ஞாயிறு, ஜூலை 18, 2010

செந்தமிழும் தொல்பண்பாடும் - நீசமொழியுமில்லை, தேவ மொழியுமில்லை, மாந்தர் மொழி

முதலில் நாம் ஓர் உறுதிமொழி எடுக்க வேண்டும்.

அறிவியல் முறையாக நிறுவி உலக அறிஞர்கள் ஏற்றுக் கொண்ட செய்திகளைத்தான் நம்புவோம் என்போம்.

தமிழ் ஞாலத்தின் முதல் மொழி என்பது வெறும் நம்பிக்கை.  இதற்கு அடிப்படை ஏதும் இல்லை.

தமிழனின் பண்பாடு உலகின் முதல் பண்பாடு இல்லை. 

சிந்து சமவெளிப்பண்பாடு தமிழ்ப்பண்பாடு இல்லை.  அப்படியே இருந்திருந்தாலும், அதற்கும் முந்தைய பண்பாடுகள் உலகில் இருந்திருக்கின்றன.

ஏனைய திராவிட மொழிகள் தமிழிலிருந்து கிளைத்தவை அல்ல.  மலையாளம் மட்டுமே தமிழிலிருந்து அண்மைக்காலத்தில் பிரிந்தது.

தெலுங்கும் கன்னடமும் தமிழிலிருந்து பிரிந்தவை அல்ல. அல்லவே அல்ல.

கன்னடமும் தமிழும் மிக நெருங்கிய மொழிகள். இரண்டும் தென் திராவிட மொழிகள்.

தெலுங்கு நடு திராவிட மொழி..

லெமூரியா என்பது கட்டுக்கதை.  அதற்கு அறிவியல் அடிப்படை ஏதும் இல்லை.  அறவே இல்லை.

லெமூரியா வேறு, குமரி நாடு வேறு.

குமரி நாடு என்பதைக் கடல்கோளால் நாம் இழந்திருக்கலாம்.  ஆனால் அப்படி இழந்திருந்தாலும் கூட, குமரி நாடு என்பதன் பரப்பளவு இன்றைய தென் தமிழ்நாட்டையும் விடச் சிறிதாகத்தான் இருந்திருக்கும்.

இலங்கையும் தமிழகமும் ஒட்டியிருந்த காலம் உண்டு.  அதனாலும் நாம் நிலத்தை இழந்திருக்கலாம்.

ஆனால், உயர்மொழிகள், கலைகள், நுட்பங்கள், என்பவை தான் தோன்றிகளாக இருக்கவே முடியாது.  அவை மக்களின் ஊடாட்டத்தில் பிறப்பவை.

இவை எவையுமே தெற்கில் தோன்றி வடக்குக்குச் செல்லும் வாய்ப்பு மிக மிகக் குறைவு.

திராவிட இனமும் மொழிகளும் வடமேற்கிலிருந்து தெற்குப் பெயர்ந்ததற்கான செய்திகள் உள்ளன.  ஆனால், இவை மேலும் உறுதி செய்ய வேண்டியவை.

திராவிட மொழிகளுக்கும் சிந்து சமவெளிப் பண்பாட்டு மொழிக்கும் நெருங்கிய உறவுகள் இருந்திருக்கலாம்.  ஆனால் இவையும் உறுதி செய்ய வேண்டியவை.

நாம் நேரடியாக ஹரப்பா மொகஞ்சதாரோவிலிருந்து செந்தமிழ்ப் பேசிக் கொண்டு தென்னகத்துக்கு வந்ததாக நினைப்பதற்கு எந்த அடிப்படையும் இல்லை.

குரங்கிலிருந்து படிநிலை வளர்ச்சி பெற்ற தொல்மாந்தர்கள் தமிழ் பேசியதாகச் சொல்வதற்கு எந்த அடிப்படையும் இல்லை.

எகிப்தின் பிரமிடுகளையும், சீனர்களின் உயர் பண்பாட்டையும், நடு கிழக்கு நாடுகளின் பண்பாடுகளையும் ஒப்பிடும்போது, அவர்கள் சமகாலத்தில் தமிழர்கள் உயர் பண்பாட்டை அடைந்திருந்தால் அதற்கான எந்த விதத் தடயங்களும் நம்மிடம் இல்லை.

இவை ஏதும் இல்லாமல், கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றி மூத்த குடி என்று நாம் சொன்னால், மற்றவர்கள் அப்படியா என்று கேட்டுக் கொண்டு வேறு வேலை பார்க்கப் போய் விடுவார்கள்.

தமிழ் நீச மொழியும் இல்லை.  வடமொழி தேவ மொழியும் இல்லை.

இரண்டுமே மனித மொழிகள்.

வேதங்கள் மனிதர்களால் இயற்றப் பட்டவை.  இராமாயண மகாபாரதக் காப்பியங்களும் மனிதர்களால் இயற்றப் பட்டவை.  அவை சொல்லும் கதைகள் மனிதர்களைப் பற்றிய கதைகளாகத்தான் இருக்க வேண்டும்.

தமிழின் ஒப்பற்ற படைப்புகளான சங்கப் பாடல்கள் ஐயம் ஏதும் இல்லாமல் மனிதர்களைப் பற்றியே இருக்கின்றன.

சங்கப் பாடல்கள் உலக இலக்கியங்களின் வரிசையில் ஒப்பிட்டுப் போற்றத் தக்கவை.

அதனால் மட்டும் தமிழ்க்குடி உலகின் ஏனைய குடிகளை விட எட்டாத உயரத்துக்குப் போய் விட முடியாது.

தமிழ் தன் சுற்றத்தில் உள்ள மக்களோடு, மொழிகளோடு, கருத்துகளோடு உறவாடாமல் சங்க இலக்கியமும் எழுந்திருக்க முடியாது.

இவற்றை நாம் உணர்ச்சி வழியாக இல்லாமல் அறிவு வழியாகப் பார்த்தல் நமக்கும் நம் மொழிக்கும் நலம் தரும்.

கருத்துகள் இல்லை: