சனி, நவம்பர் 28, 2009

புலந்திரும்பலின் சிக்கல்கள்

புலந்திரும்பலின் சிக்கல்கள்

அண்மையில் அமெரிக்கா சென்ற இந்தியத் தலைமை அமைச்சர் முனைவர் மன்மோகன் சிங், இந்திய அமெரிக்கர்களையும், புலம் திரும்பி இந்தியாவில் வந்து பணியாற்றுமாறு வேண்டிக் கொண்டார்.

ஏற்கனவே ஹார்வர்ட் பல்கலை ஆராய்ச்சியாளர் விவேக் வாத்வாவின் ஆய்வின்படி அடுத்த ஐந்தாண்டுகளில் நூறாயிரத்துக்கும் மேலான இந்தியக் கொடிவழியினர் இந்தியாவுக்குத் திரும்பக்கூடும் என்கிறது.

இன்றைய நியூ யார்க் டைம்ஸ் செய்தி, கொஞ்சம் பொறுங்கள், இது ஒன்றும் அவ்வளவு எளிதில்லை என்று அமெரிக்காவுக்கு ஆறுதல் அளிக்கிறது.

ஏறத்தாழ ஒரு தலைமுறை (மூன்று பத்தாண்டு கால) அமெரிக்க வாழ்க்கைக்குப் பின்னர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகம் திரும்பிய எனக்கு இந்தச் செய்திகள் என்னைப் போன்றோர் பற்றியவை என்பதால் ஆர்வத்துடன் படித்தேன்.

புலந்திரும்பும் இந்தியர்களை வரவேற்பதாக இந்தியப் பிரதமர் சொன்னாலும், அது வெறும் வாய் வார்த்தை மட்டுமே. திரும்புபவர்களுக்கு என்று தனியாக சீன அரசு செய்வது போன்ற உதவி எதையும் எதிர்பார்க்கக் கூடாது. சுங்கத் தீர்வைகள், இறக்குமதி சலுகைகள் போன்ற சில சலுகைகள் இருக்கலாம். அவையும்கூட, புலம் திரும்பும் இந்தியர்களுக்கு என்ற தனிப்பட்ட சலுகைகள் ஏதுமில்லை. மற்ற எவரையும் போல, உங்கள் வருங்காலத்தை நீங்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இந்தியா இப்படி விட்டேற்றியாக நடந்து கொள்வதற்குக் காரணங்கள் இருக்கின்றன. ஒன்று எப்படிப்பட்ட சலுகைகள் எவரை ஈர்க்கும் என்று சிந்தித்து அந்தத் திறமைகளை இந்தியாவுக்குக் கொண்டு வரும் அளவுக்கு அரசுத் துறைகள் சிந்திக்கும் திறனற்றவை. அப்படியே சிந்தித்தாலும், ஏற்கனவே வசதியுடன் வாழும் புலம்பெயர் இந்தியர்களுக்குச் சலுகை அளிப்பது என்பது அரசியல் ரீதியில் சிக்கலானது. சீன அரசுக்கு இந்தச் சிக்கல் எல்லாம் இல்லை.

இந்திய அரசு, புலம்திரும்பும் இந்தியர்களின் "தேச பக்தி", "குடும்பப் பிணைப்பு" அல்லது "லாப நோக்கு" என்ற இவற்றை மட்டுமே நம்பியிருக்கிறது. தேசபக்திக்காக இந்தியா திரும்புவார்கள் என்று நினைத்தால், இன்று வலைப்பூவுலகில் பக்கம் பக்கமாக நாட்டுப் பற்றைப் பறைசாற்றிக் கொண்டிருப்பவர்கள் எல்லோருமே மூட்டை கட்டிக் கொண்டு இந்தியா வந்திருப்பார்கள். அதெல்லாம் வலைப்பூவில் மார் தட்டுவதோடு சரி. உண்மையில் பச்சை அட்டை கிடைக்க வாய்ப்பின்மை அல்லது குடும்பப் பற்று காரணங்களால் திரும்புபவர்களே கூடுதல்.

அண்மைக்காலத்தில் லாப நோக்கு கருதியும் பல இந்தியர்கள் புலம் திரும்புகிறார்கள். உண்மையில் புலம் திரும்புகிறார்கள் என்பதை விட இரு புலம் கொள்கிறார்கள் என்பதே பொருந்தும். அமெரிக்கக் குடியுரிமையும், கடல்கடந்த இந்தியக் குடியுரிமையும் கொண்டவர்கள் இரு நாடுகளிலுமே வாழ முடியும், வணிகம் செய்ய முடியும். இந்த வகையினருக்குச் சிக்கல்கள் அவ்வளவாக இல்லை. குடும்பத்தை அமெரிக்காவிலும், கும்பெனியை இந்தியாவிலும் கொண்டு வாழ முடியும்.

இந்தியாவில் குப்பை கொட்டுவதற்குத் தனித் திறமை வேண்டும். இது அமெரிக்காவைப் போன்ற சட்டங்களை மதிக்கும் நாடு அல்ல. அதைப் புரிந்து கொள்ள அரசாங்கத்துடனோ, அரசியல்வாதிகளுடனோ பழக வேண்டியதில்லை, சாலை விதிகளைச் சற்றும் பொருட்படுத்தாமல் இயங்கிக் கொண்டிருக்கும் போக்குவரத்து ஒன்றே போதும். சிவப்பு விளக்கு, நிறுத்தப் பலகை, ஒரு வழிப்பாதை, ஒழுங்கைகள், சாலைக் கோடுகள், குறுக்குச் சுவர்கள் என்று எவற்றையும் மதிக்காத மக்கள், சட்டம் என்பது பொதுநலத்துக்கு என்பதைப் பற்றிச் சற்றும் கவலைப் படுவதில்லை.

வீதியோரங்களில் கோவில் கட்டுபவர்கள், ஆற்றங்கரைகளிலும், புறம்போக்கு நிலங்களிலும் குடிசை போடுபவர்கள், கண்ட இடங்களில் குப்பை கொட்டுபவர்கள், ஆறுகளையும், ஓடைகளையும், ஏரிகளையும், குளங்களையும் சாக்கடையாக்குபவர்கள், ஆற்றுப்படுகைகளிலும், ஏரிப்படுகைகளிலும் பட்டா போட்டு அடுக்கு மாடி வீடு கட்டுபவர்கள் என்று பொதுமக்களே சட்டங்களைப் பொருட்படுத்தாமல் இயங்கும்போது நீதித்துறையையும், காவல்துறையையும், அரசியல்வாதிகளையும், குற்றம் சொல்லி என்ன பயன்? பேரா. ரகுநாதன் சொல்வதுபோல் இந்தியர்கள் தனிவாழ்க்கையில் அறிவாளிகள், பொதுவாழ்க்கையில் மூடர்கள். ( 'Indians Are Privately Smart and Publicly Dumb')

இந்தியர்களில் பலர் சட்டம், ஒழுங்கு, விதிகள் இவற்றைப் பின்பற்றுவதில்லை என்பது ஒன்றும் புதிய செய்தியில்லை. இது குறைந்தது 600 ஆண்டுகளாகவாவது இருக்கும் நிலை. எப்போது அந்நியர் ஆட்சிக்குக் கீழ் வாழ வேண்டியிருந்ததோ, அப்போதே, அரசாங்க விதிகளை எப்படி நெகிழ வைக்க வேண்டும் என்பதை அறிவதுதான் பிழைப்புக்கு வழி வகுப்பதாக இருந்திருக்க வேண்டும். சரி, இப்போதுதான் அந்நியர் ஆட்சி இல்லையே என்று வாதிக்கலாம். ஆனால், பல்வேறு சாதி, மதம், கொள்கைகளால் பிளவுண்ட மக்களுக்கு இராமன் ஆண்டாலும் சரி, இராவணன் ஆண்டாலும் சரி, ஆள்பவர்கள் அந்நியர்கள் என்றே தோன்றுகிறதுபோலும்.

ஆனால், எல்லோருமே இப்படிப்பட்டவர்களில்லை. இந்தியாவிலும் பலர் நேர்மையானவர்கள். சட்டம், விதிகளை மதிப்பவர்கள். உண்மையில், இப்படிப் பட்டவர்களும் இருப்பதால்தான் இந்தியா ஓரளவுக்காவது இயங்குகிறது எனலாம். ஆனால், மக்கள் நலத்துக்காக எந்தச் சட்டங்களை, எந்த விதிகளை, எப்போது ஓரளவுக்கு நெகிழ்விக்க வேண்டும் என்பது தெரியாமல் கண்ணை மூடிக் கொண்டு விதிகளைப் பின்பற்றுபவர்களும் உண்டு. இதய வலியால் துடித்துக் கொண்டிருக்கும் பேருந்துப் பயணியை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சேர்க்காமல், ஒவ்வொரு நிறுத்தத்திலும் நிறுத்திப் பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்த பேருந்து ஓட்டுநரைப் பற்றி என்ன சொல்ல முடியும்? ஓட்டுநருக்கு ஒரு விதி, பயணிக்கு ஒரு விதி.

புலம் திரும்புபவர்களுக்கும் கலாச்சார அதிர்வு காத்திருக்கிறது. அலுவலக நெறிமுறைகள் அமெரிக்கா போல் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது என்றாலும், இந்தியாவின் முறைகளுக்குப் புலம் திரும்புபவர்கள் ஆயத்தமாக வேண்டும். என்ன இருந்தாலும், இந்தியாவும் அமெரிக்காவும் அந்நிய நாடுகள்தாமே!

அமெரிக்காவில் நெடுநாள் வாழ்ந்தவர்களுக்கு அமெரிக்கக் கலாச்சார இயல்புகள் தம்மை அறியாமல் இருப்பது வெளிநாட்டில் வாழ வரும்போதுதான் புரியும். புறத்தில் இந்தியன் அகத்தில் அமெரிக்கனாக இருப்பது இந்தியர்களுக்கும் குழப்பம் அளிப்பது. இந்தியாவில் எதுவும் திட்டப்படி நடப்பதில்லை. ஆனால், மிகவும் நெருக்கினால், தலைகீழாக நின்றாவது வேலை நடந்துவிடும். புலம் திரும்பும் இந்தியர்கள் இந்தியாவில் சமாளிப்பது எப்படி என்று யாரும் இதுவரை எந்த நூலும் எழுதியதாகத் தெரியவில்லை. அப்படி ஒன்று இருந்தால் நன்றாக இருக்கும்.

மற்றபடி நியூ யார்க் டைம்ஸ் நாளேட்டில் வந்திருக்கும் செய்தியில் உள்ள நடவடிக்கைகள் எல்லாம் உண்மைதான். வேலைக்குச் சேருவேன் என்று சொல்லிவிட்டுச் சேரும் நாளன்று சாக்குச் சொல்லி வேறு வேலைக்குப் போவது போன்ற செய்திகள் முதன்முறை நமக்கு நடக்கும்போது அதிர்ச்சியாகத்தான் இருக்கும். அதனால், சேருவார்களா மாட்டார்களா என்ற சோதனையைச் சேரும் வரை செய்துகொண்டுதான் இருக்க வேண்டும். சேராமல் இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்ற மாற்றுத் திட்டத்தையும் கையில் வைத்திருக்க வேண்டும்.

அதே போல் அமெரிக்க முறைப்படி வாயில் வந்ததை உடனடியாகக் கொட்டி விடக்கூடாது. உங்கள் ஒவ்வொரு சொல்லும் எடை போடப்படும். எப்போது, எங்கே, யாரிடம், எதை, எப்படிச் சொல்வது என்பது ஒரு தனிக்கலை. இது இன்னும் படிநிலைச் சமுதாயம்தான். மறக்கக் கூடாது. நியூ யார்க் டைம்ஸில் குறிப்பிட்டுள்ள திரு அய்யாதுரைக்கு அது தெரியவில்லை போலிருக்கிறது.

ஆனால், புலம்திரும்பும் இந்தியர்கள் நினைத்தால், நினைத்த நேரத்தில் தம் பெரிய குடும்பத்தோடு உறவாடலாம். பல தலைமுறைகள் ஒன்றாய்க்கூடிக் கொண்டாடுவது என்பது வெளிநாட்டில் வாழும் புலம்பெயர்ந்த இந்தியர்களுக்குக் கனவுதான். கலாச்சார அடையாளங்கள் இங்கே இயல்பாக வருபவை. தாய்மொழி எங்கும் நிறைந்திருக்கிறது, கொச்சை கலந்திருந்தாலும்! இளைய தலைமுறையால் எதையும் எளிதாகக் கற்றுக் கொள்ள முடியும். வழிபாட்டுத்தலங்கள், கலாச்சாரச் சின்னங்கள், பண்பாட்டு நிகழ்வுகள், பண்டிகைகள், நண்பர்கள் குழாம் என்று வாழ்க்கையை நிறைவாக வாழலாம். ஊருக்கும் நம்மால் இயன்றதைச் செய்யலாம். இது போதாது என்றால், புலம்பெயர் தேயத்தில் வாழ்வதே நல்லது.

வெள்ளி, நவம்பர் 27, 2009

வீரவணக்கம்

வீரவணக்கம்

எட்டு ஆண்டுகளுக்கு முன், வட கலிஃபோர்னியா தமிழர்கள் சங்கத்தின் அழைப்பின் பேரில், நானும் சில நண்பர்களும் அவர்களது மாவீரர் நாள் விழாவில் கலந்து கொள்ளச் சென்றிருந்தோம். அமெரிக்கத் தமிழர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து, சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி தமிழ்மன்றத்தின் மொழி, இலக்கியம், கலை, பண்பாடு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வைக்க வேண்டும் என்று நான் முயற்சி எடுத்துக் கொண்டிருந்தேன்.

அரசியல், சமயம் என்று பல களங்களில் வேறு பட்டிருந்தாலும், மொழி, பண்பாடு மற்றும் இலக்கியம் அமெரிக்கத் தமிழர்களை ஒன்று கூட வைக்கும் என்று இன்றும் நான் நம்புகிறேன். ஏற்கனவே தமிழ் மன்றம் நடத்திக் கொண்டிருந்த மொழி, இலக்கியம், பண்பாடு தொடர்பான நிகழ்ச்சிகளில் சில ஈழத்தமிழர்கள் கலந்து கொண்டு வந்திருந்தனர். ஆனால், இந்த நிகழ்ச்சிகள் பெரும்பாலும் எல்லாமே இந்தியத் தமிழர்களின் கண்ணோட்டத்தையே எதிரொலித்தன. உலகத் தமிழர்களின், குறிப்பாக ஈழத்தமிழர்களைப் பற்றிய குறிப்புகள் இந்த நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் இல்லை. இந்த நிலையை மாற்ற விரும்பினேன்.

உண்மையிலேயே நீங்கள் ஈழத்தமிழர்களை ஈர்க்க விரும்பினால், அவர்கள் சங்கம் நடத்தும் நிகழ்ச்சிகளில் நீங்கள் கலந்து கொண்டு அவர்கள் கண்ணோட்டத்தைப் பாருங்கள் என்று வலியுறுத்தினார் என் நண்பர் குமார்.

மாவீரர் நாள், ஈழத்தமிழர்களுக்கு, குறிப்பாக புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் வாழ்க்கைக்கு ஆணிவேரான நாள் என்பது எனக்கு அதற்கு முன் தெரிந்திருக்கவில்லை. ஏனைய அமெரிக்கத் தமிழர்களைப் போல, பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு இவற்றைச் சுற்றிச் சுழலும் கலைநிகழ்ச்சிகளில் ஊறிப் போயிருந்த எனக்கு, இந்த மாவீரர் நாள் என்ற கருத்தின் ஆழம் முதலில் புரிபடவில்லை.

பழந்தமிழர்களைப் போலவே, அமெரிக்கர்களில் பலரும் மறத்தன்மையைப் போற்றுபவர்கள். நாட்டுப் பற்று மிக்கவர்கள். தாம் பிறந்த நாட்டுக்கு ஈடான நாடு வேறு ஏதுமில்லை என்று ஆழமாக நம்புபவர்கள். நாட்டுக்காகப் போர்முனையில் உயிர் துறந்தவர்களின் நினைவைப் போற்றும் வகையிலும், போரில் இருந்து திரும்பிய மறவர்களைக் கொண்டாடும் வகையிலும் ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 11 வாக்கில் அமெரிக்கர்கள் மறவர் நாள் கொண்டாடுவது வழக்கம். நாடெங்கிலும், சின்னஞ்சிறு ஊர்களிலும்கூட, ஊர் நடுவில் மறவர் நினைவுச் சின்னத்தில் நாட்டுக் கொடிகளையும், மலர் வளையங்களையும் வைத்து வணங்குவது வழக்கம். அந்த நாளில் ஓய்வு பெற்ற போர் வீரர்கள் தத்தம் படையுடுப்பில் ஊர்வலம் வருவார்கள். அந்தந்த ஊர்களில், அமெரிக்காவின் போர்களில் உயிர் துறந்த மறவர்களின் பெயர்கள் நினைவுச் சின்னத்தில் பொறிக்கப் பட்டிருக்கும். தம் நாட்டினர் உரிமையோடு வாழத் தம் உயிரை விலையாகக் கொடுத்தவர்களை நன்றி கூர்ந்து நினைக்கும் நாள் மறவர் நாள்.

தமிழ்நாட்டில் ஊருக்கு ஊர் போர் நினைவுச்சின்னம் எதையும் நான் பார்த்ததில்லை. சென்னையில் இருக்கும் போர் நினைவுச்சின்னங்களையும், மறவர் இடுகாடுகளையும்கூடப் போர்வீரர்களைத் தவிர வேறு யாரும் சென்று போற்றிப் பார்த்ததில்லை. பொதுவாக, குடியரசு நாளன்றும், விடுதலை நாளன்றும், தொலைக்காட்சியின் முன் கூடி, நடிகைகளின் நேர்காணலையும், இந்தியத் தொலைக்காட்சிகளிலேயே முதன்முறையாக, திரைக்கு வந்து சில நொடிகளே ஆன, புத்தம்புதிய திருட்டு டிவிடி படங்களைப் பார்க்கும் பண்பாடுதான் தற்போது தமிழ்நாட்டில் மேலோங்கி இருக்கிறது.

இத்தகைய இரண்டு பண்பாடுகளில் வாழ்ந்த எனக்கு ஈழத்தமிழர்களின் மாவீரர் நாள் புதுமையாகத் தோன்றியதில் வியப்பேதுமில்லை.

நீத்தார் நினைவு, மறவர் பெருமை, உரிமைப் போர் கொண்டாட்டம் என்ற இவை எல்லாவற்றையும் பிணைத்து, அதே நேரத்தில் அவலச்சுவை சொட்டிக் கண்ணீர் ஆறாகப் பெருகாமல், மாவீரர்களுக்கு உரிய மதிப்பை வழங்கும் நாளாக ஈழத் தமிழர்கள் நடத்தியது, எல்லாவற்றையும் மிகைப்படுத்தும் அண்மைக்காலத்துத் தமிழ்ப் பண்பாட்டிலிருந்து முற்றிலும் விலகியிருந்தது. பர்க்கெலித் தமிழ்ப் பேராசிரியர் ஜோர்ஜ் ஹார்ட் அவர்கள் அடிக்கடி குறிப்பிட்டுப் போற்றும் சங்கத் தமிழர்களின் குறிப்பாலுணர்த்தும் தன்மையை ஈழத்தமிழர்களிடையே இன்னும் நாம் பார்க்கலாம்.

குரலை உயர்த்தி, மிகைப் படுத்தி, ஒன்பான் சுவையும் சொட்டச் சொட்ட, "மேடையேறிப் பேசும்போது ஆறு போலப் பேசி, கீழே இறங்கி வந்த பின்னால் சொன்னதெல்லாம் போச்சு" என்ற தமிழ்நாட்டுத் தமிழர் தலைகளின் பேச்சை ஈழத்தமிழர்கள் நாக்கைக் கடித்துக் கொண்டு சகித்துக் கொள்கிறார்கள் என்றுதான் தோன்றுகிறது.

மேடையில் ஒரு கோவில் போன்ற பந்தலிட்டு, அதில் உரிமைப் போரில் உயிர் கொடுத்த மாவீரர்களின் படங்களையும், தமிழீழத்தின் வரைபடத்தையும், புலிக்கொடியையும் வைத்துப் படையல் கொடுத்து, நயமான முறையில் வணக்கம் தெரிவித்தார்கள் வட கலிஃபோர்னிய ஈழத்தமிழர்கள்.

கொண்டாட்டத்தில் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. சிறு பிள்ளைகள் மரபு முறைப்படி பயிற்சி எடுத்து இயல், இசை, கூத்து நிகழ்ச்சிகளை நடத்தினர். கூட்டாஞ்சோற்றுக்குப் பின்னர் பெரியவர்கள் நடத்திய நிகழ்ச்சிகளில், மாவீரர்களை நினைவு கூர்ந்தார்கள். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் என் நினைவில் தங்கியது இறுதியில் நடந்த குறு நாடகம்.

நாடகத்தில் நடித்தவர்கள் மூன்று அல்லது நான்கு பேர். மேடைக் கலை என்று ஏதும் இல்லை. ஒரு நடுத்தர வீட்டின் முகப்பில், வீட்டின் முதியவர், இல்லத்தரசி, அண்டை வீட்டார், ஒரு நண்பர் - இவ்வளவுதான் பாத்திரங்கள். அன்றாட அலுவல்களுக்கு நடுவே, பள்ளிக்குச் சென்ற சிறுமி இன்னும் வீட்டுக்கு வரவில்லையே என்று கவலை தெரிவிக்கும் இல்லத்தரசி. அதைப் பொருட்படுத்தாமல் பேசிக் கொண்டிருக்கும் பெரியவர்கள். மெல்ல மெல்லக் காட்சி ஒரு மெல்லிய பதற்றத்தை நம்முள் தூண்டுகிறது. "ஆமிக்காரங்க" பள்ளியிலே வந்து பிள்ளைங்கள அள்ளிக் கொண்டு போயிட்டாங்க என்று ஒரு பாத்திரம் தெரிவிக்கும்போது நம் உள்ளம் பதைக்கிறது. இப்படிக் காணாமல் போன குழந்தைகளைப் பற்றிக் கவலைப் படும் எண்ணற்ற குடும்பங்களின் துயரம் நம் உள்ளத்தைத் தொடுகிறது.

சரி, நாடகத்தின் முதல் கட்டம் முடிந்து விட்டது என்று அடுத்த கட்டத்துக்கு ஆயத்தமாகும் நமக்கு, அது தான் நாடகத்தின் முடிவு என்பது அதிர்வைத் தருகிறது. கோவலன் காணோம் என்பதுடன் சிலப்பதிகாரம் நிற்பதுபோன்ற உணர்வு. விருந்தினர்கள்தாம் என்றாலும், ஈழத்தமிழர்கள் படும் துயரை எண்ணிக்கூடப் பார்க்காமல் எட்டி நிற்கும் தமிழ்நாட்டின் மைந்தன் என்றாலும், அந்தக் குறுநாடகம் நம்மைப் பிசைகிறது.

அந்த நாடகத்தின் முடிவில் "இது பொறுக்குதிலை, தம்பீ, எரிதழல் கொண்டு வா" என்ற பாரதியின் வரிகள் நினைவுக்கு வந்தன. பெரும்பாவலன் பாரதி இயற்றிய பாஞ்சாலி சபதம் குறுங்காப்பியத்தில், பாஞ்சாலியைச் சூதில் வைத்து இழந்த தருமனை வீமன் சாடும் வரிகள் அவை. வீடு திரும்பும் வரை மௌனமாகவே வந்தேன். என் உணர்வைப் புரிந்து கொண்ட நண்பர் குமாரும் ஒன்றும் சொல்லவில்லை.

வீட்டுக்கு வந்தவுடன், உடனடியாக பாரதியின் பாஞ்சாலி சபதத்தை எடுத்து முற்றிலும் படித்தேன். அன்றுதான், பாரதியின் காப்பியத்தின் உணர்ச்சிக் கொப்புளங்கள் என்னுள் வெடித்தன. பாரதியின் பாஞ்சாலி, அடிமைச் சங்கிலியில் அல்லாடிக் கொண்டிருக்கும் தமிழன்னையாக அன்று எனக்குத் தோன்றினாள். அவளைக் காக்கக் கடமைப் பட்டிருந்தவர்கள் யாரும் அவள் அல்லல் படும் வேளையில் கை கொடுக்க வரவில்லை.

"பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்" என்று சாடும் பாஞ்சாலிக்கு இன்றும் நாமென்ன சொல்ல முடியும்?

"தருமத்தின் வாழ்வதனை சூது கவ்வும்
தருமம் மறுபடி வெல்லும்..
கட்டுண்டோம் பொறுத்திருப்போம் காலம் மாறும்
தருமத்தை அப்போது வெல்லக் காண்போம்
தனுவுண்டு காண்டீபம் அதன் பெயர்" என்கிறான் பார்த்தன் (அருச்சுனன்).

மாவீரர்கள் தம் தோள்வலிமையால் கொடியவர்களைக் களைவோம் என்று சொல்வதிலும் வியப்பில்லை.

வீமனும், பார்த்தனும், பாஞ்சாலியும் பழிக்குப் பழி வாங்குவோம் என்று சூளுரைக்கிறார்கள். பாரதி மறவர் சீமையில் வாழ்ந்தவன். அவன் பாடலில் தமிழர்களின் மறக்குணம் ஓங்கி நிற்பதில் வியப்பில்லை.

பாஞ்சாலி சபதம் காப்பியத்தின் உச்சக்கட்டத்தில் உணர்ச்சிகள் கொந்தளிக்கும்போது, சட்டென்று,

"ஓம் என்று உரைத்தனர் - ஓம்
ஓமென்று சொல்லி உறுமிற்று வானம்
பூமி அதிர்ச்சி உண்டாச்சு - விண்ணைப்
பூழிப்படுத்தியதாம் சுழற்காற்று
சாமி தருமன் புவிக்கே என்று
சாட்சி உரைத்தன பூதங்கள் ஐந்தும்
நாமும் கதை முடித்தோம் - இந்த
நானிலமுற்றும் நல்லின்பத்தில் வாழ்க!"

என்று பாரதியார் முடிக்கிறார்.

பாரதியார் இதை இயற்றிய காலத்தில் இது விடுதலைப் பாட்டு. பாரத அன்னையின் விடுதலையைப் பற்றிப் பேசுவது தடை செய்யப்பட்ட காலத்தில், பாஞ்சாலி சபதம் அன்னையின் உருவகமாகத் திகழ்ந்தது. போராளிகளைப் புகழ்வது தடை செய்யப் பட்ட நேரத்தில், இங்கே மேடையில் போராளிகள் விடுதலை பெறுவோம் என்று சூளுரைக்கிறார்கள்.

அன்று வரை புரிபடாமலிருந்த பாரதியின் ஒரு காப்பியம் எனக்குப் புரிபட்டது போல் தோன்றியது. பாரதியின் பாஞ்சாலி சபதத்தைக் கவிதை வடிவிலே, அந்தப் பொன்னான வசனங்களிலேயே, அதே உணர்ச்சியுடன் அரங்கேற்ற வேண்டும் என்ற எண்ணம் எனக்கு அப்போதுதான் தோன்றியது.

மாவீரர் நாள் குறுநாடகத்தில் பெண்ணை இழந்து துடிதுடித்த அம்மாவாக நடித்தவர்தான் பாஞ்சாலிக்குப் பொருந்தும் என்றும் அந்தக் குறுநாடகத்தைக் குறிப்பாலுணர்த்தும் நயத்துடன் இயக்கிய இயக்குநர்தாம் என் நாடகத்தையும் இயக்க வேண்டும் என்று விரும்பினேன். அவர்களால்தான் பாரதியின் குறிப்பாலுணர்த்தும் தன்மையை முழுதும் வெளிக்கொணர முடியும் என்று நான் கருதினேன். அதே நேரத்தில் ஈழத்தமிழர்களும், இந்தியத் தமிழர்களும், மொழியால், இலக்கியத்தால், கலையால், உணர்வால் ஒன்றுபட இது ஒரு நல்ல வாய்ப்பு என்று நம்பினேன்.

ஆனால், சில காரணங்களால் நான் நினைத்தபடி ஈழத்தமிழர்களால் பங்கேற்க முடியவில்லை. ஆனாலும், சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ்மன்றத்தின் மேடையில், 2002 பொங்கல் நிகழ்ச்சியில், நான் எண்ணியபடியே, கவிதை நாடகமாகவே பாஞ்சாலி சபதத்தை அரங்கேற்றியது எனக்கு நிறைவளித்தது. அந்த நாடகத்தை மேடையேற்றியதற்குத் தூண்டுகோலாக இருந்த ஈழத்தமிழர்களை இந்த மாவீரர் நாளன்று நினைவு கூர்கின்றேன். அன்றைக்கு இருந்ததை விட இன்றைக்கு மேலும் இறுக்கமான அடிமைத்தளைகளில் வாடும் தமிழன்னையின் நிலை நம் உள்ளத்தைச் சுடுகிறது. "கட்டுண்டோம் பொறுத்திருப்போம் காலம் மாறும்" என்ற நம்பிக்கையில் நாள்கள் நகர்கின்றன.

அதற்கும் மேலாக, இன்று முள்வேலிச் சிறையில் அடைபட்டுப் பரிதவிக்கும் நம் தொப்புள் கொடி உறவுகளையும், தம் தமீழீழக் கனவின் பின்னிறக்கத்தில் தவிக்கும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களையும் இன்று எண்ணிப் பார்க்கிறேன். தம் உரிமைகளுக்காகப் போராடிய மாவீரர்களை நானும் வணங்குகிறேன்.

"தருமத்தின் வாழ்வதனை சூது கவ்வும்
தருமம் மறுபடி வெல்லும்"

என்ற நம்பிக்கையை அந்த மாவீரர்களுக்குக் காணிக்கையாக்குகிறேன்.

செவ்வாய், நவம்பர் 17, 2009

கூகிளின் காஷ்மீர் வரைபடமும், இந்தியா பாகிஸ்தான் இணையப் போரும்

இந்தியர்களும் பாகிஸ்தானிகளும் சண்டை போட்டுக் கொள்வது ஒன்றும் புதிதான செய்தியில்லை.சயாமீஸ் இரட்டையர்கள் போல் ஒருவரோடு ஒருவர் ஒட்டிக் கொண்டு பிறந்தாலும், உன்னாலே நான் கெட்டேன், என்னாலே நீ கெட்டாய் என்று அடித்துக் கொள்வதும், பின்னர் பாலிவுட், கிரிக்கெட், பிரியாணி, பஞ்சாபி கஜல்கள் என்று கூடிக் குலாவிக் கொள்வதும் இன்று நேற்றல்ல, இந்த நாடுகள் பிறந்ததிலிருந்தே தொடரும் கதைதான்.

தென்னிந்தியர்களுக்கு, குறிப்பாகத் தமிழர்களுக்குப் பாகிஸ்தானியரோடு பழகும் வாய்ப்பு வெகு குறைவு. அதோடு, வட இந்தியர்களுக்கு, குறிப்பாக பஞ்சாபியர்களுக்குப் பாகிஸ்தானின் மேல் இருக்கும் ஆத்திரமும், ஆசையும் பொதுவாகத் தமிழர்களுக்கு இருக்காது. அதனால்தானோ என்னவோ, 1999 குடியரசு நாள் கிரிக்கெட் டெஸ்ட் ஆட்டத்தில், டெண்டுல்கரின் மட்டையடி வீச்சால் தோல்வியின் விளிம்பில் தொங்கிக் கொண்டிருந்த பாகிஸ்தான் இந்தியாவை மடக்கித் தோற்கடித்த போது சென்னையின் 65,000 விசிறிகள் எழுந்து நின்று கை தட்டிப் பாராட்டினார்கள். உலகையே வியக்க வைத்த செய்தி அது.

நான் அமெரிக்காவுக்குப் பட்ட மேற்படிப்புக்குப் போனபோதுதான் வாழ்வில் முதல்முறையாக ஒரு பாகிஸ்தானியைச் சந்தித்தேன். முதலில் இந்தியர்களும் அவனும் முறைத்துக் கொண்டாலும், வெகு விரைவில் அவனும் பஞ்சாபி இந்தியர்களும் இழைந்த இழைச்சலை இன்றும் என்னால் மறக்க முடியவில்லை. உணவு, உடை, மொழி, ரசனை என்று இவர்கள் இருவருக்குமே எந்த வேறுபாடும் எனக்குத் தெரியவில்லை. அவன் உருதுவில் பேசுவான், இவர்கள் இந்தியில் விடையளிப்பார்கள். நடுவில் இருந்த எனக்குத்தான் ஒரு மண்ணும் புரியவில்லை. இதைப் பற்றி இருவருமே கிண்டல் செய்து சிரிப்பார்கள். இவர்களுக்கு நான் தான் வெளிநாட்டவனாகத் தோன்றியிருக்க வேண்டும்.

பின்னர் கலிஃபோர்னியாவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரிலும், ஃபிரிமாண்ட்டிலும் பல பாகிஸ்தானியரோடு பழகும் வாய்ப்பு கிட்டியது. ஃபிரிமாண்டின் ஆர்டென்வுட் பகுதியை வார இறுதியில் பார்த்தால் கிட்டத்தட்ட மும்பை, தில்லி போல் இருக்கும். நூற்றுக் கணக்கான இந்தியர்களும், பாகிஸ்தானியர்களும், அவர்கள் நாட்டு உடைகளில் குழந்தை வண்டிகளோடு நடை பழகிக் கொண்டிருப்பார்கள். ஆர்டென்வுட் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பலரும் இந்தியர்கள்தாம். அண்டை நாடுகளாக இருந்து சண்டை போட்டுக் கொண்டவர்கள், ஃபிரிமாண்டில் சென்று அண்டை வீட்டு நண்பர்களாகப் பழகிக் கொண்டார்கள்.

இருந்தாலும், செ.கோ.தொ.கா. (அதாங்க செயற்கைக்கோள் தொலைக்காட்சி) இந்திய நிகழ்ச்சிகளைக் காட்டத் தொடங்குவதற்கு முன்னால், ஃபிரிமாண்ட் நாஸ் சினிமாவில் இந்தியா-பாகிஸ்தான் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் நேரடி ஒளிபரப்பைக் காட்டிய போது, ஃபிரிமாண்டே நடுங்கியது. பின்னிரவு நேரத்தில் நடந்த இந்தப் போட்டியின் போது இந்தியா, பாகிஸ்தான் விசிறிகள் கை கலப்பில் ஈடுபடுவார்களோ என்று நகரக்காவல் அஞ்சியது. அரங்கைச் சுற்றிக் கலவரக் கட்டுப்பாட்டுக் காவலர்கள், தீயணைப்புப் படை, கலவரம் நடந்தால் அதைப் படம் பிடிப்பதற்கு வந்த செய்தியாளர்கள் என்று ஒரே கூத்துதான்.

இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டே, அரங்கில் நுழைந்தவர்களுக்குக் கிரிக்கெட் ஆட்டம் சுவையாக இருந்தது. கிட்டத்தட்ட ஒரு விளையாட்டு அரங்கில் இருந்து பார்ப்பது போன்ற ஒரு சுவையான அனுபவம். அன்றைக்குக் கலாட்டா ஏதும் நடந்தது என்றால் அதில் இந்தியர்களும், பாகிஸ்தானியர்களும் ஒரே கட்சிதான் - ஊசிப் போன சமோசாவுக்கு இவ்வளவு அநியாய விலையா என்றுதான் கூக்குரல்! மற்றபடி, கலவரம் நடக்கும் என்று ஆவலோடு வந்த செய்தியாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள்.

இருந்தாலும், நாடாளுமன்றத்தில் குண்டு வீச்சு, மும்பையில் பங்குச் சந்தை, தொடர் வண்டி போன்ற இடங்களில் குண்டு வெடிப்பு, கார்கில் போர்முனை என்று பல நிகழ்ச்சிகள் பல உரசல்களுக்கு வித்திட்டன. போதாதற்கு, இந்து - முஸ்லிம் அடிப்படைவாதிகளின் பரப்புரைகள் அமெரிக்காவையும் எட்டி, இந்த உரசல்களால் பிளவுகளை ஏற்படுத்தின. பணியிடங்களிலும் இந்தப் பனிப்போர் தொடர்ந்தது. ஆனாலும் பாகிஸ்தானியர் நடத்திய கடைகளில் இந்தியர் கூட்டமும், இந்திய உணவகங்களில் பாகிஸ்தானியர் கூட்டமும் குறையவில்லை.

மீண்டும் சென்னைவாசியான பின்னால் பாகிஸ்தான் எங்கோ தொலைவில் இருக்கும் தொந்தரவு நாடாக மட்டுமே பொறுத்துக் கொள்வதைப் பார்க்க முடிகிறது. இருந்தாலும், அந்த 1999 பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் வாசிம் அக்ரமின் மனைவி கவலைக்கிடமான நிலையில் சென்னையில் தரையிறங்கிய போது, பொதுவாகத் தமிழர்கள் அவருக்காக இரக்கப் பட்டார்களே ஒழிய, கருப்புக் கொடி காட்டவில்லை. அந்தச் சமயத்தில் தொப்புள் கொடி உறவுகள்கூட நாம் பாகிஸ்தானில் பிறந்திருந்தாலாவது இந்த "இந்தியத் தமிழர்கள்" நம் மீது இரக்கம் காட்டியிருப்பார்களோ என்று நினைத்திருப்பார்கள்.

நிற்க. அண்மைக்காலத்தில் கூகிள் வரைபடத்தில் காஷ்மீர், அருணாச்சலப் பிரதேசம் இவற்றைத் தாறுமாறாகக் காட்டுகிறார்கள் என்று வலையில் கொதித்தார்கள் வழக்கமான இந்துத்துவ வட்டச் செயலாளர்கள். இந்திய வலைக்குள்ளே காஷ்மீர், அ.பி.யை உடைகோட்டிலும், சீன வலைக்குள்ளே அவை இந்தியாவுக்கு வெளியிலும் காட்டியது இவர்கள் இரத்தத்தைக் கொதிக்க வைத்தது.

இது இப்படி இருக்க, இன்றைய நியூ யார்க் டைம்ஸ் செய்தி இரத்தக் கொதிப்பைக் கூடுதலாக்கலாம்.

Google first tested a tool called Map Maker in India, where people immediately began tracing and labeling roads and buildings on top of satellite images provided by Google.


When Google released the tool more broadly last year, Faraz Ahmad, a 26-year-old programmer from Pakistan who lives in Glasgow, took one look at the map of India and decided he did not want to see his homeland out-mapped by its traditional rival. So he began mapping Pakistan in his free time, using information from friends, family and existing maps. Mr. Ahmad is now the top contributor to Map Maker, logging more than 41,000 changes.


Maps are political, of course, and community-edited maps can set off conflicts. When Mr. Ahmad tried to work on the part of Kashmir that is administered by Pakistan, he found that Map Maker wouldn’t allow it. He said his contributions were finally accepted by the Map Maker team, which is led by engineers based in India, but only after a long e-mail exchange.


At his request, Google is now preventing further changes to the region, after people in India tried to make it part of their country, Mr. Ahmad said. “Whenever you have a Pakistani and an Indian doing something together, there is a political discussion or dispute.”


A Google spokeswoman, Elaine Filadelfo, said Google sometimes blocked changes to contentious areas “with an eye to avoiding back-and-forth editing.
நல்ல வேளை. கூகிள் இன்றைய எல்லை நிலையை உணர்ந்து யாரிடம் எந்தப் பகுதி இருக்கிறதோ அவர்களுக்கு விட்டுக் கொடுக்கவில்லை என்றால், இந்த வரைபடப் போர் எங்கே போயிருந்திருக்குமோ! இப்போது வலையில் உலை கொதிக்குமே ஒழிய வேறு ஏதும் நடக்க வாய்ப்பில்லை என நினைக்கிறேன்.

காஷ்மீரின் "ஆசாத் காஷ்மீர்" பகுதி பாகிஸ்தானிடமும், "அக்சாய் சின்" பகுதி சீனாவிடமும் இருக்கிறது என்பது இந்தியாவில் கிடைக்கும் வரைபடங்களை மட்டும் பார்ப்பவர்களுக்குத் தெரியாது. சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே இமயத்தின் மேல் ஒரு விரைவு நெடுஞ்சாலை கட்டி வைத்திருக்கிறார்கள். இது இந்தியாவின் கையில் இல்லை. ஆனால் இதைப் பற்றி இந்தியர்களுக்குத் தெரியாமல் வைத்திருக்கிறார்கள். பூனை கண்ணை மூடிய கதைதான். அதே போல் சீனாக்காரர்களுக்கு அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஆளுகைக்கு உட்பட்டது என்பது தெரியாது. ஏன் இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டோ!

திபெத் நாட்டைச் சீனர்கள் கைப்பற்றிய போதே இந்தியா உலகத்தோடு சேர்ந்து எதிர்த்திருக்க வேண்டும். ஆனால், இந்தியா அப்போது இந்தி-சீனி பாயி பாயி என்று மிகவும் இழைந்து கொண்டிருந்தது. சீனர்கள் படையெடுத்து இந்தியப் படைகளைப் படுதோல்விக்கு உள்ளாக்கி இந்தியாவை அவமானப் படுத்தும் வரை இந்த முட்டாள்தனமான நட்பு நீடித்துக் கொண்டிருந்தது. திபெத் தனி நாடாக இருந்தவரை, இந்தியாவுக்குத் தொல்லை இல்லை. ஒரு நட்பு நாடு வாசலில் இருந்தது. 1950களின் அன்றைய முட்டாள் தனத்துக்கு இன்றைய இந்தியா படும்பாடு பட வேண்டியிருக்கிறது.

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்று சும்மாவா சொன்னார்கள்.

அன்று வடக்கில் நேருவின் காங்கிரஸ் செய்த அதே பிழையை இன்று அவர் குடும்பத்தாரின் காங்கிரஸ் தெற்கில் செய்துள்ளது. வடக்கே இமய நெடுஞ்சாலை. தெற்கே தமிழர்களைக் காவு கொடுத்து துறைமுகம் கட்டிக் கொண்டிருக்கிறது சீனா. இவர்களை வாசலில் வைத்துக் கொண்டு மாலத்தீவில் ஆழ்கடல் துறைமுகத்திலிருந்து கொண்டு சீனக் கடற்படையை வேவு பார்க்கப் போகிறதாம் இந்தியா. தும்பை விட்டு விட்டு வாலைப் பிடித்த கதைதான்.

ஞாயிறு, நவம்பர் 08, 2009

ஆறாண்டு இடைவெளிக்குப் பின் மீண்டும் தொடர்கிறேன்

ஆறாண்டு இடைவெளிக்குப் பின் மீண்டும் தொடர்கிறேன். இடையில் எண்ணற்ற மாற்றங்கள். அமெரிக்காவிலிருந்து தமிழ்நாட்டுக்குக் குடி பெயர்ந்ததுதான் மிகப் பெரிய மாற்றம்.

அமெரிக்கத் தமிழ்த் திங்களிதழில் "புழைக்கடைப் பக்கம்" என்ற தலைப்பில், 2002 முதல் 2006 வரை, கடைசிப் பக்கப் பத்தி எழுதி வந்தேன். இந்த வலைப்பூவில் அதே போன்ற கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.

அமெரிக்காவிலிருந்து கொண்டு புலம்பெயர்ந்த தமிழன் கண்ணோட்டத்துடன் தமிழ்நாட்டைப் பற்றியும், அமெரிக்கா பற்றியும் எழுதிக் கொண்டிருந்தேன். இப்போது தமிழ்நாட்டிலிருந்து கொண்டு புலம்பெயர்ந்த அமெரிக்கன் கண்ணோட்டத்துடன் அமெரிக்கா பற்றியும், தமிழ்நாட்டைப் பற்றியும் எழுதலாம் என்று எண்ணம்.

புலம்பெயர்வதால் நமது கண்ணோட்டங்கள் வெகுவாக மாறுகின்றன என்பதைப் பட்டறிவால் உணர்ந்திருக்கிறேன். நல்லது, கெட்டது எல்லாமே புலம்பெயர் கண்ணோட்டத்தில் வேறுபடுகின்றன.

சென்னையில் வாழ்வதில் ஒரு வசதி என்னவென்றால், தமிழ்ப் பெருநீரோட்டத்தில் இணைந்து கொள்ள முடிகிறது. இங்கே நடக்கும் கூட்டங்களில் கலந்து கொள்ள முடிகிறது. தடுக்கி விழுந்தால் மாமல்லபுரம் சென்று கடற்கரைக் கோவிலைச் சுற்ற முடிகிறது. புலிக்குகைக் கல்வெட்டுகளைப் பார்க்க முடிகிறது. சித்தன்ன வாசல் சில மணி நேரங்களில் கிட்டும். தமிழ்ப் புலவர்களோடு அளவளாவ முடிகிறது. இது நல்ல வசதிதான்.

ஆனால், ஒரு வார இறுதியில் அமெரிக்காவில் என்னால் செய்ய முடிவதை இங்கே ஒரு மாதமானாலும் செய்ய முடிவதில்லை. ஒத்த கருத்துள்ளவர்கள் நிறைய இருந்தாலும், சென்னையில் சிதறிக்கிடக்கும் ஆற்றல்களை ஒருங்கிணைத்து ஏதேனும் செய்வதற்குள் அயர்ச்சி வருகிறது.

சென்னையும், தமிழ்நாடும் புதுமையை நாடி நிற்பவை. பழையது பற்றி அக்கறை கொள்பவர் வெகு சிலரே. அந்த வெகு சிலரோடு பழகும் வாய்ப்பு எனக்குக் கிட்டியிருக்கிறது. அது பற்றியும் எழுத எண்ணியுள்ளேன்.

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின். - திருக்குறள்