புதன், செப்டம்பர் 19, 2012

கல்பாக்கம் அணு உலைக்குப் பக்கத்தில் எரிமலையா?


சென்னைக்கு அருகில் எரிமலை ஒன்று உறங்கிக் கொண்டிருப்பதாக வந்துள்ள செய்தியை ஏற்கனவே படித்திருக்கிறோம்.   ஆனால், பன்னாட்டு அணு சக்தி  முகமையும் அதைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பதாகவும், இது இந்திய அணுசக்திக் குழுவினர் கண்ணுக்கும் எட்டியுள்ளதாகவும் வந்துள்ளதே புதிய செய்தி.

http://www.hindustantimes.com/India-news/Bangalore/Dormant-undersea-volcano-near-Kalpakkam-atomic-plant/Article1-931823.aspx

பொதுவாக எரிமலைகள் திடீரென வெடிப்பதில்லை.  அதன் அடையாளங்கள், சிறிய நில நடுக்கங்கள், எரிமலைக் குழம்புகளின் ஓட்டம், என்று பல சிறுகச் சிறுகத் தெரிய வரும்.

அப்படி ஒரு எரிமலை அடையாளம் தெரியவந்தால், கல்பாக்கத்தை எப்படிப் பாதுகாப்பது என்பதற்கான திட்டங்களை அணு சக்தி  ஆணைக்குழு அறிவிக்க வேண்டும்.  உடனடியாகச் செய்யத் தேவையில்லை.  ஆனால் இது பற்றிச் சிந்திக்க வேண்டும்.

அதே போல், அணுமின் நிலையத்துக்கு மட்டுமல்லாமல், பாண்டிச்சேரி முதல் சென்னைக்கரை வரை வாழும் பெருந்திரளான மக்கள் கூட்டத்துக்கு இதனால் என்ன ஆபத்து என்றும் பார்க்க வேண்டும்.  இது சற்றுத் தொலைவில் இருப்பதால், எரிமலைக் குழம்பால் தொல்லையில்லை.  நில நடுக்கங்களால் தொல்லை வரும்.  ஏனெனில், தமிழ்நாட்டின் கட்டிடங்கள் நில நடுக்கத்தைத் தாங்கக் கூடியவை அல்ல. சென்னையில் பல அடுக்குமாடிக் கட்டிடங்களில் தரைத்தளத்தை வண்டி நிறுத்தப் பயன்படுத்தி, கட்டிடத்தைத் தூண்களில் தாங்குகிறார்கள்.  நில நடுக்கம் ஏற்பட்டால் இப்படிப் பட்ட கட்டிடங்கள் சரியும்.

லாஸ் ஏஞ்சலஸில் 1994 ஜனவரியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இப்படிப் பட்ட கட்டிடங்கள் சரிந்தன.  தரைமட்டத்தில் இருந்த வீடுகளும் உடைந்தன.  எனது வீட்டுக்கு எதிர்வரிசையிலும், பின் வரிசையிலும் இருந்த வீடுகள் சேதமாயின.  என் வீட்டில் தரையில் விரிசல் விட்டது.  சுவற்றில் சிறிய விரிசல்.  மற்றபடி தப்பிப் பிழைத்தேன்.

நிலநடுக்கங்கள் கூடிய கலிஃபோர்னியாவில் பல ஆண்டுகள் வாழ்ந்த பட்டறிவில் சொல்லுகிறேன்.  மிகப்பெரிய நிலநடுக்கம் ஒன்று வந்தால் ஒழிய, பெரும்பாலான மக்கள் இறப்புகளைத் தவிர்க்க முடியும்.  கட்டிடங்கள் சிதையும்.  ஆனால் மீளக் கட்டி விடலாம்.

இந்த எரிமலையால் உடனடியாக ஆபத்து ஏதும் இல்லை.

ஆனால், வருமுன் காப்பவன் தான் அறிவாளி.

கொஞ்சம் கூடுதலான ஆராய்ச்சியும், ஒரு தற்காப்புத் திட்டமும் தேவை.

மற்றபடி, கல்பாக்கத்தின் சிக்கல் எரிமலையோ, நில நடுக்கமோ அல்ல.  அது குறித்து எச்சரிக்கை தேவை.  ஆனால், அச்சம் தேவையில்லை.

கருத்துகள் இல்லை: