சனி, நவம்பர் 27, 2010

தொன்மைத்தமிழின் தொடர்ச்சி

தமிழ் எழுத்துகளைச் சீர்திருத்தம் என்ற பெயரில் சிதைக்கக் கூடாது என்ற அக்கறை உள்ள சிலர் தமிழ் எழுத்துப் பாதுகாப்பு இயக்கம் என்ற ஒரு மடலாடற்குழு ஒன்றை அமைத்தனர்.  எழுத்துச் சீர்குலைப்பு முயற்சிகளைப் பல ஆண்டுகளாய் எதிர்த்து வரும் நானும் அதில் ஒரு தொடக்கநாள் உறுப்பினன்.  நேற்று அக்குழுவுக்கு அண்மையில் இன்னொரு எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய நூல் ஒன்றுக்கு இந்து நாளேட்டில் மதிப்புரை தந்திருந்த சுட்டியை ( http://www.hindu.com/br/2010/08/17/stories/2010081751151300.htm ) அனுப்பினேன்.

எழுத்துச் சீரழிப்பு முயற்சிகளை நான் எதிர்த்து வந்திருக்கும் வரலாறு தெரியாத ஒரு தமிழ்ப் புலவர் இதைத் தவறாகப் புரிந்து கொண்டு  “ஆட்டைக் கடிச்சு.. மாட்டைக் கடிச்சு.. “ என்ற தலைப்பில் இணைய வரலாற்றின் தொல்பழங்காலத்துச் சிரிப்புத் துணுக்கு ஒன்றை அனுப்பி வைத்தார்.  அதில் ஆங்கிலம் எப்படி ஒரு சில எழுத்துகளை மாற்றிய பின்பு ஜெர்மன் மொழி போல் ஆகிவிடுகிறது என்பதை நகைச்சுவையாக எழுதியிருப்பார்கள்.

சிரிப்புதான்.  ஆனால், இதிலும் ஒரு நுட்பம் இருப்பது பலருக்கும் தெரிவதில்லை. இது ஜெர்மானியர்களைக் கிண்டல் செய்வது போல் அமைந்திருந்தாலும்,  உண்மையில் ஆங்கிலம் ஒரு ஜெர்மானியக் கிளைமொழிதான் என்பதை மறக்கக் கூடாது.

ஆங்கிலத்தில் கிரேக்க, லத்தீன வேர்ச்சொல்களைக் களைந்து எடுத்து பழைய
ஆங்கிலமொழிக்குப் போவோம் என்று யாரேனும் தனி ஆங்கில உணர்வாளர்கள் முயல்வார்களே ஆனால், அது கிட்டத்தட்ட ஜெர்மன் போல்தான் இருக்கும்.

இருப்பதிலேயே மிகப் பழைய ஆங்கில இலக்கியம் பத்தாம் நூற்றாண்டுக்கு
முன்னர் எழுந்த பெஓவுல்ஃப் (beowulf) என்பது.  இத்தனைக்கும், அதில்
கிரேக்கமும், லத்தீன வேர்களும் கலந்துதான் உள்ளன.  அதன் மூல வடிவைப்
பார்க்க http://www.humanities.mcmaster.ca/~beowulf/main.html என்ற சுட்டியில்
old text என்பதைத் தெரிவு செய்யவும்.  பின்னர் பழைய ஆங்கில வடிவில் பார்க்கலாம்.  அப்படிப் பார்த்தால் அது இப்படித்தான் இருக்கும்:

Ða wæs on burgum         Beowulf Scyldinga,
leof leodcyning,         longe þrage
folcum gefræge         (fæder ellor hwearf,
aldor of earde),         oþþæt him eft onwoc
heah Healfdene;         heold þenden lifde,
gamol ond guðreouw,         glæde Scyldingas.
ðæm feower bearn         forð gerimed
in worold wocun,         weoroda ræswan,
Heorogar ond Hroðgar         ond Halga til;

பதினான்காம் நூற்றாண்டின் சாசர் இயற்றிய கேன்டர்பரி டேல்ஸ் என்ற இலக்கியம் இடைக்கால ஆங்கிலத்தில் இருக்கும்.  அதை நம்மால் ஓரளவு புரிந்து கொள்ள இயலும்.


Whyt was hir smok and brouded al bifore ...
Her filet brood of silk, and set ful hye:
And certainly she hadde a lecherous ye
She was ful more blisful on to see
than is the new pear tree


ஆங்கிலம் மட்டுமல்ல, உலகின் பல மொழிகளின் தொல்லிலக்கியங்களை இன்று வாழும் அவர்கள் கொடிமரபினர் புரிந்து கொள்ள முடிவதில்லை.  பழையன கழிதலும், புதியன புகுதலும் வழுவல என்ற கோட்பாட்டை
ஆழமாகப் பின்பற்றியதாலோ என்னவோ, பல மொழிகளின் தன்மை மிகவும் மாறியதால் மூல மொழி கிட்டத்தட்ட வேற்று மொழியாகவே மாறி அடையாளம் தெரியாமல் போய் விட்டிருக்கிறது.

ஆனால், தமிழ் அப்படி அல்ல.  மாற்றங்களைத் தொடர்ந்து ஏற்றுக் கொண்டு வந்திருந்த போதிலும், தொன்மைத் தமிழ் வியக்கத் தக்க வகையில் தொடர்ந்து வருகிறது.   பத்தாம் நூற்றாண்டுத் தமிழை  மட்டுமல்ல,  2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்கத்தமிழையும் நம்மில் பலரால் படிக்க முடிவது மட்டுமல்ல புரிந்து கொள்ள முடிவதும் தமிழின் தொடர்ச்சிக்கு ஒரு நல்ல எடுத்துக் காட்டு.




“யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா”

என்ற சங்கப் பாடலை நாம் பள்ளியில் படிக்கிறோம்.  இதைப் படிக்கும்போது சங்கத் தமிழில் முறையான பயிற்சி இல்லாமலேயே நம்மால் அச்சொற்களை அடையாளம் காண முடிகிறது.  பொருளையும் ஓரளவு புரிந்து கொள்ள முடிகிறது. அண்மையில் நடந்து நிறைவேறிய செம்மொழி மாநாட்டின் கருப்பொருள் பாடலே “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்றுதான் தொடங்குகிறது!  ஈராயிரம் ஆண்டுத் தொடர்ச்சியுள்ள பாடல் வரிகள் நம்மை இன்னும் ஈர்க்கின்றன.



வள்ளல் பாரியின் பறம்புமலையைத் தமிழ் வேந்தர் மூவரும் சூழ்ந்து முற்றுகையிட்டு அவரை வென்ற நிலையில், பாரியின் இரண்டு பெண்களும் பாடியதாக வரும் பாடல் இதோ:

அற்றைத் திங்கள் அவ் வெண் நிலவில்
எந்தையும் உடையேம்; எம் குன்றும் பிறர் கொளார்;
இற்றைத் திங்கள் இவ் வெண் நிலவில்
வென்று எரிமுரசின் வேந்தர் எம்
குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே!

 இதில் வரும் சொற்கள் கவிதை நடையில் இருந்தாலும், இன்றும் வாழும் வரிகள்.  ஓரளவு பயிற்சியில் இதைப் படித்தால் ஈராயிரம் ஆண்டுகள் கழித்தும் இந்தப் பாடல் நம் உள்ளத்தைப் பிழியும்.


சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

என்ற (குறைந்தது) 1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்குறளை எந்த உரையும் இல்லாமலேயே நம்மால் படித்துப் புரிந்து கொள்ள முடிகிறது. பல திருக்குறள்களை நாம் பேருந்துகளில் பார்க்கிறோம்.   “வாயில் தோறும் வள்ளுவம்” என்ற திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சியின் அனைத்து அலுவலங்களின் வாயில்களிலும் ஒரு திருக்குறள் அதன் தெளிவுரையோடு பொறித்து வைத்திருக்கிறார்கள்.


வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி
கடல் வண்ணன் பண்டொரு நாள் கடல் வயிறு கலக்கினையே
கலக்கிய கை அசோதையார் கடை கயிற்றால் கட்டுண்ணகை
மலர்க்கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே

என்ற பாடலை மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி அவர்கள் பாடிக்
கேட்டிருக்கிறோம். அது (குறைந்தது)  1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட
சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவையின் வரிகள் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

நதியில் விளையாடிக் கொடியில்
தலைசீவி நடந்த இளந்தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி
மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே

என்ற கண்ணதாசனின் திரைப்படப் பாடல் 1960களின் தொடக்கத்தில் பட்டி தொட்டியெல்லாம் முழங்கிய பாடல்.  இன்றும் மக்கள் கேட்டு மகிழும் பாடல்.

அண்மையில் வந்த இருவர் என்ற படத்திலும்,

நறுமுகையே நறுமுகையே நீயொரு நாழிகை நில்லாய்
செங்கனி ஊறிய வாய் திறந்து நீயொரு திருமொழி சொல்லாய்
அற்றைத் திங்கள் அந்நிலவில் நெற்றித்தரள நீர்வடிய
கொற்றப்பொய்கை ஆடியவள் நீயா

என்று வரும் பாடலில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பாரிமகளிர் வரிகளை எடுத்தாண்டு இருந்தாலும், மக்களால் புரிந்து கொண்டு அதைக் கேட்டு மகிழ முடிகிறது.

இது 1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட இலக்கியங்களையும் நம் சூழலில் வாழும்
மொழியாகப் படிக்க முடிகிறது என்பதற்கு மட்டுமல்ல அந்த மொழி, பண்பாட்டின் தொடர்ச்சி நம்மிடையே இன்னும் வாழ்கிறது என்பதற்கும் ஓர் எடுத்துக் காட்டு.

கடந்த 1500 ஆண்டுகளில் தமிழைச் சுற்றி எண்ணற்ற தாக்கங்கள்.  தமிழ்
மன்னர்களின் வீழ்ச்சி.  பண்பாட்டுக் கலப்புகள். பிற மொழிகளின்
தாக்கங்கள்.  ஆனால் தமிழை அரசர்கள் மட்டுமின்றி மக்களும் போற்றி வளர்த்ததன் அடையாளமே இந்தத் தொடர்ச்சிக்கு அடிப்படை.



அதனால்தான்,  பல்லவர் ஆட்சியில் கல்வெட்டு மொழி கிரந்த எழுத்துகளில் வடமொழியாக இருந்தாலும்,  பக்தி இலக்கியங்களில் கிரந்தக் கலப்பே இல்லாத தமிழே வழங்கியது.   ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டச் சங்க காலம் தொடங்கி,  12ம் நூற்றாண்டின் கம்ப ராமாயணத்துக்கும் பின்னர் வரை, பிறமொழிச் சொற்களை ஏற்றாலும் வேற்று ஒலிகளையோ, எழுத்துக்களையோ ஏற்காமலேயே தமிழ் இலக்கியம் தழைத்திருந்தது. 

தமிழ் மன்னர்களின் வீழ்ச்சி, வேற்று மொழிகளின் ஆட்சி, புலவர்களை ஆதரிக்கப் புரவலர்கள் இல்லாத நிலை என்று எத்தனையோ சிக்கல்களை எதிர் கொண்டிருந்தாலும், தமிழ் இன்றும் தொடர்கிறது.


இருப்பினும், 1500 ஆண்டுகளில் மொழியில் மாற்றம் ஏற்படுவதும் தவிர்க்க
இயலாததொன்று.  பழைய உரைகளைப் படிப்பதற்கும் பழைய செய்யுள்களைப்
படிப்பதற்கும் ஓரளவுக்காவது பயிற்சி தேவை.  நமக்கு நன்றாகத் தெரிந்தது
போல் இருக்கும் பாடல்களையும் பண்டைக் காலப் பண்பாட்டோடு புரிந்து
கொள்வதற்கும் பயிற்சி தேவை.  இலக்கண இலக்கியங்களைப் புரிந்து
கொள்வதற்கும் பயிற்சி தேவை.

இணையம் வளர்ச்சியினால் தமிழில் பயிற்சியும் பட்டமும் பெற்றவர்கள்
பெரிதும் தமிழ் மடலாடற்குழுக்களுக்குள்ளும், வலையிலும் வலம் வரும்போது, அவர்களது பயிற்சியில் பயின்றதைப் பலருக்கும் பகிர்ந்து கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு தமிழ் இணைய முன்னோடிகள் பலருக்கும் இருந்தது.

ஆனால், அப்படிப் பட்டம் பெற்ற வெகுசிலரே பண்டைத் தமிழ் நூல்களை இன்றைய தமிழருக்கும் அறிமுகப் படுத்தித் தமிழைப் பரப்பும் பணியில்
ஈடுபடுகின்றனர்.  தொல்காப்பியத்திலும், நன்னூலிலும் எண்ணற்ற செய்திகள்
உள்ளன.  சங்க இலக்கியங்களை எடுத்துக் கொண்டால், நாளும் ஒரு பாடல் என்று விளக்கிக் கொண்டே போகலாம்.  தமிழில் பட்டம் பெறாத எழுத்தாளர்கள்
சுஜாதாவும், ஜெயமோகனும் எழுதிய அளவு கூட தமிழ்ப் புலவர்கள் எழுதி நான்
பார்த்ததில்லை.

உண்மையான தமிழ்ப் பணி தமக்குத் தெரிந்த தமிழைப் பகிர்ந்து கொள்வதுதான். தமிழ்ப் புலவர்களிடம் நாம் எதிர்பார்ப்பது குறைந்தது அவ்வளவுதான்.  ஆனால், தமிழில் பட்டம் பெறாதவர்களும் தமிழ் இலக்கியங்களை ஆராய்ந்து கருத்துப் பரிமாறிக் கொள்ள இணையம் வழி காட்டுகிறது என்பதில் நமக்கு ஆறுதல்.  இந்த இணையப் பரிமாற்றம் இருப்பதால்தான், புலம்பெயர்ந்த தமிழர்களால் தமிழின் விழுதுகளாக இயங்க முடிகிறது.





தொன்மைத் தமிழின் தொடர்ச்சியால்தான்,  வட்டார வழக்குகளால் சிதறுண்டு கிளைமொழிகளாய்த் துண்டாகாமல், நம் உரைநடைத் தமிழால், பொதுமொழி வழக்கால் உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருடனும் ஊடாட முடிகிறது. 

எழுத்துகளை மாற்ற வேண்டும் என்று துடிப்பவர்களும், புதிய ஒலிகளைக் கூட்ட வேண்டும் என்று முயல்பவர்களும் அத்தகைய “சீர்திருத்தங்கள்” தொன்மைத் தமிழின் தொடர்ச்சியின் ஆணி வேரையே பெயர்த்தெடுத்துவிடும் என்பதைப் பற்றிக் கவலைப் படுகிறார்களா எனத் தெரியவில்லை.



எபிரேய மொழியை மீட்ட யூதர்களும், வடமொழியை வாழ வைக்க முயலும் இந்திய அரசும், இந்தத் தொன்மையின் தொடர்ச்சி அறுந்தால் மீட்பது எவ்வளவு கடினம் என்பதை நன்றாக உணர்ந்தவர்கள்.  காளிதாசனின் ஒப்பற்ற காவியங்களை மூல மொழியிலேயே படித்துச் சுவைக்கக் கூடியவர்கள் குறைவு.  ஆனால், எத்தனை இன்னல்களுக்கு நடுவிலும், கம்பன் விழா கொண்டாடித் தமிழை வளர்க்கும் ஈழத்தமிழர்களோடு, புலம் பெயர்ந்த தமிழர்களும், தமிழ்நாட்டுத் தமிழர்களும் கம்பனை இன்றும் கொண்டாடுகிறோம். சிலப்பதிகார நாட்டிய நாடகங்கள் நம்மை இன்னும் ஈர்ப்பவை. சங்கப் பாடல்களின் செறிவை தற்காலப் புதுக்கவிதைகளும் எட்டவில்லை.

நம் முன்னோர்கள் நமக்கு ஒரு பெரும் கருவூலத்தை விட்டுச் சென்றிருக்கிறார்கள்.  ஆனால், பழையதை விடப் புதியதன் மேல் நமக்குள்ள ஈர்ப்பால் நம் மரபைப் புறக்கணிக்கிறோம்.  மரபின் அருமை தெரிந்தவர்களுடன் பழகி வரலாறு கற்றுத் தந்த பாடங்களையும் மறக்காமல் இருப்போமாக.

16 கருத்துகள்:

Unknown சொன்னது…

Dear Manivannan,
Arumaiyaana Pathivu.

Tamil script missing in my new computer. So, I cannot write in Tamil.

Best wishes to you.
Continue your contribution to Tamil.

Thamiz ThondarkaL and MaaVeerarkaL NinaivukaL Nilaitthuninru vazhum Makkalukku vetri Tharuha.

Anbudan
Radhakrishnan
Houston, November 27, 2010

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

மிக்க நன்றி திரு இராதாகிருஷ்ணன்.

இரா. செல்வராசு (R.Selvaraj) சொன்னது…

மடற்குழுவில் இருந்து வலைப்பதிவில் இட்டிருப்பது நல்லது மணி. அதிகமாக மடற்குழுக்கள் பக்கம் போகாமல் இருந்துவிட்டு, நேற்று தற்செயலாகப் போன போது உங்களது இந்த மடலைப் பார்த்தேன். மிகவும் நல்ல விளக்கம். சில மாதங்கள் முன் நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தபோது, ஆங்கிலம் போலன்றிப் பழைய தமிழைப் படிக்க, புரிந்து கொள்ள அகரமுதலி தேவைப்படுகிறதே என வாதிட்டார். அதனை மறுத்துரைக்கப் பழைய ஆங்கிலம் பற்றி எனக்கு அவ்வளவு தெரிந்திருக்கவில்லை. உங்களது பதிவு தெளிவாக இருக்கிறது. பண்டைய தமிழை இன்றும் எளிதாகப் புரிந்து கொள்ள முடிவதற்கான பல எளிய உதாரணங்களையும் சொல்லி இருக்கிறீர்கள். நன்றி.

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

எனது இந்தப் பதிவு, மின் தமிழ் மடற்குழுவில் அலைகளை உருவாக்கியுள்ளது. (பார்க்க: http://groups.google.com/group/mintamil/browse_thread/thread/65081ee1b54c469c/11b8d791c4815e87 )

---------- Forwarded message ----------
From: விஜயராகவன்

என்னைப் பொருத்தவரை இது உண்மையில்லை.

நான் எஸ் எஸ் எல் சி வரை தமிழ் மீடியத்தில் படித்தவன், இங்கு பலரும்
அப்படித்தான்.

பள்ளித தமிழ் கரிகுலத்தில் பெரும் அளவு சங்க/பழந் தமிழ் இருக்கிரது.
பரீக்ஷை நிர்பந்தகளால் நாம் அதற்கு பொருள் அறிந்து கொள்கிறோம்.

நான் சொல்ல வந்ததாவது, நம் சங்கத்தமிழ் / பழந்தமிழ் பரிச்சயம் நம்
பள்ளிக் கூடங்களால், அது இயற்கையாக வருவது இல்லை..

நாம் வழக்கமாக பேசும் தமிழில் திருக்குறள் மாதிரி பேசினால் யாருக்கும் புரியாது.

நாம் - அதாவது தமிழ் மீடியத்தில் படித்தவர்கள் - பழந்தமிழ் overdose ஆல், பழந்தமிழ் / சங்ததமிழ் அடிக்கடி படித்து பரிச்சயம் மாதிரி தெறிகின்ரது, ஆனால் அதற்கும் தற்கால தமிழுக்கும் பெரும் தொலைவு உள்ளது.

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

நாசா கணேசனுக்கு நான் சொல்லுவது “கப்சா” என்று தோன்றுகிறது.

---------- Forwarded message ----------
From: "N. Ganesan"


நானும் சங்க இலக்கியம் படிப்பவன். நன்கு படித்த பல புலவோரை
அறிவேன். படித்ததும் உடனே புரியும் என்பதெல்லாம் ....

செம்மொழிக்கு இலக்கணமே பல லிபிகளில் எழுதப் படணும்,
தற்கால மொழிக்கும், செம்மொழிக்கும் பெருத்த வேறுபாடு
இருக்கணும். இந்தியா செம்மொழிகளுக்கும் இது பொருந்தும்.

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

கவிஞர் ஹரிகிருஷ்ணன் அழுத்தம் திருத்தமாகத் தன் குரலைப் பதிவு செய்கிறார்.


---------- Forwarded message
From: Hari Krishnan

என்னைப் பொருத்தவரை இது உண்மை. நான் படித்தது பிஏ பொருளாதாரம். கற்ற அத்தனை
ஆங்கில-தமிழ் இலக்கியங்களும் சுய முயற்சியால் கற்றவையே. சீவக சிந்தாமணியை உரையில்லாமல் (பதம் பிரிக்காத பதிப்பு) படித்தே ஆகவேண்டும் என்று (உவேசா
உரையிருந்தாலும் அதைப் படித்து, நான் உணர்ந்த பொருளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பேன்) தொடங்கியபோது என் வயது 19.

பிறகு நான் படித்தவையெல்லாம் என்னென்ன என்பது குழுவினருக்குத் தெரியும். ஒன்றுகூட எனக்குக் கல்லூரியிலோ அல்லது ஆசிரியர் மூலமாகவோ பயிற்றுவிக்கப்பட்டதன்று. என் ஆசிரியரோடு நான் உரையாடிக் கற்றதெல்லாம் அணுகுமுறைகளையும் உரையாடல்களில் பகிர்ந்துகொள்ளும் விவரங்களும் மட்டுமே. சங்க
இலக்கியம் உட்பட என் சொந்த முயற்சியில் நானாகக் கற்றதுதான்.

ஆணவம் தொனிக்கும் இந்த விடையை எழுத எனக்கு மனம் ஒப்பவில்லை. ஆனாலும்
உண்மைக்குச் சாட்சியம் சொல்லவேண்டிய அவசியம் நேரிட்டிருக்கிறது. மன்னிக்கவும்.

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

---------- Forwarded message
From: Hari Krishnan


2010/11/28 Raja sankar

> பெரும்பாலும் பிரபலமாக்கப்பட்ட வரிகளை எடுத்துப்போட்டு இதெல்லாம்
> எல்லாருக்கும் தெரியும் என்று சொல்வது எளிது.

கல்வி, கரையில. கற்பவர் நாள் சில.

ஆர்வமும், முயற்சியும் தொடர்ந்த உழைப்பும் இருந்தால் முடியும்.
எடுத்துக்காட்டும் கொடுத்துள்ளேன்.

அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும்
பெருமை முயற்சசி தரும்.

இதில், முயற்சி, பெருமை தரும் என்று சொல்லாமல், பெருமை முயற்சி தரும் என்று
சொல்லியிருக்கிறதே, இந்த சொல் வரிசைக்கு ஏதேனும் உட்பொருளுண்டா அல்லது இது
வெறும் இலக்கண வைப்பு முறையா? பொருளுண்டெனில் வள்ளுவம் இதற்குச்
சான்றளிக்கிறதா?

தன்னைத்தானே இயங்கவும் செலுத்திக்கொள்ளவும் வைப்பது எப்படி என்பதற்கான
அடிப்படை, மாதிரி வினாக்கள் இவை. இந்த அசாவாமை உடையவர்களுக்கு அரிதென்று ஏதும்
இல்லை. அது இல்லாதவர்களுக்கு பருக்கைக் கல்லும் இமயமலைதான். :)

புரிந்துகொள்ள முயலலாம் என்பதே என் அவா.

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

---------- Forwarded message
From: விஜயராகவன்


ஹரிகி

உங்களை மன்னிக்க முடியாது, ஏனெனில் இது மன்னிப்பு வாங்கும்/கொடுக்கும்
விஷயமல்ல.

உங்கள் மொழி பாண்டித்யம் அபாரமானது, அது மக்கள்தொகையின் மேல் தட்டு 0.5%
க்குள் வரும். உங்களைப்போல் தமிழ்மொழி எபிலிடி தமிழ்நாட்டில் அதிகபக்ஷம் 500 பேருக்கு இருக்கும்

மேலும், சங்க/பழைய கால இலக்கியங்களுக்கு உங்களுக்கு முன்னாலேயெ 80
வருடங்களாக பலர் பிரசுரித்து, உரை எழுதியுள்ளனர் . அதனால் உங்களுக்கு
தெரிந்தோ தெரியாமலோ பல சங்க இலக்கியங்களின் பரிச்சயம் உங்களுக்கு 19 வயதிலேயே ஏற்பட்டிருக்கிறது. அதனால் சுயமான எபிலிடியும், ஆர்வமும்
இருந்ததால் நீங்கள் சங்க இலக்கியத்தை படித்து, புரிந்து கொள்ள முடிந்தது.

அது 99% மக்களுக்கு செல்லாது.உங்களைப்போல் சிலர் சுய எபிலிடியால் மற்ற
மொழிகள் , அல்லது சங்கீதம் போன்றவற்றில் தேர்ச்சி பெருகிரனர்.

நீங்களே உங்கள் `சங்கத்தமிழ் அறிவை` சில இடங்களில்தான் பயன்படுத்த முடியும். உதாரணமாக , உங்கள் பக்கத்து வீட்டுக்காரரிடமும் பேசும் போது (அவர் தமிழர் என வைத்துக் கொண்டால்) `சார் ஒங்க உறவுக்காரங்க எப்ப ஊர்லேந்து வராங்க?” அல்லது `சார் ஒங்க ரிலேடிவ்ஸ் எப்ப ஊர்லேந்து
வராங்க?” அல்லது `சார் ஒங்க கேளிர் எப்ப ஊர்லேந்து வராங்க?” . இந்த மூன்றில் முதல் அல்லது இரண்டாவதைதான் பயன்படுத்துவீர்கள். கேளிர் என்று
தற்காலப்பேச்சில் யாருக்கும் புரியாது.

இத்தனைக்கும் “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என திருப்பி திருப்பி
மந்திரம் போல் சொல்லத்தய்ங்குவதில்லை.

திருக்குறளிலேயே சில குறள்கள் ஸ்கூலில் படித்தலால், `திருக்குறள்`
தெரியும் என பலர் பாசாங்கு செய்யலாம். நீங்கள் அடுத்தமுறை பஸ் அல்லது ரயிலில் பயணம் செய்யும்போது

”அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவ தெவன்?“

என்றால் என்ன அர்த்தம் என கேளூங்கள் . ஆயிரத்தில் ஒருவர் கூட
சொல்லமுடியாது. இதையே பள்ளிமானவர்கள், காலேஜ் மாணவர்கள், ஏன் கல்லூரி
ஆசிரியர்களிடம் கேளுங்கள். எல்லோரும் பெப்பே என விழிப்பார்கள்.

நான் மலையாளம் பேசுவதை கேட்கும் போதுகூட ஒன்றிரண்டு வார்த்தைகள் தெரியும்
போல் இருக்கும், ஆனால் ஒரு வாக்கியத்தை கூட சரியாக புரிந்து கொள்ளா முடியாது.

மலையாளம் எப்படி தமிழிலிருந்து வேறு மொழியோ, அதைப்போல்தான் சங்க
மொழியும் தற்காலத் தமிழிலிருந்து வேறு மொழி.

திராவிட இயக்கத்தின் மிகப்பெரிய டெலூஷன் - 2000 ஆண்டுகளாக ஒரே தமிழ்தான் இயங்குகிரது என்பது.

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

On Nov 28, 1:52 am, விஜயராகவன் wrote:

> பள்ளித தமிழ் கரிகுலத்தில் பெரும் அளவு சங்க/பழந் தமிழ் இருக்கிரது.
> பரீக்ஷை நிர்பந்தகளால் நாம் அதற்கு பொருள் அறிந்து கொள்கிறோம்.
>
> நான் சொல்ல வந்ததாவது, நம் சங்கத்தமிழ் / பழந்தமிழ் பரிச்சயம் நம்
> பள்ளிக் கூடங்களால், அது இயற்கையாக வருவது இல்லை..

விஜயராகவன்,

பள்ளிக்கூடங்களில் சங்கத் தமிழைப் பாடமாக வைத்திருப்பதே மிகப் பெரிய செய்தி! இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இலக்கியங்களை உயர்நிலைப் பள்ளியில் பாடங்களாக எத்தனை மொழிகளில் வைத்திருக்கிறார்கள்? இது தமிழைப் பாடமாகப் படிக்கும் எல்லோருக்கும் பொதுவானது.

ஆங்கிலத்தைப் பாடமாகப் படிக்கும் எல்லோருக்கும் பொதுவாக நாம் சேக்‌ஷ்பியரின் நாடகங்களைக் கூட மூல வடிவத்தில் படிப்பதில்லை. நாம் மட்டுமல்ல, அமெரிக்காவிலும்கூட சேக்‌ஷ்பியர் பொதுப்பாடமாக வருவதில்லை.

இதுவே ஒரு பெரிய வியக்கத் தக்க செய்தி.

எப்படி வேதங்கள் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக எழுதாமலேயே, ஓர் அக்‌ஷரம் பிறழாமல் வாய் வழியாகவே தலைமுறைக்குத் தலைமுறை கற்பித்து இன்று வரை கொண்டு சேர்த்து விட்டிருப்பது ஒரு மலைப்பான செய்தியோ, அது போலத்தான் தமிழின் தொடர்ச்சியும் ஒரு மலைப்பான செய்தி.

இரண்டுக்கும் காரணங்கள் வேறாக இருக்கலாம். ஆனால், இந்தியப் பண்பாட்டு முறையில் மொழியை அணுகுவதில் நாம் சற்று வேறு படுகிறோம். சமஸ்கிருதத்துக்குப் பாணினியும், தமிழுக்கு தொல்காப்பியமும் நன்னூலும் மொழிக்கு வேலி அமைத்திருக்கின்றன. மேலை நாடுகளிலும் கூடத் தொன்மொழிகளில் இருந்த இலக்கியங்களே அவர்கள் பண்பாட்டு மறுமலர்ச்சிக்கு வித்திட்டன.

எபிரேய மொழியின் தொல்லிலக்கியங்கள் இன்றும் இஸ்ரவேலருக்கு வழிகாட்டிகள்.

உலக மயமாக்கலில் துடிப்போடு செயல்படும் நாடுகளான இந்தியாவும், சீனாவும் தொன்மையான பண்பாட்டு வேர்களினால்தான் ஆலமரமாக எழ முடிந்திருக்கிறது. புதியதை ஏற்றுக்கொள்ளும் அதே நேரத்தில் தொன்மையை விலக்குவது நம் மரபில்லை. அப்படிச் செய்வது நம் வேர்களை நாமே அழிப்பதற்கு இணையாகும்.

தமிழ் மரபு அறக்கட்டளை இது போன்ற தொன்மையைப் போற்றிப் பாதுகாக்கும் செயலில்தான் ஈடுபட்டுள்ளது என்பதையும் நினைவூட்ட விரும்புகிறேன். இந்த மின் தமிழ் மடற்குழுவில் இணைந்திருக்கும் நண்பர்கள் பலரும் பழையன கழிக்கும் செயலில் ஈடுபடவில்லை. கிரந்த எழுத்து முறை இன்று கிட்டத்தட்ட மறையும் நிலையை எட்டி இருக்கலாம். ஆனால், அதை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபடுவதற்கு உந்துதல் எங்கிருந்து வந்தது?

தொன்மைத் தமிழை நாம் இன்றும் பள்ளிப் பாடங்களில் வைத்து படிப்பது உலகிலேயே மிக மிக அரியதான செயல்களில் ஒன்று.

அதை உங்களுக்குப் புரியவைப்பதில் என்னுடைய முயற்சியும், சொல்வன்மையும் குறைவாக இருக்கலாம். ஆனால், சற்றுச் சிந்தித்துப் பார்த்தால், பரந்த மனமுள்ள எவருக்கும் இது எத்தகைய அரிய செயல் என்று புரியும்.

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

அன்பின் ஹரி,

உங்கள் சாட்சியத்துக்கு மிக்க நன்றி.

பத்தாம் நூற்றாண்டு ஆங்கிலம் இன்றைய ஆங்கிலத்துக்குச் சற்றும்
தொடர்பில்லாத மொழி போல் தோன்றுகிறது. பதினான்காம் நூற்றாண்டின் சாசரின் ஆங்கிலம் சற்று நெருங்கி வருகிறது.
ஆனாலும், நமக்குப் புரியாத மொழி.


அவற்றோடு மட்டுமல்ல, மிகப் பழைய மொழிகளோடு ஒப்பிடும்போது, சங்கத் தமிழ்
இன்றைய தமிழோடு இருக்கும் நெருக்கத்துக்கு வேறு எந்த மொழியும் இருந்தால்
அது எனக்குத் தெரியவில்லை. பழைய லத்தீனோடு இன்றைய இத்தாலியன், பழைய
கிரேக்கத்தோடு இன்றைய கிரேக்கம், பழைய சீனத்தோடு இன்றைய மாண்டரின், பழைய
பாரசீகத்தோடு இன்றைய பாரசீகம் என்று நாம் ஒப்பிட்டுப் பார்த்தால்,
தமிழின் மாற்றங்கள் மிகவும் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும்.


பேரா. ஹார்ட் இன்றைய இத்தாலியர்களுக்குப் பழைய லத்தீனப் பாடல்கள் புரியும் என்பார். தமிழைப் பொருத்தவரையில் சொற்களின் மாற்றம் குறைவு. இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் குறைவு.


பழைய ஆங்கிலத்தைக் கற்றுக் கொள்ள மிகுந்த பயிற்சி தேவை. சங்கப் பாடல்களைப் புரிந்து கொள்ள பயிற்சி அவ்வளவு தேவை இல்லை. நாக. கணேசனுக்கு நக்கலாக இருக்கலாம். ஆனால் அவருக்கு மறந்திருக்கலாம். பேரா.
ஹார்ட் அவர்களின் தமிழாசிரியரும், இன்று மேலைநாடுகளில் தமிழ் ஆராய்ச்சி பரவுவதற்கு அடித்தளமாக விளங்குபவருமான பேரா. ஏ. கே. ராமானுஜன் தமிழை முறையாகப் பயின்றவரல்லர். சங்கத் தமிழை அவர் தற்செயலாகத்தான் கண்டு
பிடித்தார். மைசூர் ஐயங்கார் குடும்பத்தில் பிறந்த அவருக்குத் தமிழ் வீட்டு மொழி மட்டுமே. அவரது பட்டப்படிப்பு எதுவுமே தமிழில் இல்லை. ஆனால், அவரது சங்க மொழிபெயர்ப்புகள் தமிழ் மீது, அதிலும் சங்கத்தமிழ் மீது தீராக்காதலை மேலைநாடுகளில் ஏற்படுத்தி இருக்கின்றன.


பேரா. ராமானுஜனின் மொழிபெயர்ப்புகள் கட்டாயம் படிக்க வேண்டியவை. அவரது
முன்னுரையில் அவர் சொல்வார்:


“Even one's own tradition is not one's birthright; it has to be
earned, repossessed. ... In 1962, on one of my first Saturdays at the
University of Chicago, I entered the basement stacks of the then
Harper Library in search of an elementary grammar of Old Tamil, which I had never learned. .. As I searched, hoping to find a school grammar, I came upon an early anthology of classical Tamil poems, edited in 1937 by U. Vē. cāmiṉāṭaiyar. .. I sat down on the floor between the stacks and began to browse. To my amazement, I found the
prose commentary transparent; it soon unlocked the old poems for me. As I began to read on, I was enthralled by the beauty and subtlety of what I could read. Here was a world, a part of my language and culture, to which I had been an ignorant heir. Until then, I had only heard of the idiot in the Bible who had gone looking for a donkey and
had happened upon a kingdom."


இதைத்தான் நான் சொல்கிறேன். பழைய கிரேக்கம், பழைய லத்தீனம், பழைய சீனம், பழைய எபிரேயம், வேத மொழி, இவற்றின் செவ்விலக்கியங்களைத் தற்செயலாக ஒரு நூலகத்துக்குள் நுழைந்து படித்துப் புரிந்து கொள்ள இயலுமா? ஆனால், தமிழில் முடியும். அதற்கு மொழி தடையில்லை. அதற்குப் பேரா. ஏ. கே. ராமானுஜன் அவர்களே மிகச் சிறந்த எடுத்துக் காட்டு.


ஒரு ராமானுஜன் போல, ஒரு ஹரிகிருஷ்ணன் போல, கணிதம் படித்துத் தமிழுக்கு வந்த சில அறிஞர்கள் போல, தனித்திறமை வாய்ந்த சிலரால் இதை மிக எளிதாகப்
படிக்கத் தொடங்க முடியும். ஆனால், பேராசான் உ. வே. சாமிநாதையர் சொன்னது
போல, தமிழ் ஒரு பெருங்கடல். அதில் முற்றும் புலமை கொள்ள ஒரு வாழ்நாள் போதாது. என்னுடைய வாதம், சங்கத்தமிழ் இன்றைய டப்பாங்குத்து போல என்பதல்ல. ஆனால் அது நம்மிடமிருந்து மிகுந்த அந்நியப் பட்ட மொழி அல்ல.
ஒரு தூசு தட்டினால் நமக்கு அகப்படும் மொழிதான். இல்லையேல், பழைய
பாடல்களை இன்றைய திரைப்பாடல்களில் எடுத்தாளத் தயங்குவார்கள்.


இந்த நெருக்கத்தால்தான், இன்று இணையத்தில் சங்க இலக்கியங்கள் பற்றி எழுதும் மிகப் பெரும்பாலோர் தமிழில் பட்டம் பெற்றவர்கள் இல்லை. இதனால்தான், பொறியியலில் பட்டம் பெற்ற சுஜாதாவாலும், தமிழைத்
தாய்மொழியாகக் கொள்ளாத எழுத்தாளர் ஜெயமோகனாலும் சங்கப் பாடல்களைப் படித்துப் புரிந்து கொள்ள முடிந்தது.

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

கணேசன்,

பேரா. ஏ. கே. ராமானுஜன் மட்டுமல்ல, சங்கப் பாடல்களின் இலக்கணம், திணை, துறை பற்றித் தெரியாதவர்களுக்கு அதன் நுண்பொருள் இயல்பாகவே அறிய முடியாதுதான். அதை நாம் இடைக்காலத்தில் இழந்தும் இருக்கிறோம்.

என்னுடைய கூற்றைத் திரித்துக் கற்பிப்பவர்கள் கற்பித்துக் கொள்ளட்டும்.

ஆனால், மொழியின் தொடர்ச்சி, என் கண்ணோட்டத்தில் மலைக்கத் தக்க வகையில் இருக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளாகப் பல சொற்கள், ஏறத்தாழ அதே பொருளில் வழங்கி வருவதும், படித்தவுடன் இது நம் மொழிதான் என்று எளிதில் அடையாளம் கண்டு கொள்ள முடிவதும், இதை நம்மால் கற்றுக் கொள்ள முடியும் என்று துணிவதும், இதன் தொடர்ச்சிக்கு நல்ல அடையாளங்கள்.

வேறு எந்த மொழியில் இவ்வளவு பண்டைய இலக்கியங்கள் உயர்நிலைப் பள்ளியில் பாடங்களாக அமைத்திருக்கிறார்கள்? இது தமிழ்நாட்டுச் சூழலில், ஈழ மண்ணின் சூழலில் முடிகிறது. மொழியின், பண்பாட்டின் தொடர்ச்சி இருப்பதால் இது முடிகிறது.

நான் என் வலைப்பூவில் மேற்கோள் காட்டியிருக்கும் பத்தாம் நூற்றாண்டின் ஆங்கிலப் பாடலைப் பாருங்கள் அதற்கும் தேவாரம், திருவாசகம், நாலாயிரம், போன்றவற்றில் இருக்கும் பாடல்களுக்கும் உள்ள வேறுபாடு புரியும். இதோ மார்கழி மாதத்தில் திருப்பாவை, திருவெம்பாவை பாடிக் கொண்டு வரப்போகிறார்கள். இங்கிலாந்தில் பெஓவுல்ஃபையோ, கேன்டர்பரி டேல்ஸையோ ஓதிக் கொண்டு வருபவர்களைக் கற்பனை கூடச் செய்ய முடியாது.

இந்தத் தொன்மையின் தொடர்ச்சி என்னைப் பொருத்தவரையில் பெருத்த மலைப்பைத் தருகிறது.

இந்தியப் பண்பாட்டின் ஒரு கூறு இது. இந்தப் பண்பாட்டுச் சூழலினால்தான் ராமாயணமும், மகாபாரதமும் இன்றும் தொலைக்காட்சியில் விரும்பிப் பார்க்கப் படுகின்றன. இந்தத் தொடர்ச்சியினால்தான், பகவத் கீதையிலிருந்தோ, வேதங்களிலிருந்தோ புலவர்கள் மேற்கோள் காட்டிப் பேச முடிகிறது. கம்பன் விழாவுக்கு மக்கள் திரளாக வந்து கூடி விரும்பிக் கேட்கிறார்கள். கண்ணகியா மாதவியா பட்டிமன்றங்கள் பொங்கல் திருநாளில் நடக்கின்றன. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்று பேச்சாளர்கள் பேச முடிகிறது.

இத்தகைய மொழித் தொடர்ச்சி, பண்பாட்டுத் தொடர்ச்சி வியக்கத் தக்க ஒன்று. உலகின் தொன்மையான பண்பாடுகளிலும் கூட அரிதானது. இது இல்லை என்று சொல்லும் நீங்களே எந்தக் கல்லூரியில் தமிழ் இலக்கியம் படித்தீர்கள்? அதே போல் உங்களுக்கு பத்தாம் நூற்றாண்டின் ஆங்கில இலக்கியத்தில் புலமையுள்ள இந்திய அல்லது அமெரிக்கப் பொறியாளர்கள் எத்தனை பேர் இருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்?

புரிந்தால் சரி. இல்லையேல், நீங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால் தான். :-)

அன்புடன்,

மணி மு. மணிவண்ணன்

On Nov 29, 1:10 am, "N. Ganesan" wrote:
> On Nov 28, 1:52 am, விஜயராகவன் wrote:
>
> > > பள்ளித தமிழ் கரிகுலத்தில் பெரும் அளவு சங்க/பழந் தமிழ் இருக்கிரது.
>
> > பரீக்ஷை நிர்பந்தகளால் நாம் அதற்கு பொருள் அறிந்து கொள்கிறோம்.
>
> > நான் சொல்ல வந்ததாவது, நம் சங்கத்தமிழ் / பழந்தமிழ் பரிச்சயம் நம்
> > பள்ளிக் கூடங்களால், அது இயற்கையாக வருவது இல்லை..
>
> For those who don't have a copy of AKR's Poems of Love and War,
> pl. use books.google & see that what AKR says from experience.
> AKR, a Tamil, could understand sangam poetry only via a
> modern commentary. Otherwise, sangam poems are *not* understandable
> to the great AKR himself. Think about how it will be for
> unspecialized common folks?
>
> N. Ganesan

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

வாஷிங்டன் இலக்கிய வட்டம் வார இறுதிக் கூட்டங்களில் புறநானூறு படிக்கத் தொடங்கி 200 பாடல்களை முடித்திருக்கிறார்கள். அவர்களுக்கு என் வாழ்த்துகள்.

முனைவர் பிரபாகரனின் உரையை http://puram400.blogspot.com) என்ற சுட்டியில் பார்க்கலாம். அவரது விடா முயற்சிக்கும், உரைவளத்துக்கும் என் பாராட்டுகள்.

முறையாகத் தமிழில் பட்டப் படிப்பு பெறாமலேயே, அருஞ்சொற்பொருள் அகராதியையும், உரைகாரரையும் கொண்டு 200 பாடல்களை 2000 ஆண்டுகள் கழித்தும் புலம்பெயர்ந்த தமிழர்களால் வார இறுதியில் படிக்க முடிவது என்பதை வேறு எந்த மொழியில் முடியும் என்பது வியக்கத்தக்கது.

முனைவர் பிரபாகரனின் பதிவைப் பார்க்கும்போது சங்கத்தமிழின் எளிமையான நடை நமக்குப் புலப்படுகிறது. பின் வரும் மேற்கோள்களில் உள்ள பாடல்களைப் பெரிய விளக்கம் ஏதும் இன்றி ஓரளவுக்குப் புரிந்து கொள்ளலாம். அருஞ்சொற்பொருளைப் பார்த்த பின்பு விளக்கம் தெளிவாகிறது. இந்த அளவுக்கு எளிமையாக ஓர் ஈராயிரம் ஆண்டுப் பாடல் திரட்டு இருக்கவும் முடியுமோ!


இவரே, பூத்தலை அறாஅப் புனைகொடி முல்லை
நாத்தழும்பு இருப்பப் பாடாஅது ஆயினும்
கறங்குமணி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்த
பரந்துஓங்கு சிறப்பிற் பாரி மகளிர்
யானே, பரிசிலன் மன்னும், அந்தணன்; நீயே,
வரிசையில் வணக்கும் வாள்மேம் படுநன்;
நினக்கியான் கொடுப்பக் கொண்மதி


இரவலர்; அவரைப்
புரவுஎதிர் கொள்ளும் பெருஞ்செய் ஆடவர்
உடைமை ஆகும்அவர் உடைமை;
அவர் இன்மை ஆகும் அவர் இன்மையே.


நோயிலர் ஆகநின் புதல்வர்; யானும்
வெயிலென முனியேன்; பனியென மடியேன்;


நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்,
அல்லது செய்தல் ஓம்புமின்; அதுதான்
எல்லாரும் உவப்பது; அன்றியும்
நல்லாற்றுப் படூஉம் நெறியுமார் அதுவே!


படைத்தோன் மன்றஅப் பண்பி லாளன்;
இன்னாது அம்ம இவ் வுலகம்;
இனிய காண்கஇதன் இயல்புணர்ந் தோரே.

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

Comments from a Seattle reader's friend:

~~~~~
It’s surprising to see the Kural blogger talk about Kamban. It was Annathurai who singlehandedly lampooned Kamban and made him appear like he was a Saroja Devi. Bharathi was almost airbrushed because he was Brahmin. Tamil University is a den of incompetence, corruption and is barely functioning.
The blog also very unfairly (confirmation bias) compares Chaucer with how we read Sangam literature today. First let me say that I’ve relished Kapilar’s poems on Paari in both Agam/Puram naanooru. If such people had lived in Europe there would be award winning history books and literary books analysing their friendship and literature. Poor Kapilan and Paari lived and died as Tamilians. Its foolish to say that those poems are readily understandable. No. They are not. To say that we can understand, readily, what was written 2000 years ago and THEREFORE nothing new is needed to invigorate the language is sheer fraud. No Britisher considers Milton or Shakespeare as ‘readily understandable’. That’s why we have Folger’s edition for Shakespeare.
One thing I’ve found in common amongst everyone who opposes Grantha letters they ALL, without exception, keep talkingabout old, very old, literature. If this same blogger had written two pages of quantum physics in Tamil I’d appreciate that rather. The role of a philosopher like Maimonedes in the modernization of Hebrew is inestimable. We too have Arignar and Perarignar….
~~~~~~~~~~

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

My response:

Thanks for forwarding those comments. I read them with interest.

The point of that blog was to show that Tamil language is very
conservative and its changes in language, vocabulary, grammar, etc.,
are much slower than most other ancient languages. One can take the
vocabulary from the Cankam era and find that a significant number of
words are still contemporary in more or less the same form and similar
meaning. This is unusual. And linguists have noticed that too. What
I am saying is not new to linguists.

The fact is that one cannot understand Beowulf as even English and
even Chaucer is beyond reach. Cankam classics are not. They are
there in modern text books in high school. The words are recognizable
as Tamil. The context, subtext and nuances of Cankam classics need
training. But surprisingly large number of poems contain language
that is contemporary and are readable. That is my point. Compare
English that has morphed into something unrecognizable from 10
centuries ago while Tamil's form is remarkably stable. The Cankam
poems are no more complex than some of the venpas or any marabu
kavithai that a modern poet may write. With a little effort, one can
indeed take a crack at them and enjoy them.

When people advocate script reforms, removal or addition of new sounds
or letters, they don't recognize that this long thread will be broken.

The correspondent perhaps isn't familiar with me or my self
description. I adore Bharathiyaar and in fact have staged two plays
in San Francisco Bay Area Tamil Manram with Bharathi theme - one
"Bharathi's Panchali Sabatham in verse" and "Akkini-k-kunju -
Bharathi's life". I was also instrumental in conducting the only
"Kamban vizha" in the Bay Area Tamil Manram.

I agree with the correspondent that Pari-Kabilar friendship needs to
be celebrated and it is one of the most moving stories of Cankam
literature. And no Tamil literature enthusiast can ignore Kamban.

What the correspondent perhaps doesn't know is that a lot of those
that write Tamil wikipedia articles on science and technology are well
versed in Tamil and science and are doing an amazing job. They are
not mutually exclusive.

The problem with Tamil Nadu is that everything and everyone is colored
by caste politics. That tends to blind people. One of the towering
figures in Thani Thamizh movement still is Parthi Mar Kalaignar - (
Vai. Ko. Suryanarayana Sastri). U. Ve. Caminathaiyar is a giant who
was schooled in Tamil literature by Mahavidwan Meenatchi Sundaram
Pillai. Such collaborations have sadly become unthinkable in modern
era.

வே. இளஞ்செழியன் சொன்னது…

கண்களில் நீர் மல்க வைத்து விட்டீர்கள்...

imayavaramban சொன்னது…


எழுத்துச் சீர்திருத்தம் வேண்டாம் , சரிதான். ஆனால் கால ஓட்டத்தில் தமிழின் வரி வடிவம் மாற்றம் கண்டு, மிக எளிய சங்க கால வடிவில் இருந்து, மிகவும் சிக்கலான தற்கால வடிவத்திற்கு வந்துள்ளது என்பதை எல்லோரும் அறிவர்.
- அதனை நாம் ஏற்றுக்கொண்டுதானே உள்ளோம்

ஏன் நாம் மீண்டும் சங்க கால நடைக்கே திரும்பக் கூடாது?

உதாரணம். உகர சங்க கால குறியீடு _| , இதனை ஏன் இன்றைய உகர வரிசைக்கு உபயோகப்படுத்தக் கூடாது?

எங்கே தமிழ் வீழ்கிறது? சற்றே சிந்தியுங்கள்?

கண்ணை மூடிக்கொண்டு, ஆதரிப்பதோ எதிர்பதோ தான் தவறு.

கீழ்க்கண்ட வடிவ மாற்றத்தால் என்ன நன்மை எனக் கேட்கலாம்

" கற்றல், கற்ப்பித்தலில் எளிமை" -அவ்வளவே

என்ன சிரமம் வரும்?

- புதிதாய் பிறந்து வருவோர்க்கு சிக்கல் இல்லை
-இருக்கும் நமக்கு, கொஞ்ச காலம் சிரமமாய் தெரியும்

-அவ்வளவே


கு - க_|

ஙு - ங_|
---
---
--
---
--

னு - ன_|

-----
நன்றி

சிவராசு -(FB- sivaraasu mk)