செவ்வாய், டிசம்பர் 01, 2009

இணையப் பெருவெளியின் வெற்றி

இணையப் பெருவெளியின் வெற்றி

எழுத்தாளர் ஜெயமோகன் தன் தமிழ் இணைய அனுபவங்களைப் பற்றி "இணைய உலகமும் நானும்" என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையை, நண்பர் செல்வன் தமிழமுதம் மடலாடற்குழுவுக்கு அனுப்பியிருந்ததைப் படித்தேன்.

ஜெயமோகனின் இணைய உலகக் கண்ணோட்டமே தனிதான்.

நண்பர் முத்துவின் முரசு அஞ்சல் இணையத்தமிழின் முன்னோடி. அதிலும், தமிழின் முதல் மடலாடற்குழுவான தமிழ்.நெட் முழுக்க முழுக்க முரசு அஞ்சலின் இணைமதிக் குறியீடுகளில் தொடங்கியது. பின்னர் த.கு.தரம் (TSCII) குறியீடு அமைப்பதற்கும் தமிழ்.நெட்தான் வழிவகுத்தது. மதுரைத்திட்டம் தமிழ்.நெட்டில்தான் தொடங்கியது. தமிழ் இணைய மாநாடுகளின் அமைப்பாளர்கள் பலரும் தமிழ்.நெட்டில்தான் சந்தித்தோம். தமிழ்.நெட்டின் பாலா பிள்ளை, முரசு அஞ்சல் முத்து நெடுமாறன், "மயிலை எழுத்துரு" "மதுரைத்திட்டம்" கல்யாணசுந்தரம், இவர்களோடு நாங்கள் பலரும் தமிழ்.நெட்டில் பல கருத்துகளை அலசினோம். நல்ல பல ஆக்கத் திட்டங்கள் அங்கே உருவாகின. கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், ஒருவரை ஒருவர் மதித்தோம். முதன்முறையாக உலகத்தின் எல்லாக்கோடிகளிலிருந்தும் தமிழர்கள், தமிழ் மொழியில் கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதற்கு தமிழ்.நெட் வழியமைத்தது. தமிழ் இணையத்தின் தாயகம் என்றால் தமிழ்.நெட்டைச் சொல்லலாம். அதிலிருந்து கிளைத்து வந்த எண்ணற்ற பல குழுக்களில் அறிஞர் ஜெயபாரதி அவர்களின் அகத்தியம் குழு குறிப்பிடத்தக்கது. அது ஒரு தமிழ்க் களஞ்சியமாகவே தொடர்ந்து செயலாற்றி வருகிறது.

ஏன், "மின் தமிழ்" நா. கண்ணன் கூட, தமிழ் மரபு அறக்கட்டளை உருவாவதற்கு முன்னர் தமிழ்.நெட்டில்தான் எழுதிக் கொண்டிருந்தார். அந்த அறிமுகத்தால்தான் அவருக்கு மலேசியாவில் நடந்த தமிழ் இணைய மாநாட்டில் அறக்கட்டளைக்கு அமைச்சர் டத்தோ சாமிவேலு விதைப்பணம் கொடுத்தார். அப்போதும் கண்ணன் இணையத்தின் முகமூடித்தன்மையை, ஒரே ஆள் வெவ்வேறு முகங்களில் பங்கேற்றுக் கருத்தளிப்பதை இணையநாடகம் என்றுதான் போற்றினார். ஒருவரே பல அவதாரங்கள் எடுத்து இணைய அரங்கில் நடிக்க முடியும் என்ற இந்த அவதாரத்தன்மை இணையத்தின் கவர்ச்சிகளில் ஒன்று என்று உணர்ந்து தமிழில் எழுதியவர் எனக்குத் தெரிந்து அவர் மட்டுமே. அவரே பல முகமூடிப் புனைபெயர்களிலும் எழுதினார். "பெயரிலி" என்ற பெயரில் எழுதிய கவிஞர் ரமணியும், "கவிஞர் காசுமி சான்" என்ற பெயரில் எழுதிய கண்ணனும், முகமூடிகளைப் பற்றி அலட்டிக் கொள்ளவில்லை. இணையம் என்ற நாடகத்தில் உங்களுக்குப் பிடித்த பாத்திரத்தில் நடித்துக் கொள்ளுங்களேன் என்பது அவர்கள் கொள்கை.

தமிழ்நாட்டில் '90களில் இணையவசதி குறைவாக இருந்ததால், இந்தக் குழுக்களில் புலம் பெயர்ந்த தமிழர்களின் பங்கு சற்றுக் கூடுதலாகவே இருந்தது. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் எதைச் சாதிக்க முடியும், எப்படிச் சாதிக்க முடியும் என்பதைப் புரிந்து கொள்ளாமல் எங்கள் குறிக்கோள்களின் நேர்மையில் நம்பிக்கை கொண்டு நாங்கள் சில முயற்சிகளில் தடுக்கி விழுந்ததென்னவோ உண்மைதான்.

தமிழ் இணையத்தின் முன்னோடிகள் பலர் நுட்பியல் வல்லுநர்கள், பட்டதாரிகள், பெரும்பாலும் வெளிநாடுகளில் ஆங்கிலத்தில் இருந்த இணைய வளர்ச்சிகளைத் தமிழிலும் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டவர்கள். இந்தத் தொழில்நுட்பங்கள் என்றாவது ஒரு நாள் எல்லாத் தமிழரையும் சென்றடையும், அப்போது அவர்கள் எப்படி இந்தத் தொழில்நுட்பங்களைப் புழங்குவார்கள் என்றும் சிந்தித்ததுண்டு. ஆனால், தொலைக்காட்சியைப் போலவே, இணையமும், பொழுதுபோக்குக்கும், வீண் வம்புக்கும், அரட்டைக்கும் வழி வகுக்கும் என்று எங்களில் பலர் எதிர்பார்த்தோம். இதில், ஆங்கிலத்துக்கும் தமிழுக்கும் பெரிய வேறுபாடு இல்லை.

ஆனால், ஆங்கிலத்தில் புரிந்துள்ள பல பெரும் சாதனைகள் தமிழை இன்னும் எட்டாமல் உள்ளதற்குக் காரணம், இன்றைய தமிழ்ப் பண்பாடு என்றுதான் நான் சொல்லுவேன். ஊர் கூடித் தேர் இழுப்பதில் அமெரிக்கர்கள் வல்லவர்கள். அந்த ஒற்றுமை தமிழரிடத்தில் அவ்வளவு இல்லை. இணையத்தில் தமிழர் எண்ணிக்கை கூடக்கூட, பல் வேறு குழுக்கள் உருவாயின. தமிழ்நாட்டில் வெளிப்படையாகச் சொல்லத் தயங்கிய பல கருத்துகள் இணையத்தில்தான் வெளிப்படையாக வெடித்தன. இவற்றில் பல ஜெயமோகன் குறிப்பிடுவதுபோல் முகமூடிப் புனைபெயர்களில்தான் வந்தன. அந்த நிலை இன்னும் தொடர்கிறது. ஆனால், எல்லாப் புனைபெயர்களுமே பெரியாரியம், தமிழியம் சார்ந்தவர்களால் மட்டுமே செய்யப்பட்டது போன்ற கருத்து ஜெயமோகனின் கட்டுரையில் தெரிகிறது. அது அவரது அனுபவமாக மட்டும் இருக்கக்கூடும், ஏனென்றால் அன்றும் இன்றும், ஜெயமோகனின் கருத்துகள் வலதுசாரி, இந்துத்துவ சார்புடமை கொண்டதாக இருப்பதும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.

திண்ணைக் களத்திலும், மன்ற மையத்திலும் (Forum Hub) அவரை வசை பாடினார்கள் என்று எழுதியுள்ளார். மன்ற மையத்தில் அவரோடு என் சொந்தப் பெயரிலேயெ வாதாடிய நினைவிருக்கிறது. அவர் வசை பாடினார்கள் என்று கூறும் நடை இன்றளவும் இணையத்தின் இயல்பு நடை. நேரில் பார்த்துப் பேசும்போது ஒருவரிடம் நாம் சொல்லத் தயங்குவதை, இணையத்தில் சொல்லத் தயங்குவதில்லை. அப்படியே சொல்வதிலும் இருக்கும் நாசூக்குத் தன்மை, எழுதுவதில், அதிலும் முகம் தெரியாத ஒருவருக்கு எழுதுவதில் இருப்பதில்லை. இதை ஆங்கிலத்திலும் பார்க்கலாம். வசையாளர்களும் இருந்தார்கள். ஆனால், எல்லா வாதங்களுமே வசைகள் என்று அவர் நினைத்திருந்தால் அது தவறு. மன்றமையத்தில் நாங்கள் அவரோடு புரிந்த வாதங்கள் வசைபாடுவது என்று அவர் நினைப்பது வியப்பளிக்கிறது.

அவர் மன்ற மையத்தில் நுழைந்த அதே நேரத்தில்தான் இரா. முருகனும், காஞ்சனா தாமோதரனும், எங்களில் பலரோடு பல கருத்துகளை அலசிக் கொண்டிருந்தார்கள். இணையத்தில் எப்படிக் கலந்துரையாடுவது என்று அவர்களுக்குத் தெரிந்திருந்ததுபோல் திரு. ஜெயமோகனுக்குத் தெரிந்திருக்கவில்லை. தன்னுடைய பேரறிவுக்கும், எழுத்தாற்றலுக்கும் பணியாமல் தன்னிடம் வாது புரிந்தவர்கள் அவர்களது தாழ்வுமனப்பான்மையால்தான் என்று ஜெயமோகன் அன்றும் இன்றும் தப்பாகத்தான் கணக்குப் போட்டிருக்கிறார்.

காரசாரமாக, வெளிப்படையாகப் பேசுவது இணையத்தின் பண்பாடு. அமெரிக்கப் பண்பாட்டிலும் ஒளிவு மறைவு இல்லாத அப்பட்டமான பேச்சு இருக்கும். அமெரிக்க வானொலியில், குறிப்பாக வலதுசாரி வானொலி அரசியல் அரட்டை நிகழ்ச்சிகளைக் கேட்டுப் பாருங்கள். அமெரிக்கர்கள் நிறுவிய இணையத்தின் பண்பாடு அமெரிக்கப் பண்பாட்டை எதிரொலிப்பதில் வியப்பென்ன! அப்படிப்பட்ட தமிழ் இணையத்தில் அன்னப்பறவை போல் செயலாற்றிய எழுத்தாளர்களும் இருக்கிறார்கள். இரா. முருகன், காஞ்சனா தாமோதரன், பி. ஏ. கிருஷ்ணன் போன்றவர்களால் எளிதில் வலம் வர முடிந்த தமிழ் இணையம் ஜெயமோகனுக்கு எரிச்சலூட்டியிருக்கிறது என்றால் யாருக்குத் தாழ்வு மனப்பான்மை என்று ஒரு நொடி சிந்திக்க வேண்டியிருக்கிறது. இணையத்தின் முகமூடி அவதாரத் தன்மையை அவர் புரிந்து கொள்ளவில்லையோ எனத் தோன்றுகிறது.

ஜெயமோகன் எழுதுகிறார்:

இணையத்தில் தமிழைக் கொண்டுவர உழைத்த முன்னோடிகளில் சிலரே சாதிக்காழ்ப்புடன் இதைச் செய்தார்கள் என்று கேள்விப்பட்டேன்.

தமிழ்மணம் போன்ற திரட்டிகளே அவதூறாளர்களின் கையில் ஆயுதமாகத்தான் பயன்பட்டன என்று இணையத்தில் வாசித்தபோது மனக்கசப்படைந்தேன். ஒரு திரட்டியில் என் இணையதளத்தை இணைப்பதற்கே நான் அச்சப்படும் சூழல் இன்று நிலவுகிறது



பெயர்களைக் குறிப்பிடாமல், ஆதாரத்தை நிறுவாமல் இப்படிப் பொத்தாம் பொதுவாக எழுதுவதே ஓர் அவதூறு என்றே நான் சொல்லுவேன். சாதிக் காழ்ப்பு என்று அவர் எதைக் குறிப்பிடுகிறார் எனத் தெரியவில்லை. நான் முன்னரே குறிப்பிட்டதுபோல், எங்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தபோது, எல்லோரும் கூடித்தான் தேர் இழுத்தோம். இல்லையெனில் தேர் நகர்ந்திருக்காது. ஆனால், எண்ணிக்கை கூடிய பிறகு, பிளவுகள் வருவது இயல்பு. தமிழ்க் குமுகத்தில் இருக்கும் சாதிக் காழ்ப்புகள் இணையத்திலும் வெடிக்காதா என்ன? தமிழ் இணையத்தில், தமிழில் எழுதுபவர்களிடையே மட்டும் இருந்த நோய் இல்லை இது. இதை soc.culture.indian, soc.culture.tamil போன்ற தொடக்க கால ஆங்கிலக் குழுமங்களிலும் பார்க்கலாம். இருபதாண்டுகளுக்கு முன்னர் இருந்த அதே ஆரியர்-திராவிடர், பிராம்மணர்-தமிழர், வட இந்தியர்- தென்னிந்தியர், ஐஐடி - ஐஐடி அல்லாதவர் போன்ற பூசல்கள் இன்றும் வெவ்வேறு களங்களில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்தப் பூசல்கள் குமுகாயத்தில் இருக்கும் பூசல்கள்தாம். இணையத்தில் திடீரென்று வெடித்த பூசல்கள் அல்ல.

இணையம் என்பது ஒரு கடல். இதில் எல்லாக் கருத்துகளும் கலக்கும். அதை யாரும் தடுக்க முடியாது. ஆனால், தொலைக்காட்சியைப் போலவே இதிலும் கவர்ச்சிக்குப் பின்னால்தான் கூட்டம் செல்லும். அதுவும் மனித இயல்புதான். சமூகத்தில் இருக்கும் எல்லா உணர்வுகளையும், பூசல்களையும் தமிழ் இணையமும் எதிரொலிக்கத் தொடங்கி விட்டது என்று நாம் கருதினால், இதை நான் ஒரு சிறு வெற்றி என்றுதான் கொள்வேன். சமூகத்தில் இது போன்ற பூசல்களுக்குத் தீர்வு காணாமல் இணையத்திலும் தீர்வு காண முடியாது. சொல்லப்போனால், இணையத்தில் இத்தகைய பூசல்களுக்குத் தீர்வு காண முடிந்தால், சமூகத்திலும், இது போன்ற பூசல்களுக்குத் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

பழங்காலத்து மிதவாதக் கட்சியினர் நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் நாம் நளினமாகக் கருத்துப் பரிமாறிக் கொண்டு சிக்கல்களுக்குத் தீர்வு காணாமல் போவதை விட, செருப்பு பறந்தாலும், எல்லாக் கருத்துகளையும் அறிந்து கொள்ளப் பயன்படுவதால் இணையம் தமிழ்ச்சூழலில் கருத்துப் பரிமாற்றத்துக்கான சாத்தியங்களை உருவாக்கி இருக்கிறது என்றே நான் கொள்கிறேன். இது பொதுவெளியைச் சீரழிக்கவில்லை. இது வரை தமிழ்ச்சூழலில் இல்லாத பொதுவெளியை இணையம் உருவாக்கிக் கொடுத்திருக்கிறது என்று அடித்துச் சொல்வேன். பொது உரையாடல்கள் மட்டுமல்ல, அவற்றையும் தாண்டிப் பொதுநலம் கருதிப் பல செயலாக்கங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

தமிழ் இணையம் தமிழர்களுக்குள்ளே உள்ள இடைவெளியைப் பெரிதும் குறைத்திருக்கிறது. இப்போது, ஒருவரை ஒருவர் வெட்டிக் கொள்ளாமல், ஒருவரைப் பார்த்து ஒருவர் கத்திக் கொண்டாவது இருக்கிறோம். இதையும் தாண்டிச் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் தன்மை உள்ளவர்கள் ஆங்காங்கே செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வெகுசிலர் தங்களை அடையாளம் கண்டு கொள்ள இந்த இணையம் துணை புரிகிறது. இதுவே மாபெரும் வெற்றிதான். இதற்கு மேலும் வளருவது நம் கையில், நமது பண்பாட்டில்தான் இருக்கிறது.

9 கருத்துகள்:

மறைமலை இலக்குவனார் சொன்னது…

தமிழ் இணையத்தின் வளர்ச்சியையும்
விரிவாக்கத்தையும் ஒரு சிறுபான்மைக் கூட்டம் தமது தன்னல வளர்ச்சிக்குப் பயன்படுத்திக்கொண்டு விருப்பம்போல் பொய்யுரைத்து வீண்விவாதங்களை விரித்துக்கொண்டிருப்பதற்குக் காரணம்
தமிழ்ப் புலத்துறையினர் காட்டும் சோம்பேறித்தனமும் பெருந்தன்மை என்னும் கையாலாகாத்தனமும் தான்.
சூடுசுரணையற்ற தமிழன் சுயமரியாதை கொண்டு செயல்படத் தொடங்கவேண்டும்.இன்னொரு பெரியார் பிறக்கட்டும் என்று தூங்கிக்கொண்டிருக்கக்கூடாது.

Arasu சொன்னது…

மிகச்சிறப்பான கருத்துக்கள். தமிழ் மொழிமீதும், சீரிய தமிழ்ப்பண்பாட்டுக்கூறுகள் மீதும் பற்றுள்ளோர்கள் நிச்சயம் இணைந்து செயல்பட்டு குறிப்பிடத்தகுந்த சாதனைகளை நிகழ்த்தும் காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது எனவே நம்புகிறேன்.

- அரசு செல்லைய்யா

Venkatesh Kumaravel சொன்னது…

ஏற்ப எழுதப்பட்டிருக்கும் கட்டுரை. கடைசியில் நீங்கள் அடிக்கோடிட்டுக் காத்தியிருக்கும் ‘அவதூறு’ பற்றி ட்விட்ட எண்ணினேன். 05-க்கும் முந்தைய தமிழ் இணையம் குறித்த தகவல்களோ நேரடித்தொடர்போ இல்லாததால், செய்யவில்லை. ’மையம்’ போன்ற ஃபோரம்களே, இப்படி வினையாற்றவும் எதிர்வினையாற்றவும், தான் என்ற சாராம்சம் புரியாதவருடன் என்னத்த விவாதிப்பது? சுருக்கென்று எழுதியிருக்கிறீர்கள். அவர் பாணி எள்ளலும் இருந்திருக்கலாம்.

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

மடலாடற்குழுவில் வந்த பேரா. செல்வகுமாரின் பின்னூட்டம் 1:

ஒரேயொரு திருத்தம் இப்போதைக்கு.

தமிழ்.நெட்டுக்கு முன்னர் சோக்.கல்ச்சர்.டமில் (தமிழ்ப் பண்பாட்டுக் குமுகம் என இதனைக் கொள்வோம்) அதற்கும் முன் ஆல்ட்.கல்ச்சர்.டமில்.

இந்த தமிழ்ப் பண்பாட்டுக் குமுகத்தில்தான் முதன்முதலாக
இணையவழி பலரும் குழுமினோம். இக் குமுகக் குழு தொடக்குவதற்கே பெரும் எதிர்ப்பு இருந்தது. நாட்டின் பெயர் இல்லாமல் எப்படி மொழிக்கு என்று ஒரு குமுகப் பண்பாட்டுக்
குழு அமைக்க முடியும் என்று குட்டி எதிர்ப்புப் போராட்டம். அதனை முறியடித்துத் தொடங்கினோம் அக் குமுகக் குழுவை. தமிழ்ப் பண்பாட்டுக்
குமுகக் குழுவின் முதல் ஆண்டுவிழாவை இங்கு
வாட்டர்லூவில் கொண்டாடியது தமிழ் இணைய வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வு. கணினியில் தமிழில் எழுதத் தேவையான மென்பொருள் ஆக்கிய முன்னோடி கனடா "ஆதமி' கே. சீனிவாசன் அவர்களும், இராம.கி, கல்யாண், நீங்கள், பாலா சுவாமிநாதன், சொர்ணம் சங்கர், குமார்
குமரப்பன், நா. கணேசன், பத்ரி (கிழக்குப் பதிப்பகம்) என்று மிகப்பலரும் இணையவழி கூடிய இடம் அதுதான்.

(பின்னூட்டம் 2 தொடர்கிறது)

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

மடலாடற்குழுவில் வந்த பேரா. செல்வகுமாரின் பின்னூட்டம் 2:


சுவிட்சர்லாந்து கு. கல்யாணசுந்தரத்தின் மதுரைத் திட்டமும் அங்குதான் முதலில் உருவாகியது. நான் சிறுதுளி பெருவெள்ளம் என்று ஒரு திட்டம் சொன்னேன் (இன்றுள்ள தமிழ் விக்கிப்பீடியா போன்ற, ஆனால் எளிமையான கருத்துத் தொகுப்பு).
அதற்கு அடுத்தாற்போல பார்த்தசாரதி திலீபன் என்பவர் நாலாயிரத்
திவ்யபிரபந்தத்தை பலரும் கூட்டாக தட்டச்சு செய்து மின் வடிவப்
பதிப்பு உருவாக்கினார். அதில் நானும் என் பங்குக்கு ஒரு பகுதியை செய்து உதவினேன். அதனை அடுத்துதான் கல்யாணின் மின்நூலகம்,
மதுரைத் திட்டம் உருவாகியது. அதன் பின்னர் பாலா பிள்ளையின்
தமிழ் டாட் நெட் உருவாகியது.

அன்புடன்
செல்வா

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

தமிழ் உலகம் மடலாடற்குழுவில் வந்த நண்பர் இராம.கி.யின் பின்னூட்டம் - 1

அன்பிற்குரிய மணிவண்ணன்,

உங்கள் வலைப்பதிவில் என்னுடைய முன்னிகையை (comment) வெளியிட முடியவில்லை. மீண்டும் மீண்டும் bX-p43cdf என்ற வழு (error) வந்து கொண்டே இருக்கிறது. தேடிப் பார்த்துவிட்டேன், அதை எப்படித் தீர்ப்பது என்று விளங்கவில்லை. இருந்தாலும் என் முன்னிகையை இங்கு கொடுக்கிறேன். நீங்களே உங்கள் வலைப்பதிவில் அதை வெளியிட முடிகிறதா என்று பாருங்கள்.

-----------------------
சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள், மணிவண்ணன்.

திரு.ஜெயமோகனின் அந்தக் கட்டுரை உத்தமத்தின் அக்டோபர் 2009 மஞ்சரி’ இதழில் வெளியாகி, அதை மற்றவர்கள் குறைகூறி, எதிர்ப்புத் தெரிவித்ததால், அந்தத் தளத்தில் இருந்து களையப்பட்டு, இப்பொழுது அவருடைய வலைத்தளத்திலேயே மீண்டும் வெளியாகியிருக்கிறது. (ஒருவேளை சற்று விரிவாகியிருக்கிறாரோ, என்னவோ? இரண்டு வெளியீடுகளையும் அருகருகே வைத்து ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும்.)

செயமோகனின் சொந்தக் கருத்து அவருக்கே உகப்பானதாய் இருக்கட்டும். அதே பொழுது ”தமிழிணையம் இப்படி” என்று அவர் பொதுமைப் படுத்திக் கூறுவது
ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.

(பின்னூட்டம் தொடர்கிறது)

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

தமிழ் உலகம் மடலாடற்குழுவில் வந்த நண்பர் இராம.கி.யின் பின்னூட்டம் - பகுதி 2


”நான் ஒரு வெளிநாடு போகிறேன்; எனக்கு அங்கு ஏதோ ஒரு தீமை நடந்தது” என்று வைத்துக் கொள்ளுங்களேன். அதை வைத்து, உடனே ”வெளிநாடே சரியில்லை; ஏமாற்றி விடுவார்கள்” என்று நான் கூறிவிட இயலுமா? ஒருகாலத்தில் ”சென்னைக்குப் போகிறாய், கவனமாய் இரு; இல்லையெனில் ஏமாந்துவிடுவாய்” என்று நாட்டுப் புறத்தில் வளர்ந்த எனக்குப் பெரியவர்கள் பயங்காட்டிய நினைவு வருகிறது. அப்படி ஒரு தீமை நடந்து நான் தடுமாறியிருந்தால், ”எனக்கு அவலமான பட்டறிவு ஏற்பட்டது” என்று மட்டுமே கூறமுடியும். அதை விடுத்து அதையே பொதுமைப் படுத்தினால் எப்படி? அப்படித்தான் இவருக்கு இணையத்தில் நடந்த நிகழ்வுகளைக் கொள்ள வேண்டுமே தவிர, ஒன்றிரண்டு நிகழ்வுகளை வைத்து பொதுமைப் படுத்தும் முரண்பாடு இவருக்கு விளங்கவில்லையே? இப்பொழுது கூட இவர் இணையத்தளம் வைத்துச் செயற்படவில்லையா? இவருக்கு உகந்ததாய்த் தோன்றும் தளங்களில் இவர் எழுதுகிறார் - அவ்வளவுதான்.

இருவகை, பல்வகைப் பரிமாற்றம் கொண்ட மடலாடற் குழுக்கள், கருத்துக் களங்கள், வலைப்பதிவுகள் இவருக்குச் சரவலாய் இருக்கிறது என்று சொல்லிவிட்டு, இப்பொழுது வைத்திருக்கும் தளம் போன்ற ஒருவழிப் பரிமாற்ற முறையே தனக்குச் சரிவருகிறது என்று சொல்லியிருக்கலாமே? அதை விடுத்து தமிழ் இணையத்தையே இவர் சாடினால் எப்படி?

(பின்னூட்டம் தொடர்கிறது)

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

தமிழ் உலகம் மடலாடற்குழுவில் வந்த நண்பர் இராம.கி.யின் பின்னூட்டம் - பகுதி 3


தமிழருக்கு இடையே இருக்கும் முரண்பாடுகள் இணையத்திலும் மறுபளிக்கத்தானே செய்யும்? அந்த வகையில் வசைகளும் அவற்றின் ஒரு கூறு தான். முகமூடிப் பழக்கம் ஊறு செய்யும் தான். நானும் கூட ஊறு பட்டிருக்கிறேன். இன்னும் மிகப் பலரும் ஊறுபட்டிருக்கிறார்கள். அவற்றால் வலிக்கத்தான் செய்யும். ஆனால் அதைத் தவிர்ப்பதற்கும் விலக்குதற்கும் நுட்பங்களும், நடைமுறைகளும் கொஞ்சங் கொஞ்சமாய் வந்துவிட்டனவே? இன்றைக்கு அந்த வகை வசைகளைக் கையாள வழிகள் இருக்கின்றனவே?

பாலத்திற்கு அடியில் ஆற்றுநீர் போய்க்கொண்டு இருக்கிறது. நேற்றைய நீர் போய்விட்டது. இன்றைக்கு வருவது புதியது.

அன்புடன்,
இராம.கி.

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

தமிழ்மன்றம் மடலாடற்குழுவில் வேந்தன் அரசு பின்னூட்டம்:

வேந்தன் அரசு ✆ to tamilmanram

அயலகத்தில் வாழும் எம்மனோர்க்கு தமிழ் என்றால் இணையம்தான்.
இணையத்தில் எழுதுவதால் எனக்கு தமிழில் நன்கு எழுதவும் அதனால் பேசவும் பயிற்சி ஏற்படுகிறது.
தமிழகத்தில் வாழும் ஒருவர் தமிழில் எழுத வாய்ப்பே இல்லை. அதனால் அவருக்கு சொல்லாட்சி இல்லாமல் பற்றாகுறையை ஆங்கில சொல் கொண்டு நிரப்புகிறார்கள்

--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி