நண்பர்களே,
ஜப்பானில் நடந்து கொண்டிருக்கும் அணு மின் நிலைய வெடிப்புகளும், கதிர்வீச்சுப் பேரிடர்களும், உலகெங்கும் அணு உலைகளுக்கு அருகில் வாழும் லட்சக் கணக்கான மக்களுக்கு மிகுந்த கவலை தரும் செய்திகள்தாம்.
எல்லாம் நன்றாகவே இருக்கிறது, சாலை விபத்துகளைவிட அணு உலை விபத்துகளால் உயிரிழக்கப் போகிறவர்கள் எண்ணிக்கை குறைவு என்ற வாதம் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.
பொறுப்புள்ள நாடுகளின் அரசுகள் என்ன செய்கின்றன என்று பாருங்கள்.
ஜெர்மனியில் 1980க்கு முன் கட்டிய அணு உலைகளை மூடி விடுவதாக இன்று அறிவித்திருக்கிறார்கள்.
http://www.reuters.com/article/2011/03/15/germany-nuclear-idUSLDE72E17620110315
ஓர் அணு உலையின் வாழ்நாள் நிரந்தரம் அல்ல. முப்பது அல்லது நாற்பது ஆண்டுகளுக்கு மேல் அவற்றை இயக்குவது சரியல்ல என்று அணு சக்தி நிபுணர்களே கூறுகிறார்கள்.
தற்போது கட்டத் தொடங்கும் அணு உலைகளின் பாதுகாப்புத் திட்டங்களையும் மிகுந்த எச்சரிக்கையுடன் மீள்பார்வையிட வேண்டியிருக்கிறது.
அமெரிக்காவின் திரீ மைல் ஐலண்டு விபத்துக்குப் பிறகு பல பத்தாண்டுகளாக எந்தப் புதிய அணு உலையையும் அமெரிக்கர்கள் தொடங்கவில்லை. இருக்கும் அணு உலைகளையும், தாங்கள் கற்றுக் கொண்ட பாடங்களை வைத்து மேலும் எச்சரிக்கையுடன் தற்காப்புப் பணிகளை மேற்கொண்டார்கள். ( http://www.latimes.com/news/local/la-me-tsunami-california-20110315,0,7384994.story )
[ Since Three Mile Island in 1978, we have gone through several rounds of evaluation and analysis on how we can make things safer at all U.S. nuclear facilities," Dietrich said. "The severe accident analysis has not been done in Japan as it has here. That's just a fact."]
சுவிட்சர்லாந்தும் ஜெர்மனியும் புதிய அணு உலைகளைக் கட்டுவதற்கான அனுமதியை ஒத்தி வைத்துள்ளன.
http://www.latimes.com/news/nationworld/world/la-fg-europe-nuclear-20110315,0,679635.story
http://www.reuters.com/article/2011/03/14/nuclear-switzerland-idUSLDE72D1EJ20110314
கனடாவிலும் அமெரிக்காவிலும் இதே போன்ற நடவடிக்கைகளை எதிர்பார்க்கலாம்.
இதனால், இவர்கள் அணு மின் சக்தியை வேண்டாம் என்று உதறி விடுவார்கள் என்று பொருளல்ல.
வேறு எதையும் விட அணுக் கதிர் வீச்சினால் ஹிரோஷிமாவும், நாகசாகியும் பட்ட பாட்டை அறிந்த மனிதர்கள், செர்னோபில் விபத்தால் புற்று நோய் வந்து பாடுபடும் மக்களைப் பற்றித் தெரிந்தவர்கள் இதில் வெறும் லாப நஷ்டக் கணக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.
இருக்கும் ஆறு, ஏரி, குளங்களை மாசு படுத்தி விட்டு, அக்கறையில்லாமல் நீர்வளங்களையும், மின்சாரத்தையும், பெட்ரோலையும் செலவழித்துக் கொண்டு, உலகையும் வெம்ப வைத்து மேலும் அணு உலைகளைக் கட்டுவோம், கடலில் இருந்து குடிநீரைத் திரட்டுவோம் என்று திரிவது பொறுப்பற்ற செயல்.
நமக்கு மட்டுமல்ல, நமக்குப் பின் வரும் தலைமுறைகளுக்கும் நாம் நல்ல முறையில் இந்த உலகை வைத்து விட்டுச் செல்வது நம் கடமை.
கல் சுரங்கங்களை வெட்டுகிறேன் பேர்வழி என்று மலைகளை முழுங்கிக் கொண்டிருக்கும் மாமனிதர்களைப் பார்க்கும் நமக்கு, வருங்காலத்தைப் பற்றி அக்கறைப் படுபவர்கள் பைத்தியக்காரர்களாகத்தான் தோன்றும்.
எந்தத் தொழில்நுட்பமும் முழுக்க முழுக்க ஆபத்தற்றது என்று எண்ணுவது சரியல்ல. அதே போல் ஆபத்துகளுள்ள எந்தத் தொழில்நுட்பமும் வேண்டாம் என்றால் நாம் நெருப்பைக் கண்டு பிடித்தற்கு முன்பான கற்கால மனிதர்களைப் போல்தான் வாழ வேண்டும்.
இப்போது நடந்து கொண்டு இருக்கும் பேரிடரில் எத்தனை பேர் உயிரிழக்கப் போகிறார்கள் என்பதை மட்டும் யாரும் பார்க்கப் போவதில்லை. இந்தப் பேரிடரால் எத்தனை மில்லியன் டாலர்கள் இழந்தோம் என்று வணிகர்கள் லாப நஷ்டக் கணக்குப் போட்டுப் பார்த்து இனிமேல் அணு மின் நிலையங்களிலும், அணுசக்தியிலும் எவ்வளவு முதலீடு செய்யலாம் என்று பார்க்கப் போவது என்னவோ நிச்சயம் தான். எண்ணைக் கிணறுகள் வற்றத் தொடங்குவதால், அணு மின் நிலையங்கள் வேண்டவே வேண்டாம் என்றும் சொல்ல முடியாது.
இந்த விபத்திலிருந்து நல்ல படிப்பினைகளைக் கற்றுக் கொண்டு தம் மக்களைப் பாதுகாக்க முன் வருவது அறிவுடமை.
ஐரோப்பியர்கள் அந்த எண்ணத்தில் இயங்கத் தொடங்கி விட்டார்கள்.
இந்தியாவிலும் இத்தகைய கேள்விகள் எழத் தொடங்கி விட்டன. ஆனால், இந்த மீள் பார்வைகளைப் பொறுப்புடன் செய்ய வேண்டும். ஒன்றும் செய்யாமலேயே நமது அணு உலைகள் ஆபத்தற்றவை என்று அறிவிப்பதை எந்தக் கணக்கில் சேர்ப்பது? (http://www.hindu.com/2011/03/15/stories/2011031562611400.htm)
மிகுந்த எச்சரிக்கையுடனும், பொறுப்புடனும், மீள்பார்வை செய்வோமா? அப்படிச் செய்ய வேண்டியது இன்னும் பிறக்காத குழந்தைகளுக்கு நாம் செய்ய வேண்டிய கடமை.
வேங்கைத் திட்டக் கட்டுரை போட்டியில் வெற்றி.
4 ஆண்டுகள் முன்பு
3 கருத்துகள்:
Good info... but power generation also must.
மணி, இப்பதிவுக்கு நன்றி.
http://www.reuters.com/article/2011/03/15/us-japan-nuclear-chernobyl-idUSTRE72E5MV20110315
ஏற்கனவே கொடிய அணுஆய்தத்தின் பாதிப்புக்குள்ளான ஜப்பானிய மக்கள் கடந்த சில நாட்களாக அனுபவித்து வரும் வேதனை அளவிட முடியாதது. அணு உலைகளை கடுமையாக எதிர்த்துச் செயல்படும் அறிஞர்களும், செயல்வீரர்களும் கூறும் வாதங்களை உறுதிப்படுத்துவதாகவே அமைந்துள்ளது ஜப்பான் விபத்து. அணு உலைகள் அணுகுண்டுக்குச் சமானம் என்று அவர்கள் கூறும் கருத்து நாட்டு இரகசியம் என்று மறைத்து வைப்பதில் உண்மையென்று சொல்லலாம்.
இந்தியா உள்பட எல்லா நாடுகளும் அணு உலைகள் விதயத்தில் முழுப்பொய்களைச் சொல்லி வருவது வழக்கமாக இருந்து வருகின்றது. வலியுறுத்திக் கேட்டால் நாட்டின் இராணுவ ரகசியம் என்று உண்மைகளை வெளியிட மறுக்கின்றன அரசுகள். விபத்து ஏற்படுமோ இல்லையோ, அணுக்கழிவை அடைத்து வைத்து எதிர்காலத் தலைமுறைகளுக்கு பேராபத்தைச் சேமித்து வைப்பது எந்தவகையிலும் நியாயப் படுத்த முடியாது. இத்தகைய அணு ஆற்றலைத் தயாரிக்கும் செலவும் கொஞ்ச நஞ்சமல்ல. உலகெங்கும் அணு உலைகளை மூடுவதே இக்கால மனித சமுதாயத்திற்கும், எதிர்காலத் தலைமுறைகளுக்கும் நாம் செய்யும் நன்மை.
நன்றி - சொ.சங்கரபாண்டி
அணுகுண்டுக்கும், அணு உலைகளினால் பாதிக்கப்பட்ட ஜப்பானியர்களே
தற்போது துவண்டு போயுள்ளனர்.
இது விபத்து இல்லை என்றபோதிலும் இயற்க்கை சீற்றத்தினால் பாதிப்பு
ஏற்படாத வகையில் அணுசக்திக் கூடம் அமைக்கப்படிருக்க வேண்டும்.
இதன் மூலன் மக்கள் அணுசக்தியை வெறுக்க ஆரம்பித்துள்ளனர்.
நம் "கூடங்குளம்" எந்த பாதுகாப்புடன் உள்ளனவோ....?
விரிவான தகவலுக்கு நன்றி, மணி அய்யா.
கருத்துரையிடுக