வியாழன், டிசம்பர் 03, 2009

போபால் பெருங்கேடு - 25 ஆண்டுகள் கழித்து

போபால் பெருங்கேடு - 25 ஆண்டுகள் கழித்து

இருபத்தி ஐந்து ஆண்டுகள் ஆகி விட்டாயிற்று. டிசம்பர் 2 நள்ளிரவுக்குப் பின்னர் ஊரே உறங்கிய பின்னர் போபால் நகரத்தில் யூனியன் கார்பைடு தொழிற்சாலையிலிருந்து கசிந்த நச்சுக்காற்று உலகையே குலுக்கிய பெருங்கேடு ஒன்றுக்குக் காரணமாகியது. 20,000 பேர் இறந்தனர். 600,000 பேருக்குமேல் நோயால் வாடிக்கொண்டிருக்கின்றனர்.

ஆனால் வெட்கக்கேடு என்னவென்றால், இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் அந்த அழிவுக்குக் காரணமான குற்றவாளிகளுக்குத் தண்டனையில்லை. அதை விட வெட்கக்கேடு என்னவென்றால் இந்தப் பேரழிவால் நலிவுற்றவர்களுக்குக் கொடுத்த இழப்பீடு சராசரி 12,000 ரூபாய்.

ஓர் இந்திய உயிரின் விலை என்ன என்பதற்கு இந்தியாவின் உச்ச நீதி மன்றமே விடை கொடுத்து விட்டது. இறப்புக்கு இழப்பீடு 100,000 ரூபாய்தான். அதையும் கூட 2003ல் தான் தீர்ப்பு வழங்கினார்கள்.

மேலை நாடுகளில் அஸ்பெஸ்டாஸ் வழக்கு, புகையிலைப் புற்றுநோய் வழக்கு, அலாஸ்காவில் எக்சான் வால்டீசின் கல்நெய்ச் சிந்தல் வழக்கு இவற்றிற்கெல்லாம் வந்த இழப்பீடோடு ஒப்பிடும்போது இந்தியர்களின் உயிர் வெறும் 2,000 டாலர்கள் மட்டுமே! உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பே இப்படியென்றால், உலகத்தின் நச்சுக் குப்பைகளை எல்லாம் ஏன் இந்தியாவில் வந்து கொட்ட மாட்டார்கள்?

கப்பல் உடைக்கும் தொழில் முதல், அஸ்பெஸ்டாஸ் கழிவுகளை அகற்றுவதுவரை உலகின் குப்பைக்கூடையாக இந்தியா மாறுவதற்கு இந்திய நீதிமன்றங்களும் ஆட்சியாளர்களும் இதை விடப் பெரிய விளம்பரத்தைக் கற்பனை செய்துகூடப் பார்த்திருக்க முடியாது.

நம்மை நாமே இழிவு படுத்திக் கொண்டால், ஏன் உலகம் இந்தியர்களை மலிவாகப் பார்க்காது?

ஒவ்வொரு நாளும் செய்தித்தாளைத் திறந்தாலோ, தொலைக்காட்சிச் செய்திகளைப் பார்த்தாலோ போதும், எங்காவது யாராவது ஏதாவது ஒரு விபத்தில் இறந்திருப்பார்கள், குப்பையில் கிடக்கும் அவர்களது உடலைச் சற்றும் இரக்கம் இல்லாமல அப்படியே படம் பிடித்துப் போட்டிருப்பார்கள். அப்படிப் போடுவது நாகரீகமற்றது என்ற உணர்வு கூட இல்லாத குமுகாயம் இது.

2004 கிறிஸ்துமஸ் சுனாமியில் இறந்தவர்கள் உடல்களைக் குப்பைக் கூளங்கள் போல் கொட்டி வைத்திருந்ததையும், அவற்றை குப்பையைப் பெருக்கிக் குழியில் தள்ளுவது போல் தள்ளிப் புதைத்ததையும் பக்கம் பக்கமாக வண்ணப் படங்களில் வெளியிட்ட நாளேடுகளை நினைவிருக்கிறதா?

அந்த நேரத்தில் சான் ஃபிரான்சிஸ்கோ தமிழ் மன்றத்தின் தலைவன் என்ற முறையில் என்னை அமெரிக்க ஊடகங்கள் பல கருத்துத் தெரிவிக்கக் கேட்டு வீட்டுக்கு வந்தார்கள். அவர்களுக்குத் தமிழக ஊடகங்களில் வெளியான படங்களைக் காட்டினோம். அவற்றைப் பார்த்து அதிர்ந்த அமெரிக்க ஊடகச் செய்தியாளர்கள், இது போன்ற அதிர்ச்சிதரும் படங்களை நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்குக் காட்ட மாட்டோம் என்றனர்.

உண்மைதான்.

செப்டம்பர் 11 அன்று இடிந்து விழுந்த கட்டிடங்களில் இறந்தவர்களின் உடல்களை எந்த அமெரிக்க ஊடகமாவது காட்டியிருக்கிறதா? அப்படிக் காட்டியிருந்தால் இறந்தவர்களுக்கும், அவர்கள் குடும்பங்களுக்கும் மரியாதை காட்டத் தெரியாத அப்படிப் பட்ட ஊடங்களை அவற்றின் வாடிக்கையாளர்களே கண்டித்திருப்பார்கள்.

நாம் இங்கே இந்த ஊடகங்களை மட்டுமல்ல, அப்படிப் பட்ட படங்களை வெளியிடுவோரை ஆதரிக்கும் மக்களையும், "இதெல்லாம் சகஜமப்பா" என்று மெத்தனமாக விட்டுவிடும் போக்கையும் கூடக் குறை சொல்ல வேண்டும்.

1984ல் அடித்தட்டில், தன்னம்பிக்கை இல்லாமல், தங்கள் நாட்டில் முதலீடு செய்ய வந்த அமெரிக்கக் கம்பெனிகள் ஓடி விடுவார்களோ என்ற அச்சத்தோடு தம் மக்களையே காவு கொடுத்த இந்தியா, இப்போதாவது முதுகெலும்போடு எழுந்து நிற்குமா?

தன் மக்களையே பார்த்துக் கொள்ள வழியில்லாத இந்தியர்கள் அண்டை நாடுகளில் மக்கள் படும்பாடு குறித்து மட்டுமா கொதிக்கப் போகிறார்கள்?

4 கருத்துகள்:

செல்வா சொன்னது…

மணி,

மிக மிக வருத்தம் தரும் பெருங்கொடுமையான நிகழ்வு. 25 ஆண்டுகள் ஆகி இன்றும் ஒரு நேர்மையான தீர்வு இல்லை! 20,000 இந்தியர்களின் நச்சு வளிக் கொலைக்குப் பொறுப்பாளியாகிய வாரன் ஆண்டர்சன் இன்றும் மிகவும் சொகுசாக பெரிய மாளிகையில் நியூ யார்க்கில் உள்ள லாங்கு ஐலண்டில் உள்ள பிரிட்ச்சாம்டனில் வாழ்கிறார். இவருக்கு இந்தியாவின் "பிடிவாரண்ட்டு" இருக்குதாம். இவர் வன்னியில் காட்டில் இல்லை, ஆப்கானித்தானின் மலைக் குகைகளில் இல்லை. ஏன் இந்தியா இவரை தம் நாட்டுக்குக் கொண்டு வந்து கைதுசெய்யவில்லை?
உயிரிழந்து தவிக்கும் உறவினர்களுக்கும், நோயுற்றவர்களுக்கும் இன்றளவும் போதிய ஈடுதொகை கொடுக்காதது கொடுமையிலும் கொடுமை.

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

செல்வா,

ஒரு நாட்டின் படை போர்க்குற்றங்கள் புரிந்தால் அந்த நாட்டின் தலைவரைத் தண்டிப்பது எனற நிலையில் மட்டும் வாரன் ஆண்டர்சன் மீது குற்றம் சாட்டலாம்.

ஆனால், போபாலைப் பொருத்தவரையில் பல குற்றவாளிகள் இருக்கிறார்கள். அந்த ஆலையைக் கட்டும்போதே பொதுமக்கள் பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்டுக் கட்டியிருக்க வேண்டும். இந்தியாவின் விதிகள் அமெரிக்க விதிகள் அளவுக்கு மக்கள் பாதுகாப்புக்கு வழி வகுக்கவில்லை. இதற்கு, இந்தியப் பொறியாளர்களும், ஆட்சியாளர்களும் முதல் பொறுப்பு. இந்த அடிப்படை நெகிழ்ச்சியால்தான் யூனியன் கார்பைடு இப்படிப்பட்ட வழக்கிலிருந்து தப்பிக்க முடிந்தது.

அடுத்தது ஆலையைக் கட்டியவர்கள் எந்த அளவுக்கு விதிகளைப் பின்பற்றினார்கள் என்பது ஒரு கேள்வி. ஆலையை நடத்தியவர்கள் எப்படிப் பார்த்துக் கொண்டார்கள்? விபத்து நடந்த அன்று, என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன? ஒரு பேரழிவைத் தடுக்க என்ன முயற்சிகள் எடுக்கப் பட்டன? நகரத்தின் தலைவர்களுக்கு எப்போது செய்தியைக் கொடுத்தார்கள்? ஆலையின் அருகே மக்களுக்கு என்ன எச்சரிக்கை இருந்தது?

இன்னொரு யூனியன் கார்பைடு போன்ற பேரழிவு வராமல் தடுக்க என்னென்ன செய்திருக்கிறார்கள்?

கும்பகோணம் பள்ளித் தீ விபத்துக்குப் பிறகு ஓலைக்கூரைகள் தடை செய்தார்கள் எனப் படித்திருக்கிறேன். ஆனால், இன்றும் ஓலைக்கூரைகளை அன்றாடம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

வாரன் ஆண்டர்சன் என்ற அரக்கனைப் பழிப்பதால் மட்டும் இந்தப் பெருங்கேட்டின் குற்றவாளிகள் அனைவரையும் தண்டித்து விட்டதாகக் கொள்ள முடியாது.

அன்புடன்

மணி

Vassan சொன்னது…

நண்பர் மணி

வரும் திங்கள் தொடங்கி எனது நிறுவனம் அமேரிக்க ராணுவ விமானதளம் ஒன்றில் வேலை செய்ய உள்ளது.

கீழுள்ள தளங்களில் காணப்படும் விதிகளை நாங்கள் பின்பற்றியே ஆகவேண்டும். இல்லையெனில் வெளியேற்றபடுவோம். ராணுவ வேலை இல்லாமல் மற்ற அரசு கட்டுமான பணிகளிலும் கிட்டதட்ட விதிகள் இப்படியேதான்.

http://www.osha.gov/

http://www.msha.gov/

இந்திய நாட்டில் இதுபோன்ற விதிகளை வலியுறுத்தும் அரசு நிறுவனங்கள் இல்லையா..?

ஒரு பில்லியனுக்கு மேலாக வாழும் நாட்டில் இது போன்று ஒரு வாரியம் இல்லயெனில், நினைக்கவே அச்சமாகவுள்ளது.

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

நண்பர் வாசன்,

இந்தியாவிலும், தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களும், வாரியங்களும் உள்ளன. ( http://labour.nic.in/) பார்க்க. உலகில் என்ன முற்போக்குச் சட்டங்கள் இருந்தாலும், அவை உடனுக்குடன் இந்தியாவுக்கும் வந்து விடும். இங்கே தொழிற்சங்கங்கள், ஆட்சித்துறை அலுவலர்கள், இடதுசாரிக் கட்சிகள் என்று எல்லோரும் போட்டி போட்டுக் கொண்டு சட்டங்களைக் கொண்டு வந்து விடுவார்கள். ஆனால், சட்டங்கள் இருந்தென்ன பயன்? அவற்றை நடைமுறைப்படுத்துதலில் ஊழல், மெத்தனம், இயலாமை, அறியாமை எல்லாம் கலந்திருக்கின்றனவே!

- மணி