”கிரந்தம் ( வடமொழி ग्रन्थ - புத்தகம் ) என்பது வடமொழியினை எழுத தென்னிந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு எழுத்து முறையாகும் (லிபி)” என்று குறிப்பிடுகிறது தமிழ் விக்கிப்பீடியா [1]. முற்காலப் பல்லவர்கள் கி.பி. 4ம் நூற்றாண்டில் தோற்றுவித்ததாக அறிஞர்கள் கருதும் இந்த எழுத்துமுறை, பிற்காலச் சோழர்கள் காலத்தில் செந்தரப் படுத்தப் பட்டு இன்று வரை தொடர்கிறது. பிற்காலச் சோழர்கள் பண்டைத் தமிழ் வட்டெழுத்துக்களை நீக்கி பல்லவர்கள் காலத்தில் தோன்றிய தமிழ் வரிவடிவத்தைப் பரப்பியபோது சில கிரந்த எழுத்துகளின் வரிவடிவங்களுக்கும் அதே ஒலிக்கான தமிழ் எழுத்துகளின் வரிவடிவங்களுக்கும் ஒற்றுமை தோன்றியது. தமிழகத்தில் உள்ள எண்ணற்ற பல கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள் ஆகியவற்றில் கிரந்த எழுத்துக்கள், தற்காலத் தமிழ் மற்றும் முற்காலத் தமிழ் வட்டெழுத்துகள் அவற்றை எழுதியவர்களுக்குத் தோன்றிய விதங்களில் பல்வேறு கலப்புமுறைகளில் காணப் படுகின்றன. கிரந்தமும் தமிழும் கலந்த மணிப்பிரவாள நடையில் எண்ணற்ற வைணவ உரைநூல்கள் உள்ளன. 20ம் நூற்றாண்டில் வடமொழியை எழுதத் தமிழகத்திலும் தேவநாகரியைப் புழங்கத் தொடங்கும் வரை கிரந்த எழுத்துகள் அச்சிலும் இருந்தன. இன்றும் கூடத் தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் 10,000 வேத விற்பன்னர்களும், 15,000 இந்து அர்ச்சகர்களும் கிரந்தத்தில் எழுதிய சமய நூல்களைத் தொடர்ந்து படித்து வருவதாக ஒரு குறிப்பு தெரிவிக்கிறது.
வரலாற்று நூல்களை ஆராயும் அறிஞர்களும், இந்து சமய ஆர்வலர்களும் கிரந்த எழுத்துக்களை ஒருங்குறி என்னும் யூனிக்கோடு குறியீட்டுமுறைக்குள் கொண்டு வரக் கடந்த சில ஆண்டுகளாக அரும்பாடு பட்டு வந்திருக்கிறார்கள். இறுதியாகக் கடந்த செப்டம்பர் 6 அன்று புது தில்லியில் கூடிய அறிஞர் கூட்டம் பல வேறு அறிஞர்கள் கொடுத்த முன்மொழிகளை ஒருங்கிணைத்து எல்லோரையும் ஒன்று கூட்டி ஓர் இறுதி முன்மொழியை யூனிகோடு நுட்பக் குழுவின் முன்னர் வைக்க முடிவு செய்தது. கிரந்த எழுத்துகள் தமிழோடு கலந்த பல கல்வெட்டுகள் பற்றிய ஆய்வு தமிழ்நாட்டில் தொடர்ந்தாலும், இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளத் தமிழ்நாட்டிலிருந்து எந்தக் கல்வெட்டு ஆய்வாளரையும் அழைத்ததாகத் தெரியவில்லை. தமிழக அரசின் சார்பிலும் யாரும் கலந்து கொள்ளவில்லை.
இந்தப் பரிந்துரையில் 1700 ஆண்டுகளாக வடமொழியை மட்டும் எழுதத் தொடர்ந்து வந்திருக்கும் கிரந்த எழுத்துகளின் பேச்சொலி எழுத்து முறையின் (phonetic) கூட, வடமொழியில் இல்லாத ஆனால் தமிழிலும் மலையாளத்திலும் மட்டும் இன்றும் வழக்கிலிருக்கும் எ, ஒ, ழ, ற, ன என்னும் ஐந்து ஒலியன்களைக் கூட்ட வேண்டும் என்ற முன்மொழிவும் இடம் பெற்றிருந்தது. இந்த முன்மொழியை முதலில் மொழிந்து தொடர்ந்து வலியுறுத்தி வருபவர் நாக. கணேசன். சமஸ்கிருதத்தில் இல்லாத எழுத்துகளைக் கூட்டுவதற்குச் சில அறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும், இது ஒருங்கிணைப்பு முன்மொழிவு என்பதாலோ என்னவோ, கிரந்த எழுத்து முறைக்குச் சற்றும் பொருந்தி வராத இந்த முன்மொழிவு எப்படியோ இறுதி முன்மொழிவிலும் இடம் பெற்று விட்டது. இந்த முன்மொழிவை ஒருங்குறியின் தெற்காசியத் துணைக்குழுவும் ஏற்றுக் கொண்டு நவம்பர் 6 அன்று நடக்கவிருக்கும் யூனிக்கோடு நுட்பக் குழுக் கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப் பரிந்துரைத்துள்ளது. இது யூனிகோடு ஏற்புப் பட்டியலிலும் அரங்கேறி விட்டது.
திரு கணேசனின் முன்மொழிவு பற்றித் தமிழ்த் தகவல் நுட்பவியலாளர்கள் சிலருக்குத் தெரிந்திருந்தாலும், போதிய சான்றுகளற்ற முரணான இந்த முன்மொழிவை வடமொழி வல்லுநர்கள் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள் என்று அசந்து இருந்து விட்டார்கள். இதற்கிடையில் தமிழ் எழுத்துகளிலேயே கிரந்த எழுத்துகளைக் குறிக்க நீட்டித்த தமிழ்க் குறியீட்டு முறையில் தனி இடம் வேண்டும் என்று ஸ்ரீரமணஷர்மா என்ற இளம் அறிஞர் வைத்த முன்மொழிவைப் பொது அரங்குக்குக் கொண்டு வந்து திரு கணேசன் கடுமையாக எதிர்க்க அணி திரட்டினார். ஸ்ரீரமணஷர்மா முன்மொழிவுக்குப் பலத்த எதிர்ப்பைத் திரட்டுவதில் கணேசன் வெற்றியும் பெற்றார். இது தொடர்பாக யூனிகோடு ஏற்புப் பட்டியலைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கிய சிலர் கிரந்த முன்மொழிவில் கணேசனின் கோரிக்கையும் இடம் பெற்றிருப்பதைப் பார்த்து அதிர்ந்தார்கள். அது இந்திய அரசு பரிந்துரைத்த முன்மொழிவு என்பதையும் தெரிந்து கொண்டார்கள். இதனால் தமிழுக்கு என்னென தாக்கங்கள் நேரிடலாம் என்று பார்க்கத் தொடங்கினார்கள்.
தமிழில் புது கிரந்தம் வேண்டாம் என்று கணேசன் தொடங்கிய மறுப்பு அணி தமிழ் உணர்வின் உச்சக் கட்டத்தில் இருந்தது. அதனால், கிரந்தத்திலும் தமிழ் எதற்கு என்று கேட்கத் தொடங்கினார்கள். கணேசன் முன்மொழிவு யூனிகோடு தரமாக ஆவதற்கு ஒரு வாரமே இருக்கும் நிலையில் அவரது முன்மொழிவால் தமிழுக்கு என்ன தாக்கம் உண்டாகும், கிரந்தம் கலந்த தமிழ் ஆவணங்களை எண்ணிமப் படுத்தலில் என்னென்ன சிக்கல்கள் உண்டாகும் என்பதை ஆய்வதற்கு நேரம் தேவை என்று அவர்களுக்குப் புலப்பட்டது. இந்த நேரம் வேண்டும் என்றால் யூனிகோடு நுட்பக் குழுவுக்கு எடுத்துச் செல்வதை விட இந்திய அரசு மற்றும் தமிழக அரசிடம் முறையிடுவதே சிறப்பு என்பது அவர்களுக்குத் தெரிந்தது. ஆனால், கிரந்தத்தில் தமிழ் எழுத்துகளைக் கூட்டுவதால் என்ன பெரிய இடர்ப்பாடு வரப்போகிறது என்று இறுமாந்து இருந்த அரசியல் தலைவர்கள் இந்த முறையீட்டைப் பொருட்படுத்தவில்லை. இதை மேலெழுந்தவாரியாகப் பார்த்த உத்தமம் யூனிக்கோடு பணிக்குழுவுக்கும் நுட்பக் குழுக் கூட்டத்தின் கெடுவுக்கு முன்னால் இந்தக் கோரிக்கையால் என்ன சிக்கல்கள் எழும் என்பதை ஆராய்ந்து ஒரு பரிந்துரை எழுத நேரம் இருக்கும் என்று தோன்றவில்லை.
கணேசன் திரட்டிய எதிர்ப்பு அணியால் கணேசனே இப்படி ஒரு கோரிக்கையை முன் வைத்திருப்பார் என்பதை நம்ப முடியவில்லை. புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் சிலரின் கடும் முயற்சியால் கணேசனின் கோரிக்கையையும் இந்த எதிர்ப்பு அணி கூர்ந்து பார்க்கத் தொடங்கியது. கனடா பேரா. செல்வகுமார் அவர்கள் கணேசனின் முன்மொழிவு தொடர்பான வாதங்களைப் படிக்கத் தொடங்கினார். தன்னுடைய முன்மொழிவில் கிரந்தத்தில் ”திராவிட” எழுத்துகளைத்தான் கூட்டியிருக்கிறேன் என்று வெளியில் சொல்லும் கணேசன் இவை ஏன் தேவை என்பதை வலியுறுத்தும் முகமாக யூனிகோடுக்கு எழுதிய கட்டுரையில் தன் வேறு முகத்தைக் காட்டி இருந்தார். அந்தக் கட்டுரையில் கணேசன் சொன்னது என்ன?
“Grantha in Unicode will go a long way for the native user community and spread the knowledge and use among the Tamils. Other script communities of India do not need the Grantha script as their own scripts like Devanagari or Telugu can be used to write Sanskrit. But it is ONLY Tamils who will use the Grantha script. Unicode Consortium will be pleased in a few years’ time, many Tamil script e-mails, e-lists, blogs, newspapers will have words written in Grantha script. So, Tamils will use Grantha script mixing it with Tamil even though Tamil will be more compared to Grantha words/sentences in a Web page.”
இதைப் படித்த பேரா. செல்வகுமார் அதிர்ந்து போனார். கணேசனின் முன்மொழிவு வெற்றி பெற்றால் இடைக்காலக் கேரளத்தில் மணிப்பிரவாளம் சேரர் தமிழின் தன்மையை மாற்றித் தமிழை விட்டுப் பிரிந்து மலையாளம் என்ற தனிமொழியாகப் பிரிந்தது போல இன்றைய தமிழும் இன்னொரு மணிப்பிரவாளத்தின் தாக்கத்தினால் தன் மரபையே இழந்து மலையாளம் 2.0 போல இன்னொரு மொழியாக மாறிவிடும் என்று அஞ்சினார். 21ம் நூற்றாண்டில், கணினியிலும் வலையிலும் தமிழ் பரவிய பின்னால் கூடவா தமிழ் தன் தன்மையை இழந்து போய்விடும் என்று தொழில்நுட்பவாதிகளாகிய எங்களில் சிலர் செல்வாவின் அச்சத்தைப் பொருட்படுத்தவில்லை. சரி, என் அச்சத்தைப் பொருட்படுத்தாதீர்கள், ஆனால், கணேசனின் முன்மொழிவால் தமிழுக்கு என்ன தாக்கம் நேரிடலாம் என்று இது வரை யாராவது ஆராய்ந்திருக்கிறார்களா என்ற கேள்வியை முன் வைத்தார் செல்வா. அப்படி ஆராயவாவது யூனிகோடு நுட்பக் குழுவுக்கு நம் வேண்டுகோளைத் தெரிவிக்க வேண்டும் என்று மன்றாடினார் செல்வா.
இதற்கு இடையில் இந்திய அரசின் முன்மொழிவின் படி, தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளரான தமிழ் இணையப் பல்கலையின் இயக்குநர் ப. நக்கீரனுக்கு வந்தது. அதில் இந்திய அரசின் கிரந்த முன்மொழிவுக்குத் தமிழக அரசின் பின்னூட்டத்தைத் தருமாறு இருந்த வேண்டுகோளைத் தொடர்ந்து முனைவர் நக்கீரன் தமிழக மற்றும் புலம்பெயர்ந்த தமிழ் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் தமிழ் அறிஞர்களோடு கலந்து பேசினார். தான் திரட்டிய கருத்துகளை இந்திய அரசுக்கு அனுப்பிய பின்னர் அவருக்கும் உத்தமத்தில் பேரா. செல்வகுமார் எழுப்பிய கேள்விகள் இதை மேலும் ஆராய்வதற்கான போதிய நேரம் இல்லை என்ற எண்ணம் வலுப்பட்டது.
செல்வா மற்றும் பலரின் வலியுறுத்தலின் பேரில் தமிழ் ஆர்வலர்களின் எதிர்ப்புக் கருத்துகளைத் திரட்டி செல்வா நடத்தி வரும் தமிழ் மன்றம் மடற்குழுவில் நல்ல பல கட்டுரைகளை எழுதிவரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும் கவிஞருமான ரவிக்குமார் அவர்களுக்கு நான் சில கடிதங்களை அனுப்பினேன். அரசியல் மற்றும் எழுத்துப் பணிகளில் ஆழ்ந்திருக்கும் ரவிக்குமார் என்னுடைய கடிதங்களுக்கு விடையளிக்காமல் போகவே என் புலம்பெயர்ந்த நண்பர்களுக்கு என் அரசியல் முயற்சியின் தோல்வியைத் தெரிவித்து விட்டு, கணேசனின் முன்மொழிவில் தமிழ் தகவல் தொழில்நுட்பங்களுக்கு ஏதாவது சிக்கல் வருமா என்று பார்ப்பதில் கவனத்தைத் திருப்பினேன்.
அப்போதுதான், மின் தமிழ் குழுமத்தில் ஸ்ரீரமணஷர்மாவின் கிரந்த முன்மொழிவு பற்றிய கட்டுரை கிரந்தம் பற்றி ஒரு முனைவர் பட்ட ஆய்வேடு போன்றது என்று வினோத் ராஜன் எழுதிய கடிதம் என் கண்ணில் பட்டது. ஷர்மாவின் முன் மொழிவைப் பற்றி ஏற்கனவே கேள்விப் பட்டிருந்தாலும், வேலைப் பளுவாலும், கிரந்தம் பற்றி எனக்கு ஏதும் தொடர்பு இல்லாததாலும், நான் அதை ஆழ்ந்து படிக்கவில்லை. வினோத் ராஜனோடு விக்கிப்பீடியா, தனித்தமிழ் போன்றவற்றில் எனக்குச் சில கருத்து வேற்றுமைகள் இருந்தாலும், இந்த இளைஞரின் கிரந்தம், சமஸ்கிருதம், மற்றும் பழைய சமண பௌத்த சமயங்கள் பற்றிய ஆர்வமும் துடிப்பும், தொழில்நுட்பங்களில் அவர் காட்டிய திறமையும் என் கவனத்தை ஈர்த்திருந்தது. தனி மடல்களில் பேரா. செவ்வியார் அவர்களும் வினோத் ராஜனை வெகுவாகப் பாராட்டியிருந்தார்.
விக்கிப்பீடியா பற்றிய கருத்துகளில் ”தமிழ் தாலிபான்” என்றூ வினோதின் கடும் தாக்குதல்களுக்கு ஆளாகி இருந்தாலும், அவரது தொழில்நுட்பத் திறன் பற்றிப் பேரா. செல்வா கொண்டிருந்த மதிப்பும் எனக்கு நினைவுக்கு வந்தது. வினோத் தன் நண்பரைப் புகழ்ந்து எழுதியிருக்கிறாரா, அல்லது ஸ்ரீரமணஷர்மாவின் முன்மொழிவு உண்மையிலேயே ஒர் ஆய்வேடு போன்றதா என்று பார்க்க முடிவு செய்தேன். இதற்கு முன்னர் ஸ்ரீரமணஷர்மாவின் இன்னொரு நீட்டித்த தமிழ் இடங்களில் கிரந்தக் குறியீடுகள் பற்றிய முன்மொழிவை நான் தொழில்நுட்ப அடிப்படையில் எதிர்த்திருந்தேன். அதனால், அவருடன் எனக்குக் கருத்து வேற்றுமை இருந்தாலும், ஷர்மாவின் கிரந்த முன்மொழிவைப் படிக்கத் தொடங்கினேன்.
ஏற்கனவே கணேசனின் கிரந்த முன்மொழிவையும், இந்திய அரசின் கிரந்த முன்மொழிவையும் பார்த்து விட்டு அவற்றின் நீர்த்துப் போன வாதங்களால் ஈர்க்கப் படாத எனக்கு, ஷர்மாவின் கிரந்த முன்மொழிவு ஒரு தேர்ந்த ஆராய்ச்சி வல்லுநரின் ஆய்வேடு போல் தோன்றியது. ஆங்காங்கே சிறுபிள்ளைத்தனமான வாதங்களையும் தேவையற்ற சொற்றொடர்களும் இருந்தாலும், அவை இள்ம்பருவத்தில் எல்லோரும் செய்யக்கூடிய பிழைகள்தாம். அவரது முன்மொழிவை ஏற்கனவே பல இடங்களில் நான் பாராட்டியது அவருக்கு மிகுந்த கூச்சத்தைக் கொடுத்திருப்பதால் மேலும் நான் ஏதும் சொல்லுவதற்கில்லை. எப்படி தமிழ் மொழியிலும், தமிழ் எழுத்துகளிலும், தமிழ் தகவல் தொழில் நுட்பத்திலும், என்னுடைய மொழி ஆர்வத்தினால் நான் நேரத்தை ஒதுக்கி ஈடுபடுகிறேனோ, அதை விடப் பன்மடங்கு ஆர்வத்துடனும் ஈடுபாட்டுடனும் இந்த இளைஞர் இந்த முன்மொழிவை எழுதியிருந்தது என்னைக் கவர்ந்தது. அது மட்டுமல்லாமல், தமிழ் நீட்சியில் கிரந்த எழுத்துக் குறியீடு பற்றிய அவரது முன்மொழிவு தொடர்பாகத் தனிமனிதப் பழிச்சொற்களுக்கு அவர் ஆளாகி இருந்ததும் நினைவுக்கு வந்தது. வாய்ப்பு வரும்போது ஷர்மாவிடம் தொடர்பு கொண்டு அவரைப் பாராட்ட வேண்டும் என்று எண்ணினேன்.
அரசியல்வாதிகளுக்கு ஓரிரண்டு மின்னஞ்சல்கள் மட்டும் அனுப்பி வைத்துவிட்டு நம் வேலை முடிந்து விட்டது என்று இருந்தால் ஒன்றும் நடக்காது என்று எண்ணிய புலம்பெயர்ந்த தமிழர்கள் அமெரிக்காவிலிருந்து தோழர் ரவிக்குமாருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நான் அனுப்பிய மின்னஞ்சல்களைப் பார்க்குமாறு நச்சரித்தனர். நான் அனுப்பிய செய்திகளை மட்டும் வைத்துக் கொண்டு இதைப் பற்றிய ஒரு முடிவுக்கு வர இயலாது என்று எண்ணினாலும், அமெரிக்கத் தமிழர்களின் வலியுறுத்தலால், இதைக் கவனிக்க வேண்டும் என்று முடிவு செய்து தன் கட்சித் தலைவர் தொல் திருமா அவர்களுடன் தோழர் ரவிக்குமார் பேசியிருக்கிறார். இது பற்றி மேலும் தெரிந்து கொள்ள பாண்டிச்சேரிக்குச் சென்று பிரெஞ்சு கீழை நாட்டியல் கழகத்தில் பேரா. ழான் லூக் செவ்வியார் மற்றும் பல இந்தியவியல் அறிஞர்களோடு கலந்து பேசியிருக்கிறார்.
இதற்கு முன்னர் கணேசனின் தலைமையில் ஸ்ரீரமணஷர்மாவின் கிரந்த முன்மொழிவுக்கு எழுந்த அரசியல் எதிர்ப்புகளின் வன்மையும், இனவெறுப்புத் தொனியும் பேரா. செவ்வியார் அவர்களை அதிரவைத்தன. தமிழ்த்தேசியவாதிகளுக்கு சமஸ்கிருதம், கிரந்தம் என்றாலே இனவெறி கலந்த ஆழ்ந்த வெறுப்பு மேலோங்கி எதையும் எதிர்ப்பார்கள் என்ற முடிவுக்கு வந்த செவ்வியார், கிரந்த முன்மொழிவு உடனே ஏற்கப்படாவிட்டால், கிரந்த எழுத்துமுறை பற்றி நன்கு தெரிந்த ஒரு சில மூதறிஞர்கள் தங்கள் வாழ்நாளுக்குள் இதை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வாய்ப்பை இழந்து விடுவார்கள் என்று தோழர் ரவிக்குமாரிடம் சொல்லி, கிரந்த எழுத்து முறை எதிர்ப்பை மட்டுப்படுத்தி இந்த முன்மொழிவை யூனிக்கோடு ஏற்றுக் கொள்ள வழி செய்யுமாறு ரவிக்குமாரிடம் வலியுறுத்தினார். பேரா. செவ்வியார் மற்றும் துணையிருந்த அறிஞர்களின் தமிழ்த்தொண்டைப் பற்றி வியந்த ரவிக்குமார், பேரா. செவ்வியாரின் வேண்டுகோளுக்குச் செவி சாய்க்கத் தொடங்கினார்.
இருப்பினும், இதன் பின்புலத்தைப் பற்றி அரசிடம் சொல்லாவிட்டால், இது பிற்காலத்தில் பெரும்பூதமாகக் கிளம்பினால் கூட்டணி அரசுக்கும், நடுவணரசு அமைச்சர் ஆ. ராசாவுகும், தமிழக முதலவருக்கும் தீராப் பழி நேரிடலாம் என்றும், ஈழத்தமிழர்களைக் காப்பாற்றுவதில் மெத்தனமாக இருந்து தீராப்பழி ஏற்றது போல் இதிலும் கோட்டை விட்டுவிடாதீர்கள் என்று புலம்பெயர்ந்த தமிழர்கள் தொடர்ந்து வலியுறுத்தியதால் தமிழக அரசியல்வாதிகள் சிலர் இதைப் பற்றி மிகவும் குழம்பினார்கள். கணேசன் முன்மொழிவுக்கும், ஊடகங்களில் காரசாரமாகக் கண்டிக்கப்பட்ட ஸ்ரீரமணஷர்மாவின் வேறு முன்மொழிவுக்கும் வேறுபாடு தெரியாமல், ஊடகங்களில் வந்த அறிக்கைகளைப் பார்த்து அதிர்ந்து போன அமைச்சர்களும், அலுவலர்களும் விவரம் என்னவென்று புரிந்து கொள்ள முயன்றார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு செய்தி சொல்ல, தமிழக உயர்மட்டங்களில் இருந்த கணேசனின் ஆதரவாளர்கள் மாற்றுக் கருத்து சொல்ல, தமிழக அரசியல் தலைமை வெகுவாகக் குழம்பியிருந்தது.
இந்தக் குழப்பங்கள் பற்றிய தெளிவு வருவதற்காக இதைப் பற்றிய கருத்துகளைப் பல அறிஞர்களிடம் கேட்டுக் கருத்தறியும் பொறுப்பை அண்மையில் செம்மொழித் தமிழ் மாநாடு நடத்தி வெற்றி கண்டிருந்த தஞ்சைத் தமிழ்ப் பல்கலைத் துணைவேந்தர் ராஜேந்திரன் அவர்களிடம் கேட்க முடிவு செய்தார்கள். துணைவேந்தர் இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்வார் என்று காத்திருந்த ரவிக்குமார் அவரோடு தொடர்பு கொண்டார். புலம்பெயர்ந்த தமிழர்கள் அமெரிக்காவிலிருந்தும், சிங்கப்பூரிலிருந்தும், ஐரோப்பாவிலிருந்தும் தொடர்ந்து அரசியல் தலைமையைத் தொடர்பு கொண்டு கணேசனின் கிரந்தத்தில் தமிழ் எழுத்துத் திணிப்பை எதிர்க்குமாறு வற்புறுத்தினர். இவர்களில் சிலரோடு கூடிப் பேசிய துணைவேந்தர் ராஜேந்திரன் மற்றும் இரவிக்குமார் நவம்பர் 2, செவ்வாய் இரவு எனக்கு மின்னஞ்சல் அனுப்பி மறுநாள் மாலை 4 மணிக்கு நடக்கவிருக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள வருமாறு அழைத்தார்கள்.
அழைப்பை ஏற்று என்னுடைய தொலைபேசி எண்ணைத் துணைவேந்தருக்கு அனுப்பியவுடன் என்னைத் தொடர்பு கொண்டு பேசினார் பேரா. ராஜேந்திரன். இந்தக் கூட்டத்துக்கு வேறு யாரையெல்லாம் அழைக்கலாம் என்று என் கருத்தையும் கேட்டார். நான் எனக்குத் தெரிந்த நண்பர்கள் பெயர்களைக் குறிப்பிட்டேன். எல்லோரும் தன் கருத்தை ஆதரிப்பவர்களை மட்டும் திரட்டினால் இது கருத்தறியும் கூட்டமாக இல்லாமல் கட்சிக்கூட்டம் போல் ஆகிவிடும் என்று கவலைப் பட்ட துணைவேந்தர் கிரந்தத்தில் தமிழ் எழுத்துகள் வேண்டும் என்று ஆதரிப்பவர்கள் பெயர்களைக் கேட்டார். கணேசனைத் தவிர இதை ஆதரிப்பவர்கள் யார் என்று தெரியாவிட்டாலும், இந்திய அரசின் கிரந்த முன் மொழிவு பற்றி புது தில்லியில் கூடிய கூட்டத்தில் கலந்து கொண்ட ஸ்ரீரமணஷர்மாவுக்கும், அவரது நண்பர் வினோத் ராஜனுக்கும் இது பற்றித் தெரிந்திருக்கலாம் என்று அவர்கள் பெயரைப் பரிந்துரைத்தேன். அவர்கள் தொலைத்தொடர்பு பற்றிய விவரங்கள் கிடைக்குமா என்று துணைவேந்தர் கேட்டார். வலையுலகில் அவர்கள் தொடர்பு கிடைப்பதா அரிய செயல் என்று எண்ணி கண்டு பிடித்து விடுகிறேன் என்று உறுதி அளித்தேன்.
நள்ளிரவுக்குப் பின்னால் மின் தமிழ், தமிழ் மன்றம், தமிழ் உலகம், சி-தமிழ், உத்தமம் பொதுமன்றம் ஆகிய குழுமங்களுக்குத் துணைவேந்தரின் சிறப்புக் கூட்டம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டேன். அவற்றில் ஸ்ரீரமணஷர்மா மற்றும் வினோத் ராஜன் தொடர்புத் தகவல்களைக் கேட்டிருந்தேன். பின்னர் வினோத் ராஜனின் வலைத்தளம் வழியாக அவரது மின்னஞ்சல் முகவரியையும், ஷர்மாவின் கிரந்த முன்மொழிவிலேயே அவரது மின்னஞ்சல் முகவரியையும் கண்டு பிடித்து அவர்களுக்குத் தனிக்கடிதமும் எழுதிக் கூட்டத்துக்கு வருமாறு அழைத்துத் துணைவேந்தருடன் தொடர்பு கொள்ளுமாறும் வேண்டினேன்.
பிறகு ஒரு குழுமத்தில் நான் இவ்வாறு ஷர்மாவைப் போற்றியதையும், வினோத் ராஜனை அழைத்ததையும் ஒரு பேராசிரியர் தவறாகப் புரிந்து கொண்டு எனக்கு எழுதிய கடிதம் என்னை வெகுவாகப் புண்படுத்தியது. மொழி, பண்பாடு, தொழில்நுட்பம் இவற்றைப் பற்றி மாறுபட்ட கருத்து கொண்டவர்களும் பண்புடன் கலந்து பேசி, சிக்கல்களுக்குத் தீர்வு காணும் தன்மை தமிழ்நாட்டில் வெகுவாக அருகிவிட்டது. அரசியல் மேடைகளில் மாற்றுக் கருத்துகள் மோதினாலும், தனிவாழ்வில் மனிதர்களோடு அன்பாகப் பழகிய அரசியல் தலைவர்களைப் பார்த்து வளர்ந்தவன் நான். இந்தப் பண்பாடு, நான் அமெரிக்கா சென்ற பிறகு மேலும் வலுப்பெற்றது. எதிர்க்கருத்து கொண்டவர்கள் எல்லோருமே எதிரிகள் இல்லை. தமிழக மொழி, இன அரசியல் பற்றி என் கருத்துகள் அனைத்திலுமே நானும் என் அருமை நண்பனும் கடுமையாகச் சாடிக்கொள்வோம். பார்ப்பவர்கள் ஏதோ கை கலப்பு நடக்குமோ என்று அஞ்சினாலும், இது அண்ணன் தம்பி சண்டைதான். இன்று அடித்துக் கொள்வோம், நாளை சேர்ந்து கொள்வோம். ஆனாலும், தற்கால அமெரிக்கா போலவே, தற்காலத் தமிழகத்திலும் கலாச்சாரப் போர்களில் நஞ்சு கலந்து கொண்டிருக்கிறது. இதன் தாக்கத்தினால்தான் அந்தப் பேராசியரும் என் மீது பழி போட்டிருக்க வேண்டும். அதே நேரத்தில் அந்த இளைஞர் ஸ்ரீரமணஷர்மா இந்த இளம் வயதில் எப்படிப் பட்ட தாக்குதல்களுக்கு ஆளாகி இருக்கிறார் என்றும் தோன்றியது. தீதும் நன்றும் பிறர்தர வாரா.
வினோதும், ஸ்ரீரமணஷர்மாவும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாது என மின்னஞ்சலில் தெரிவித்திருந்தார்கள். அது ஏமாற்றம் அளித்தது. துணைவேந்தர் அஞ்சியது போல இது ஒரு கட்சிப் பேரணியாக மாறிவிடுமோ என்று அஞ்சினேன். குறைந்தது ஷர்மாவின் கருத்து என்ன என்பதையாவது மின்னஞ்சல் மூலம் தெரிந்து கொள்ளலாம் என முயன்றேன். இதற்கு நடுவில் என்னோடு தொடர்பு கொள்ளும்படி வினோதுக்கும் ஷர்மாவுக்கும் பேரா. செவ்வியார் ஆதரவாகப் பரிந்துரைத்திருந்தார். அவரது கடிதத்தாலோ என்னவோ ஷர்மா எனது மின்னஞ்சலுக்கு விடையளித்தது மட்டுமல்லாமல, நல்ல பல அரிய தகவல்களை விவரமாகத் தெரிவித்தார். அவருக்கு என் மீது எப்படி நம்பிக்கை வந்ததோ தெரியவில்லை, ஆனால், இந்தக் கடிதத்தில் தனது தனித் தொலைபேசி எண்ணையும் வேறு யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்ற வேண்டுகோளுடன் தந்தார்.
கூட்டத்துக்கு அவசரமாகக் கிளம்பிக் கொண்டிருந்த எனக்கு வண்டியில் சென்று கொண்டிருக்கும்போது அவரது மின்னஞ்சல் கிட்டியது. உடனடியாக அவருடைய எண்ணுக்குத் தொடர்பு கொண்டேன். நல்ல துடிப்பான இளைஞர். நான் பேசிய அந்த 40 நிமிடங்களில் கிரந்த/தமிழ்க் கல்வெட்டுகள், செப்பேடுகளைப் பெயர்த்து எழுதுவதில் உள்ள சிக்கல்கள் என்று தொழில்நுட்பம் தொடர்பானச் சிக்கல்களைப் பற்றிப் பேசினோம்.
தமிழ் எழுத்துகளைக் கிரந்தக் குறியீட்டில் இடத் தேவையில்லை என்பதுதான் ஷர்மாவின் கருத்தும். நல்ல வேளையாகக் கருத்து வேறுபாடு இல்லாததால், இந்த முதல் தொடர்பில் நுட்பச்சிக்கல்கள் பற்றி மட்டும் பேசினோம். அவரோடு பேசிக் கொண்டிருந்த போது பல தொழில்நுட்பச் சிக்கல்கள். குறியீட்டுச் சிக்கல்கள், ஆவணப்படுத்தலில் சிக்கல்கள் என்று தோன்றியது. இதை முழுதும் ஆய்ந்து தெளிவு பெறக் கல்வெட்டியல், மொழியியல் புலமை உள்ளோர் உட்பட்ட துறை வல்லுநர்கள் குழுவொன்று தேவை என்பது மட்டும் புலப்பட்டது. ஷர்மாவும் இதைப் பற்றி மேலும் கொஞ்சம் ஆராய வேண்டும் என்று சொன்னார். முழுக்க முழுக்கத் தேவை இல்லை என்றும் சொல்ல முடியாது, ஆனால் தேவை என்று சொன்னால் வேறு சிக்கல்கள் வரலாம் என்றும் அவர் ஏற்றுக் கொண்டார்.
கூட்டம் தொடங்குவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு டெல்லி ஐ.ஐ.டி. முன்னாள் பேராசியரும், உலக எழுத்துமுறைகள் பற்றிச் சென்னையில் கிழக்கு பதிப்பகத்தோடு இணைந்து தொடர்கூட்டத்தில் பேசிவரும் என் நண்பர் பேரா. சுவாமிநாதன் தொடர்பு கொண்டார்.
(தொடரும்)
அன்புடன்,
மணி மு. மணிவண்ணன்
சென்னை, தமிழ்நாடு
(தீபாவளி விடிகாலை)
[1] Bibliographic details for கிரந்த எழுத்துமுறை
Page name: கிரந்த எழுத்துமுறை
Author: விக்கிப்பீடியா contributors
Publisher: விக்கிப்பீடியா, .
Date of last revision: 25 அக்டோபர் 2010 05:16 UTC
Date retrieved: 4 நவம்பர் 2010 18:55 UTC
Permanent URL: http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88&oldid=618292
Page Version ID: 618292
[2] Proposal to Encode the Grantha script in Unicode, Shriramana Sharma
http://www.google.com/url?sa=D&q=http://sites.google.com/site/jamadagni/files/utcsubmissions/grantha-proposal-FINAL.pdf&usg=AFQjCNEIDGaOFNviP8TUYrCyPpPFgg2RCg
வேங்கைத் திட்டக் கட்டுரை போட்டியில் வெற்றி.
4 ஆண்டுகள் முன்பு
9 கருத்துகள்:
பகிர்வுக்கு நன்றி!தொடர்ச்சியை எதிர் நோக்குகிறேன்!!
குறுகிய எண்ணம் அவ்வளவே.
இந்தச் சிக்கலின் பின்புலத்தில் நடந்தவைகளை அறியச் செய்தமைக்கு நன்றி. அடுத்தப் பகுதியை விரைந்து எதிர்பார்க்கிறேன்.
சீக்கிரம் தொடர்ச்சியை எழுதுங்க.
மணி
விபரமாக இடுகைக்கு நன்றி.
ஷர்மாவின் 'சுருக்கக்கட்டுரை' வாசிக்க நேர்ந்தது. தொழில்நுட்பம் வழக்கம்போலப் புரியவில்லை. அவர் தமிழ் 'இட ஒதுக்கீட்டுக்குள்ளே' கிரந்தத்தைச் சேர்க்கக்கேட்கவில்லை என்று(ம்) புரிந்தது. ஆனால், அவரின் கட்டுரை சொல்வதை நான் புரிந்ததை வைத்துப்பார்த்தால், நீட்சித்தமிழ் என்றொரு தனி வெங்கலக்குவளையைக் கற்பித்து, அதற்குள்ளே சமஸ்கிருதத்தை வாசிக்க வசதியாகக் கிரந்தத்தைச் சேர்க்கக் கேட்கின்றார் என்று பட்டது. (ஸ், ஜ், ஷ கிரந்தத்தோடு ஏதும் கால் கழுவிக்கொள்ளமாட்டேன், தலை நனைக்கமாட்டேன் என எனக்கு எதிர்ப்பில்லை. ஆனால்,) அவரின் எழுத்துகள் இவற்றினை விண்டும் அப்பாலே சமஸ்கிருதத்தைத் தமிழிலே வாசிப்பதற்காக மட்டுமே அத்துணை முயல்கின்றது என்று தோன்றியது. கட்டுரையிலே அவரின் அறிமுகமும் அவ்வாறே சொல்வதாகப்பட்டது. நீட்சித்தமிழ் என்பது பற்றி உங்கள் கருத்து என்ன? அப்படியானால், கணேசனின் நீட்சித்தமிழும் சரியென்றாகிவிடுமே!
கணேசனின் வாதம் பற்றிச் சொல்ல எதுவுமில்லை. அவரின் வாதங்கள் - அவர் நண்பரானபோதுங்கூட - விடாக்கொண்டனொருவரின் விதண்டாவாதங்களாகமட்டுமே தோன்றியது. கெடுகாலமாக, யூனிகோட் போன்றவற்றிலேயிருப்பவர்கள் இப்படியான தனியாட்களினதும் டெல்லிவாலாக்களின் பிரதேசமொழிகள்மீதான தன்னிச்சைச்செயற்பாடுகளிலுமே குதிரையோடுகின்றனர். மொழிக்கான கேடு பற்றி அவர்கள் எதுவுமே எண்ணுவதுமில்லை; அவர்களுக்கு எண்ணத்தேவையுமில்லை.
ஆனால், ஷர்மாவினை எதிர்ப்பவர்கள் அனைவரினையுமே நீங்கள் இனவெறியர்களாகவோ மொழிவெறியர்களாகவோ பட்டியலிட்டுவிட்டீர்களோ தெரியவில்லை. அதுபோல, இத்துணைகாலமும் இணையத்திலே புழங்கும் உங்களுக்கு ஷர்மாவினை ஆதரிப்பவர்களிலே பெரும்பாலானோர் அவர் எவரைச் சார்ந்தவர் என்பதும் எதனை முன்னிறுத்த இத்தனையையும் செய்கின்றார் என்பதுமே உளங்கொண்டு ஆதரிக்கின்றார்களென்று அறிவீர்களென்று நம்புகிறேன். இரு பக்கங்களிலும் இதே நிலைதான்; மொழியினைப் பற்றி எவரும் பெரிதாகக் கண்டுகொண்டதில்லை. மீதிப்படி, உங்கள் கட்டுரையும் வானொலிச்செவ்வியும் மிகவும் தெளிவாகவும் நடுநிலைதவறாதும் உணர்நிலை மிகாதும் இருந்தது நன்றி.
தற்போது ஒரு நல்ல செய்தி:
சற்று முன் யூனிகோடு நுட்பக் குழுவின் தலைவி லிசா மோரிடமிருந்து வந்த மின்னஞ்சலின் படி, கிரந்தம் தொடர்பான இரு முன்மொழிவுகள் பற்றிய முடிவுகள் (இந்திய அரசின் கிரந்தம், ஷர்மாவின் நீட்சித் தமிழ்) இரண்டும் மேலும் தமிழகப் பயனர்கள் மற்றும் பன்னாட்டு மொழியறிஞர்கள் கருத்து அறிவதற்காக ஒத்தி வைக்கப் பட்டுள்ளன. இவை பற்றிய விவாதங்கள் குழுவில் தொடர்கின்றன. கருத்து வழங்க விரும்புபவர்கள் யூனிகோடுக்குத் தொடர்ந்து கருத்தளிக்கலாம்.
பெயரிலி,
தங்கள் கருத்துகளுக்கும் பாராட்டுக்கும் நன்றி. ஷர்மாவின் நீட்சித்தமிழ் முன்மொழிவை அவர் நீட்சித்தமிழ் என்ற பெயரை வைக்காமல், வேறு பெயர் வைத்திருந்தார் என்றால், யாரும் கவனிக்காமலேயே ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கும். அது தமிழ் எழுத்துடன் தொடர்புள்ளதால் அவர் நீட்சித்தமிழ் என்றார். அவர் வேண்டுகோளுக்கு ஏற்கனவே யூனிகோடு நுட்பத்தில் ஆதரவு இருப்பதால் தனி இடம் தேவை இல்லை என்று முத்து வாதிட்டார். எனது கருத்தோ, ஒரு மேற்குறி/கீழ்க்குறிக்கெல்லாம் தனி இடம் கொடுக்கத் தொடங்கினால், அடுத்தது உருது/அரபிக்குக் கொடுக்க வேண்டும், பின்னர் சிங்களம், மலாய், என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும். எனவே மீக்குறிகளுக்கு என்று ஒரு தனித்தீர்வு கொடுக்க வேண்டும்.
ஷர்மாவை எதிர்ப்பவர்கள் அனைவருமே “இனவெறியர்கள்”, “மொழி வெறியர்கள்” என்று நான் முத்திரை குத்தவில்லை. ஆனால், அவரது நீட்சித்தமிழை எதிர்ப்போர்கள் அனைவருமே அந்த நிலைக்கு ஆளாயிருக்கிறோம்! மேலைநாட்டுப் பேராசிரியர்கள் சிலரின் கருத்துகளே அதற்குச் சான்று. அவரை ஆதரிப்பவர்கள் யாருமே அவரை எதிர்ப்பவர்களைச் சாதீய அடையாளம் கொண்டு தாக்கவில்லை. அவரோ, அவரது ஆதரவாளர்களோ தமிழைக் கைப்பற்ற என்று இந்தச் சூழ்ச்சி செய்ததாக என்னால் நம்ப முடியவில்லை. ஷர்மாவுக்கு அப்படி ஒரு கருத்து இருந்திருந்தால் அவர் ஏற்கனவே BMP இல் இருக்கும் தமிழ் வெற்றிடங்களையே நிரப்பி இருப்பார். இதற்கென்று தனியாக SMPல் இடம் கேட்டிருக்க மாட்டார். இப்போதைய சிக்கல் தமிழில் பிராம்மணர்கள் திணிக்கும் சமஸ்கிருத மணிப்பிரவாளம் அல்ல. சன் டிவியும், குமுதம், விகடனும் திணிக்கும் டிங்கிலிஷ் ஜெம்கோரல் தான்! சமஸ்கிருதம் வந்தால் தமிழ் மலையாளம் ஆகிவிடும் என்று பதறுவோர், ஆங்கிலம் வந்ததால் தமிழ் இன்றே சிதைந்து கொண்டு இருப்பதைத் தடுக்க முடிகிறதா? புதுக்கவிதைகளில் பிறமொழிச் சொற்களின் கலப்பை என்ன செய்ய முடியும்? தொழில்நுட்பக் குழுக்கள் மொழி அரசியல் போர்க்களங்களாக ஆவதை விரும்புவதில்லை. ஆனால் ஆகிவிட்டன.
நேற்று இரவு யூனிகோடு நுட்பக் குழுவின் தலைவி லிசா மோரிடமிருந்து வந்த மின்னஞ்சலின் படி, கிரந்தம் தொடர்பான இரு முன்மொழிவுகள் பற்றிய முடிவுகள்
(இந்திய அரசின் கிரந்தம், ஷர்மாவின் நீட்சித் தமிழ்) இரண்டும் மேலும் தமிழகப் பயனர்கள் மற்றும் பன்னாட்டு மொழியறிஞர்கள் கருத்து அறிவதற்காக ஒத்தி வைக்கப் பட்டுள்ளன. இவை பற்றிய விவாதங்கள் குழுவில் தொடர்கின்றன. கருத்து வழங்க விரும்புபவர்கள் யூனிகோடுக்குத் தொடர்ந்து கருத்தளிக்கலாம்.
மணி
நன்றி. சன் தொலைக்காட்சி + தமிழாங்கிலக்கொடுமை பற்றிய உங்கள் கருத்தோடு முற்றாக உடன்பாடே. ஆயினும், சர்மாவினை ஆதரிக்கும் பலரும் மறுபக்கத்தினை எதிர்க்கும்பலரும் ஷர்மாவின் தேவையோடு தம்முடையதினை உடன்காண்பதிலும், எதிர்ப்புறத்தினரின் அரசியலை மறுப்பவர்களாகவுமே காண்கிறேன். மேற்கொண்டு தொடர்ச்சியாகச் சொல்லக் கருத்துகள் உள. ஆயினும், இப்போது இக்கதையாடலைவிட முதன்மையானது, முன்னிற்கும் சிக்கல். அதனால், பின்னொரு பொழுதே பேசுவோம்.
கருத்துரையிடுக