சனி, செப்டம்பர் 04, 2010

என் வாக்கைப் பெற விரும்பும் தமிழ் வேட்பாளருக்கான குறைந்த அளவு தகுதிகள்

ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன என்று முகநூலில் நான் ஒரு மறுமொழி அளித்திருந்தேன்.  அதைப் பார்த்த ஒரு நண்பர்
    மிக தவறான போக்கு இது.. எவன் ஆண்டால் என்ன என்று தன் கடமை தெரியாத படிக்காதவர்கள் சொல்லலாம்.. மிக்க படித்த நீங்கள் சொல்வது இந்த நாட்டுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.. எற்படுத்திகொண்டிருக்கிறது... இதுக்கு பேரு நடுநிலைமை இல்லை.
  
    இங்கு அனைவருக்கும் ஒரு அரசியல் அறிவு தேவை.. அரசியல் இல்லாமல் எதுவும் இல்லை இங்கே.. நீங்கள் சாப்பிடும் பருக்கையில் கூட அரசியல் கலந்திருக்கிறது என்று அறிந்துகொள்ளுங்கள்.. அரசியலை விட்டு விலகும் மக்கள் இருக்கும் நாடு உருப்படாது தானே
என்று மிகவும் கடிந்து கொண்டார். அவர் கேட்பதிலும் ஒரு நேர்மை இருக்கத்தான் செய்கிறது.  என்ன செய்வது?

 நான் வாக்களிக்க விரும்பும் வேட்பாளருக்குக் குறைந்தது கீழ்க்கண்ட தகுதிகள் இருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.
  1. கொலை, கொள்ளை செய்திருக்கக் கூடாது.  (கிண்டலுக்காகச் சொல்லவில்லை.  இதுதான் நாட்டு நடப்பு) (என்கவுன்டரில் யாரையாவது ”போட்டுத் தள்ளி” இருந்தாலும், அதுவும் கொலைதான்.)
  2. குண்டர்கள் சட்டத்தின் கீழுள்ள செயல்களைச் செய்திருக்கக் கூடாது
  3. தாதா வேலை செய்திருக்கக் கூடாது.  (இது குண்டர்கள் தலைவர் வேலைதான், இருந்தாலும் சொல்ல வேண்டிய தேவை)
  4. பொதுச் சொத்துகளைச் சேதப் படுத்தியிருக்கக் கூடாது (நல்ல கொள்கைக்காகப் போராடியிருந்தாலும் கூட)
  5. மக்களாட்சி நாட்டில் மன்னராட்சியை நினைவூட்டும் பட்டப் பெயர்களை வைத்திருக்கக் கூடாது (மன்னர், வேந்தர், தானைத்தலைவர், கேப்டன், நாயகன், தளபதி, சக்ரவர்த்தி, போன்றவை
  6. உறவுப் பெயர்களை எதையும் பட்டப் பெயராய் வைத்திருக்கக் கூடாது (ஐயா, தாத்தா, பாட்டி, தந்தை, அப்பா, அம்மா, அண்ணா, அக்கா, தம்பி, தங்கை)
  7. என்னை உறவுப் பெயரால் அழைக்கக் கூடாது (உடன்பிறப்பு, ரத்தத்தின் ரத்தம், போன்ற பசப்புச் சொற்கள் எப்போதோ காலாவதியாகி விட்டன).
  8. வானுயரக் கட் அவுட்களை எந்தக் காலத்திலும் வைத்திருக்கக் கூடாது.  சிலை வைத்திருக்கக் கூடாது.  பால் குடமுழுக்கு (பாலாபிஷேகம்) பண்ணியிருக்கக் கூடாது
  9. திரை, சின்னத்திரை உலகுகளோடு எந்தத் தொடர்பும் இருக்கக் கூடாது.  (மன்னிக்கவும். திரைத்துறையினர் முதலில் ஒழுங்காகத் திரைப்படத்தை எடுக்கக் கற்றுக் கொள்ளட்டும்.  நடிக்கத் தெரியாதவர்கள் எல்லாம், ஏன் நடிக்கத் தெரிந்தவர்களும் கூடத்தான், நான் அடுத்த முதலமைச்சர் ஆகப் போகிறேன் என்று சொல்லும்போது குமட்டிக் கொண்டு வருகிறது.)
  10. பெருஞ்செல்வந்தர்கள், நிலக்கிழார்கள், பெரிய தொழிலதிபர்கள் மற்றும் அவர்கள் அடியாட்கள், “நெருங்கிய” உறவினர்கள் மற்றும் நண்பர்கள் போட்டியிடக் கூடாது
  11. டாக்டர், எஞ்சினியர், லாயர், புரொபசர் என்ற பட்டங்களை எல்லாம் இருந்தாலும் விளம்பரப் படுத்திக் கொள்ளக் கூடாது.  அரசியலில் ஆய்வுப் பட்டம் பெற்றிருந்தாலும் கூட அதை விளம்பரப் படுத்தக் கூடாது
  12. வேட்பாளராகும் முன்னர் இருந்த செல்வத்தை விடப் பன்மடங்கு ( அதாவது ஒரு 25%க்கு மேல் வட்டி கிடைத்தால் கூட )  செல்வம் கூடினால், அவற்றில் 95%ஐ வரியாகக் கட்டி விட வேண்டும்.
  13. குடும்பமே அரசியலில் ஈடுபடக் கூடாது.  நான்கு தலைமுறைக்கு ஒருவர் மட்டும் போதும்.  அதுவும் தலைமுறையில் பதவி வகித்தவர் இன்னும் உயிரோடு இருக்கும் வரை அவரது வாரிசுகள் யாரும் போட்டி போடக் கூடாது. (அதாவது அமைச்சர் தட்சணாமூர்த்தி  உயிரோடு இருக்கும் வரை அவர் மகன் லெனின், அவர் மருமகன் தங்கம், ஒன்று விட்ட பேரன் அருட்செல்வம், பேத்தி மீனாட்சி, கொள்ளுப்பேரன் ராகுல் என்று யாரும் எந்த அரசியல் பதவியும் வகிக்கக் கூடாது.)
  14. ஒருவர் வாழ்க்கையில் இரண்டு முறை மட்டும் ஒரு பதவிக்குப் போட்டி போடலாம்.
  15. எந்த ஜாதிக் கட்சியிலும் எக்காலத்திலும் இருந்திருக்கக் கூடாது, கூட்டணி வைத்திருக்கக் கூடாது.  ஜாதியை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தியிருக்கக் கூடாது.
  16. அறிவியல், தொழில்நுட்பம், அரசாங்கவியல், தமிழ் மொழி, இலக்கியம், வரலாறு பற்றிய நல்ல அறிவும் புலமையும் இருக்க வேண்டும்.
  17. எடுத்தவுடன் வருங்கால முதலமைச்சர் என்று போஸ்டர் போட்டால், என்னுடைய வாக்கு அறவே இல்லை.
  18. வாழ்க்கையில் ஒரு சில ஆண்டுகளாவது யாரிடமாவது ஊதியத்துக்கு வேலை பார்த்திருக்க வேண்டும்
  19. வாழ்க்கையில் ஒரு சில ஆண்டுகளாவது ஏதாவது ஒரு தொழில் தொடங்கி நாலு பேருக்கு வேலை கொடுத்திருக்க வேண்டும்
  20. உள்ளூராட்சி, நகராட்சியில் அடிநிலை மன்ற உறுப்பினர் பதவியில் இருந்து படிப்படியாக அனுபவம் பெற்று மேலுக்கு வந்திருக்க வேண்டும்.
  21. அறிவியல், தொழில்நுட்பம், பொருளாதாரம், வரலாறு, ஆட்சித்துறை இவற்றைப் பற்றி மக்களுக்குத் தமிழில்  எளிமையாக எடுத்துச் சொல்லும் அறிவும் திறமையும் இருக்க வேண்டும்.
  22. இந்திய ஆட்சிப்பணியில் தேறி அரசுப்பணிக்கு வந்திருக்கும் அலுவலர்களை எதிர்கொள்ளும் அளவுக்குப் பட்டறிவும், படிப்பறிவும் இருக்க வேண்டும்.
  23. தப்பித் தவறிக் கூட எதிர்த்து நிற்கும் கட்சிகளையும், வேட்பாளர்களையும் தரக்குறைவான சொற்களால் தாக்கியிருக்கக் கூடாது.
  24. குறைந்தது உயர்நிலைப் பள்ளி வரைக்குமாவது தமிழ் வழிப் பள்ளியில் படித்திருக்க வேண்டும்
  25. தெற்கு மாகடலுக்கு நடுவினிலே, அங்கோர் கண்ணற்ற தீவினிலே, தனிக் காட்டினிற் பெண்கள் புழுங்குகின்றார் எனில் இவர் துடி துடிக்க வேண்டும்; உலகில் எந்த மூலையில் தமிழர்க்கு இன்னல் விளைந்தாலும் அவர்களைக் காப்பாற்றப் பெருமுயற்சி எடுக்க வேண்டும்.
  26. தற்காலத்தின் மிகப் பெரிய சிக்கல்களான புவி வெம்பல், சூழல் மாசு, உலக மயமாக்கலின் பின் விளைவுகள், பெரு நிறுவனங்களின் அத்து மீறல்கள், பெருநாடுகளின் ஆதிக்கப் போக்கு, அண்டை மாநிலங்களோடு ஆற்று நீர்ப் பங்கீட்டுச் சச்சரவுகள், போன்றவற்றைப் பற்றிய ஆழ்ந்த சிந்தனையும் உறுதியான திட்டங்களும், அவற்றைச் செயலாற்றும் திறனும் ஆற்றலும் இருக்க வேண்டும்.
இவைதான் குறைந்த அளவு தகுதிகள்.

என் கண்ணுக்கு இந்தத் தகுதிகள் உள்ளவர்கள் யாரும் தட்டுப் படவில்லை. வருங்காலத் தலைவர்கள் இப்படி இருப்பார்களா என்றும் தெரியவில்லை.  இருக்க வேண்டும்.  அப்படி ஒருவர் தோன்றும் வரை, ஓ போடுவது எவ்வளவோ மேல்.

அப்படியே நான் விட்டு விட்ட தகுதிகளைப் பற்றி நீங்கள் சொல்லலாமே!