வியாழன், பிப்ரவரி 03, 2011

காணாமல் போன ஒரு கவிதை

இணையத்தில் தமிழ் நுழைந்த தொடக்க நாட்களில், அதாவது 1995 முதல், எங்களில் பலர் தமிழில் உலகத்தின் வெவ்வேறு மூலைகளில் இருக்கும் தமிழர்களோடு தமிழில் கருத்தாடல் செய்வதை ஒரு பெரும்பேறாக நினைத்தோம்.  அது வரை, தனித்தனிக் கிணறுகளுக்குள் இருந்த தமிழ் நண்பர்கள், ஒரு மாபெரும் தமிழ்ப் பெருங்கடலுக்குள் நீந்த முடிந்தது அப்போதுதான்.  தமிழ்.நெட் என்ற வலைத்தளமும், tamil@tamil.net என்ற மடலாடற்குழுவும்தான் இன்றைய தமிழ் இணைய முயற்சிகளுக்கெல்லாம் முன்னோடி.

முதன்முதலில் தமிழில் எழுதுகின்ற மகிழ்ச்சியாலோ என்னவோ, தொடக்க நாட்களில் கருத்துப் பரிமாற்றங்களில் ஒரு மென்மையும், மதிப்பும், வாஞ்சையும் இருந்தது.  மாற்றுக் கருத்து கொண்டவர்களையும் வரவேற்று அவருக்கும் தமிழில் தட்டச்சிடக் கற்றுக் கொடுத்துப் பின்னர் கருத்து வேறுபடும் பண்பாடு அப்போது இருந்தது.  தமிழ்.நெட் குழுவின் நிறுவனர்கள் பாலா பிள்ளையும், ”முரசு அஞ்சல்” புகழ் முத்து நெடுமாறனும் இணைந்து தமிழுக்கு வழங்கிய கொடை அது. தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருதுக்குத் தகுதியானவர்கள் பாலா பிள்ளையும் முத்து நெடுமாறனும்.  கோவையில் நடந்த தமிழ் இணையம் 2010 கருத்தரங்கில் இவர்கள் இருவரையும் ஒரே மேடையில் வைத்துத் தமிழின் தாயகத்திலேயே போற்றி மகிழலாம் என்று முயன்றேன்.  ஏனோ அன்று அது கை கூடி வரவில்லை.  ஆனாலும், தமிழ்.நெட் காலத்தின் முன்னோடிகளோடு கூடி ஓர் உணவரங்கில் சில மணி நேரம் பழையதை அசை போட முடிந்ததில் எனக்கு மகிழ்ச்சி.

தமிழ் இணைய முன்னோடிகளும், நெடுங்கால நண்பர்களும் (உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, கோவை. சூன் 26, 2010). இடமிருந்து வலமாக பேரா. செல்வகுமார், நாக. இளங்கோவன், தமிழ்.நெட் பாலா பிள்ளை,  “மதுரைத் திட்டம்” முனைவர் கல்யாணசுந்தரம், மணி மு. மணிவண்ணன், ”கேஎட்கிராப்”  இளங்கோவன்,  “தமிழ் மரபு அறக்கட்டளை” நா.கண்ணன், ”முரசு அஞ்சல்” முத்து நெடுமாறன் (பச்சை வரி சட்டை), ”வளவு” இராம.கிருஷ்ணன் (இராமகி),  பேரா. நாகராசன்

இந்தக் கூட்டத்தில் சிங்கை பேராசிரியர் டான் டின் வீ, மலேசிய நண்பர் இளந்தமிழ் மற்றும் விக்‌ஷனரி முரளீதரன் மயூரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

தமிழ்.நெட் மடலாடற்குழு பற்றி ஒரு தனிப் புத்தகமே எழுதலாம்.  “எழுதலாம், ஆனால், யாரும் படிக்க மாட்டார்கள்” என்று ஒரு பதிப்பாளர் என்னிடம் சொன்னார்!  இருக்கலாம்.  ஆனால், தமிழ் இணையத்தின் முன்னோடிகள் பற்றிய செய்திகள் தமிழ்நாட்டில் பலருக்கும் தெரியாது.  இது வரை வந்த தமிழ் இணைய வரலாற்று நூல்களிலும் தமிழ்.நெட்டைப் பற்றிய குறிப்புகள் குறைவே.

வலைப்பூக்களுக்கு முற்பட்ட அந்தக் காலத்தில் ஒவ்வொருவரும் ஜியோசிட்டீஸ் (geocities.com) போன்ற தளங்களில் தனிப் பக்கங்களையும் வைத்திருந்தோம்.  தமிழ் இணையத்தின் தொடக்க நாட்களை அதில் பங்கேற்ற எங்களில் சிலர் அதைப் பொற்காலமாகவே போற்றி நினைவு கொள்கிறோம்.

தமிழ்.நெட்டில் எழுதிய அறிஞர்களில் பெரிதும் போற்றப் படுபவர் “அகத்தியர்” என்ற மடலாடற்குழுமத்தின் நிறுவனரும், மலேசியத் தமிழியல் அறிஞருமான மருத்துவர் ஜெயபாரதி அவர்கள்.  தமிழ் இலக்கியம், வரலாறு, சமூகவியல் என்று எண்ணற்ற பல தலைப்புகளில் மிகவும் அரிய தகவல்களை அவர் பகிர்ந்து வந்திருக்கிறார். அவை இன்று http://www.treasurehouseofagathiyar.net/ என்ற தளத்தில் தொகுக்கப் பட்டிருக்கிறது.  அவர் அவ்வப்போது தமிழ்.நெட் வலைஞர்களுக்கு ஏதாவது ஒரு புதிர், அல்லது போட்டி கொடுத்து ஊக்குவித்துக் கொண்டிருப்பார்.

அப்படித்தான் ஒரு முறை, 1998 வாக்கில், காலச்சக்கரம் என்ற தலைப்பில் ஒரு வங்காளக் கவிஞர் எழுதிய ஆங்கிலக் கவிதை ஒன்றை அனுப்பி இதைத் தமிழில் மொழி பெயர்க்க முடியுமா என்று கேட்டார்.   நான் கல்லூரி நாட்களில் “கவிதை” எழுதிக் கவியரங்கங்களில் பங்கேற்றிருக்கிறேன்.  இன்று பெரும்புகழ் பெற்று விளங்கும் கவிஞர் வைரமுத்து அவர்களோடு ஒரே மேடையில் போட்டி போட்டதெல்லாம் ஏதோ பழங்கனவாய் நெஞ்சில் நிழலாடுகிறது.  ஆனால், அமெரிக்கா சென்ற பின்னர் பல ஆண்டுகளாய்த் தமிழோடு தொடர்பு அறுந்து போன பின்னால், தமிழில் எழுதுவதே பெரியது என்று எண்ணிக் கொண்டிருந்த நான் கவிதையை எல்லாம் மறந்து மனம் இறுகிப் போயிருந்தேன்.  அந்தக் கல்லுக்குள்ளும் ஈரம் இருந்தது என்பதைக் கொண்டு வந்தது அறிஞர் ஜெயபாரதியின் அறைகூவல்.  இது ஒரு பெரிய கவிதை என்பதற்காக எடுத்து எழுதவில்லை.  ஆனால், தமிழையே மறந்து போயிருந்தோம் என்ற நிலையில் இருந்த புலம்பெயர் தமிழர்களிடையே தமிழைக் கொண்டு வந்ததில் தமிழ்.நெட்டின் பங்கையும், அதில் கலந்து கொண்டு எண்ணற்ற புலம்பெயர்ந்த தமிழர்களைப் பெரிதும் ஊக்குவித்த அறிஞர் ஜெயபாரதி அவர்களின் தொண்டையும் அன்புடன் நினைவு கூர்கிறேன்.

அறிஞர் ஜெயபாரதி அவர்கள் கொடுத்த ஆங்கிலக் கவிதையையும், எனது தமிழாக்கத்தையும் ஜியோசிட்டீஸ் என்ற தளத்தில் பதித்து வைத்திருந்தேன்.  ஜியோசிட்டீஸ் தளம் பின்னால் மறைந்து விட்டது.  அதில் ஏற்றி வைத்திருந்தவையும் காற்றில் கலந்து விட்டது.  நான் எழுதிய “கவிதையும்” காற்றில் கலந்து விட்டது என்றே மறந்திருந்தேன்.  ஆனால், இன்று தற்செயலாக, வேறு எதையோ தேடிக் கொண்டிருந்த போது ஜியோசிட்டீஸ் தளத்தில் நான் ஏற்றியிருந்த கவிதை இன்று ”ரியோசிட்டீஸ்” என்ற ஒரு புதுத்தளத்தில் கிடைத்தது! 

காணாமல் போன கவிதை ஒன்றைப் பற்றி ”அம்பும் பாட்டும்” என்ற தலைப்பில் ஹென்றி லாங்ஃபெலோ எழுதிய பாட்டு நினைவுக்கு வந்தது.  அதையும் நான் தமிழ்.நெட்டில் மொழி பெயர்த்திருந்தேன்.


அம்பும் பாடலும்

அம்பொன்றைக் காட்டிலே விட்டெறிந்தேன்
விழுந்ததெங்கோ அதை நானறியேன்
காற்றினும் கடுகிப் பறந்ததம்பு
கண்ணிமை விரிக்குமுன் காணவில்லை

பாட்டொன்றைக் காற்றிலே மிதக்க விட்டேன்
பறந்ததெங்கோ அதை நானறியேன்
பாட்டொன்று பறந்திடும் பாதையைக் கண்
பார்த்திட வல்லவர் பாரிலுண்டோ?

ஆண்டு பல உருண்டோடிய பின் ஓர்
ஆலமரத்தில் அந்த அம்பு கண்டேன்;
அந்தப் பாடலும் முழுதாய் வாழ்ந்ததுவே
ஓர் அன்புடை நண்பனின் நெஞ்சினிலே!

Click here to see the English original of "The Arrow and the Song" by Henry Wadsworth Longfellow

இதோ காலச்சக்கரம் மொழிபெயர்ப்பு:

சுழல்

எப்படித் திரும்பிப் போவேன் நானும்
எங்கே தேடுவேன் நேற்றை
இன்றைக்கு வந்து சேர
ஏறி வந்த படிகள்
உருளும் காலச் சுழலால்
உடைந்து பொடியாய்ப் போச்சே!

பின்னால் திரும்புவது ஏது?
முன்னால் நகர வேண்டும்;
முன்னால், முன்னால், முன்னால்
முடிவில்லாத பயணம்.

இல்லை ஏதும் நோக்கம்
இல்லை பயணத்து எல்லை
உண்டே ஒரு நாள் ஓய்வு
அங்கும் பிரிப்பார் குடிசை
அணைத்துக் கட்டிய பின்பே!

ஏனோ இதைக்கண்டு அச்சம்
எல்லாம் மாயை தானே
குழப்பம் வாழ்வில் உண்டு
காப்போ வாழ்வில் இல்லை
காப்பைத் தேடி நிதமும்
செத்துப் பிழைப்பாய் தினமும்

யாருக்கு வேண்டும் ஓட்டம்
சாவைத் தேடி நிதமும்?
என்றோ ஒரு நாள் காலன்
வருவான் நம்மைத் தேடி!
வாழக் கற்றுக் கொள்வோம்
அதுதான் நல்ல பாடம்!

அதிசயம் என்னவென்றால்
வாழத் தெரிந்தவனைத்தான்
காலன் கூப்பிட மாட்டான்
அதுதான் உலகின் இயல்பு

வேண்டாம் என்றே உதறு
வெறுப்பும் தானே போகும்!
இருட்டில் ஒளியைத் தேடு
துயரில் மகிழ்வைத் தேடு!
அதுதான் உலகின் இயல்பு!

வாழ்வைப் பார்த்துச் சொல்நீ
”வேண்டாம் எதுவும் எனக்கு
உன்னால் முடிந்ததைச் செய் நீ”
சாவைப் பார்த்துச் சொல்நீ
”செத்தேன் என்றோ நானும்
செய்வதைச் செய்து கொள் நீ”
அன்றே விடுதலை கிடைக்கும்.

வாழ்வைத் துறந்தாலன்றோ
சாவையும் துறக்க முடியும்?
இரண்டையும் துறந்த பின்னே
வாழ்வுக்கு இல்லை எல்லை
என்றே அறிவாய் நீயும்
அதுதான் உலகின் இயல்பு

ஆங்கில மூலம்: சந்தீப் முகர்ஜீ
தமிழ் மொழிபெயர்ப்பு:  “நாமக்கல் கணிஞன் தமிழ்வளவன்”

”நாமக்கல் கணிஞன் தமிழ்வளவன்” என்பது என் அந்தக் காலத்துப் புனைபெயர்.

இணையக் காற்றில் பறந்த அம்பு இன்று இன்னொரு இணையத்தளத்தில் வாழ்வது குறித்து வியக்கிறேன்.