Sunday, July 28, 2013

”அபுனைவு” என்பது புனைவுக்கு எதிர்மறைச் சொல்லா?

அண்மையில் "non-fiction" என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையாகத் தமிழில் ”அபுனைவு” என்று எழுதுவதைப் பார்க்கிறேன்.  கவிஞர் ஹரிகிருஷ்ணன் இது அவருக்குத் தெரிந்து சுமார் இருபதாண்டுகளாகச் சிறு பத்திரிகைகளில் வெளிவந்து, ‘இலக்கியவாதிகள்’ மத்தியில் பரவலாகவும் புழங்குகிறது என்கிறார். 

Fiction என்ற ஆங்கிலச் சொல்லுக்குப் புனைவு என்ற சொல்லைப் புழங்கி வருகிறார்கள் எனத் தெரியும்.  ஆனால், புனைவுக்கு எதிர்மறைச் சொல்லாக, அதன் முன் அகர முன்னொட்டு இட்டு ‘அபுனைவு’ என்று சொல்லுவது தமிழின் மரபு இல்லை.  இப்படி அகர முன்னொட்டு இட்டு எதிர்மறையாக்குவது சமஸ்கிருதத்தின் மரபு.  

bhayaabhaya
pūrvaapūrva
maṅgalaamaṅgala
mārgaamārga

அமரர் என்ற சொல்லும் இப்படித்தான் மரணமற்றவர்கள் என்ற பொருள்தரும் வடசொல் வேரிலிருந்து வந்தது.

ஆங்கிலத்திலும் இதே போன்ற மரபு உண்டு.
chromaticachromatic
morphousamorphous
symmetricasymmetric
typicalatypical

இவை பெரும்பாலும் கிரேக்க வேர்ச்சொற்களில் இருந்து வந்தவை.  ஆனால், சென்னைப் பேரகரமுதலியில் தேடிப்பார்த்தால், இந்த அகர எதிர்மறை முன்னொட்டு எந்தத் தமிழ் வேர்ச்சொல்லின் முன்னும் இல்லை. ‘அபு’ என்று தொடங்கும் சொற்கள் மூன்று மட்டுமே. (
http://dsalsrv02.uchicago.edu/cgi-bin/philologic/contextualize.pl?p.0.tamillex.950993.951293). அவை
:

*அபுத்திபூருவம் aputti-pūruvam, n. < a- buddhi-pūrva. That which is unintentional; அறியாமல் நிகழ்ந்தது

*அபுத்திரகன் a-puttirakaṉ, n. < a-put- raka. One without male issue; புத்திரனைப் பெறாதவன்.

*அபுதன் aputaṉ, n. < a-budha. Fool, dolt: மூடன்.

இந்த மூன்றும் வடசொற்கள்.

அபுனைவு என்ற சொல்லை எப்படி உச்சரிக்கிறார்கள் எனத் தெரியவில்லை. புனைவு என்பதில் பகரம் வல்லொலி.  அபுனைவு என்பது தமிழாகவே தெரியவில்லை.  இருப்பினும் அதைப் படிக்கும்போது  abunaivu என்று மெலிந்து ஒலிக்கத்தான் தோன்றுகிறது.  அதை அ-புனைவு என்று இடைவெளி விட்டுப் படிப்பதும் மரபல்ல.

தமிழில் எதிர்மறைகள் பின்னொட்டு வழியாகத்தான் வருபவை.  சென்னைப் பல்கலைப் பேரகராதியில் “அபு” என்று தொடங்கும் சொற்கள் எவையும் இல்லை என்பதே இதன் தொன்மையான மரபைக் காட்டுகிறது.

பிராமணர் அல்லாதவர் என்பதைக் குறிப்பிட “அபிராமணர்” என்றா சொல்லுவீர்கள் என்று ஒரு எழுத்தாள நண்பரிடம் கேட்டபோது அவர்கள் வீட்டில் அப்படித்தான் சொல்வார்கள் என்று சொன்னார். அதை அபிராமணர் என்று உச்சரிக்காமல் ‘அப்ராமணர்’ என்று உச்சரிக்க வேண்டும் என்று விளக்கினார் ஹரி.  அதாவது

bhrāmanabhrāman

தமிழில் அபிராமணர் என்று சொல்ல முடியாது.  அப்பிராமணர் என்றால் அது அந்தப் பிராமணர் என்றுதான் பொருள்தரும். இது நிச்சயம் தமிழல்ல

பிராணிக்கு எதிர்மறை அபிராணியா?  அதை அப்பிராணி என்றா சொல்வார்கள்? அப்படிச் சொன்னால், அதை அந்தப் பிராணி என்றல்லவா புரிந்து கொள்ள நேரிடும்?

Non-Congress, non-Communist என்பவற்றை அகாங்கிரஸ் கட்சி, அகம்யூனிஸ்ட் என்று சொன்னால் தலை சுற்றவில்லையா? Non-payment க்கு அகட்டணம் என்று சொல்லிப்பாருங்கள்!

புனைவு என்ற சொல்லுக்கு அபுனைவு என்று எதிர்மறைச்சொல் படைத்தவர்களுக்குத் தமிழும் தெரியவில்லை, வடமொழியும் தெரியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.  இப்படி ஒரு மொழியின் அடிப்படை இலக்கணமே தெரியாமல் சொற்களைப் புனைபவர்களும், அதை எடுத்து ஆள்பவர்களூம்தான் இன்று இலக்கியவாதிகள். காப்பியைக் குளம்பி என்று தமிழ்ப்புலவர்கள் அழைத்தால் நக்கலடிக்கும் அதே இலக்கியவாதிகள் இப்படித் தமிழும் தெரியாமல் வடமொழியும் தெரியாமல் அபுனைவு என்று படைப்பதைப் பார்த்தால், மாமியார் உடைத்த ‘மண்குடம்’ என்பதுதான் நினைவுக்கு வருகிறது.
 

பெயர்ச்சொல்லுக்கு முன் அ- முன்னொட்டை இட்டு அதை எதிர்மறையாக மாற்றுவது ஆங்கிலத்துக்கும் வடமொழிக்கும் இலக்கண முறையாக இருக்கலாம்.  இரவற்சொற்களில் கூட இவை எடுத்தாளப் படலாம்.  ஆனால் தமிழ்ச்சொல்லுக்கு இவை பொருந்துமா?

இலக்கணம் மாறுகிறதே!
புனைவுக்கு எதிர்ச்சொல்லாக புனைவிலி என்று ஒரு ஆட்சியைப் பார்த்தேன். தாழ்வில்லை. இது பற்றிப் பேரா. செல்வகுமாரின் தமிழ்மன்றம் மடலாடற்குழுவில் உரையாடினோம். (காண்க: 
https://groups.google.com/forum/#!topic/tamilmanram/XMnHR-o4bWk )

புனைவறு’ என்று எழுதுவேன் என்று நாக. இளங்கோவன் சொல்கிறார். ‘அல்’ என்ற முன்னொட்டை இட்டு அல்புனைவு என்றும் சொல்லலாமே என்கிறார்.  பேரா. செல்வகுமார் அல்புனை என்ற சொல்லைப் பரிந்துரைக்கிறார்.  அல் முன்னொட்டுப் பல தமிழ்ச்சொற்களில் பயின்று வருகிறது என்று சுட்டுகிறார்.
தமிழில் இப்படி அபுனைவு என்பது கசப்பாகவே உள்ளது.
ஆனால் தமிழில் 
அல்வழி (வேற்றுமையல்லாத வழி, தகாத வழி)
அல்வழக்கு,
அல்லியன் (குழுவைப் பிரிந்த யானை),
அல்லிப்பிஞ்சு (பூவிழாத பிஞ்சு )
அல்லும்பகலும் என்னும் சொல்லாட்சியில் அல் என்பது இரவு (கதிரவனின் பகல் வெளிச்சம் இல்லாதது).
இனும் பல சொற்கள் உள்ளன. ஆகவே அல் என்னும் முன்னொட்டுடன் வரும் தமிழில். 

அல்லங்காடி என்ற சொல் மாலையில் கூடும் சந்தையைச் சுட்டுகிறது என்பது நினைவுக்கு வருகிறது.  ஆனால், அங்கே அல் என்பது இருளையும், இரவையும் சுட்டுகிறது.  அங்காடி அல்லாதது என்று சொல்லவில்லை.  எனவே அல் என்ற முன்னொட்டு எல்லா இடங்களிலும் பொருந்தாது என்றும் புரிகிறது.

இராமகி சொல்கிறார்:
அல்புனைவு என்று சொல்லலாம்; குழப்பம் வராது. தமிழிற் பெரும்பாலும் பின்னொட்டுக்களே பயிலும். அரிதாகவே முன்னொட்டுக்கள் பயின்று பார்த்திருக்கிறேன். அல் என்பது அப்படி ஓர் முன்னொட்டாகும். முதலிற் சொல்லும்போது முன்னொட்டாய் வைத்து இப்படிச் சொல்லத் தயங்கினேன். பின்னால் கொஞ்சங் கொஞ்சமாய் நான் ஏற்றுக் கொண்டுவிட்டேன். ஏனென்றால் 
”அல்வழி யெல்லாம் உறழென மொழிப” - தொல்.எழுத்து.புள்ளி 73;“அறனை நினைப்பானை யல்பொருள் அஞ்சும்” - திரிகடுகம் 72.“அல்வழக்கு ஒன்றுமில்லா அணிகோட்டியர்கோன் - திவ். திருப்பல்.11. ”அல்லறஞ் செய்வோர் அருநரகு அடைதலும்” - மணிமே. 16:89”அழுக்காற்றின் அல்லவை செய்யார்” - குறள் 164“அல்லுழியெல்லாம் பரந்துபட்டு வரவும் பெறும்” - தொல்.பொருள்.செய்.183. பேரா.உரை   என்ற முன்னோர் காட்டுக்கள் இருக்கின்றன. இந்தச் சிந்தனையிற் தோய்ந்தே ”அத்வைதம்” என்பதற்கு ”அல்லிருமை” என்ற இணைச்சொல்லை நான் ஏற்கனவே பரிந்துரைத்தேன்.
புனைவிலி என்பது புனைவே இல்லாதது (no imagination) என்றாகும்; அதனால் “முற்றிலும் உள்ளமை (totally real) என்ற பொருட்பாடு வந்துவிடும். Non-fiction என்பது இதுவல்ல. அது கதையல்லாதது; எனவே வேறொரு வகையைக் குறிக்கும்.
இல்ல, அல்ல என்ற இருவகைக் கருத்துக்களுக்கும் உள்ள பொருள் வேறுபாட்டை இங்கு நுண்ணி எண்ணிப் பார்க்கவேண்டும். இல்லுதலும், அல்லுதலும் வேறு வேறானவை.
அல்புனைவோ அல்லது அல்புனையோ இவ்விரண்டுமே அபுனைவை விட மேலானவை. கொட்டைவடிநீர், குளம்பி, மூத்த குரங்கு தமிழ்க்குரங்கு என்றெல்லாம் தமிழ்ப்புலவர்களை நக்கலடிக்கும் ‘இலக்கியவாதிகள்’ அபுனைவு என்று தாம் படைத்தது தவறு என்று ஏற்றுக் கொண்டு அல்புனைவு சரி என்று ஏற்றுக்கொண்டு தாம் அறிவு நேர்மை உடையவர்கள் என்று உறுதி செய்ய இது ஒரு நல்ல வாய்ப்பு. 

செய்வார்களா? “இலக்கியவாதிகள்” செய்யாவிட்டாலும் தாழ்வில்லை.  தமிழைப் பற்றி அக்கறையுள்ளவர்களாவது செய்யலாமே?

6 comments:

Anonymous said...

மிகவும் பாராட்டத்தக்கதொரு பதிவு. இன்று இலக்கியவாதிகள் என தம்மை தம்பட்டம் அடித்துக் கொள்வோரின் மடச்சாம்பிராணித் தனம் தான் அபுனைவு என்ற சொல். இதுக் குறித்து நானும் எழுத நினைத்ததுண்டு, ஆனால் நீங்கள் அருமையை எடுத்துரைத்துவிட்டீர்கள். அ முன்னொட்டு இந்தோ- ஆரிய மொழிகளினது தமிழில் முன்னொட்டு குறைவு. அதுவும் அ என்பது சுட்டுப் பொருளில் வரும். அ புனைவு எனில் அந்த புனைவு, புனைவில்லை என்றே சொல்லலாம். இது புனைவு அது புனைவில்லை. அல்லது அல்புனைவு எனவும் கூறலாம். அல் என்றால் அல்ல என்ற பொருள் தரும் சொல், தமிழ் இலக்கியவியாதிகளுக்கு தமிழும், வடமொழிகளும் புரியாது குழம்பிக் கிடப்பதை என்னும் போது வேதயையே மிஞ்சுகின்றது. இனியாவது திருத்திக் கொள்வாராக.

மணி மு. மணிவண்ணன் said...

வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி நிரஞ்சன் அவர்களே. தற்கால எழுத்தாளர்கள் சிலருக்குத் தமிழிலக்கணத்தில் போதிய பயிற்சியோ அக்கறையோ இல்லையோ எனத் தோன்றுகிறது. அதே போல், கட்டுக்கடங்காத கவிதைகளுக்கு இலக்கணம் வேலி போடுகிறது என்று குறைகூறிப் புதுக்கவிதை எழுதும் ‘கவிஞர்கள்’ ஜப்பானிய ஹைக்கூ இலக்கணத்துக்குக் கீழ்ப்பணிந்து ‘புதுக்கவிதை’ படைக்கத் தயங்குவதில்லை. இப்படித் தம் மரபைத் தாழ்வாகவும் வேற்று மரபை ஓங்கி உயர்த்தியும் பார்ப்பதின் உளவியல் எனக்குப் புரிவதில்லை.

Indian said...

இராம.கி அவர்களின் சொல்லாக்கங்களை தமிழ்ச் சொல்லாக்கம் என்ற வலைத்தளத்தில் தொகுத்துள்ளேன். இதுவரை தொகுத்த சொற்களின் எண்ணிக்கை : 1889.

மணி மு. மணிவண்ணன் said...

மிக்க நன்றி. தாம் படைத்த சொற்களின் தொகுதி தம்மிடமே இல்லை என இராமகி அவர்கள் ஒருமுறை சொன்னதாக நினைவு. இதை அவருக்கும் அனுப்பியுள்ளேன்.

nayanan said...

முன்பொருமுறை இவ்வலைப்பதிவை தமிழ் உலகம் குழுவில் பார்த்தேன். மீண்டும் தற்போது பார்க்கிறேன். மிகப்பெரிதாக அருமையாக வளர்த்திருக்கிறார் தமிழ்ச்சொல்லாக்க வலைப்பதிவர். சிறந்த பணி. பாராட்டுகள்.

கொற்றவன் KOTRAVAN said...

அபுனைவு என்பது வடமொழி இலக்கணத்தை ஒட்டி இருக்கிறதே அன்றி தமிழ் இலக்கணைத்தை ஒட்டி இல்லை.ஆகையால் அபுனைவு என்பது தவறான சொல்லாகவும் தவறான முன் எடுத்துக்காட்டாகவும் அமையும்