சனி, ஏப்ரல் 22, 2023

வாழ்வும் சாவும்

நண்பனுடன் தொலைபேசியில் அரட்டை அடித்துக் கொண்டிருந்தேன். சன்னலின் வழியாக என் வீட்டுப் புல்வெளியும் அதைக் கடந்து எங்கள் தெருவும் தெரியும். ஆள் நடமாட்டம் அவ்வளவாக இல்லாத தெரு. அவ்வப்போது மகிழுந்துகளும் சரக்குந்துகளும் விரைந்து செல்லும். எதிர் வீட்டு நிப்பானியத் தாத்தாவும் பாட்டியும் அவர்கள் பேரப்பிள்ளைகளைப் பார்க்கப் போகாத சமயத்தில் அவர்கள் வீட்டுப் புல்வெளியை மிகுந்த அக்கறையுடன் ஒவ்வொரு புல்லையும் பார்த்துப் பார்த்துத் தண்ணீர் தெளிப்பார்கள், உரம் போடுவார்கள், களை பிடுங்குவார்கள், புல் தரையை சமப்படுத்துவார்கள். ஓர் உழவன் நெல் வயலைக் கூட இவ்வளவு அக்கறையோடு பார்த்துக் கொள்வானா என்று தெரியாது.

அவர்களுக்கு இடது பக்க வீட்டில் இருந்தவர்கள் முதலை, மலைப்பாம்பு போன்ற அரிதான ஊர்வனவற்றை வளர்ப்பவர்கள் என்று ஒரு புரளி உண்டு. அது உண்மைதானா என்று அறிவதற்கு எனக்கு ஆர்வமில்லை. அப்படி ஏதும் இருந்தால் அது தெருவைக் கடந்து சாக்கடை வழியாக எங்கள் வீட்டுக்குள் வரும் வாய்ப்பு குறைவு என்ற நம்பிக்கையில் வாழ்கிறேன். எது எப்படியோ அவர்கள் கடந்த சில வாரங்களாகத் தங்கள் வீட்டில் இருந்த எல்லாவற்றையும் சரக்குந்துகளில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். சில நாட்களாக அவர்கள் வீட்டில் யாரும் குடியிருக்க வில்லை. தோட்டக்காரர் மட்டும் வந்து புல்வெளியைச் சீரமைத்து விட்டுப் போய் விட்டார்.

இன்று குப்பை வண்டிகள் வரும் நாள். குப்பைத் தொட்டி, மறுசுழற்சித் தொட்டி, தோட்டக்குப்பைத் தொட்டி மூன்றையும் வெளியில் வைத்திருந்தோம். மூன்று குப்பை வண்டிகளும் வெவ்வேறு நேரத்தில் வந்து குப்பையை அள்ளிக்கொண்டு போய்விடும். அவர்கள் சில சமயத்தில் குப்பைத்தொட்டிகளைத் தெருவில் சாய்த்து விட்டுப் போய்விடுவார்கள். இல்லாவிட்டாலும் அவை திறந்திருப்பதால், தம் நாய்களை நடைப்பயிற்சிக்குக் கூட்டிச் செல்லும் அக்கம்பக்கத்தார், நாயின் கழிவுகளை எங்கள் குப்பைத் தொட்டிகளில் காணிக்கையாகச் செலுத்திவிட்டுச் செல்ல நேரிடலாம். எனவே குப்பை வண்டி வந்து சென்ற அடுத்த மில்லி நொடிக்குள் அவற்றை வீட்டுக்குள்ளே கொண்டு வந்து விடுவது சிறப்பு.

இது தவிர அஞ்சல் ஊழியர் வருவார். பக்கத்து வீட்டிலிருந்து குறுக்கு வழியாக எங்கள் வீட்டுப் புல்தரை மீது நடந்து வந்து என் வீட்டுக் கதவில் இருக்கும் ஓட்டையில் அஞ்சல்களைப் போட்டுவிட்டுப் போவார். தண்ணீர்ப் பற்றாக்குறையினால், புல்தரைக்கு நான் அவ்வளவு தண்ணீர் தெளிப்பதில்லை என்பதால் எங்கள் புல்தரை பொதுவாகக் காய்ந்துதான் இருக்கும். கடந்த சில வாரங்களாகப் பெய்த நல்ல மழையால் இப்போது புல்தரை செழிப்பாகப் பசுமையாக இருக்கிறது. இனிமேல் அவற்றின் மீது நடந்து அவற்றை நசுக்க வேண்டாம் என்று அடுத்தமுறை அஞ்சல் ஊழியர் வரும்போது சொல்ல வேண்டும். இது அவருக்கே தெரிந்திருக்க வேண்டும். அரசு ஊழியரல்லவா. தான் செய்வது தப்பு என்று அவருக்குத் தோன்றாது. நாம் சுட்டிக் காட்டினாலும் திருந்துவாரோ என்னவோ!

இளவேனிற்காலம் பிறந்து விட்டது. ரோசாச் செடிகள் பூத்துக் குலுங்குகின்றன. நடைபாதையில் இருக்கும் மரத்தின் கிளைகளிலும் இலைகள் துளிர்த்திருக்கின்றன. இரண்டே வாரங்களில் மொட்டை மரங்களாக இருந்தவை இன்று பச்சைப் பசேலென்று இலைத்துளிர் காலத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன. இலைகளும் பூக்களும் இருந்தால் வண்டுகளும், தேனீக்களும், வண்ணத்துப்பூச்சிகளும் வராமல் இருக்குமா? பேரரசு வண்ணத்துப் பூச்சியும் மெக்சிக்கோவிலிருந்து வலசை வந்து விட்டது போல் தெரிகிறது. கடுங்குளிர் காலத்திலும் வலசை செல்லாத குருவிகள் எப்போதும் போல் புல் தரையில் எதையோ பொறுக்கித் தின்று கொண்டிருக்கின்றன. தெருவின் இருமருங்கும் நெடிந்துயர்ந்து நிற்கும் மின்சாரக் கம்பங்களின் உச்சியில் ஒய்யாரமாக அமர்ந்து கொண்டு தாம் ஆளும் உலகைக் கண்காணித்துக் கொண்டிருக்கும் அண்டங்காக்கைகள் அவ்வப்போது குரல் கொடுக்கும். அவற்றுக்குப் பின்னர் இருக்கும் தொலைத்தொடர்புக் கம்பிகள் மீது வெகு விரைவாக ஓடும் அணில்கள் எப்போதும் என்னை வியப்பில் ஆழ்த்தும். அவ்வளவு உயரமான கம்பிகள் மீது எப்படித்தான் அவை நிலை குலையாமல் ஓடுகின்றனவோ!

அண்டங்காக்கைகள் ஏனோ அணில்களைப் பொருட்படுத்துவதில்லை. அவை கூர்மையான அறிவுள்ளவை. எந்த வீட்டில் யார் என்ன செய்கிறார்கள், எப்போது வருவார்கள், என்றெல்லாம் பார்த்துக் கொண்டே இருப்பவை அவை. பக்கத்து வீட்டுக்காரர்கள் நம்மை உளவு பார்ப்பது போலத்தான் காக்கைகளும் நம்மை வேவுபார்த்துக் கொண்டே இருக்கும். அவ்வப்போது அவை தம்மினத்துக்குக் கரைந்து ஏதோ சொல்லும். படபடவென்று சிறகடித்துக் கொண்டு அவை எல்லாம் ஒரே சமயத்தில் தரை மீது ஏதோ தாக்குதல் தொடுக்கும். பின்பு மீண்டும் மின்கம்பத்தில் ஏறி அமர்ந்து கொண்டு பேரரசைக் கண்காணிப்பதைத் தொடரும்.

இரவு நேரமென்றால் ராக்கூன்கள் வரும். ஆனால், ஆரஞ்சு மரம் பழுத்துக் குலுங்கும்போதுதான் அவை பழம் பறிக்க வரும். தற்போதைக்கு, இளவேனிலின் தொடக்கத்தில் பறித்துத் தின்ன ஏதுமில்லை. கயோட்டிகளின் நடமாட்டம் இன்னும் அடங்கவில்லை. பெண் கயோட்டிகளை ஈர்க்க ஆண் கயோட்டிகள் ஊளையிடுவதை இரவில் கேட்கலாம். பகலில் அவை வளர்ப்பு நாய்களையும், வளர்ப்புப் பூனைகளையும் வேட்டையாடுகின்றன என்று எங்கள் அக்கம்பக்கத்தினர் கண்காணிப்புக் குழுவில் செய்தி பகிர்கிறார்கள். இது தவிர வீடுகளில் புகுந்து திருடுபவர்களும் கூடியிருக்கிறார்களாம். வீடற்றவர்கள் நகர்மையப் பகுதியிலிருந்து அகநகர எல்லைகளுக்கும் பெயரத் தொடங்கிவிட்டார்கள். பேரங்காடியின் வேலிக்கருகே கூடாரங்களைப் போட்டுக் குடியிருப்பதை அண்மையில் நானே பார்த்தேன். இவர்களுக்கெல்லாம் புதிதாக மலிவு வீடு கட்டிக் கொடுத்து வீடற்றவர் சிக்கல்களைத் தீர்ப்பேன் என்று உறுதியளித்த மாநகரத்தலைவி இன்னும் செயலாற்றத் தொடங்கவில்லை.

நண்பனோடு பேசிக் கொண்டே இருந்த நான் தெருவின் மீதும் ஒரு கண்ணை வைத்திருந்தேன். குப்பைத்தொட்டிகளைக் காலையிலேயே உள்ளே கொண்டு வந்துவிட்டதால் அதைப் பற்றிய கவலையேதும் இல்லை. எந்த வித அக்கறையும் இல்லாமல் சோம்பலாகத் தெருவைப் பார்த்துக் கொண்டே இருந்த என் கண்ணுக்குத் திடீரென்று சில அசைவுகள் தெரிந்தன. சிமெண்டுத் தரையில் ஏதோ துள்ளிக்கொண்டிருந்தது. தொலைபேசியில் இருந்த கவனத்தைச் சற்றே அதன் மீது திருப்பிக் கூர்ந்து பார்க்கத் தொடங்கினேன். அது ஏதோ ஓணானின் துண்டிக்கப்பட்ட வால் போல் தெரிந்தது. அது இன்னும் துள்ளிக்கொண்டிருந்ததால் கவனம் விரியத் தொடங்கியது. கூரையிலிருந்து அண்டங்காக்கை ஒரு விமானத்தின் ஒயிலோடு இறங்கியதைக் கவனித்த என் கண்கள், துள்ளிக் கொண்டிருந்த வாலைத் தாண்டி எதையோ கொத்தியதைத் தொடர்ந்து கவனித்தன. வாலை இழந்த ஒரு சிறிய ஓணான் தற்காப்புப் போராட்டத்தில் இருந்தது. அண்டங்காக்கையும் ஓணானை எச்சரிக்கையாகத்தான் தாக்கியது. இரண்டும் ஒன்றையொன்று சுற்றிச் சுற்றி வந்தன. காக்கை கொத்துவதும், ஓணான் தப்பியோடி அதைக் கடிக்க முயல்வதும் என் கவனத்தைத் தொலைபேசியிலிருந்து முழுக்க முழுக்கத் திருப்பிவிட்டது. தொலைபேசியில் தொடர்ந்து ஊம் கொட்டிக் கொண்டிருந்த நான் இருக்கையில் இருந்து எழுந்து சன்னலுக்கருகில் வந்து நின்று விட்டேன்.

காக்கையும் ஓணானும் தம் போர்க்களத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்தி என் சன்னலுக்கருகே கொண்டு வந்து விட்டன. இது வேலி ஓணான் போலத்தான் தெரிந்தது. அதற்கு நஞ்சு ஏதும் இல்லை என்று நினைக்கிறேன். என்றாலும் அண்டங்காக்கை மிகுந்த எச்சரிக்கையுடன் அதன் பின்புறத்தைத் தாக்கிக் கொண்டிருந்தது. திடீரென்று என்ன நினைத்ததோ காக்கை, இன்னும் துள்ளிக் கொண்டிருந்த ஓணான் வாலைக் கொத்தித் தின்றது. அதற்குள் தப்பிச் செல்ல ஓணானையும் விடவில்லை. அதைத் துரத்தி வந்து கொத்தியது. இப்போது இரண்டும் சன்னலுக்கு இரண்டடி தள்ளித் தரையில் போராடிக் கொண்டிருந்தன. சன்னலின் வெனீசியக் கதவுகளை அடித்து மூடித் திறந்தேன். அந்த ஒலியைக் கேட்ட காக்கை எச்சரிக்கையாகப் பறந்து விட்டது.

வாழ்க்கைப் போராட்டத்தைப் பற்றி உரையாடிக் கொண்டிருந்த நண்பனிடம் என் கண் முன் நடந்த போராட்டத்தைப் பற்றிச் சொன்னேன். மனித வாழ்க்கையும் அப்படித்தான் என்று அவன் தத்துவம் பேசிக் கொண்டிருந்த போது அண்டங்காக்கை மீண்டும் வந்து ஓணானைத் தேடியது. ஓணானின் வாழ்க்கையைக் காப்பாற்றிய பெருமிதத்தில் இருந்த எனக்கு மிகவும் எரிச்சலாக இருந்தது. மீண்டும் சன்னல் கதவுகளை அடித்துச் சாத்தித் திறந்தேன். நண்பன் தொலைபேசியை வைத்து விட்டான். யாரிடம் ஓணான் காக்கை சண்டை பற்றி நேர்முக வர்ணனை செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று உள்ளிருந்து வந்த மனைவி கேட்டார். சொன்னேன். வெளிக்கதவைத் திறந்து வெளியே வந்து ஓணானும் காக்கையும் எங்கே என்று பார்த்தோம். ஓணான் இருந்த சுவடே தெரியவில்லை. அருகிலிருந்த மின்கம்பத்திலிருந்து என்னைக் கூர்மையாகக் கவனித்துக் கொண்டிருந்த அண்டங்காக்கைதான் ஓணானுடன் போரிட்ட காக்கையாக இருந்திருக்குமோ என்று நினைத்தேன்.

குளிர்காலத்தில் என் கண்ணுக்குத் தெரியாமல் என்னென்ன வாழ்வா சாவா போராட்டங்கள் இருந்தனவோ! இளவேனிற்காலத்தில் இலைகளும், பூக்களும், புழுக்களும், பூச்சிகளும், பிறந்து வாழ்வைத் தொடங்கும் நேரத்தில் இவற்றுக்காகவே காத்திருந்த பிற உயிரினங்களும் தம் வேட்டைகளைத் தொடங்குகின்றன. இயற்கையின் சுழற்சியில் இன்னுமொரு பருவம் தொடங்கிவிட்டது.



முகநூலில் ஏப்பிரல் 21 அன்று பகிர்ந்தது.

https://www.facebook.com/manivannan.m.mani/posts/pfbid02NfARG8nr8qF6NQpx6G3kT7AHARLsSHWFdDHtTwFdaUJnV9nCiYzD8uiPSrPCkyMcl

கருத்துகள் இல்லை: