வெள்ளி, நவம்பர் 26, 2010

ஏழை மாணவர்களை மட்டும் தமிழ்வழிப் பள்ளிகளில் படிக்க வைப்பது கொடுமையா?

இன்று நண்பர் இண்டிராம் தமிழ் உலகம் மடலாடற்குழுவில் ஒரு கேள்விக் கணையைத் தொடுத்தார்.  (இது பல ஆண்டுகளாய் அவர் வலியுறுத்தி வரும் செய்திதான் என்றாலும், இன்று அவர் கோணம் “கொடுமை” என்பதை வலியுறுத்தியுள்ளது. ) முதலில் அவர் தமிழ் உலகம் குழுமத்தில் என்ன எழுதினார் என்று பார்ப்போம்.

On Nov 26, 10:18 am, indyram wrote:
> நண்பர்களே
>
> தற்காலத் தமிழ் நாட்டில் நடுத்தர வகுப்பினர், பணவசதியுள்ளோர், அரசு
> அதிகாரிகள் எல்லோரும்  தங்களது குழந்தைகளை ஆங்கில மெட்ரிகுலேஷன்
> பள்ளிக்கு அனுப்பி வருகிறார்கள்.
>
> ஆனால் அரசதிகாரிகள்   தமிழக அரசுப்பள்ளிகளில் மாணவர்கள்தமிழ் தான்
> பயிலவேண்டும் என்று சொல்லி வருகிறார்கள்.
>
> ஆங்கில வழி கல்வி நிலையங்களெல்லாம் தனியார் நிறுவனங்கள்.
> அவைகளில் படிக்க டுயூஷன் (கல்விகட்டணம்)  கட்டவேண்டும். ஏழை
> மாணாக்கர்களின் பெற்றோர்களால் அதை செய்யமுடியாது. ஆகவே அவர்களெல்லாம்
> அரசு இலவசப்பள்ளிகளில்தான் படிக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
>
> தமிழக 231 எம் எல் ஏக்களில் 181 பேர்களின் குழந்தைகளும்
> பேரக்குழந்தைகளும் ஆங்கில வழி தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் தான்
> பயிலுகிறார்கள் என்ற தகவலை பத்ரிகைகள் வெளிப்ப்டுத்தியுள்ளன
>
> தற்காலத்தில் தமிழ் நாட்டிலும் வெளிநாடுகளிலும் வேலை பெற வேண்டுமானால்
> திறமையான ஆங்கில அறிவு தேவை.
> இதை  எல்லா பெற்றோர்களுக்கும்  உணர்ந்துள்ளனர்.
> ஏழை மாணவர்களின் பெற்றோர்களும் இதை அறிந்துள்ளனர்.
> ஆனால் அவர்களிடம் தங்கள் குழந்தைகளை மெட்ரிகுலேஷன் பள்ளிகளில்
> படிக்கவைக்க பணவசதியில்லை
>
> கர்நாடக மாநிலத்திலும் இதே நிலமை தான். ஆனால் அங்குள்ள ஏழை மக்களெல்லாம்
> அரசுப்பள்ளிகளிலும் ஆங்கிலத்தில் பயில வசதி செய்யவேண்டும் என்று
> போராட்டம் செய்து வருகிறார்களாம்.
>
> தமிழக ஏழை மக்கள் வாழ்க்கையில் உயரவேண்டுமானால் தங்களது குழந்தைகள்
> ஆங்கில வழியில் பயில உதவவேண்டும் என்று கோரிக்கைவைக்கவேண்டும்.
>
> மனசாட்சியுள்ள நடுத்தர வகுப்பினர் இதற்கு ஆதரவளிக்கவேண்டும்
>
> 50 வருடங்களுக்கு முன் நான் தமிழ்வழியில் தான் பயின்றேன். இப்போது காலம்
> மாறிவிட்டது. இப்போதைய மாணவனாக நான் இருந்திருந்தேனானால் நானும்
> ஆங்கிலவழியில் தான் பயில விரும்புவேன்நான் அவருக்கு அளித்த மறுமொழி:

தற்போது தமிழ்நாட்டில் இருக்கும் ஆங்கில வழிப்பள்ளிகள் மட்டுமல்ல, பல ஆங்கில வழிக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களிலும் கூடப் பெயருக்குத்தான் ஆங்கில வழிக் கல்வி.  ஆங்கிலம் இந்தியாவைப் பொருத்தவரையில் இரண்டாம் மொழி.  ஆனால், ஆங்கிலத்தை முறையாக இரண்டாம் மொழிக் கல்வி முறைப்படி (English as a Second Language ESL) கற்பிக்காமல், அதை முதல் மொழி போல் கற்பிப்பதால் ஆங்கில மொழிப் புலமையே பலருக்கு இல்லை.  ஆங்கில மொழியே தகராறாக இருக்கும்போது ஆங்கில மொழி வழிக் கல்வியிலும் சிக்கல்தான்.  பெயருக்கு ஆங்கில வழி என்றாலும், பாடங்கள் நடத்துவது பல வகுப்புகளில் தமிழிலும்தான்.  அது மட்டுமல்ல, தேர்வுகளில் விடை அளிக்கும் போது தமிழிலும் விடையளிக்கலாம் என்ற வாய்ப்பு இருப்பதை மாணவர்கள் சிலர் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

ஆங்கில வழிப்பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் படித்த மாணவர்கள் பலருக்கும் ஆங்கிலத்தில் தங்கு தடையில்லாமல் பேசவோ, பிழையில்லாமல் எழுதவோ தெரிவதில்லை.  பிறர் பேசும் ஆங்கிலத்தைப் புரிந்து கொள்வதிலும் அவர்களுக்குச் சிக்கல் இருக்கிறது.  இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, வெளி மாநிலங்களிலும் உள்ள கதைதான்.  இவர்களுக்கு உள்ள சிக்கல் என்னவென்றால், தங்கள் தாய்மொழியிலும் நன்றாகப் பேச, எழுதத் தெரிவதில்லை.  ஆங்கில வழிப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கற்பிக்கும் ஆசிரியர்கள் பலருக்கும் ஆங்கிலப் புலமை இருப்பதில்லை. “பட்லர்” இங்கிலிஷ், “சட்டக்காரி” தமிழ் பேசும் நிலைமைக்கு இழிந்திருக்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல், ஆங்கிலத்தில் பயில்பவர்களிடையே டிஸ்லெக்சியா என்னும் எழுத்துக் குழப்பம் அதிகமாகக் காணப் படுகிறது.  எழுத்துக்கும் ஒலிக்கும் நெருங்கிய தொடர்புள்ள இந்திய எழுத்து முறைகளில் (deep orthography) அவ்வளவாகக் காணப் படாத டிஸ்லெக்சியா, எழுத்துக்கும் ஒலிக்கும் தொடர்பு குன்றிய ஆங்கில எழுத்து முறை (shallow orthography) உள்ள நாடுகளில் கூடுதலாகக் காணப் படுவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கின்றனர். (http://en.wikipedia.org/wiki/Orthographies_and_dyslexia#The_effects_of_orthographic_depth_on_dyslexia)  டிஸ்லெக்சியா உள்ள குழந்தைகள் படிப்பதில் விருப்பம் இல்லாதவர்களாகக் காணப் படுகிறார்கள். அமெரிக்காவில் ஐந்தில் ஒரு குழந்தைக்கு டிஸ்லெக்சியா உள்ளது என்று ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது (http://www.readfaster.com/education_stats.asp).  தமிழகத்தில், தமிழ் வழிப் பள்ளிகளில் டிஸ்லெக்சியாவைக் காண்பது மிக அரிது.  டிஸ்லெக்சியா உள்ள குழந்தைகளும் இந்திய எழுத்து முறைகளால் கற்க முடிகிறது என்பதைப் பற்றிய ஆய்வுகள் தொடர்கின்றன.

தமிழ்வழிப் பள்ளிகளை ஒழித்து விட்டு ஆங்கில வழிப்பள்ளிகளாக மாற்றினால், பள்ளிப் படிப்பை நிறுத்தி விட்டுத் தற்குறிகளாக மாறக் கூடுவோர் எண்ணிக்கை மூன்றில் ஒருவராகக் கூட மாறலாம் என்பது அமெரிக்கப் புள்ளி விவரத்தோடு ஒப்பிட்டால் தெரியவரும்.

சில சிறிய மாவட்டப் பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து அவற்றை ஆங்கில வழிப் பள்ளிகளாக மாற்றி அவற்றில் மாணவர்கள் படிப்பு நிலை உயர்கிறதா என்று பார்த்து, அவற்றில் டிஸ்லெக்சியாவின் அறிகுறிகள் தென்படுகின்றனவா போன்ற புள்ளி விவரங்களைத் திரட்டிய பின்னரே ஆங்கில வழிப் பள்ளிகளால் வாழ்க்கை நிலை உயருமா என்று அறிய முடியும்.

இன்றைய நிலையில் கல்வி நிலையில் உயர்ந்திருப்பவர்கள் கல்விக்குச் செலவிடும் பொருள், நேரம், அக்கறையால் உயர்ந்திருப்பவர்கள் கூடுதலே தவிர இவர்கள் ஆங்கில வழிக்கல்வியால் மட்டும் உயர்ந்திருக்கிறார்கள் என்று கூறுவதற்குப் போதிய சான்றுகள் இல்லை.

மேம்போக்காகப் பார்க்கும் போது தலைசிறந்த ஆசிரியர்கள், தலைசிறந்த மாணவர்கள் திரண்டிருக்கும் பள்ளிகள் பெரும்பாலும் ஆங்கில வழிப் பள்ளிகளாக இருப்பதைப் பார்த்து, எல்லாப் பள்ளிகளையும் ஆங்கில வழிப் பள்ளிகளாக மாற்றினால் பெரும் வெற்றி கிடைக்கும் என்பது தோன்றலாம்.  ஆனால், இதற்குச் சான்றுகள் குறைவு.  ஆங்கில வழிப் பள்ளிகளுக்கு இருக்கும் முதலீடு தமிழ் வழிப்பள்ளிகளுக்கும் இருந்தால் அவற்றாலும் பெரும் வெற்றி அடைய முடியும்.

எது எப்படி இருப்பினும், தமிழ்நாட்டில் ஆங்கிலம் கற்பிக்கும் முறை இரண்டாம் மொழிக் கல்வி முறையைப் பின்பற்றினால், ஆங்கிலத்தில் புலமை கூடும் என்பதில் ஐயமில்லை.

10 கருத்துகள்:

naanjil சொன்னது…

நன்றாக சொனனீர்கள். ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாக, அடிப்படை இலக்கணமுடன் கற்றால் நல்ல பயன் கிடைக்கும். ஆங்கிலத்தில் பாடங்களை மனப்பாடம் செய்து படிப்பது அறிவு வளர்ச்சிக்குப் பயன் தராது. அரசாங்க கல்விச்சாலைகளில் முறையாக ஆங்கிலத்தைத் திறமைமிக்க ஆசிரியார்களால் கற்றுக் கொடுக்க வேண்டியதுச் செய்யவேண்டும். அறிவுக்குத்தான் வேலை. ஆங்கிலத்திற்கு அல்ல. அமெரிக்காவில் என்ன ஆங்கிலம் தெரிந்தவர்கள் இல்லையா?
அன்புடன்
நாஞ்சில் இ. பீற்றர்

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

அன்புள்ள திரு.மணி ஐயா அவர்களுக்கு

இன்றைய ஆங்கிலவழிக் கல்வி பற்றிய தங்கள் உரையாட்டினைக் கண்டேன்.
ஆங்கிலவழிக் கல்விப் பள்ளிக்கு அனுப்புதவதற்குக் காரணம் பெற்றோரின் ஆங்கிலமொழி குறித்த ஆர்வம் மட்டும் இல்லை.
அங்குள்ள கண்டிப்பு, தரம்,ஆசிரியர்களின் பயிற்றுவிக்கும் ஈடுபாடு(இயற்கையாகவோ,அச்சத்தின் காரணமாகவோ) மிகுதியாக உள்ளது.
இத்தகு நிறுவனங்கள் தனியாரால் நொடிதோறும் கண்காணிக்கப்படுகின்றது. எதிர்காலம் நோக்கித் திட்டமிடப்படுகின்றது.

ஆனால் அரசு கல்வி நிறுவனங்களிள் ஈடுபாட்டுடன் உழைக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கைக் குறைவு, போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இன்மை,
அரசு ஊழியர்களுக்கு வழங்கும் மிகையான சலுகைகள் யாவும் கல்வித்தரம் தாழ்தலுக்குத் தமிழகத்தின் காரணங்கள் எனலாம்.

ஒரு பருவத்திற்கு 92 நாள் பணிநாள் இருந்தது. இதில் எழுபதுநாள் அளவில் ஒரு ஆசிரியர் நண்பர் விடுப்பு எடுத்தார். அவர் பெரும்பான்மையாக வகுப்புக்கு வந்ததில்லை.அவர் கல்லூரிக்கு வந்த நாள்களிலும் கல்லூரியில் இலக்கிய மன்றம் தொடக்கவிழா, முதலாண்டு மாணவர்கள் வரவேற்பு விழா, சரசுவதி பூசை, தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி எடுப்பு, கடையடைப்பு(பந்த்), எதிர்க்கட்சிகளின் சாலை மறியல், மழைபொழிவு, புயல்கொடுமை, சில ஊர்வலங்கள், மாணவர்கள் வகுப்புப் புறக்கணித்த நாள்கள் என்று இருந்ததால் அவர் சென்ற வகுப்புகள் மிகச்சிலவே. இப்படியிருக்க அவரால் எப்படிப் பாடம் நடத்தியிருக்கமுடியும். அவரிடம் படித்த பிள்ளைகள் என்ன அறிவைப் பெற்றிருக்க முடியும்.
அவ்வாறு வராத ஆசிரியரை யார் கண்டிப்பது? அவரைப் பகைத்துக்கொண்டு உயர் பொறுப்பில் இருப்பவர்கள் என்ன செய்யமுடியும்? அவருக்குப் பரிந்துபேச "சங்கங்கள்' உள்ளனவே?அவருக்கு தற்செயல் விடுப்பு,ஈட்டிய விடுப்பு, மதநாள் விடுப்பு,மருத்துவ விடுப்பு,மனைவி குழந்தை பெற்றதற்கு இவருக்கு விடுப்பு, பிற கல்விசார் பணிகளுக்கு 15 நாள் பணிமேற் செல்லல் (விடுப்பு), அரைச்சம்பளவிடுப்பு, புத்தொளிப் பயிற்சிக்கு ஒரு மாதம் அளவில் சொல்லல், (இரண்டு ஆண்டுக்கு மேல் படிக்க,ஆய்வு செய்ய சம்பளத்துடன் விடுப்பு என்று வேறு நிலைகளிலும் உண்டு) என்று நண்பரின் வாழ்க்கை விடுப்பு விழாவாகவே கழிகின்றது. இந்தக் கொடுமையைக் கண்ட எந்தப் பெற்றோர் அரசு நிறுவனத்தில் படிக்க வைப்பார்?
அத்துடன் தங்கள் பிள்ளைகளின் நற்பண்புகள் வளரவும் தனியார் நிறுவனங்களில் வாய்ப்புகள் உள்ளன. எனவே தனியாருக்கு(அது ஆங்கில வழியில் இருந்தாலும்) அனுப்ப வேண்டியுள்ளது.
எனவே தமிழகத்தில் கல்வி பற்றி சிந்திக்கும்பொழுது மொழி பற்றி மட்டும் சிந்திக்காமல் ஒழுக்கம், கண்டிப்பு, கடமை, இட வசதி, போக்குவரவு வசதி, சுற்றுசூழல், வேலைவாய்ப்பு பற்றியெல்லாம் சிந்திக்க வேண்டும் என்று நினைக்கின்றேன்.

தங்கள் அன்புள்ள
மு.இளங்கோவன்

புருனோ Bruno சொன்னது…

//அரசு ஊழியர்களுக்கு வழங்கும் மிகையான சலுகைகள் //

நீங்கள் குறிப்பிடும் மிகையான சலுகைகள் யாவை என்று விளக்க முடியுமா

புருனோ Bruno சொன்னது…

//அவருக்கு தற்செயல் விடுப்பு,//
இது தனியார் துறையில் கிடையாதா
அல்லது ஆசியர்கள் தற்செயல் விடுப்பு எடுக்க கூடாதா
அவர்கள் மனிதர்கள் கிடையாதா
அவர்கள் நண்பர்களின் திருமணத்திற்கு செல்ல கூடாதா
அவர்களின் குழந்தைக்கு ஜலதோஷம் பிடித்தால் மருத்துவமனை கூட்டி செல்லக்கூடாதா

//ஈட்டிய விடுப்பு//
இது தனியார் துறையில் கிடையாதா
அல்லது ஆசியர்கள் தற்செயல் விடுப்பு எடுக்க கூடாதா
அவர்கள் மனிதர்கள் கிடையாதா
அவர்கள் நண்பர்களின் திருமணத்திற்கு செல்ல கூடாதா
அவர்களின் குழந்தைக்கு ஜலதோஷம் பிடித்தால் மருத்துவமனை கூட்டி செல்லக்கூடாதா

//மதநாள் விடுப்பு//

ஆசிரியர் என்றால் அவர் தனது மதப்பண்டிகையை கொண்டாட கூடாதா

என்ன கொடுமை சார் இது

//மருத்துவ விடுப்பு//

அவர் உடல் நலன் சரியில்லை என்றாலும் பள்ளிக்கு வர வேண்டுமா

கொடுமையான சிந்தனை

//மனைவி குழந்தை பெற்றதற்கு இவருக்கு விடுப்பு//

தமிழக அரசு நடத்தும் எந்த பள்ளியில் என்று கூறுங்கள்
ஆதாரம் தாருங்கள்

//பிற கல்விசார் பணிகளுக்கு 15 நாள் பணிமேற் செல்லல் (விடுப்பு)//

இதில் என்ன தவறு

//அரைச்சம்பளவிடுப்பு//

இதில் என்ன தவறு


//புத்தொளிப் பயிற்சிக்கு ஒரு மாதம் அளவில் சொல்லல்//

இதில் என்ன தவறு

//இரண்டு ஆண்டுக்கு மேல் படிக்க//

படிப்பது தவறா
என்ன கொடுமை சார் இது

//ஆய்வு செய்ய சம்பளத்துடன் விடுப்பு என்று வேறு நிலைகளிலும் உண்டு//

ஓ ஆய்வு செய்வது கூட தவறா

புருனோ Bruno சொன்னது…

முனைவர் என்று பெயரில் வைத்துக்கொள்ளூம் முனைவர் திரு மு.இளங்கோவன் அவர்கள் அரசு ஆசிரியர் ஆய்வு செய்வதை கூட நக்கலடிப்பதை பார்த்து என்ன சொல்வதென்று தெரியவில்லை

புருனோ Bruno சொன்னது…

//இதில் எழுபதுநாள் அளவில் ஒரு ஆசிரியர் நண்பர் விடுப்பு எடுத்தா
//

அது எந்த பள்ளி
அந்த ஆசிரியரின் பெயர் என்ன

நீங்கள் கூறியது உண்மையா என்று சரி பார்க்க நான் விரும்புகிறேன்

bandhu சொன்னது…

//அல்லது ஆசியர்கள் விடுப்பு எடுக்க கூடாதா//
விடுப்புகள் தவிர்க்க முடியாதது. அந்த நாட்களில் வேறு ஆசிரியர்கள் substitution பாடத்திற்கு ஊறு விளைவிக்காமல் ஏற்படுத்தினால் போதுமானது

புருனோ Bruno சொன்னது…

//bandhu said...

//அல்லது ஆசியர்கள் விடுப்பு எடுக்க கூடாதா//
விடுப்புகள் தவிர்க்க முடியாதது. அந்த நாட்களில் வேறு ஆசிரியர்கள் substitution பாடத்திற்கு ஊறு விளைவிக்காமல் ஏற்படுத்தினால் போதுமானது //

bandhu சார்,

இங்கு பிரச்சனை என்பது விடுப்பு மட்டுமல்ல

முனைவர் அவர்கள் கூறும் நபர் கல்லூரி ஆசிரியராகத்தான் இருக்க வேண்டும்

அதை ஏன் பள்ளி கல்வி விவாதத்தில் வைக்க வேண்டும்

அடுத்து இயற்கை சீற்றங்கள் என்றால் தனியார் பள்ளிகளுக்கும் சேர்த்து தானே விடுமுறை

அதை இதில் சேர்க்கும் “அளவற்ற நேர்மை” எனக்கு இடிக்கிறது

அடுத்து “அரசு ஊழியர்களுக்கு வழங்கும் மிகையான சலுகைகள்” என்று “மனைவி குழந்தை பெற்றதற்கு இவருக்கு விடுப்பு” என்று தமிழ்க அரசில் இல்லாத ஒன்றை கூறுவது அநாகரிகம் என்பது என் கருத்து

முனைவர் அவர்களின் தமிழ் சேவையை மதிக்கிறேன்

ஆனால் தமிழ் தொண்டு என்ற காரணத்தினால் அவரது அரசு ஆசிரியர்கள் அவரது அவதூறுகளை கண்டுகொள்ளாமல் விட முடியாதல்லவா

ராம்ஜி_யாஹூ சொன்னது…

இளங்கோவன் அவர்களே தங்கள் கருத்தோடு வார்த்தைக்கு வார்த்தை முரண் படுகிறேன்.
பல மாணவர்கள் (நான் மற்றும் என் நண்பர்கள் பலர்) அரசு பள்ளியில் படித்து உலக அளவில் பல நாடுகளில் உயர்ந்த பணி யில் இருக்கிறோம்/இருந்தோம்.

KAVINTAMIL சொன்னது…

தனியார் பள்ளிகளை பற்றிய முனைவர் இளங்கோவன் கருத்துக்கள் உணமை என்றாலும் கூட அதற்கு மக்கள் செலுத்தும் கட்டணம் பற்றி யோசிக்க வேண்டும்.ஆனால் அரசு பள்ளிகளில் நிர்வாக காரணங்களுக்காக ரூ.100 வாங்கினாலும் அது இங்கு அரசியலாக்கப்பட்டு போராட்டம் நடத்தப்படுகிறது.பல அரசு பள்ளிகளில் பல்வேறு பிரச்சனைக்கு மத்தியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் மிகக் குறைந்த சம்பளத்தில் ஆசிரியர்களை நியமனம் செய்து மிகச்கிறந்த கல்வி தரப்படுகிறது.