 4 அரங்கங்களில் இணை அமர்வுகளும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தன.

இதே நேரத்தில் செம்மொழி மாநாட்டிலும் 22 அரங்கங்களில் பல ஆய்வு அமர்வுகள் தொடர்ந்து நிகழ்ந்தன.

செம்மொழி மாநாட்டின் பேராளர்களும் இணைய மாநாட்டின் பேராளர்களும் எல்லா அமர்வுகளிலும் கலந்து கொள்வதற்கு அனுமதித்திருந்தனர். இந்த மாநாட்டின் நிறைகுறைகளைப் பற்றி இன்னொரு பதிவில் எழுதுகிறேன்.

தமிழ் மின் தரவு மற்றும் மின்னகராதிகள் என்ற தலைப்பில் இருந்த இரு அமர்வுகளில், ஜூலை 24 பிற்பகல் என் தலைமையில் நடந்த முதல் அமர்வில் திருமதி சுபாஷினி டிரெம்மல், முனைவர் இல. மறைமலை, தேனி சுப்ரமணி,  பி. அசதுல்லா ஆகியோர் கட்டுரை படித்தனர்.  மறுநாள் காலை திருமதி சுபாஷினி டிரெம்மல் தலைமையில் நடந்த இரண்டாம் அமர்வில், நான், முனைவர் கல்யாணசுந்தரம், மணியரசன் முனியாண்டி, முனைவர் துரையரசன் ஆகியோர் பங்கேற்றோம்.  இந்த அமர்வில் நான் வழங்கிய “மிரட்டலான” கட்டுரையை இதற்கு அடுத்த பதிவில் இணைக்க இருக்கிறேன்.

செம்மொழி மாநாட்டின் சிறப்பான செயல்களில் ஒன்று, மாநாட்டில் நடந்த அத்தனை அமர்வுகளையும் ஒளிப்பதிவு செய்து, யு-டியூபில் சூட்டோடு சூடாக வலையேற்றியது.  இதன் தரமும், இது நடந்த வேகமும், மிகவும் பாராட்டத் தக்கது.  ஆய்வரங்கில் என்ன நடந்தது என்று வியப்பவர்களுக்கும், ஆய்வரங்கில் தாம் கலந்து கொள்ள இயலாது போன நிகழ்வுகளைப் பார்க்க முயல்பவர்களுக்கும் இது மிக அரிய வாய்ப்பாகும். மாநாட்டுப் பதிவுகளை யு-டியூபில் ( youtube.com ) தேடும்போது  WCTC10, ”உலகத் தமிழ்ச் செம்மொழி” போன்ற சொற்களைத் தேடலாம்.  அப்போது பல அமர்வுகள் அந்தந்த அரங்கங்களின் பெயரோடு தொகுக்கப்பட்ட ஒளிப்பதிவுகள் கிடைக்கும். மாநாட்டின் அரங்கங்களின் பெயரிலும் தேடலாம்.  காட்டாக நான் கலந்து கொண்ட அமர்வுகள் அனைத்தும் உமர்தம்பி அரங்கில் நடந்தன.  அவற்றைத் தேட நான் ”உமர் தம்பி அரங்கம்” அல்லது ”Ummar thambi arangam" என்று தேடினால் போதும். யு-டியூபில் இருக்கும் ஒளிப்பதிவுகளைத் தரவிறக்க வேண்டும் என்றால் கீப்-விட் ( keepvid.com ) என்ற புலத்துக்குச் சென்று, நாம் மீட்க வேண்டிய தொடுப்பை அதில் கொடுத்தால் போதும்.

பல கட்டுரைகளின் தரங்கள் ஏறத்தாழ இருந்தாலும்,  கட்டுரையை அரங்கில் இருப்பவர்களுக்கு ஏற்ப வழங்குவதில் பலருக்குப் பட்டறிவு இல்லை என்பதே உண்மை.  இது ஆய்வரங்கு என்பதால், ஒவ்வோர் அறையிலும், கட்டுரையாளர்களை விஞ்சிய ஆய்வாளர்கள் ஒரு சிலராவது இருந்தார்கள்.  அதே நேரத்தில், அரிச்சுவடி கூடத் தெரியாதவர்களும் இருந்தார்கள்.  இருவரையுமே அணைத்துக் கொண்டு போவது என்பது எளிதல்ல.  இருப்பினும், பலர் உண்மையிலேயே  மேடைக்கு வந்து கட்டுரையை அப்படியே படித்தார்கள். கட்டுரை மாநாட்டு மலரில் ஏற்கனவே இருப்பதால், கட்டுரையின் கருப்பொருளை மட்டும் அரங்கில் கொண்டு வந்தால் போதும்.  இல்லையேல், பார்ப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் அலுப்புத் தட்டி விடும்.

நான் தலைமை தாங்கிய அமர்வில் கலந்துரையாடலுக்கும் நேரம் இருந்தது.  பார்வையாளர்களும் நெடுநேரம் அமர்ந்து பல கேள்விகள் கேட்டார்கள். அவ்வப்போது தமிழ்.நெட்டின் இணை நிறுவனர்கள் பாலா பிள்ளை, முத்து நெடுமாறன், மற்றும் பாரதிதாசன் பல்கலைப் பேராசிரியையும், அறிஞர் வையாபுரிப் பிள்ளை அவர்களின் வழித்தோன்றலுமான முனைவர் இராதா செல்லப்பன், கனடா பேராசிரியர் “விக்கிப்பீடியா” செல்வகுமார் ஆகியோரும் இந்த அமர்வில் கலந்து கொண்டது சிறப்பு.

திருமதி சுபாஷினி டிரெம்மல் தமிழ் மரபு அறக்கட்டளையின் பணிகளை நன்றாக விளக்கியது மட்டுமல்லாமல், இணைய அட்டவணையை  உருவாக்கிய தொழில்நுட்பத்தை விவரித்தார்.

தமிழ் மின்னணு பெட்டக மேலாண்மை  (Tamil e-archives management) என்ற தலைப்பில் ஆம்பூர் மஃசருல் உலூம் கல்லூரி நூலகர் அசதுல்லா அவர்கள் கல்லூரியில் பெட்டக மேலாண்மை செய்வதற்கான செயலி பற்றிக் கட்டுரையைப் படித்தார்.  அவர் ஆவணங்கள் செயலிகளின் பதிப்பு எண்ணுடன் உள்ள பிணைப்பு பற்றி ஆராயவில்லை என்பது ஒரு குறை என்றாலும், நல்ல முயற்சி.  முதன்முறையாக ஓர் ஆய்வரங்கில் கலந்து கொள்ள வந்தவர் இவர் என்பது எனக்குத் தெரியாமல் போய்விட்டது.  தெரிந்திருந்தால், ஆய்வரங்கில் கட்டுரை வழங்கும் உத்திகளைப் பற்றிக் கலந்து பேசியிருக்கலாம்.  அவரது பட்டறிவை மேலும் வெளிக் கொணர்ந்திருக்க முடியும்.
பேரா. மறைமலை அவர்கள் நல்ல நண்பர்.  சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மக்களுக்குத் தெரிந்தவர்.  1997-98ல், எங்கள் வீடுகளில் பல வார இறுதிகளில் இலக்கியச் சொற்பொழிவு ஆற்றி எங்களுக்குத் தமிழ் கற்பித்த ஆசிரியர்.  அவர் அன்று விதைத்த விதைகளால் இன்று வளைகுடாப் பகுதியில் செவ்விலக்கிய ஆர்வமும் தமிழ்ப் பற்றும் கூடியிருக்கிறது என்றால் மிகையாகாது.

பேரா. மறைமலை அவர்கள் மின்னணு அருங்காட்சியகம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.  அருங்காட்சியகம் என்பது அரசுத் துறைகள் மட்டுமல்ல, தனியாரும் முயற்சி செய்தால் உருவாக்கக் கூடியது என்பது அவரது கட்டுரையில் தெளிவாகத் தெரிந்தது.  வரலாறுகள் மாற்றப் படக்கூடாது, மறைக்கப் படக் கூடாது என்ற தெளிவில் நாஜிக் கொடுமையால் அவதியுற்ற யூதர்கள் தம் வரலாற்று ஆவணங்களை மின்னணு அருங்காட்சியத்தில் பதிவு செய்திருப்பது குறிப்பிடத் தக்கது.  அருங்காட்சியகம் என்பதன் நெறிமுறைகள் பல இருப்பினும், தனிமனிதர்கள் முனைப்பினால் அமைக்க முடியும்.  மதுரைத் திட்டம் போல், நூலகத் திட்டம் போல், உலகத் தமிழர் அருங்காட்சியகங்களும் தோன்ற வேண்டும்.  புலம் பெயர்ந்த தமிழர்கள், ஈழத் தமிழர்கள், மலேசிய, சிங்கைத் தமிழர்கள் வரலாறுகளும் பதியப் பட வேண்டும்.  தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், மொரீசியஸ், ரெ யூனியோன், பிஜித் தீவுகள், தென்னமெரிக்கா இங்கெல்லாம் பரவி இருக்கும் தமிழ்க் குடிகளின் வரலாறுகளும் பதிவாக வேண்டும்.  அதற்குப் பேராசிரியர் மறைமலை அவர்களின் கட்டுரை வித்திடும் என நம்புகிறேன்.

தேனி சுப்பிரமணி தமிழ் விக்கிப்பீடியா என்னும் கலைக்களஞ்சியத்தைப் பற்றிக் கட்டுரை படித்தார்.  விக்கிப்பீடியா பற்றித் தெரியாதவர்களுக்கு நல்ல அறிமுகமாக இந்தக் கட்டுரை அமைந்திருந்தாலும், விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் பல படைத்திருக்கும் சுப்பிரமணி தம் பட்டறிவுகளைப் பகிர்ந்து கொண்டிருந்தார் என்றால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும்.  விக்கிப்பீடியாவில் இருந்து பேரா. செல்வகுமார், மயூரன், ரவிஷங்கர் போன்றோர் இந்த மாநாட்டுக்கு வந்திருந்தனர்.  விக்கிப்பீடியா போட்டியும் நடைபெற்றது.  இது பற்றிய கூடுதலான செய்திகளை வழங்கும் பேச்சாக இது இருந்திருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும்.  இருப்பினும், இதுவும் ஒரு கன்னி முயற்சி என்பதால் பாராட்டுக்குரியது.

இந்தப் பேச்சுகளின் காணொளித் தொடுப்புகள் கீழே உள்ளன:

Ummar Thambi 5.flv  to  Ummar Thambi 19.flv
(Ummar Thambi 5.flv) 
http://www.youtube.com/watch?v=0wgXm4aiRWI  (அறிமுகம்)



http://www.youtube.com/watch?v=s2Muux5vELs  (சுபாஷினி 2)
http://www.youtube.com/watch?v=luWaGrcUORM (சுபாஷினி 3)
http://www.youtube.com/watch?v=qSjE3LV8VOg ( சுபாஷினி 4)

http://www.youtube.com/watch?v=357wXJ-ruX4  (அசதுல்லா 1)
http://www.youtube.com/watch?v=scT4WnNt7XE (அசதுல்லா 2/பேரா. மறைமலை)
http://www.youtube.com/watch?v=HMFEc0AeXKc (பேரா. மறைமலை - 2 )
http://www.youtube.com/watch?v=hm11Oalf66U ( பேரா. மறைமலை - 3 )
http://www.youtube.com/watch?v=jsppmWDD_VU  (கலந்துரையாடல்)

http://www.youtube.com/watch?v=skoe5efq-9o (விக்கிப்பீடியா தேனி சுப்பிரமணி 1) 
http://www.youtube.com/watch?v=UBfrgA_hRlk (விக்கிப்பீடியா தேனி சுப்பிரமணி 2)
http://www.youtube.com/watch?v=8DSLSTuQCZo (விக்கிப்பீடியா தேனி சுப்பிரமணி 3) 

கலந்துரையாடல்கள்;

கலந்துரையாடல்கள் நன்றாக இருந்தன என்று சிலரும், தலைவர் நிறையப் பேசி விட்டார் என்று சிலரும் கூறினார்கள்.  5 மணிக்கு நிறைவாக வேண்டிய அமர்வு ஆறு மணி வரை தொடர்ந்தது.  பலரும் அரங்கில் இருந்து கலந்து கொண்டார்கள்.  இருப்பினும், பதிவில் பார்க்கும் போது அரங்கத் தலைவர் என்று அறிமுகப் படுத்தும் பொறுப்பைக் கடந்து, கலந்துரையாடல் நீண்டதற்கு முழுப்பொறுப்பும் நான் தான் ஏற்றுக் கொள்ளக் கடமைப் பட்டிருக்கிறேன்.  தலைப்பைப் பற்றிய கருத்தாடல்கள் தேவைதான் என்றாலும், அந்தப் பொறுப்பு உத்தம ஏற்பாட்டுக் குழுவுக்குத்தான்.  மைக் கையில் கிடைத்தால் பேசிக் கொண்டே போகும் நோய் எனக்கும் வந்து விட்டது என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது! 

2 கருத்துகள்:

அ. இரவிசங்கர் | A. Ravishankar சொன்னது…

விவரத்துக்கு நன்றி.

இணையக் கண்காட்சியில் நடந்த தமிழ் இணையப் பயிலரங்கில் இருந்ததால் ஆய்வரங்கப் பக்கமே வர முடியவில்லை :(

நான் கலந்து கொண்ட ஒரே ஒரு நிகழ்வில் கட்டுரை வாசித்தவர் சொன்னதை விட அரங்கத் தலைவர் விளக்கிச் சொன்னதே புரிந்தது. எனவே, அரங்கத் தலைவர்கள் விளக்கமாகப் பேசி நல்ல கலந்துரையாடலுக்கு வித்திடுவது தவறல்ல.

ஒரு வேண்டுகோள்: தயவு செய்து என் பெயரை அ. இரவிசங்கர் என்று குறிப்பிட வேண்டுகிறேன். சங்கருக்குப் பதில் ஷங்கர் வேண்டாம். நன்றி.

manjoorraja சொன்னது…

இன்றுதான் இப்பதிவை பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்தது. விவரங்களுக்கு நன்றி.