கலைச்சொல்லாக்கம் வையாபுரிப்பிள்ளை இராமசாமிக் கவுண்டர் தனித்தமிழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கலைச்சொல்லாக்கம் வையாபுரிப்பிள்ளை இராமசாமிக் கவுண்டர் தனித்தமிழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஜனவரி 16, 2011

கலைச்சொல்லாக்கம் - 1944ல் ஒரு கருத்தாடல்

தமிழில் கலைச்சொற்கள் படைப்பது பற்றிய காரசாரமான கருத்து வேற்றுமைகளைக் கடந்த பல ஆண்டுகளாகப் பார்த்து வந்திருக்கிறேன்.  கலைச்சொற்களைப் படைக்கும்போது தனித்தமிழ்ச் சொற்களைப் படைக்கலாமா கூடாதா என்பதில் உரத்த கருத்தாடல்கள் இன்னும் தொடர்கின்றன.  விஞ்ஞானம் என்றுதான் எழுத வேண்டுமா அல்லது அறிவியல் என்று எழுதலாமா என்று கனடாவின் ஜெயபாரதன் அவர்களும் பேரா. செல்வகுமார் அவர்களும் அடிக்கடி தமிழ்மன்றம் மடலாடற்குழுவில் மோதிக் கொள்வார்கள்.

தனித்தமிழில் எழுத வேண்டும் என்போர் தாலிபான்கள் என்றே குற்றம் சாட்டுவார் வன்பாக்கம் விஜயராகவன்.  அதை இப்போது ஜெயபாரதன் அவர்களும் வழிமொழிகிறார்.

தனித்தமிழில் கலைச்சொல் படைப்பது பற்றி(ப்) பாரதியாரும் எழுதியிருக்கிறார். மெம்பர் என்ற சொல்லுக்கு இணையான தனித்தமிழ்ச் சொல்லைப் படைக்கச் சற்றுத் தடுமாறியும் இருக்கிறார் பாரதி.  இன்று நாம் உறுப்பினர் என்று வெகு இயல்பாகச் சொல்லும் ஒரு சொல் பாரதியையே ஒருகாலத்தில் தடுமாற வைத்திருப்பது கலைச்சொல்லாக்கத்தைப் பற்றி நமக்கு ஒரு பாடமாக அமைகிறது.

ஆங்கிலத்தில் இருந்து கலைச்சொற்களைத் தமிழில் மொழி பெயர்க்க வந்த அறிஞர்கள் பெரும்பாலும் வடமொழிப் புலமையுள்ளவர்களாக இருந்திருக்கிறார்கள்.  அவர்களுக்கு வெகு இயல்பான மொழிபெயர்ப்பாக இருந்த சொற்கள் இப்போது நமக்குப் புரியாத சொற்களாக இருக்கின்றன.

எடுத்துக் காட்டாகப் பின்வரும் சொற்கள் 1944ல் பாடநூல்களில் இருந்திருக்கின்றன, ஆனால் இவை இன்றும் நம்மில் பெரும்பாலோர்க்குப் புரியாதவை:
சோக்‌ஷிகள், க்‌ஷாரம், ஆஹார சமீகரணம், யோகவாஹி, சஞ்சாயகி, வாஹகம், ஹரிதகிகாமலம்,  அப்ஜ இரத்தகிகாமலம், பாக்கியஜனக அனிஷ்கர்ஷம், சங்கோஜயத்வம், பிரதிலோம, விபாஜியத்துவம், பிரதி மாகேந்திரம், அவினா சத்வம், அவிபேத்யம், சமாந்திர சதுர்புஜம், அதிருசிய ரேகை, நிஷ்காசினி, வித்யுத்லகானிகம், வக்ர பாவித்வம், உஷத்காலம், ஆபாஸபிம்பம், ஜ்யாமிதி, கிருஷித் தொழில்
தனித்தமிழ்க் கலைச்சொல்லாக்கம் செய்ய வேண்டும் என்று தமிழார்வலர்கள் பெருமுயற்சி செய்திருந்தாலும், கலைச்சொல்லாக்கக் குழுவினர் வடமொழிச் சொற்களையோ அல்லது ஆங்கிலச் சொல்லையோ அப்படியே கையாள்வதையே 1940களில் முறையாக் கொண்டிருக்கிறார்கள்.

தனித்தமிழ்க் கலைச்சொல்லாக்கத்தைக் கடுமையாக எதிர்த்தவர்களில் ஒருவர், சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதியின் தலைமை ஆசிரியராகவும் சென்னைப்பல்கலையின் தமிழ் ஆராய்ச்சித் துறைத் தலைவராகவும்  விளங்கிய இராவ்சாகிப் எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்கள்.

”கலைச்சொல்லாக்கம் என்ற தொடர் இப்பொழுது எங்கும் முழங்குகிறது.  மாநாடுகள் கூட்டப் படுகின்றன. சாதிச் சச்சரவுகளை விளைத்துத் தம் ஆத்திரங்களைத் தீர்த்துக் கொள்ள இதுவே தக்க நேரம் என்று பலரும் இதில் சேர்ந்துள்ளார்கள்.  பலவகை முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன,” என்று சாடியிருக்கிறார் பேரா. வையாபுரிப் பிள்ளை.

இந்தக் கண்ணோட்டம் மிக முக்கியமானது.  தனித்தமிழ் இயக்கம் என்பது சாதிச் சச்சரவாளர்களின் ஆயுதமாகக் கருதப்படும் வரையில், அது முழுவெற்றி பெறுவது கடினம்.  மேலே குறிப்பிட்ட, மக்களுக்குச் சற்றும் விளங்காத, பிறமொழிச் சொற்களைத் திணிப்பதை விடத் தாய்மொழியில் கலைச்சொற்களைப் படைத்து அவற்றைப் பரப்புவதுதான் உயர்ந்த செயல்.  ஆங்கிலம் வெகுவாகப் பரவியிருக்கும் இக்காலத்தில் ஏன் ஆங்கிலச் சொற்களையே எடுத்தாளக் கூடாது என்பதற்கு, மேற்கண்ட எடுத்துக்காட்டு ஒரு நல்ல பாடம்.  1941ல் கற்றவர்களுக்கு, வடமொழிச் சொற்களே வெகுவாகப் பரவியிருப்பது போலத் தோன்றியிருக்கிறது.  அது அவர்கள் சுற்றத்தில் உண்மையாகவே இருந்திருக்கலாம்.  ஆனால்,  ஒரு காலத்தில் ஐரோப்பாவின் செவ்வியல் மொழிகளான லத்தீன, கிரேக்க மொழிகளின் வேர்ச்சொற்களைக் கொண்டு ஆங்கிலத்தில் கலைச்சொற்களைப் படைத்தது போலவே, இந்தியாவின் செவ்வியல் மொழியான சமஸ்கிருத வேர்ச்சொற்களைக் கொண்டு இந்திய மொழிகள் அனைத்துக்குமே கலைச்சொற்களைப் படைக்க முயன்றனர்.  இது சமஸ்கிருதம் பெரிதும் கலந்திருந்த ஏனைய இந்திய மொழிகளுக்கு வெகுவாகப் பொருந்தியிருந்தாலும், தனித்தியங்கும் தன்மை உள்ள இந்தியாவின் இன்னொரு செவ்வியல் மொழியான தமிழுக்குப் பொருந்தாது, தேவையற்றது.

வையாபுரிப் பிள்ளையின் இந்தக் கண்ணோட்டத்தைக் கடுமையாக எதிர்த்திருக்கிறார் சேலம் கல்லூரியின் தலைவர் அ. இராமசாமி கவுண்டர்.  இவர்கள் இருவரும் 1941ல் அமைக்கப் பட்ட, ஆங்கிலப் பேராசிரியர் சுவாமிநாத அய்யர் தலைமையில் அமைந்த, தமிழ்க் கலைச்சொல்லாக்கக் குழுவில் நேருக்கு நேர் மோதியிருக்கிறார்கள். அதைப் பற்றி  இராமசாமிக் கவுண்டர் “குடியரசு” இதழில் டிசம்பர் 4, 1943ல் எழுதியிருக்கிறார்.  அதைச் “செந்தமிழ்ச் செல்வி” என்ற தனித்தமிழ்த் திங்களிதழ் 1944 தைத் திங்கள் வெளியீட்டில் எடுத்து எழுதியிருக்கிறது

அவர்கள் உரையாடல் மிகச் சுவையாக இருந்திருக்கிறது.  நினைவிருக்கட்டும், இது இராமசாமிக் கவுண்டர் கண்ணோட்டம்.

இரா:  சாஸ்திரம் என்ற சொல்லைக் காட்டிலும் நூல் என்ற சொல்லே மிகப் பொருத்தமாக உள்ளது.  ஆதலால் நூல் என்ற சொல்லையே ஏற்றுக் கொள்ள உம்மை வேண்டுகிறேன்.

வை: அரிய விஞ்ஞான கருத்துக்களைத் தொகுத்தும், விரித்தும், ஒழுங்குபடுத்திச் சிறந்த வகையில் கூறுவது சாஸ்திரம் எனப்படும். ஆனால் நூல் என்பது ஏதேனும் ஒன்றைப் பற்றி எழுதப்பட்ட ஒரு புத்தக வடிவத்தைக் குறிப்பதாகும். ஆதலால் கணித நூல் என்பதைக் காட்டிலும் கணித சாஸ்திரம் என்பதே அதிகப் பொருத்தமுடையது.

இரா: தாங்கள் கூறிய இவ்விலக்கணத்திற்கு ஆதாரம் உளதோ?

வை: ஆதாரம் ஒன்றும் இல்லை.  யாமே இவ்வாறு வகுத்துக் கொண்டு அதன்படியே பிறவிடங்களிலும் கையாண்டு வருகின்றோம்.

இரா: இது உமது சொந்தக் கற்பனையெனின், சாஸ்திரத்தின் இலக்கணத்தை நூலுக்கும் நூலின் இலக்கணத்தைச் சாஸ்திரத்துக்குமாக மாற்றி அமைத்துக் கொள்ளலாமே?  நூல் என்ற சொல்லுக்குத் தாழ்ந்த பொருளும் சாஸ்திரம் என்ற சொற்கு உயர்ந்த பொருளும் கற்பிக்கப் படுவதன் நோக்கம் யாது?

வை: அது உலக வழக்கு.

இரா: நூல் என்பதும் சாஸ்திரம் என்பதும் ஒரு பொருள் குறிக்கும் இரு சொற்களாகவே உலகில் வழங்குகின்றன. வியாகரண சாஸ்திரம் என்பதும் இலக்கண நூல் என்பதும் ஒரு பொருளையே குறிக்கின்றன. மேலும், சென்னைப் பல்கலைக் கழகத்தாரால் பதிப்பிக்கப் பட்ட (Tamil Lexicon) தமிழ் அகராதியில் நூல் என்ற சொல்லு க்கு,   "Systematic treatise, science சாஸ்திரம்” என்ற பொருள் குறிக்கப் பட்டுள்ளது. இதை ஏற்றுக் கொள்ளுவதா அல்லது தங்கள் புதிய பொருளைக் கொள்வதா?

வை: பல்கலைக் கழக அகராதியிலுள்ள பொருள் சரியன்று. அது அவசரத்தால் நேர்ந்த பிழையாகும்.


இரா: தொல்காப்பியத்தில் நூலுக்கு இலக்கணம் வகுக்கப் பட்டுள்ளது.

“ஒத்த சூத்திரம் உரைப்பிற் காண்டிகை, மெய்ப்படக் கிளந்த வகையதாகி யீரைங்குற்றமும் இன்றி நேரிதின் முப்பத்திருவகை யுத்தியொடு புணரின் நூலென மொழிப நுணங்கு மொழிப் புலவர்”

என்பது நூலின் இலக்கணமாயிருக்க உங்கள் விருப்பப்படியெல்லாம் தமிழர் மரபுக்கு முரண்படப் பொருள் கொள்ளுதல் முறையல்லவே?

வை: நூலும் சாஸ்திரமும் ஒரு பொருள் குறிப்பனவாயின் சாஸ்திரம் என்ற சொல்லை நீங்கள் ஏன் ஆட்சேபிக்கின்றீர்கள்?

இரா: சாஸ்திரம் என்பது வடசொல்.  நூல் என்ற தூய தமிழ்ச் சொல்லிருக்க அதே பொருளுடைய பிற சொல்லைப் புகுத்துதல் நீதியன்று.  மேலும், இது தமிழ்ச் சொல்லாக்கக் கமிட்டியேயன்றி வடசொல்லாக்கக் கமிட்டியல்ல என்பதைப் பணிவுடன் நினைப்பூட்டுகிறேன்.

வை: சாஸ்திரம் என்பதும் தமிழ்ச் சொல்லேயாகும். அது தேவாரம், திருவாசகம் முதலிய சமய நூல்களில் ஆளப்பட்டுள்ளது. தமிழில் இரண்டறக் கலந்த சொல்லெல்லாம் தமிழ்ச் சொல் என்பதே எமது துணிபு.

இரா: உங்கள் கொள்கை எனக்கு வியப்பைத் தருகிறது.  சாஸ்திரம் என்ற சொல் சமய நூல்களில் காணப் படலாம். ஆனால் அதனாலேயே அது தமிழ்ச் சொல்லாகாது. ஒரு சொல் தமிழ்ச் சொல்லா ஆரியச் சொல்லா என அறிவதற்குப் பல முறைகளுண்டு.  அவற்றுள் ஒன்றினாலாவது உங்களது கொள்கையை நிலைநாட்ட முடியாது.

வை: அடிப்படையான கொள்கையிலேயே உமக்கும் எமக்கும் கருத்து வேற்றுமையுண்டு.  ஆதலால் விவாதத்தை நிறுத்திக் கொள்வோம்.  கமிட்டித்தலைவர் திரு. கே. சாமிநாதன் தமது விருப்பப்படியே தீர்ப்புச் செய்துகொள்ளட்டும்.

இரா: அப்படியே ஆகட்டும்.  சாஸ்திரம் என்ற சொல்லே இக்கமிட்டியால் ஒப்புக்கொள்ளப்படும் என்பதை நான் அறிவேன். ஆனால், தமிழருக்கும் தமிழ்நாட்டுக்கும் நீங்கள் பெரும் தீங்கு விளைவிக்கிறீர்கள் என்பதையும் பிற்காலத்தில் தமிழர்கள் வீறிட்டெழுந்து சீறுவாராயின் அவர்களுக்குச் சமாதானம் கூறும் பொறுப்பு உங்களுடையதாகும் என்பதையும் உங்கட்கு அறிவிக்கின்றேன்.”
[ மணி:  பேரா. வையாபுரிப்பிள்ளை பல்கலைக் கழக அகராதிக்குழுவின் தலைவர்.  அவர் நூலையே அவருக்கு எதிராகச் சான்றுக்கு அழைத்திருக்கிறார் இராமசாமிக் கவுண்டர்! ]
இந்த உரையாடலைப் பற்றிக் குடியரசு ஏட்டில் எழுதிய இராமசாமிக் கவுண்டர் வையாபுரிப் பிள்ளையின் கொள்கையைப் பொதுமன்றங்களிலும் எதிர்த்து விளம்பரப் படுத்தாதனால் அவரால் பெரும் தீங்கு விளைவிக்க முடிந்ததே என்று வேதனைப் பட்டு “உட்பகையை” வெல்ல வேண்டியதன் கட்டாயம் பற்றி எழுதித் தன் கட்டுரையை நிறைவு செய்திருக்கிறார்.
“வடமொழியினின்றும் தமிழைக் காக்குமுன் உட்பகையுடைய தமிழரினின்றும் அதைக் காக்கக் கடமைப்பட்டுள்ளோம் என்பதைத் தமிழ் மக்களுக்குப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.”
இதை 2011லிருந்து பார்க்கும் நமக்கு மலைப்பு மேலிடுகிறது.  அன்று வையாபுரிப் பிள்ளையின் கொள்கை வென்றிருந்தாலும், இன்று சாஸ்திரம் என்ற சொல் தமிழ் கலைச்சொற்களில் வெறும் அடிக்குறிப்பு மட்டுமே.  இயல், நூல் என்ற தனித்தமிழ்ச் சொற்கள் காலத்தால் நிலைத்து விட்டன.  விஞ்ஞானம் என்ற சொல் 1960களோடு உறைந்து விட்ட சொல்.  விஞ்ஞானி என்ற சொல் மட்டும் வழக்கில் இருக்கிறது. இன்று அறிவியல் என்ற சொல்லே பெரிதும் வழங்கும் சொல்.

ஆயிரம் குறைகள் இருந்தாலும், தனித்தமிழ் இயக்கம் தமிழ்நாட்டில் ஓரளவுக்காவது முந்தைய வடமொழி ஆதிக்கத்தைத் தணித்து இன்று ஆங்கிலத்தின் ஆதிக்கத்தையும் எதிர்கொள்ள முடிகிறது என்றால், 1967ல் நடந்த அரசியல் மாற்றங்களும் இதற்கு அடிப்படையாகக் கொள்ள வேண்டியிருக்கிறது.

வையாபுரிப்பிள்ளை மட்டுமே அறிவியல் முறைப்படி நடந்தவர் என்றும் அவரை எதிர்த்த தனித்தமிழ் இயக்கத்தினர் சாதி, இனக்காழ்ப்புணர்ச்சி மேலிட்ட சிறுமதியினர் என்றும் ஒரு தோற்றத்தை அண்மைக் காலத்தில் ஒரு சாரார் ஏற்படுத்தி வருகின்றனர்.

ஆனால், இந்த உரையாடலைப் படிக்கும்போது திரு வையாபுரிப் பிள்ளை ஒரு சட்டாம்பிள்ளை போன்று பேசியிருக்கிறாரே ஒழிய அறிவியல் சார்பான கொள்கைகள் எதையும் அவர் முன் வைத்ததாகத் தெரியவில்லை.  அதற்கு அவர் எழுதிய நூல்களைப் படித்தால்தான் விளக்கம் காணலாம்.

எது எப்படியோ, தனித்தமிழில் கலைச்சொற்கள் ஆக்கிவந்திருக்கும் அறிஞர்கள்  எத்தகைய கடும் எதிர்ப்புகளை எல்லாம் எதிர்கொண்டு வென்றிருக்கிறார்கள் என்பது மலைப்பு தருகிறது.

இது போன்ற எதிர்ப்புகள் எவையும் இல்லாமலேயே இணையம், கணினி போன்ற தனித்தமிழ்ச் சொற்களைப் பட்டிதொட்டி எல்லாம் பரப்ப முடிவதற்கு அந்த முன்னோடிகளுக்கே நன்றி சொல்ல வேண்டும்.