ஆறாண்டு இடைவெளிக்குப் பின் மீண்டும் தொடர்கிறேன். இடையில் எண்ணற்ற மாற்றங்கள். அமெரிக்காவிலிருந்து தமிழ்நாட்டுக்குக் குடி பெயர்ந்ததுதான் மிகப் பெரிய மாற்றம்.
அமெரிக்கத் தமிழ்த் திங்களிதழில் "புழைக்கடைப் பக்கம்" என்ற தலைப்பில், 2002 முதல் 2006 வரை, கடைசிப் பக்கப் பத்தி எழுதி வந்தேன். இந்த வலைப்பூவில் அதே போன்ற கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.
அமெரிக்காவிலிருந்து கொண்டு புலம்பெயர்ந்த தமிழன் கண்ணோட்டத்துடன் தமிழ்நாட்டைப் பற்றியும், அமெரிக்கா பற்றியும் எழுதிக் கொண்டிருந்தேன். இப்போது தமிழ்நாட்டிலிருந்து கொண்டு புலம்பெயர்ந்த அமெரிக்கன் கண்ணோட்டத்துடன் அமெரிக்கா பற்றியும், தமிழ்நாட்டைப் பற்றியும் எழுதலாம் என்று எண்ணம்.
புலம்பெயர்வதால் நமது கண்ணோட்டங்கள் வெகுவாக மாறுகின்றன என்பதைப் பட்டறிவால் உணர்ந்திருக்கிறேன். நல்லது, கெட்டது எல்லாமே புலம்பெயர் கண்ணோட்டத்தில் வேறுபடுகின்றன.
சென்னையில் வாழ்வதில் ஒரு வசதி என்னவென்றால், தமிழ்ப் பெருநீரோட்டத்தில் இணைந்து கொள்ள முடிகிறது. இங்கே நடக்கும் கூட்டங்களில் கலந்து கொள்ள முடிகிறது. தடுக்கி விழுந்தால் மாமல்லபுரம் சென்று கடற்கரைக் கோவிலைச் சுற்ற முடிகிறது. புலிக்குகைக் கல்வெட்டுகளைப் பார்க்க முடிகிறது. சித்தன்ன வாசல் சில மணி நேரங்களில் கிட்டும். தமிழ்ப் புலவர்களோடு அளவளாவ முடிகிறது. இது நல்ல வசதிதான்.
ஆனால், ஒரு வார இறுதியில் அமெரிக்காவில் என்னால் செய்ய முடிவதை இங்கே ஒரு மாதமானாலும் செய்ய முடிவதில்லை. ஒத்த கருத்துள்ளவர்கள் நிறைய இருந்தாலும், சென்னையில் சிதறிக்கிடக்கும் ஆற்றல்களை ஒருங்கிணைத்து ஏதேனும் செய்வதற்குள் அயர்ச்சி வருகிறது.
சென்னையும், தமிழ்நாடும் புதுமையை நாடி நிற்பவை. பழையது பற்றி அக்கறை கொள்பவர் வெகு சிலரே. அந்த வெகு சிலரோடு பழகும் வாய்ப்பு எனக்குக் கிட்டியிருக்கிறது. அது பற்றியும் எழுத எண்ணியுள்ளேன்.
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின். - திருக்குறள்
ஜனவரி 1, 2025
2 வாரங்கள் முன்பு
19 கருத்துகள்:
வாங்க வாங்க மணிவண்ணன்.
வருகை மகிழ்ச்சியளிக்கிறது.
அன்புடன்
நாக.இளங்கோவன்
வாங்க, வாங்க,
உங்கள் வரவு நல்வரவாகட்டும். அப்படியே சந்திராவையும் கூட்டிக்கிட்டு வாங்க.
அன்புடன்,
இராம.கி.
அன்பு மணிவண்ணன்,
உங்கள் எண்ணங்கள் யாரையும் புண்படுத்தாத பண்பும், ஆக்கபூர்வமான சிந்தனையும் கொண்டவை.
அயற்சியுற வேண்டாம். தமிழகத்திலும் நீங்கள் சாதிக்கலாம். தொடருங்கள்.
மிக்க அன்புடன்
பெ.சந்திர போஸ்
9444110303
அன்புள்ள மணிவண்ணன்,
நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்.
தீட்டிய உங்கள் எண்ணங்களைக்
காண ஆவலுடன் உள்ளேன்.
அன்புடன்
செல்வா
வாட்டர்லூ, கனடா
வணக்கம் நண்பர் மணி
எது அயலகம், தமிழகமா (தநா இருக்கும் இந்தியா) அல்லது அமேரிக்க கூ.நா..?
இயலும் போது இது பற்றியும் முடிந்தால் சொல்லுங்கள்.
உங்களுக்கும் திருமதிக்கும் எங்களது அன்பு வணக்கங்கள்.
அன்புடன்
வாசன் மற்றும் குடும்பத்தினர்.
பி.கு
99ல் உங்களை நேரில் சந்தித்தது நினைவில் வந்தது; ரமணியும் வந்திருந்தார்.
விஷ்ணுவுக்கு நீங்கள் கொடுத்த கூடைப்பந்து பொம்மை(?) மறக்கவில்லை.
தற்போது அவருக்கு மீசை முளைக்க ஆரம்பித்துள்ளது.
உயரம் அப்பாவைவிட கூடுதல் ;)
நன்றி, இளங்கோவன், இராம.கி., பேரா. போஸ், மற்றும் செல்வா.
நண்பர் வாசன்,
அயலகம் எது என்ற கேள்வி சிக்கலானதுதான். நம் பிறந்த நாடே நமக்கு எப்படி அயலகமாகிப் போய் விடுகிறது என்பது புரியாத செயல். அதே நேரத்தில், எந்தக் கும்பலிலும் தனித்துத் தோன்றாமல் மக்களோடு மக்களாய்க் கலந்து விடுவது பிறந்த நாட்டில் முடிகிறது. ஆனாலும், திரும்பி அமெரிக்காவில் வந்து இறங்கி, வண்டி ஓட்டத் தொடங்கும் போதெல்லாம் எவ்வளவு இயல்பாக வாழ்வு ஓட்டத்தில் இணைய முடிகிறது என்று நினைக்கும்போதுதான் மூன்றாம் உலகம் என்பதின் உண்மைப் பொருளையே புரிந்து கொள்ள முடிகிறது. மூன்றாண்டு இந்திய வாழ்க்கைக்குப் பிறகு இப்போதுதான் ஓரளவுக்கு உள்ளூர்க்காரன் எனச் சிலர் ஏற்றுக் கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். :-)
மணி, நீங்கள் ஒரு வலைப்பதிவு வைத்திருந்ததே எனக்குத் தெரியவில்லை. இந்தப் பதிவில் அதிகம் எதிர்பார்க்கிறேன்.
நன்றி - சொ.சங்கரபாண்டி
மிக்க நன்றி நண்பர் சங்கரபாண்டி.
இது எனக்குப் புது வடிவம். பிடிபடுகிறதா எனப் பார்ப்போம்!
அன்புள்ள மணிவண்ணன் அவர்களுக்கு
வணக்கம்.
நீங்கள் திரும்பவும் வலைப்பதிவு செய்ய வருவதில் மிகவும் மகிழ்ச்சி.
உங்கள் ஆழ்ந்த அறிவுதிறனுடைய செய்திகளும், கருத்துரைகளும் எங்களுக்குக் கிடைக்கும் அரிய வாய்ப்புக்கு இது வழிவகுக்கும்.
நன்றிவுடன்
நாஞ்சில் பீற்றர்
www.worldthamil.org
நீங்கள் மீண்டும் தொடர்வதிலே மகிழ்ச்சி. (அதே நேரத்திலே வந்த வேகத்திலேயே வேலையைச் சாட்டிக்கொண்டு திரும்பவும் காணாமற்போகாதிருக்கவும் விழைவு :-))
பீற்றர்,
உங்கள் நம்பிக்கைக்கு நன்றி. முயல்கிறேன்.
நண்பர் ரமணி,
வேலையின் அழுத்தம் கூடுதல்தான். மேலும், தமிழ்நாட்டில் வாழும்போது, இங்கு பண்பாட்டு வேர்களைத் தேடும் வாய்ப்பையும் நழுவ விடக்கூடாது. ஒரு வகையில், இந்தப் பயணங்களைப் பதிவு செய்யவாவது இந்த வலைப்பூ துணை புரியும் என நம்புகிறேன்.
விஷ்ணு வாசனை அண்மையில் பார்த்தீர்களா? வாசன் சொல்வதுபோல் மீசை முளைக்கும் பருவம். அவ்வளவு வளர்ந்து விட்டார். நாமும் நேரடியாகச் சந்தி்த்துப் பத்தாண்டுகளாகி விட்டன! மீண்டும் கூடிப் பேச வேண்டும். பார்ப்போம்.
அன்புடன்,
மணி
வணக்கம் மணிவண்ணன்.
வருக, வருக!
தங்களை 2003 FETNA விழாவில் நியு ஜெர்சியில் சந்திருக்கிறேன்.
அன்புடன்,
-ரவிச்சந்திரன்
one suggestion: Please remove the word verification for comments. You can have the comment moderation.
நன்றி ரவிச்சந்திரன். நீங்கள் குறிப்பிட்ட வண்ணமே பின்னூட்டல் மட்டுறுத்தல் மட்டுமே போதும் என்று அமைத்து விட்டேன்.
FeTNA 2003 என் நினைவில் நிற்கும் நல்ல நிகழ்ச்சி. அங்கே பார்த்த "நந்தன் கதை" நாடகத்தை வாழ்நாள் முழுக்க மறக்க முடியாது. பேரவை நடத்தும் நல்ல நிகழ்ச்சிகளுக்கு அது ஓர் எடுத்துக்காட்டு.
FETNA 2003 விழா ”நந்தன் கதை” நாடகம் என்னாலும் மறக்க முடியாத நிகழ்ச்சி. FETNA 2003தான் நான் முதன் முதலில் கலந்துகொண்ட பேரவை விழா. நான் சிறுவனாக இருந்தபோது எனது கிராமத்தில் நான் பார்த்து, கேட்டு வளர்ந்த கிராமியக் கலைகளை பத்து, பணிரெண்டு வருடங்களுக்குப் பிறகு எம் தஞ்சைத்தரணி கலைஞர்கள் அமெரிக்காவில் நிகழ்த்திக்காட்டியதைப் பார்த்து உணர்ச்சிகளின் உச்சத்திலிருந்தேன். டாக்டர் சோம.இளங்கோவன் அவர்கள் சிகாகோ நகரில் நடைபெற்ற ”நந்தன் கைதை” மற்றும் கிராமியக் கலை நிகழ்ச்சிகளின் DVDயை எனக்கு அனுப்பி வைத்திருந்தார். இது வரை பல முறை அந்த DVDயை பார்த்து விட்டேன்.
அன்புடன்,
-ரவிச்சந்திரன்
அன்புள்ள மணிவண்ணன்,
உங்கள் வலைப்பதிவு இடுகைகளைப் படிக்க நன்றாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள். உங்களோடு soc.culture.tamil. காலத்தில் ஒரு முறை மின்னஞ்சல் தொடர்பு கொண்டிருக்கிறேன். (நிச்சயமாய் உங்களுக்கு நினைவிருக்காது என நினைக்கிறேன், அழகப்பர் நுட்பியல் கல்லூரி குறித்த ஒரு உரையாடல்). புலம்பெயர்ந்த உங்கள் நினைவுகளையும் அனுபவங்களையும் அழகாகத் தொகுத்திருக்கிறீர்கள். இணையம் குறித்த விரிவான எதிர்வினை சரியான கருத்துக்களைத் தெளிவாக வைத்திருக்கிறது. தமிழ் இணையத்தைப் பற்றிய ஆரம்ப நிலைகளையும், இன்றைய நிலையையும் இயல்பாகச் சொல்லி இருக்கிறீர்கள். (பேரா.செல்வாவைச் சென்ற மாதம் சந்தித்த போது தமிழ் இணையம் பற்றிச் சிலபல விசயங்கள் பேசினோம்). பிற பின்.
ரவிச்சந்திரன்,
நீங்கள் குறிப்பிட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள்தாம் "நந்தன் கதை" நாடகத்தின் முதுகெலும்பு. அந்த நாடகம் நடந்த டிரெந்டன் பள்ளிப்படை மண்டபத்தின் பேட்ரியட் அரங்கில் அந்தப் பறை முழக்கம் அதிர வைத்தது. பரதத்துக்கும் பறைக்குமான போட்டி என்று இந்திரா பார்த்தசாரதியின் எழுத்து நிகழ்கலையின் வடிவமாக மேடையில் தோன்றும்போது நாம் வேறு உலகத்துக்குள் போய் விடுகிறோம்.
மேடை அலங்காரம் இல்லாத எளிமையான நாடகம் நம்மைக் கவ்வி இழுத்தெடுப்பது என்பது மலைக்கத்தக்கது.
வாங்க செல்வராஜ். SCT ல் உங்களோடு உரையாடியது நினைவிருக்கிறது, ஆனால் என்ன எழுதினேன் என்று மறந்து விட்டது!
உங்கள் கருத்துகளுக்கு நன்றி. தொடர்ந்து பின்னூட்டங்களை அளித்து வாருங்கள்.
அன்புடன்,
மணி
அன்பின் மணிவண்ணன்,
வணக்கம்!!!
பல ஆண்டுகளுக்கு பிறகு உங்களை இணைய வெளியில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
என்ன ஆச்சர்யம் பாருங்கள்...இன்று மாலைதான் உங்களைப்பற்றி என் அலுவலகத்தலைவரிடம் (திரு.சிவகுமார் தியாகராசன்)பேசிக்கொண்டிருந்தேன்..இன்றிரவே உங்கள் பதிவு என் கண்களுக்கு தென்பட்டது..
தொடர்ந்து எழுதுங்கள்..உங்களிடம் தமிழ்ப்பதிவுலகம் நிறையவே எதிர்ப்பார்க்கின்றது.
அன்புடன்
அரவிந்தன்
பெங்களுர்
கருத்துரையிடுக